முதல் வாசகம்

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2

குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும். சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 9: 1-2. 5,15. 7b-8
பல்லவி: உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்;
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;
உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். -பல்லவி

5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்;
அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.
15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்;
அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. -பல்லவி

7b ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்;
நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.
8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்;
மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

லூக்கா 11:15-26

பொதுக்காலம், வாரம் 27 வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: ``தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், `நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8
”வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்”

கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை.

வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு, நேர்மையோடு நடக்கிற மனிதர்களுக்கு பல ஆசீரை வழங்கினார். அதேவேளையில் அவர்கள் தவறு செய்தபோது, அவர்களைத் தண்டிக்கவும் கடவுள் தாமதிக்கவில்லை. அவர்களை தண்டிப்பதற்கு முன்னதாக எச்சரித்தார். மனம் மாறுவதற்கு அழைப்புவிடுத்தார். அவர்கள் கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காதபோது அதற்கான தண்டனையை வழங்கினார். ஆக, கடவுள் எல்லாருக்குமான கடவுள் என்பதும், ஆள்பார்த்துச் செயல்படாதவர் என்பதும், அனைவரையும் அன்பு செய்கிறவராக இருக்கிறார் என்பதும் இங்கு தெளிவாக்கப்படுகிறது.

கடவுளை நாம் வெகு எளிதாக அணுக முடியும் என்கிற செய்தி இந்த திருப்பாடல் வழியாக நமக்கு வழங்கப்படுகிறது. அது எவ்வாறெனில், நீதியோடு நாம் வாழ முயற்சி எடுக்கிறபோது கடவுள் நம்மைத் தேடி வருகிறவராக, நம் துயர் துடைக்கிறவராக மாறுகிறார். அந்த இறைவனை நேர்மையான உள்ளத்தோடு அணுக நாம் உறுதி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் கடவுள் நம்பிக்கை

இயேசுவை நேரடியாக வாய்மொழியால், தங்களுடைய அறிவால் வீழ்த்த முடியாதவர்கள், குறுகிய வழியில் அவர் மீது, எண்ணற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசுகின்றனர். அதில் ஒன்றுதான், பேய்களின் தலைவன் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான் என்கிற குற்றச்சாட்டு. யார் இந்த பெயல்செபூல். தலையாய பாவங்கள் மொத்தம் ஏழு. இந்த தலையாய பாவங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒரு பேய்களின் தலைவன் இருக்கிறான் என்பது பொதுவான கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கடவுளின் திருமுன்னிலையில் முதன்மைத்தூதர்கள் ஏழு பேர் இருப்பது போல, நரகத்தில் ஆட்சி செய்கின்ற ஏழு பேய்கள் முதன்மைப்பேய்களாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொறு தலையாய பாவங்களுக்கு தூண்டுகோலாய் இருக்கின்றன. லூசிபர் (தற்பெருமை), சதானஸ் (சீற்றம்),  அஸ்மோதஸ் (காமவெறி), மம்மோன் (பேராசை), பெல்பெகார் (பெருந்தீனி விருப்பம்), பெயல்செபூல் (பொறாமை), அபடான் (சோம்பல்). பொறாமை என்கிற தலையாய பாவத்திற்கு காரணமானவன் பெயல்செபூல்.

தன் மீது சாட்டப்பட்டிருக்கிற குற்றச்சாட்டை இயேசு அருமையாக எதிர்கொள்கிறார். அதற்கு அவர் தருகிற வாதம், சாலமோனைப் பற்றியது. சாலமோன் அரசர் ஞானத்தில் சிறந்தவராக மதிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் போற்றும் அரசர்களுள் மிக முக்கியமானவர் இந்த சாலமோன் அரசர். இயேசு வாழ்ந்த காலத்தில் பல பேயோட்டிகள் இருந்தனர். அவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட வித்தைகளுக்கு, சாலமோனை முன்னோடியாகக் கொண்டிருந்தனர். ஏனென்றால், சாலமோன் சில மூலிகைகளைப் பயன்படுத்தி, ஒரு சில மந்திரச்சொற்களைப் பயன்படுத்தி பேய்களை ஓட்டினார். அதற்கு பிறகு அந்த பேய்கள் திரும்பி வரவேயில்லை. அதைப்பின்பற்றித்தான் பாலஸ்தீனத்தில் பேயோட்டி வந்தனர். இயேசு பேய் ஓட்டுகிறபோது, அவரைப் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய் ஓட்டுகிறான் என்று சொன்னால், அது சாலமோனையே இழிவுபடுத்தி, மக்களின் கோபத்தையும் சம்பாதிக்க நேரிடும். எனவே, இயேசுவின் வாதத்தைக் கேட்டு, அவரிடம் கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர்.

கடவுள்மட்டில் நமக்கு நம்பிக்கை இருந்தால், நிச்சயமாக இந்த உலகத்தில் எதுவும் செய்ய முடியாது. அவரது வல்லமையும், ஆச்சரியமிக்க செயல்களும் நம்மை எல்லாவித தீங்குகளிலிருந்தும், சாத்தானின்பிடியிலிருந்தும் காப்பாற்றும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

துணிவும், மன உறுதியும்

இயேசு தனது வாழ்க்கையில் சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகளைச் செய்து வந்ததாக நற்செய்தியாளர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இயேசுவை எதிர்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இயேசு செய்கிற ஒவ்வொன்றிலும் குறை சொல்வதையும், குற்றம் காண்பதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த அடிப்படையில் இன்றைய நற்செய்தியிலும் இயேசு மீது பேய்களின் தலைவனைக்கொண்டு பேய் ஓட்டுவதாக, அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இயேசு தன் மீது குற்றம் சுமத்தப்படுவதைக்கண்டு நன்மை செய்வதை நிறுத்தவில்லை. “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்ற கொள்கையோடு, குற்றச்சாட்டுக்களை புறந்தள்ளிவிட்டு இன்னும் அதிக முனைப்போடு நன்மை செய்யத் தொடங்குகிறார். அதேபோல் தன் மீது அவதூறுகளை மற்றவர்கள் வாரி இரைத்தாலும் சோர்ந்து போய்விடவில்லை. உடைந்து போகவில்லை. துணிவோடு எதிர்கொள்கிறார். எத்தனைபேர் இயேசுவை எதிர்த்தாலும், எப்படிப்பட்ட அவதூறுகளைச்சொன்னாலும், மன உறுதியோடு இயேசு நிற்கிறார்.

வாழ்வில் நன்மைகளைச்செய்ய நாம் தயங்கக்கூடாது. நன்மைகளைச் செய்யும்போது நமது வழியில் வரும் இடறல்களைக்கண்டு கலங்கிவிடக்கூடாது. துணிவோடு இருக்க வேண்டும். மன உறுதியோடு இருக்க வேண்டும். அதனை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வலியவர் ஆயுதம் தாங்கி.. !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்” என்னும் இயேசுவின் எச்சரிக்கை மொழிகளை இன்று சிந்திப்போமா?

நமது ஆன்மீக வாழ்வு என்பது ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கை. அதில் நாம் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்ச்சிக்கும் சிங்கம் போன்ற அலகை நம்மைத் தாக்கி, நமது படைக்கலங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, நம் வாழ்வையும் பங்கிட்டுக்கொள்வான். எனவே, நாம் “ஆயதம்” தாங்கி நம் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டும். எந்த “ஆயுதம்”  தாங்கி? இறைவார்த்தை ஓர் ஆயுதம். அன்புச் செயல் என்பது இன்னொரு ஆயுதம். செபம் என்பது இன்னொரு ஆயுதம். இந்த ஆன்மீக ஆயுதங்கள் தாங்கி, நம்மைக் காத்துக்கொள்வோமாக.

மன்றாடுவோம்: வலிமையின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. சோதனைகளில் வீழ்ந்துவிடாதபடி நாங்கள் விழித்திருந்து செபிக்கவும், இறைவார்த்தை என்னும் ஆயுதம் தாங்கி எங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளவும், அன்புச் செயல்களால் எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------

பின்னைய நிலை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இதோ நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை. ஒருவரைவி;ட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், திரும்ப வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத ஏழு ஆவிகளை அழைத்துவந்து அவருள் குடியிருக்கும் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார். அவரது பின்னைய நிலை முன்னைய நிலையைவிடக் கேடுள்ளதாகும் என்று கூறுகிறார்.

நமது அருள்வாழ்வின் தரம் முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஒன்று. நாம் ஒன்றில் முன்னேற வேண்டும். அல்லது பின்னேற வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்றில்லை. வாழ்வின் தரம் உயராவிட்டால், தீமைகள் அதிகரித்துவிடும். நமது வாழ்வின் நல்ல பழக்கங்களை நாம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கங்கள் நம்மை ஆட்கொண்டு, நமது பின்னைய நிலை முன்னைய நிலையைவிடக் கேடுள்ளதாக மாறிவிடும். ஆண்டவரி;ன் இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் நம் சொற்கள், செயல்பாடுகள், பழக்கங்கள் பற்றிக் கவனமாயிருப்போம்.

மன்றாடுவோம்: தூய்மையின் இருப்பிடமே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடமுள்ள தீய பழக்கங்களைக் கைவிட்டு, நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க  எங்களுக்கு அருள் தாரும். எங்களது அருள்வாழ்வில் இன்றைய நிலை நேற்றைய நிலையைவிடக் கேடுறாதபடி எங்களைக் காத்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர்.
வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை.

-- இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்'' (லூக்கா 10:23)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு நாம் அந்த ஆட்சியில் நுழையவிடாமல் தடுக்கின்ற சக்திகளைப் பற்றியும் நம்மை எச்சரிக்கிறார். கடவுளின் சக்தியை எதிர்க்கின்ற சக்திகள் தோல்வியுறுவது உறுதி. ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு நெடிய போராட்டம் நிகழ்கிறது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆகவேதான், இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்ய நாம் முன்வராவிட்டால் படிப்படியாக நாம் அவருடைய எதிரிகளாக மாறிவிடுகின்ற ஆபத்து உண்டு. இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். நம்மைவிட்டு வெளியேறிய தீய ஆவி மீண்டும் நம்மைத் தேடி வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட நமக்கு இன்னும் அதிக சக்தி தேவைப்டக்கூடும். எனவே, இயேசுவோடு நாம் எப்போதும் இணைந்திருந்து செயல்படவும் தீய ஆவிக்கு நம் உள்ளத்தில் இடம் கொடாமலிருக்கவும் அழைக்கப்படுகிறோம்.

-- நற்செய்தி நூலில் ''நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்ற சொற்றொடரும் இயேசு வழங்கிய போதனையாக வருகிறது (லூக் 9:50). இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், வெளிப்படையாக இயேசுவின் சீடராகத் தம்மை அடையாளம் காட்டாதவர்களும் மறைமுகமாக இயேசுவைச் சார்ந்திருக்கலாம் என்பதே உண்மை. எனவே, யார்யார் கடவுளின் வழிகளைப் பின்பற்றுகின்றனர் என்பது குறித்துத் தீர்ப்பு வழங்குவதில் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். என்றாலும் இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த பிறகு அவரோடு என்றும் இணைந்திருக்க நாம் இடையறாது முயல வேண்டும். அவ்வாறு ஒரு தொடர்முயற்சியை நாம் மேற்கொள்ளாவிட்டால் நாம் அவருடைய ஆட்சியிலிருந்து பிரிந்துபோய்விடக் கூடும். எனவேதான் இயேசுவை நாம் எந்நாளும் சார்ந்து இருக்கவேண்டும். அப்போது இயேசுவின் பணியைத் தொடர நாம் மகிழ்ச்சியோடு முன்வருவோம். அனைத்து மக்களோடும் இணைந்து செய்யப்பட வேண்டிய இப்பணி முறையாக நிகழுமென்றால், கடவுளின் ஆட்சியில் பங்கேற்க நாம் தயங்கமாட்டோம்; பிறரையும் இறையாட்சிக்குள் கொண்டுவர நாம் துணிந்து செயல்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, வாழ்க்கைப் போராட்டத்தில் நாங்கள் உம்மோடு சேர்ந்து நின்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

வேண்டாம் இந்த விபரீதம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பலருடைய நிலைப்பாடு மதில்மேல் பூனை, அல்லது கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரி. இது நாயா? நரியா? என்று தெறியாத வெளிவேடம். ஒண்ணுல கூட்டணி என்று சொல்லு அல்லது எதிரணி என்று சொல்லு. மூன்றாம் அணி என்று சொல்லும்போதே விவகாரம் விஷ்வ ரூயஅp;பம் எடுக்கத் தொடங்கிவிடுமல்லவா.

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்" உண்மை. ஆன்மீகத்தில் மூன்றாவது அணிக்கு இடமே இல்லை. அருள் வாழ்வில் இடைப்பட்ட நிலைக்கு வாய்ப்பே இல்லை. ஒன்றில் ஆண்டவனோடு அல்லது அலகையோடு, அருளோடு அல்லது இருளோடு. நீதி அல்லது அநீதி, உண்மை அல்லது பொய்மை இதுதான் நியதி.

பெயல்சபூலுடன் பேச்சுவார்த்தை வைத்து இறையரசு அமைக்க இயேசு ஒருபோதும் விரும்பியதில்லை. அலகையுடன்; சமரசம் செய்து இறையரசை தக்க வைக்க இயேசுவின் அரசுக்கு அவசியமில்லை. இரட்டை வேடம், இரட்டை வாழ்க்கை இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல. "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது"

இத்தகைய இரட்டை நிலை, எப்பொழுதும் எதிரிக்கு பின் வாசலை திறந்தே வைத்திருக்கும். எந்த நேரத்திலும் வெளியே அனுப்பியவர்கள் தோரணையோடு உள்ளே வருவார்கள். அப்புறம் "பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

கடவுளின் சார்பில், அவரோடு மட்டும் இருப்போம். நமக்கு குறை இருக்காது.

--அருட்திரு ஜோசப் லீயோன்