முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10


பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, �திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது `தூய வழி' என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

8யb ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.

லூக்கா 5:17-26

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, �உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், �கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'' என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, �உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? `உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன' என்பதா, அல்லது `எழுந்து நடக்கவும்' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, �நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!'' என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், �இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!'' என்று பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!
லூக்கா 5:17-26

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு.

1. பாவமன்னிப்பு
நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த நாம் புதுமையான, வித்தியாசமான காரியங்களை நம் வாழ்வில் மிக எளிதாக செய்ய முடிகிறது. புதுமையானவற்றைக் காண முடிகிறது.

2. உறுதியான பிடிப்பு
இனி பாவம் செய்ய மாட்டேன் என்ற உறுதியான பிடிப்பு என்பது வேண்டும். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இனி பாவம் செய்யாதே என்றார். அன்றிலிருந்து அவர் புதுமையான மனுசியாக மாறினார். நாமும் பாவஅறிக்கை செய்த பிறகு உறுதியான பிடிப்புடன் அனைத்தையும் உதறி தள்ள வேண்டும். இனி பாவம் செய்யமாட்டேன் என்ற உறுதியான பிடிப்பு நமது இலக்காக மாற வேண்டும். இதன் வழியாக நாம் புதுமையான, வித்தியாசமான காரியங்களை நம் வாழ்வில் மிக எளிதாக செய்ய முடிகிறது. புதுமையானவற்றைக் காண முடிகிறது.

மனதில் கேட்க…
1. இன்று நான் செய்யப்போகும் புதுமையானது என்ன?
2. பாவத்தை விட வேண்டும் என்ற உறுதியான பிடிப்பு என்னிடம் உள்ளதா?

மனதில் பதிக்க…
இன்று புதுமையானவற்றைக் கண்டோம் (லூக் 5:26)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 35: 1 – 10
நம்பிக்கையாளர்களின் வாழ்வு

இறைவன் நேர்மையாளர்களின் கடவுள். அவர்கள் சார்பாக நிற்கிற கடவுள். அவர்கள் சார்பாக நீதிக்காக போராடுகிற கடவுள் என்பது இன்றைய வாசகத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது. நீதியோடும், நேர்மையோடும் இந்த உலகத்தில் வாழ்வது என்பது எளிதானதல்ல. அது கடினமானது. அதுவும் என்றாவது கடவுள் வருவார், தங்களது கேள்விகளுக்குப் பதில் தருவார், தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்று ஒவ்வொரு நாளிலும் எதிர்பார்த்து, அந்த நாளின் நிறைவில் அது நடக்காதபோதும், அடுத்தநாளில் கடவுள் கண்டிப்பாக வருவார் என்று எண்ணுவது, நிச்சயம் மிகப்பெரிய சவாலான வாழ்வு. அந்த வாழ்வை எல்லாராலும் வாழ முடியாது.

அந்த வாழ்வை தொடர்ந்து வாழ்வதற்கு, நம்முடைய நம்பிக்கை வலுவானதாக இருக்க வேண்டும். அப்படி வாழ்கிறவர்களுக்கு இன்றைய வாசகம், நம்பிக்கை நிறைந்த சொற்களைத் தருகிறது. ஏனெனில், கடவுளிடம் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அவர்கள் அனுபவித்த கவலைகளையெல்லாம் மறக்கடித்துவிடும். ”கடவுள் அவர்களை உன்னிடம் அழைத்துவரும்போது, அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள்”. அவர்களை கடவுளே மகிமைப்படுத்துவார். அவர்கள் இனி எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இனி வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவர்கள் மகிழ்ந்திருக்கலாம்.

நம்முடைய வாழ்வில் நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழ்கிறபோது, வாழ முற்படுகிறபோது, நிச்சயம் பல்வேறு தடைகளை நாம் சந்திக்க நேரிடும். ஆனால், அவைகளை நாம் உறுதியோடு தாங்குகிறபோது, கடவுள் நமக்கான மகிமையைத் தருவார். நம்மைத் தேற்றுவார். நமக்கு ஆறுதலை வழங்குவார். அந்த நம்பிக்கை உணர்வோடு, இறைவனின் வழியில் நாம் வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------- 

11.12.2017 – லூக்கா 5: 17 – 26
திருப்பாடல் 85: 8 – 9, 10 – 11, 12 – 13
”இதோ! நம் இறைவன் வந்து விடுவிப்பார்”

இந்த திருப்பாடல் இறைவன் மீது ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கையின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இறைவனின் அன்பிற்காக, ஆறுதலுக்காக, மீட்பிற்காக காத்திருக்கிறார். அவருடைய காத்திருத்தல், மற்றவர்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறது. கடவுளைத் தேடாதவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், கடவுளை முழுமையாக வாழ்க்கையில் நம்பிய உனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள்? என்று, அவரைப்பார்த்து மற்றவர்கள் பரிகாசம் செய்வது போல தெரிகிறது. இந்த நெருக்கடியில், ஆசிரியரின் நம்பிக்கை வெளிப்படுகிறது.

திருப்பாடல் ஆசிரியர் வைத்திருக்கிற இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் எது? ஆசிரியரின் நம்பிக்கைக்கான காரணம் எது? அடிப்படையில் கடவுள் நல்லவர். தம் மக்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர். எனவே, ஆண்டவர் நம்மை கைவிடமாட்டார். கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற எளிய நம்பிக்கை இதுதான். இது நடக்குமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? அதெல்லாம், அவருடைய எண்ணத்தில் வரவேயில்லை. கடவுள் வருவார் – இதுதான் அவருடைய நம்பிக்கை. கடவுள் வந்து, துன்பத்திலிருந்து தன்னை மீட்பார். இப்படிப்பட்ட நம்பிக்கை இன்று நம்மிடத்தில் எத்தனை பேரிடத்தில் இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதனை நம்முடைய வாழ்வாக்குவதற்கு இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாம் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை. சாதாரண, எளிய விசுவாசத்தைத்தான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இந்த விசுவாசம் நம்முடைய வாழ்வில் எப்போதும் இருக்க வேண்டும். அது நம்முடைய வாழ்வாகவும் அமைய வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் வல்லமை

உணர்வுகளை அறிவது வேறு, எண்ணங்களை அறிவது வேறு. ஒருவரின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்வது எளிதானது அல்ல என்றாலும், அது புரிய முடியாதது அல்ல. காரணம், உணர்வுகள் ஒருவரது முகத்தில், உடல் அசைவுகளில் வெளிப்படக்கூடியதாக இருக்கிறது. நாம் எவ்வளவு தான் மறைத்தாலும், ஏதாவது ஒன்று நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், எண்ணங்கள் அப்படியல்ல. அவைகளை மறைத்து, வஞ்சகமாகப் பழகுவது இன்றைக்கு இந்த சமுதாயத்தில் எளிதான ஒன்று. எண்ணங்களை அறிந்து கொள்ளக்கூடியவர் ஒருவர் உண்டு என்றால், அது கடவுள் மட்டும்தான். இயேசு பரிசேயர்களின், சதுசேயர்களின் எண்ணங்களை அறிந்தவராய் இருக்கிறார் என்பது, அவர் கடவுளின் மகன் என்பதை நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

இயேசு நம்பிக்கையோடு கூரையைப் பிய்த்துக்கொண்டு வந்த முடக்குவாதமுற்ற மனிதனின் நண்பர்களைக் கண்டு எரிச்சல் அடையவில்லை. ”இவ்வளவு திரளாக கூடியிருக்கிற மக்களுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களே?” என்று அவர்களைக் கடிந்து கொள்ளவில்லை. ”வெளியில் நின்று கொண்டு, இதே நம்பிக்கையில் இருந்திருந்தாலும் குணம்பெற்று இருப்பீர்களே? அந்த விசுவாசம் உங்களுக்கு இல்லையா?” என்று, அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. பாராட்டக்கூடிய செயல்களை பாராட்டுகிறார். அதிலே தேவையற்ற விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. அவர்களின் எண்ணத்தை அவர் அறிந்தவராக இருப்பதால், அவர்களது விசுவாசத்தின் மதிப்பை அவர் உணர்ந்து கொள்கிறார்.

கடவுளின் வல்லமை இயேசுவிடத்தில் வெளிப்படுகிறபோது, அவர் கடவுளின் எத்தகைய அன்புக்குரிய மகனாக இருக்கிறார் என்பதையும், நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கடவுளின் அன்புக்குரிய மகன் மீது நாமும் நமது முழுமயான விசுவாசத்தை வைப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையான வாழ்வு

புனிதர்களுக்கு நாம் அனைவரும் சிறப்பாக விழா எடுக்கிறோம். அவர்கள் வாழ்ந்த மிகச்சிறந்த தியாக வாழ்விற்காக, எந்த தருணத்திலும் கடவுளைப் பற்றிப்பிடித்துக்கொண்ட அந்த உறுதியான விசுவாசத்தை எண்ணிப்பார்த்து, நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதேவேளையில் அவர்களிடம் நாம் மன்றாடுகிறோம். எதற்காக புனிதர்களிடம் செபிக்க வேண்டும்? நமக்குத் தேவையென்றால் நாம் தானே செபிக்க வேண்டும்? நமது விசுவாசத்திற்குத்தானே கடவுள் பதில் கொடுப்பார்? அப்படியென்றால், புனிதர்களிடம் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்“ என்று எதற்காகச் செபிக்கிறோம்? இந்த கேள்வி நிச்சயம் நம் அனைவரின் உள்ளத்திலும் எழும். இந்த கேள்விக்கான பதிலாக அமைவது தான், இன்றைய நற்செய்திப்பகுதி.

இன்றைய நற்செய்தியில் முடக்குவாதமுற்ற மனிதன் ஒருவனை அவனுயை நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இங்கே முடக்குவாதமுற்ற மனிதன் பேசக்கூடிய நிலையிலும் இல்லை. அவனிடத்திலே விசுவாசம் இருந்ததாகவும் சொல்லப்படவில்லை. ஆனால், அவன் அங்கு வந்தது அவனுடைய நலம்விரும்பிகளின் விசுவாசத்தால். முடக்குவாதமுற்ற மனிதனை, இயேசுவிடம் கொண்டு சென்றால், நிச்சயம் குணம்பெறுவான், என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கையின்பொருட்டு, அவனுக்கு இயேசு சுகம் தருகிறார்.
இன்றைக்கு புனிதர்களின் மன்றாட்டிற்காக பல திருத்தலங்களுக்கு கால்நடையாக, குடும்பம், குடும்பமா செல்வதைப்பார்க்கிறோம். இந்த பக்திமுயற்சிகளும் நிச்சயம் பலன் தரக்கூடியவைதான். ஏனென்றால், புனிதர்கள் நமக்காகச் செபிக்கிறார்கள். நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். அவர்களது புனித வாழ்வின் பொருட்டு, நமது தேவைகளை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுகிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

பிணி தீர்ப்பதற்கான வல்லமை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு போதித்துக்கொண்டிருந்தபொழுது முடக்குவாதமுற்ற ஒருவரை சிலர் கொண்டு வருகிறார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என்று இயேசுவைப் பற்றிச் சொல்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. பிணிகளைத் தீர்ப்பதற்கு ஒரு வல்லமை தேவை. அதைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும். இயேசுவிடம் அந்த வல்லமை இருந்தது. காரணம், அவர் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தார். தந்தை இறைவனின் அன்புக்கு உரியவராக இருந்தார். அந்த வல்லமையைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டினார். நோய்களைக் குணப்படுத்தினார்.

நம்மிடம் அந்த வல்லமை இருக்கிறதா? நோய்களைப் போக்கும், தீமைகளை விரட்டும், துயரங்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வல்லமை நம்மிடம் உண்டா? இருந்தால்தான், நாம் கிறித்தவர்கள். இல்லாவிட்டால், நாம் வலிமையற்ற பெயர்க் கிறித்தவர்கள் மட்டுமே. கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர் கிறிஸ்தவரே அல்லர். எனவே, நாமும் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, சான்றுகளாய் வாழ்வோம்.

மன்றாடுவோம்: தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிணி போக்கும் வல்லமையை நீர் கொண்டிருந்ததுபோல, உமது சீடர்களாகிய நாங்களும் தூய ஆவியின் வல்லமை உடையவர்களாக வாழச் செய்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில்
முடக்குவாதமுற்ற மனிதரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்'' (லூக்கா 5:19)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- முடக்குவாதம் என்பது நாம் சுதந்திரமாக நடந்து செல்லவும் நம் உடலுறுப்புகளை இயல்பாக இயக்கவும் முடியாவண்ணம் தடுக்கின்ற ஓர் ஊனம். சுதந்திரத்தை நாடுகின்ற மனிதருக்கு முடக்குவாதம் ஒரு பெரிய சோதனை மட்டுமல்ல, அது நம் இயலாமையை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்ற ஒரு முள். இவ்வாறு தம் வாழ்க்கையை இயல்பாக நடத்த முடியாமல் இருந்தார் ஒரு மனிதர். அவரால் எழுந்து சென்று இயேசுவை அணுக இயலவில்லை. படுக்கையோடு படுக்கையாக இருந்த அவருக்கு உதவி செய்ய சில நண்பர்கள் முன்வருகின்றனர். அவர்கள் வகுத்த திட்டம் நமக்கு வியப்பாக உள்ளது. மக்கள் கூட்டம் இயேசுவைச் சூழ்ந்திருந்ததால் முடக்குவாதமுற்ற மனிதரின் நண்பர்கள் வீட்டுக் கூரையைப் பிரித்து அவ்வழியாய் கட்டிலோடு அவரை இயேசுவின் முன் இறக்குகிறார்கள். ''கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்'' என்றொரு கூற்று உண்டு. இங்கேயோ கூரையைப் பிரித்து வந்தது நோயுற்ற மனிதர். அவருக்கு நலம் கொடுத்தது கடவுளின் வல்லமையோடு செயல்பட்ட இயேசு. அவரது பரிவும் இரக்கமும் அந்த மனிதரின் ஊனத்தை மட்டும் போக்கவில்லை. மாறாக, மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து ஊனங்களுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ள பாவத்தை இயேசு மன்னிக்கின்றார். யாராவது நோய்நொடியால் வருந்தினால் அதற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்னும் தவறான கருத்து நிலவிய அக்காலத்தில் இயேசு பாவத்தைக் காரணமாகக் காட்டி பாவிகளை ஒதுக்கவும் இல்லை, நோயுற்றவர்களே பாவத்திற்குக் காரணம் என போதிக்கவும் இல்லை.

-- நாம் இயல்பாகச் செயல்படுவதிலிருந்து நம்மைத் தடுக்கின்ற தளைகளும் ஊனங்களும் பல உண்டு. தான் தனது என்னும் அகங்காரம் ஒரு தளை. பிறருடைய நலனை முன்வைக்காமல் தன்னலத்தோடு செயல்படுகின்ற போக்கு ஒரு தளை. நீதி நேர்மையின்றி வாழ்கின்ற போக்கு ஒரு தளை. இவ்வாறு நம்மைக் கட்டிவைத்துள்ள தiளைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தளைகளிலிருந்து நமக்கு விடுதலை தருபவர் கடவுள் என நாம் நம்புகிறோம். நம் உள்ளத்தை ஊனப்படுத்துகின்ற தளைகள் நாம் முழுமையான மனித வாழ்வு நடத்த நம்மை விடுவதில்லை. முழு மனித வாழ்வு என்பது கடவுளையும் பிறரையும் நாம் அன்புசெய்து வாழ்வதில் அடங்கும். அவ்வாறு வாழ்வதற்கு நமக்கு சுதந்திரம் தேவை. அச்சுதந்திரத்தை நமக்குத் தருகின்ற கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். கடவுளின் அருளை நாம் பெற்றிட நமக்குத் துணையாக வருகின்ற நண்பர்கள் உண்மையிலேயே கடவுள் நமக்குத் தருகின்ற கொடை. முடக்குவாதமுற்ற மனிதரின் நண்பர்கள் அவரை இயேசுவிடம் கொண்டுசென்றது போல நாமும் உண்மையான நட்புடையவர்களாக இருந்தால் நம் நண்பர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லத் தவற மாட்டோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உடல் உள ஆன்ம ஊனங்களை அகற்றுபவர் நீரே என உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

புதுவாழ்வு பெற...

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

இயேசு விரும்பும் சில செயல்களைச் நம்மில் பலரும் செய்தால் ஒவ்வொரு நாளும் புதுமையானவற்றை நம் வாழ்வில் காணலாம். எங்கெல்லாம் நோயுற்றவர்கள், இயலாதவர்கள், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் குணம்பெறவும் புது வாழ்வு பெறவும் அவர்களைத் தூக்கி, தாங்கி வழி நடத்தி வந்தால், புதுமையானவற்றைக் காணலாம்.

ஆகவே புதுமையானவற்றைக் காண நல்லவர்கள் நான்கு பேர், விவரம் தெறிந்தவர்கள், துணிச்சல் உள்ளவர்கள் முன்வர வேண்டும். வீட்டில் மக்கள் கூடுவதற்கும், வீட்டின் கூரையைப் பிரிப்பதற்கும் சம்மதம் தரும் நல் உள்ளம் கொண்டவர் தேவை. என்ன நடந்தாலும் குறை சொல்வதற்கென்றே சிலர் உண்டு. அவர்களும் தேவை. இவர்களின் எதிர்ப்பு, பட்டம் உயர பயன்படும் எதிர்காற்றாகும். அதே வேளையில் எப்போதும் கடவுளைப் போற்றிப் புகழும் இன்னொரு குழுவினரையும் பார்க்கிறோம்.

இவர்கள்; எல்லோரும் சேர்ந்து இயேசுவிடம் வந்ததால் புதுமையானவற்றை அன்று கண்டார்கள். பாவம் மன்னிக்கப்பட்டதை அனுபவித்து உணர்ந்தார்கள். முடக்கு வாதமுற்றவன் எழுந்து நடக்கக் கண்டார்கள். இன்றும் வேறுபட்ட நாம் அனைவரும் சேர்ந்து வந்தால் புதுமையானவற்றை என்றும் காணலாம்.

--அருட்திரு ஜோசப் லியோன்