முதல் வாசகம்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45:6-8, 18, 21-25

கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே. ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை. அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். "ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு

 

பதிலுரைப் பாடல் திருப்பாடல் 85:8-9, 10-11, 12-13

பல்லவி: வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.-பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.-பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம்நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.-பல்லவி

 

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி :
அல்லேலுயா அல்லேலுயா "நற்செய்தி அறிவிப்பவரே, உம் குரலை எழுப்பி இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர்"-அல்லேலுயா

 

லூக்கா 7:18-23

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், புதன்

நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 07: 18-23

யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, ";வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, "நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்

பேறுபெற்றோர் என்று சொல்லப்படுவது ஒரு சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. முக்கியமான ஒருவரின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று சொல்கிறோம். திருச்சபையில் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்று, சிறப்பு பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று போற்றுகின்றோம். அப்படி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் பலர் தங்களது உயிரை இழந்தனர். கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட பிண்ணனியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று பலர் தயக்கம் காட்டினா். தங்களது உயிரை இழந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கேட்கத்தொடங்கினார்கள். இதுதான் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க நினைத்தவர்கள் எதிர்பார்த்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியாளரின் இந்த வார்த்தைகள், அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டால், கடவுளின் அன்பும் இரக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் என்கிற அந்த எண்ணம் தான், அவர்களை மீண்டும் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்ளச் செய்திருக்கும்.

இன்றைக்கு நாமும் கூட, சிலவேளைகளில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகிறோம். அதற்கு காரணமாக, நமது வாழ்க்கையில் நடக்கிற எதிர்பாராத நிகழ்வுகளை நாம் சொல்கிறோம். எப்போதும் கிறிஸ்துவை விட்டுப் பிரியாத வரம் வேண்டி, இந்த நாளில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இறைவார்த்தையின் மீதுள்ள தாகம்

யோவான் தன்னுடைய சீடர்களை அனுப்பி, இயேசு தான் மெசியாவா? என்று கேட்டுவரச் சொல்கிறார். இந்த பகுதி சில சந்தேகங்களையும் எழுப்புகிறது. இயேசு செய்த புதுமைகளைப் பார்த்து சாதாரண மக்களும் அவரை மெசியாவாக நம்பிக்கொண்டிருக்கும்போது, யோவான் எப்படி புரிந்து கொள்ள முடியாமல் போக முடியும்? இருந்தபோதிலும், ஒரு சில விளக்கங்கள் இதற்கு சரியான தீர்வாக அமையும்.

திருமுழுக்கு யோவானுக்கு, இயேசு தான் மெசியா என்று தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் உணர்வதற்காக அவர்களை அனுப்பியிருக்கலாம். அதுபோல், மற்றொரு விளக்கமும் தரப்படுகிறது. யோவான் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருந்ததால், எக்காரணத்தைக் கொண்டும், மக்கள் இறையாட்சி பற்றிய செய்தி அறியாமல் இருக்கக்கூடாது, என்று மக்கள்பால் கொண்டிருந்த அன்பு, அவரை இந்த கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திருமுழுக்கு யோவான், மக்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை இது வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்கிற தாகம், திருமுழுக்கு யோவானுக்கு சாகும்தருவாயில் கூட இருந்தது. மக்கள் நற்செய்தி இல்லாமல் வாடக்கூடாது என்று அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். திருமுழுக்கு யோவானிடம் நற்செய்தி பற்றி இருந்த தாகம், நமக்கும் இருக்க வேண்டும். இறைவார்த்தை அறிவிக்கப்பட வேண்டும் என்கிற தாகத்தை, நாம் வளர்த்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

மெசியாவின் காலம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின.

நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

----------------------

''அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை
இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக,
'நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்' என்றார்'' (லூக்கா 7:21-22)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர்கள். அவர்கள் இருவருமே மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும் அவர்கள் கடவுளாட்சியின் வருகையை அறிவித்த பாணி வேறுபட்டது. மக்கள் மனம் மாறாவிட்டால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவர் என்று கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் யோவான். இயேசுவோ கடவுளாட்சி என்பது கடவுளின் இரக்கமும் அன்பும் வெளிப்படுகின்ற தருணம் என போதித்தார். இயேசு கடவுளின் அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்? மக்களுக்கு நலம் கொணர்ந்து கடவுள் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை இயேசு காண்பித்தார். எனவேதான் அவர் ''பிணிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரைக் குணமாக்கினார்'' (லூக் 7:21). இவ்வாறு இயேசு மக்களுக்கு நலமளித்ததை யோவானின் சீடர்கள் பார்க்கிறார்கள். இயேசுவின் சொற்களைக் கேட்கிறார்கள். இவ்வாறு நேரடியான அனுபவம் பெற்றதால் அவர்கள் தங்கள் குருவாகிய யோவானிடம் சென்று தங்கள் அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொள்வார்கள். யோவானும் இயேசு எத்தகைய மெசியா என்பதை அறிந்துகொள்வார். இயேசுவைத் ''தயக்கமின்றி ஏற்றுக்கொள்வார்'' (லூக் 7:23).

-- இயேசுவை நாம் அறிய வேண்டும் என்றால் அவர் நமக்கு அறிவிக்கின்ற செய்திக்கு நாம் கவனத்தோடு செவிமடுக்க வேண்டும். அவர் புரிகின்ற செயல்களை நம் கண்கள் திறந்து பார்க்க வேண்டும். அதாவது, இயேசுவை அணுகிச் சென்று அவரை நேரடி அனுபவத்தால் அறிகின்றவர்களே அவருடைய உண்மையான பண்பைத் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய நேரடி அனுபவம் நமக்கு இல்லையென்றால் இயேசு பற்றிய அறிவு வெறும் ஏட்டுச் சுரக்காயாகவே இருந்துவிடும். அதனால் நமக்கும் பிறருக்கும் பயனில்லாது போய்விடும். இயேசு கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்வதற்குத் தெரிந்துகொண்ட வழி அவர்களுடைய பிணிகளைப் போக்கி அவர்களைத் தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுவித்ததுதான். இன்றைய உலகிலும் பலவகையான பிணிகளால் அவதியுறுகின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். தன்னலம், பேராசை, அதிகார வேட்கை போன்ற ''தீய ஆவிகள்'' நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இத்தகைய பிணிகளிலிருந்தும் ''தீய ஆவிகளிடமிருந்தும்'' நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்; நம் வாழ்வில் ஆழ்ந்த மாற்றம் கொணர்கின்ற அவரது வல்லமையைப் பணிவோடு நாம் ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் பிணிகளைப் போக்கி நலம் அளிக்கின்ற உமக்கு நன்றியுடையோராய் நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்