முதல் வாசகம்

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'' கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 130: 1-2. 3-4. 7-8
பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். -பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

லூக்கா 10:38-42

பொதுக்காலம், வாரம் 27 செவ்வாய்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

--------------------------------------------------

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 7 – 8
“என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்”

குற்றவுணர்வுள்ள நிலையில் பாடப்படும் பாடல் தான் இந்த திருப்பாடல். ஆண்டவரிடத்தில் ஒரு வேண்டுதலுக்காக ஆசிரியர் செபிக்கிறார். ஆனால், அவர் கண்முன்னே இறைவனை புறக்கணித்து அவர் செய்த தவறுகள் நின்று கொண்டிருக்கின்றன. பொதுவாக, ஒரு மனிதர் நமக்கு கடினமான நேரத்தில் உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த உதவியைப் பெற்று நாமும் நல்ல கஷ்டத்திலிருந்து மீண்டு வருகிறோம். அதன்பிறகு அந்த மனிதரை நாம் பார்க்கவுமில்லை, செய்த உதவிக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மீண்டும் இப்போது நமக்கு உதவி தேவைப்படுகிறது. அவருடைய உதவியைக் கேட்க வேண்டிய நிலை. நம்முடைய உள்ளம் எப்படி இருக்கும்?

கிட்டத்தட்ட இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தான் திருப்பாடல் ஆசிரியருக்கும். கடவுளிடத்தில் ஏராளமான உதவிகளைப் பெற்றிருக்கிறார். அவர் எதிர்பாராமலே ஆபத்திலிருந்து பாதுகாத்திருக்கிறார். இவ்வளவு நன்மைகளைப் பெற்ற பிறகு, அவர் கடவுளுக்கு உண்மையில்லாமல் வாழ்ந்திருக்கிறார். கடவுளை மறந்திருக்கிறார். அவரைப் புறக்கணித்திருக்கிறார். இப்போது அவருக்கு கடவுளிடத்தில் ஓர் உதவி தேவைப்படுகிறது. கேட்கமுடியவில்லை. குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருக்கிறார். அதேவேளையில் கடவுளிடத்தில் இருக்கிற அன்பையும் முழுமையாக உணர்ந்தவராக, கடவுளிடத்தில் நம்பிக்கையுடன் முறையிடுகிறார். அந்த முறையிடல் தான், இன்றைய திருப்பாடலின் வரிகளாக வருகிற பாடலாக அமைந்திருக்கிறது. எளிய, சிறிய பாடலாக இருந்தாலும், கருத்தாழமிக்க பாடலாக இது இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாமும் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை நினையாதவர்களாக, எளிதில் மறக்கிறவர்களாக இருக்கிறோம். ஆனால், தேவை என்று வருகிறபோது, குற்ற உணர்வே இல்லாமல் அவரிடம் செல்கிறோம். நம் தேவைகளை நிறைவேற்றுவது மட்டும் தான், நம்முடைய இலக்காக இருக்கிறது. அதிலிருந்து விடுதலை பெறுகிறவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

குறைசொல்வதைத் தவிர்ப்போம்

மார்த்தாவுக்கும், மரியாவுக்கும் என்ன வேறுபாடு? இதுதான் இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் நமக்கு ஏற்படக்கூடிய உணர்வு. இரண்டு பேருமே நல்ல பண்புகளைக் கொண்டிருந்தனர். இரண்டு பேருமே அவரவர் தேவைக்கேற்றவாறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இரண்டு பேருமே எண்ணத்திலும் சரி, சிந்தனையிலும் சரி, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ”உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்வேன்” என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் நண்ராக இலாசர் இருக்கிறார் என்றால், உண்மையில் அவரது பண்புநலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படியென்றால், எந்த ஒரு பண்பு மரியாவையும், மார்த்தாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது?

மரியா, மார்த்தாவிற்கு இடையேயான வேறுபடுத்திக் காட்டக்கூடிய பண்பு, மார்த்தாவிடத்தில் காணப்படக்கூடிய அடுத்தவரிடத்தில் குறை காணக்கூடிய பண்பு. மார்த்தா இயேசுவைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக, பரபரப்பாகி வேலை செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் கருத்தூன்றி இருந்திருந்தால், இந்த பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மரியாவின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார். மரியாவின் மட்டில், தேவையில்லாத அக்கறை இது. தன் கடமையை மட்டும் செய்து கொண்டிருக்காமல், அடுத்தவரைப்பற்றி தேவையில்லாமல் எண்ணுவதும், குறைசொல்வதும் நாம் தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்காட்டுகிறது.

மார்த்தாவைப்போலத்தான் நம்மில் பலபேர் வெகு சிறப்பாக பொதுவேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வார்கள். ஆனால், அவர்களிடத்தில் காணப்படக்கூடிய தேவையில்லாத பண்பு, அடுத்தவரைப்பற்றி தவறாக எண்ணுவதும், தேவையில்லாமல் குறைகூறுவதும். இதனை நாம் தவிர்க்க வேண்டும். நமது பணியைச் செய்வதில் நாம் நிறைவு காண வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே சிறப்பானவை. இரண்டுமே தேவையானவை. ஆனால், மார்த்தா தனது எண்ணம் தான் சிறந்தது, அதுதான் அங்கே புகுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறபோது, அங்கே பிரச்சனை வருகிறது.

குடும்ப வாழ்வில் ஒருவர் மற்றவரின் இயல்பை புரிந்து அதற்கேற்ப வாழ்வதற்கு முன்வரவேண்டும். அதுதான் பக்குவமான மனநிலைக்கு அடித்தளம். யார் சிறந்தவர்? என்கிற மனநிலை இல்லாமல், சிறப்பான வாழ்விற்கான மனநிலையை நாம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

தேவையானது ஒன்றே !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

உபசரிப்பது என்பது நல்ல பண்பாடு மட்டுமல்ல, ஒரு விவிலிய மதிப்பீடும்கூட. வழிப்போக்கர்களை வரவேற்றுப் பணிவிடை செய்ததால், தங்களை அறியாமலே வானதூதருக்குப் பணிவிடை செய்தவரும் உண்டு எனப் பவுலடியார் கூறியுள்ளார். ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, சமூகத்தில் யாருக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுவதில்லையோ, அவர்களை வரவேற்று, உபசரிப்பது இறைவனுக்கே செய்யும் பணிவிடை. எனவேதான், “சின்னஞ் சிறு என் சகோதர சகோதரிகளுக்குச் செய்யும்போதெல்லாம், எனக்கே செய்தீர்கள்â€? என இயேசு மொழிந்தார். முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மூவர் வந்தபோது, ஆபிரகாம் அவர்களை வரவேற்று, மிகுந்த ஈடுபாட்டுடன் உபசரித்தார். அதனால், இறையாசியை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மார்த்தாவும், மரியாவும் ஆண்டவர் இயேசுவைத் தங்கள் இல்லத்தில் வரவேற்று, உணவு வழங்கி, அவரோடு உறவாடினர். பணிவிடையோடு, பாதம் அமர்ந்து உரையாடியது இயேசுவைக் கவர்ந்தது. நாமும் உதவிகளோடு, நட்புறவும் வழங்கினால், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும்.

மன்றாடுவோம்: எங்கள் இல்லங்களில் மறைவான விருந்தாளியாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் வாழும் எளியோரைக் கண்ணோக்கி, அவர்களுக்கு மாண்பும், மதிப்பும் நிறைந்த உதவிகளைச் செய்ய எங்களுக்கு அருள் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்

மார்த்தாவும், மரியாவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் நண்பர்களான மார்த்தாவும், மரியாவும் பேறுபெற்றவர்கள். இயேசு எப்போதெல்லாம் ஓய்வெடுக்க விரும்பினாரோ, அப்போதெல்லாம் அவரைத் தம் வீட்டில் வரவேற்கும் பேறு பெற்றிருந்தனர். உரிமையுடன் இயேசுவை உபசரிப்பதிலும், அவரோடு தனியே உரையாடி, அவர் அமுத மொழிகளைக் கேட்கவும் கொடுத்து வைத்தவர்கள். இன்றைய வாசகத்தில் மார்த்தாவின் மன நிலையைக் கொஞ்சம் சிந்திப்போம். மார்த்தாவுக்கு நல்ல எண்ணம் இருந்தது. இயேசுவை நன்கு உபசரிக்க வேண்டும், அவருக்கு நன்கு பணிவிடை செய்ய வேண்டும். இந்த எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அடுத்து அவர் செய்ததுதான் இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. மார்த்தா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா பற்றி இயேசுவிடமே உரிமையுடன் புகார் சொல்கின்றார். என்னைத் தனியே விட்டுவிட்டாள் என்ற குற்றச்சாட்டுடன், எனக்கு உதவி புரியும்படி சொல்லும் என்ற விண்ணப்பத்தையும் இயேசுவிடம் வைக்கிறார். இயேசு அவரது தவறான மனநிலையை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்ல எண்ணம் கொண்டவர்களும் தவறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எனவே, நாம் கவனமோடு இருப்போம். பிறரது வழிபாட்டுப் பங்கேற்பு, ஆர்வங்கள் பற்றி அவசரப்பட்டு தீர்ப்பிட்டு விடாமலும், குற்றம் சுமத்தாமலும் நம்மைக் காத்துக்கொள்வோம். அத்துடன், வாழ்க்கையில் நல்ல பங்கு எது என்கிற தெளிவையும் கற்றுக்கொள்வோம்.

 

மன்றாடுவோம்: நல்ல நண்பரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,
'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,
உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்' என்றார்'' (லூக்கா 10:40)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மார்த்தாவும் மரியாவும் இரண்டு துருவங்கள் என்றும், ஒருவர் மற்றவருக்கு எதிரான நிலைக்கு உருவகமாகக் காட்டப்படுகிறார் என்றும் விளக்கம் தருவது வழக்கம். மார்த்தா செயல்முறை வாழ்வுக்கும் மரியா தியான வாழ்வுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா இவ்வுலக நிலைக்கும் மரியா மறுவுலக நிலைக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா யூத மரபுக்கும் மரியா கிறிஸ்தவ மரபுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா செயல்வழி மீட்பு என்பதற்கும் மரியா நம்பிக்கைவழி மீட்பு என்பதற்கும் உருவகம் என்பார்கள். இவ்வாறு மார்த்தாவையும் மரியாவையும் எதிர் துருவங்களாகக் காண்பது சரியல்ல. விவிலிய அறிஞர் கருத்துப்படி, மார்த்தாவும் மரியாவும் இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள். மார்த்தா என்னும் சொல்லுக்குத் ''தலைவி'' என்பது பொருள். மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்கிறார். அவர் பல பணிகளைச் செய்கிறார். ஏதோ உணவு தயாரித்துப் பரிமாறுவது மட்டுமல்ல இப்பணி. மார்த்தா உண்மையிலேயே வீட்டுத் தலைவியாக இருந்ததால் எல்லாப் பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தினார்கள். இத்தகைய ஒரு ''இல்லத் திருச்சபை''யில் நிகழும் பணிகளுக்கு மார்த்தா உருவகமாகிறார். மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா நற்செய்தியில் இயேசு பல முறை ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைச் செயல்படுத்தவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: லூக் 8:21). அவ்வாறு செயல்படுவோர் இயேசுவின் குடும்பத்தினர் ஆவர் (லூக் 8:21).

-- எனவே, மரியா இயேசுவின் வார்த்தையைக் ''கேட்டுக்கொண்டிருந்தார்'' என்றால் மரியா அந்த வார்த்தையைச் ''செயல்படுத்திக் கொண்டிருந்தார்'' எனலாம். மார்த்தா இயேசுவிடம் சென்று முறையிட்டார் என்பதை விட ஒரு கோரிக்கையை அவர்முன் வைத்தார் என்பதே பொருத்தம். அந்த வேண்டுதலுக்கு இயேசு அளித்த பதில்மொழி நமக்குச் சிறந்த பாடமாக உள்ளது. அதாவது, மார்த்தாவும் மரியாவும் சகோதர உறவால் இணைந்தவர்கள். அவர்களிடையே நிலவியது இரத்த உறவு மட்டுமல்ல, மாறாக, இயேசுவிடம் நம்பிக்கை கொண்ட குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு புதிய குடும்பத்தில் உறுப்பினராக உள்ளனர். அந்த உறவின் அடிப்படையில் அவர்களிடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். செயல்பாட்டில் தங்கள் கவனத்தை முழுவதும் செலுத்தாமல் தொடர்ந்து கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும். வார்த்தைக்குச் செவிமடுத்தலும் அதைச் செயல்படுத்தலும் இணைந்து செல்லும்போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும். அதாவது, இயேசுவின் சீடராக விரும்புவோர் இறைவார்த்தையைக் ''கேட்க வேண்டும்''; அதைச் ''செயல்படுத்த வேண்டும்''. அப்போது மார்த்தாவும் மரியாவும் ஒன்றிணைந்து நமக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.

மன்றாட்டு
இறைவா, உம் வார்த்தையை எப்போதும் கேட்டு அதை வாழ்வில் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்'' (லூக்கா 10:41)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் நண்பர்கள் குழுவில் மரியாவும் அவருடைய சகோதரி மார்த்தாவும் இருந்தனர். அவர்களது வீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறார் இயேசு. அவரோடு சீடர்களும் இருந்திருக்க வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் கவனமாக இருக்கின்ற மார்த்தா, தம் சகோதரி தமக்கு உதவிசெய்யவில்லை என்று குறைகூறியபோது இயேசு கூறியது: ''மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்'' (லூக் 10:41). இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா ''நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்'' என்று இயேசு கூறியதிலிருந்து மார்த்தாவும் தம் பங்கைத் தேர்ந்துகொண்டார் என நாம் முடிவுசெய்யலாம். ஆனால் மார்த்தா ''கவலைப்பட்டுக் கலங்குகிறார்''.

-- கவலையும் கலக்கமும் நமக்கு எங்கிருந்து வருகிறது என்று அலசிப் பார்த்தால் அவை நம் சிந்தனையிலிருந்தும் அச்சிந்தனைக்கும் கீழே படிந்திருக்கின்ற நம்பிக்கைகளிலிருந்தும் தோன்றுவதை நாம் உணரலாம். இயேசுவை வரவேற்பதற்கு வழக்கமான வழியைத் தேர்ந்தெடுக்கிறார் மார்த்தா. சமையல் செய்வதும், பரிமாறுவதும் உபசரிப்பதும் அவருடைய வழியாகிறது. மரியாவோ வழக்கத்துக்கு மாறான வழியைத் தேர்ந்தெடுக்கிறார். அக்காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த ஒரு செயல்பாட்டை மரியா தேர்ந்தெடுக்கிறார். அதாவது, குருவின் காலடி அருகே அமர்ந்து அவருடைய போதனைக் கேட்கும் சீடர் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மீறி, மார்த்தா இயேசுவின் சீடராக அவரருகே அமர்ந்து கவனமாகச் செவிமடுக்கிறார். மரியாவின் உள்ளத்தில் இனம் காணாத அமைதி, மார்த்தாவின் உள்ளத்திலோ கவலையும் கலக்கமும். ஆக, மார்த்தா விருந்தினரை வரவேற்றது தவறு எனலாமா? நிச்சயமாக இல்லை. நம் செயல் வழியாக நாம் பிறருக்கு (இயேசுவுக்கு) பணிசெய்ய அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் நாம் செய்கின்ற அன்புப் பணி நம் உள்ளத்தில் கவலையையும் கலக்கத்தையும் உருவாக்குவதாக மாறிவிடலாகாது. கவலைப்பட்டுக் கலங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் நாமும் மரியாவைப் போல இயேசுவின் சொற்களை உள்ளத்தின் அமைதியில் கேட்க வேண்டும்; மார்த்தாவைப் போல அச்சொல்லை அன்புணர்வோடும் மகிழ்வோடும் செயல்படுத்த வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் செய்யும் பணியைக் கலக்கமின்றி ஆற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

சரியான தேர்வு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயணத்தின்போது அவ்வப்போது பேச்சுத்துணைக்கு ஆட்கள் அல்லது ஊர்கள் வந்தால் பயணம் களைப்பாக தோன்றாது, இனிமையாக இருக்கும். இயேசுவின் எருசலேம் பயணத்திலும் மக்களைச் சந்தித்தபோது ஆறுதலும் நம்பிக்கையும் பெற்றார். நம் வாழ்க்கைப் பயணத்திலும் அவ்வாரே உற்றார், உறவினர், நண்பர்கள் இ;ல்லை என்றால் வாழ்க்கைப் பயணம் பெருஞ்சுமையாகிவிடும்.

இந்த உற்மும் சுற்றமும் நட்பும் நம் பயணத்தின்போது நம் மனநிலையைப் புரிந்து, நம் இலட்சியப் பயணத்தினை ஏற்றுக்கொண்ட கூட்டமாக இருந்தால், பயணப் பளுவை அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்வதால், பயணத்தின் பாரம் நம்மை அழுத்தாது. பாடுகள், மரணம், உயிர்ப்பு என்னும் இயேசுவின் கல்வாரி நோக்கிய இலட்சியப் பயணத்தில் மார்த்தாள், மரியாள், லாசர் இவர்களது வீடு, இவர்களின் சந்திப்பு மிகவும் உதவியது. பெற்றோர் இல்லாத அவர்களுக்கும் நோயுற்ற லாசருக்கும் உதவியது.

பயணக்களைப்போடு வந்த இயேசுவை மார்த்தாள் பல்சுவை உணவுடன் உபசரித்தாள். மனச்சுமையோடு வந்த இயேசுவை அவர் பாதம் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டு,அவரது உணர்வைப் பகிர்ந்து,மன வேதனையைக் குறைத்தாள். இருவரின் செயல்களும் சிறப்புடையதாயினும், மரியாவின் செயல் அவசியமானது, அவசரமானது, அந்த நேரத்திற்குரியது. எனவே இயேசு அவள்; செயலைப் பாராட்டுகிறார். நேற்று நல்ல சமாரியன் செயலைப் பாராட்டிய இயேசு, இன்று மரியாவின் செயலைப் புகழ்கிறார்.

இரு வேறு நற்செயல்களையும் மக்களின் தேவைக்கேற்ப செய்வது கிறிஸ்து எதிர்பார்க்கும் ஆன்மீகம்.

 

--அருட்திரு ஜோசப் லீயோன்