முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-2, 7-14


சகோதரர் சகோதரிகளே, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். நான் போகவேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்துவந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப் போகக் கூடாதே என்பதற் காகத்தான் இவ்வாறு செய்தேன். ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிற இனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார். அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கைகொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம். ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன். ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார். மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்துகொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்து விட்டது. இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், ``நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?'' என்று கேட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி

2 ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். அல்லேலூயா.

 

லூக்கா 11:1-4

பொதுக்காலம், வாரம் 27 புதன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ``ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…
லூக்கா 11:1-4

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும்.

1. காலை சொல்லுங்க...
காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக போற்றி புகழ்ந்து நம் தேவைகளை அவர் பாதத்தில் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது. காலையில் கடவுளே நான் கனிவோடு நடக்க வேண்டும். என்னுடைய பேச்சு, மூச்சு அனைத்திலும் கனிவு இருக்க வேண்டும் என்று மன்றாட வேண்டும்.

2. மதியம் சொல்லுங்க…
மதியம் நன்கு சாப்பிட்ட பிறகு கடவுளின் ஆச்சரியமான செயல்களை அசை போட வேண்டும். மதியம் மறக்காமல் பிறர் எனக்கு எதிராக பேசியவைகள், செய்தவைகளை மன்னிக்க நல்மனம் தாரும் ஆண்டவரே என மன்றாட வேண்டும். அதற்கு இந்த ஜெபத்தை சொல்லி மன்றாட வேண்டும்.

3. இரவு சொல்லுங்க…
இரவு கடவுள் நாள் முழுவதும் காத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். அன்றைய நாள் செய்த செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து பார்க்க வேண்டும். தவறுகள் கண்டிப்பாக இருக்கும். இந்த மந்திரத்தைச் சொல்லி மறுநாள் தவறுகள் ஏற்படாமல் இருக்க ஜெபிக்க வேண்டும். அருள் வேண்ட வேண்டும்.

மனதில் கேட்க…
1. ஆண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம், அதன் வல்லமை தெரியுமா?
2. ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லி ஆண்டவரின் அதிசயத்தை அனுபவிக்கலாமா?

மனதில் பதிக்க…
தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! (லூக் 11:2)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

கலாத்தியர் 2: 1 – 2, 7 – 14
புறவினத்து மக்களுக்கான நற்செய்தி

தூய பவுலடியார், தன்னை இயேசுவின் திருத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும், கிறிஸ்து தான், தன்னை இந்த நற்செய்திப் பணிக்கு அழைத்தார் என்பதை, மற்றவர்களுக்கு புரிய வைப்பதிலும் அதிக சிரமப்பட்டார். அதற்காக, அவர் யாரிடமும் எந்தவிதமான சமரசம் செய்து கொள்ள முன்வந்தததில்லை. அது திருத்தூதர்களே என்றாலும், ஒரே நிலை தான். இப்படிப்பட்ட குழப்பங்கள் நிறைந்திருக்கிற தருணத்தில், பேதுருவை எதிர்கொண்டு, அவருடைய செயலை, தவறு என்று சுட்டிக்காட்டுகிற மன வலிமையை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார்.

பிற இனத்தவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் யூதப்பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, பெரும்பாலான, கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிற யூதர்களின் வாதம். ஆனால், பவுலடியார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பேதுருவுக்கு காட்சியில், "கடவுள் பார்வையில் தீட்டென்று படாதததை, நீ தீட்டாக நினைக்காதே" என்று, புறவினத்து மக்களை ஏற்றுக்கொள்ளுகிற மனநிலையை, கடவுள் பேதுருவுக்குக் கொடுக்கிறார். பேதுரு அதனை ஏற்றுக்கொண்டாலும், யூதர்கள் நடுவில் அதனை வெளிப்படுத்த பயப்படுகிறார். "யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார். ஆனால், அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்". இதனை அடிப்படையாக வைத்து, பேதுருவைப்பார்த்து பவுல் கேட்கிறார், "நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல், பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க, பிற இனத்தார், யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? என்று, நேரடியாக, துணிவோடு கேட்கிறார். அதற்காக எவ்வளவு எதிர்ப்புக்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், துணிவோடு கேட்கிறார்.

உண்மையை நாம் உரைக்கிறபோது, எந்தவித எதிர்ப்புக்களையும் சமாளிப்பதற்கு கடவுள் ஆற்றல் தருவார் என்பது, பவுலடியார் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். அவர் தன்னுடைய போதனை, இயேசு கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட போதனை என்பதை, நம்புகிறார். எனவே, அதனை உறுதியாக, துணிவோடு, எவருக்கும் பயப்படாமல் அறிவிக்கிறார். நம்மிடத்தில் உண்மை இருக்கிறபோது, நிச்சயம் நாமும் எவருக்கும் பயப்படாமல், நற்செய்தியை அறிவிக்க முடியும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

வாழ்வியல் செபம்

இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண உணவு, உடுக்க துணி, உறங்க உறைவிடம். இந்த அடிப்படைத் தேவைகளை கடவுள் நமக்கு வழங்க நாம் கடவுளிடத்தில் செபிக்கவும், அதற்காக உழைக்கவும் அழைக்கப்படுகிறோம். அதன்பிறகு நமது வாழ்க்கை முறையை சீர்தூக்கிப் பார்க்க அழைப்புவிடுக்கிறது. நமக்கு வரக்கூடிய சோதனைகள், நமது பலவீனங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை தரக்கூடியவர் கடவுள் மட்டும் தான். எனவே, நமது முயற்சியோடு கடவுளின் அருளுக்காகவும் மன்றாடுகிறோம்.

இந்த இறைவேண்டலை வெறும் செபமாக மட்டும் நினைக்காமல், நமது வாழ்வியல் சிந்தனையாகவும் வாழ முயற்சிப்போம். இதில் வரக்கூய சிந்தனைகளை நமது வாழ்வாக மாற்ற முனைவோம். அதுவே நமது வாழக்கை கடவுளை நோக்கியதாக இருக்க உதவியாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இறைவன் நமது தந்தை

போதகர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சீடர்களுக்கு செபம் செய்ய கற்றுக்கொடுப்பது வழக்கம். யோவான் தன்னுடைய சீடர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். எனவேதான், இயேசுவின் சீடா்கள் தங்களுக்கும் கற்றுக்கொடுக்கக் கேட்டார்கள். இயேசுவும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அருமையான ஒரு செபத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். அவருடைய முதல் வரியிலே, கடவுள் யார்? என்பதைக் காட்டிவிடுகிறார்.

கடவுள் நமது தந்தை. இதுதான் பரலோக மந்திர செபத்தின் முக்கியமான சிந்தனை. இறைவனை நமக்கு தந்தையாக இயேசு அறிமுகப்படுத்துகிறார். அதாவது, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். கடவுளிடத்திலே நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளிடத்திலே நாம் கேட்டால் கிடைக்குமா? என்ற சந்தேகம் தேவையில்லை. மாறாக, நம்பிக்கையோடு கடவுளிடம் நாம் கேட்க வேண்டும். கடவுள் நம் தந்தை என்ற உரிமையோடு கேட்க வேண்டும். அத்தகைய உரிமையை இயேசு இந்த செபத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

நமது தந்தையிடத்திலே கேட்கிறோம் என்ற உணர்வு செபத்தில் நமக்கு இருக்கும் என்றால், நாம் கேட்டது நிச்சயம் கிடைத்துவிட்டது என உறுதியாக நம்பலாம். அத்தகைய உணர்வை, உரிமையை நாம் செபத்தில் ஒவ்வொருநாளும் வெளிப்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இவ்வாறு வேண்டுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடர்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்களுக்கு இறைவேண்டல் கற்றுக்கொடும் என்று கேட்டவுடன், மிக அருமையான இறை வேண்டலை இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்த வேண்டுதலில் தந்தையைப் புகழ்தல், அவர் விருப்பத்துக்கு நம்மைக் கையளித்தல், நம் தேவைகளுக்காக மன்றாடல், மன்னிப்புக் கோருதல் என முழுமையான செபத்தின் அனைத்துக் கூறுகளும் அமைந்துள்ளன. இந்த செபத்தை மட்டும் செபிப்பதோடு, நிறுத்திவிடாமல், இந்த செபத்தில் உள்ள அனைத்துக் கூறுகளையும் நம் செபங்களில் இணைத்துக்கொள்வோம். நாள்தோறும் தந்தை இறைவனைப் புகழ்ந்து, அவரது விருப்பத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற அருள்கோருவோம்.

இன்று செபமாலை அன்னையின் விழா. அன்னை நம்மை செபமும், தவமும் செய்ய அழைப்பு விடுக்கின்றார்கள். செபமாலை ஒரு வலிமையான செப ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் கையில் தாங்கி, நாள்தோறும் செபிப்போம். செப வீரர்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே, நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு சீடர்களிடம், 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்:
தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!...' என்றார்'' (லூக்கா 11:2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''கர்த்தர் கற்பித்த செபம்'' எனவும் ''இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்'' எனவும் அழைக்கப்படுகின்ற மன்றாட்டு மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் சிறிது மாறுபட்ட வடிவத்தில் உள்ளன (காண்க: மத் 6:9-15; லூக் 11:2-4). கடவுளை நாம் ''தந்தை'' என அழைக்கும்படி இயேசு கேட்கின்றார். இயேசுவே கடவுளைத் ''தந்தை'' எனவும் ''என் தந்தை'' எனவும் பட தருணங்களில் அழைக்கிறார். மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த இச்சொல் ''அப்பா'' என்னும் பொருள் தருவது. இயேசு பேசிய அரேமிய மொழிச் சொல்லும் ''அப்பா'' என்னும் வடிவம் கொண்டதே. கடவுளைத் தந்தை என அழைப்பதன் பொருள் மூன்று விதங்களில் வெளிப்படுகிறது: அதாவது, கடவுள் அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் ஆள்பவர், அனைத்தையும் பேணிக்காப்பவர். இவ்வாறு மனிதருக்கு அனைத்து நலன்களையும் அளித்து, அவர்களைக் காப்பவர் என்பதால் கடவுளைத் தந்தை என அழைப்பது பொருத்தமே. உரோமை மன்னர்களும் ''நாட்டுத் தந்தை'' என அழைக்கப்பட்டார்கள். ஆனால், ஆண்வழி சமுதாயத்தில் ஆணாதிக்கம் நிலவிய பின்னணியில் கடவுளைத் தந்தை என அழைத்து, அதிலிருந்து ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என நாம் பொருள்கொண்டு, கடவுளை அப்பாணியில் ஓர் ஆணாகவும் தந்தையாகவும் உருவகிப்பது தவறாகும். ஏனென்றால் விவிலியம் காட்டுகின்ற கடவுள் இத்தகைய ஆணாதிக்கக் கடவுள் அல்ல.

-- கடவுள் நம் தந்தை என்பதன் உண்மைப் பொருள் அவர் நமக்கு ஊற்றாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறார் என்பதும், நம்மை அன்போடு பராமரித்துக் காக்கிறார் என்பதும் ஆகும். இப்பண்புகளை நாம் பெண்மைக்கும் ஏற்றி உரைக்கலாம். எனவே கடவுள் நமக்குத் தந்தையும் தாயுமாக இருக்கிறார் என நாம் கூற முடியும். அது மட்டுமல்ல, கடவுள் தம் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தைபோல நாம் மாற வேண்டும் எனக் கேட்கின்றார். எனவே, ஆட்சி அதிகாரமும் அடக்குமுறையும் கடவுளின் பண்பல்ல, மாறாக, அன்போடு அனைவரையும் அரவணைத்து, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரையும் உரிமை மறுக்கப்பட்டோரையும் மதித்து ஏற்கும் பண்பே கடவுளின் உள்ளார்ந்த இயல்பு. இவ்வாறு நாம் கடவுளை உருவகித்து, அவரை அணுகும்போது நம் உள்ளத்தில் பிள்ளைக்குரிய பாசமும் பணிவும் தோன்றும். கடவுளின் பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்னும் உணர்வும் நம்மில் ஆழமாக வெளிப்படும்.

மன்றாட்டு
இறைவா, உம்மை நம்பிக்கையோடு அணுகி வந்து, பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு உம்மை அன்பு செய்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தந்தருளும்'' (லூக்கா 11:3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கோதுமை மாவைப் பிசைந்து செய்யப்பட்ட அப்பம் மத்தியதரைக் கடல் பகுதிவாழ் மக்களின் அன்றாட உணவு. வேறு பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் அன்றாட உணவு சோறு அல்லது கிழங்கு வகைகளாக இருக்கலாம். எந்த உணவானாலும் சரி, ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கான உணவைப் பெற்றுக்கொள்ள நாம் நம் கடவுளிடம் வேண்டுகின்றோம். அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ள நாம் உழைக்கிறோம். ஆனால் உலகில் பல்லாயிரக் கணக்கான மக்கள் உண்ண உணவின்றி வாடுகின்றார்கள். உயிர்வாழத் தேவையான உணவு கிடைத்தாலும் இதயத்தில் எழுகின்ற ஆழ்ந்த பசியைப் போக்க இயலாமல் தவிப்போரும் உண்டு. ஆக, கடவுளை நோக்கி நாம் ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான உணவைத் தரும்படி மன்றாடக் கடமைப்பட்டிருக்கின்றோம். உழைப்பின் பயனால் நிலத்தில் விளைகின்ற பயிர் மனிதரின் பசியை ஆற்ற உதவுகிறது. ஆனால் அந்த நிலம் விளைச்சல் தர வேண்டும் என்றால் கடவுளின் கொடையான மழையும் போதிய வெப்பமும் தேவை. இயற்கை வழியாகக் கடவுள் வழங்குகின்ற கொடைகள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கையே முடிவடைந்துவிடும்.

-- ஆனால் மனித இதயத்தில் எழுகின்ற பசி பற்றி என்ன சொல்வது? அன்புதான் மனிதரின் ஆழ்ந்த இதய வேட்கையை நிறைவுசெய்ய இயலும். கடவுளின் அன்புப் பெருக்கிலிருந்து தாராளமாகப் பெறுகின்ற நாம் மனிதரோடு அன்பினைப் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உறவுகளில் நேர்மையும், வாழ்க்கையில் குறிக்கோளும், மன்னித்து ஏற்கின்ற மனநிலையும், ஆழ்ந்த அமைதியும் நம் இதயப் பசியைக் போக்குகின்ற அன்றாட உணவாக உள்ளன. இந்த உணவையும் நாம் கடவுளிடம் வேண்டிக் கேட்கின்றோம். ஒவ்வொரு மனிதரும் இந்த உணவைத் தம்மை அடுத்திருப்போரோடு பகிர்ந்துகொண்டால் இவ்வுலகில் மனித வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும். எனவே, கடவுளிடம் உணவுக்காக வேண்டும் வேளையில் பிறரோடு உணவைப் பகிர்ந்துகொள்கின்ற மனநிலையை நமக்குத் தருமாறு வேண்டுகிறோம். அப்போது இயேசு நமக்குச் சொல்லித் தந்த இறைவேண்டல் (லூக்11:1-4) பொருளுடைத்ததாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் பசியை ஆற்றிட உணவாக வந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

தினமும் செபிப்போம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"இவ்வாறு சொல்லுங்கள்" இயேசுவின் வார்த்தையில் கருத்தாளம் நிறைய உள்ளது. ஏனென்றால் இயேசு இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்திய போதெல்;லாம் அவ் வார்த்தைகளின் கனாகனம் மிக மிகப் பெரிது.

நற்கருணையை ஏற்படுத்தியபோது ".. .. இவ்வாறு செய்யுங்கள்" என்றார் (லூக் 22'19). சீடர்களின் பாதங்களைக் கழுவிய பின் ".. .. .. நீங்களும் செய்யுமாறு முன்மாதிரி காட்டினேன்" (யோவா 13'15) என்றார். இவ்வாறு நற்கருணையும் பணிவாழ்வும் செப வாழ்வும் ஒன்றுக்கொன்று இணையானது, முக்கியமானது என்பதை உணரமுடிகிறது.

எனவே செபம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் இயேசு கற்றுத்தந்த செபம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிய வருகிறோம். இதன் சிறப்பை அறிந்த நாம் இந்த செபத்தின் பொருள் உணர்ந்து அடிக்கடி சொல்லும் பொருட்டே திருப்பலியிலும் தினசரி செபத்திலும் திருச்சபை இச்செபத்தை இணைத்துள்ளது. திரும்பத் திரும்பத் சொல்லும் இந்த செபம் வாடிக்கையாக மாறுவதால் வேடிக்கையாகிவிடக்கூடாது.

இதன் சிறப்பை உணர்ந்து தினமும் செபிப்போம்.

 

 

--அருட்திரு ஜோசப் லீயோன்