முதல் வாசகம்
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6

பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.

லூக்கா 9:22-25

தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் வியாழன்


நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

15.02.2024 வியாழன்
இழத்தலே இன்பம் பயக்கும் ...

டாக்டர் அப்துல்கலாமின் வாழ்வு பற்றி அறிந்திருப்போம். சிறுவயதிலே பெரிய ஆசையோடு வாழ்ந்தவர் ஆனால் அவர் தன்னை முழுமையாக இழந்து உழைத்தார். இன்று எண்ணாத சிகரத்தை எட்டிப்பிடித்த மாமனிதராக வாழ்ந்து மரித்திரிக்கின்றார். சேகுவேரா பற்றி கேள்விப்பட்டிருப்போம். அர்ஜென்டினாவில் பிறந்தவர் ஆனால் கியூபா போன்ற நாடுகளில் புரட்சியை ஏற்படுத்தி மக்கள் விடுதலை காற்றைச் சுவாசிக்க வழிவகுத்தார். தன்னை இழந்ததால்தான் இன்று பெரும் புரட்சியாளராக காணப்படுகின்றார். அருட்தந்தை. ஸ்டேன் (இயேசு சபை துறவி) தன்னை இழந்து, பழங்குடி மக்களோடு பயணித்ததால்தான் இன்று சமுதாயம் அவரை உயர்த்திப் பிடிக்கின்றது. இப்படி தங்களை இழந்தவர்கள் அனைவருமே இன்பத்தினை பெற்றிருக்கின்றார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு வைக்கும் இறைசிந்தனையும் இதுவே. சீடத்துவத்தின் படிநிலையாக இந்த இழத்தல் விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். சீடத்துவம் என்பது இயேசுவோடு பயணிக்க. அப்படியென்றால் தங்களை இழப்பவர்கள் இயேசுவோடு பயணிக்கிறார்கள் என்பதனை நினைவுப்படுத்துகின்றது. அதனால்தான் பேதுரு இயேசுவிடம் நாங்கள் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு உம்மை பின்தொடர்ந்தவர்களானாமே எங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்று கேட்டவுடன் இயேசு கூறுவார் நீங்கள் நிலைவாழ்வை பெற்றுக்கொள்வீர்கள் என்று. இதுதான் சீடத்துவத்தின் படிநிலை.

நம்மிடம் இத்தகைய இழக்கக்கூடிய மனநிலை இருக்கின்றதா? நம்முடைய நேரத்தை, உழைப்பை, தான் என்ற எண்ணம் இவற்றை இழப்போம் இறையரசை கட்டி எழுப்புவோம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

லூக்கா 9: 22 – 25
ஹலோ ஒரு அறிவிப்பு

இந்த சமுதாயத்தில் ஒரு சில அறிவிப்புகள் மகிழ்ச்சியை தருகின்றன. அதே வேளையில் ஒரு சில அறிவிப்புகள் துன்பத்தினை தருகின்றன. நாளை முதல் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு கொடுத்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. பேனா வைக்கும் திட்டம் கைவிடப்பட்டு அதற்கான பணத்தினை வீட்டு நலவாரியம் வழியாக வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு கொடுத்தால் பாமர மக்களுக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு திட்டம் தமிழர்க்கே என்று அரசு அறிவிப்பு கொடுத்தால் இளையோருக்கு மகிழ்ச்சி. இன்னொருபுறம் இனி ரேஷன் கார்டு வழியாக கொடுக்கப்படும் இலவச அரிசிக்கு விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தால் மக்களுக்கு துன்பம். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடற்கரையோர மக்கள் மறு அறிவிப்பு வரை மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளம் அறிவிப்பு கொடுத்தால் மக்களுக்குத் துன்பம். இப்படி ஒரு சில அறிப்புகள் துன்பத்தினை கொடுக்கின்றன.

அத்தகைய ஒரு அறிவிப்பினைத் தான் இன்றைய வாசகங்களில் நாம் பார்க்கின்றோம். முதல் வாசகத்தில் மோசேயின் அறிவிப்பு மகிழ்ச்சியையும் நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசுவின் அறிவிப்பு துன்பத்தினையும் கொடுக்கின்றது. ஏனென்றால் சாவு என்பது கொடூரமான ஒன்றாக இருக்கிறது. இது முடிவான வாழ்வு என்று மக்கள் எண்ணினர். ஆனால் புனித அகுஸ்தினார் கூறுவார்: இறப்பு என்பது முடிவல்ல. மாறாக விண்ணக வாழ்வின் பிறப்பிடம். மக்கள் எதற்காக அஞ்சுகிறார்கள் என்றால், இயேசு சென்ற இடங்களிலெல்லாம் புதுமைகள் செய்தார். உரோமை பேரரசு மக்கள் மீது அநியாய வரி விதித்தது. இயேசு அவர்களை எதிர்த்தார். அது மட்டுமில்லாமல் மக்கள் உணவின்றி தவித்த போது பலுகி பெருகி மக்களுக்கு உணவளித்தார். இத்தகைய காரணங்களால் அவரை எப்படியாவது அரசராக்கி விட வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அத்தகைய தருணத்தில் இயேசு இறப்பை பற்றி அறிவித்தது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்று நம்முடைய வாழ்வில் அதே அறிவிப்பினை இயேசு நமக்குத் தருகின்றார். நாம் அந்த அறிவிப்பை நமக்கு வாழ்வாக்க பார்க்கிறோமா? அல்லது மீண்டும் அது பாவ வாழ்வில் சுருண்டு கிடக்க பார்க்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

லூக்கா 9:22-25
இழப்பதில் பெறுகிறோம்

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வு, நம்மை நாமே பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காக அல்ல. பிறருக்கும் கடவுளுக்கும் ஈந்தளிப்பதற்காகவே என்ற சிந்தனைக்காக இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. பிறருக்காக வாழ்தல் மனித இனத்திற்கு மட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பிறருக்காகவே பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன எனலாம். பிறர்க்காகப் பிறந்த நாம் மட்டுமே, அனைத்தையும் நமக்காக சேர்த்து வைக்கின்றோம் என்ற எண்ணத்தில் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக ஒரு நபர் தன் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் எதையும் சேகரிக்காமல் பிறர்க்காகவும், இந்த குமூகத்திற்காகவும் உழைத்தார் என்றால், அவர் உடல் காலமாகினாலும் அவரது உயிர் காலாவதியாகாமல்; மக்கள் மனதில் நின்று என்றும் வாழ்வார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் இழப்பதை வேறு வாழ்வில் பெற்றுக் கொள்கிறார் எனலாம். இவ்வாறு பிறர் நலத்திற்காக நாம் உழைக்க முன்வரும் பொழுது நமது சுயபற்று ஐம்புலன்களின் ஆணவமும் நம்மை அறியாமலேயே நம்மைவிட்டு அகன்றோடும்.

இவைலெ;லாம் அனைவருக்கும் சாத்தியமா? என்ற கேள்வி உடனடியாக வரும். இந்த அறியாமையும் இருளாமையும்தான் இன்றுவரை விவரம் தெரிந்தவர்களையும் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது. இக்காரணத்தினாலேயே இவ்வுலகில் நடக்கின்ற பல பிரச்சனைகளும் தீர்வுகள் கிடைக்காமலேயே கடந்து செல்கின்றன. இவையனைத்திற்கும் நம் முன்னால் இருப்பது இயேசுவின் படிப்பினைகளும் மதிப்பீடுகளும் தான். அவரது முன்மாதிரிகையைப் பின்பற்றி, இழப்பதில் பெறுகிறோம் என்பதில் நம்பிக்கைக் கொண்டு நம்மையே கொடுப்போம். கொடுத் ‘தாய்’ என்று பிறர் கூறும்போது நாம் தாயாகிறோம்.
- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6
”ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றோர்”

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”ஆற்றலாலும் அல்ல, சக்தியாலும் அல்ல, ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே” என்கிற இறைவார்த்தையின் பொருள் இங்கே வெளிப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் எல்லாருமே தொடக்கத்தில் கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் அடையாளம் பெற்ற பிறகு, அந்த அடையாளத்தைக் கொடுத்தவரை மறந்துவிடுகிறார்கள். தங்களது சக்தியினால் தான் எல்லாம் முடிந்தது, என்று கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தங்களின் ஆற்றலின் மீது வைத்துவிடுகிறார். அது தான் அழிவிற்கான ஆரம்பம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இந்த திருப்பாடலைப் பொறுத்தவரையில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும், இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து ஆசிரியர் இதனை எழுதுகிறார். தாவீது அரசருக்கு அடையாளம் கொடுத்தவர் கடவுள். சாதாரண ஆடு மேய்க்கக்கூடிய சிறுவனாக இருந்த தாவீது, இஸ்ரயேல் மக்கள் போற்றக்கூடிய அரசராக மாற முடிந்தது என்றால், அது அவனது வலிமையினால் அல்ல, மாறாக, கடவுளின் வல்லமையினால். அதேபோல அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த இஸ்ரயேல் மக்களை, அடிமைத்தளையை அறுத்தெறிந்து, அவர்களுக்கு வாழ்வு கொடுத்து, அடையாளத்தைக் கொடுத்தவர் ஆண்டவராகிய கடவுள். அவர்களது வல்லமையினால் நிச்சயமாக அல்ல. இரண்டு பேருமே, இந்த இறைநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறபோது, அதற்கான அழிவைச் சந்தித்துக்கொண்டார்கள். எனவே, எப்போதும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாக வாழ ஆசிரியர் அழைக்கிறார்.

நமது வாழ்க்கையிலும் வெற்றி என்பது நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை எதுவும் பிரிக்காத வண்ணம், நமது நம்பிக்கை உறுதியுள்ளதாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மிகுதியாக்க கடவுளின் அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தன்னலம் இல்லா வாழ்வு

இயேசுவைப்பின்செல்ல விரும்புகிறவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்துகிறார். இயேசுவைப் பின்செல்ல விரும்புகிற வாழ்வு எளிதான வாழ்வு. அது ஒரு சவாலான வாழ்வு. வாழ்வதற்கு கடினமான வாழ்வு. ஆனாலும் நிறைவான வாழ்வு. மனமகிழ்ச்சியான வாழ்வு. உற்சாகம் தரக்கூடிய வாழ்வு. ஊக்கம் தரக்கூடிய வாழ்வு. மற்றவர்களுக்கு வாழ்வு தரக்கூடிய வாழ்வு.

இயேசு தன்னலம் துறக்க வேண்டும் என்று சொல்கிறார். தன்னலம் என்பது சுயத்தைக்குறிக்கிறது. நாம் அனைவருமே நமது நலனை நாடுகிறோம். எல்லாவற்றையும் நமது நலனைக்கருத்தில் கொண்டு பார்க்கிறோம். ”நான்” ”எனது” என்கிற அந்த சுயத்தை விடுவதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். நம்மிலிருந்து வெளியேறி அடுத்தவர் நலன் காக்கிறவர்களாக வாழ இயேசு நம்மைப்பணிக்கிறார். ஆனால், அது எளிதானல்ல. இயலாததும் அல்ல. இயேசுவோடு நாம் இணைந்து இருந்தால், அனைத்தும் சாத்தியமே.

இந்த உலகத்தில் ”நான்” என்கிற வார்த்தை மட்டும் இல்லாதிருந்தால், நிச்சயம் அது இந்த உலகம் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வாழ வழிவகுத்திருக்கும். இன்றைக்கு இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம், இத்தகைய தன்னலம் தான். அந்த தன்னலத்தை நம்மிலிருந்து வேரறுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

தன்னலம் துறந்து சிலுவையைச் சுமப்போம்

இதற்கு முந்தைய பகுதியில் பேதுரு இயேசுவை மெசியா என்று சொல்கிறார். இயேசுவும் தான் மெசியா என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் மெசியா என்பதை ஏற்றுக்கொண்ட இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதை இன்றைய நற்செய்தியில் விளக்கிக்கூறுகிறார். வழக்கமாக போரை வழிநடத்திச்செல்கின்ற அரசர் பாதுகாப்பாகத்தான் இருப்பார். அரசரைப்பர்துகாப்பதற்காக படைவீரர்கள் தான் துன்பங்களைத்தாங்கிக்கொண்டு தங்கள் உயிரைத்தியாகம் செய்வர். இங்கேயோ மக்களைப்பாதுகாக்க, மெசியா துன்பப்படவேண்டும், தன் உயிரைத்தியாகம் செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை இயேசு தருகிறார். மேலும் தன்னைப்பின்செல்கிறவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழங்குமுறைகளையும் இயேசு விவிரிக்கிறார்.

இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் 1. ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும், 2. நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. அதற்காக மற்றவர்களைப்பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க வேண்டும். இரண்டாவது ஒவ்வொருநாளும் சிலுவையைத்தூக்க வேண்டும். சிலுவைச்சாவு என்பது யூதர்கள் அறிந்திராத ஒன்றல்ல. கொலைக்குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை இந்தச்சிலுவைச்சாவு. எவ்வளவு கொடுமையானது என்று அவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எனவேதான் இயேசு இந்த வார்த்தையைப்பயன்படுத்துகிறார். அதாவது, இயேசுவைப்பின்பற்ற விரும்பினால் நாள்தோறும் இப்படிப்பட்ட சிலுவையை சுமக்க வேண்டியதிருக்கும். எனவே, இயேசுவைப்பின்பற்றுவதற்கு முன்னதாக நாம் இவற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

இயேசுவின் சீடர்களாக வாழக்கூடிய வாழ்வு எளிதான வாழ்வு அல்ல, மாறாக, கடினமான வாழ்வு. ஆளாலும் வாழமுடியாத வாழ்வு அல்ல. அனைவராலும் வாழக்கூடிய வாழ்வு. வாழ்ந்து காட்டப்படக்கூடிய வாழ்வு. அதுதான் நம் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய வாழ்வு. அத்தகைய வாழ்வு வாழ நாம் உறுதி எடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-----------------------------

உலகத்தைத் தமதாக்கி, வாழ்வையே இழப்பாரெனில்...

இழப்போர் காத்துக்கொள்வர், காத்துக்கொள்வோர் இழப்பார் என்னும் வாழ்வியலின் முரண்பாட்டு மெய்மை ஒன்றை இவண் எடுத்துரைக்கிறார் ஆண்டவர் இயேசு.

நம் வாழ்வில் நடப்பது என்ன? பணம் சேர்க்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், பின்னர் கார் வாங்க வேண்டும், வசதிகளைப் பெருக்கவேண்டும்... எனக் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், அதன்பின் என்ன நடக்கிறது என்பதை நாம் கண்களைத் திறந்து பார்க்கிறோமா?

இன்று வசதியும், சொகுசுகளும் கொண்ட வாழ்வு பலருக்கும் கிடைத்திருக்கிறது, ஆனால், நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் விடை ஒரு கேள்விக்குறிதான்.

மணவாழ்வில் முறிவுகள், சந்தேகங்கள், நிறைவற்ற மணவாழ்வு, பிள்ளைகள்-பெற்றோருக்கிடையே உறவில் விரிசல்... இவைதான் பல குடும்பங்களின் நிலை. செல்வமும், வசதிகளும் இருந்தும், வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாமல் தவிக்கின்றனர் இவர்கள்.

நற்செய்தி சொல்லும் செய்தி இதுதான்: அனைத்து வசதிகளையும் தமதாக்கிக் கொண்டு, பின்னர் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இன்றி வாழ்வதால் கிடைக்கும் பயன் என்ன?

எனவே, வசதிகளைத் தேடி ஓடாமல், இறைவனை நாடுவோம். குடும்பமாக தியானங்கள், குடும்ப செபம், திருப்பயணங்களில் கலந்து, இறையாசியைத் தேடுவோம்.

மன்றாடுவோம்: எங்கள் வாழ்வின் நிறைவும், செல்வமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலக வசதிகளைத் தேடி ஓடாமல், நீர் தருகின்ற நிறைவை நாங்களும், எங்கள் குடும்பமும் இணைந்து தேட தூய ஆவியின் கொடையை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-----------------------

இணையதள உறவுகளே

வாழ்க்கை என்னமோ சொகுசானது என்று நினைத்தால் நாம் மடையர்கள். உலகமெல்லாம் வளைத்து போட்டு, நாட்டில் பெரிய பதவி. ஊரில் பெரிய மனிதன் பட்டம், வங்கியில் பெருந்தொகை இருந்தும், என்னெய்யா பயன்? கடாபி நிம்மதியா சாப்பிட்டு அசந்து தூங்க முடியுதா? உழைக்காமலும் கஷ்டப்படாமலும் சம்பாதித்த பணம் உனக்கு நிம்மதியான உரக்கத்தை தர முடியவில்லை. எங்கே நிம்மதியான வாழ்க்கையைத் தர போகிறது?

பணத்தையோ பதவியையோ தேடி அலையாதே. அதை தேடி அலைய தொடங்கினால் எல்லா குருக்கு வழியையும் கோணல் வழியையும் கையாளாதே. பணமும் பதவியும் வருவது போல வந்து போய்விடும். படுபாதாளத்தில் உன்னைத் தள்ளிவிடும். பணத்தையும் பதவியையும் இவ்வாறு குருக்கு வழியில் தேடி அலைத்தால் வாழ்வு கிடைக்காது. வேதனையும் சிறையும் உறுதியாகக் கிடைக்கும்.கொஞ்சம் தாமதமாகலாம்.

எனவே வாழ்க்கையைத் தேடு.எல்லாம் உனக்கு சேர்த்து கொடுக்கப்படும். அதற்கு உழைக்க வேண்டும், கஷ்டப்பட வேண்டும். "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” செய்யுங்கள். நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.
-ஜோசப் லீயோன்

-------------------------

இழக்க முன் வருவோம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய வாசகத்தில் “இழப்பு” என்னும் சொல்லாடல் மூன்று முறை கையாளப்படுகிறது. இழப்பில்தான் இன்பம் என்னும் கருத்தை ஆண்டவர் இயேசு வலியுறுத்திச் சொல்கிறார். எதையும் சேகரிக்க வேண்டும் என்னும் நுகர்வுக் கலாசார நாள்களில் நாம் வாழ்கிறோம். இயேசுவோ அதற்கு மாற்றான ஒரு கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறார். பிறருக்காக, இயேசுவுக்காக வாழ்வில் சிலவற்றை நாம் இழக்க, துறக்க முன்வரவேண்டும். அப்போதுதான், நாம் இயேசுவின் சீடராக விளங்க முடியும்.

முதலில் சிறியவற்றைத் துறக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சிறியவற்றில் வெற்றி கொண்டால், பெரியவற்றிலும் வெற்றி நம்மைத் தேடிவரும். எனவே, சிறிய இன்பங்கள், கேளிக்கைகள், உணவுப்பொருள்கள், பிறருக்காக நமது நேரம் என சிலவற்றை இழக்க நாம் கற்றுக்கொண்டால், அதனால் நாம் பெரியவனவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். சிறப்பாக, இறையாசி நமக்கு நிறைவாகக் கிடைக்கும். இந்த ஞானத்தை அனுபவத்தின் மூலமே நாம் பெற முடியும். எனவே, சிறியவைகளை இழக்க இன்று முன்வருவோமா?

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் Nபுhற்றுகிறோம். எமது சீடராக விளங்க எம்மையே நாங்கள் மறுக்க வேண்டும், இழக்க வேண்டும் என்னும் உமது அழைப்புக்காக நன்றி. உமது அழைப்பை ஏற்று, இதோ நாங்கள் முன்வருகிறோம். எங்களை ஆசிர்வதித்து, இழப்பின் மேன்மையை அனுபவத்தின் வழியாகக் கற்றுக்கொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------------

''மேலும் இயேசு, 'மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள்,
மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்' என்று சொன்னார்'' (லூக்கா 9:22)

சிந்தனை
-- மனிதரோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட இயேசுவின் வாழ்க்கை துன்பம் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. அவர் கடவுளாட்சி பற்றி அறிவித்த நல்ல செய்தியை எல்லா மனிதரும் விருப்போடு ஏற்கவில்லை. அவர் புரிந்த அரும்செயல்களைக் கூட பலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அவர் பேயின் துணைகொண்டே புதுமைகள் செய்தார் எனக் குற்றம் சாட்டினார்கள். அவரைக் கொன்றுபோட முயற்சி செய்தார்கள். இயேசுவோடு வழிநடந்த சீடர்களும் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இயேசு தாம் துன்பங்கள் பல அனுபவிக்கப் போவதாகவும், யூத சமயத் தலைவர்களால் உதறித் தள்ளப்பட்டு, கொலைசெய்யப்படப் போவதாகவும் மும்முறை அறிவித்த பிறகும் அவருடைய சீடர்கள் அக்கருத்தை ஏற்க விரும்பவில்லை.

-- ஆனால் இயேசு தம்மைப் பற்றிய உண்மையை மீண்டும் மீண்டும் தம் சீடருக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை. அவர் மாட்சிமையோடும் வல்லமையோடும் வருகின்ற மெசியா அல்ல; மாறாக, துன்பங்கள் அனுபவித்து, மக்களால் புறக்கணிக்கப்பட்டு, கொல்லப்படவிருக்கின்ற ''மெசியா''. அவர் நமக்குக் காட்டுகின்ற முன்மாதிரி என்ன? நம் வாழ்விலும் துன்பங்களுக்கு இடம் உண்டு. ஏதாவது ஒருவிதத்தில் துன்பங்கள் அனுபவிக்காத மனிதரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அத்துன்பங்களும் ஏன் சாவும்கூட நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிட முடியாது. இயேசுவைப் போல நாமும் துன்பங்களைக் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப ஏற்றுக்கொண்டால் ஒரு நாள் உயிருடன் எழுப்பப்படுவோம். இயேசுவைப் போல நாமும் இறைவனோடு இடையறாது இணைந்து வாழ்கின்ற பேற்றினை அடைவோம். சிலுவையே நம்மை ஒளிமிக்க வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் அனுபவித்த துன்பங்களில் நாங்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல

 

''இயேசு, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (லூக்கா 9:23)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை சிலுவையிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க இயலாது. சிலுவையில் தொங்குகின்ற இயேசு நம் உள்ளத்தில் பல உணர்வுகளை எழுப்பக்கூடும். சிலருக்கு இயேசுவின் சிலுவைச் சாவு கொடூரமான தண்டனையாகப் படலாம். வேறு சிலருக்கு அதே சிலுவைச் சாவு கடவுளின் அன்புக்கு அடையாளமாகத் தெரியலாம். இன்னும் சிலருக்குச் சிலுவையில் தொங்கும் இயேசு இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் அணு அணுவாகச் சிதைக்கப்பட்டு, நொறுக்கப்படுகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களின் அடையாளமாகத் தென்படலாம். இந்த எல்லாப் பொருள்களுமே சிலுவையில் அடங்கியுள்ளன எனலாம். இயேசுவின் சிலுவை அவருடைய வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கின்ற அடையாளம். அதுபோலவே, இயேசுவைப் பின்செல்லும் மனிதரும் சிலுவையைத் தம் வாழ்விலிருந்தும் சாவிலிருந்தும் பிரித்தல் இயலாது. இந்த உண்மையை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

-- ''சிலுவையைச் சுமத்தல்'' என்பது இயேசுவைப் பின்செல்ல வேண்டிய முறையைக் காட்டுகிறது. இயேசுவின் துன்பங்களோடு நம் துன்பங்களையும் இணைத்து, அவரோடு நம் வாழ்வையும் சாவையும் பிணைத்து நாம் செயல்பட அழைக்கப்படுகிறோம். நம் சிலுவையை ''நாள்தோறும்'' தூக்கிக் கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் நம்மைக் கடவுளோடு இணைக்கின்ற காலம் என்பதை நாம் ஏற்றால் சிலுவைக்கு அங்கே இடம் உண்டு. மனித உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகள், மனித செயல்கள் யாவுமே நிறைவை மட்டுமே கொண்டிருப்பதில்லை. அவற்றில் சிலுவையின் நிழல் எப்போதும் உண்டு. மகிழ்ச்சி நிறைந்து வழிகின்ற பொழுது அங்கே அம்மகிழ்ச்சி மறைந்துவிடுமே என்னும் சிறிய கவலைத் திரை தோன்றுவதுண்டு. ஆக, சிலுவை நம்மோடு என்றும் உள்ளது என்பதைக் காண நம் அகக் கண்கள் திறக்க வேண்டும். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்குச் சிலுவை ஒரு தடையாக இராது; மாறாக, இறை அனுபவம் பெற்றிட அது ஒரு வழியாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, சிலுவையை மகிழ்வோடு ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

.. .. சிலுவையை நாள்தோறும் தூக்கி .. .." ரூhநடடip;

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கிறிஸ்துவின் சீடனாக வாழ்வது என்பது அவரோடு சிலுவையைச் சுமப்பதும், அவருக்காக நம்மை இழப்பதும், இறப்பதும், இறுதியில் நம் வாழ்வில் வெற்றியை, மகிழ்ச்சியை, பெருமையை, உயிர்ப்பைப் பெறுவதும் ஆகும். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் வாழ்வது,அவரது சீடனாக வாழ்வதற்கே. இதில்தான் மனித வாழ்வின் நிறைவை அடைகிறோம்.

சீடனாக வாழும் முயற்சியில் சிலுவையைச் சுமப்பதைத் தவிற வேறு வழி இல்லை. இயேசுவுக்காக வாழ்வதே அச் சிலுவை. இயேசுவின் போதனையின்படி வாழ்வதே அச் சிலுவை. இயேசுவின் போதனை விசித்திரமான போதனை அல்ல, மனிதத்துக்கு முரணான போதனை அல்ல. மனிதன் தன் நல்வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய அன்றாட வாழ்க்கை நடைமுறை.

சிலுவையைச் சுமப்பதன் சிறப்பாக லூக்கா நற்செய்தியாளர், நாள்தோறும் அச் சிலுவையைச் சுமக்கச் சொல்லுகிறார். தினமும் தனித்தனி சிலுவைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை,சிலுவை. தினமும் நம் வாழ்வின் சுமைகளை மகிழ்வோடு ஏற்று சுமக்கும்போது, அதுவே உண்மைச் சீடனின் பண்பாகும். இதைப் பார்க்கும் இறைவனும் நம்மை மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை அருள்வார். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: