முதல் வாசகம்


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14

ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய். ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் `மகிழ்ச்சியின் நாள்' என்றும் `ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்' எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 86: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.
2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்;
உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்!
நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். -பல்லவி

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்;
ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;
என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். -பல்லவி

5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்;
உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்;
உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,' என்கிறார் ஆண்டவர்.

லூக்கா 5:27-32

தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் சனி

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32


அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா!'' என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், ``வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?'' என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

17.02.2024 சனி
தொடர்ந்து வா ... தொட்டு விடாதே ...

மதுரை ஒரு மாதம் சார்ந்த ஆலய படிக்கட்டுகளில் ‘தொடர்ந்து வா” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இது அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய பின்பற்றுதலாக இருக்கின்றது. சவாரி ஆட்டோக்களில் ‘தொடர்;ந்து வா” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காரணம் முந்தைய வாகனத்தை தொட்டுவிடக்கூடாது என்பதனை சுட்டிக்காட்டவே. இத்தகைய ‘தொடர்ந்து வா” என்ற வார்த்தைகள் அனைத்துமே அடையாளமாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் நற்செய்தி வாசகத்தில் இயேசுவால் பயன்படுத்தப்படும் ‘தொடர்ந்து வா” என்ற வார்த்தையானது அடையாளமாக அல்ல, மாறாக அரவணைத்து வழிநடத்துவதற்காகவே. காரணம் இயேசுவின் சீடத்துவத்தில் இணைவதே. பொதுவாகவே நாம் மற்றவர்களை தொடர்வது அவருடைய தேவைக்காக என்பார் உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்டு. லேவிக்கு இயேசுவிடமிருந்து தேவை இருக்கிறது என்பதனை முழுமையாக உணர்ந்து இருந்தார். எனவேதான் அவரைப் பின்பற்றுகிறார். எதற்காக லேவியை இயேசு பின்பற்ற கட்டளையிடுகிறாரென்றால் தமது இறையாட்சிப் பணியிலும் (அ) தமக்குப் பின் தன்னுடைய சீடர்கள் ஆற்றவேண்டிய இறையாட்சிப்பணியிலும் ‘ஒதுக்கப்பட்டவர்கள்” ஏற்றுக்கொள்ளப்பட லேவியின் பின்பற்றுதல் நமக்கு சாதகமாக அமையும் என்பதனை முழுமையாக உணர்ந்திருந்தார். எனவேதான் லேவியின் பின்பற்றுதல், அங்கிருந்தவர்கள் மத்தியில் புரட்சியை கிளப்பிவிடுகின்றது.

கிறிஸ்தவனாக இருக்கக்கூடிய நாம் இயேசுவை தொடர்கின்றோமா? (அ) நமக்குப் பிடித்த பொருட்களை பின்தொடர்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

லூக்கா 5: 27 – 32
குறைகளை நிறைகளாய் மாற்ற

குறைகளை குறைகளாகவே முத்திரையிட்டு ஒதுக்கக்கூடிய சமுதாயம் இந்த சமுதாயம். அதனால் தான் கடந்த 1971 ல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் இன்னும் குற்றவாளியாகவே சிறைவாசனை அனுபவித்து வருகின்றான். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிக்கின்ற தண்ணீர் தொட்டிக்குள் மனித கழிவுகளை மேல் சாதியினர் கலந்து விட்டனர். பல குழந்தைகள் பாதிப்பு அடைந்தனர். காரணம் குறைந்த பிரிவின மக்கள். குறைந்த பிரிவினர் குறைவுள்ளவர்கள் என்பது சமுதாய வெளிச்சம். இன்னும் ஒரு சில மத ஆலயங்களில் பெண்கள் செல்ல அனுமதியில்லாமல் தவிக்கின்றனர். காரணம் அவர்கள் குறைபாடு உள்ளவர்கள்.

ஆனால் அப்படி குறைபாடுள்ள மனிதனை தான் இன்றைய நாளில் இறைமகன் இயேசு அழைக்கின்றார். மக்களைக் கடுமையாக பார்த்த உரோமை அரசின் வரிதண்டும் பணியை ஆற்றியவர்களை யூத மக்கள் வெறுத்தனர். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் கூட அவர்களை பாவிகள் என்று ஒதுக்கினர். அத்தகையோரின் வீடுகளில் உண்பதும் ஒரு சமயத் தீட்டாக கருதினர். அவ்வாறு சமூக சமய புறக்கணிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த லேவியை இயேசு தம் சீடராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சுங்கச் சாவடியிலிருந்து அழைத்தது தான் இயேசுவுக்கும் மறைநூல் அறிஞருக்கும் மோதல். தமது இறையாட்சிப் பணியிலும் தமக்குப் பிறகு தம் சீடர்கள் ஆற்ற வேண்டிய இறையாட்சிப் பணியிலும் ஒதுக்கப்பட்ட மக்கள் அதாவது குறையுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் லேவியை அழைக்கின்றார். இந்த மகிழ்ச்சியின் கொண்டாட்டம் தான் அவர் வீட்டில் நடந்த விருந்து. இதில் கலந்து கொண்ட பாவிகள், வரிதண்டுவோர் ஆகிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் இயேசுவின் பங்கேற்பு, இயேசு – யூதர்கள் மோதலை வலுப்படுத்துகின்றது. குறைபாடு உள்ளவர்கள் என்று கருதப்பட்டவர்களோடு விருந்துண்டு தோழமை உறவைக் காட்டுவது இயேசுவின் இறையாட்சிப்பணியின் சிறந்த கூறாக விளங்கியது. லேவி வீட்டில் நடந்த விருந்து ஒரு மனிதநேய உறவு மனப்பான்மையை ஏற்படுத்தியது. அதை வெறுத்து மோதியவர்கள் சுயநலம், உயர்குல ஆதிக்கம், மரபு சார்ந்த சட்ட மனநிலை போன்றவற்றில் ஊறியிருந்த பரிசேயர், சட்ட அறிஞர் போன்றவர்கள். தமது இறையாட்சிப் பணியின் அடித்தளமே இத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வு தான் என்கிற வகையில் புறக்கணிக்கப்பட்டோர், நோயுற்றோர், பாவிகள் போன்றவர்கள் தான் இறையாட்சியின் முக்கிய இலக்கு மக்கள் என்று இயேசு திட்டவட்டமாக அறிவிக்கின்றார்.

நாம் குறைபாடுகள் உள்ளவர்களை ஏற்றுக் கொள்கிறோமா? குடும்பத்தில்? சமுதாயத்தில்? ஓரந்தள்ளப்பட்டவர்களை அரவணைப்போமா?

- அருட்பணி. பிரதாப்

==============

நெருக்கமாகப் பின்பற்ற (லூக்கா 5 : 27-32)


இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும்.

லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி இயேசுவைப் பின்பற்ற தான் பற்றியிருந்த அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து நடந்தார் என்பதே. பாவத்தில் கிடந்தவர் எழுந்து நடந்தார், இயேசுவைப் பின்பற்றினார்.

இயேசுவை இத்தவக்காலத்தில் இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற விரும்பும் நாமும், “நின் பற்று அலால் ஓர் பற்று மற்றது உற்றிலேன்” என்று நமது பற்றுகள் அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பற்றிப் பிடித்த லேவியைப் போன்று அவரின் பின் நடப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 86: 1 – 2, 3 – 4, 5 – 6, 11a
”ஆண்டவரே! உமது வழியை எனக்குக் கற்பியும்”

இந்த திருப்பாடல் “தாவீதீன் செபம்” என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட திருப்பாடல் அல்ல. மாறாக, அன்றாட வாழ்க்கையில் தாவீது கடவுளோடு பேசக்கூடிய வார்த்தையாக இது நம்பப்படுகிறது. கடவுளின் தயவு, வழிகாட்டுதல், செய்யக்கூடிய எல்லாக்காரியங்களிலும் கிடைக்க வேண்டி பாடப்பட்ட, விண்ணப்பப்பாடல் தான், இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலை நாம் தியானிக்கிறபோது, வெறும் உதடுகளால் மட்டும் வார்த்தைகளைச் சொல்லாமல், உள்ளத்தோடு இணைந்து, கடவுளிடத்தில் வேண்டுதலை எழுப்ப வேண்டும்.

ஒவ்வொருநாளும் நமது வாழ்க்கையில் புதிய நாளைத் தொடங்குகிறபோது, கடவுளிடம் இந்த திருப்பாடலைச் செபித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கலாம். ஒவ்வொருநாளும் பல முடிவுகளை நமது வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கிற பெரியவர்கள் வரை, ஒவ்வொருவரும் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். அந்த முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு கடவுளின் வழிகாட்டுதல் நிச்சயம் தேவைப்படும். ஏனென்றால், நாம் எடுக்கிற தவறான முடிவுகள் நமது வாழ்வில் பல சிக்கல்களை நமக்கு உருவாக்கிவிடும். இப்படியான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, நாம் சரியான முடிவுகள் எடுப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு கடவுளின் வழிநடத்துதல் நமக்கு தேவை. அதற்காக நாம் இறைவனிடம் மன்றாடுவோம். அவர் நம்மை வழிநடத்த ஒவ்வொநாளும் நாம் இந்த திருப்பாடலைச் செபிப்போம்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் நாம் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். அவரை விட்டு விலகிச்சென்றுவிடக்கூடாது. அதற்கு, செபம் நமக்கு பேருதவியாக இருக்கும். ஒவ்வொருநாளும் இந்த திருப்பாடலைச் செபித்து, கடவுளோடு இணைந்திருந்து, அவருடைய வழிகாட்டுதலில், சரியான வழியில் நடப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

மத்தேயுவின் மகிழ்ச்சி

வரிவசூலிக்கிறவர் மக்களால் வெறுக்கப்பட்ட காலத்தில், இயேசு அப்படிப்பட்ட ஒருவரை, தனது சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால், அதுதான் இயேசு. திருடர்கள் மற்றும் கொள்ளையர்களோடு, வரிவசூலிக்கிறவர்களை மக்கள் நினைத்தனர். அவர்கள் தொழுகைக்கூடத்தில் நுழைவதற்கு மக்களால் தடுக்கப்பட்டார்கள். சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து, அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். நேர்மையான வரிவசூலிக்கக்கூடியவரைப் பார்ப்பதது அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே சிலை வைக்கப்பட்டிருந்தது என்று வரலாறு சொல்கிறது. அப்படியென்றால், எந்த அளவுக்கு மக்கள் வரிவசூலிக்கிறவர்களால் சுரண்டப்பட்டனர் என்பதை, நாம் அறிந்து கொள்ளலாம்.

இங்கே மத்தேயுவின் செய்கை, நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தனக்கு மட்டும் போதும், என்று அவர் நினைத்திருக்கவில்லை. மாறாக, தான் பெற்ற மகிழ்ச்சி, தனது நிலையில் இருக்கிற, திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிற, தன்னைப்போன்ற தன்னுடைய நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, இயேசுவை அழைத்து ஒரு விருந்து படைக்கிறார். அந்த விருந்திற்கு, தன்னுடைய நண்பர்களையும் அழைக்கிறார். தான் மட்டுமே இன்புற வேண்டும் என்று நினைக்கிற இந்த காலக்கட்டத்தில், தனக்கு திருந்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, தன்னுடைய நண்பர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும், தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வந்தது போல, அவர்களும் வர வேண்டும், என்று நினைக்கிற மத்தேயு, உண்மையில் மனமாற்றம் பெற்றவர் தான்.

மகிழ்ச்சி என்பது பகிரப்பட வேண்டும். அந்த மகிழ்ச்சி நாம் மட்டும் அனுபவித்தால் அது நிறைவோ, அமைதியோ தராது. மாறாக, அந்த மகிழ்ச்சி பகிரப்படுகிறபோது, அது நிறைந்த இன்பமாக மாறுகிறது. மகிழ்ச்சியை இன்பமாக மாற்ற, நமது வாழ்வை வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் பார்வை

வரிவசூலிக்கக்கூடியவருக்கு பலவிதமான பணிகள், பொறுப்புகள் இருந்தன. சாலை வரி, துறைமுக வரி, சந்தை வரி என்று பலவித வரிகளை வசூலிக்கும் அதிகாரம் இவர்களுக்கு இருந்தது. ஒரு சில பொருட்களை வாங்குவதற்கு வரி இருந்தது. ஒரு சில வேளைகளில், வரிகட்ட முடியாதவர்களை, வரிவசூலிக்கக்கூடியவர்கள் கடுமையாகக் கொடுமைப்படுத்தினர். அவர்களைக் கேவலமாக நடத்தினர். அவர்களை சுரண்டியும் வாழ்ந்தனர்.

திருடர்கள் மற்றும் கொள்ளையர்களோடு வரிவசூலிக்கிறவர்களை மக்கள் ஒப்பீட்டு பார்க்கக்கூடிய அளவுக்கு, மக்கள் அவர்களை வெறுத்தனர். மக்களுடைய வெறுப்புக்கு, அவர்களின் நடவடிக்கைகளும் காரணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நல்லவர்களும் வரிவசூலிக்கிறவர்களில் இருந்தார்கள். அவர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. எந்த அளவுக்கு என்றால், நேர்மையான வரிவசூலிக்கிறவர்க்கு, பொது இடத்தில் சிலை வைத்திருந்தார்கள். இப்படி வரிவசூலிக்கிறவர்களுக்கு, சமுதாயத்தில் மதிப்பில்லாத நிலையில், இயேசு மத்தேயுவை அழைக்கிறார். இதன் பொருள், கடவுளின் அரசில் அனைவருக்கும் இடமிருக்கிறது என்பதுதான். எல்லாருமே நல்லவர்களாக வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். சில சமயங்களில் சூழ்நிலை மற்றவர்களைக் கெட்டவர்களாக மாற்றிவிடுகிறது. அவர்களுக்கு திருந்துவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே, அனைவரையும் கெட்டவர்கள் என்று தீர்ப்பிடுவது தவறு. திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அத்தகைய ஒரு வாய்ப்பை, இயேசு மத்தேயுவிற்கு தருகிறார்.

கடவுள் முன்னிலையில் அனைவருமே சமமானவர்கள். கடவுள் அனைவரையும் அன்பு செய்கிறார். கடவுளே அனைவரையும் அன்பு செய்கிறபோது, மனிதர்களாகிய நாம் மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று முத்திரை குத்தி, தீர்ப்பிடுவது நல்லதல்ல. மனிதர்களைக் கடவுளின் பார்வையிலிருந்து பார்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்

பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது. இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது. யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன. அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது. எந்த அளவுக்கு என்றால், கொள்ளைக்காரர்கள், திருடர்களோடு மக்கள் இவர்களை ஒப்பிட்டுப்பேசினர்.

இப்படிப்பட்ட பிண்ணனியில்தான் இயேசு வரிதண்டுபவரான மத்தேயுவை இயேசு அழைக்கிறார். மக்கள் மத்தியில் அதிகமாக மதிக்கப்பட்ட இயேசு, மக்கள் மத்தியில் அதிகம் வெறுக்கப்பட்ட மத்தேயுவை அழைக்கிறார். இங்கே மத்தேயுவின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. மத்தேயுவுக்கு பெரும் மகிழ்ச்சி. தன்னை இயேசு மற்றவர்களுக்கு நடுவில் அடையாளப்படுத்தி, தன்னை பின்பற்றச்சொன்னது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணம். இந்த மகிழ்ச்சியை தான் மட்டும் அனுபவிக்கவில்லை. பெற்ற மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார். மகிழ்ச்சி என்பது ஒருவரோடு தேங்கிவிடக்கூடாது. அது விரிவுபட்டு மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்கு மத்தேயு நல்ல உதாரணம். எனவே தான், தன் நண்பர்களையும், விருந்தினர்களையும் அழைத்து இயேசுவோடு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். தான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை, இயேசு என்கிற விலைமதிப்பில்லாத செல்வத்தை தன்னுடைய தோழர்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களது வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

பெற்ற மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வது கிறிஸ்தவத்தின் தலையாய பண்புகளில் ஒன்று. உயிர்த்த இயேசுவைக்கண்ட சீடர்களின் வாழ்வும் இதை மையமாக வைத்தே இருந்தது. தாங்கள் அனுபவித்த இயேசுவை, நற்செய்தியின் மகத்துவத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சீடர்கள், எவ்வளவோ துன்பங்களைத்தாங்கிக்கொண்டு ஆண்டவரின் நற்செய்தியை உலகமெங்கிலும் அறிவித்தனர். நாமும் வாழ்வில் நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களையும் சென்றடையும் வண்ணம் வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

பாவிகளையே அழைக்க வந்தவர்

இன்றைய நற்செய்தி வாசகம் நமது பாவ நிலையையும், இறைவனின் இரக்கத்தையும் நன்கு பறைசாற்றுகிறது. "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்னும் இயேசுவின் அமுத மொழிகளை இன்று சிந்திப்போம்.

நம்மில் பலருக்கு ஒப்புரவு அருள்சாதனத்தில் ஈடுபாடு குறைவதற்கான காரணம் "எத்தனை முறை பாவ அறிக்கை செய்தாலும், மீண்டும் மீண்டும் அதே பாவங்களைத்தானே செய்கிறோம்" என்னும் விரக்தி மனநிலைதான். மனிதப் பார்வையில் இந்த வாதம் நியாயமாகத் தோன்றினாலும், இறையியல் பார்வையில் அதில் ஒரு குறை இருக்கின்றது.

இறைவன் "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே" அழைக்கின்றார், தேடுகின்றார். எனவே, பாவ அறிக்கை செய்வதன் வழியாக நாம் "பாவிகள்" என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மேலும், இறைவனின் இரக்கத்தை, மன்னிப்பை அறிக்கையிடுகிறோம். எனவே, ஒப்புரவு அருள்சாதனம் ஒரு மன்னிப்பின் வழிபாடு மட்டுமல்ல, ஒரு விசுவாச மேடை, ஒரு இறைபுகழ்ச்சித் தளம். அதை மறவாமல் பாவ அறிக்கை செய்ய முன் வருவோம். நம்மையே தாழ்த்திக் கொள்வோம். கடவுள் நம்மை உயர்த்துவார்.

மன்றாடுவோம்: பாவிகளைத் தேடிவந்த ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமுன் நாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். உம்மிடம் மன்னிப்பு கோருவதன் மூலம் உமது இரக்கத்தை அறிக்கையிடுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------------------

இணையதள உறவுகளே

மத்தேயுவின் வீட்டில் விருந்து உண்ட இயேசுவிடம்"வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று மறைநூல் அறிஞர்கள் மறைமுக கேள்வி ஒன்றை எழுப்பினர். "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்ற இயேசுவின் பதில், மத்தேயு ஒரு நொயாளி, பாவி என்பதை உணர்த்துகிறது.

இருக்கலாம். மத்தேயுவிடம் உயர்ந்த பதவி இருந்தது. கை நிறையவும் பை நிறையவும் பணம் இருந்தது. ஆனாலும் மனிதனிடம் நிம்மதி இல்லை. பணமும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ள இடத்தில் நிம்மதி இருக்காது. அவர்களுக்கு வாழ்க்கை இருக்காது. அவர்கள் ஒரு நோயாளி.

நோயாளியாய் இருப்பது குற்றமல்ல. மருந்தும் மாத்திரையும் மருத்துவரும் கிடைத்தும் நோயிலிருந்து விடைபெற மனமில்லாம், முயற்சி செய்யாமல் இருப்பது மாபெரும் குற்றம். அவன் ஒரு சாதாரண நோயாளி அல்ல. கைவிடப்பட்ட நோயாளி. மத்தேயு அப்படி அல்ல. நல்ல மருத்துவராம் இயேசுவை கண்டவுடன் "அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றி சென்றார்". இயேசு நல்ல மருத்துவர். நம் வாழ்வின் நோய்களை நீக்குவார்.

-ஜோசப் லீயோன்

-------------------------

அனைத்தையும் விட்டுவிட்டு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இத்தவக்காலத்தின் தொடக்க நாள்களில் இருக்கும் நாம், இழப்பு, ஒறுத்தல், துறப்பு என்பன பற்றிச் சிந்திக்க தொடர்ந்து இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், லேவியை இயேசு அழைத்தபோது, “அவர் அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்” என்று வாசிக்கிறோம். லேவியின் தியாகம் பெரிது, போற்றுதற்குரியது. வசதிகளும், செல்வமும் நிறைந்த வாழ்வை விட்டுவிட்டு, இயேசுவைப் பின் செல்வது என்பது மிகப் பெரியதொரு அறைகூவல். லேவி அதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார். அந்த இழப்பைக் கூடப் பெரிதாக எண்ணி, இயேசுவை அழைத்து, விருந்து வைத்துக் கொண்டாடினார். காரணம், லேவி ஒரு ஞானத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார். செல்வம் அனைத்தையும் இழந்தாலும், இயேசு என்னும் மாபெரும் செல்வத்தை அவர் பெற்றுக்கொண்டார். கிறிஸ்துவே ஒப்பற்ற செல்வம், அவர் முன்பு மற்ற அனைத்தும் குப்பை என்னும் மனநிலை கொண்டிருந்தார். எனவே, மகிழ்ச்சியுடன் தனது அழைப்பைக் கொண்டாடினார்.

நம் வாழ்வின் செல்வம் எது? உலக செல்வமா, இன்பமா? அல்லது இயேசுவா? லேவியைப் போல அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவை ஏற்றுக்கொள்வோம். நிறைவாழ்வின் விருந்தில் பங்குபெறுவோம்.

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்ற லேவியை மனமகிழ்வால் நிரப்பினீரே. உமக்கு நன்றி. நாங்களும் நீரெ எங்கள் ஒப்பற்ற செல்வம் என்பதை உணரும் ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து
இயேசுவின் சீடரிடம், 'வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து
நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?' என்று கேட்டனர்'' (லூக்கா 5:30)

சிந்தனை
-- பிறரிடமிருந்து தம்மைப் பிரித்துப் பார்த்து, தாம் அவர்களைவிட மேலானவர்கள் என நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வதும் அவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் எல்லாருக்கும் வருகின்ற சோதனைதான். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இத்தகைய மனநிலையோடு செயல்பட்டதை நற்செய்தி நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. உண்பதும் குடிப்பதும் தனியே நிகழ்கின்ற செயல்கள் அல்ல, மாறாக, மக்கள் ஒன்றுசேர்ந்து, நட்புறவில் இணைந்து செயல்படுகின்ற நல்ல தருணங்கள் அவை. எனவே, கூடி இருந்து உணவு அருந்துவதை உயர்வாக எண்ணினர் யூத மக்கள். ஆனால் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்கள் அன்றைய சமுதாயத்தால் இழிவாகக் கருதப்பட்டவர்கள். ''வரிதண்டுவோரும் பாவிகளும்'' மக்களால் வெறுக்கப்பட்டனர். இயேசு அவர்களோடு அமர்ந்து, உரையாடுகிறார்; உணவு அருந்துகிறார். இதைக் கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடமும் அவர்களுடைய சீடர்களிடமும் குறைகாண்கின்றார்கள்.

-- இயேசு அப்போது ஒரு பழமொழியை மேற்கோள் காட்டிப் போதிக்கின்றார்: ''நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை'' (லூக் 5:32). உடல் நலமோ உள நலமோ குன்றிய நிலையில் நாம் மருத்துவரை நாடுகிறோம். தமக்கு யாதொரு நோயுமே இல்லை என நினைத்துக் கொள்வோர் ஒருநாளும் நோய்தீர்க்கும் வழியைத் தேட மாட்டார்கள். ஆனால் நலம் குன்றிய நிலையில் நாம் மருத்துவ உதவி பெற்றால் மீண்டும் நலம் பெறுகின்ற வாய்ப்பு உண்டு. சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களோடு இயேசு உரையாடி உறவாடினார் என்றால் நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்படுகிறோம். ஒருவிதத்தில் நாம் ''மன்னிப்புப் பெற்ற பாவிகள்'' எனலாம். மன்னிப்பு என்னும் கொடையைக் கடவுளிடமிருந்து பெற்று உணர்ந்தவர்கள் பிறரையும் மன்னித்து ஏற்கத் தயங்கமாட்டார்கள்.

மன்றாட்டு
இறைவா, உம்மை நாடி வருவோரை நீர் அன்புடன் ஏற்பதுபோல நாங்களும் செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

''இயேசு '...நேர்மையாளர்களை அல்ல,
பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்' என்றார்'' (லூக்கா 5:32)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பல இடங்களில் இயேசு தம்முடைய பணியின் நோக்கம் என்பதை எடுத்துக் கூறுகிறார். மக்களுக்குத் தெரியாத ஒரு மர்மமான போதனையை வழங்க அவர் வரவில்லை. மாறாக, யூத சமய மரபில் பிறந்து வளர்ந்த அவர் அச்சமயத்தின் வழியாக ஏற்கெனவே மக்களிடையே நடைமுறையில் இருந்த கடவுள் கொள்கையை அடிப்படையில் ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் இயேசு யூத சமயத்தை ஆழ்ந்த விதத்தில் சீர்திருத்தியும் அமைத்தார். தொடக்க காலத் திருச்சபையில் இயேசுவைப் பற்றி எழுந்த கேள்விகளில் முக்கியமான ஒன்று இதுதான்: இயேசு ஒரு புரட்சியாளரா, சீர்திருத்தவாதியா? இதற்கு நற்செய்தி வழங்குகின்ற பதில்: இயேசு சீர்திருத்தவாதி மட்டுமல்ல, அவர் ஒரு புரட்சியாளராக வந்தார். இதன் பொருள் என்ன?

-- இயேசு நேர்மையாளருக்கும் பாவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். நேர்மையாளர் என்போர் கடவுளோடு தாங்கள் நல்லுறவு கொண்டிருப்பதாகக் கருதுவோர்; அவர்களது வாழ்க்கை நேரியதாக இருப்பதால் அதில் யாதொரு மாற்றமும் செய்யவேண்டியதில்லை என்பது அவர்கள் கருத்து. ஆனால் பாவிகள் எனத் தங்களைக் கருதுவோர் தம் வாழ்வில் ஏதோ கோணல் விழுந்துவிட்டது என்பதை உள்ளத்தில் உணர்கின்றனர். தம் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமக்கு ஒருநாளும் நிறைவு வராது என்பதை அவர்கள் அறிகிறார்கள். எனவே, மனம் மாற வேண்டும், தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பது பாவிகளின் எண்ணமாக எழும். இவ்வாறு பாவிகளுக்கு அவர்களது வாழ்க்கையின் சீரற்ற நிலையைச் சுட்டிக்காட்ட இயேசு வந்தார். உண்மையிலே கடவுளின் முன்னிலையில் எல்லா மனிதருமே பாவிகள்தாம். எந்த மனிதரும் தம் வாழ்க்கை கடவுளுக்கு முற்றிலும் உகந்த விதத்தில் அமைந்துள்ளது என உரிமை பாராட்ட இயலாது. கடவுளிடமிருந்து பிரிந்த நிலையால் ஏற்படுகின்ற முறைகேட்டைச் சீர்திருத்த வேண்டும் என்னும் ஆவல் எழும்போது நாம் மனம் மாற வேண்டும், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதை நன்றாகவே உணர்வோம். இந்த உணர்வை நம்மில் எழுப்பவும், நாம் பெற்ற அறிவின் அடிப்படையில் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் நமக்குத் தூண்டுதல் தர இயேசு வந்தார். அவருடைய சாவு, உயிர்த்தெழுதல் வழியாக நாம் புதுப்பிறப்புகள் ஆகிட அருள் பெறுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உள்ளத்தின் ஆழத்தில் நாங்கள் மாற்றம் பெற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூயஅp;ற்றுபோலும் இருப்பாய்." ஏசாயா 58: 9-11 நம் ஆண்டவர் இயேசுவின் "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர்" என்னும் வார்த்தைக்கு அருமையான விளக்கம்.

குற்றம் சாட்டி, குறை சொல்லி வாழும் பரிசேயத்தனத்தை விட்டு விட்டு, நிறைவைக்காணும் முயற்சியிலும், பழம்பெருமை பாடி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமாதிகட்டுவதைத் தவிர்த்து, சமபந்தியில் உறவை வளர்க்கும் முயற்சியிலும் இறங்குவோம்.

மத்தேயு ஒரு நோயாளி. அவர் அதை அறிவார். எனவேதான் இயேசு அழைத்ததும் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். அனைவருக்கும் விருந்தும் ஏற்பாடு செய்தார். ஆனால், தான் ஒரு நோயுற்றவன் என்பதை அறியாத பெருங் கூட்டம் வீண் சவடால் பேசுவது இயேசுவின் மனதைப் பெரிதும் அழுத்தியதைப் பார்க்கிறோம். "நோயுற்றவர்க்கே மருத்துவர்" என்று சொல்லி அவர்களையும் குணம்பெற அழைக்கிறார்.

மத்தேயுவாக நாம் இருந்தால், ஏசாயா இறைவாக்கினரின் ஆசீர் குறைவின்றி நமக்கு கிடைக்கும். பரிசேயப்பண்பு நம்மில் இருந்தால் மருத்துவரை அணுக சரியான தருணம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: