முதல் வாசகம்

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 1: 1-17

அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன'' என்றார். யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார். ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். கப்பல் தலைவன் அவரிடம் வந்து, ``என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்'' என்றான். பிறகு கப்பலில் இருந்தவர்கள், ``நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, ``இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்'' என்று சொன்னார். மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே அவர்கள் மிகவும் அஞ்சி, ``நீ ஏன் இப்படிச் செய்தாய்?'' என்று கேட்டார்கள். கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், ``கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்? '' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்'' என்றார். ஆயினும் அவர்கள் கரைபோய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில் கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகிக் கொண்டேயிருந்தது. அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, ``ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழியவிட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள்மீது பழி சுமத்த வேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்'' என்று சொல்லி மன்றாடினார்கள். பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது. அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள். ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்தபடியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
யோனா 2: 2. 3. 4. 7
பல்லவி: பாதாளக் குழியிலிருந்து ஆண்டவரே நீர் என்னை மீட்டீர்.

2 ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.
நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.
பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்;
என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர். -பல்லவி

3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்;
தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்து கொண்டது.
நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. -பல்லவி

4 அப்பொழுது நான், `உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்;
இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டேன். -பல்லவி

7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது,
ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன்.
உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

லூக்கா 10:25-37

ஆண்டின் பொதுக்காலம் 27 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், ``போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?'' என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது'' என்றார். இயேசு, ``சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்'' என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ``எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ``ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்'' என்றார். ``கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?'' என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், ``அவருக்கு இரக்கம் காட்டியவரே'' என்றார். இயேசு, ``நீரும் போய் அப்படியே செய்யும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோனா 2: 2, 3, 4, 7
”ஆண்டவரே! நீர் என்னை மீட்டீர்”

ஆண்டவர் தன்னை மீட்டதாக இறைவாக்கினர் யோனா முழுமையாக நம்புகிறார். யோனா இறைவாக்கினர் நினிவே நகரத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர். கடவுளை முழுமையாக நம்புகிறவர். ஆனாலும், தன்னுடைய வார்த்தை எப்படியானாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவராக சித்தரிக்கப்படுகிறார். ”இன்னும் நாள்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் மனம் மாறியதால் கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்கிறார்.

யோனா அறிவித்தபடி, நினிவே அழிக்கப்படவில்லை. இது யோனாவுக்கு கோபத்தை வரச்செய்கிறது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். மக்கள் தன்னை இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இறுதியில் கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார். தன்னுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, இறைவன் எப்படியெல்லாம் அற்புதமாக தன்னைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்கிறார். இறைவன் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் மூலமாக உறுதிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்க்கையிலும், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சாதாரண நிகழ்வுகளுக்கும் நாம் கடவுளை விட்டு வெகுதூரம் சென்றுவிடக்கூடாது. கடவுளோடு இருக்க வேண்டும். கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை நாம் வைக்க வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நிலைவாழ்விற்கான போதனை

நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இயேசு அதற்கு எளிதான பதிலைத் தருகிறார். திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைச் செய், நீ நிலையான வாழ்வை பெற்றுக்கொள்வாய் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களின் நோக்கமும், குறிக்கோளும் நிலையான வாழ்வை அடைவதுதான் அதனை அடைவதற்காகத்தான் நாம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறோம். அதைத்தான், திருச்சட்ட அறிஞரின் கேள்வியும் நமக்கு எடுத்துரைக்கிறது.

இந்த கேள்வியை திருச்சட்ட அறிஞர் எதற்காக கேட்டார்? அவர் இந்த கேள்வியை கேட்கலாமா? ஏனென்றால், அவர் கடவுளின் சட்டத்தை அல்லும் பகலும் தியானிக்கக்கூடியவர். அதனை மக்களுக்குப் போதிக்கக்கூடியவர். இப்படி கடவுளின் வார்த்தையைப் போதிக்கக்கூடிய திருச்சட்ட அறிஞரே, நிலைவாழ்விற்கான வழியைத் தெரியாமல் இருந்தால், அவர் எப்படி மக்களுக்குப் போதிக்க முடியும்? இன்றைக்கு போதனை என்பது அடுத்தவர்க்கு மட்டும் தான், எனக்கு இல்லை என்கிற மனநிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய நாளிலே, சிறந்த போதனையாளர்கள் நம் நடுவில் இருக்கிறார்கள். கடவுளின் வார்த்தையை சிறப்பாகப் போதிக்கிறார்கள். ஆணித்தரமாக போதிக்கிறார்கள். ஆனால், அவர்களது வாழ்க்கையில் அந்த நம்பிக்கை இருக்கிறதா? அவர்களது வாழ்க்கை அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்த நிலைமை அகல வேண்டும் என்பதைத்தான், இயேசுவின் போதனை நமக்கு வெளிப்படுத்துகிறது.

நமது வாழ்வில் வெறுமனே போதனையோடு நின்றுவிடாமல், அந்த இறைவார்த்தையை நம்பக்கூடியவர்களாக வாழ்வோம். நாம் நம்புவதை, நம்ப முயல்வதைப் போதிப்போம். அதுதான், நமது வாழ்விற்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அர்ப்பணமாக இருக்க முடியும். அல்லது நம்மையும் நாம் ஏமாற்றி, அடுத்தவரையும் ஏமாற்றக்கூடியவர்களாகத்தான் நாம் இருப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விலகிச்சென்றார்…

இன்றைய நற்செய்தியில் இயேசு அருமையான ஓர் உவமை வாயிலாக, வாழ்வின் முக்கியமான செய்தியைத்தருகிறார். நல்ல சமாரியன் உவமையில் வரக்கூடிய குருவும், லேவியரும் “விலகிச்சென்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுபேருமே மறுபக்கமாய் விலகிச்செல்கிறார்கள். எதற்காக விலகிச்சென்றார்கள்? ஒன்று தீட்டுப்பட்டுவிடும் என்பதற்காக. இரண்டாவது, தங்களுக்கு இருக்கக்கூடிய பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக. இரண்டுமே தவறுதான். இரண்டு பேருமே, கடவுளின் இறையருளை நிறைவாக, உடனடியாகப் பெற்றுத்தரும் வாய்ப்பை இழந்து சென்று விட்டார்கள் என்பதுதான் உண்மை.

விலகிச்செல்வது தவறல்ல. தீய நண்பர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தவறான பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களிலிருந்து, கெட்ட வார்த்தைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. எவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டுமோ, அவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து, நல்லவற்றைப் பார்ப்பதிலிருந்து, நல்லவற்றைக் கேட்பதிலிருந்து நாம் விலகியிருக்கக்கூடாது. அவற்றோடு இருக்க வேண்டும். ஆனால், அவற்றிலிருந்துதான் நாம் விலகியிருக்கிறோம். அவற்றிலிருந்து நாம் விலகியிருக்கிறபோது, கடவுளின் அருளை நாம் இழந்துவிடுகிறோம்.

நமது வாழ்வில் நாம் நல்ல செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி எடுப்போம். அந்த வழிகள் தான், கடவுளின் பேராசீரை நமக்கு பெற்றுத்தரக்கூடிய உன்னதமான வழிகள். அந்த வழிகள் தான், கடவுளோடு நாம் நெருங்கி வருவதற்கான வழிகள். அந்த வழிகளில் நாம் நம்மையே முழுமையாக ஈடுபடுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

முன்சிந்தனை

யெருசலேமிலிருந்து, எரிக்கோவுக்குச் செல்லும் வழி மிகவும் ஆபத்தானது. கடல் மட்டத்திலிருந்து 2300 அடிகள் மேலே எருசலேம் அமைந்திருந்தது. கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகள் மேலே எரிக்கோ அமைந்திருந்தது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 20 மைல்களுக்கும் குறைவான தூரமே அமைந்திருந்தது. மேலிருந்து கீழே வருவதற்கான பாதையும் குறுகலாகவும், கடினமாகவும், பாறைகள் நிறைந்தும், அபாயகரமான வளைவுகள் நிறைந்தும் காணப்பட்டிருந்தது. எனவே, இந்த பகுதி பொருட்களையோ, பணத்தையோ கொண்டு செல்வதற்கோ, தனியாகப் பயணம் செய்வதற்கோ ஏற்ற பாதை அல்ல. கள்வர்களும், கொள்ளையர்களும் நிறைந்த பாதை.

இயேசு சொல்கிற உவமையில் வருகிற மனிதன், முன்சிந்தனை இல்லாத மனிதனாகக் காணப்படுகிறான். அந்த மனிதனுக்கு தான் பயணம் செய்கிற பாதை எவ்வளவுக்கு ஆபத்து நிறைந்தது என்றும், தனியாகப் பயணம் செய்வது தனது பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்காது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். இதற்கு முன்னால் அங்கே நடைபெற்ற விபத்துக்கள், கொள்ளை நிகழ்வுகளும் அவன் அறிந்ததாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும், அதனை ஒரு பொருட்டாக எடுக்காமல், அவன் அங்கே செல்வது அவனது முன்சிந்தனை இல்லாத செயலை எடுத்துக்காட்டுகிறது. முன்சிந்தனை இல்லாத அவனது வாழ்க்கை ஆபத்தில் முடிவடைகிறது.

நமது வாழ்வில், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் முன்சிந்தனையோடு கூடிய முடிவுகளாக இருக்க வேண்டும். வருவதை, நிகழவிருப்பதை நமது எண்ணத்தில் பதித்து, அதனால் நேரக்கூடிய ஆபத்துக்கள், அபாயங்கள் அனைத்தையும் சீ்ர்தூக்கிப்பார்த்து, அதற்கேற்ப நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

நல்ல சமாரியனாக வாழ்வோம்

இன்றைய நற்செய்தியில் நான்கு வகையான மனிதர்களைப்பார்க்கிறோம். அவர்களைப்பற்றி சிந்திப்போம். 1. பயணம் செய்தவர். பொதுவாக, யெருசலேமிலிருந்து எரிக்கோவுக்கு சாலை வழியாக பயணம் செய்கிறவர்கள் தனியாகச்செல்வதில்லை. ஏனெனில் திருடர்கள் பயம் அதிகம். அதுவும் பொருட்களோடு செல்கிறபோது, மிகுந்த எச்சரிக்கையுடன் கூட்டமாக்செல்கிறவர்களோடு சேர்ந்து கொள்வதுதான் சிறந்தது. இந்த மனிதனோ அதைக்கண்டுகொண்டதாக தெரியவில்லை. அதனுடைய பலனை இப்போது அனுபவிக்கிறான். 2. குரு. கீழே விழுந்து கிடந்த மனிதனைப்பார்த்தவுடன் அவன் இறந்து விட்டான் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்க வேண்டும். எண்ணிக்கை 19:11 அவருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ”மனிதப்பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டவனாயிருப்பான்”. பிணத்தைத்தொட்டு வழிபாட்டில் பங்கேற்க முடியாததை அவர் விரும்பவில்லை.

3. லேவி. கீழே விழுந்துகிடந்த மனிதனுக்கு அருகில் சென்று பார்க்கிறார். அவருக்கு பாதுகாப்பைப்பற்றிய பயம். ஏனென்றால், திருடர்கள் யாரையாவது அடித்துப்போட்டுவிட்டு, மறைந்திருப்பார்கள். அல்லது அடிபட்டது போல நடித்து மயங்கிக்கிடப்பார்கள். யாராவது உதவிக்கு வருகிறபோது அவர்களிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்த லேவிக்கு தனது பாதுகாப்பைப்பற்றி பயம் அதிகம் இருந்ததால் ஓடிவிடுகிறார். 4. சமாரியர். இந்த உவமையைக்கேட்டவர்கள் இப்போதுதான் வில்லன் வருகிறான் என்று நினைத்திருக்க வேண்டும். ஆனால், இயேசு சமாரியரை கதாநாயகனாக மாற்றிவிடுகிறார். யூதர் அப்படி நினைப்பதற்கு காரணமும் இருந்தது. யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் தீராத பகை இருந்தது. சமாரியர்களை யூதர்கள் திருடர்களாக, பேய்பிடித்தவர்களாகக்கருதினர். எனவேதான், யோவான் 8: 48 ல், இயேசுவையும் அவ்வாறு கூறுகிறார்கள், ”நீ சமாரியன், பேய்பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?”. ஆக, யாரை எதிரியாகப்பாவித்தவர்களோ, அவர் தான் மீட்பராக இருக்கிறார்.

மேற்சொன்ன நான்கு வகையான மனிதர்களில் நாம் யாரைப்போல வாழ விரும்புகிறோம்? சுயநலத்தோடு வாழ்ந்த மனிதர்களைப்போலவா? அல்லது எதையும் எதிர்பார்க்காமல் பொதுநலத்தோடு உதவி செய்த சமாரியனைப்போலவா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வார்த்தை உன் இதயத்தில் உள்ளது ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனை அனைத்துக்கும் மேலாக முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய அழைக்கிறார் ஆண்டவர். இதனை இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் காண்கிறோம். ‘முழு உள்ளத்தோடும், முழு இதயத்தோடும் ஆண்டவரிடம் திரும்பு’ என்னும் அழைப்பை இணைச்சட்ட நுhல் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு முறை இறைவார்த்தையை நாம் வாசிக்கும்போதும் இந்த அழைப்பு நமக்குத் தரப்படுகிறது. அது மட்டுமல்ல, இறைவனைத் தேட வேண்டும் என்னும் ஆர்வத்தை இறைவன் இயற்கையாக நமது இதயத்திலே வைத்திருக்கிறார். அதனையே நாம் ‘மனச்சான்று’ என்று அழைக்கிறோம். ஆம், நமது மனச்சான்று எப்போதும் நாம் தீமையை விட்டு விலகி, இறைவனிடம் திரும்ப வேண்டுமென்றும், அவரையே அனைத்துக்கும் மேலாக அன்பு செய்ய வேண்டும் என்றும் அழைத்துக்கொண்டே இருக்கிறது. நமக்கு மிக அருகில், நமது வாயில், நமது உள்ளத்தில் ஒலிக்கும் இந்த அழைப்பை இன்று சற்று உன்னிப்பாகக் கவனிப்போமா!

மன்றாடுவோம்: எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உறையும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இதயமும், மனச்சான்றும் எப்போதும் விடுக்கும் அழைப்புக்குக் கவனமுடன் செவி சாய்த்து, அனைத்துக்கும் மேலாக உம்மை அன்பு செய்யும் வரத்தைத் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

அன்பின் பரிமாணங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நல்ல சமாரியன் உவமை வழியாக இயேசு அன்பின் பல பரிமாணங்களை நமக்குக் கற்றுத் தருகிறார். கள்வர் கையில் அகப்பட்ட மனிதரை குருவும், லேவியரும் கண்டுகொள்ளாமல் சென்றனர். ஆனால், சமாரியரோ அம்மனிதருக்கு அன்பு காட்ட முன் வந்தார். அந்த அன்பைப் பல படிகளில் வெளிப்படுத்தினார். முதலில், அவர்மீது பரிவு கொண்டார். பரிவு கொள்வதுதான் அன்பின் முதல் படி. அடுத்து, காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்துக் கட்டினார். இது முதல் உதவி. அடுத்து, தாம் பயணம் செய்த விலங்கின்மீதே அவரை ஏற்றிச் சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார். இது மிகப் பெரிய உதவி. தொடர்ந்து, இரு தெனாரியத்தை சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து அவரைக் கவனித்துக்கொள்ளச் சொன்னார். அதற்கு மேலும் செலவானாலும் தருவதாகச் சொன்னார். இதுதான் உண்மையான அன்பின் இலக்கணம். அன்பின் வெளிப்பாடுகள்.

நாம் யாரையேனும் அன்பு செய்தால், குறிப்பாக யாருக்கு நமது உதவி தேவைப்படுகிறதோ, அவர்களை அன்பு செய்வது என்பது இத்தனை படிகளில் பயணம் செய்வதாகும். அனைத்துப் படிகளும் செயல் வடிவங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. பரிவு கொண்டு, தனது வசதிகளையும், சொகுசையும், பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ளாமல் உதவி செய்வதும், உதவி செய்ய முன்வருவதுமே அன்பின் பரிமாணங்கள். இவற்றை நாம் கடைப்பிடிக்க முயல்வோமா?

மன்றாடுவோம்: அன்பின்; இலக்கணமான இயேசுவே, அன்புக்கும், பரிவுக்கும் அடையாளமாக நல்ல சமாரியர் உவமையை எங்களுக்குத் தந்தீர். அந்த நல்ல சமாரியர் போலவே நாங்களும் எங்களது அன்பை பல்வேறு செயல் வடிவங்களில் வெளிப்படுத்த எங்களுக்கு நல் மனதும், ஆற்றலும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

---------------------------------

''திருச்சட்ட அறிஞரை நோக்கி, 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள்
எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு கேட்டார்.
அதற்கு திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்றார்.
இயேசு, 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்றார்'' (லூக்கா 10:36-37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உற்றார் உறவினருக்கு ஒரு நீதி, அன்னியருக்கு வேறொரு நீதி என்னும் முறை பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகிறது. அதுபோலவே நண்பர்களோடு ஓர் உறவு, பகைவரோடு வேறு உறவு என்பதும் வழக்கமாக உள்ளது. இது உலகப் பார்வை என்றால் இயேசு நமக்கு இதற்கு நேர் மாறான பார்வையை முன்வைக்கிறார். ''நல்ல சமாரியர்'' பற்றி இயேசு கூறிய கதையில் வருகின்ற பாத்திரங்களாகிய குருவும் லேவியரும் அக்கால யூத சிந்தனையைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் யூத சமய அனுசாரங்களைக் கடைப்பிடித்தவர்கள். கள்வர் கையில் அகப்பட்டுக் குற்றியிராகக் கிடந்த மனிதரைக் கண்டும் காணாததுபோலச் சென்றுவிடுகின்றனர் இந்த யூத சமயப் பணியாளர்கள். இவர்கள் சமய சம்பிரதாயத்தைக் காரணமாகக் காட்டி, இரக்கத்திற்கு முற்றுப்புள்ளி இட்டவர்கள். மேலும், இவர்கள் பிறப்பு வழியாகக் குருகுலத்தைச் சார்ந்தவர்கள். அதாவது, குருக்களின் குடும்பத்தில் பிறந்தவர் குருக்களாயினர். தூய்மை மற்றும் தீட்டு சம்பந்தமான பல சட்ட திட்டங்களை இவர்கள் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்ற சாதாரண மக்களிடமிருந்து பிரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.

-- அந்த வழியே வந்த சமாரியர் ஒருவர் குற்றுயிராகக் கிடந்த மனிதன் மீது இரக்கம் கொள்கிறார். அவருடைய காயங்களைக் கட்டி, அவரைத் தூக்கித் தான் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனிக்க ஏற்பாடு செய்கிறார். இவ்வளவு அக்கறையோடு செயல்பட்ட சமாரியர் யார்? அவர் யூத குருவுமல்ல, லேவியரும் அல்ல, சாதாரண யூதரும் அல்ல. மாறாக, எல்லா யூதர்களாலும் தாழ்ந்தவர் எனக் கணிக்கப்பட்டவர் அந்த சமாரியர். அக்காலத்தில் சமாரியருக்கும் யூதர்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கவில்லை. அந்நிலையிலும் அந்த சமாரியர் குற்றுயிராகக் கிடந்த மனிதர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். இக்கதையைக் கூறிய இயேசு நமக்குப் புகட்டுகின்ற பாடம் என்ன? பிறர் மட்டில் நாம் அன்புகாட்ட வேண்டும் என்னும் கட்டளை ஒருசிலருக்கு நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும், பிறரை வேண்டுமானால் நாம் ஒதுக்கிவிடலாம் எனப் பொருள்படாது. மாறாக, நமக்கு ''அடுத்திருப்பவர்'' எல்லா மனிதர்களும் ஆவர். ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்ற கேள்விக்கு இயேசு தந்த பதில் ''அடுத்திருப்பவராக நீர் மாற வேண்டும் என்றால் எல்லா மனிதருக்கும் நீர் அன்பு காட்ட வேண்டும்'' என்பதாகும். இறுதியாக இயேசு திருச்சட்ட அறிஞரை நோக்கி, ''நீரும் போய் அப்படியே செய்யும்'' எனக் கூறினார். அதாவது, குருவும் லேவியரும் செய்ததைப் போலல்லாமல், அந்த சமாரியர் செய்தது போல நீரும் செய்யும் என இயேசு உரைத்தார். சமயச் சட்டங்களை அனுசரிப்பதாகக் கூறிவிட்டு, துன்பத்தில் வாடுவோருக்கு உதவி செய்யாவிட்டால் என்ன பயன்? இரக்க உள்ளம் நமக்கு வேண்டும் என்றும், சமய, சமூக சம்பிரதாயங்களையும் தாண்டிச் சென்று நாம் எல்லா மனிதர் மட்டிலும் அன்புடையோராய் வாழ வேண்டும் எனவும் இயேசு கற்பிக்கின்றார்.

மன்றாட்டு
இறைவா, எல்லையற்ற அன்போடு எங்களை அரவணைக்கின்ற உம்மை நாங்கள் முன்மாதிரியாகக் கொண்டு அனைவரும் அன்புசெய்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' (லூக்கா 10:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ''நல்ல சமாரியர்'' என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ''உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?'' என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.

-- இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ''உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக'' (லூக் 10:27; இச 6:5) என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களுக்குக் காட்டிய அன்பை நாங்கள் எல்லா மனிதரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

ஓயாத கேள்வி..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்;லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான்.கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான்.அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

இயேசுவின் இவ்வுவமைக் கதை அயலான் யார் என்பதன் விளக்கமும் நிலை வாழ்வுக்கு வழிகாட்டுதலும் இணைந்தது. அயலானை அடையாளம் காண்போம். இரக்கச் செயல்களைச் செய்வோம். நலை வாழ்வை வாழ்ந்து மகிழ்வோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்