பிப்ரவரி 2
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

முதல் வாசகம்

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4

கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: ``இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 24: 7. 8. 9. 10
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். -பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். -பல்லவி


இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

சகோதரர் சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.
மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 2: 32 அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

லூக்கா 2:22-40

இயேசுவின் காணிக்கை திருவிழா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ``ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ``ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ``ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ``இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

02.02.2024 வெள்ளி
அர்ப்பண மக்களாவோமா ...

‘எதாவது ஒன்று உங்களுக்கு இறுதிவரை சொந்தமாகுமென்று சொல்லுங்கள் அதனை நான் உங்களுக்கு பலமடங்காக கொடுக்கின்றேன்” என்பார் புனித ஆஸ்கர் ரொமேரோ. இது முற்றிலும் உண்மை. ஆனால் அறியாதவர்கள் இறுதியில் இதனை உணர்கின்றபோது பலனற்றதாக மாறிவிடுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் எல்லாவற்றினையுமே கொடையாக பெற்றுக்கொண்டார். ஆனால் இறுதியில் வாழ்க்கை தத்துவத்தை அறிந்து தன்னிடம் இருப்பதை கொடுக்க முன்வருகின்றார். எந்தவொரு நிகழ்வாக இருக்கட்டும். அங்கு அதற்கென்று நேரம் ஒதுக்கி உழைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். காரணம் அர்ப்பண உணர்வு அற்றவர்களாக செயல்படக்கூடியவர்கள்.

இன்றைய விழா நமக்கு சிந்திக்க அழைப்பது போல இயேசுவின் அர்ப்பணம் விசித்திரமானது. ஏனென்றால் எகிப்து நாட்டில் தலைப்பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும், மனிதரையும், விலங்கையும் எனக்கெனப் புனிதப்படுத்தினேன் எனவே அவர்கள் எனக்குரியவர்கள் ( எண். 3 : 13 ) என்பது கடவுளின் வெளிப்பாடு. இந்தப் பின்னணியில்தான் யூதர்களின் அனைத்துத் தலைப்பேறுகளும், இயேசு உட்பட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில் அவருடைய பெற்றோரைத் தவிர வேறு இரு முதியவர்கள் பங்கேற்று குழந்தையை வாழ்த்தி ஆசி கூறியதுதான் இந்த அர்ப்பணிப்பின் தனிச்சிறப்பு.

ஒவ்வொரு திருப்பலியிலும் அப்ப, ரச காணிக்கையோடு நம்மை நாம் அர்ப்பணிக்கின்றோம். இந்த அர்ப்பணிப்பு பலனைக் கொடுக்கின்றதா? (அ) பலன் அற்றதாக இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

02.02.2023 – லூக்கா 2: 22 - 40
அநியாய எதிரொலிப்புகளாக...

சமுதாயத்தில் பல மனிதர்கள் எதிர்க்கப்படும் அடையாளமாக வாழ்ந்து இருக்கின்றார்கள். மதுரை மங்கையர்க்கரசி கண்ணகி நீதி கேட்டு எதிர்த்தார். பிரேசிலில் மனிதநேயமற்ற அரசின் அராஜகங்களை சுட்டிக்காட்டியவர் பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ. அநீதியான அரசை எதிர்த்துப் போராடிய வீரர் இளைஞன் நெஸ்டர் பாசு. ஆந்திராவில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் பங்கில் நடந்த ஊழல்களை தனியாளாக எதிர்த்து நின்ற மஞ்சுநாத் என்ற வாலிபன். எங்கெல்லாம் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ, லஞ்சம் கேட்கப்படுகிறதோ அதனை எதிர்த்து போராடிய முன்னாள் ஆட்சியர் சகாயம். கருப்பு இன மக்களுக்கு எதிராக எழுந்த தீமைகளை எதிர்த்து நின்ற நெல்சன் மண்டேலா. பழங்குடி மக்களின் வாழ்வுக்கு எதிராக நடந்த தீமைகளை எதிர்த்த அருட்தந்தை. ஸ்டேன் (இயேசு சபை துறவி). இவர்கள் அனைவருமே சமுதாய தீமைகளை எதிர்த்த அடையாளமாக விளங்கியவர்கள்.

அது போல தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை இஸ்ரயேல் மக்களின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைகிறது. இயேசு குழந்தையாக இருந்ததால், இந்த சட்டத்தினை மக்கள் மீது திணிக்கின்றார்கள். என்னவென்றால் ஒவ்வொரு யூத ஆண்மகனும் விருத்தசேதனம் என்ற நுனித்தோல் அறுவை பெற வேண்டும். இதைத்தொடர்ந்து ஆண் தலைப் பேறு என்ற வகையில் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்படுகின்றார். காரணம் எகிப்து நாட்டில் மோசே தொடங்கிய விடுதலைப்போரில் பார்வோனுக்கு எதிராக கடவுள் அனைத்துத் தலைமகன்களையும் கொன்றபோது, இஸ்ரயேல் இனத்தில் தோன்றும் அனைத்து தலைமகன்களும், கடவுளுக்கே உரியவர்கள் என்கிற சட்டம் உருவானதைக் கண்டோம். ஆகவே பிறக்கும் ஒவ்வொரு யூதக் குழந்தையும் பெற்றோர்களால் ஆலயத்தில் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். சிமியோன் இக்குழந்தையை ஏந்தி மக்களின் மீட்பர் என கூறுகிறார். இந்த வார்த்தை இயேசுவின் பணிவாழ்வுக்கு தகுந்த முன்னுரையாக அமைந்தது. இயேசுவின் மீட்புப்பணி பல எதிர்ப்புக்களுக்கிடையே நிறைவேற்றப்படும் என்றும் இன்னும் குறிப்பாக துன்பம் அனுபவித்த அன்னை மரியா இப்பணியில் பங்கேற்பார் என்கிற சிந்தனைகளும் அம்மீட்புப் பணியின் முன்கூட்டிய எதிரொலிப்புக்களே.

நாம் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை எதிர்க்கின்றோமா? தனிமனித வாழ்வுக்கு எதிராக? மதத்திற்கு எதிராக? எழும் வன்முறைகளை எதிர்த்து. சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=============================

 

திருப்பாடல் 24: 7, 8, 9, 10
”படைகளின் ஆண்டவர் இவர்”

படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய 261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும். இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும் மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம். தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர் தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக, கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக தன் மகனை அனுப்புகிறார். ஏனென்றால், பாவத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கான ஆற்றல், மனிதகுலத்திற்கு இல்லை. எனவே தான், கடவுள் அந்த முயற்சியை எடுக்கிறார். அதனைத்தான் சிமியோனின் வார்த்தைகளும், அன்னாவின் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நம்மைப் பாதுகாப்பதற்காக கடவுள் தன்னுடைய ஒரே மகனையே பலியாகக் கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்வை நாம் திருப்பலியில் ஒவ்வொருநாளும் புதுப்பித்து, நம்மையே புனிதப்படுத்த அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மை விடுதலை வாழ்விற்கு வழிநடத்துவார் என்கிற நம்பிக்கை உணர்வை, நாம் நமது வாழ்வில் எப்போதும் கொண்டிருப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது.

தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில் கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம் நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது. இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில் உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி என்று கூறுகிறார்.

இந்த ஒளியின் திருவிழாவில் நமது கிறிஸ்தவ வாழ்வு, மற்ற மக்களுக்கு ஒளியாக இருப்பதற்கு அழைப்புவிடுக்கிறது. வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு கிடக்கிற மனிதகுலத்திற்கு, கிறிஸ்தவர்கள் பொறுமையாலும், அன்பாலும், இரக்கத்தாலும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி, இயேசுவுக்கு சாட்சியாக மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உறுதியான விசுவாசம்

இன்றைய நற்செய்தியில் சிமியோன் மற்றும் அன்னாவைப்பற்றி வாசிக்கிறோம். அன்னா ஒரு விதவைப்பெண் என்று சொல்லப்பட்டிருககிறது. அதாவது அன்னாவின் வாழ்க்கை ஒரு துன்பமயமான வாழ்க்கை. கணவன் இல்லாத கைம்பெண்படும்பாடு, இந்த சமுதாயத்தில் சொல்லி மாளாது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பம் இரண்டுவிதமான உணர்வுகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும். 1. கடவுள் மட்டில் வெறுப்பு 2. வாழ்க்கையைப்பற்றிய பக்குவம். அன்னா இதில் இரண்டாவது வகை. அவள் கடவுள் மட்டில் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். வாழ்வில் துன்பம் வந்தாலும், கடவுளின் அன்பு அவளுக்கு மிகப்பெரிய பலம்.

அன்னாவிற்கு 84 வயது ஆகிவிட்டது. அவள் வயதானாலும், அவளுடைய நம்பிக்கை குறையவில்லை. நாம் கடவுளிடத்தில் ஏதாவது கேட்டு அதற்காகக் காத்திருந்தால், நாளாக, நாளாக நமது நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிடும். ஆனால், அன்னாவின் விசுவாசம் எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருக்கும் உறுதியான விசுவாசம். நம்பிக்கை சிறிதும் இழக்காத விசுவாசம். அவளது நம்பிக்கை சிறிதும் தளர்ச்சி அடையவில்லை என்பதற்கு, அவள் ஆலயத்தில் இருப்பது சிறந்த உதாரணம். இத்தனை ஆண்டுகளானாலும், ஆலயத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.

நமது விசுவாச வாழ்விற்கு அன்னாவின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்வில் துன்பம் வருகிறபோதும், நினைத்தது, கேட்டது நடக்காதபோதும், சோர்ந்து போகத்தேவையில்லை. உறுதியாக, அன்னாவின் விசுவாசத்தோடு வாழ வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஏழைகளாய் வாழ்வோம்

ஒரு யூதக்குடும்பத்தில் ஆண்குழந்தை பிறக்கின்றபோது, ஒருசில சடங்குகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. முதலில், குழந்தை பிறந்த எட்டாம் நாள் அதற்கு விருத்தசேதன சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்(லேவியர்12: 3). இரண்டாவது, தலைப்பேறு ஆண்குழந்தைகள் அனைத்தும் ஆண்டவருக்குரியது. விடுதலைப்பயணம் 13: 2 ல் பார்க்கிறோம்: “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத்திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”. இதற்கான காரணம்: எகிப்தில் பார்வோன் மன்னனின் கடின உள்ளத்தின் பொருட்டு அனைத்து ஆண் தலைப்பேறுகளும் இறந்துபோயினர். ஆனால், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களின் ஆண் மகன்களைக் காப்பாற்றினார். எனவே, எல்லாத்தலைப்பேறுகளையும் இறைவன் தனக்கெனத் தேர்ந்துகொண்டார். அவர்கள் கடவுளுக்கு உரியவர்களாயினர். அவர்களை மீட்பதற்கும் சடங்குகளை வகுத்திருந்தனர். எண்ணிக்கை 18: 15 - 16 “மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப்படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது. ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய். அவற்றின் மீட்புத்தொகை ஐந்து வெள்ளிக்காசுகள்”(ஒரு மாதக்கூலிக்கு சமம்). மூன்றாவது, தூய்மைச்சடங்;கு. லேவியர் 12 ல் பார்க்கிறோம்: ஆண் குழந்தையைப்பெற்றெடுத்த பெண்ணைத் தூய்மைப்படுத்துகின்ற சடங்கு அங்கே தரப்பட்டுள்ளது. 40 நாட்களுக்குள்ளாக தூய தலத்திற்கு வரக்கூடாது. தூய்மையடையும் காலக்கெடுவிற்குப்பின்னர் ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஆடு ஒன்றையோ, முடியாதவர்கள் இரண்டு காட்டுப்புறாக்களையோ கொண்டு வந்து பலியாக செலுத்த வேண்டும்.

இங்கே நற்செய்தியில் காணப்படுகிற பகுதியில் இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்தாகி விட்டது. மற்ற இரண்டு சடங்குகளையும் நிறைவேற்றுவதற்காக, அதாவது, தலைப்பேறு ஆண் குழந்தையான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்து மீட்கும் சடங்கையும், மரியாளுக்கு தூய்மைச்சடங்கை நிறைவேற்றவும் அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு வந்திருந்தார்கள். இயேசுவின் பெற்றோர் காணிக்கையாகக்கொடுத்தது இரு புறாக்கள் என்று நற்செய்தி சொல்கிறது. அதாவது, ஏழைகளின் காணிக்கை இந்த புறாக்கள். கடவுள் தன்னை ஏழைகளோடும், எளியவர்களோடும் ஐக்கியப்படுத்திக்கொண்டார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி.

ஏழைகள் என்பவர்கள் வெறுமனே பணமோ, பொருளோ இல்லாதவர்கள் என்ற அர்த்தமல்ல: மாறாக, யாரெல்லாம் கடவுள் மீது தங்களின் முழுமையான நம்பிக்கையை வைக்கிறார்களோ, அவர்கள் தான் விவிலியத்தில் ஏழைகள் என்று குறிப்பிடப்டுகிறவர்கள். திருக்குடும்பம் கடவுள் மீது தங்களின் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தது. நாமும் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஏழைகளாய் வாழ்வோம். நிறைவான வாழ்வு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்.

-------------------------------------------------------

நாம் ஆண்டவருக்கே உரியவர்கள் !

"மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்"; என்னும் இறைமொழியின் நிறைவே இன்றைய விழா. ஒவ்வொரு ஆண் தலைக் குழந்தையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்பது திருச்சட்டம். விடுதலைப் பயண நூலின் 13ஆம் அதிகாரத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: "ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது: தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய். இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும், கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை என்றார்" (விப 13: 1-2). அதற்கான காரணத்தை எண்ணிக்கை நூலில் நாம் பார்க்கிறோம்: "எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும் எனக்கெனப் புனிதப்படுத்தினேன். அவர்கள் எனக்கே உரியவர்கள்" (எண் 3: 13). ஆம், இதன் காரணமாகவே அனைத்துத் தலைப்பேறுகளும் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டனர். இயேசுவும் கூட!

அந்த நிகழ்வை நினைவுகூரும் இன்று நாமும் ஆண்டவருக்கே உரியவர்கள் என்பதை மனதில் இருத்துவோம். இறைத் தந்தையின் விருப்பப்படி, இறைமகன் இயேசு நமக்காகச் சாகடிக்கப்பட்டார்.நாம் வாழ்வு பெறவேண்டும் என்பதற்காக. எனவே, அவரது சாவால் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நாமும் ஆண்டவருக்கு உரியவர்களே. இன்றைய நாளில் நம்மை இறைவனுக்கு மறு அர்ப்பணம் செய்து, அதன்படி வாழ்வோமாக!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் இறப்பால் எங்களை உமக்குரியவர்களாக மாற்றினீரே, உமக்கு நன்றி. நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள் என்னும் உணர்வுடன் ஒவ்வொரு நாளும் வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--பணி. குமார்ராஜா

------------------------------------------------------

இணையதள உறவுகளே

இன்று இயேசுவை எருசலேம் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள். சிறந்;த பெற்றோர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். எதிலும் முதலானவற்றை ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டும். முதலானது என்று சொல்லும்போது, எண்ணிக்கையை விட மிகச் சிறந்ததை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும். சிறப்பானதை கடவுளுக்குக் கொடுக்கும்போது, அது இறைவனுக்கு ஏற்ற காணிக்கையாக மாறுகிறது. கடவுள் அதை ஏற்று, ஆபேலின் சார்பில் பேசியதுபோல உங்கள் சார்பில் பேசுவார். உங்கள் சார்பில் செயல்படுவார். கடவுள் உங்கள் சார்பில் இருக்கும்போது உங்களுக்கு என்ன குறை,

நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு. தற்சமயம் குறைந்து வருகிறது. முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள். அவர்களுக்கு எதுவும் குறைந்து போனதும் இல்லை. கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும் அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும் போகவில்லை" என்று.

ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள். மற்ற எல்லாவற்றையும் விட அதுதான் மிகக் குறைவாக இருக்கும். நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக் கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் . ஆசீர்.

-ஜோசப் லீயோன்

-------------------------

உங்கள் குழந்தைகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை இன்று கொண்டாடுகிறோம். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும். அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.

மன்றாடுவோம்:  கொடைகளின் தந்தையே, ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் என்னும் உமது கொடைக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் சொந்தமானவர்கள் என்ற உணர்வில் நாங்கள் ஆழப்பட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

--------------------

''சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி,
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்'' (லூக்கா 2:28,31)

சிந்தனை
-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதையும் இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு (லூக் 2:21) லூக்கா இயேசுவின் அர்ப்பணம் பற்றிப் பேசுகிறார். திருச்சட்ட மரபினை யோசேப்பும் மரியாவும் கடைப்பிடித்தார்கள். எனவே, ஆண்மகவு பிறந்ததும் அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க எருசலேம் கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இறைப்பற்றுக் கொண்டு நேர்மையாக வாழ்ந்துவந்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் சிமியோன். கோவிலில் வயது முதிர்ந்த அன்னா என்னும் இறைவாக்கினரும் இருந்தார். இந்த இருவரையும் யூத சமய மரபின் உருவகங்களாக நாம் காணலாம். அதாவது, இஸ்ரயேலர் கடவுளின் வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும் என்றும், மெசியா மக்களிடையே வருவார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சிமியோனும் அன்னாவும் அந்த மரபின் வழி வந்தவர்கள். மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள். அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டதும் அவரே மெசியா என்பதை அறிந்துகொள்கிறார்கள். சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்; கடவுளைப் போற்றுகிறார்; தம் குரலை எழுப்பி, இயேசு ''பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக் 2:32) என அறிக்கையிடுகிறார்.
-- இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின் வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது. கடவுள் தம் மக்களைத் தேடி வருகிறார் என்பதை சிமியோனும் அன்னாவும் உணர்ந்திருந்தார்கள். இயேசுவின் வழியாகக் கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது என்பதையும் அவர்கள் அறிந்தார்கள். கடவுளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஒரு நாளும் ஏமாற்றமடையார் என்பதை இங்கே காண்கிறோம். நம் வாழ்வில் கடவுள் புகுந்திட நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற இயேசு கிறிஸ்து நம் இதயத்தையும் வாழ்வையும் ஒளிர்விப்பார் என நாம் உறுதியாக நம்ப வேண்டும். அப்போது நம் வாழ்வில் நிலவுகின்ற இருள் மறைந்துவிடும்; நாமும் கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்படுவோம். ஒளிபடைத்த கண்களோடு நாம் கடவுளின் திருவுளத்தைக் கண்டு, அதை நம் வாழ்வில் செயல்படுத்த முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் அக இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற உம்மை மனமுவந்து நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.

-- இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.

மன்றாட்டு
இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------

"வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணம் .. .."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கிறிஸ்துவின் பிரசன்னம் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாயிருக்கும் என்றால் அது முற்றிலும் உண்மை. எங்கெங்கு இயேசு இருக்கிறாறோ, அங்கெல்லாம் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டாயம் இருக்கும். சிமியோன் இறைவாக்கினர் சொன்னது முற்றிலும் உண்மை.

மண்ணகத்தின் அரசர்கள், ஆட்சிகள் ஆட்டம் கண்டன. வீழ்ந்தன. யூதமும் அதன் சட்டமும் வீழ்ச்சி கண்டது. கிறிஸ்தவமும் அதன் ஆவியின் செயல்பாடுகளும் எழுச்சிபெற்றன. அநீதி, ஆணவம், அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. நீதியின்படி வாழ்வோர், தாழ்ச்சியுடையோர், நலிந்தோர் எழுச்சி பெற்றனர். பாவிகள், பெண்கள், ஒதுக்கப்பட்டோர் தலை நிமிர்ந்து வாழத்தொடங்கினர்.

இன்றும் இயேசுவும் அவரது திருச்சபையும் அவரைப் பின்தொடரும் கிறிஸ்தவனும் இவ்வாறே பலருடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறார்கள்; இருக்க வேண்டும். இத்தகைய நிலைப்பாடும் செயல்பாடும் கொண்டால் மட்டுமே சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்ச்சியம் முளையிலேயே இயேசுவில் இருந்ததை சிமியோன் உணர்ந்து முன்னுரைக்கிறார்.

புதிய சமுதாயம் உருவாக்க எழுச்சி தேவை. வீழ்ச்சியைத் தவிர்க்க முடியாது. இவை நடைபெறும்போது பாராட்டுவோம்; ஒத்துழைப்பு கொடுப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோசப் லியோன்