முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: �என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது!
ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். -பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன!
தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்;
பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்!
மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! -பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்;
பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்;
தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! -பல்லவி

8யb புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்!
குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்!
உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

லூக்கா 1:46-56

திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர் 22

நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

டிசம்பர் – 22
நல்லா பாடுங்க! சத்தமா பாடுங்க!
லூக்கா 1:46-56

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்னை மரியாள் ஆண்டவரிடமிருந்து அளப்பெரிய நன்மைகளை பெற்று அவரின் அன்பை ஒரு பாடலாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பாடுகிறார். அவருடைய பாடலில் போற்றுதல், நன்றி, கடவுளின் சிறப்பான பண்புகள் ஆகியவற்றை அடுக்கி வைத்து இந்த பாடலை அவர் இசைத்திருக்கிறார். அன்னையைப் போன்று நாமும் பல அளப்பெரிய நன்மைகளை நம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனைப் பற்றிய இசையை வெளியிட வேண்டும்.

1. ஆலயத்தில் பாடுங்க...
ஆண்டவரின் அதிசயமான நன்மைகளைப் பற்றிய புத்தகங்களை நாம் படைக்க வேண்டும். அந்த புத்தகங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து புறப்பட்டு வர வேண்டும். பாடல்களில் போற்றுதல், ஆராதனை மற்றும் அவரின் சிறப்பான பண்புகள் இடம்பெற வேண்டும். இந்தப் பாடல்களை நாம் நம்முடைய ஆலயத்தில் பாடலாம்.

2. மேடையில் பாடுங்க...
ஆண்டவரின் நன்மைகளை பல மேடைகளில் பாட வேண்டும். ஆண்டவர் நமக்கு செய்த வல்ல செயல்களை மற்றவர் அனைவரும் அறியும்வண்ணம் நம் பாடல்களை மேடையில் சத்தமாகவும், வல்லமையோடும் பாட வேண்டும்.

மனதில் கேட்க…
1. என் பாடலை எழுதி புத்தகங்களில் வெளியிட முயற்சி எடுக்கலாமா?
2. என் வாழ்க்கை அனுபவத்தை பாடலாக பாடி மேடையில் பாடலாமா?

மனதில் பதிக்க…
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது (லூக் 1:47)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

1சாமுவேல் 1: 24 – 28
நன்றியுணர்வு

நன்றியுணர்வு என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான உணர்வுகளுள் ஒன்று. அது மனித இயல்பை உயர்த்திக் காட்டக்கூடிய பண்பாக விளங்குகிறது. ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகம், தேவையென்றால் பயன்படுத்தவும், பயன்படுத்தியபின் தூக்கியெறியும் நுகர்வுக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நுகர்வுக்கலாச்சாரம் நம்முடை ஆன்மீக வாழ்விலும் எதிரொலிப்பது வேதனையிலும் வேதனை. இறைவனிடமிருந்து நாம் ஏராளமானவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய தேவை முடிந்தவுடன், நாம் வேண்டியது பெற்றுக்கொண்டவுடன், கடவுளை உதறித்தள்ளி விடுகிறோம். இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், எப்படிப்பட்ட வாழ்வை தங்களின் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, இன்றைய முதல் வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு.

இறைவனின் முன்னிலையில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், மற்றவர்களின் ஏளனப்பேச்சுக்கு மத்தியிலும் நம்பிக்கை கொண்டிருந்த அன்னாவின் நேர்ச்சைக் கடன் பற்றிய நிகழ்வு நமக்கு இந்த வாசகத்தில் தரப்படுகிறது. எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. குழந்தை இல்லாத காரணத்தினால், பெனின்னா அன்னாவைத் துன்புறுத்துகிறாள். வேதனை தாளாமல் இறைவனிடத்தில் வேண்டுகிறாள், தன்னுடைய குறையை முறையிடுகிறாள். ஒருவேளை தனக்கு குழந்தை கிடைத்தால், அந்த குழந்தை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பதாக கூறுகிறாள். அதன்படியே, ஆண்டவரின் அருளால் சாமுவேல் என்கிற ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தன் இழிநிலை குழந்தையின் பிறப்பால் மறைந்து போனதும், இறைவனிடம் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை அவள் மறந்துவிடவில்லை. மாறாக, அதனை கருத்தாக நிறைவேற்றுகிறாள். பயத்தினால் அல்ல, மாறாக, அன்பின் மிகுதியினால் அதனை நிறைவேற்றுகிறாள்.

இறைவனுக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவருடைய பிள்ளைகளாக, அவருக்கு உண்மையுள்ளவர்களாக விளங்க வேண்டும். இறைவனின் அன்பை முழுமையாக உணர்கிறபோது, நிச்சயம் நாம் நன்றியுணர்வு மிக்கவர்களாக விளங்குவோம் என்பதில் சந்தேகமில்லை.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

1சாமுவேல் 2: 1, 4 – 5, 6 – 7, 8
”என் மீட்பராம் ஆண்டவரில் என் இதயம் அக்களிக்கின்றது”

எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. அன்னாவுக்கு குழந்தை கிடையாது. எனவே, பெனின்னா அன்னாவை இகழ்ச்சியோடு நோக்கினார். பழைய ஏற்பாட்டில், குழந்தை இல்லாத நிலை, சாபமாகக் கருதப்பட்டது. அன்னா தன்னுடைய உள்ளக்கிடக்கையை ஆண்டவரிடத்தில் கொட்டித்தீர்த்தார். தன்னுடைய இகழ்ச்சியைப் போக்குமாறு வேண்டுகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறுகிறது. ஆண்டவர் அவர் மீது அருள்கூர்ந்தார். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். தன்னுடைய இழிநிலையைப் போக்கிய அன்னாவின் மனம், மகிழ்ச்சியடைகிறது. அந்த மகிழ்ச்சியின் நிறைவில் பாடுகிற பாடல் தான், இன்றைய திருப்பாடல்.

அன்னாவின் இந்த பாடல், எல்லாவற்றிற்கும் இறைவன் தான் காரணராகயிருக்கிறார் என்று, அவர் வைத்திருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டவரால் எல்லாம் முடியும் என்பதுதான் இந்த பாடலின் சிந்தனையாக இருக்கிறது. எனவே தான், இந்த பாடல், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாளால் பாடப்படுகிறது. ஆண்டவர் நீதியுள்ளவராக இருக்கிறார். அவர் விரும்பினால் ஒருவரை செல்வராக்குகிறார். அந்த நிலைக்கு அவர் தகுதியில்லை என்றால், ஏழையாக்குகிறார். ஒருவருக்கு உயிர் தருகிறவரும் ஆண்டவரே, என்கிற நம்பிக்கையை ஆழமாக, அன்னா எடுத்துரைக்கிறார். இந்த வரிகள் அனைத்துமே, தன்னுடைய வாழ்வில் அன்னா அனுபவித்த உண்மை. அதைத்தான், இங்கே பாடலாக வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்விலும், கடவுளைப் பற்றிய இந்த நம்பிக்கை நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். எது நடந்தாலும் ஆண்டவரால் என்னை மீட்க முடியும், ஆண்டவரால் என்னை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறபோது, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

அன்னை மரியாளின் வார்த்தைகள்

இந்த உலகம் விந்தையானது. இங்கு நேர்மையோடு, நீதியோடு வாழ வேண்டும், இந்த உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்கிறவர்களை உலகம் பரிகாசம் செய்கிறது. அவர்களை உதாசினப்படுத்துகிறது. அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது. அவர்கள் கூறக்கூடிய கருத்துக்கள், வாழ்விற்கு ஒத்துவராது என்று ஒதுக்கித்தள்ளிவிடுகிறது. இன்றை நற்செய்தியில் அன்னைமரியாளின் பாடல், இந்த உலகம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நல்லவர்கள் எண்ணுகிறார்களோ, அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல. நல்லவர்களோடு தன்னைப் பொருத்திப்பார்க்கிற வார்த்தைகள். இந்த உலகம் எண்ணுவதிலிருந்து வேறுபாடான வாழ்வை, சவாலான வாழ்வை வாழ்வதற்கு முயலக்கூடிய வார்த்தைகள். இது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. தான் எப்படி வாழப்போகிறேன், தன்னுடைய குழந்தையை எப்படி வளா்க்கப் போகிறேன் என்பதற்கான முன்னுதாரணமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் வரலாற்றை இரண்டாக கிழித்துப்போட இருக்கும், உன்னதரான இறைமகன் வாழ இருக்கக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வு ஏனோ தானோவென்ற வாழ்வாக இருக்கக்கூடாது. அன்னை மரியாளைப் போன்ற திட்டமிட்ட வாழ்வாக இருக்க வேண்டும். அதுதான் இந்த நற்செய்தி நமக்குத்தரும் செய்தி.

நமது வாழ்வை நாம் திட்டமிட்டு வாழ வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. மாறாக, நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் ஆண்டவரிடத்தில் கேட்டு மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மையான பங்கேற்பு

நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கிறோம். திருப்பலியில் பங்கு பெறுகிறோம். இறைவார்த்தையை வாசிக்கிறோம். ஆனால், அது உண்மையிலே நிறைவாக பங்கேற்ற உணர்வைத்தருகிறதா? பல வேளைகளில் நமது பதில் இல்லை. பல வேளைகளில் ஏதோ கடமைக்காக, வழிபாடுகளில் பங்கேற்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதே வேளையில், நமக்கு ஒரு கஷ்டம் என்று வைத்துக்கொள்வோம். ஆலயத்திற்குச் செல்கிறபோது, மிகவும் பக்தியாக உணர்கிறோம். சொல்லப்படுகிற இறைவார்த்தை நம் உள்ளத்தைத் தொடுவதாக இருக்கிறது. நாம் சொல்லும் செபம் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஒரே வழிபாடுதான். ஆனால், நமது மனநிலைதான் அதை வேறுபடுத்திக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாளின் பாடல்களும், இத்தகைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரக்கூடிய செபம் தான்.

1சாமுவேல் புத்தகம் 2: 1 – 10 ல் நாம் அன்னாவின் பாடலை வாசிக்கிறோம். ஏறக்குறைய, மரியாளின் பாடல், இதைத்தழுவியதாகத்தான் இருக்கிறது. கடவுளின் மகனைத்தாங்கப் போகிறோம் என்கிற பேரானந்தமும், தனது உறவினர் எலிசபெத்தம்மாளும் மலடி என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு, இறைவன் கருணைபுரிந்திருக்கிறார் என்கிற உணர்வும், அவளுக்கு மகிழ்ச்சி நிறைந்த உணர்வைத்தந்திருக்க வேண்டும். அந்த உணர்வோடு இந்த பாடலைப் பாடுகிறார். தான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து, துணிவோடு, மகிழ்ச்சியோடு, உள்ளப்பூரிப்போடு சொல்கிறார்.

நாமும் செபிப்பதற்கு ஆண்டவரின் ஆலயத்திற்குச் செல்கிறபோது, இத்தகைய உணர்வோடு செபிக்க வேண்டும். பங்கேற்க வேண்டும். அதற்கு நம்மையே நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். இன்றைக்கு வழிபாடுகள் நம்மைத் தொடவில்லை என்றால், அது வழிபாட்டின் குற்றமல்ல, நாம் நல்ல முறையில் தயாரிக்காமல் செல்வதுதான், அதற்கான காரணம். இன்றைக்கு திருப்பலி தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் செபங்களில் யாராவது அக்கறை கொள்கிறோமா? திருப்பலியின் தொடக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்ற மனநிலை இருக்கிறதா? விவிலியத்தை தாங்கி, அதற்கு செவிகொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? தகுந்த தயாரிப்போடு வழிபாடுகளில் பங்குகொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

செருக்கை அகற்றுவோம்

அன்னை மரியாள் தனது பாடலில் ”உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்” என்று பாடுகிறார். செருக்கு மனிதனுக்கு இருக்கக்கூடாத ஒன்று. செருக்கு என்பதை ஆணவம், தலைக்கனம், நான் தான் எல்லாம் என்ற மனநிலை என்று கூட சொல்லலாம். அத்தகைய செருக்கு ஒருவனுக்கு அழிவைத்தான் தரும். இதற்கு விவிலியத்தில் பல எடுத்துக்காட்டுக்களை நாம் கொடுக்கலாம்.

தொடக்கநூலில் மனிதர்களை பாபேல் கோபுரத்தைக் கட்ட வைத்தது அவர்களின் செருக்கு. கடவுளை விட தாங்கள் மிஞ்சியவர்கள் என்ற எண்ணம். கடவுளின் வல்லமையின் அளவை புரிந்துகொள்ள முடியாத, அறிவற்ற நிலை. அவர்களின் செருக்கை ஆண்டவர் ஒரு நொடிப்பொழுதில், அடித்து நொறுக்குகிறார். பரிசேயா்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தங்களது அறிவுச்செருக்கினால், வெகு எளிதில் இயேசுவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தபோது, தனது ஞானத்தினால் அவர்களை வெகு எளிதாக இயேசு கீழே விழச்செய்தார். செருக்கு நிறைந்தவர்கள் யாரும் வரலாற்றில் நிலைத்ததில்லை. அது அவர்களுக்கு அழிவைத்தான் கொண்டு வந்திருக்கிறது.

செருக்கை அகற்றி தாழ்ச்சி நிறைந்தவர்களாக மாறுவோம். செருக்கு ஒருபோதும் நம்மை உயர்த்தாது, அது எப்போதும் நமக்கு அழிவையேக் கொண்டுவரும் என்பதை மனதில் இருத்தி, செருக்கை அகற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வே ஒரு பாடல்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மரியாவின் புகழ் பெற்ற பாடலை இன்று சிந்திக்கிறோம். இந்தப் பாடல் மரியாவின் வாழ்வின் சுருக்கமாக அமைகிறது. அவரது வாழ்வின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களையும் இப்பாடல் சுட்டுகிறது. ஒருவரது புகழ்ச்சி சொற்களால் அமைவதைவிட, செயல்களால் அமைவதையே புகழ்ச்சியைப் பெறுபவர் விரும்புவார். இறைவனும் நமது நன்றியும், புகழ்ச்சியும் உதட்டால் அமைவதைவிட, நம் வாழ்வால் அமைவதையே விரும்புவார். மரியாவின் இறைபுகழ்ச்சி அவ்வாறே அமைந்திருந்தது. தாழ்நிலையில் இருந்த தம்மை உயர்த்திப் பெருமைப்படுத்தியதை அவர் அறிக்கை இடுகிறார். இது நிகழ்காலம். எல்லாத் தலைமுறைகளும் தம்மைப் பேறுபெற்றவர் என அறிக்கையிடுவர் என்று போற்றுகிறார். இது எதிர்காலம். இறைவன் தனக்கு அரும்பெரும் செயல்கள் பலவற்றைச் செய்துள்ளதாகப் பாடுகிறார். இது கடந்த காலம். இவ்வாறு, முக்காலத்திலும் இறைவனின் இரக்கத்தை எண்ணிப் பாடுகிறார். அவரது முழு வாழ்விலும் இறைவனின் பேரன்பைப் பறைசாற்றுகிறார்.

நமது வாழ்விலும் கடந்த காலங்களில் இறைவன் செய்த வியத்தகு செயல்களையும், இந்த நாள்களில் நம்மீது பொழிந்துவரும். பேரிரக்கத்தையும், இனி வரவிருக்கின்ற காலத்திலும் இறைவன் நம்மைப் பெரியனவற்றை நோக்கி வழிநடத்தப் போவதையும் எண்ணி இறைவனுக்கு உயிருள்ள நாள்களெல்லாம் நன்றி கூறுவோமாக. நம் வாழ்வே நமது நன்றிப் பாடலாக அமையட்டும்.

மன்றாடுவோம்: எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் நேற்றும், இன்றும், நாளையும் நீர் செய்த, செய்து வருகின்ற, இன்னும் செய்யவிருக்கின்ற அரும்பெரும் செயல்களுக்காக இறைவா உமக்கு  நன்றி. என் வாழ்வை உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வு உமக்கு உகந்த ஒரு பாடலாக அமைய அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

--------------------

''மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்றார்'' (லூக்கா 1:47-48)


அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற மரியா ''பேறுபெற்றவர்'' எனப் போற்றப்பட்டார் (காண்க: லூக் 1:42,45). மரியாவின் வயிற்றில் குழந்தையாக இயேசு இருக்க, எலிசபெத்தின் வயிற்றில் குழந்தையாக இருந்த யோவான் ''மகிழ்ச்சியால் துள்ளினார்'' (காண்க: 1:41,44). இந்நிகழ்ச்சிகளைக் கண்ட மரியாவின் உள்ளம் இறைப் பிரசன்னத்தால் நிறைகின்றது; அவரது இதயத்தில் நன்றியுணர்வு ததும்புகிறது; தம் இதய உணர்வுகளை மரியா இனிமைமிகு பாடலாக வெளிப்படுத்துகிறார்: ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது'' எனத் தொடங்குகின்ற மரியாவின் பாடல் எலிசபெத்தின் வாயிலிருந்து புறப்பட்டிருக்கலாம், அல்லது இருவருமே இணைந்து அதைப் பாடியிருக்கலாம். எவ்வாறாயினும் அப்பாடல் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சியொன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அன்னா என்னும் பெண்மணி குழந்தைப் பேறின்றி இருந்தார். அவருக்குக் கடவுளின் அருளால் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயர். சாமுவேலின் பிறப்பைக் கொண்டாடிப் பாடிய அன்னா கடவுள் தம் வாழ்வில் புரிந்த அரும் செயலை வியந்து போற்றினார். அவர் பாடிய பாடலின் சில அம்சங்கள் மரியா பாடிய பாடலிலும் உள்ளன (காண்க: 1 சாமு 2:1-10). அதற்கு முற்பட்ட காலத்தில், கடவுள் புரிந்த அரும் செயல்களை வியந்து தெபோரா என்னும் பெண்மணி பாடிய பாடலின் எதிரொலிப்பையும் மரியாவின் பாடலில் காணலாம் (காண்க: நீத 2:2-31).

-- கடவுளை நம்புகின்ற மனிதரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை மரியாவின் பாடலில் காணக்கிடக்கிறது. அதுபோல, கடவுளைப் புறக்கணித்து, தம் மனம் போன போக்கில் வாழ்வோர் இவ்வுலகில் அதிகாரமும் செல்வமும் கொண்டிருந்தாலும் தங்கள் நிலையிலிருந்து ஒருநாள் வீழ்ச்சியடைவர் (காண்க: லூக் 1:52-53). மரியாவின் மகிழ்ச்சிப் பாடலுக்கு அடிப்படையாக அமைவது யாது? கடவுளின் பார்வையில் ''அடிமை'' போல் இருந்த மரியா ஏற்கெனவே கடவுளுக்குத் தாம் அடிமை என ஏற்றிருந்தார் (காண்க: லூக் 1:38). கடவுளுக்கு எது விருப்பமோ அதையே தம் வாழ்வில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். எனவே, கடவுளின் திருவுளம் தம் வாழ்வில் நிறைவேறட்டும் என மரியா தம்மை முற்றிலுமாகக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருந்தார் (காண்க: லூக் 1:38). மரியாவின் தாழ்ச்சியைக் கண்ட கடவுள் அவரை மிகவே உயர்;த்தினார். உலக மீட்பராக வந்த மெசியாவின் தாயாகின்ற பேற்றினை அவருக்கு அளித்தார். மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சி நம் வாழ்விலும் வெளிப்பட வேண்டும். மரியா கடவுளை நம்பி வாழ்ந்தது போல நாமும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்து நிற்க வேண்டும். உலகம் ஏழைகள் எனக் கருதுவோர் மட்டில் கடவுள் தனி அன்பு கொண்டிருப்பது போல நாமும் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்ற உமக்கு நாங்கள் எந்நாளும் பணிந்திருக்க அருள்தாரும்.

 

''ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்:
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்:
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்'' (லூக்கா 1:52-53)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மரியாவின் வாழ்க்கையில் கடவுள் புரிந்த அரும் செயல்கள் மரியாவின் நன்றிக் கீதத்திற்கு அடிப்படை. இப்பாடல் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அன்னாவின் பாடலைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாதிருந்த அன்னா கடவுளின் இரக்கத்தால் சாமுவேலைப் பெற்றதால் கடவுளுக்கு நன்றி கூறிப் பாடினார் (காண்க: ) அதுபோல, மரியாவும் கடவுள் தமக்குப் புரிந்த அதிசய செயல்களை எண்ணி, கடவுளைப் போற்றுகின்றார். இப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. அதாவது உலகம் பெரிதாக மதிப்பதைக் கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை. மாறாக, உலகம் மதிப்பதற்றதாகக் கருதுவது கடவுளின் பார்வையில் மாண்புடைத்ததாகிறது. இது ''மனித மதிப்பீடுகளைப் புரட்டிப் போடுதல்'' என்னும் இலக்கிய மற்றும் இறையியல் உத்தி.

-- மரியா பாலஸ்தீன நாட்டில் பிறந்த ஓர் ஏழைப் பெண். அவருக்கு சமுதாயத்தில் பெண் என்ற முறையில் மதிப்பு இருக்கவில்லை. அவர் பெரிய பதவியோ அதிகாரமோ கொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்து தம் மகனின் தாயாக மாறுகின்ற பெரும் பேற்றினை அளித்தார். பசியால் வாடிய இஸ்ரயேலருக்குக் கடவுள் வானிலிருந்து இறங்கிய உணவை வழங்கினார்; அவர்களுடைய தாகத்தைப் போக்க அதிசயமான விதத்தில் நீரூயஅp;ற்று தோன்றியெழச் செய்தார். அதே நேரத்தில் தங்களுக்கு எல்லாம் இருக்கிறது என இறுமாப்புக் கொண்டு மமதையால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களைக் கடவுள் முறியடித்தார். இதற்கும் விவிலியம் பல எடுத்துக்காட்டுகள் தருகிறது. நன்மைக்கும் தீமைக்கும் இவ்வுலகிலேயே பலன் கிடைத்துவிடும் என நாம் கூற முடியாது. என்றாலும், கடவுள் நேர்மையுள்ள நடுவர் என்பதால் அவர் மனிதரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறுபவர் அல்ல அவர். எனவே, செல்வம் தங்களுக்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டு ஏழைகளை மதியாதவர்கள் கடவுளிடமிருந்தும் மதிப்பு எதிர்பார்க்க முடியாது. மரியாவின் பாடல் நமக்க உணர்த்தும் அரிய உண்மை என்னவென்றார்: நாம் மரியாவைப் போலக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுதில் நிலைத்திருந்தால் கடவுள் நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருவார். அது இவ்வுலகிலேயே தொடங்கி மறுவுலகில் முழுமைபெறும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருப்புகழை எந்நாளும் பாடி மகிழ எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------

புரட்சிப் பாடல்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

பாடல்கள் மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மொழி நடை. எத்தனை மொழிகளில் என்னென்ன கவி நயத்துடன் பாடல்களை வடிவமைத்தாலும்,உலக வரலாற்றல் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் எல்லோராலும் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறது, பாடப்படுகிறது. அது நம் அன்னை மரியாளின் பாடல்.

இப்பாடலை எல்லா வயதினரும் பாடலாம். எல்லா சூழ்நிலையிலும் பாடலாம். இன்பத்திலும் பாடலாம். துன்பத்திலும் பாடலாம். வெற்றியிலும் பாடலாம். தோல்வியிலும் பாடலாம். உயர்விலும் பாடலாம். தாழ்விலும் பாடலாம். ஆயினும் இப் பாடலின் முழுமையை, நிறைவை ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.

அன்னை மரியாளிடமிருந்த அதே மனநிலை உள்ளவர்கள் மட்டுமே இப்பாடலின் சிறப்பைப் பெற முடியும். ஆண்டவரில் உள்ளம் மகிழ வேண்டும். "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இறை திட்டத்திற்கு கீழ்ப்படிதலும் அர்ப்பணமும் தேவை. ஏழைக்கு இரங்கும் உள்ளம், உதவும் மனம்,தாழ்ச்சி நிறைந்த செயல்பாடு இவை இப் பாடலைப் பாட வலுவூட்டும்.

எந்தச் சமுதாயத்தில் இப்பாடலைப் பாடும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதோ, அந்த சமுகம் ஏற்றத்தாழ்வின்றி செழிக்கும். யாருடைய குடும்பங்கள் இந்த மனநிலையில் உருவாகுகிறதோ, அக்குடும்பங்கள் குறைவின்றி வாழும்.

அருட்திரு ஜோசப் லியோன்

-------------------------

உரிமைக்கீதம்

இரவில் பெற்றோம். இன்னும் இருட்டாகவே உள்ளது என்பர்நம் சுதந்திரம்பற்றி.சுதந்திரம் பெற்றுவிட்டோம். இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பர் சலிப்பாக. அறுபது ஆண்டுகள் ஆனாலும் சரி, அறுநூறு ஆண்டுகள் ஆனாலும் இப்படித்தான் சலிப்படைவோம்.

சுதந்திரம் அரசியலின் அங்கம் அல்ல. ஆன்மீகத்தின் அடித்தளம்.எங்கு ஆன்மீக அடித்தளம் அகலமாக ஆழமாக அமைந்திருக்கிறதோ அங்கு சுதந்திரக் காற்று பூங்காவனத்துத் தென்றலாக புதுமணம் பரப்பும். ஆன்மீகமே இல்லாதவர்கள் எல்லாம் சுதந்திரத்தை அரசியல் அங்கமாக்கிப் பார்ப்பதால், சுதந்திரம் குரங்கு கை பூமாலையாக சிக்கி சிதைந்து கசங்கியுள்ளது.

ஆன்மீகத்தின் அடித்தளமும் அமைத்து மகுடமும் சூடிய, மண்ணுக்கும் விண்ணுக்கும் அரசியாம் அன்னை மரியாள் மட்டுமே இவ்விடுதலைக்கீதத்தை இசைக்க முடியும். எல்லாச் சமூகத் தீமைகளையும் வென்று, வெற்றிக் களிப்பில் பாடும் பாடல் இது.

ஆன்மீக விடுதலை, அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, உணர்த்தும் விடுதலைக் கீதம். சமத்துவம் சகோதரத்துவம் எங்கும் சங்கமிக்கும் சந்தம் நிறைந்த பாடல்இது. நொந்தோர்,நொடிந்தோர், நோயுற்றோர்,நைந்தோர், நலிவுற்றோரின் உறிமைக்குரல்.

நம் அன்னை மரியாளோடு சேர்ந்து தினமும் பாடுவோம்.

--அருட்திரு ஜோசப் லியோன்