திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4


அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 14-15. 17

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்;
அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.
15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக!
அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! -பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! -பல்லவி

திருப்பாடல் 72: 1-2, 14, 15, 17

"ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்"

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். "ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்" என்பதையே பல்லவியாக வேண்டுகிறோம்.

இன்று 14, 15, 17 என்னும் மூன்று வசனங்களையும் நாம் நம்முடைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். "அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது" என்றும், "அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக. அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைத்திருப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவாராக. எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக" என்னும் வரிகள் இன்று நம் கவனத்தை ஈர்;க்கின்றன.

பொதுவாக இந்தத் திருப்பாடல் சாலமோன் மன்னனைக் குறித்தாலும், மேற்சொல்லப்பட்ட வரிகள் சாலமோனைவிட இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, "மெசியாவின் திருப்பாடல்" என இதனை அழைக்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இதன் காரணமாகவே, உலகுக்கு மெசியா தம்மையே வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இந்நாள்களில் திருச்சபை இத்திருப்பாடலைத் தன் வழிபாட்டில் இணைத்துக்கொண்டுள்ளது.

இதே உணர்வோடு. அனைத்துலகின் ஆண்டவராம் இயேசுவை நாமும் போற்றி, வழிபடுவோமாக!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் ஆட்சி இவ்வுலகிலும், எங்கள் உள்ளங்களிலும் மலர்வதாக, செழித்தோங்குவதாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


லூக்கா 4:14-22

வியாழன்

நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22

அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: �ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, �நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, �இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இயேசுவின் விழுமியங்களும், மதிப்பீடுகளும்

இயேசு பாலைவன அனுபவத்திற்கு பிறகு முதன்முதலாக தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். அவர் தொடங்கிய முதல் பகுதி கலிலேயா. அவர் போதித்த முதல் இடம் தொழுகைக்கூடம். இதனுடைய முக்கியத்துவத்தை இப்போது பார்ப்போம். அவர் தொடங்கக்கூடிய இடம் அவர் வாழ்ந்த கலிலேயா. கலிலேயா ஒரு வளமையான பகுதி. கலிலேயாவில் மக்கள் ஏராளமானபேர் வாழ்ந்தனர். மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக இது விளங்கியது. முற்போக்குச் சிந்தனையும், புதுமையை வரவேற்கக்கூடியவர்களாகவும் இங்குள்ள மக்கள் வாழ்ந்தனர். வீரத்திலும், துணிவிலும் வலிமை உள்ளவர்களாக வாழ்ந்தனர். எதற்கும் அஞ்சாத உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் கலிலேயர்கள்.

இயேசு தொழுகைக்கூடத்தில் தனது போதனையை ஆரம்பிக்கிறார். யூதர்களின் வழிபாட்டின மையப்பகுதியாக தொழுகைக்கூடம் ஆக்கிரமித்திருந்தது. தொழுகைக்கூடத்தில் செபமும், இறைவார்த்தையும் மையமாக விளங்கின. தொழுகைக்கூடத்திலிருக்கிற ஏழுபேர் இறைவார்த்தையை வாசித்தனர். பொதுவாக, முதலில் எபிரேய மொழியில் வாசிக்கப்பட்டது. பெரும்பாலும் எபிரேய மொழி அவர்களுக்கு புரியாததால், அதனுடைய மொழிபெயர்ப்பான அரேமிய நூலும் அல்லது கிரேக்க நூலும் வாசிக்கப்பட்டது. திருச்சட்ட நூலிலிருந்து வாசகம் என்றால், ஒவ்வொரு இறைவசனத்திற்குப்பிறகு விளக்கநூலும், இறைவாக்கினர் பகுதியிலிருந்து என்றால், மூன்று இறைவசனங்களுக்கு பிறகு விளக்கநூலும் வாசிக்கப்பட்டது. இயேசுவின் போதனைக்கு பிறகு, அவரைப்பற்றிய மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து இருந்ததாக நற்செய்தியாளர் கூறுகிறார். இந்த இரண்டு இடங்களுமே இயேசு நிறைந்த மதிப்போடு தனது பயணத்தை தொடங்கியதாக, நமக்கு சொல்கிறது. இவ்வளவு மதிப்பையும் எப்பாடுபட்டாவது தக்கவைக்க வேண்டும் என்று, இயேசு விரும்பியது இல்லை. எப்படி என்றாலும், உண்மையாக வாழ வேண்டும் என்றுதான் விரும்பினார். புகழுக்காகவோ, பெயருக்காகவோ இயேசு எப்போதும், தனது விழுமியங்களை விட்டுக்கொடுத்தது இல்லை.

இன்றைய காலச்சூழ்நிலையில் விழுமியங்களும், மதிப்பீடுகளும் ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை. சந்தர்ப்பவாதம் தான் மக்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது. விழுமியங்கள் வாழ்வின் மையம் பெற வேண்டும். சந்தர்ப்பவாதம் களையப்பட வேண்டும். அதற்காக நாம் இயேசுவிடம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

இணையதள உறவுகளே

இன்றைய கால கட்டத்தில் நாம் பல இறை வாக்குகளைக் கேட்கிறோம், படிக்கிறோம். நமக்கென கடவுளால் தந்த வசனம் என பெருமை பாராட்டிக்கொள்வோம்.ஆனால் அந்த வாக்குக்கு ஏற்ப, பெருமைக்கு ஏற்ப வாழ்கிறோமா? என்னில் இந்த இறை வாக்கு இன்று நிறைவேறிற்று என்று மார்தட்டி சொல்ல முடியுமா? அனைவருடைய கண்களும் நம்மையே உற்றுநோக்கிய வண்ணம் உள்ளதா?

இயேசுவின் போதனைகளில் உன்னைக் கவர்ந்தது என்ன? அவரது செயல்களில் உனக்கு எதில் நாட்டம் அதிகம். இயேசுவின் போதனைகளை, சாதனைகளை இன்று சாதித்துக் காட்டும் சாதனையாளர்கள் உன் கண்ணில்பட்டதுண்டா? உன் மனத்தில் என்ன தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்?

இத்தகு தாக்கத்தை ஏற்படுத்துவராக நாம் மாறவேண்டும். இத்தகைய சமுதாய தாக்கங்களை ஏற்படுத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். இதைத்தான் நாசரேத்து செபக்கூடத்தில் இயேசு செய்தார். அங்கு இருந்தவர்களும் செய்தார்கள். புதிய புரட்சி சமுதாயம் உருவாகியது. நாமும் செய்வோம்.

-ஜோசப் லீயோன்

 

எல்லாரும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசினர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார்” என்று குறிப்பிடும் நற்செய்தியாளர், முத்தாய்ப்பாகத் தரும் செய்திதான் “எல்லாரும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்”.

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும் ” என்று பாடினான் ஒரு திரையிசைக் கவிஞன். இயேசுவுக்கு அந்தப் பேரும், புகழும் கிடைத்தன. என்ன காரணத்தால்? அதற்கான காரணத்தை நற்செய்தியாளர் முதல் வாக்கியத்திலேயே சொல்லிவிடுகிறார். “இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்”. ஆம், இதுதான் அந்தப் பெருமைக்குக் காரணம். இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் இருந்தார். அவரது சொற்களில் ஆற்றலும், வலிமையும் இருந்தன. தூய ஆவியால் நிரம்பியவராய் இருந்ததால், அவரது செயல்பாடுகள் வரங்களும், கொடைகளும், கனிகளும் நிறைந்தனவாக இருந்தன. எனவேதான், வியத்தகு செயல்களை அவர் செய்தார். மக்கள் எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். நமது வாழ்விலும் தூய ஆவியானவரை நிறைவாகச் செயல்பட அழைப்போம், அனுமதிப்போம். அப்போது நாமும் பெருமைமிகு செயல்களைச் செய்யலாம்.

மன்றாடுவோம்: தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிணி போக்கும் வல்லமையை நீர் கொண்டிருந்ததுபோல, உமது சீடர்களாகிய நாங்களும் தூய ஆவியின் வல்லமை உடையவர்களாக வாழச் செய்தருளும். எங்களுக்கு உமது ஆவியின் கொடைகளையும், கனிகளையும், வரங்களையும் நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------

''ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது;...
அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (லூக்கா 4:18-19)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- எசாயா இறைவாக்கினர் எழுதிய நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதியில் கூறப்படுகின்ற கருத்து இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. அக்கருத்தினை இயேசு தம்முடைய பணித்திட்டமாக அறிக்கையிடுகிறார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் ''ஆவி''யின் செயல் துலங்குவதை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றன. மரியாவின் வயிற்றில் கருவாக உருவான நொடியிலிருந்து இயேசு சிலுவையில் தொங்கித் தம் ஆவியைக் கையளித்த நேரம் வரை ஆவியின் செயல் வெளிப்பட்டது. ஏன், இயேசு சாவிலிருந்து ஆவியின் வல்லமையால் உயிர்பெற்றெழுந்து, தம் சீடரையும் ஆவியால் திடப்படுத்துகிறார். இவ்வாறு கடவுள் இயேசுவின் வழியாகச் செயல்பட்டதை ஆவிக்கு ஏற்றியுரைப்பதை இவண் காண்கின்றோம். கடவுளின் ஆவி தம்மில் தங்கியிருப்பதை உணர்கின்றார் இயேசு. அந்த இறைப் பிரசன்னத்திலிருந்து இயேசுவின் சொல்லும் செயலும் பணியும் பிறக்கின்றன.

-- கடவுளின் ஆவி நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆவியால் வழிநடத்தப்படும் நாம் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்ள வேண்டும். அதற்கேற்ப நடக்க வேண்டும். இயேசு எந்த ஆவியால் ''அருள்பொழிவு'' பெற்றாரோ அதே ஆவி திருமுழுக்கின் வழி நம்மையும் நிறைத்துள்ளார். இதனால் இயேசுவின் பணியில் நாமும் பங்குபெறுகின்றோம். ''ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி''யை நாம் செய்வதற்கு ஆவி நம்மைத் தூண்டுகிறார். இயேசுவைப் போல, இயேசுவைத் தொடர்ந்து நம் பணியை ஆற்றிட ஆவி நமக்கு வல்லமை அளிக்கிறார்.

மன்றாட்டு
இறைவா, உம் ஆவியின் துணையோடு நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

-"இவர் யோசேப்பின் மகன் அல்லவா?"-

இயேசுவின் அன்புக்குரியவரே!

பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;.

கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர்.

இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர்.

இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும்.
வாழ்த்துக்கள். ஆசீர்.

-: ஜோசப் லியோன்