முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4-11


என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம். ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11. 13

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்!
உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக!
நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். -பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே!
உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்;
உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்;
எங்கள் பாவங்களை மன்னித்தருளும். -பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக!
கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. -பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!
தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

 

லூக்கா 6:36-38

தவக்காலம் -இரண்டாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 6: 36 – 38
இரக்கம்

நாம் வாழும் இந்த சமுதாயத்திலே ஒவ்வொன்றும் அதனதன் பாணியில் இரக்கத்தைப் பொழிகின்றது. மேகத்தின் இரக்கம் மழையைப் பொழியச் செய்கின்றது. கடல் தாயின் இரக்கம் நல்ல வளங்களை கொடுக்கின்றது. பெண்ணின் இரக்கம் குழந்தையை கொடுக்கின்றது. இப்படி எல்லாமே இரக்கத்தைப் பொழிகின்றது.

ஆனால் கடவுளின் இரக்கம் என்ன அல்லது எதனைக் கொடுக்கின்றது என்பதனைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இரண்டாவது பகுதியும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியும் நமக்கு தருகின்றது. அது தான் மன்னிப்பு. இதனை வெறும் வார்த்தையோடு நின்று விடாமல், தன் வாழ்க்கையின் வழியாக இறைவன் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார். படைவீரர்கள் தன் உயிரை வாங்கிய போதும் கூட அவர்கள் மீது மன்னிப்பு என்ற பண்பை இரக்கமாக பொழிந்தார்.

இன்று நாம் அத்தகைய பண்போடு வாழ்கின்றோமா? மன்னிப்பு என்ற பண்பை இரக்கமாய் பொழிகின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

லூக் 6 : 36 -38
அவருக்குரிய ‘ஒன்று’

இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார்.

பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு பெறுவோமாக.” (இரசம் அவரின் தெய்வீகக்குணத்தையும் தண்ணீர் நமது மனித இயல்பையும் குறிக்கின்றது.) ஆக மொத்தமாக திருப்பலியும் அனைத்து ஆன்மீக முயற்சியின் நோக்கமும் நாம் அவரது இறையியல்பில் பங்குபெறுவதைச் சார்ந்தே இருக்கின்றது.

எவ்வாறு இயேசு பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதரானாரோ, அதனைப் போல நாமும் ‘ஒன்றை’ மட்டும் தவிர மற்ற அனைத்திலும் இறைவனின் இயல்பான மன்னிப்பு, இரக்கம், கனிவு, தாழ்ச்சி, அன்பு என்று அனைத்திலும் அவரைப்போல மாற முயலவேண்டும். அது என்ன அந்த ‘ஒன்று’. கடவுளின் இயல்புகள் அனைத்தையும் நாம் நமதாக்குவதில் என்ன பிரச்சனை என்ற கேள்வி எழலாம். அந்த ‘ஒன்று’ மட்டும் கடவுளுக்குரியது. அதனையே இன்றைய நற்செய்தி கூறுகின்றது. “பிறரைத் தீhப்பிடாதீர்கள்” இதனை உணர்ந்தவர்களாய் பிறரை தீர்;ப்பிடுவதை அவரிடம் விட்டுவிட்டு மற்ற அனைத்திலும் அவராகவே மாறுவோம் இத்தவக்காலத்தில்.

- திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 79: 8, 9, 11, 13
”ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்”

பாபிலோனை ஆண்ட நெபுகத்நேசர் யெருசலேமையும், ஆலயத்தையும் தரைமட்டமாக்கினார். யூதர்களின் அடையாளம் அழிந்துபோனதாக, யூதர்கள் உணர்ந்தனர். எரேமியாவின் புலம்பல் ஆகமத்தை ஒட்டிய வசனங்கள், இதிலும் காணப்படுகிறது. மொத்தத்தில், இந்த திருப்பாடல் அழுகை, புலம்பல், வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாடலாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற தண்டனைகளுக்கு என்ன காரணம்? என்பதை சிந்தித்ததின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல்.

தங்களுக்கு நேர்ந்திருக்கிற இவ்வளவு கொடுமையான சூழ்நிலைகளுக்கு யார் காரணம்? என்பதை ஒவ்வொருவருமே, துன்ப காலத்தில் சிந்தித்து பார்ப்பது இயல்பு. அதுபோலத்தான், வளமையாக, செழிப்பாக, மகிழ்வாக வாழ்ந்த நமக்கு, திடீரென்று ஏன் இந்த துன்பம்? என்கிற கேள்விக்கான காரணத்தை, திருப்பாடல் ஆசிரியர் காண முயல்கிறார். தாங்கள் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாக வாழவில்லை என்றாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்ற அளவுக்கு, தவறு செய்யவில்லை என்பது, ஆசிரியரின் திடமான நம்பிக்கை. ஒருவேளை, தங்களுடைய இந்த துன்பத்திற்கு முன்னோர் செய்த பாவம் தான் காரணமோ? என்றும், அவர் எண்ணுகிறார். அப்படி இருந்தால், கடவுள் தன்னுடைய மாட்சிமையின் பொருட்டு, அதாவது கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிற மக்களுக்கு இப்படியொரு இழிநிலை வந்தால், அவர்களை கடவுளைத்தான் பரிகசிப்பார்கள் என்பதற்காகவாவது, கடவுள் மனமிரங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

நம் வாழ்விலும், துன்பங்கள் நமக்கு வருகிறபோது, அதற்கான காரணங்களை நாம் ஆராய முற்படுகிறோம். நமது வாழ்வை நாம் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்கிற பாவத்தினால், நம்முடைய சந்ததிகள் கூட பாதிக்கப்படலாம். எனவே, நமக்காக நாம் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்றாலும், நம்முடைய தலைமுறையினருக்காகவாவது சிறந்த வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

எப்படி வாழ வேண்டும்?

இயேசு இன்றைய நற்செய்தியில் மனிதர்களை கடவுளோடு ஒப்பீடு செய்கிறார். நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு கடவுளின் பண்புகளை நாம் கொண்டிருக்க வேண்டும், என்று பதில் சொல்கிறார். கடவுளைப்போல பண்புகளை நாம் கொண்டிருக்க முடியுமா? கடவுளின் இயல்புகள் நமக்கு இருக்குமா? கடவுளோடு நமது வாழ்வை ஒப்பிடுவது சரியாக இருக்குமா? இந்த கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும்.

மனிதர்களாகிய நாம் நாமாக ஒரு சில இயல்புகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நல்லது செய்கிறவர்களுக்கு, நல்லது செய்வது மற்றும் கெட்டது செய்தால், அவர்களுக்கு கெட்டது செய்வது. மனிதக் கண்ணோட்டத்தின்படி பார்த்தால் இது சரியான பார்வையாகத் தோன்றும். ஆனால், அது சரியானது அல்ல. நாம் அனைவருமே கடவுளின் இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் இயல்பு என்ன? கடவுள் நல்லோர் மேலும், கெட்டவர்கள் மேலும் மழைபொழியச்செய்கின்றார். அனைவர் மேலும் இரக்கம் காட்டுகிறார். அந்த இயல்பை நமது வாழ்வாக மாற்ற வேண்டும். நமது வாழ்வைச் சீர்படுத்துவதில் கடவுளை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

நமது வாழ்வில் கடவுளை முன்மாதிரியாகக் கொள்ளாமல், சக மனிதர்களைப் பார்த்து வாழ்வை அமைத்துக்கொள்கிறோம். இது வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. வாழ்வை அதனுடைய இயல்பில் வாழ வேண்டும். அதற்கு கடவுளின் இயல்பைக் கொண்டு வாழ வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாவீர்கள்

இன்றைய நற்செய்தி பகுதி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பகுதியாக, பல கருத்துக்களை உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, லூக்கா நற்செய்தியாளர் இயேசு பல்வேறு இடங்களில் போதித்த கருத்துக்களை, வாழ்வுக்கு தேவையான நெறிமுறைகள் என்ற தலைப்பில் ஒட்டுமொத்தமாக கொடுக்க ஆசைப்பட்டிருக்கலாம். இரண்டாவது, யூதப்போதகர்களின் போதனை வடிவங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அதாவது, பொதுவாக யூதப்போதகர்கள் ஒரே தலைப்பில் பேசினால், மக்களுக்கு ரசனையாக இருக்காது என்பதற்காக, இரண்டு, மூன்று தலைப்புகளில் அவ்வப்போது மாறி, மாறி பல கருத்துக்களை போதிப்பார்கள். அத்தகைய வடிவங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் என்பது இயேசு சொல்கிற முதல் செய்தி. எதற்காக தீர்ப்பிடக்கூடாது? முதலில், தீர்ப்பிடுதல் என்பது கடவுளுடைய பணி, நமது பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்திற்கு படியளக்கிறவர் கடவுள். இந்த உலகத்தின் சொந்தக்காரர் கடவுள். நமக்கு வாழ்வு என்கிற கொடையைக்கொடுத்தவர் கடவுள். எனவே நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுவது நியாயம் அல்ல. ஏனெனில் நாம் தீர்ப்பிட்டால், தேவையில்லாமல் கடவுள் செய்ய வேண்டியச் செயலைச்செய்கிறோம். இரண்டாவது, தீர்ப்பிடுவதற்கான தகுதிக்கும் நாம் ஏற்புடையவர்கள் அல்ல. மனிதர்களாகிய நாம் ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பிடுகிறோம். ஆனால், ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பிடுவது, உண்மையான தீர்ப்பாக இருக்க முடியாது. காரணம், செயலும், உள்ளத்தில் எழும் எண்ணமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் என்பதற்கு சான்று ஏதும் இல்லை. ஒருவன் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் வைத்துக்கொண்டு, வெளியே உலகப்போக்கிற்கு நல்லது செய்வதுபோல நடிக்கலாம். மனிதர்களாகிய நமக்கு ஒருவரின் உள்ளத்தை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் இயலாதது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும். கடவுள் ஒருவரின் செயலை வைத்து மட்டும் எடைபோடுவதில்லை, அவர் உள்ளத்தையும் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவர் ஒருவரை தீர்ப்பிடுகிறார். இதுதான் முழுமையான, நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும். ஒருவேளை நாம் அதைப்பொருட்படுத்தாமல் மற்றவர்களை தீர்ப்பிட்டால், கடவுளின் தீர்ப்புக்கு நாம் உள்ளாக நேரிடும்.

மற்றவர்கள் கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் உதவி செய்யவேண்டுமே தவிர, அவர்களை கண்டனத்திற்கு உள்ளாக்கக்கூடாது. ஏனெனில் என்னைப்போலத்தான் மற்றவர்களும். நான் நிறை, குறைகளோடு வாழ்வதுபோலத்தான் மற்றவர்களும். என்னுடைய குறைகளை மற்றவர்கள் புரிந்துகொண்டு என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிற நான், மற்றவர் குறைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தீர்ப்பிடாமல், அவர் அந்த குறைபாட்டிலிருந்து மீண்டு வர உதவிசெய்வதுதான் சிறந்ததாக பணியாக இருக்கும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

======================

தீர்ப்பளிக்காதீர், கண்டனம் செய்யாதீர்கள்!

இத்தவக் காலத்தில் நாம் செய்யக்கூடிய வாழ்வியல் மாற்றங்களில் ஒன்று சக மனிதர்களைப் பற்றிய நமது மனநிலையில் முகாமையான ஒரு மாற்றம்: "யாரையும் தீர்ப்பளிக்க மாட்டேன், யாரையும் கண்டனம் செய்யமாட்டேன்" என்னும் ஒரு தீர்மானத்தை அனைவரும் பூணலாம்.

பொதுவாக நமது பணியிடங்களில், பொழுதுபோக்குவேளைகளில் அடுத்தவரைப் பற்றிப் பேசுகின்ற பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இன்னும் குறிப்பாக, அவர்களது தனி வாழ்வு, அதில் உள்ள நிறைகுறைகளை விமர்சனப்படுத்திப் பேசும் போக்கும் அதிகமாக இருக்கிறது. இந்த வேளைகளில் நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம், கண்டனம் செய்கிறோம் என்பதையும், அது இறைவார்த்தைக்கு எதிரானது என்பதையும் உணர வேண்டும். "அவரது தலைமை சரியில்லை" என்றோ, "அவருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது" என்றோ, " இந்தப் பணம் எப்படி வந்ததோ தெரியவில்லை" என்றோ நாம் ஆதாரமில்லாமல் பேசுகின்ற பேச்சுகள் அனைத்துமே அவர்கள்மீது நாம் செலுத்துகின்ற தீர்ப்புகளாகவும், கண்டனமாகவும் அமைகின்றன.

இறைவன் ஒருவரே உண்மையை அறிவார். மனித மனங்களின் ஆழத்தை அறிந்தவர் அவரே. வேறு யாருக்கும் தீர்ப்பிடவோ, கண்டனம் செய்யவோ உரிமையில்லை. இதை உணர்ந்து, "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்" என்னும் இயேசுவின் சொற்களை இதயத்தில் ஏற்போம். நமது சொற்கள், மனநிலை குறித்துக் கவனமாயிருப்போம்.

மன்றாடுவோம்: நற்செய்தி அறிவித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இத்தவக்காலத்தில் நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளைக் குறித்துக் கவனமாயிருக்கவும், தீர்ப்பிடாத, கண்டனம் செய்யாத மனநிiலை உடையவர்களாய் வாழவும்; எங்களுக்கு வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

------------------------------------------------------

இணையதள உறவுகளே

இன்றைய இலவசத்தை எதிர்பார்த்து வாழ்கிறது. சிலர் அதைக்கொண்டு மக்களை விலைபேசிவிடுகிறார்கள். ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம். ஒன்று வாங்கினால் இரண்டாவது பாதி விலை.மூன்றாவது இலவசம். ஆடிக்கழிவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் ஆண்டவன் இயேசுவின் இலவசம் சற்று வித்தியாசமானது. அது வியாபாரம் அல்ல. தெய்வீக உறவு. கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசுவின் இலவசத்தை மத்தேயு 7:7 வசனம் இந்த தெய்வீக உறவால் கிடைக்கும் மிகப்பெரும் கொடையை பதிவு செய்துள்ளது.இன்று லூக்கா நற்செய்தியாளர் இன்னும் ஒரு படி மேலே சென்று “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.�?(6:38)

இரண்டு வழியிலும் நமக்கு கொடுக்கப்படும். கேட்டால் ஆண்டவர் தருவார்.ஆனால் கொடுத்தால் நாம் கேட்டதுக்கும் அதிகமாகப் பெறுவோம். என்வே நாம் அதிகமாகப் பெற வேண்டுமானால், கொடுக்க வேண்டும். பிறருக்குக் கொடுக்க வேண்டும். கஷ்டப்படும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுப்போம், அதிகமாகப் பெறுவோம்.

-ஜோசப் லீயோன்

-------------------------

மன்னிப்பு கொடுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்�? என்னும் ஆண்டவரின் சொற்கள் பொருளை, செல்வத்தைக் கொடுப்பதை, பகிர்வதை மட்டும் குறிப்பிடவில்லை. அதற்கு முந்திய வசனங்கள் மன்னிப்பைப் பற்றிப் பேசுவதால், மன்னிப்புக் கொடுப்பதற்கும் பொருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம்

நாம் பிறரை மன்னிக்கும்போது, இறைவன் நம்மை மன்னிக்கின்றார் என்பதை நாம் அறிவோம். இயேசு கற்பித்த மன்றாட்டிலும், இயேசு அவ்வாறு செபிக்க நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். இன்றைய வாசகத்தின் வழியாக மன்னிப்பினால் நாம் ஏராளமான ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம் என்னும் செய்தியை ஆண்டவர் நமக்குத் தருகிறார். நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்கும்போது, பிறரும், இறைவனும் “அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படியாக நன்றாக அளந்து�? ஆசிர்வாதங்களை நம் மடியில் போடுவார்கள். எனவே, இத்தவக்காலத்தில் யாருக்கெல்லாம் நமது மன்னிப்பு தேவைப்படுகிறதோ, அவர்களையெல்லாம் மனமார மன்னிப்போம். அவர்களை ஆசிர்வதிக்க இறைவனிடம் வேண்டும்.

மன்றாடுவோம்: மன்னிப்பில் வள்ளலான இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். “கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்�? என்ற வாக்கின் வழியாக இன்று எங்களை மன்னிக்க அழைக்கிறீர். நன்றி! இந்த அழைப்பிற்கேற்ப, யாருக்கெல்லாம் எங்கள் மன்னிப்பு தேவைப்படுகிறதோ, அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, உம்மிடம் மன்றாடுகிறோம். அவர்களை ஆசிர்வதியும். இதனால், நாங்களும் உம்மிடமிருந்து நிறைய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு, 'மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்' என்றார்'' (லூக்கா 6:37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- லூக்கா நற்செய்தியில் வருகின்ற முக்கியமான கருப்பொருள்களில் ஒன்று ''மன்னிப்பு'' என்பதாகும். குற்றம் புரிந்தவர்களை ஒதுக்கிவைக்காமல் அவர்களோடு மீண்டும் நல்லுறவு ஏற்படுத்துவதற்கு முதல் படியாக மன்னிப்பு அமைகிறது. மன்னிப்பு என்பது அன்பின் ஒரு சிறப்பான வெளிப்பாடு எனலாம். அன்பு என்றால் பிறரின் நலனை நாடுவது என்று பொருள். நமக்கு எதிராகச் செயல்பட்டோரை அன்புசெய்வது நம் நண்பரை அன்புசெய்வதைவிடவும் அதிகக் கடினமானது. ஆனால் இயேசு தம் சீடரிடம் மன்னிப்பின் தேவையைச் சிறப்பான விதத்தில் வலியுறுத்தியுள்ளார். இயேசுவின் போதனைப்படி, மன்னிப்பு வழங்குவது கடவுளின் உயர்ந்த பண்பு. இதையே லூக்கா ''இரக்கம்'' என விளக்குவார். இயேசு, ''உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளர்களாய் இருங்கள்'' (லூக் 6:36) என்று போதித்தார்.

-- கடவுளைப் போல மனிதர் இரக்கம் கொண்டிருப்பது இயலுமா என்றொரு கேள்வி எழலாம். கடவுள் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையவர். மனிதர் எவ்வளவுதான் முயன்றாலும் கடவுளுக்கு நேரான விதத்தில் அன்புகாட்ட அவர்களால் இயலாது. எனினும் மனிதருக்கே உரிய விதத்தில் நிறைவான அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். மன்னிப்பு என்பது கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடை. நாம் பெறுகின்ற கொடையைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது தேவை. எனவே. கடவுள் நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னிக்க முன்வந்தால் அதுவே நாம் கடவுளின் நிறைவை நம் வாழ்வில் அடைந்திட முயல்கின்றோம் என்பதற்கு அடிப்படையாகும்.

மன்றாட்டு
இறைவா, எங்களை மன்னித்து ஏற்கின்ற உம்மைப்போல நாங்களும் மன்னிக்கும் உள்ளம் உடையவர்களாக விளங்கிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இந்த தவக்காலத்தில் அதிகமாக பயன்படுகின்ற ஒரு சில வார்த்தைகள், முக்கியமாக மன்னிப்பு, இரக்கம், நிரபராதி ஆகியவை. அதோடு தொடர்புடையவை குற்றவாளி, தீர்ப்பு, தண்டனை, கண்டனம் என்பன. முதல்பகுதியை விரும்பவோம். இரண்டாம் பகுதியை விரும்பமாட்டோம்.

இம் முதல் பகுதியான மன்னிப்பு, இரக்கம் இவைகளை நாம் நிறைய பெற, இவற்றை நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்பது இயேசுவின் வேண்டுகோள். நம்முடைய மன்னிப்புக்கும் பிறருடைய மன்னிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இயேசு கற்றுத் தந்த செபத்தில் வரும் "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்" என்னும் படிப்பினை உணர்த்துவதும் இதே செய்திதான்.

ஆகவே நாம் பிறருக்கு இரக்கம் காட்ட கற்றுக்கொள்வோம். பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உண்டாக்குவோம். பிறரைத் தீர்ப்பிடாது, கண்டனம் செய்யாது இரக்கமும் மன்னிப்பும் தாராளமாய் வழங்க முன்வருவோம். அப்போது "அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்"(லூக்6:38).

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." இதை மனதில் வைத்து அதற்கு ஏற்ற அளவையை எடுத்துக்கொள்ளுங்கள். என்ன, என்ன அளவை எடுத்து வைத்துள்ளீர்கள். சிட்டிகை அளவா?! அண்டா, குண்டா அளவா?! பெரிதாக பாருங்கள். உங்களுக்கும் பெரிய அளவில் கிடைக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்