முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5,8-12,16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, �பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார்.

அதற்கு நாத்தான், �நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார்.

அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: �நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன்.

மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப் போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28

பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்;
நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப்போல் உறுதியானது. -பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' -பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான்.
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப் படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.

லுhக்கா 1:67-79

திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர் 24

நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79


அக்காலத்தில் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: �இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

----------------------

டிசம்பர் – 24
வாய் திறந்தது, வாழ்த்தியது
லூக்கா 1:67-79

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

ஆண்டவரின் தூதர் சொன்னப்படியே திருமுழுக்கு யோவான் பிறந்ததும் பேச்சிழந்த செக்கரியா சத்தமாக பேசுகிறார். பேச முடியாமல் இருந்த நிலையில் அவர் பலவற்றை பேச முடியவில்லை. ஆகவே அனைத்தையும் சேர்த்து மொத்தமாக இப்போது பேசுகிறார், பாடுகிறார். வாழ்த்துகிறார். அவருடைய வாழ்த்திலிருந்து நாம் இரண்டு செய்திகளை நம் வாழ்க்கை பாடமாக பெற முடிகிறது.

1. நம்பிக்கைக்குரியவர்
ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர் என்பதை செக்கரியாவின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே அவநம்பிக்கை இல்லாமல் கடவுளின் வரத்திற்காக காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் செக்கரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவநம்பிக்கை கொள்ளும்போது நாம் கடவுளை பரிசோதிக்கிறோம். அது மிகவும் தவறானது என்பது நமக்கு தெரிகிறது. அவர் என்றும் நம்பிக்கைக்குரிய எல்லாம் வல்ல ஆற்றல் நிறைந்த ஆண்டவர்.

2. நன்மைக்குரியவர்
ஆண்டவர் நன்மை தவிர வேறு எதையும் தம் பிள்ளைகளுக்கு செய்வதில்லை. பரிவுமிக்க கடவுள். பாசத்தை தாறுமாறாக பொழிகின்றார். அவரிடமிந்து அன்பு அணைகடந்து வருகிறது. தம் சிறகுகளின் கீழ் சிறப்பிடம் கொடுத்து அவர் நம்மை அரவணைக்கின்றார். நன்மைகளை நமக்கு செய்வதில் அவர் சோர்வடைவதில்லை.

மனதில் கேட்க…
1. வாயைத் திறந்து நான் ஆண்டவரை வாயார வாழ்த்துகிறேனா?
2. அவநம்பிக்கை என் வாழ்வில் இனி ஏற்படுமா?

மனதில் பதிக்க…
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார் (லூக் 1:68)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

2சாமுவேல் 7: 1 – 5, 8 – 12, 16
இறைவனே எப்போதும் உயர்ந்தவர்

கடவுளை விடவும் மேலானவர்களாக ஒரு சில தருணங்களில் நம்மையே நாம் நினைத்துக் கொள்கிறோம். கடவுளை விட அதிகம் சிந்திப்பவர்களாகவும், அறிவாளிகளாகவும் நினைத்துக் கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம். தாவீது ஆண்டவர்க்கு ஓர் இல்லம் கட்ட வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை இறைவாக்கினர் நாத்தானிடம் வெளிப்படுத்துகிறார். இது ஓர் அருமையான சிந்தனை என்று, இறைவாக்கினரும், ஆண்டவருடைய திருவுளம் எது? என்பதை அறிய நினைக்காமல், அவர் என்ன நினைக்கிறாரோ, அதை பதிலாக தருகிறார். தாவீதை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு அருளப்படுகிறது.

தாவீது அவருடைய நிலையை அறிந்து கொள்வதற்காக, அவருடைய தொடக்கநிலையிலிருந்து கடவுள் பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். சாதாரண ஆடு மேய்க்கிற சிறுவனாக இருந்த அவரை, கடவுள் யாரும் நினையாத அளவுக்கு உயர்த்தினார். அந்த உயர்ந்த நிலைக்குச் சென்றவுடன், தன் பழைய நிலையை தாவீது மறந்தார். பல்வேறு தவறுகளைச் செய்தார். கொலையும் செய்தார். அவருடைய தவறு மன்னிக்கப்பட்டாலும், இறைவனுடைய ஆசீர்வாதம் தொடர்ந்து அவருக்கு இருந்தாலும், ஒரு சிலவற்றை அவர் இழந்துதான் ஆக வேண்டும் என்கிற, நீதியை கடவுள் வெளிப்படுத்துகிறார். கறைபடிந்த கையோடு ஆண்டவருடைய ஆலயத்தைக் கட்ட அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நம்முடைய வாழ்வில், நாம் இருந்த பழைய தருணங்களை எப்போதும் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, தாழ்நிலையில் நாம் இருந்தபோது, நாம் சந்தித்த அனுபவங்கள், நம்முடைய நிலை, எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அது நம்முடைய எதிர்காலத்தை செதுக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நமக்கு கர்வமோ, அகங்காரமோ நிச்சயம் ஏற்படாது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------


செக்கரியாவின் நம்பிக்கை

செக்கரியாவின் கடவுள் நம்பிக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வெளிப்படுவதாக அமைந்திருப்பதை நாம் பார்க்க முடியும். எந்த ஒரு மனிதனும் துன்பம் வருகிற நேரத்தில் துவண்டுபோவான். அதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எவ்வளவு வலிமை படைத்தவனும், செல்வம் படைத்தவனும் கூட, வாழ்க்கையில் துன்பம் என்று வருகிறபோது, சோர்ந்த போவதை நாம் நிச்சயம் பார்க்க முடியும். அந்த துன்பம் கடவுள் மட்டில் வெறுப்பாகவும், விலகிச்செல்வதாகவும் அமைகிறது. ஆனால், செக்கரியா இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருப்பதை, அவரின் பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது.

செக்கரியாவின் நிலையை நாம் பார்க்கிறபோது, அவருக்கு எல்லாச்செல்வங்களும் இருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லாதது மிகப்பெரிய குறைதான். அது அவரின் உள்ளத்தை மிகப்பெரிய பாரமாக அழுத்திக்கொண்டே இருந்திருக்கும். அதுவும் கடவுளுக்கு மிக அருகாமையில் பணிசெய்யக்கூடிய அவருக்கு, மற்றவர்கள் நடுவில் மிகப்பெரிய அவமானத்தை உண்டுபண்ணியிருக்கும். பார்ப்பவர்கள் அவரை ஏதோ மிகப்பெரிய பாவத்தைச் செய்திருப்பதுபோல, அதற்காகத்தான் கடவுள் அவருக்கு குழந்தையைக் கொடுக்கவில்லை என்பதுபோல எண்ணியிருப்பார்கள். இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலும், செக்கரியா நம்பிக்கை இழக்காதவராக இருப்பதைப் பார்க்கிறபோது, நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது.

செக்கரியாவின் இந்த நம்பிக்கை நமக்கும், நாம் நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, அவற்றைக்கண்டு கலங்கிவிடாமல், துணிவோடு, கடவுள் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

உண்மையான கடவுள்

கடவுளைப் பற்றிய நமது புகழ்ச்சி பாடல், ஒருவிதத்தில் நமது உள்ளார்ந்த, ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உள்ளார்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக செக்கரியாவின் பாடல் அமைந்திருக்கிறது. உண்மையிலே கடவுளைப் புகழ்வது அழகான செபம். கடவுளை நாம் எதற்காகக் புகழ வேண்டும்? நமது புகழ்ச்சி அவருக்குத் தேவையா? கடவுளைப் புகழ்வதால் நாம் என்ன பெரிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இப்போது நாம் பார்ப்போம்.

புகழ்ச்சி என்பது அருமையான செபம். நாம் கடவுளின் மாட்சிமைக்காக, வல்ல செயல்களுக்காக, அவரது படைப்பிற்காக, நம்மைப் படைத்ததற்காக, நம்மைக் காத்து வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக புகழ்கிறோம். இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்து, அதை ஒரு குறையும் இல்லாமல் படைத்துப் பாதுகாத்து வருகிறார். நல்லவர்கள், கெட்டவர்கள் இருந்தாலும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அனைவரும் நல்ல மகிழ்ச்சியான, உண்மையான வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் கடவுளின் ஆவல். கடவுளைப் புகழக்கூடிய அந்த மனநிலையே, நமது வாழ்வை அடியோடு மாற்றுகிறது. கடவுளைப் புகழ்கிறபோது, நம்மை அறியாமல், கடவுள்பால் ஈர்க்கப்படுகிறோம். அவர் நம்மை ஈர்த்துக் கொள்கிறார். நமது வாழ்வு முழுமையாக மாற்றம் பெறுகிறது. எனவே, கடவுளைப் புகழ்கிறபோது, நமது வாழ்வே மிகப்பெரிய மாற்றத்தைப் பெறுகிறது.

இன்றைக்கு கடவுள் புகழ்ச்சியை விட, கடவுளிடம் வேண்டுவது தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கேட்டால் கொடுக்கிற கடவுளைத்தான் நாமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். கொடுக்கிற கடவுள் தான் கடவுள். இல்லையென்றால், அவர் கடவுளே அல்ல, என்ற ஒரு மாயக்கடவுளை, இன்றைக்கு இருக்கக்கூடிய ஆன்மீகவாதிகள் உருவாக்கி இருக்கிறோம். உண்மையான கடவுளை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளின் திருவுளம் அறிவோம்

தனது மகனைப்பற்றி செக்கரியா வைத்திருந்த எண்ண ஓட்டங்களை இங்கே இந்தப்பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தனது மகனை சரியாகப்புரிந்து வைத்திருந்தார் என்பதைக்காட்டிலும், கடவுளின் திருவுளத்தை செக்கரியா நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதன் வெளிப்பாடு தான் அவருடைய இந்த விசுவாச மொழிகள். தனது மகனை இறைவாக்கினராகவும், வரப்போகிற மெசியாவின் முன்னோடியாகவும் செக்கரியா வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் அனைவருமே வாக்களிக்கப்பட்ட மெசியாவிற்காகக் காத்திருந்தனர். பெரும்பாலான மக்கள், வாக்களிக்கப்பட்ட மெசியா வருவதற்கு முன்னதாக, எலியா வந்து, அவருடைய வழியைத்தயாரிப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர். மலாக்கி 3: 1 ”இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்”. மலாக்கி 4: 5 – 6 ”இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத்தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்”. மேற்கண்ட இறைவார்த்தைகள் திருமுழுக்கு யோவான் தான் வரவிருந்த முன்னோடி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

செக்கரியா கடவுளின் திருவுளத்தை அறிந்திருக்கிறார். அதற்கு அவர் கடவுளோடு இணைந்து இருந்ததுதான் காரணமாகும். கடவுளோடு நாமும் இணைந்திருந்தால், நிச்சயம் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

யோவானின் பணித் திட்ட அறிக்கை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

செக்கரியாவின் இறைவாக்கு யோவானின் எதிர்காலப் பணியின் திட்ட அறிக்கை போலவே இருக்கிறது. அது செக்கரியாவின் வாக்கு அல்ல. துhய ஆவியால் அவர் ஆட்கொள்ளப்பட்டு, இறைவாக்காக உரைத்தது. எனவே, திருமுழுக்கு யோவானுக்கான இறைவனின் திட்ட அறிக்கை என்றே எடுத்துக்கொள்ளலாம். அவரது பணியும், வாழ்வும் எவ்வாறு அமையும் என்ற ஒரு பட்டியலே நமக்குத் தரப்படுகிறது.

1. அக்குழந்தை உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படும். எனவே, அவர் இறைவாக்கினராக வாழ்வார் என்பது முதலிலேயே தெளிவுபடுத்தப்படுகின்றது. 2. ஆண்டவருக்கான வழியை செம்மைப்படுத்த, அவர் முன்னே செல்ல வேண்டும் என்பது இன்னொரு தெளிவு. 3. துhய்மையோடும் 4. நேர்மையோடும் 5. வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யவேண்டும்.

யோவானுக்குச் சொல்லப்பட்ட பணித் திட்ட அறிக்கை நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தரப்பட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம். காரணம், நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் முன்னோடிகளாக, இயேசுவைப் பிறருக்கு அறிவிப்பவர்களாக, அவருக்காக உலகை ஆயத்தம் செய்பவர்களாக வாழ வேண்டும். எனவே, நாமும் துhய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றிப் பணி செய்ய வேண்டும். அதற்கான அருளையும், ஆற்றலையும் ஆண்டவரே நமக்கு அருள வேண்டும்.

மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். நானும் திருமுழுக்கு யோவானைப் போல உமது முன்னோடியாக, ஆயத்தம் செய்பவராக வாழ விரும்புகிறேன். என்னை ஆசீர்வதியும். உமது துhய ஆவியால் என்னை நிரப்பும். நான் துhய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றிப் பணிபுரிய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

----------------------------

வாழ்வு ஒரு பாடல்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

இயேசுவின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதா? இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டம் உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதா? கிறிஸ்மஸ் விழாக்கள் உங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், குறிப்பாக நீங்கள் விரும்பாதவைகள் குருக்கிடும்போது இறைவனைப் புகழ்ந்து, நன்றி செலுத்தி மகிழ்ந்து கொண்டாட முடிகிறதா?

செக்கரியா இயேசுவின் பிறப்பில் உண்மையான மகிழ்ச்சியை கண்டார். ஆகவே அவர் மகிழ்ந்து
பாடிய பாடல் இது. தன் வாழ்நாளில் பல இழப்புக்களைச் சந்தித்தார். பல அவமானங்களை, பழிச் சொற்களைக் கேட்டார்.கடவுளின் சாபமாகக் கருதப்பட்ட குழந்தை இல்லாத நிலையால் மனம் நொந்து நொடிந்து வாழ்ந்தார். ஆயினும் கடவுளைவிட்டு ஒருபோதும் பிரியவில்லை. எல்லாவற்றையும் நல்லது என்றே கண்டார். தன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் நல்லவற்றையே தன் மனதில் கொண்டார். தான் விரும்பாதவற்றிலும் கூட, அதில் மறைந்திருக்கும் நல்லவற்றைத் தேடி கண்டு, அதிலே மகிழ்ந்து ஆண்டவனுக்கு நன்றி கூறி பாடிய பாடல் இது.

செக்கரியாவின் இந்த அணுகுமுறையை நம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வோம். எதிலும் நல்லது ஒன்று மறைந்திருக்கும், புதைந்திருக்கும். அங்குதான் ஆண்டவன் அமைதியையும் மகிழ்ச்சியையும் மறைத்து வைத்துள்ளார். அதைக் கண்டுபிடித்து வாழ்வதுதான் திறமை. ஆன்மீகம் நிறைந்தவர்கள், ஆண்டவனோடு தொடர்புடையவர்கள் எளிதில் இதை கண்டுபிடிப்பர். அவர்களுக்கு எங்கும் எதிலும் என்றும் எல்லாம் இன்பமே, மகிழ்ச்சியே. வாழ்வே இனிய பாடல்தான்.

--: அருட்திரு ஜோசப் லியோன்

 

வாழ்வு ஒரு பாடல்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

இயேசுவின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதா? இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டம் உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதா? கிறிஸ்மஸ் விழாக்கள் உங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், குறிப்பாக நீங்கள் விரும்பாதவைகள் குருக்கிடும்போது இறைவனைப் புகழ்ந்து, நன்றி செலுத்தி மகிழ்ந்து கொண்டாட முடிகிறதா?

செக்கரியா இயேசுவின் பிறப்பில் உண்மையான மகிழ்ச்சியை கண்டார். ஆகவே அவர் மகிழ்ந்து
பாடிய பாடல் இது. தன் வாழ்நாளில் பல இழப்புக்களைச் சந்தித்தார். பல அவமானங்களை, பழிச் சொற்களைக் கேட்டார்.கடவுளின் சாபமாகக் கருதப்பட்ட குழந்தை இல்லாத நிலையால் மனம் நொந்து நொடிந்து வாழ்ந்தார். ஆயினும் கடவுளைவிட்டு ஒருபோதும் பிரியவில்லை. எல்லாவற்றையும் நல்லது என்றே கண்டார். தன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் நல்லவற்றையே தன் மனதில் கொண்டார். தான் விரும்பாதவற்றிலும் கூட, அதில் மறைந்திருக்கும் நல்லவற்றைத் தேடி கண்டு, அதிலே மகிழ்ந்து ஆண்டவனுக்கு நன்றி கூறி பாடிய பாடல் இது.

செக்கரியாவின் இந்த அணுகுமுறையை நம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வோம். எதிலும் நல்லது ஒன்று மறைந்திருக்கும், புதைந்திருக்கும். அங்குதான் ஆண்டவன் அமைதியையும் மகிழ்ச்சியையும் மறைத்து வைத்துள்ளார். அதைக் கண்டுபிடித்து வாழ்வதுதான் திறமை. ஆன்மீகம் நிறைந்தவர்கள், ஆண்டவனோடு தொடர்புடையவர்கள் எளிதில் இதை கண்டுபிடிப்பர். அவர்களுக்கு எங்கும் எதிலும் என்றும் எல்லாம் இன்பமே, மகிழ்ச்சியே. வாழ்வே இனிய பாடல்தான்.

--: அருட்திரு ஜோசப் லியோன்