முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15


அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமைமிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, ``என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்'' என்றாள். எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, ``இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்'' என்று அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது சிரியா மன்னர், ``சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்'' என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில் ``இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்'' என்று எழுதப் பட்டிருந்தது. இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, ``நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!'' என்று கூறினான். கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி, ``நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்'' என்று சொன்னார். அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, ``நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்'' என்று ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், ``அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?'' என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார். அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், ``எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, `மூழ்கி எழும்; நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?'' என்றனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, ``இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 42: 1. 2.; 43: 3. 4

பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே!
என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. -பல்லவி

42: 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? -பல்லவி

43: 3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்;
அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். -பல்லவி

43: 4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்;
என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

லூக்கா 4:24-30

தவக்காலம் -மூன்றாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30

இயேசு நாசரேத்துக்கு வந்திருந்தபோது தொழுகைக்கூடத்தில் மக்களை நோக்கிக் கூறியது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.'' தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 4: 24 - 30
இணைவோம்

சமீபத்தில் நான் வாசித்த “நண்பா நீர் தான் ஹீரோ” என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு சொற்றொடர் One Indian is Equal to Ten Japaneses. இதனை தமிழில் ஒரு இந்தியர் பத்து ஜப்பானியர்களுக்குச் சமம் என்று மொழி பெயர்க்கலாம். இந்த சொற்றொடர் உண்மையா? என்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியர்களிடையே இருக்கக்கூடிய திறமை, அறிவுத்திறன் அசாதாரணமானவை. ஆனால் அதில் சிக்கல் இருக்கின்றது. ஏனென்றால் இந்தியர்கள் தனியாக செயல்பட்டால் பத்து ஜப்பானியர்களுக்கு சமமாக செயல்படுவார்கள். அதே நேரத்தில் குழுவாக இணைந்து செயல்பட சொன்னால், ஒரு ஜப்பானியர் செய்யக்கூடிய வேலையை பத்து இந்தியர்கள் சோ்ந்து செய்தாலும் செய்ய முடியாது. ஏனென்றால் இந்தியர்களிடம் இணைந்து செயல்படக்கூடிய தன்மை இன்னும் வரவில்லை என்று ஆசிரியர் சுஜித்குமார் கூறுவார்.

எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் கடவுளின் திட்டம். ஆனால் யூதர்கள் தாங்கள் மட்டும் தான் தூய்மையானவர்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள், சட்டத்தி்ன நுணுக்கங்களை அறிந்தவர்கள், வல்லுநர்கள் என்று எண்ணி மற்றவர்களை தேவையற்றவர்கள் என்று கருதி அவர்கள தீட்டாகவே கருதினார்கள். இது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டி, அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றியமைக்க முயலுகின்றார். இயேசுவின் கண்ணோட்டத்தை அறிந்த யூதர்கள் இவரை அழித்தொழிய நாம் வாழ்வு பெற இயலாது என்று எண்ணுகின்றார்கள். எனவே தான் இயேசுவின் மீது கோபம் மற்றும் எரிச்சல் கொண்டு புறக்கணிக்கின்றார்கள். இணைந்து செயல்படுதல் என்ற வார்த்தை ஒரு எட்டாத கனியாகவே யூதர்கள் பார்க்க துணிந்து விட்டார்கள்.

நாம் நம்முடைய குடும்பங்களில் சமுதாயத்தில் இணைந்து செயல்பட முயல்கிறோமா? அல்லது நான் தான் பெரியவன் என்ற கண்ணோட்டத்தில் வாழ முயல்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

இயேசுவின் போதனையும், தாக்கமும்

இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது. தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது. இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது.

யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர். அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை. தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை, இயேசு தெரிந்திருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், அதன் மூலமாக மக்களை சிந்திக்க வைப்பதிலும் இயேசு கருத்தோடு செயல்படுகிறார்.

இன்றைக்கு மக்களை சிந்தனையில்லாத மழுங்கட்டைகளாக இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான், தொலைக்காட்சியைக் கொடுத்து, அவர்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள். மக்கள் சிந்திப்பதை மறந்து, ஒருவிதமான மயக்கநிலையிலும், அடிமைநிலையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் போதிக்க, முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

கடவுள் பக்தி

தொழுகைக்கூடத்திற்குச் சென்று வழிபாட்டில் பங்கேற்பது, இயேசுவின் பணிவாழ்வில் நிச்சயம் முக்கியமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தொழுகைக்கூடுத்தில் நடக்கும் வழிபாட்டில் பலவற்றில் இயேசுவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் அதில் மறக்காமல் பங்கேற்றார். பல தவறுகள் அங்கே நடந்தாலும் கூட, இயேசு அதில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். காரணம், கடவுளுக்கான நாள், அவருக்காகவே செலவிடப்பட வேண்டும் என்பது தான். நம்மைப்படைத்த இறைவனுக்கு, அவருக்கான  நாளில், அவரைப்போற்றிப் புகழ்வது நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும் என்பதை இயேசு இங்கே உணர்த்துகிறார்.

நமது ஆலயங்களில் நடக்கும் வழிபாடுகள் ஒவ்வொன்றும் ஆண்டவரைப்போற்றுவதாக, புகழ்வதாக இருக்க வேண்டும். ஆலயங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள் மட்டில் நமக்கு மனஸ்தாபம் இருந்தாலும், ஆண்டவரைப்போற்றிப்புகழ்வதில் நமக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல வேளைகளில் அருட்தந்தையர்கள் மீது உள்ள கோபத்தால், ஆலய நிர்வாகத்தினர் மீதுள்ள கோபத்தால், கடவுள் மீது கோபப்படுகிற, ஆலயத்தையே மறந்துவிடுகிற மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை இன்று அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வது, நமக்கும், ஆண்டவருக்கும் இடையேயான உறவு. அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இன்று பிள்ளைகளை டீயூசன் படிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், பொழுதுபோக்கு செய்வதற்கும் அதிகமாக ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், நமது பிள்ளைகள் கடவுள் பக்தியாய் வாழ்வதற்கு நாம் அவர்களைப் பக்குவப்படுத்துகிறோமா? அவர்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை எடுக்கிறோமா? சிந்திப்போம். கடவுள் பக்தியில் நமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் நாம் உறுதிகொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

யார்தான் மீட்புப்பெற முடியும்?

இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது ஒரு கிராமம் அல்ல. அது ஒரு பட்டணம் அல்லது நகரம். ஏறக்குறைய இருபதாயிரம் பேர் அங்கே வசித்து வந்தனர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள். இயேசு அப்படி என்ன தவறு செய்தார்? அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். இயேசு அவர்களிடம் இருந்து தப்பி, அங்கிருந்து போய்விடுகிறார்.

இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்? இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார். இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இரண்டுபேரிடத்திலுமுள்ள பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை. கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. இதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஏனென்றால், நாடு முழுவதும் பஞ்சம். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் அவருக்குக்கொடுக்கிறாள். அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். நலமடைகிறார். நம்பிக்கைதான் இரண்டுபேருக்கும் மீட்பைத்தந்தது. இயேசு சொல்ல வருகிற கருத்து இதுதான்: யாராக இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடவுளுக்கு நெருக்கமான இனமாக இருந்தாலும், நம்பிக்கைதான் ஒருவருக்கு மீட்பைத்தர முடியுமே தவிர, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற தகுதி மட்டும், ஒருவருக்கு மீட்பைப்பெற்றுத்தர முடியாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையினால்தான் வாழ்வு பெறுகின்றனர்.

நான் கிறிஸ்தவன், நான் ஓர் அருட்சகோதரி, நான் ஓர் அருட்பணியாளர் என்பதால் நாம் மீட்பைப்பெற்றவிட முடியாது. நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும். அப்போதுதான் நாம் மீட்புப்பெற முடியும். நம்பிக்கை வாழ்வு வாழ்கிற அனைவருக்கும் கடவுளின் அரசில் இடமுண்டு.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாத இறைவாக்கினர்கள் !

சொந்த ஊரில், சொந்த வீட்டில், ஏன் சொந்த நாட்டில் ஏற்பிசைவும், பாராட்டும் பெறாத பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

எத்தனையோ கலைஞர்கள், படைப்பாளர்கள், அறிவியலாளர்கள் தக்க ஊக்குவிப்பு இல்லாததால், சோர்வடைந்து அடங்கிப் போவதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நமக்கே கூட அத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

என்ன காரணம்? குயஅடையைசவைல டிசநநனள உழவெநஅpவ என்னும் பொன்மொழி ஆங்கிலத்தில் விளங்குகிறது. கூடவே இருப்பது ஏளனத்தை உருவாக்கும் என அதனை மொழி பெயர்க்கலாம். ஒருவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பதனாலேயே, அல்லது அவரது பிறப்பு, குடும்பப் பின்னணி, சில கொடுமையான நேரங்களில் ஒருவரின் சாதி- இவற்றைக் கொண்டு அவரைப் பார்ப்பதாலேயே அவரது திறன்களை, ஆற்றல்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

நமக்குக் குழந்தைகளின் பார்வை, அல்லது இறைவனின் பார்வை தேவை. குழந்தைகள்தாம் எந்தப் பின்புலமும், பின்னணியும் இன்றி, முற்சார்பு எண்ணங்கள் எதுவுமின்றி பிறரை, நிகழ்வுகளை, இயற்கையைப் பார்க்கின்றனர், வியக்கின்றனர், ரசிக்கின்றனர், பாராட்டுகின்றனர், இறைவனும் அவ்வாறே.

நாமும் நமது முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மாந்தரை அவரது இயல்பை, திறன்களை மட்டுNமு கண்டு பாராட்ட முன்வருவோம்.

மன்றாடுவோம்: சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாதீய நோயால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் பணியை நாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மானிடரைக் குழந்தை உள்ளத்தோடு பார்க்கும் புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

சொந்த ஊரில் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இறைவாக்கினர்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களைக்கூட அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், குடும்பப் பின்னணி, வாழும் சூழல் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையையை, செயல்பாட்டைக் கணிக்கின்ற தவறை மானிட சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது என்பதனை இயேசுவின் காலத்திலிருந்து இந்நாள்வரை நிலவும் இந்தச் சமூகத் தீமையைக் கொண்டு நாம் அறிகிறோம்.

ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், செயல்பாடுகளால், இயல்புகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். மாறாக, அவர்களது பெற்றோர் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பன போன்ற தரவுகளால் அல்ல. ஆனால், இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் இந்தத் தவறினைச் செய்தனர். அதுபோல, இன்றும் ஒவ்வொரு குடும்பத்திலும், பங்கிலும், தொழிலகத்திலும், ஊரிலும் இத்தகைய தவறுகள் நடந்துகொண்டே இருக்கலாம். எனவே, இன்று நான் சந்திக்கின்ற ஒவ்வொரு நபரையும் சற்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களை முற்சாற்பு எண்ணமின்றிப் பார்க்கின்ற, மதிக்கின்ற பழக்கத்தை உருவாக்குவேன்.

மன்றாடுவோம்: ஆளுமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய வாசகத்தின் வழியாக நீர் கற்றுத் தரும் இந்தப் பாடத்திற்காக நன்றி. ஆண்டவரே, நான் எனது குடும்பத்தினரை, உறவினரை, உடன் ஊழியர்களைப் பார்க்கின்றபோது, முற்சார்பு எண்ணமின்றிப் பார்க்கவும், அவர்களின் சொந்த இயல்புகள், திறமைகளுக்காக அவர்களை மதிக்கவும் அருள் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

------------------------

"இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்றார்" (லூக்கா 4:24)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தவர்கள் இறைவாக்கினர். சில வேளைகளில் இறைவாக்கினர் என்றால் வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கின்றவர்கள் எனப் பொருள்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் பழைய ஏற்பாட்டில் வருகின்ற மோசே, எசாயா, எசேக்கியேல், எரேமியா போன்றோர் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை; அவர்கள் மக்களையும் ஆட்சியாளர்களையும் கண்டித்துப் பேசியதுண்டு; தம் தீய நடத்தையை விட்டுவிட்டு கடவுளை நோக்கித் திரும்பவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியதுண்டு. மேலும் இறைவாக்கினர்கள் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் உண்மையான மன மாற்றம் நிகழாவிட்டால் மக்கள் அழிந்தொழிவார்கள் என்னும் செய்தியையும் இறைவாக்கினர் அறிவித்தனர். இதனால் இறைவாக்கினரை எல்லாரும் எப்போதும் வரவேற்றார்கள் என்று சொல்ல முடியாது.

-- மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான எதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை. நம் வாழ்க்கையிலும் இது நிகழக் கூடும். இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் ஏற்கெனவே விடை கண்டுவிட்டதாக நினைத்தால் இயேசுவோடு நமக்குள்ள உறவு ஆழப்படுவதற்கு வழியில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனம் நமக்கு இருந்தால் அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசு என்னும் இறைவாக்கினரின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடர வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை நாளும் அதிகமாக அறிந்திட எங்கள் உள்ளத்தை ஒளிர்வித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

எந்த நிமிடம் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க முன்வந்தாரோ அந்த நிமிடமே அவரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்று எப்போது பேசத் தொடங்கினாரோ, அப்போதே கொலை செய்யவும் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. ஆமாம்."அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்" (லூக்4:29)

உண்மையும் எதார்த்தமும் எல்லா நேரமும் உயிருக்கு எதிரி. உண்மையின் விலை மிக மலிவு. எதார்த்தம் மலிவுச் சரக்கு. போலி கௌரமும் அந்தஸ்தும்,காசு கொடுத்து வாங்கிய பெயரும் புகழும், செட்அப் செய்த மதிப்பும் மரியாதையும், படிக்காமல் வாங்கும் பட்டமும், அலைந்து அனுபவிக்கும் பதவியும் உண்மையின் கருவறுக்கும் எதிரிகள் அல்லவா.கொலையும் செய்வதை கொள்கையாக, தர்மமாகக் கருதுவார்கள். இயேசுவை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றது இன்றைக்கு பெரிய விஷயம் அல்ல.

இந்த சமுதாயத்தை இன்றைக்கு வாழ வைப்பது இது போன்ற நவீன இயேசுக்கள்தான். உண்மைக்கும் எதார்த்தத்துக்கும் சான்று பகரும் நீங்கள் இருந்தால் மட்டுமே சமுகம் திருந்தும். இயேசு சுட்டிக்காட்டிய இரு நிகழ்ச்சிகளும் தன் இன, சமூக, உறவுக்கு ஒரு சவுக்கடி. நேரம் வரும் வரை யாரும் எவரும் எதையும் செய்ய முடியவி;ல்லை. நம்மையும் யாரும் அசைக்க முடியாது. உண்மையை உரக்க உரைப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்