முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, �பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார். அதற்கு நாத்தான், �நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: �நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 26,28
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்;
நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப்போல் உறுதியானது. -பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான்.
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

லூக்கா 1:26-38

திருவருகை காலம்-நான்காம் வாரம், ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:26-38


ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, �அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, �மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், �இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், �தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, �நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 & 28
“ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்”

இறைவனுடைய அன்பை ஆழமாக உணர்ந்த ஆசிரியர், இறையனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற பாடல் தான், இந்த திருப்பாடல். இறைவனின் அன்பை முழுமையாக அனுபவித்திருக்கிற ஒருவர், இறையன்பைப் பற்றி சொல்கிறபோது, அது வலிமைமிக்கதாக மாறுகிறது. அந்த வகையில், இந்த திருப்பாடலின் கடவுள் அன்பு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் அன்புக்கு எல்லையே இல்லை, என்பதாக இந்த திருப்பாடல் சொல்கிறது.

இறைவனின் அன்பை எப்படி திருப்பாடல் ஆசிரியர் அனுபவித்திருக்கிறார்? திருப்பாடல் ஆசிரியர் சாதாரண மனிதர். ஆடு மேய்க்கக்கூடியவர். ஆனால், சாதாரண நிலையிலிருந்து அவரை, இறைவன் தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவரை அபிஷேகம் செய்தார். அவர் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரது தலைமுறை வழி வழியாக நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதனை, ஆசிரியரால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. சாதாரணமான நிலையிலிருக்கிற தனக்கு, இவ்வளவு கொடைகளை வழங்குவது ஏன்? என்ற கேள்வி அவருக்குள்ளாக எழுகிறது. தகுதியில்லாத தன் மேல் இறைவனுக்கு இவ்வளவு பாசம் என்கிற போது, அந்த அன்பின் அனுபவத்தை, பாடல் வரிகளாக வெளிப்படுத்த விரும்புகிறார். அதைத்தான் இங்கே எழுதுகிறார்.

கடவுள் அனுபவத்தை நாம் கூட, நம் வாழ்வில் பெற்றிருக்கலாம். கடவுளின் அன்பை நாம் அவ்வப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்வை திரும்ப ஆராய்ந்து பார்க்கிறபோது, கடவுளின் அன்பின் ஆழத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த ஆழத்தை நாம் நினைவுகூர்கிறபோது, மற்றவர்களை இன்னும் அதிக அன்போடு அணுகுவதற்கு, நமக்கு உதவியாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும்.

யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது.

நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

ஆழமான விசுவாசத்திற்காக மன்றாடுவோம்

இயேசுவின் பிறப்பைப்பற்றிய பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகிறது. இயேசு மனிதராகப்பிறந்தாரா? கடவுளாகப்பிறந்தாரா? இயேசுவின் தந்தை யார்? இயேசு எப்படி மாதாவிடமிருந்து பிறந்தார்? அன்னை மரியாள் எப்படி கன்னியாகக் கருவுற முடியும்? எப்படி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கன்னியாக இருக்க முடியும்? அப்படியென்றால், இந்த மண்ணகத்தில் பிறக்கிற குழந்தைகள் பாவத்தின் விளைவாகத்தான் தோன்ற முடியுமா? கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதம் இல்லையா? இதில் நாம் எந்தக் கேள்விக்கும் மற்றவர்கள் நிறைவு கொள்கிற பதிலைக் கொடுத்துவிட முடியாது.

இந்தக்கேள்விகள் கேட்கப்பட்ட தொடக்கமுதல் இன்று வரை இந்தக்கேள்விகளுக்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடியாது. ஆனால், விசுவாசம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரு வினாடியில், ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம். அந்த விசுவாச அளவுகோல்: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. ஒரு சிலவற்றை நம்மால், நமது மனித அறிவு கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அல்லது, அதைப்புரிந்து கொள்வதற்கு இன்னும் நமது அறிவு, வளர்ச்சி பெற வேண்டும். தொடக்க காலத்தில் விடைகாண முடியாத பலவற்றிற்கு நாம் இன்று விடை கண்டிருக்கிறோம். இன்னும் பலவற்றிற்கு முயன்று கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த விசுவாச அளவுகோல் தான் நமக்குத்துணை. இதன் வழியாகத்தான், நமது மூதாதையர் வாழ்வு பெற்றனர்.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? அறிவுப்பூர்வமாக இருக்கிறதா? ஆழமானதாக இருக்கிறதா? பொறுமையாக இருக்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது மறுக்கக்கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மரியாளின் வழியில் நமது விசுவாசம்

அன்னை மரியாவை விசுவாசத்தின் தாய் என்று சொன்னால் அது முழுக்க, முழுக்க பொருந்தும். அவளது விசுவாசம் ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்ற செய்தி வானதூதரால் முன்னறிவிக்கப்படுகிறது. ஆனால், நடந்தது என்ன? இயேசுவை அன்னை மரியாள் காதுபடவே இழிவாகவும், குறையாகவும் பேசினர். ஆனால், அன்னை மரியாள் தனது விசுவாசத்தை சிறிதும் இழக்கவில்லை.

யாரிலே தான் நம்பிக்கை வைத்திருந்தோமோ அவரே சிலுவையில் அறையப்பட்டு தனது உயிருக்காக துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இறுதியாக இறந்தபோதிலும் அன்னை மரியாள் தனது விசுவாசத்தை இழக்கவில்லை. கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறாள். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தைப் படைத்த கடவுளால், இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடிந்த கடவுளின் ஆற்றலால் அனைத்துமே நடக்கும் என்று அன்னை மரியாள் நம்பினாள். அதனால் தான் விசுவாசத்தின் தாயாக இன்று உயர்ந்து நிற்கிறாள். தனது பிறப்பு முதல் வாழ்வின் கடைசி மூச்சு வரை, கடவுள் மட்டில் அன்னை மரியாள் வைத்திருந்த விசுவாசம் அளப்பரியது.

அன்னையிடத்தில் இருந்த அந்த விசுவாசம் நமதாக வேண்டும். அவளது விசுவாசப்பண்பை நாமும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்வில் நம்பிக்கை இழந்த சூழ்நிலையையும் கடவுள் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் என்று கடவுள் மட்டில் நமக்குள்ள விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அருள் நிறைந்த மரியே, வாழ்க!

பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்.

இன்றைக்கு பிரிவினைச்சபைகள் கன்னிமரியாளுக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதை குறைகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய நற்செய்திப்பகுதியில் தந்தையாகிய கடவுளே அன்னைக்கு புகழ்மாலை சாற்றுவதை நாம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். கபிரியேல் அதிதூதர் இறைவனின் திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர். அவருடைய பணி தூதுரைக்கும் பணி. ஒரு தூதுவனின் பணி என்ன? பண்டையக்காலங்களில் அரசர் சொல்கிற செய்திகளை, எந்த நாட்டு அரசரிடம் சொல்கிறாரோ, அந்த அரசரிடம் எதைச்சொல்லச்சொன்னாரோ, அந்தச்செய்தியை ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ மாட்டாமல், அப்படியேச்சொல்வது தான் தூதுவரின் பணி. இங்கே தூதுவராக அன்னைமரியாளைப்பார்த்து, கபிரியேல் வானதூதர் சொல்கிற, ‘அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்கிற வார்த்தைகள் கபிரியேலின் வார்;த்தைகள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுளின் வார்த்தைகள். தந்தையாகிய கடவுளே, அன்னை மரியாளை வாழ்த்திப் போற்றுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? கடவுள் மரியாளை ஏதோ வாழ்த்த வேண்டுமென்பதற்காக வாழ்த்தவில்லை. அந்த வாழ்த்துக்கு மரியாள் முற்றிலும் தகுதியானவள் என்பதால் வாழ்த்தினார்.

இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

அன்னை மரியாவின் ஆன்மீக வாழ்வு

”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், ”எனது சொற்படி நிகழட்டும்” என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள்.

நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள்.

அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அறிவிப்பும், அர்ப்பணமும் !

இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.

கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்குத் தோன்றி, "கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர். கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த நன்னாளே இந்நாள்.

இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட அந்த நாளைப் போலவே, அறிவிக்கப்பட்ட அன்னை மரியாவும் நற்பேறு பெற்றவர். அவர் வழியாகத்தான் இந்த உலகின் மீட்பர் பிறக்க உள்ளார்.

இந்த அறிவிப்பைப் பெறும் பேற்றைப் பெற்ற மரியா, "நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொல்லித் தம்மை அர்ப்பணித்தார், இறைத் திருவுளத்துக்குத் தம்மைக் கையளித்தார்.

இன்றைய நாளில் நம்முடைய சிந்தனை இதுவாக இருக்கட்டும். "நான் பல வழிகளில் பேறுபெற்றவன்":
வாழ்வு என்னும் கொடை, நலம் என்னும் கொடை, இறைநம்பிக்கை என்னும் கொடை, ஆற்றல்கள், திறமைகள் என்னும் கொடைகள்... ஒவ்வொரு நாளும் பெற்று வரும் எண்ணிலடங்கா நன்மைகள்...

இவை அனைத்தையும் பெறும் நாம், அன்னை மரியாவைப் போலவே, "கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளோம்" என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம். அந்த அன்னையைப் போலவே, நம் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து, அவர் விருப்பப்படியே நம் வாழ்வு அமைய நம்மைக் கையளிப்போம்.

மன்றாடுவோம்: வானதூதர் வழியாக இயேசுவின் பிறப்பை அன்னை மரியாவுக்கு அறிவித்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அந்த அறிவிப்பை ஏற்று, மகிழ்வுடன் தம்மை அர்ப்பணித்த அன்னையைப் போல நாங்களும் எங்களை உமக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒரு வகையில் பார்த்தால், இந்த விழாதான் திருச்சபையின் பிறப்பு விழா எனக் கருதப்படலாம். இறைவனின் திட்டத்துக்கு அன்னை மரியா ‘ஆம’; என்று சொன்னதால்தான், இயேசு பிறந்தார். திருச்சபையும் தொடங்கியது. ஆம், மீட்பின் வரலாறே ஒரு பெண்ணின் ‘ஆம்’ என்ற சொல்லில்தான் தொடங்கியது என்பது வியப்பு தரும் செய்திதான்.

பல நேரங்களில் வரலாற்றின் மாபெரும் திருப்பு முனைகள் சிறிய நிகழ்வுகளில்தான் தொடங்கின என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது அறிய வருகிறோம். அதுதான் இறையாற்றல்! அதுதான் இறைத் திருவுளம்! வல்லமை புனிதம் உடையவர் பெரியனவற்றைச் செய்கிறார். சிறியவற்றில் நம்பிக்கை உடையவராய் இருப்பவர்களை ஆண்டவர் பெரியன நிகழ்த்துவதற்காகப் பயன்படுத்துகிறார். இன்றைய நாளில் நாம் சிறியவற்றில் இறைவனுக்கு நம்பிக்கை உடையவர்களாக வாழ உறுதி எடுப்போம். ‘ஆம்’ என்பதே நம் விடையாகட்டும்.

மன்றாடுவோம்: அன்னை மரியாவின் சிறு மொழியில் பெரியன செய்த ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் சிறியவற்றில் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக வாழவும், அதன் வழியாக உமது திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------

''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை:
உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார் (லூக்கா 1:38)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மரியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. திருமண ஒப்பந்தம் ஆகி, இல்லறம் நடத்துவதற்கு முன் மரியா கடவுளின் திருமகனைத் தம் உதரத்தில் கருத்தாங்க அழைப்புப் பெறுகிறார். இது வியத்தகு நிகழ்ச்சி மட்டுமல்ல, மரியாவைப் பொறுத்தமட்டில் இது பெரும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் யோசேப்பு மரியாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தார். இதுவும் மரியாவுக்கு ஒரு சோதனையாகவே அமைந்திருக்க வேண்டும். குழந்தைப் பேறு நெருங்கியதும் தம் குழந்தையை ஈன்றெடுத்து வசதியாகக் கிடத்துவதற்குக் கூட அவருக்குக் கிடைத்தது தீவனத்தொட்டியே. குழந்தை இயேசு எருசலேம் கோவிலில் காணாமற்போன நேரமும் மரியாவுக்குப் பெருவேதனை தந்தது. ஆனால் இத்துயரமான தருணங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் மரியா கடவுளின் வார்த்தையைத் ''தம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'' (லூக்கா 2:50). கடவுளின் வார்த்தை மரியாவுக்கு ஆறுதல் தரும் ஊற்றாயிருந்தது.

-- மரியாவுக்கு ஏற்பட்ட மாபெரும் வேதனை அவர்தம் அருமைந்தன் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதும், இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்பட்டு இறுதியில் அச்சிலுவையில் ஒரு குற்றவாளிபோல அறையப்பட்டு உயிர்துறந்ததுமே. இத்துயரம் மரியாவின் இதயத்தை ஈட்டிபோல் துளைத்தது. இந்த நேரங்களிலெல்லாம் மரியா மன உறுதி இழக்கவில்லை; உள்ளதம் தளரவில்லை. மாறாக, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டார். கடவுளால் எல்லாம் இயலும் என்பதை மரியா இத்தருணங்களில் மிக ஆழமாக உணர்ந்தார். மரியா கடவுளின் ''அடிமை'' என்றதும் கடவுள் அடிமைத்தனத்தை ஏற்கிறார் என்று பொருளாகாது. மாறாக, மரியா தம்மைப் படைத்து, பாவத்திலிருந்து காப்பாற்றிய கடவுளையே தம் வாழ்வின் மையாமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். இவ்வாறு செயல்பட்டதால் மரியா தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முனையவில்லை. கடவுளின் திருவுளம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மரியாவின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை அறிந்து அதன் கோரிக்கைகளை நாங்கள் ஏற்று வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்