அக்டோபர் 18
புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா
முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17

அன்பிற்குரியவரே, விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன். நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 145: 10-11. 12-13. 17-18
பல்லவி: உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13 உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி
மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
லூக்கா 10:1-9

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி..

-------------------------

27.01.2023 – லூக்கா 10: 1 - 9
மக்களாட்சி + மனிதனேயாட்சி = இறையாட்சி

உலக வரலாற்றில் அரசு, ஆட்சி என்கிற சொற்கள் மக்களை அடக்கி ஆளுதல், எதிரிகளை அழித்தல், நாடு பிடித்தல், ஆட்சியிலிருந்து ஆடம்பரமாக வாழ்தல் போன்ற சிந்தனைகளைத் தான் தந்துள்ளன. ஆளுதல் என்றாலே ஏதோ ஓர் அடக்கு முறை என்பது தான் மேலோங்கி வந்துள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறுகின்ற ஆட்சி சற்று வித்தியாசமானதாக அமைகிறது. இஸ்ரயேல் மக்கள் அரச சக்திகளிடம் துன்புற்ற போதெல்லாம் மீண்டும், மீண்டும் இறைவாக்கினர்கள் வழியாக அம்மக்கள் பெற்ற நம்பிக்கை, மெசியா வரும்போது ஒரு புதிய ஆட்சியை அளிப்பார் என்பது தான். வரவிருக்கும் மெசியா கடவுளுக்கே உரிய வாரிசாக இருப்பார் என்கிற சிந்தனையாக அவர் நிறுவப்போகும் ஆட்சியும் கடவுளின் ஆட்சியே என்கிற எண்ணமும் மக்களிடையே மகிழ்ச்சியை அளித்தது. இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த கொடுமைகள் தங்களை ஒடுக்கிய அரச சக்திகளிடமிருந்து மட்டுமே வரவில்லை, மாறாக தங்கள் வாழ்க்கையை பாதித்த துன்பங்களாக, சமூக ஏற்ற தாழ்வுகள், பொருளாதார தீமைகள், பல்வேறு நோய்கள் எனக் கருதப்பட்ட உளநோய் சக்திகள் போன்றவையும் கூட என மக்கள் நம்பினர். ஆகவே, தங்களை மீட்க வரும் மெசியா, இறையாட்சி என்கிற மாபெரும் சக்தியை உருவாக்கி மக்களை எதிர்க்கும் தீய சக்திகளையெல்லாம் விரட்டியடிப்பார் என்ற எண்ணமும் மக்களிடையே இருந்தது. ஆகவே தான் “இறையாட்சி நெருங்கி வந்து விட்டது” என்ற இயேசுவின் அறைகூவல் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு மகிழ்ச்சி நிலையை அவரே உருவாக்க இருப்பதாக அமைந்து விட்டது. புதிய சமுதாயம் படைக்க அவர் மேற்கொண்ட பல போதனைகளும், செயல்களும், போராட்டங்களும் தான் இயேசுவின் இறையாட்சி செயல்பாடாக மாறுகிறது.

நம்முடைய இறையாட்சியின் செயல்பாடுகள் எவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது? அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு இவற்றின் அடிப்படையிலா அல்லது அதிகாரம், எதிர்ப்பு, தீண்டாமை இவற்றின் அடிப்படையிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா
மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி
லூக்கா 10:1-9

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார்.

"அன்புமிக்க மருத்துவர் லூக்கா" என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார்.
நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரைச் சார்ந்தவர். பாலஸ்தீனாவின் வடபுறத்திலே இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. சிறந்த கல்விமானாகிய இவர் மருத்துவம், கவிதை, கலை, குழு ஆய்வு, விளையாட்டு போன்ற துறைகளில் கை தேர்ந்தவர். கனிவான குணம், இரக்க உள்ளம், தாராளமாக உதவும் மனப்பான்மை எல்லாம் இவருடைய குணநலன்கள். இதற்கு இவரது எழுத்துக்களே சாட்சி.

தூய லூக்கா இயேசுவை நேரில் கண்டதுமில்லை. அவரது போதனைகளைக் கேட்டதுமில்லை. இவர் யூதனும் அல்லர். ஆனால் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியதில் அந்தியோக்கியா நகரம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஸ்தேவானின் மறைசாட்சிக்குப் பிறகு இந்த இடத்தை தேர்ந்தெடுத்து யூதரல்லாத மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை பேதுருவும் திருத் தூதர்களும் மற்றப் பணியாளரும் அறிவித்து வந்தனர்.

பலரும் மனம் மாறி இயேசுவை ஏற்றுக் கொண்டனர். (தி.ப. 11:19) தூய பவுல் மற்றும் பர்னபாஸ் இத்தகைய நற்செய்திப் பணியில் முழுப் பங்கு வகித்தனர். இத்தகைய சூழ்நிலையில் நான் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்து வந்த லூக்கா இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் மீட்பராக ஏற்றுக் கொண்டு அவரது பணிக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். இயேசுவின் வாழ்வை பணியை இலக்கை எடுத்துச் செல்லும் மாபெரும் நற்செய்தியாளராக உருமாறினார். தூய லூக்கா போன்று நாமும் மகிழ்ச்சியின் இரக்கத்தின் நற்செய்தியாக இரண்டு செயல்களை நாம் செய்ய வேண்டும்.

1. புன்னகையால் வரவேற்பு
"அழகும் கலரும் கண்களை கவரும், ஆனால் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்" என்பது சான்றோர்கள் கூற்று. இன்று சந்திக்கிற ஒவ்வொரு நபரையும் புன்னகையால் வரவேற்போம். நாம் பிறருக்கு அறிவிக்கிற நற்செய்தி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

2. புனித செயலால் வரவேற்பு
ஆனந்தமாக வாழ ஆடம்பரம் தேவையில்லை, அன்பானவர்கள் உனிருந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்பது அறிஞா்கள் கூற்று. நாம் அன்பானவர்களாக மாறுவோம். இரக்கமுள்ளவர்களாக இருப்போம். அன்பு, இரக்கம் இதுவே நாம் இன்று சந்திக்கிற அனைவருக்கும் நம்மிடமிருந்து நற்செய்தியாக கிடைக்கட்டும். இதுவே நாம் செய்யும் புனித செயலும்கூட.

மனதில் கேட்க…
1. நான் பிறருக்கு கொடுக்கின்ற நற்செய்தி என்ன?
2. புன்னகையால், புனித செயலால் பிறருக்கு தினமும் வரவேற்பு கொடுக்கலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன். மகிழுங்கள்(பிலி 4:4)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

2தீமோத்தேயு 4: 9 – 17
இறைவன் நல்லவர்

ஆண்டவர் நம்மை எல்லாவித தீமைகளில் இருந்தும் நம்மை விடுவித்துக் காப்பார் என்று பவுலடியார் சொல்கிறார். பவுலடியார் தன்னுடைய நற்செய்தியை பலதரப்பட்ட நாடுகளுக்குச் சென்று அறிவித்தார். அப்படி அறிவிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. அது கடினமானதாக இருந்தது. மிகப்பெரிய சவாலானதாக இருந்தது. ஆனாலும், அவர் கலங்கவில்லை. அதன்பொருட்டு, உடலளவிலும், மனதளவிலும் மிகுதியாக காயப்படுத்தப்பட்டார். அவரைக் கொல்வதற்கு பலர் வழிதேடினர். இவ்வளவு நெருக்கடிகளையும், வேதனைகளையும் பவுல் தாங்கினார் என்பதைவிட, கடவுள் உடனிருந்து காத்தார் என்பது தான் உண்மை.

அப்படிப்பட்ட அனுபவத்தை, இன்றைய நற்செய்தியில் அவர் பகிர்ந்து கொள்கிறார். ”நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று, ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்”. இந்த வரிகள், அவருடைய நற்செய்திப் பயணத்தில் அவர் சந்தித்த பல மோசமான நிகழ்வுகளையும், ஆபத்துக்களையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இவ்வளவு துயரமான நிகழ்வுகளில், அவரை அழைத்த இறைவன் அவரைக் கைவிட்டு விடவில்லை. அவர் அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். அவரை கரம்பிடித்து வழிநடத்துகிறார்.

நம்முடைய வாழ்விலும், நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. எவ்வளவு வேதனைகள், நெருக்கடிகள் வந்தாலும், ஒருபோதும் நம்மை கைவிடாத இறைவன் இருக்கின்றார் என்கிற அந்த எண்ணத்தோடு, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 17 – 18, (11அ)
”ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்”

கடவுள் நமக்கு அருகாமையில் இருக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். யாருக்கு அருகாமையில் கடவுள் இருக்கிறார்? எல்லாருக்கும் அருகில் கடவுள் இருக்கிறாரா? அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்கு அருகில் மட்டும் கடவுள் இருக்கிறாரா? திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: கடவுள் தம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் அருகில் இருக்கிறார். அப்படியென்றால், பலரும் ஒவ்வொருநாளும் செபிக்கிறார்களே, ஏன் கடவுள் அவர்களின் செபத்திற்கு பதில் கொடுப்பதில்லை? என்கிற கேள்வி நமக்குள்ளாக எழலாம்.

புனித அகுஸ்தினார், நம்முடைய செபம் ஏன் கேட்கப்படவில்லை என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார். 1. செபிப்பவர் பாவ மனநிலையில் இருக்கலாம். 2. செபம் பக்தியின்றி சொல்லப்பட்டிருக்கலாம். 3. நாம் தேவை என்று நினைத்திருப்பது, கடவுள் பார்வையில் நமக்கு தேவையில்லாமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு நாம் கடவுளிடத்தில் செபித்தாலும், நம்முடைய செபம் கடவுளால் கேட்கப்பட வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் நம்மையே சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. அதனால் தான், திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்: தம்மை நோக்கி உண்மையாய் மன்றாடுகிறவர்களுக்கு ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் செபிக்கிறபோது, இந்த சிந்தனைகள் நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். நம்முடைய பாவங்கள் தடையாக இருந்தால், நல்ல பாவ மன்னிப்பு பெற்று, தகுதியோடு கடவுளிடம் செபிப்போம். பக்தி உணர்வோடு செபிப்போம். அப்போது, நிச்சயம் கடவுள் நமக்கு அருகாமையில் இருந்து நமக்கு செவிகொடுப்பார்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் திட்டமிடல்

எந்த ஒரு பணியைச் செய்தாலும் அதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். திட்டமிடப்படாத செயல்பாடுகள் தோல்வியை நோக்கிச் செல்லக்கூடியவை. அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது. நமது வாழ்வில் நாம் செய்யக்கூடிய பணி சிறப்பாக அமைந்து, நமக்கு நிறைவைத்தர வேண்டுமென்றால், இந்த திட்டமிடல் என்கிற தாரக மந்திரத்தை நமதாக்குவோம். அதைத்தான் இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு தன்னுடைய சீடர்களை அனுப்புகிறபோது, அவர்கள் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்ய வேண்டாம் என்கிற ஒழுங்குமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறார். இது ஒரு நேர்த்தியான திட்டமிடல். ஒழுங்குகள் தேவையா? இல்லையா? என்கிற வாதம், இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக எழுகிறது. ஒழுங்குகள் இல்லையென்றால் தனி மனித ஒழுக்கம் இல்லை. அமைதி இல்லை. சுதந்திரம் இல்லை. இதுதான் முழுமையான உண்மை. நாம் திட்டமிட்டு ஒரு செயலைச் செய்கிறோம். நாம் எதிர்பார்த்த முடிவு இல்லையென்றாலும் கூட, நமக்கு நிறைவு இருக்கும். திட்டமிடாமல் செய்கிற செயல் வெற்றியில் முடிந்தாலும், அதில் நிறைவு இருக்காது. முழுமகிழ்ச்சியும் இருக்காது.

நமது வாழ்வில் எந்த செயலைச் செய்தாலும், சரியான திட்டமிடலோடு செய்ய முயற்சி எடுப்போம். நாம் எடுக்கக்கூடிய பணிகள் நமக்கு நிறைவாக இருக்க வேண்டும். அது வெற்றியாகவும் இருக்க வேண்டும். அதற்கு சரியான திட்டமிடல் தான் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

கடவுளோடு இணைந்திருப்போம்

எண் 72 என்பது யூதர்களுக்கு ஓர் அடையாள எண். மூப்பர்கள் 72 பேரை இஸ்ரயேல் மக்களுக்கு அதிகாரிகளாக, பெரியவர்களாக ஏற்படுத்துகிறார். எண்ணிக்கை 11: 16 ”ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா. அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்”. யூதத்தலைமைச்சங்கத்திலும் 72 உறுப்பினர் இருந்தார்கள். உலகத்தில் இருக்கிற மொத்தநாடுகளின் எண்ணிக்கையும் 72 இருப்பதாக யூதர்கள் நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை அனைவருக்கும் பொதுவானவராக, மீட்பராக அறிமுகப்படுத்துவதால், இந்த எண்ணைப்பயன்படுத்துகிறார்.

இயேசுவின் இந்தப்போதனை போதிக்கக்கூடியவர்களுக்கான ஒழுங்குகளைத்தருகிறது. போதிக்கக்கூடியவர்கள் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படக்கூடாது. அவர்களுக்கு கடவுள் தான் சொத்து. அதேபோல போகிற வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்படுவத, தங்களுடைய இலக்கிலிருந்து அவர்கள் விலக அது காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக. கிறிஸ்துவை நோக்கிச்செல்கின்ற நம்மிலிருந்து நாம் எந்த காரணத்தைக்கொண்டும் விலகக்கூடாது. நமது எண்ணங்கள், சிந்தனைகள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்துமே கிறிஸ்துவை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும். நமக்குள் பிரிவினைகளும் எழக்கூடாது. அனைவருமே கடவுளின் பிள்ளைகள் என்கிற சிந்தனையும் நமக்குள் இருக்க வேண்டும்.

கடவுளோடு இணைந்திருக்கிறபோது இந்த உலகத்தில் நாம் இருந்தாலும், இந்த உலக மதிப்பீடுகளை விட, கடவுள் காட்டிய நெறிமுறைகள் தான் நம்முள் இருக்கும். எனவே, இந்த உலகத்திலே இருந்து, இயேசுவின் பிள்ளைகளாக வாழ வேண்டுமென்றால், கடவுளோடு இணைந்திருக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்:  புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

வழியில் வணக்கம் வேண்டாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது கொடுத்த அறிவுரைகளில் நம் கவனத்தை ஈர்ப்பது: வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்பது. இயேசு வணக்கம் செலுத்துவதற்கும், மரியாதைப் பண்புகளுக்கும் எதிரானவர் அல்லர். பின் ஏன் இந்த அறிவுரையைத் தந்தார்? இக்கேள்விக்கான விடை அறிவுரையின் முதல் வாக்கியத்தில் உள்ளது. அறுவடை மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆம், குறைவான எண்ணிக்கையில் உள்ள சீடர்கள் நிறைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்ய வேண்டும். எனவே, நேரம், விரைவான பணி என்பது அவர்களுக்கு முகாமையான மதிப்பீடுகள். எனவேதான், வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தி அதன் மூலம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். விரைந்து பல இடங்களுக்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

நமது பணிகளை விரைவாகவும், விவேகமுடனும் ஆற்ற வேண்டும் என்னும் பாடத்தை இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாகக் கற்றுக்கொள்வோம். பல நேரங்களில் நமது அலுவலகங்களில், பணியிடங்களில் பேசிப் பேசியே நேரத்தை செலவழித்து, அதனால் பணிகளை நேர்த்தியாகச் செய்யத் தவறும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. அப்பழக்கத்தை மாற்றி, பேச்சைக் குறைத்து, உழைப்பைப் பெருக்கும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.

 

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இறைவா, என்னுடைய பணிகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் ஆற்ற எனக்கு வரம் தாரும். பணியிடங்களில் தேவையின்றி பேச்சை வளர்க்கும் பழக்கத்தை மாற்ற உமது தூய ஆவியின் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, 'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும்,
'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள்.
அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்'' (லூக்கா 10:1-2,5-6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். ''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல'' (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் ''ஊர்களுக்கும்'' ''வீடுகளுக்கும்'' சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் ''எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி'' கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற ''அமைதி'' என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற ''அமைதியும்'' அவர் வழங்குகின்ற ''மீட்பும்'' ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே ''அமைதி'' ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

-- இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. ''இந்த வீட்டுக்கு அமைதி'' என்பது ''இந்தக் குடும்பத்திற்கு அமைதி'' என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் ''குடும்பத் திருச்சபை'' அல்லது ''வீட்டுத் திருச்சபை'' என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

மன்றாட்டு
இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக ஏற்ற உம் அரும் செயலை வியந்து உமக்கு நன்றி கூறுகிறோம்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல்
உங்களை நான் அனுப்புகிறேன்'' (லூக்கா 10:3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு எழுபத்திரண்டு சீடர்களை இருவர் இருவராக அனுப்பி, இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது என்னும் செய்தியை அறிவிக்கப் பணித்தார். எழுபத்திரண்டு என்பது உலக நாடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையாகக் கருதப்பட்டதால் (காண்க: தொநூ 10), இயேசு தம் சீடரை உலகெங்கும் நற்செய்தி அறிவிக்க அனுப்பினார் என்பது பொருள். அவ்வாறு சென்ற சீடர்கள் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைத்தார். ஓநாய்கள் ஆடுகளைப் பிடித்துக் கொன்றுவிடலாம். அதுபோல, சீடரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற நிலையைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், அவர்கள் கடவுளின் ஆட்சிக்காக வாழ்வதால் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். ஓநாய்கள் போல நம்மைத் தாக்க வருகின்ற சக்திகள் இன்றைய உலகில் பல உள்ளன. கடவுளின் ஆட்சிக்கு எதிராகத் தலைதூக்குகின்ற எந்த சக்தியும் நம்மைத் தடுக்க முயற்சி செய்யக்கூடும். அந்த வேளைகளில் கடவுளின் சக்தியில் நாம் நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடர அழைக்கப்படுகிறோம்.

-- ஓநாய்களின் பிடியில் அகப்படாமல் ஆட்டுக்குட்டிகள் தப்பிக்க வேண்டும் என்றால் அவை ஆயரின் கண்காணிப்பிலிருந்து அகன்று செல்லல் ஆகாது. ஆயர் தம் ஆடுகளை அன்போடும் கரிசனையோடும் பாதுகாப்பதுபோலக் கடவுளும் நாம் நற்செய்திப் பணி ஆற்றும்போது நம்மைக் காத்திடுவார் என்னும் நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். என்றாலும், ஆபத்துக்கள் முற்றிலுமாக ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை. எனவேதான் நாம் விழிப்பாயிருக்கவேண்டும்; நேரிய வழியில் நம்மை நடத்திச் செல்கின்ற கடவுளின் பார்வையிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்லாமல் முன்னேறிட வேண்டும். சீடரை ''இருவர் இருவராக'' இயேசு அனுப்பினார் என லூக்கா குறிப்பிடுகிறார். சாட்சி பகரும்போது இருவர் அதை உறுதிசெய்ய வேண்டும் என்பது அன்றைய வழக்கம். எனவே, நற்செய்தியின் தூதுவராகச் செல்வோர் நற்செய்திக்குச் சாட்சி பகர வேண்டும். அப்போது அவர்கள் ''இயேசுவுக்கு முன்சென்று'' அவருடைய வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துவார்கள் (காண்க: லூக்கா 10:1).

மன்றாட்டு
இறைவா, தெளிவான பார்வையோடு நாங்கள் இறையாட்சிக்குச் சான்று பகர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

ஆமா.. 72 பேர் வேணுமா..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஆமா, இதைச் செய்வதற்கு 72 ஆள் தேவை என்று ஆயாசமாகச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் 72 பேர் காரணத்தோடுதான் தேவைப்பட்டிருக்கிறார்கள்.

இயேசு 72 பேரை அனுப்புகிறார். இது 70 என்ற குறிப்பும் உள்ளது.இந்த 72 பேரை அனுப்புவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தொடக்க நூல் 5 உலகம் முழுவதும் பரவிய மக்கள் 72(70) வழிமரபைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. "இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின".தொ.நூல் 10'32

பாலைவனப் பயணத்தில் எழுந்த குழப்பங்களைத் தீர்க்க மோசேக்கு கடவுள்அறிவுரை கூறியபோது, "இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா" (தொநூல் 11'16) என்கிறார். தொடர்ந்து இப்பகுதியை வாசித்தால், 70 பேரோடு கடவுள் பேசி தம் அருளைப் பொழிந்தார் என்றும், ஆனால் 72 பேர் அருள் பெற்றனர் என்றும் அறிகிறோம். எல்தாதும் மேதாதும் பாளையத்திற்கு வெளியே இறை அருள் பெற்று இறை வாக்குறைத்ததாக வாசிக்கிறோம். ஆக, மொத்தம் 72 குடும்பங்கள் உலகை நிறப்பின. 72 மூப்பர்கள் இஸ்ரயேலில் மோசேக்கு துணையாக ஆண்டவரால் நியமிக்கப்பட்டனர். அவ்வாரே உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கப்பட, இயேசு 72 பேரை அனுப்புகிறார்.

உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்னும் இயேசுவின் திட்டத்தை நிறைவேற்ற நாம் ஒவ்வொருவரும் ஒரு திருத்தூதராவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்