தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
திருநாள் திருப்பலி

முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: ``சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
எசா 12: 2-3. 4bஉன. 5-6 (பல்லவி: 6b)
பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். -பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 45
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.


லூக்கா 1:39-56


அன்னை கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்தல் - விழா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ``ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.'' மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

====================

லூக்கா 1: 39 - 56
சந்திப்போமா?

ஒவ்வொரு சந்திப்பும் ஒரு வகையான மாற்றத்தை இந்த சமுதாயத்திற்கு கொடுக்கின்றது. இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு அந்த நாட்டினை வளர்ச்சி பாதைக்கு (பொருளாதார) உதவியாக இருக்கின்றது. பள்ளியில் படித்த சக மாணவர்களோடு பல ஆண்டு கழித்து சந்திக்கின்ற சந்திப்பு, தங்களிடையே உள்ள உறவை வலுப்படுத்த உதவுகின்றது. காதலன், காதலி சந்திப்பு தங்களிடையே இருக்கின்ற அன்பை வளர்த்துக் கொள்ள உதவுகின்றது. மேகத்தின் சந்திப்பு மழையினைப் பொழிகின்றது. இவ்வாறு எல்லா சந்திப்புகளும் ஏதாவது ஒரு மாற்றத்தை அல்லது வளர்ச்சியை இந்த சமுதாயத்திற்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

இன்றைய நாளிலும் இரு நபர்களின் சந்திப்பை கொண்டாட திரு அவை அழைப்பு விடுக்கின்றது. அன்னை மரிய எலிசபெத்தம்மாளை சந்திக்கக்கூடிய நிகழ்வைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்றோம். இந்த சந்திப்பின் வழியாக மகிழ்ச்சி உருவாகிறது. இந்த சந்திப்பு கடவுள் மக்களுக்குத் தொடர்ந்து செய்து வரும் வல்ல செயல்களை விமர்சிக்கும் ஒரு சிறந்த சூழலாக மாறிவிடுகின்றது. மரியா மனநிறைவுடன் கடவுளைப் பற்றியும் சிறப்பாக அவர் ஏழை எளியோருக்குத் தொடர்ந்து ஆற்றி வரும் விடுதலை செயல்கள் பற்றியும் எழுப்பிய பாடல் இன்றுவரை திருச்சபையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. மரியாவின் பாடலில் முதல் பகுதியில் தன் தாழ்நிலையைக் கண்ணோக்கிக் கடவுள் ஆற்றிய அரும்பெரும் செயலை போற்றுகிறார் அன்னை மரியா. இந்த அரும்பெரும் செயல் மலடியாக இருந்து கருவுற்ற எல்சபெத்துக்கும் பொருந்தும். கருவுறாத நிலையில் இருந்து பிறகு கருவுற்று சாமுவேலைப் பெற்றெடுத்து பழைய ஏற்பாட்டு அன்னா என்கிற பெண்மணி பாடிய புகழ்ச்சிப் பாடலின் எதிரொலியாக மரியாவின் பாடல் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் அன்னையாக விளங்க அழைப்பு பெற்ற மரியா, தன் வயிற்றில் அவதரித்துப் பிறந்து பிறகு அகில உலக மக்களுக்கும் மீட்பராக அவர் விளங்கப் போவதை முன்கூட்டியே சூசகமாக அறிவிக்கிறது இந்த சந்திப்பு.

என் சந்திப்பு எதைத் தருகிறது? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

அன்னை மரியின் வழியில்!

லூக்கா 1:39-56 தூய கன்னி மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்

இறைவாக்குரைப்பின் தொடர்சங்கிலியை, அதன் இடத்தை, புனித லூக்கா நற்செய்தியாளர் விரிவாக விளக்குகிறார். புனித சக்கரியாவின் நாக்கு தளர்த்தப்படும்போது அவர் இறைவாக்கு உரைக்கிறார் (லூக் 1:68-79). சிமியோன் முதிர்ந்த வயதில் இறைவாக்கு உரைக்கிறார் (லூக் 2:34-35), இறைவாக்கினளான அன்னாளும் இறைவாக்கு உரைக்கிறார் (லூக் 2:38). இருப்பினும், இந்த மூன்று நிகழ்வையும் ஒன்றிணைக்க்க்கூடிய இடம் ஆலயம். புனித சக்கரியா ஒரு குருவானவர் (லூக் 1: 5); முதிர்ந்த வயதுடைய சிமியோன் கோவிலில் இருந்தார் (லூக் 2:27); அன்னாள் கோவிலை விட்டு வெளியே வரவில்லை (லூக் 2:37). ஆனால், அன்னை மரியா மற்றும் எலிசபெத்தின் இறைவாக்குரைக்கும் இடம் வேறுபட்டது. இது யூத நாட்டில் சக்கரியா மற்றும் எலிசபெத்தின் வீட்டில் நடைபெறுகிறது. பெந்தெகொஸ்தே நிகழ்வு ஆலயத்தில் அல்ல, மேல் அறையில், ஒரு தனிப்பட்ட வீட்டில் நடைபெறுகிறது. யோப்பாவிலுள்ள கொர்னேலியஸின் வீட்டில் (திரு.பணி 10) பிற இனத்தார்க்கு நற்செய்தி அறிவிப்பு தொடங்குகிறது. பவுல் முதன்முறையாக ஐரோப்பாவிற்கு வரும்போது, லிடியாவின் வீட்டில்தான் முதல் திருச்சபை கூடுகிறது (திரு.பணி 16:14-16). ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது ஆலயத்தில் மட்டுமல்ல, வீடுகளிலும் குடும்பத்திலும் நடைபெற வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கமாக இருக்கிறது.

பாரம்பரிய கத்தோலிக்கன் என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் இறைநம்பிக்கையை பாரம்பரியமாக நம்முடைய குழந்தைகளுக்கு கடத்த தவறி விடுகிறோம். செபம், தவம் எல்லாம் இன்று ஆலயத்தோடு முடிந்துவிடுகிறது. வீடுகளில் நாம் ஒருவருக்கொருவர் நற்செய்தியை பறைசாற்றவும், நற்செய்தியை வாழ்வாக்கவும் தவறி விடுகிறோம். நம் குழந்தைகளுக்கு படிக்க நேரம் ஒதுக்குகிறோம்; தொலைக்காட்சி பார்க்க நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் குழந்தைகளோடு இணைந்து குடும்ப செபம் செய்கிறோமா? இறைநம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் வளர்க்கிறோமா? இல்லையென்றால் இன்றே தொடங்குவோம்! அதுவே அன்னை மரியாவுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் மரியாதையாக இருக்கும்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

செப்பனியா 3: 14 – 18
இறைவனின் உண்மையான அன்பு

”சீயோனின் மகளே! மகிழ்ச்சியாய் ஆர்ப்பரி! ஆரவாரம் செய்! மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி!” என்று, இறைவாக்கினர் செப்பனியா தன்னுடைய உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். எதற்காக இந்த ஆரவாரம்? ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களின் பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார். அவர்களை தண்டனையிலிருந்து தப்புவித்து விட்டார் என்பதுதான். யூதாவும், எருசலேமும் தாங்கள் செய்த தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். அவர்களை கடவுள் தண்டிக்கவில்லை. எனவே, கடவுளைப் புகழ்ந்து போற்றி ஆர்ப்பரிக்க இறைவாக்கினர் கேட்டுக்கொள்கிறார்.

ஆர்ப்பரித்து மகிழ்ச்சி கொள்ளக்கூடிய தருணத்தில், மற்றொரு செய்தியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்பது. ”சீயோனே! அஞ்ச வேண்டாம்!” எதற்காக அஞ்ச வேண்டாம்? ”கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்!” இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களை நினைத்துப் பார்த்து, பயம் கொள்கிறார்கள். கடவுளைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், தாங்கள் செய்த தவறுக்கு கடவுள் தண்டனை கொடுத்து விடுவாரோ? என்று, அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறைவாக்கினர், கடவுள் அவர்களின் பாவங்களை மன்னித்து விட்டார் என்றும், அவர் மக்களோடு இருக்கிறதனால், பயம் கொள்ள தேவையில்லை என்றும் சொல்கிறார்.

நம்முடைய வாழ்விலும், கடவுளிடத்தில் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கிறபோது, கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறவராகவும், நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறவராகவும் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இஸ்ரயேல் மக்கள் பெற்ற அந்த அனுபவத்தையே நாமும் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

எசாயா 12: 2 – 3, 4, 5 - 6
”ஆண்டவரே என் ஆற்றல்”

ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். எதற்காக நாம் மட்டும் இப்படி வாழ வேண்டும்? என்கிற எண்ணத்திற்கு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களை சோர்ந்துவிடாமல் இயக்குபவராக ஆண்டவர் இருக்கிறார். அவர்களுக்கு முழுமையான உற்சாகத்தையும், சோர்ந்து போகாமல் இருக்கக்கூடிய நல்ல மனதையும் ஆண்டவர் தருகிறார். இதைத்தான் எசாயா நூல் ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்விலும் நற்கருணை வாயிலாக ஆண்டவர் ஒவ்வொருநாளும் நமக்கு ஆற்றலைத் தருகிறவராக இருக்கிறார். நமக்கு எல்லா வகையான சோதனை நேரங்களிலும் உற்சாகம் கொடுத்து, உடனிருக்கிறவராக இருக்கிறார். அந்த ஆண்டவரிடம் நாம் எப்போதும், நன்றிக்குரியவர்களாக வாழ அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

அன்னைமரியாளும், அவளின் வாழ்வும்

மரியாளின் பாடல் கடவுள் மரியாளுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதத்தைப்பற்றி நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது. மரியாள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். எந்த அளவுக்கு என்றால், தந்தையாகிய கடவுளே மரியாளை கபிரியேல் தூதர் வழியாக வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவள். அன்னைமரியாளுக்கு கடவுளின் மகனைத்தாங்கும் பேறு கிடைத்த அதே வேளையில் அவளுக்கு ஒரு துயரம் நிறைந்த செய்தியும் தரப்படுகிறது. அதாவது, அவளது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்பதுதான் அந்த செய்தி. அதாவது, கடவுளின் ஆசீர் நமக்குக் கிடைக்கும்போது, துன்பங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிற செய்தியை இது நமக்குத்தருகிறது.

வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக துன்பம் வருகிறபோது, வாழ்வை ஒரு பாரமாக எண்ணிவிடக்கூடாது. துன்பமும், இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த நியதியை அறிந்துகொண்டால் வாழ்வு இன்பம்தான். இந்த வாழ்வியல் கலையை அன்னைமரியாள் நமக்கு கற்றுத்தருகிறார். துன்பம் வருகிறது என்பதற்காக, இன்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. துன்பத்தைத்தாங்குவதன் மூலமாக அதையும் இன்பமாக மாற்ற முடியும் என்பதை அவர் வாழ்ந்துகாட்டுகிறார்.

அன்னை மரியாள் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை. அவளுடைய வாழ்வு நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அன்னையின் வழிகாட்டுதலில் நாம் நடந்தாலே, அது நமக்கு இறைஆசீரைப்பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. அன்னையின் அன்புக்கரங்களில் நம்மை ஒப்படைத்து, இயேசுவோடு இணைந்து வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

 

''மரியா... 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்...
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்' என்றார்'' (லூக்கா 1:49,52)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை. இந்த உண்மையை ஒரு பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்ற ஆகஸ்டு 15 நம் இந்திய நாட்டின் விடுதலை நாள் கூட. மரியாவின் மண்ணக வாழ்வின் இறுதியில் கடவுள் அவரை மகிமைப்படுத்தினார். மரியா விண்ணேற்பு அடைந்தார் என்னும் வெளிப்படையான கூற்று விவிலியத்தில் இல்லையெனினும், மரியா பற்றி விவிலியம் கூறுகின்றவற்றையும் வரலாற்றில் திருச்சபை மரியாவைப் புரிந்துகொண்ட முறையையும் கருதும்போது நாம் மரியாவுக்குக் கடவுள் அளித்த தனிச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. மரியா தம் வயிற்றில் கடவுளின் மகனாகிய இயேசுவைக் கருத்தாங்கி அவரை உலகின் மீட்பராக நமக்கு அளித்தார். எனவே நாம் மரியாவைக் ''கடவுளின் தாய்'' எனப் போற்றுகிறோம். மரியாவுக்குக் கடவுள் இப்பெரும் சிறப்பை அளித்தது கடவுளின் அருள் பெருக்கின் விளைவே. மரியாவுக்குக் கடவுள் ''அரும்பெரும் செயல்கள்'' செய்தார். கடவுளின் திருவுளத்தை முழுமையாக ஏற்று அதன்படி நடந்த மரியாவைக் கடவுள் உயர்த்தினார்.

-- மேலும் மரியா திருச்சபைக்கும் அன்னையாக இருக்கின்றார். அதாவது கடவுளின் வார்த்தையை அவர் தம் இதயத்தில் தாங்கி அதையே தம் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டார். மரியா கடவுளின் வார்த்தையைத் தம் உதரத்தில் கருவாக ஏற்று அவரை உலகுக்கு அளித்தார். இப்பெரும் சிறப்பில் பங்குபெற்ற மரியா நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். கடவுளை நம்பி, அவருடைய வழியில் நடப்போருக்கு எத்தகு உயர்நிலை காத்திருக்கிறது என மரியா நமக்குத் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருக்கிறார். மரியா தம் உறவினராகிய எலிசபெத்தைச் சந்தித்தபோது பாடிய மகிழ்ச்சிக் கீதத்தில் கடவுள் ''தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனக் கூறியது நமக்கும் பொருந்தும். கடவுளின் முன்னிலையில் நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்தால் கடவுள் தம் அரசில் நம்மை ஏற்று நமக்கு மாட்சி அளிப்பார்.

மன்றாட்டு
இறைவா, உம்மைத் தாழ்ச்சியோடு அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------------

''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நாளும் மரியா விண்ணேற்பு அடைந்த பெருவிழாவைத் திருச்சபை கொண்டாடுகின்ற நாளும் ஒன்றாக அமைவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய நாடு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அன்னை மரியா மனித குலம் விடுதலை அடையும்போது எந்நிலையை அடையும் எனக் காட்டும் விதத்தில் கடவுளின் அரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாட்சிமை அடைந்தார். விடுதலை என்பது நலிவான நிலையிலிருந்து நலமான நிலைக்குக் கடந்து செல்வதைக் குறிக்கும். அடிமை நிலையிலிருந்து சுதந்திர நிலை அடையும்போதுதான் நாம் விடுதலை என்றால் என்னவென்று உணர்ந்துகொள்ள முடியும். மரியா தம் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த வேளையில் அவரை அன்போடு வரவேற்று எலிசபெத்து கூறிய சொற்றொடர் ''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' என்பது. உலகில் வாழ்கின்ற அனைத்துப் பெண்களும் ஆண்களும் கடவுளின் ஆசியைப் பெற்றவர்களே. என்றாலும், மரியா இறைவனால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளின் திருமகனுக்கு இவ்வுலகில் தாயாகின்ற பொறுப்பை மரியா ஏற்றார்; கடவுளின் முன்னிலையில் தாழ்ந்து தலைவணங்கி, ''நான் ஆண்டவரின் அடிமை'' (லூக்கா 1:38) என்று மரியா கூறியதோடு கடவுளின் திருவுளத்தை எப்போதும் நிறைவேற்றிட முன்வந்தார். இதனால் கடவுளின் ஆசி அவருக்கு நிறைவாக வழங்கப்பட்டது.

-- மரியா பெற்ற சிறப்பு கடவுளின் திருவுளத்தைப் பணிந்து ஏற்று அதன்படி செயல்படுவோர் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட சிறப்புக்கு முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு, மரியா திருச்சபைக்கு ஓர் முன் அடையாளம். திருச்சபையும் மரியாவைப் போல இறைவனுக்குப் பணிந்து, இறைத்திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றும் கருவியாகச் செயல்பட வேண்டும். அப்போது கடவுளாட்சிக்குச் சாட்சியாகத் திருச்சபை திகழும். கடவுளின் ஆசி நம்மீதும் இந்திய நாட்டின்மீதும் பொழியப்பட வேண்டும் என நாம் மன்றாடுகின்ற சிறப்பு நாள் இது. வீதியெங்கும் விடுதலைக் கீதம் முழங்க வேண்டும். அடிமைத்தனத்தின் சங்கிலிகள் அறுந்து விழ வேண்டும். நம் உள்ளத்தில் உண்மையான சுதந்திரமும் நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் வேரோட்டமான விடுதலையும் விடிந்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, விடுதலை தேடி ஏங்குகின்ற கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வில் இன்னும் கோலோச்சுகின்ற அடிமைத்தனங்கள் மறைந்து விடுதலை அனுபவம் விடிந்திட நாங்கள் உழைத்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

உரிமைக்கீதம்

இரவில் பெற்றோம். இன்னும் இருட்டாகவே உள்ளது என்பர்நம் சுதந்திரம்பற்றி.சுதந்திரம் பெற்றுவிட்டோம். இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பர் சலிப்பாக. அறுபது ஆண்டுகள் ஆனாலும் சரி, அறுநூறு ஆண்டுகள் ஆனாலும் இப்படித்தான் சலிப்படைவோம்.

சுதந்திரம் அரசியலின் அங்கம் அல்ல. ஆன்மீகத்தின் அடித்தளம்.எங்கு ஆன்மீக அடித்தளம் அகலமாக ஆழமாக அமைந்திருக்கிறதோ அங்கு சுதந்திரக் காற்று பூங்காவனத்துத் தென்றலாக புதுமணம் பரப்பும். ஆன்மீகமே இல்லாதவர்கள் எல்லாம் சுதந்திரத்தை அரசியல் அங்கமாக்கிப் பார்ப்பதால், சுதந்திரம் குரங்கு கை பூமாலையாக சிக்கி சிதைந்து கசங்கியுள்ளது.

ஆன்மீகத்தின் அடித்தளமும் அமைத்து மகுடமும் சூடிய, மண்ணுக்கும் விண்ணுக்கும் அரசியாம் அன்னை மரியாள் மட்டுமே இவ்விடுதலைக்கீதத்தை இசைக்க முடியும். எல்லாச் சமூகத் தீமைகளையும் வென்று, வெற்றிக் களிப்பில் பாடும் பாடல் இது.

ஆன்மீக விடுதலை, அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, உணர்த்தும் விடுதலைக் கீதம். சமத்துவம் சகோதரத்துவம் எங்கும் சங்கமிக்கும் சந்தம் நிறைந்த பாடல்இது. நொந்தோர்,நொடிந்தோர், நோயுற்றோர்,நைந்தோர், நலிவுற்றோரின் உறிமைக்குரல்.

நம் அன்னை மரியாளோடு சேர்ந்து தினமும் பாடுவோம்.

--அருட்திரு ஜேசப் லீயோன்

gTy; ypNahd; tWNty;