• அப்போஸ்தலர்களான புனித சீமோன், யூதா பெருவிழா

    முதல் வாசகம்

    திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

    சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

    இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

    பதிலுரைப் பாடல்
    திபா 19: 1-2. 3-4
    பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

    1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
    2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
    ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

    3 அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
    4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி
    உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி

    நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
    அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

     

    லூக்கா 06:12-19

    தூய சீமோன் மற்றும் யூதா அப்போஸ்தலர்கள் பெருவிழா

    லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

    அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

    இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

    -------------------------

    திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4
    ”சொல்லுமில்லை, பேச்சுமில்லை”

    இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை.

    திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன.

    நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய வாழ்வை பாராட்டிப்பேசட்டும். நாம் நம்மைப் புகழாமல், நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்களிடமிருந்து நமக்கு பாராட்டை பெற்றுத்தரட்டும்.
    - அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
    --------------------------------------------------------

    இறைவனின் பிரசன்னம்

    இயேசு செபிப்பதற்காக மலைக்குச் சென்றார் என்று நற்செய்தியாளர் சொல்கிறார். மலை என்பது விவிலியத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தை. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பாலஸ்தீனமும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் மலைப்பாங்கான இடங்களைக் கொண்டிருப்பதால், விவிலியத்தில் ஏறக்குறைய 500 க்கும் மேலாக, “மலை“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆன்மீகரீதியாக பார்க்கிறபோதும், மலை உயரமாக இருப்பதனால், அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தையாகவும் இருக்கிறது. மலை என்பது உயரமான இடம். கடவுள் விண்ணுலகில் அதாவது மேலே வானத்தில் இருக்கிறார் என்பதால், மலை என்பது விண்ணகத்தின்  அருகாமையைக் (கடவுளின் அருகாமை) குறிக்கிற சொல்லாக இருக்கிறது. ஆக, மலை கடவுளின் பிரசன்னத்தை அதிகமாக, நெருக்கமாக உணரக்கூடிய இடம் என்பதுதான், இங்கே நாம் அறிய வேண்டிய ஒன்று.

    பழைய ஏற்பாட்லே சீனாய் மற்றும் சீயோன் மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீனாய் மலையில் தான், மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்றார். சீயோன் மலையில் தான் எருசலேம் ஆலயம் அமைந்திருக்கிற இடம். மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள், இயேசு தன்னுடைய சீடர்களைத் தேர்ந்தெடுக்கிற இடமாக மலையைக் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு பணியையும் நாம் கடவுளின் பிரசன்னத்தோடு, அவருடைய ஆசீர்வாதத்தோடு தொடங்க வேண்டும் என்பதுதான், இதனுடைய பொருளாக இருக்கிறது. இயேசு தன்னுடைய பணிவாழ்வின் எல்லா செயல்களுக்கும், கடவுளின் ஆசீரையும் அருளையும் தேடினார். அந்த தேடல், நமக்கும் இருக்க வேண்டும்.

    நமது வாழ்க்கையில் நாம் மலைகளை நோக்கி, தேடிச் செல்ல வேண்டியதில்லை. நமக்கு ஆலயங்கள் இருக்கிறது. அனுதினமும் ஒருமுறையாவது ஆண்டவரின் பிரசன்னத்தில் அமர்ந்து செபிப்பதற்கு இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை ஆலயத்தில் தான் வழிபட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட, ஆண்டவரின் பிரசன்னத்தில் அதிக நேரத்தைச் செலவிட முயல்வோம்.

    1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

    ----------------------------------------------------

    கடவுளின் அன்பில் வளர…

    இன்றைய நற்செய்தியில், இயேசு தனது சீடர்களுள், பன்னிரெண்டுபேரை, திருத்தூதர்களாக, தேர்ந்தெடுக்கப்படுகிற நிகழ்ச்சியை வாசிக்கிறோம். இயேசு எதற்காகத் தேர்ந்தெடுக்கிறார்? அதிலும், குறிப்பாக மிகப்பெரிய சீடர்கள் குழுமத்திலிருந்து, குறிப்பிட்ட நபர்களை ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்? அவர் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கம் என்ன? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் நமக்குள்ளாக எழும்.

    இயேசு தன்னுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்தன் முக்கிய நோக்கமாகச் சொல்லப்படுவது, அவரோடு இருப்பதற்காக. மாற்கு 3: 14 ல், நாம் பார்க்கிறோம்: ”தம்மோடு இருக்க” என்பது, அங்கே குறிப்பிடப்படுகிறது. இயேசு, கடவுளின் மகனாக இருக்கக்கூடியவர், எதற்காக, மனிதர்கள் அவரோடு இருப்பதற்கு ஆசைப்படுகிறார்? அதுதான் கடவுளின் அன்பு. நமக்கு கடவுள் பலவற்றிற்கு தேவைப்படுகிறார். கடவுளுக்கு எதற்கு மனிதர்கள்? ஆனால், கடவுள் மனிதர்களை அளவுகடந்து அன்பு செய்கிறார். அவர்களின் இயல்புகளை அறிந்தும் அன்பு செய்கிறார். மனிதன் நன்றி இல்லாதவனாக இருக்கிறான். கடவுளைத் தேடாதவனாக இருக்கிறான். எதற்கும், ஏன் தனது தவறுகளுக்கும் கடவுளைக் காரணமாகச் சொல்கிறவனாக இருக்கிறான். அப்படியிருந்தும் கடவுள், மனிதனோடு, உறவில் வாழ ஆசைப்படுகிறார். அதனுடைய ஓர் அடையாளமாக, அவர் சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

    நம்மோடு உறவில் வாழ, விரும்புகிற, கடவுளின் அன்பை நாம் புரிந்து கொள்கிறேனா? அவரோடு உறவில் வளர, நான் முயற்சி எடுக்கிறேனா? கடவுளின் அன்பை நமது வாழ்வில் அதிகமாக உணர, அனுபவிக்க, தொடர்ந்து முயற்சி எடுப்போம்.

    • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

    ----------------------------------------------------------

    இயேசுவோடு இருக்க…..

    இயேசு 12 அப்போஸ்தலர்களை தோ்ந்தெடுத்த நிகழ்வு இன்றைக்கு தரப்பட்டிருக்கிறது. எதற்காக இயேசு இந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கான காரணம் மாற்கு நற்செய்தி 3: 14 – 15 ல் தரப்பட்டுள்ளது. 1. தம்மோடு இருக்க 2. நற்செய்தியைப்பறைசாற்ற அனுப்பப்பட 3. பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க. இவற்றைப்பற்றி இங்கே சிந்திப்போம்.

    1. தம்மோடு இருப்பது என்பது அவர்களை தன்னுடைய நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதைக்குறிக்கிறது. நட்பிற்கு இலக்கணமாக இயேசு இருக்கிறார். எனவேதான், நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு ஒன்றுமில்லை என்கிறார். தம்மோடு இருக்கிற அவர்களை தயார்படுத்துகிறார். தன்னைப்பற்றி அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களோடு உறவாடுகிறார். உரையாடுகிறார். அவர்களை தனது பணிக்காகப் பக்குவப்படுத்துகிறார். 2. தனக்குப்பிறகு நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் தூதுவர்களாக இயேசு அவர்களைப்பார்க்கிறார். இயேசுவைப்பற்றி பேசும் ஊடகங்களாக சீடர்கள் அனுப்பப்படுகிறார்கள். தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை, அனுபவித்தவற்றை அவர்கள் தங்களின் நற்செய்தியின் சாராம்சமாகப் போதிக்கின்றனர். 3. சாத்தானின் அரசிற்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டதை இது நமக்கு உணர்த்துகிறது. இந்த உலகம் சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இறையரசைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டதை இது குறிக்கிறது.

    திருமுழுக்கு பெற்றிருக்கிற நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். அனைவருமே அவருடைய சீடர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரையும் தனது நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவருட்சாதனங்கள் வழியாக, திருப்பலி வழியாக நம்மோடு இருந்து நம்மை பக்குவப்படுத்துகிறார். நாம் அனுபவித்தவற்றை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதேபோல சமூக தீமைக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கான செயல்பாடு நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.

    • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

    --------------------------------------------------------

    திருத்தூதர்கள் சீமோனும், யூதாவும் !

    இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

    பன்னிருவரில் இருவரான சீமோன், யூதா என்னும் இரண்டு திருத்தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தூதர் என அவரால் பெயரிடப்படும் பேறு பெற்றவர்கள் இந்த இருவரும். இது ஒன்றே அவர்களின் பெருமைக்குப் போதுமானது. இந்தத் தேர்வைச் செய்வதற்கு முன்பாக இயேசு மலைக்குச் சென்று இரவெல்லாம் வேண்டுதலில் கழித்தார் என்று லூக்கா எழுதியுள்ளார். இறைவேண்டுதலின் பலனாக கிடைக்கப் பெற்றவர்கள் இந்தத் திருத்தூதர்கள்.

    நம்மையும் இயேசு தம் தூதர்களாக அழைக்கிறார், பெயரிடுகிறார். அவரோடு வாழவும், அவரது செய்தியைப் பரப்பிடும் தூதர்களாக வாழ்வதும் நமக்குக் கிடைத்த பேறுகள். அதற்காக நன்றி கூறி, பெருமிதம் கொள்வோம். தூதர்களாய் வாழ்வோம்.

    மன்றாடுவோம்: திருத்தூதர்களின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களையும் உம் திருத்தூதர்களாக அழைத்திருப்பதற்காக உமக்கு நன்றி. எங்கள் வாழ்விலும், பணியிலும் நாங்கள் உம் தூதர்களாக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

    -- அருள்தந்தை குமார்ராஜா

    வழக்கு மன்றம் செல்லாதீர் !

    இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

    இன்றைய முதல் வாசகத்தில் நடைமுறைக்கொத்த ஆலோசனை ஒன்றை வழங்குகிறார் பவுலடியார். எந்த சூழ்நிலையிலும் ஒருவர் ஒருவருடைய சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்காக வழக்கு மன்றங்களை நாடாதீர்கள். வழக்கு மன்றம் செல்வதால், அன்றைய நாள்களில் மட்டுமல்ல, இன்றும்கூட ஏராளமான சிக்கல்கள் வந்து சேர்கின்றன.

    நம்மிடையே உள்ள பிணக்குகளை, கருத்து வேறுபாடுகளை நாமே களைந்துகொள்ளாமல், வழக்கு மன்றம் செல்வதால், ஏற்படும் தீமைகளை எண்ணிப்பார்க்க அழைக்கிறார் பவுலடியார்:

    1. ஏராளமான பணம் வீணாக செலவாகிறது. வழக்கறிஞர்களுக்கும், மன்றத்திற்கும் செலவழிக்கின்ற தொகையைக் கொண்டு, எதிராளியுடன் சமாதானம் செய்துவிடலாம்.
    2. வழக்கு மன்றம் செல்வது ஒரு எதிர்சாட்சி. தீமையைப் பொறுத்துக்கொள்வதன் வழியாக நாம் இறைசாட்சியாக வாழும் வாய்ப்பை இழக்கிறோம்.
    3. “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் வழக்குத் தொடர்வதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும்.â€?

    எனவே, ஏன் செல்ல வேண்டும் வழக்கு மன்றம்? ஞானம் நிறைந்த வகையில் நாமே நமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வோம்.

    மன்றாடுவோம்: நல்ல நடுவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைமக்களிடையே எழும் கருத்து வேற்றுமைகளை நாங்கள் வழக்கு மன்றம் சென்று தீர்க்காமல், நாங்களே நியாயமான வகையில் தீர்த்துக்கொள்ளும் ஞானத்தை எங்களுக்குத்; தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

    அருள்தந்தை குமார்ராஜா

    ---------------------------------

    ''விடிந்ததும் இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து
    அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்'' (லூக்கா 6:13)

    அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

    -- ''பன்னிரு திருத்தூதர்'' இயேசுவோடு மிக நெருக்கமான உறவில் ஒன்றித்திருந்த சீடர்கள் ஆவர். இப்பன்னிருவரும் ''அப்போஸ்தலர்'' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தொலோஸ்'' என்றால் ''அனுப்பப்பட்டவர்'', ''தூதர்'' என்பது பொருள். இவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதை நற்செய்தி ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதாவது, ''தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரையும் நியமித்தார்'' (மாற் 3:14-15). லூக்காவும் மாற்கும் இச்செய்தியை விவரிக்கும்போது ''இயேசு ஒரு மலைக்குப் போனார்'' என்றும், அப்போது பன்னிருவரையும் திருத்தூதர்களாக ஏற்படுத்தினார் எனவும் குறிப்பிடுகின்றனர் (மாற் 3:13; லூக் 6:12). அது மட்டுமன்று, இயேசு ''மலைக்குப் போய் அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' எனவும் லூக்கா எழுதுகிறார் (லூக் 13:12). ''மலை'' என்னும் உருவகம் விவிலிய வழக்கில் சிறப்பான பொருளுடைத்தது. எடுத்துக்காட்டாக, எரிந்துகொண்டிருந்த முட்புதரின் நடுவே கடவுளின் பிரசன்னத்தை மோசே உணர்ந்து அனுபவித்தது ஓரேபு என்னும் மலையில் (விப 3:1-6); இஸ்ரயேல் மக்களோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொண்டது சீனாய் என்னும் ''மலை''யில் நிகழ்ந்தது; அதே மலையில்தான் மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தார் (விப 19:20-25; 20:1-21). மேலும் இயேசு மலைமீது உருமாற்றமடைந்த போதும் (மத் 17:1-9) ஒலிவ மலையில் துன்புற்ற போதும் தம்மோடு சில திருத்தூதர்களை அழைத்துச் சென்றிருந்தார் (லூக் 22-39:42). ஆக, ''மலை'' என்னும் உருவகத்தின் வழியாக நற்செய்தி ஆசிரியர்கள் உணர்த்துகின்ற கருத்து இது: இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாக ஏற்படுத்திய நிகழ்ச்சி கடவுளின் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. கடவுளின் உடனிருப்பு அந்த நிகழ்ச்சியில் தோன்றுகிறது. முற்காலத்தில் பன்னிரு குலத்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு அடித்தளம் போல அமைந்தார்கள். அதுபோல, புதிய உடன்படிக்கையின்போது பன்னிரு திருத்தூதர்கள் இயேசு உருவாக்குகின்ற புதிய சமூகத்திற்குத் அடித்தளம் போல அமைவார்கள்.

    -- இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் இயேசு தாம் தேர்ந்துகொண்ட பன்னிருவருக்கும் ''திருத்தூதர் என்று பெயரிட்டார்'' என்னும் செய்தியாகும். மண்ணையும் விண்ணையும் படைத்த கடவுள் படைப்புப் பொருள்களுக்குப் ''பெயரிட்டார்'' என்னும் செய்தி தொடக்க நூலில் உண்டு (தொநூ 1:3-10). அவை அனைத்தும் அவருடைய உடைமைகள். விலங்குகளுக்குப் ''பெயரிடும்'' பொறுப்பைக் கடவுள் ஆதாமுக்குக் கொடுத்த போது முதல் மனிதர்கள் கடவுளின் வல்லமையில் பங்கேற்று, படைப்புப் பொருள்களை ஆண்டு நடத்தும் பொறுப்பையும் பெற்றார்கள் (தொநூ 2:20). அதுபோலவே, இயேசு பன்னிருவருக்குத் ''திருத்தூதர் என்று பெயரிட்ட'' நிகழ்ச்சியிலிருந்து அவர்களுக்குத் தம் அதிகாரத்தையும் ஆற்றலையும் பகிர்ந்தளிக்கின்றார் என நாம் அறிகிறோம். திருச்சபையின் பண்புகளில் ஒன்று அதன் ''திருத்தூது இயல்பு'' ஆகும். அதாவது, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களை இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க அழைக்கும் பொறுப்பைப் பன்னிரு திருத்தூதர்களும் பெற்றது போல, கிறிஸ்துவின் பெயரால் கூடிவருகின்ற திருச்சபையும் இயேசு பற்றிய ''தூது அறிவிக்க'' அனுப்பப்பட்டுள்ளது. நாம் நற்செய்தியின் ''தூதுவர்களாக'' முழு மூச்சுடன் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

    மன்றாட்டு
    இறைவா, உம் அன்பின் செய்தியை உலகுக்கு அறிவிக்க எங்களுக்கு ஆற்றல் அளித்தருளும்.

    --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

    --------------------------------

    ''இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' (லூக்கா 6:12)

    அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

    -- இயேசு இறைவேண்டலில் பல மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார். இதற்கான காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில் நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார். கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும் அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார்.

    -- நம் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்போதும் நாம் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் கடவுளோடு நெருங்கிய உறவுப் பிணைப்பால் இணைந்திருக்க வேண்டும். இது இறைவேண்டல் வழியாக நிகழ்கிறது. கடவுளின் உடனிருப்பு நம்மோடு உள்ளது என்னும் உணர்வில் நாம் தோய்ந்திருப்பதுதான் இறைவேண்டலுக்கு அடிப்படை. இது ஒருவித தியான மன நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும். கடவுளின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடியிலும் உணரும்போது அவருடைய பார்வையிலிருந்து நாம் அகன்றுபோதல் இயலாது. அவரோடு இணைந்து நாம் செயல்படுவோம். நம்மில் இறைவேண்டலும் பணிவாழ்வும் பிணைந்திருக்கும்.

    மன்றாட்டு
    இறைவா, உம் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவதில் நிலைத்திருக்க அருள்தாரும்.

    --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

    __________________________________

    தி

    அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

     

     

    --அருட்திரு ஜோசப் லீயோன்