இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: �ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.'' அப்பொழுது ஆபிராம், �என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்'' என்றார். அதற்கு மறுமொழியாக, �இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்'' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, �வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு `ஈசாக்கு' என்று பெயரிட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9
பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! -பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! -பல்லவி

5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்!
அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! -பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8,11-12,17-19

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். �ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

லூக்கா 2:22-40

இயேசு, மரி, சூசை - திருக்குடும்பம் பெருவிழா

நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், �ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். �ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, �ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, �இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

அமைதியில் இறைவன்

யூதர்கள் தங்களது நாட்டை ஆண்டவரது தேர்ந்து கொள்ளப்பட்ட நாடாக எண்ணினர். தாங்கள் தேர்ந்த கொள்ளப்பட்ட நாட்டினர் என்பதால், தாங்கள் இந்த உலக நாடுகளையெல்லாம், ஆளக்கூடிய காலம் வரும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தனர். இதனை நிறைவேற்ற தாவீதின் வழியில் ஒருவரோ, அல்லது கடவுளே நேரடியாகவோ வருவார் என்று எதிர்பார்த்தனர். இந்த சிந்தனைக்கு மாறுபட்ட சிந்தனைகொண்ட ஒரு சிலரும் வாழ்ந்தனர்.

மாறுபட்ட சிந்தனை கொண்ட மக்கள் கூற்றுப்படி, அமைதியிலும், செபத்திலும் நிலைப்பதின் மூலமாக இறைவனுடைய வருகையை நாம் அறிந்து கொள்ள முடியும். வன்முறையாலோ, அதிகாரத்தினாலோ, நம் மற்றவர்களை வெல்வதோ, கடவுளைக்காண்பதோ இயலாத காரியம் என்றும் அவர்கள் நினைத்தனர். எனவே, செபத்திலும், அமைதியிலும் தங்களின் வாழ்க்கையில் கடவுளின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர். அத்தகையோருள் ஒருவர் தான் சிமியோன். குழந்தை இயேசுவில் கடவுளின் வருகையை சிமியோன் கண்டுகொண்டார்.

வன்முறையிலோ, பதவியிலோ, அதிகாரத்திலோ இறைவனை நாம் ஒருபோதும் காண முடியாது. செபத்திலும், அமைதியின் வழியிலும் தான் நாம் இறைவனைச் சந்திக்க முடியும் என்பதற்கு, சிமியோன் சிறந்த எடுத்துக்காட்டு. இறைப்பிரசன்னத்தை அமைதியில் காண நாம் முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உங்கள் குழந்தைகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை இன்று கொண்டாடுகிறோம். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும். அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.

மன்றாடுவோம்:  கொடைகளின் தந்தையே, ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் என்னும் உமது கொடைக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் சொந்தமானவர்கள் என்ற உணர்வில் நாங்கள் ஆழப்பட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

--------------------

''சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி,
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்'' (லூக்கா 2:28,31)

சிந்தனை
-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதையும் இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு (லூக் 2:21) லூக்கா இயேசுவின் அர்ப்பணம் பற்றிப் பேசுகிறார். திருச்சட்ட மரபினை யோசேப்பும் மரியாவும் கடைப்பிடித்தார்கள். எனவே, ஆண்மகவு பிறந்ததும் அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க எருசலேம் கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இறைப்பற்றுக் கொண்டு நேர்மையாக வாழ்ந்துவந்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் சிமியோன். கோவிலில் வயது முதிர்ந்த அன்னா என்னும் இறைவாக்கினரும் இருந்தார். இந்த இருவரையும் யூத சமய மரபின் உருவகங்களாக நாம் காணலாம். அதாவது, இஸ்ரயேலர் கடவுளின் வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும் என்றும், மெசியா மக்களிடையே வருவார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சிமியோனும் அன்னாவும் அந்த மரபின் வழி வந்தவர்கள். மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள். அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டதும் அவரே மெசியா என்பதை அறிந்துகொள்கிறார்கள். சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்; கடவுளைப் போற்றுகிறார்; தம் குரலை எழுப்பி, இயேசு ''பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக் 2:32) என அறிக்கையிடுகிறார்.
-- இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின் வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது. கடவுள் தம் மக்களைத் தேடி வருகிறார் என்பதை சிமியோனும் அன்னாவும் உணர்ந்திருந்தார்கள். இயேசுவின் வழியாகக் கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது என்பதையும் அவர்கள் அறிந்தார்கள். கடவுளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஒரு நாளும் ஏமாற்றமடையார் என்பதை இங்கே காண்கிறோம். நம் வாழ்வில் கடவுள் புகுந்திட நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற இயேசு கிறிஸ்து நம் இதயத்தையும் வாழ்வையும் ஒளிர்விப்பார் என நாம் உறுதியாக நம்ப வேண்டும். அப்போது நம் வாழ்வில் நிலவுகின்ற இருள் மறைந்துவிடும்; நாமும் கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்படுவோம். ஒளிபடைத்த கண்களோடு நாம் கடவுளின் திருவுளத்தைக் கண்டு, அதை நம் வாழ்வில் செயல்படுத்த முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் அக இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற உம்மை மனமுவந்து நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.

-- இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.

மன்றாட்டு
இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------

"வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணம் .. .."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கிறிஸ்துவின் பிரசன்னம் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாயிருக்கும் என்றால் அது முற்றிலும் உண்மை. எங்கெங்கு இயேசு இருக்கிறாறோ, அங்கெல்லாம் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டாயம் இருக்கும். சிமியோன் இறைவாக்கினர் சொன்னது முற்றிலும் உண்மை.

மண்ணகத்தின் அரசர்கள், ஆட்சிகள் ஆட்டம் கண்டன. வீழ்ந்தன. யூதமும் அதன் சட்டமும் வீழ்ச்சி கண்டது. கிறிஸ்தவமும் அதன் ஆவியின் செயல்பாடுகளும் எழுச்சிபெற்றன. அநீதி, ஆணவம், அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. நீதியின்படி வாழ்வோர், தாழ்ச்சியுடையோர், நலிந்தோர் எழுச்சி பெற்றனர். பாவிகள், பெண்கள், ஒதுக்கப்பட்டோர் தலை நிமிர்ந்து வாழத்தொடங்கினர்.

இன்றும் இயேசுவும் அவரது திருச்சபையும் அவரைப் பின்தொடரும் கிறிஸ்தவனும் இவ்வாறே பலருடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறார்கள்; இருக்க வேண்டும். இத்தகைய நிலைப்பாடும் செயல்பாடும் கொண்டால் மட்டுமே சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்ச்சியம் முளையிலேயே இயேசுவில் இருந்ததை சிமியோன் உணர்ந்து முன்னுரைக்கிறார்.

புதிய சமுதாயம் உருவாக்க எழுச்சி தேவை. வீழ்ச்சியைத் தவிர்க்க முடியாது. இவை நடைபெறும்போது பாராட்டுவோம்; ஒத்துழைப்பு கொடுப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோசப் லியோன்