முதல் வாசகம்

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 3: 12-21

ஆண்டவர் கூறுவது: வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது; ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது. கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன. ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 97: 1-2. 5-6. 11-12
பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். -பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

லூக்கா 11:27-28

பொதுக்காலம், வாரம் 27 சனி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ``இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12
”அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன”

இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை.

சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும். அதைத்தான் இந்த பாடல் நமக்கு சிந்தனையாக தருகிறது.

இன்றைக்கு எத்தனை மனிதர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் தங்களது வாழ்வை இழந்திருக்கிறார்கள். எத்தனை இனங்கள் இப்படிப்பட்ட சமூக தீமைக்கு பலியாகியிருப்பார்கள். அந்த தவறை நாம் செய்யாது, அனைவரையும் அன்பு செய்யக்கூடிய வரம் வேண்டி மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் வாழ்க்கை காட்டும் பாதை

வாழ்க்கையை எப்படியும் வாழலாம், இந்த வாழ்க்கை எதற்கு? வாழ்வதை விட மடிந்துவிடுவதே மேல்? நானும் வாழக்கூடாது? நீயும் வாழக்கூடாது? இந்த வாழ்க்கையே வீண்? கடவுள் ஏன் தான், இந்த உலகத்தைப் படைத்து, வாழ்க்கையைக் கொடுத்தாரோ? இதெல்லாம், இன்றைய உலகில், வாழ்வைப்பற்றி, மனிதனின் வெவ்வேறான பார்வைகளாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையை நாம் எப்படி அமைக்க வேண்டும்? ஒருவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கு இயேசு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

இயேசுவின் வாழ்க்கை மற்றவர்கள் பாராட்டக்கூடிய வாழ்க்கை மட்டுமல்ல, மற்றவர்கள் பரிகசிக்கக்கூடிய வாழ்வாகவும் இருந்தது. இந்த உலகத்தில் நாம் மற்றவர்களின் பரிகாசத்திற்குத்தான் பயப்படுகிறோம். எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்கிற எண்ணம் அதனை நிறைவேற்றுவதற்கு நமக்குத் தடையாக அமைந்துவிடுகிறது. பல வேளைகளில் அடுத்தவர் தான், நமது வாழ்வை தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதுதான், நமது வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு, மிகப்பெரிய தடைக்கற்களாக இருக்கிறது. இயேசு அந்த தடைகளை வெகு எளிதாக உடைத்துவிடுகிறார். தடைகளைத்தாண்டிச் செல்கிறார்.

நமது வாழ்க்கையிலும், அடுத்தவரைப்பற்றி எண்ணாது, நமது வாழ்வு எப்படி வாழப்பட வேண்டும் என்று நினைப்போம். நமது வாழ்வை சிறப்பாக வாழ நாம் உறுதி எடுப்போம். மற்றவர்களின் பரிகாசமோ, தேவையற்ற பேச்சுக்களோ நமது வாழ்வை மாற்றயமைக்காமல், நாம் வாழக்கூடிய வாழ்வாக இருக்க, இறையருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இயேசுவின் நிதானம்

புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும், நம்மைப்பற்றி மற்றவர்கள் புகழ்கிறபோது, நம்மை அறியாமல் நாம் மயங்குகிறோம். அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, நம்மைப்பற்றி மற்றவர்கள் நல்லவார்த்தைகள் பேசுகிறபோது, நம்மை அறியாமல் ஒருவித மயக்கம், அந்த வார்த்தைகளினால் வந்துவிடுகிறது. பல வேளைகளில், அந்த மயக்கமே நமது வாழ்வின் சறுக்கலுக்கும் காரணமாகிவிடுகிறது. வரலாற்றில் வீழ்ச்சி கண்டவர்கள், தோல்வியடைந்தவர் வரிசையை நாம் ஆராய்ந்து பார்த்தால், நிச்சயம் பலபேர், புகழ்ச்சியினால், ஆட்சியை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இங்கே இயேசு புகழ்ச்சிக்கு மயங்காமல், நிதானத்தை இழக்காமல், புகழ்ச்சிக்கு மத்தியிலும் தனது தெளிவான சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.

இயேசுவைப்பற்றி சொல்லக்கூடிய வார்த்தைகள் நிச்சயமாக பொய்யானவை அல்ல. இயேசு தீய ஆவிகளை ஓட்டியிருக்கிறார். தீய ஆவிகளைப் பற்றியச் செய்தியை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறார். தான் பேய்களின் தலைவன் பெயல்செபூலைக்கொண்டு பேயோட்டவில்லை என்று ஆதாரத்தோடு வாதிட்டிருக்கிறார். எனவே, அவர் நிச்சயமாக அந்த பெண்ணின் புகழ்ச்சிக்கு தகுதியானவர்தான். பெண்களுக்கு வீட்டிலே பேசுவதற்கு மறுக்கப்பட்ட காலத்திலும், துணிவோடு மனதில் நினைத்ததை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல், பயப்படாமல் சொன்ன, அந்த பெண்ணின் வார்த்தைகள் நிச்சயம் உண்மையான வார்த்தைகள். உள்ளத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகள். அப்படியிருந்தபோதிலும் இயேசு நிதானத்தை இழக்கவில்லை.

நிதானம் என்கிற பண்பு நமது வாழ்வின் முக்கியமான பண்பு. குறிப்பாக, மகிழ்ச்சியாயிருக்கும்போதும், பதற்றமான காலத்திலும் நிதானப்போக்கைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இரண்டு தருணத்திலும் நாம் நிதானத்தை இழக்கிறோம். அதனால், பல இழப்புகளைச் சந்திக்கிறோம். நிதானத்தை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

உணர்விலிருந்து உண்மைநிலைக்கு….

இன்றைய நற்செய்தியிலே உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். உணர்வுகளால் உந்தப்பட்ட அவள், இயேசுவைப் பெற்றேடுத்த தாயைப்புகழ்கிறாள். உணர்வுகள் நல்லது தான். ஆனால், உணர்வு அளவில் நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, உண்மை நிலைக்கும், யதார்த்த நிலைக்கும் நாம் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தருகிறார்.

நம்முடைய வாழ்வில் உணர்வுகளை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறோம். அழுகையாக, சிரிப்பாக, கோபமாக, வெறுப்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். உணர்வு அளவிலே நாம் நின்று விடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து யதார்த்த நிலைக்கு, உண்மை நிலைக்கு செல்வதுதான் நம்முடைய பக்குவத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று. எந்த ஒரு நிகழ்வை நாம் வாழ்வில் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளா்த்துக்கொள்வதுதான் யதார்த்த நிலைக்கு செல்வது. இயேசு அந்தப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடவில்லை. உணர்வு அளவிலே தங்கிவிடவில்லை. அதனைக்கடந்து தெளிந்து நிலைக்குச் செல்கிறார். அதனை நாமும் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறார்.

இயேசு உணர்வு நமக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. உணர்வோடு தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது நமது வாழ்வின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்று சொல்கிறார். அந்த அழைப்பை ஏற்று வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இருமுறை பேறுபெற்றவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அன்னை மரியாவுக்குப் புகழ் சேர்க்கும் லூக்கா நற்செய்தியின் ஒரு பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். அன்னை மரியா இரண்டு வகைகளில் பேறுபெற்றவர் என்பதை இயேசு அறிக்கையிட்டுத் தம் அன்னையைப் பெருமைப்படுத்துவதை அன்னையின் ஆhவலரான லூக்கா கவனமுடன் பதிவுசெய்துள்ளார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறள் மொழிக்கேற்ப, இயேசுவின் அருள்மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் அவரது போதனையாலும், ஆளுமையாலும் கவரப்பட்டு, அவரது அன்னையைப் புகழ்கிறார். ஞானம் நிறைந்த இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கிப் பாலுட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் என்று ஒரே நேரத்தில் தாயையும், மகனையும் புகழ்கிறார். இயேசுவோ இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்று சொல்லி, தம் தாய் மரியா இறைவார்த்தையைக் கடைப்பிடித்ததாலும் இரட்டிப்பாகப் பேறுபெற்றவர் என்று அறிக்கை இடுகிறார்.

நாமும் அன்னை மரியி;ன் தாய்மையில் பங்கெடுக்க இயேசு அழைக்கிறார். அன்னை மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவராக வேண்டுமென்றால், இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்பவராக வாழ்வோமாக.

மன்றாடுவோம்: அன்னை மரியின் திருமகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம் தாய் உம்மைக் கருத்தரித்தால் மட்டும் பேறுபெற்றவராகாமல், இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்ததாலும் பேறுபெற்றவராகச் செய்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து, அதன வழியாகப் பேறு பெற்றவராய் மாறும் அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்
இன்னும் அதிகம் பேறுபெற்றோர்' என்றார்'' (லூக்கா 11:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுள் தாம் அன்புசெய்கின்ற உலகத்தோடு நெருங்கி உறவாட விழைகின்றார். எனவேதான் அவர் தம் மகன் இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவர் வழியாக மக்களுக்கு நற்செய்தி வழங்கினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசு கடவுளின் வார்த்தையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அந்த வார்த்தை வழியாக நாம் நம் வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்கிறோம். ஆனால் வார்த்தையைக் கேட்டுவிட்டு அதன்படி நாம் செயல்படாவிட்டால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. லூக்கா நற்செய்தியில் ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் பேறுபெற்றோர்'' என்னும் கருத்து பல இடங்களில் காணப்படுகிறது. ''எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'' என இயேசுவின் தாய் மரியா ஏற்கெனவே பறைசாற்றியிருந்தார் (காண்க: லூக் 1:48). கடவுள் அறிவித்த சொற்படியே நடக்கட்டும் எனத் தாழ்ச்சியோடு தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்திருந்தார் (லூக் 1:38). கடவுள் அறிவித்த செய்தி தன் வாழ்வில் நிறைவேறும் என நம்பியிருந்தார் (லூக் 1:45). இயேசுவும், ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்'' எனக் கூறியிருந்தார் (லூக் 8:21). கடவுளின் வார்த்தையைத் தன் வயிற்றில் சுமந்த மரியா உண்மையிலேயே பேறுபெற்றவர் என்னும் வாழ்த்து ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது (காண்க: லூக் 1:42).

-- மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததால் நாம் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்துவது பொருத்தமே. இச்சிறப்பின் அடிப்படையாக இருப்பவர் இயேசுவே என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அவர் கடவுளுக்கு நிகராக இருந்தபோதிலும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து தமக்கு அளிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாக ஏற்றிருந்தார். ஆக, இயேசுவைத் தம் வயிற்றில் கருத்தாங்கி, பாலூட்டி அவரை வளர்த்து ஆளாக்கிய மரியா கடவுளின் பார்வையில் சிறப்பு மிக்கவர் ஆனார் என அறிந்து நாம் மகிழ்கின்றோம். இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதை நாம் கடைப்பிடித்து ஒழுகவும் வேண்டும். அப்போது அந்த வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் துலங்கி மிளிரும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் பேசுகின்ற உம்மை நாங்கள் திறந்த மனத்தோடு ஏற்று, உம் வார்த்தையின்படி வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''உம் தாய் பேறுபெற்றவர்'' (லூக்கா 11:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அன்னை மரியா இயேசுவைக் கருத்தாங்கி, பத்துமாதம் சுமந்து, இவ்வுலகிற்குப் பெற்றளித்தார். எனவே அவரை நாம் ''பேறுபெற்றவர்'' எனப் போற்றுவது பொருத்தம்தான். இதையே இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரும் வெளிப்படையாகப் பறைசாற்றினார். இயேசுவின் தாய் பேறுபெற்றவர் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலில், மரியா இயேசுவைத் தம் வயிற்றில் தாங்கி, அவரைத் தம் மகனாக இவ்வுலகிற்கு அளித்தார். மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளும் மனிதருமாகிய இயேசுவைப் பெற்றதால் அவர் ''கடவுளின் தாய்'' எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால், மரியா பேறுபெற்றவர் எனப் போற்றப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது, மரியா ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்தார்'' (காண்க: லூக்கா 11:28). கடவுளின் தாய் ஆவதற்கு இசைவு தெரிவித்தார் மரியா. கணவரோடு கூடி வாழ்வதற்கு முன்னரே இயேசுவைத் தம் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கிய மரியா கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். இதுவே அவரைப் ''பேறுபெற்றவர்'' ஆக மாற்றிற்று.

-- மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவர் ஆக வாய்ப்பு உள்ளது. நாமும் மரியாவைப் போல இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். கடவுளின் வார்த்தை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற நடத்தை நமதாக மாற வேண்டும். அப்போது நாமும் பேறுபெற்றவர் ஆவோம். இவ்வாறு கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தம் வாழ்க்கையை அமைக்காமல் கடவுளின் விருப்பத்தின்படியே செயல்பட முன்வருவார்கள். கடவுளின் விருப்பம் நாம் அவரை அன்புசெய்து வாழ்வதும் நம்மை அடுத்திருப்போரை நம்மைப்போல அன்புசெய்வதுமே ஆகும். எனவே, கடவுளில் நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும்; அன்புக் கட்டளையை நாம் செயல்படுத்த வேண்டும். அப்போது நாம் எதிர்நோக்கிக்; காத்திருக்கின்ற பேரின்ப வாழ்வு நமதாகும். நாம் உண்மையிலேயே ''பேறுபெற்றோர்'' ஆவோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மில் நம்பிக்கைகொள்வோரை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

வாழ்த்துவோம் வாருங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

அன்னை மரியாவை "அருள் நிறைந்த மரியே, வாழ்க" என்று வான தூதர்கள் வாழ்த்தினர். "பெண்களுக்குள் ஆசி பெற்றவள் நீரே" என்று எலிசபெத் வாழ்த்தினார். கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பி வாழ்த்துகிறார். உலகமே நம் அன்னை மரியாவை வாயார வாழ்த்தும்.

கூட்டத்தில் இருந்த பெண் தன் தாய்மையின் அனுபவத்தில் இயேசுவைப் பெற்ற மரியாவை இந்த வாழ்த்தைச் சொல்லுகிறாள். இயேசுவின் சிறப்பான மனிதாபிமானச் செயல்களில், தன் தாய்க்கு பெருமை சேர்ப்பதை இப்பெண் இங்கு அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டிய கூட்டத்திலிருந்தவள் இப்பெண். மகனின் பெருமைக்குக் காரணமான தாயை இங்கு வாழ்த்துகிறார்.

ஒவ்வொரு தாயும் பெருமைப்பட, கூட இருப்போர் வாழ்த்தும் விதத்தில் மகனும் மகளும் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் உயர்வே தாய்க்கு நிறைவு, மகிழ்ச்சி, பெருமை.

எந்த தாய்க்கு இப்படிப்பட்ட பிள்ளைகள் கிடைக்குமென்றால்,யார் கடவுளுக்குப் பயந்து, இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்கிறார்களோ அவர்களுக்கு. நம் அன்;னை மரியா, "இதோ ஆண்டவரின் அடிமை" என்று இறை வார்த்தையை வாழ்வாக்கியவர். ஆகவே முழு பெருமைக்கும் உறியவர்.

கூட்டத்தோடு சேர்ந்;து நாமும் வாழ்த்துவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்