புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
திருநாள் திருப்பலி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 139: 1-3. 13-14. 15
பல்லவி: வியத்தகு முறையில் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்;
என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்;
என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. -பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;
உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். -பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று;
மறைவான முறையில் நான் உருவானதையும்
s பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து `ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், `மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார். சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். அல்லேலூயா.

லூக்கா 1:57-66,80

திருமுழுக்கு யோவான் பிறப்பு

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ``வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், ``உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, ``குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ``இக்குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ``இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவானைப் போல புதிதாய் பிறப்போம்!

லூக்கா 1: 57-66, 80

இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அவர் சக்கரியா மற்றும் எலிசபெத்தின் மகன். காபிரியேல் தூதர் அவரது தந்தையான சக்கரியாவுக்கு அவரது பிறப்பை அறிவித்து அவருக்கு யோவான் என்ற பெயரைக் கொடுத்தார், யோவான் என்றால் "கடவுள் இரக்கமுள்ளவர்" என்று பொருள்படும் (லூக்கா 1:8-23). பாலைவனத்தில் ஒரு இறைவாக்கினரின் வாழ்க்கையை வாழ தனது பெற்றோரை விட்டுச் சென்றார். அவர் பாலைவனத்தில் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர் போல ஒட்டகத்தோல் ஆடை அணிந்து, வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிட்டு (மாற்கு 1:6; மத் 3:4), இறையாட்சியையும் வரவிருக்கும் கடவுளின் தீர்ப்பையும் அறிவித்தார், மேலும் அவர் மனந்திரும்புதலின் அடையாளமாக திருமுழுக்கு பெற மக்களை அழைத்தார். அவர் பரிசேயர்களிடமும் சதுசேயர்களிடமும், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக்கா 3:7-8) என்று வெளிப்படையாக மக்களைத் சாடியதால், வரி வசூலிப்பவர்கள் மற்றும் போர் வீரர்கள் உட்பட சில பலம் வாய்ந்தவர்கள் மனந்திரும்பினார்கள். வரி வசூலிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்க அவரோ, "குறிப்பிட்ட வரியை விட அதிகமாக வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்" (லூக்கா3:13). அவருடைய செய்தி எல்லா இடங்களிலும் பரவியது. எருசலேம் மற்றும் யூதேயா நாடு முழுமையும் இருந்து மக்கள் சென்றதாகவும், அவர்கள் யோர்தானில் திருமுழுக்கு பெற்றபோது, தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டதாகவும் மாற்கு கூறுகிறார் (மாற்கு 1:5).

திருமுழுக்கு யோவான் தன்மீது கவனம் செலுத்தாமல், இயேசுவை நோக்கி மக்களை வழிநடத்தியபோது அவருடைய மனத்தாழ்மையை நாம் காண்கிறோம். யோவான்தான் மெசியா என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்தனர், அவர் இல்லை என்று அவர்களுக்கு உறுதியளித்தார். "நான் உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தேன், ஆனால் அவர் தூய ஆவியால் உங்களுக்கு திருமுழுக்கு கொடுப்பார்" (மாற்கு 1:8) என்பதை உறுதிபட தெரிவித்தார். இயேசு யோவானிடம் திருமுழுக்கு கேட்டு வந்தபோது, யோவான் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டு, "இதோ, உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் ஆட்டுக்குட்டி" என்றார் (யோவான் 1:29). மெசியாவின் வருகைக்குத் தங்களைத் தயார்படுத்துவதற்காக எலியா இறைவாக்கினர் மீண்டும் உலகிற்குத் திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு யூத மக்களிடையே உருவாகியிருந்தது, மேலும் அவர்கள் எதிர்பார்க்கும் எலியா, யோவான் தான் என்று இயேசு பின்னர் அறிவித்தார் (மாற்கு 9:13). இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு, "அவர் பெருக வேண்டும், நான் குறைய வேண்டும்" என்று அறிவித்தபடி திருமுழுக்கு யோவான் இயேசுவின் பக்கம் கவனத்தைத் திருப்புவதை மீண்டும் ஒருமுறை காண்கிறோம். (யோவான் 3:30).

சகோதரனின் மனைவியை ஏரோது திருமணம் செய்ததைக் கண்டிப்பதில் யோவானின் மேலான தைரியத்தைக் காண்கிறோம். சட்டத்தால் அனுமதிக்கப்படும் அனைத்தும் தார்மீக ரீதியாக சரியானவை அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது, எ.கா. விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு. ஏரோது யோவானைக் கைது செய்து சிறையில் அடைத்தார். திருமுழுக்கு யோவான் உண்மையின் பக்கம் நின்றார், துரதிர்ஷ்டவசமாக, இன்று உண்மைக்காக நிற்கும் பலரைப் போலவே, அவர் ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. திருமணத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாய் நின்ற திருமுழுக்கு யோவானின் தைரியம் அவரது தலையை துண்டித்து அவருக்கு மரணத்தை விளைவித்தது.

எல்லாவற்றிலும் நம்மை முன்னிலைப்படுத்தாமல், தகுதியான நபர்களை முன்னிலைபடுத்துகிறோமா? உண்மைக்காக, சரியானவற்றிற்காக துணிவுடன் சவால்களை எதிர்கொள்கிறோமா என்பதை திருமுழுக்கு யோவானின் பிறந்த நாளில் சிந்திப்போம்!

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

எசாயா 49: 1 – 6
இறைவன் காட்டும் பேரன்பு

கடவுளுடைய மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனுடைய ஆலயம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்தநாட்டிலிருந்து, அவர்களுடைய கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதாக இருக்கிறது. விசுவாசத் தளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. இன்னும் தாங்கள் கடவுளின் பிள்ளைகள் தானா? தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தானா? கடவுள் தங்களை இன்னும் அன்பு செய்கிறாரா? இந்த அந்நிய தேசத்தில் நம் இறைவனைக் காண முடியுமா? அவரை வணங்க முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகள் அவர்களுடைய உள்ளத்தில் தோன்றி மறைகிறது.

இந்த பகுதியில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது. கடவுள் தன்னுடைய மீட்பரை அனுப்புவார் என்றும், அவர் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதியை நிலைநாட்டுவார் என்றும் வாக்குறுதியை வழங்குகிறார். எசாயா 40 ம் அதிகாரம் முதல் 55 ம் அதிகாரம் வரை உள்ளவை, இரண்டாம் புத்தகமாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாம் புத்தகத்தில், இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள் என்றும், இழந்துபோயிருக்கிற தங்களது நாட்டையும், ஆலயத்தையும் கட்டியெழுப்புவார்கள் என்றும், அவர்களுக்கு நம்பிக்கைச் செய்தி வழங்கப்படுகிறது. மீண்டும் மக்கள் இஸ்ரயேலின் உண்மையான கடவுளிடத்தில் தங்களை ஒப்படைத்து, அவரது குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பமும் இங்கு வைக்கப்படுகிறது.

இறைவன் எப்போதும் நம்மை கைவிடுகிறவர் கிடையாது. அவர் எப்போதும் நம் அருகிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறவராக இருக்கிறார். அவருடைய உள்ளம் இரக்கம் நிறைந்தது. அவரது அன்பு என்றென்றைக்கும் நமக்கு உண்டு. நாம் எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும், நம்மைத் தாங்குவதற்கு, நம்மைத் தேற்றுவதற்கு வருகிற உண்மையான இறைவன். அவரிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்படைப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

திருப்பாடல் 139: 1 – 3, 13 – 14, 14 – 15
“உமக்கு நன்றி கூறுகின்றேன்“

இறைவனுக்கு திருப்பாடல் ஆசிரியர் நன்றி சொல்கிறார். இந்த நன்றி தனிப்பட்ட நன்றியல்ல. மாறாக, ஒட்டுமொத்த மனித குலத்தின் சார்பாக வெளிப்படும் நன்றி. இந்த நன்றி எதற்காக? இந்த நன்றியானது, மனிதனை வியத்தகு முறையில் படைத்ததற்காக. எப்படி மனிதன் கடவுளின் படைப்பில் வியத்தகு முறையில் படைக்கப்பட்டிருக்கிறான்? இந்த உலகம் முழுவதையும் கடவுள் தான் படைத்தார். ஒட்டுமொத்த படைப்பும், கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அதில் மனிதன் சிறப்பாக நன்றிக்கடன்பட்டிருக்கிறான்.

கடவுள் மனிதனை தன்னுடைய சாயலாக, தன்னுடைய உருவத்தில் படைத்திருக்கிறார். மற்ற படைப்புக்களுக்கு கிடைக்காத பாக்கியம் இது. மனிதர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் மறு பிம்பங்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் அன்பின் வெளிப்பாட்டில் படைக்கப்பட்டவர்கள். ஏனென்றால், இறைவன் மூவொரு இறைவனுக்கு வெளியில் தன்னுடைய அன்பை நிலைநாட்ட விரும்புகிறார். அந்த அன்பை மனிதனோடு பகிர்ந்து கொள்வதற்கு முன்வருகிறார். இது கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கிற மிகப்பெரிய பாக்கியம். இப்படி, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகள் ஏராளம். அந்த கொடைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்கிற நன்றியுணர்வில் வாழ, இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இறைவன் நமக்கு வழங்கும் இந்த முழுமையான அன்பில் நாம் எப்போதும் நிலைத்திருப்பதற்கு நாம் உறுதி எடுப்போம். இந்த அன்பு நம்மோடு தங்கிவிடாமல், பெற்றுக்கொண்ட இந்த அன்பை, மற்றவர்களோடு பகிர்ந்து வாழ முன்வருவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

திருமுழுக்கு யோவானின் நற்செய்திப்பணி

பிறப்பு என்பது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக இருக்கிறது. பிறப்பு தான், ஒருவருக்கு வாழ்வையே கொடுக்கிறது. பிறப்பு மூலமாகத்தான், இந்த உலகத்திற்கு நாம் வருகிறோம். இந்த உலகத்தைப் பார்க்கிறோம். வாழ்வு என்கிற கொடையை நாம் பெற்றுக்கொள்கிறோம். திருச்சபையில் பொதுவாக, புனிதர்களின் இறப்பு விழாவை, அவர்களின் விண்ணக பிறப்பு விழாவாக நாம் திருவிழா கொண்டாடுகிறோம். ஆனால், இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடுகிற நாம், திருமுழுக்கு யோவானின் மண்ணகப் பிறப்பையும் சிறப்பாக கொண்டாடுகிறோம்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு சாதாரணமாக நிகழ்ந்தது அல்ல. அது ஒரு அசாதாரணமான நிகழ்ச்சி. வயது முதிர்ந்த ஒரு தம்பதியர்க்கு, கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்த குரு மரபின் தோன்றலில் உள்ள செக்கரியாவுக்கும், கடவுள் நம்பிக்கை மிகுந்த, அன்னை மரியாளின் உறவினராக இருந்த, எலிசபெத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்த திருமுழுக்கு யோவானின் பிறப்பு உண்மையில், ஆச்சரியம் தரக்கூடிய பிறப்புதான். வயிற்றில் இருக்கும்போதே, மெசியாவைக் கண்டு, மெசியாவின் தாயை அடையாளம் கண்டுகொண்ட உன்னத பிறப்பு திருமுழுக்கு யோவானுடையது. இயேசுவின் புதுமைகளையும், அடையாளங்களையும் கொண்டே அவரை, மெசியாவாக அடையாளம் காணமுடியாதவர்கள் நடுவில், கருவில் இருக்கும்போதே அடையாளம் கண்டுகொண்டவர் திருமுழுக்கு யோவான்.

இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, தனது வாழ்வு முழுவதும் இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும், அடையாளம் காட்டுவதிலும் செலவிட்டவர் திருமுழுக்கு யோவான். அவரைப்போல நாமும், ஏழைகளில், வறியவர்களில் இயேசுவை அடையாளம் காணுவோம். இயேசுவை உலகிற்கு அடையாளப்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார்.

நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள, நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

நமது வாழ்வு இலக்கின்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகத்தோடு இணைந்து செல்ல நாம் பழகிவிட்டோம். ஆனால், அது உண்மையான வாழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும், நாம் செய்கின்ற செயல்களை, நமது வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் ஆராய வேண்டும். கடவுள் நமக்கு காட்டுகின்ற செய்தியை அறிந்துகொண்டு, அதன் வழியில் நாம் செல்ல வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனோடு இணைந்திருப்போம்

இறைவனோடு நாம் இணைந்திருக்க வேண்டும். இறைவனோடு இணைந்திருக்கின்றபோது கிடைக்கின்ற மகிழ்ச்சியை இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிட முடியாது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திருமுழுக்கு யோவான். தன் பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனோடு இணைந்திருந்தார். எவ்வளவு சவால்களை சந்தித்தாலும் துணிவோடு சந்தித்தார். இறுதிவரை கடவுளோடு இணைந்திருந்தார்.

“கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது” என்று இயேசு கூறுகிறார். இதனுடைய பொருள், நம்முடைய பலத்தில் அல்ல, நம்முடைய செல்வத்தில் அல்ல, நம்முடைய புகழில் அல்ல, மாறாக, இறைவனில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும், அவரோடு இணைந்திருக்க வேண்டும் என்பதுதான். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கூட இதைத்தான் பார்க்கிறோம். ஒரு காலத்தில், நாடோடிகளாக, நாடே இல்லாதவர்களாக பலவீனமாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு பலமாக இருந்தது யாவே இறைவன். இறைவனோடு அவர்கள் இணைந்திருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு நாட்டைப்பெற்றாhகள். ஆனால், என்று தங்களுடைய பலத்தில் நம்பிக்கை வைத்து, கடவுளைவிட்டு விலகிச்சென்றார்களோ, அன்றே அவர்கள் நாட்டை இழந்தார்கள். அடிமைகளாக்கப்பட்டனர். நிம்மதியை இழந்துவிட்டனர். கடவுளை விட்டு விலகிச்சென்றால் நமக்கு மிகப்பெரும் அழிவு தான் மிஞ்சும்.

திருமுழுக்கு யோவான் கடவுளோடு இணைந்திருக்க வேண்டும் என்பதை நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால் அவர் சந்தித்த துயரங்களை துணிவோடு எதிர்கொண்டார். அதற்கு தேவையான ஆற்றலை, கடவுள் அவருக்குக் கொடுத்தார். நாமும் கடவுளோடு இணைந்திருந்தால், வாழ்வை துணிவோடு எதிர்கொள்ள முடியும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

வியப்பு, விடுதலை, இறையச்சம்!

ஆண்டவர் இயேசு, அன்னை மரியா இவர்களோடு பிறப்பு விழாவைக் கொண்டாடும் ஒரே புனிதர் திருமுழுக்கு யோவான் மட்டுமே. இன்று அவரது பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.

இயேசுவின் முன்னோடி, பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினர், புதிய ஏற்பாட்டின் முதல் இறைவாக்கினர், இயேசுவைச் சுட்டிக்காட்டியவர்... என்னும் பல்வகைப் புகழு’க்கும் சொந்தக்காரரான யோவானின் பிறப்பைப் பற்றிப் பேசும் இன்றைய நற்செய்தி வாசகம் அவரது பிறப்பு வியப்பு, விடுதலை, இறையச்சம் மூன்றையும் கொண்டுவந்த்து என்கிறது.

குழந்தையின் பிறப்பு பலவகைகளிலும் வியப்பானது. வயதான காலத்தில் எலிசபெத் கருத்தாங்கினார். அவரது பிறப்பைத் தயாரிக்க ஆண்டவரின் தாயான அன்னை மரியா வந்தார். அவரைச் சந்தித்தபோது, வயிற்றிலேயே யோவான் அக்களிப்பால் துள்ளினார். அவரது பெயராக “யோவான்”“ அறிவிக்கப்பட்டபோதும் அனைவரும் வியப்படைந்தனர்.

அவரது பிறப்பால் தந்தை செக்கரியாவின் நா கட்டவிழ்ந்த்து. அவரது பணி பலருக்கும் விடுதலை தரும் பணியாக, கட்டுக்களை அவிழ்க்கும் பணியாக இருக்கம் என்பதை அது முன்னறிவித்த்து.

அவரது பிறப்பின் செய்தியைக் கேட்ட மக்கள் அஞ்சினர், இறையச்சம் கொண்டனர்.
ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் வியப்பும், விடுதலையும், இறையச்சமும் தரும் செயல்தான் என்பதை உணர்வோம். நமது வாழ்வும் பணிகளும் பிறருக்கு வியப்பும், விடுதலையும், இறையச்சமும் தரும்வகையில் வாழ்வோமாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவாக்கினர் திருமுழுக்கு யோவானுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். அவரைப் போல எங்களது வாழ்வும், பணியும் வியப்பும், விடுதலையும், இறைய்ச்சமும் தர அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

திருமுழுக்கு யோவான் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று நாம் திருமுழுக்கு யோவானின்  பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவர் இயேசுவுக்கும், அன்னை மரியாவுக்கும் தவிர, திருச்சபை கொண்டாடும் ஒரே பிறப்பு விழா திருமுழுக்கு யோவானுக்கு மட்டும்தான். இதிலிருந்தே அவரது சிறப்பையும், தனித் தன்மையையும் அறிந்துகொள்ளலாம். உலகத்திற்கு மீட்பைக் கொண்டு வந்த இயேசுவுக்கே திருமுழுக்கு அளிக்கும் பேற்றினை அவர் பெற்றிருந்தார். மெசியாவைச் சுட்டிக்காட்டும் கொடையையும் அவர் கொண்டிருந்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினராகவும், புதிய ஏற்பாட்டின் முதல் இறைவாக்கினராகவும் திகழ்கிறார். எனNவு. அவரைப் #8220;புதிய எலியா” என்று அழைப்பது பொருத்தமானதே. மெசியா வருவதற்கு முன் இறைவாக்கினர் எலியா மீண்டும் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி, யூதர்கள் இயேசுவிடம் வினவியபோது, #8220;எலியா ஏற்கனவே வந்துவிட்டார்” என்று திருமுழுக்கு யோவானைப் பற்றிக் குறிப்பிட்டார் இயேசு. இறைவனின்மீது கொண்ட ஆர்வத்தால் நெருப்பெனப் பற்றியெறிந்த இறைவாக்கினர் எலியா போலவே, திருமுழுக்கு யோவானும் தீயெனப் பற்றி எரிந்தார். இந்த விழாவில் நாமும் இறைவாக்கினராக, இயேசுவைப் பிறருக்குச் சுட்டிக்காட்டுபவராக, ஆன்மீக ஆர்வத்தால் பற்றி எரிபவராகத் திகழும் வரம் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: இயேசுவே, ‘பெண்களின் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை’ என்று திருமுழுக்கு யோவானைப் பெருமைப்படுத்தினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் அவரைப் போல, பிறருக்கு உம்மைச் சுட்டிக்காட்டும் முன்னோடிகளாக வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்...செக்கரியா
எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:57,63)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- செக்கரியா, எலிசபெத்து என்னும் தம்பதியர் ''வயது முதிர்ந்தவர்கள்'' (லூக் 1:18). ஆனால் அவர்களுக்கு மகப் பேறு இல்லை. இருவருமே குரு குல வரிசையில் வந்தவர்கள். செக்கரியா திருக்கோவிலில் குருத்துவப் பணி ஆற்றி, தூபம் காட்டுகிற வேளையில் அவருக்குக் கடவுளிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. வயது முதிர்ந்த அத்தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதே அச்செய்தி. அதை கபிரியேல் வானதூதர் செக்கரியாவுக்கு அறிவிக்கிறார். செக்கரியாவுக்கோ பெரும் அதிர்ச்சி. கடவுளிடமிருந்து வந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அப்போது வானதூதர் ''நான் கூறிய வார்த்தைகள் நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'' (காண்க: லூக் 1:20) என்கிறார். பேறு காலம் வந்ததும் எலிசபெத்து ஓர் ஆண்மகவை ஈன்றெடுக்கிறார். இவ்வரலாறு விவிலியத்தில் வருகின்ற பிற அதிசயப் பிறப்பு வரலாறுகளை ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வயதில் முதிர்ந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்ததைக் குறிப்பிடலாம் (தொநூ 18:1-15). அதுபோல, மனோவாகு என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிம்சோன் பிறந்ததும் (1 நீத 13:2-25), எல்கானா என்பவருக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் சாமுவேல் பிறந்ததும் (1 சாமு 1-23) முதிர்ந்த வயதில் நிகழ்ந்தவையே. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்னும் உண்மையை இந்த நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. யோவான் பிறந்த செய்தி அவருடைய பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்ந்தது (லூக் 1:58).

-- பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. யூத வழக்கப்படி, குழந்தைக்கு இடப்படுகின்ற பெயர் அக்குழந்தையின் குடும்பப் பின்னணியோடு அல்லது அக்குழந்தையின் சிறப்பியல்புகளோடு ஏதாவது ஒருவிதத்தில் தொடர்புடைய ஒரு கருத்தைத் தெரிவிப்பது உண்டு. குழந்தைக்கு அதன் பாட்டனார் பெயரை இடுவது வழக்கம் (காண்க: லூக் 1:61). மேலும், இடப்படுகின்ற பெயர் அப்பெயருடையவரின் ஆளுமையை வரையறுப்பதாகவும் கருதப்பட்டது. யோவான் என்னும் பெயர் ''ஆண்டவர் பெரிதும் இரக்கம் காட்டினார்'' எனப் பொருள்படும் (காண்க: லூக் 1:58). எனவேதான் இப்பெயரைத் தமிழில் ''அருளப்பன்'' என்று பெயர்த்தார்கள். இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ''இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என நாம் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பின்போதும் வியந்து கூறலாம் (காண்க: லூக் 1:66). ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சாயலாகவே இவ்வுலகில் வருகிறது. அச்சாயல் நாள்தோறும் தெளிவாகத் துலங்கிட வேண்டும் என்றால் நாம் கடவுளிடம் துலங்குகின்ற அன்பு, இரக்கம் என்னும் பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது நாமும் கடவுளின் அருள் பெற்றவர்களாக வாழ்வோம், பிறரும் அந்த அருளை அனுபவிக்க வழியாவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அருள் பெருக்கால் எங்களை நிறைவுசெய்யும் நற்செயலுக்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

புதிய திருமுழுக்கு யோவான்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

திருமுழுக்கு யோவானின் பிறப்பு பல செய்திகளைத் தன்னுள் கொண்டுள்ளது.

1.இறை வல்லமைக்குச் சான்று. முதிர்ந்த வயதில் இறைவனின் ஆற்றலால் செக்கரியாவும் எலிசபெத்தும் ஒரு மகனைப் பெற்றுள்ளனர். 2.இறைவனின் இரக்கம்.இறைவன் தாமே முன்வந்து இக்குழந்தைச் செல்வத்தை வழங்கியுள்ளதால், இது அவரின் இரக்கத்தின் அடையாளம். 3.தெய்வீக மகிழ்ச்சி. எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும்போதே மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தவர்.(லூக்1:41) தான் மட்டும்அல்ல, சுற்றம் சூழலையும் மகிழ வைப்பவர். " சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்."(லூக்1:58) 4. இறை பராமரிப்பு. அவர் சொன்னது போலவே அனைத்தும் நடைபெறுகின்றது. அவர் விரும்பிய பெயரே குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ளது. அவர் சொன்னது போலவே பெயரிட்டதும் செக்கரியாவின் வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; கடவுளைப் போற்றினார். 5. இறை அச்சம். கடவுளின் செயல்பாடுகளைக் கண்டு அனைவரும் அச்சம் கொண்டனர். "சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர்."(லூக்1:65) 6. கடவுளின் கைவன்மை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் கைவன்மையின் அடையாளம்.இறைவனின் செய்தியைத் தாங்கி வருகிறது.கடவுளின் ஆற்றலோடு வருகிறது.இறைவனின் தூய்மையைத் தன்னுள் கொண்டு பிறக்கிறது.

இத்தனையும் தன்னுள்கொண்டு வரும் குழந்தைகளுக்குப் பல இடங்களில் குடும்பங்களில் அனுமதி இல்லை. இன்று புதிய திருமுழுக்கு யோவான்கள் பலர் பிறக்காத காரணத்தால், இயேசுவின் பயணப் பாதை இன்னும் கரடு முரடாவே உள்ளது. திருமுழுக்கு யோவான் பிறப்பதை நம்புவோம்; அனுமதிப்போம்; ஆனந்தம் கொள்வோம்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்