முதல் வாசகம்

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-10


இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'' கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 10-11. 16-17

பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

லூக்கா 11:29-32

தவக்காலம் முதல் வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

21.02.2024 புதன்
மனமாற்றம் ...
லூக்கா 11 : 29 - 32

மனமாற்றம் என்ற வார்த்தையே சிலருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. சிலருக்குப் பயத்தைக் கொடுக்கிறது. சிலரில் கோபத்தை விளைவிக்கிறது. காரணம் மனமாற்றம் என்றாலே நமக்குப் பிடித்த ஒன்றை, நாம் விரும்புகின்ற ஒன்றை இழக்க வேண்டும். அப்போதுதான் கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ முடியும் என்ற செய்தி நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் மனமாற்றத்தின் நோக்கம் அதுவல்ல. மாறாக அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருந்து வெளிவர முயல்வதே என்பார் புனித கார்லோ. கடவுளது சாயலில் நிறைவோடும் சிறப்போடும் படைக்கப்பட்ட நாம், நம் உண்மை இயல்பை மறந்து பாவ அடிமைத்தனத்திலும், பொருள் மோகத்திலும் வாழ்கிறோம். இதுவே மகிழ்ச்சியின்மைக்கும் நிம்மதியின்மைக்கும் காரணம். துரதிர்ஷ்டவசமாக மகிழ்ச்சியைத் தேடுகிறோம் என்ற பெயரில், மகிழ்ச்சியின்மையை நம்மீது நாமே விருவித்துக்கொள்கிறோம்.

இன்றைய வாசகத்தில் கூட இத்தகைய ஒரு சிந்தனையைத்தான் நாம் வாசிக்கின்றோம். முதல் வாசகத்திலே நினிவே மக்களின் மனமாற்றத்தையும், நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்களின் மனமாற்றத்தையும் நாம் காண்கிறோம். ஒரு மனமாற்றம் அடிமை நிலையிலிருந்து வெளிவரக்கூடிய மனமாற்றமாகவும் அமைகிறது. இந்த இரண்டு மனமாற்றத்திலும் வாழ்வு முற்றிலுமாக மாற்றம் பெறுவதில்லை. நினிவே மக்கள் முற்றிலுமாக உணர்ந்து வாழ்வை மாற்ற முயலுகின்றார்கள். ஆனால் பரிசேயர்கள் அடையாளம் கொடுத்தால் மட்டுமே மாற்றம் பெறுவதாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். ஏனென்றால், மண்ணிலிருந்து எழும் சாட்சியை நம்பாதவர்கள், விண்ணிலிருந்து வரும் சாட்சியை எவ்வாறு நம்புவர்.

நாம் எத்தகைய மாற்றத்தை விரும்புகின்றோம்?

- அருட்பணி. பிரதாப்

===========================

லூக்கா 11: 29 – 32
அடையாளம்

கல்விக்கு அடையாளம் காமராசர். உழைப்புக்கு அடையாளம் டாக்டர் அப்துல் கலாம், நோ்மைக்கு அடையாளம் சகாயம் ஐ.ஏ.எஸ், நீதிக்கு அடையாளம் மைக்கிள் குன்கா. இவர்கள் அனைவருமே சமுதாய அடையாளங்கள். ஆனால் விவிலியத்தில் ஒரு சில நபர்கள் ஆன்மீகத்திற்கு அடையாளமாக திகழ்கின்றார்கள். ஞானத்திற்கு அடையாளம் சாலமோன், விசுவாசத்திற்கு அடையாளம் ஆபிரகாம், நோன்பிற்கு அடையாளம் யோனா, குடும்பத்திற்கு அடையாளம் தோபித்து. ஆனால் இந்த எல்லா அடையாளங்களையும் விட சிறந்தவர் இயேசு. ஏனென்றால் சென்ற இடமெல்லாம் புதுமைகள், அதிசயங்கள், நன்மைகளை செய்தார். இது தான் அவர் இறைமகன் என்பதற்கு அடையாளம். இது எப்போது சாத்தியமாகிறது என்றால் அவரை நம்புகின்ற போது. ஆனால் பரிசேயர்கள் இதனை மறுக்கின்றார்கள். அதனால் தான் இயேசு கோபம் கொள்கின்றார். புனித இரண்டாம் ஜான்பால் கூறுவார்: “நம்பிக்கை வழி தான் ஆண்டவனை அடைய முடியும், உடல் நலன் வழி அல்ல”.

நாம் இயேசுவை எப்படி பார்க்க ஆவல் கொள்கின்றோம். நம்பிக்கை வழியா? அடையா வழியா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

லூக் 11: 29 – 32
தவக்காலமே அடையாளம்

நாம் தவக்காலத்தை ஆரம்பித்து இன்றோடு ஒரு வாரம் ஆகின்றது. நம்மில் பல பேர் இந்த ஒரு வாரத்தில் பல வேண்டுதல்களோடும் கருத்துகளோடும் செபித்திருப்போம். சில புதுமைகளை அடையாளங்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு அடையாளங்கள் அரங்கேறியிருக்கும், சிலருக்கு ஏதும் நிகழாமல் இருந்திருக்கும். இன்று நம்மில் பலபேர் அடையாளங்களைத் தேடியும் புதுமைகளுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம். இயேசுவைக் காட்டிலும், போதகரின் மீது நம்பிக்கை வைத்து அலைந்தோடும் கூட்டம் தான் இன்றைய மிகப்பெரிய அவலநிலை. இப்படிப்பட்ட நமக்கு இன்றைய நற்செய்தி நல்லதொரு செய்தி.

முதலில் அடையாளம் என்பது என்ன என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அடையாளம் என்பது கண்ணுக்கு தெரிகின்ற ஒன்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது.

எ.கா:-
1. நாம் நம் திருப்பலியில் பயன்படுத்துகின்ற தூபம், நம் செபங்களும் இத்தூபத்தைப்போல ஆண்டவரை நோக்கி எழுப்பவேண்டும் என்பதன் அடையாளமே.

2. நற்கருணைப்பேழைக்கு அருகிலிருக்கும் அணையாத விளக்கு ஆண்டவர் கண்விழித்து நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே.

இந்த எண்ணத்தோடும் விவிலிய அறிவோடும் நாம் பார்க்கும்போது கண்டிப்பாக நாம் அடையாளங்களுக்காக அலைய மாட்டோம். மாறாக நம் அன்றாட வாழ்வில் அரங்கேருகின்ற ஒவ்வொன்றிலும் அவரின் புதுமையை, அவரின் வலக்கர வல்லமையைக் காண்போம். இக்காலத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய அடையாளம் இத்தவக்காலம். இந்த 40 நாளும் அவரின் அருள் நம்மை நிரப்பும் காலம். எவ்வாறு நினிவே மக்களுக்கு இறைவனின் அருளை யோனா எடுத்துச் சென்றாரோ, அதனைப் போல இத்தவக்காலம் அவரின் அருளை நம்மிடம் எடுத்து வரும் அடையாளமே. நினிவே மக்கள் எவ்வாறு யோனாவின் முறைமைகளுக்கும் வார்த்தைகளுக்கும் கீழ்படிந்தார்களோ அதனைப்போல நாமும் இத்தவக்காலத்தின் முறைமைகளுக்கு கீழ்படிந்து நம் வாழ்வினைக் காப்பாற்றுவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17
”பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது”

இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி செலுத்த வேண்டும்? பலி செலுத்துவதன் உண்மையான நோக்கம், கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற அன்பின் வெளிப்பாடாக, நமது உள்ளத்தில் மண்டிக்கிடக்கிற அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாகத்தான் செலுத்துகிறோம். ஆனால், இந்த உண்மையான அர்த்தம் இப்போது செலுத்தப்படுகிற பலியில் காணப்படுவது கிடையாது. பலி செலுத்தினால் கடவுளைத் திருப்திப்படுத்தி விடலாம், என்ன தவறு செய்தாலும், தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று, குறுகிய மனப்பான்மையோடு, இலாப நோக்கோடு செலுத்தப்படுகிற சடங்கு தான், நாம் வாழக்கூடிய உலகத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு கொடுக்கப்படுகிற சாட்டையடி தான், இன்றைக்கு நாம் சிந்திக்கிற வார்த்தைகள். உண்மையான மனமாற்றத்தினால் மட்டும் தான், நாம் கடவுளின் மன்னிப்பையும், அன்பையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர, வேறு எதைக்கொண்டும் நாம் கடவுளை மகிழ்ச்சிப்படுத்த முடியாது.

எதையும் இலாப நோக்கோடு சிந்திக்கிற நாம் வாழக்கூடிய உலகம், ஆன்மீகத்தையும் வியாபார நோக்கோடு தான், நம்மைப் பார்க்க வைப்பதற்கு முயன்று வருகிறது. இது தவறான கண்ணோட்டம். கடவுள் விரும்புவது நொறுங்கிய உள்ளத்தைத்தான். வெறும் கண்துடைப்பிற்காகச் செலுத்தப்படும் பலிகளை அல்ல என்பதை, நாம் உணர வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

கடவுளைத் தேடுவோம்

கடவுளை அடையாளங்கள் மூலமாக தேடக்கூடியவர்களுக்கு கொடுக்கப்படுகிற சவுக்கடி தான், இன்றைய நற்செய்தி வாசகம். கடவுளை அனுபவத்தின் மூலமாக மட்டும் தான், நாம் உணர முடியும் என்பதை, ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் வரக்கூடிய மனிதர்களின் மனநிலை, யூதர்களின் மனநிலை. யூதர்கள் எப்போதும், அடையாளங்களையும், அருங்குறிகளையும் தேடக்கூடியவர்கள். கடவுளை உணர்ந்தாலும், அடையாளங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் சிந்திக்கக்கூடியவர்கள். இந்த மனநிலை இறுதியில் தீர்ப்பிடப்படக்கூடிய அளவுக்கு தவறானது என்பதை, இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அடையாளங்கள் மட்டும் தான் கடவுளைக் காட்டும் வழிகள் அல்ல. அதனையும் தாண்டி, கடவுளை அனுபவிக்க, உணர நமக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. அடையாளங்களைக் கடந்து நாம் சிந்திக்க வேண்டும். இயேசு புதுமைகளையும், அற்புதங்களையும் மக்கள் மத்தியில் செய்தார். இது வெறுமனே அடையாளங்களுக்காக அல்ல. கடவுளின் அன்பையும், பராமரிப்பையும் உணர வேண்டும் என்பதற்காக. ஆனால், யூதர்கள் அந்த அடையாளங்கள் காட்டக்கூடிய அர்த்தங்களை உணராமல், வெறும் வேடிக்கை நிகழ்வாகவே பார்த்தார்கள். அதனால் தான், கண்டும் காணாதவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

நாம் அவர்களைப் போல இருக்கக்கூடாது. கடவுளைத் தேடுவது தவறு கிடையாது. அது மனித இயல்பு. அந்த தேடல் அர்த்தமுள்ள தேடலாக இருக்க வேண்டும். ஆத்மார்த்தமான தேடலாக இருக்க வேண்டும். வெறும் வேடிக்கை தேடலாக இருக்கக்கூடாது. அதற்கான அருளை நாம் கடவுளிடம் கேட்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவை அறிவோம்

மக்கள், அடையாளம், அருங்குறி என்ற பெயரில் இயேசுவை மறுதலிக்கிறார்கள். அவரை ஏற்றுக்கொள்ள அடையாளம் கேட்டு, அது தரப்படவில்லை என்பதால், இயேசு மக்களால் நிராகரிக்கப்படுகிறார். இயேசுவை நிராரிப்பது உண்மையிலே அவரை அனுப்பிய தந்தையாம் கடவுளையே நிராகரிப்பதற்கு சமமாகும். ஆனாலும், யூதர்கள் அந்த சிந்தனை இல்லாமல், இயேசுவின் வாழ்வும், செயலும் மக்கள் மத்தியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதைப்பொருட்டு கவலைப்படாமல், இயேசுவை நிராகரிக்கிறார்கள்.

இன்றைக்கு, இந்த நவீன காலத்திலும் நாம் பல வழிகளில் இயேசுவை நிராகரித்துக்கொண்டு தான் இருக்கிறோம். முற்காலத்தைவிட, இந்த காலத்தில் நமக்கு சுதந்திரம் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு பல தடைகள் இருந்தன. இயேசுவை ஏற்றுக்கொண்டால், அதற்காக உயிரைக்கூட இழக்க வேண்டிய சூழ்நிலைகள் மக்கள், மத்தியில் ஏற்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்கள் விசுவாசத்திற்கு உறுதியாக சான்று பகர்ந்தனர். இயேசுவைப்பற்றி அறிந்து கொள்வதற்கு தாகம் கொண்டிருந்தனர். இன்றைக்கு நமக்கு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது. இயேசுவை அதிகமான வழிகளில், எளிமையாக அறிந்து கொள்வதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாம் அதனை பயன்படுத்தாதவர்களாய் இருக்கிறோம்.

இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வதற்கு நான் என்ன முயற்சிகள் எடுக்கிறேன்? இயேசு மீதான எனது விசுவாசம், எனது வாழ்வில் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? இயேசுவின் வாழ்வு என்னில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? சிந்திப்போம். அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

இயேசுவின் துணிவு

கூட்டத்தைச் சேர்க்க வேண்டும், வந்திருக்கிற கூட்டத்தை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு பசப்பு வார்த்தைகளை மேடையேறிப் பேசுகிற பேச்சாளர்கள் இன்று ஏராளம், ஏராளம். அதைவிட போதகர்கள் ஏராளம், ஏராளம். ஆனால், இயேசு உண்மையை உரைக்கிறார். மக்கள் அவரிடத்தில் வருவதால், தன்னைப் பெரியவராகவோ, அவர்களைத் தக்கவைக்க வேண்டும், தன்னைப்பற்றி அதிகமாகப் பேச வேண்டும், அவர்கள் மகிழ்ச்சி அடைவது போல பேச வேண்டும் என்று அவர் ஒருபோதும் எண்ணியது கிடையாது. அவருடைய எண்ணம் நேர்மையான எண்ணம். அவருடைய சிந்தனை தெளிந்த சிந்தனை. சொல்ல வேண்டிய கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள். அதை துணிவோடு சொல்கிறார்.

இயேசுவின் போதனையில் யோனாவும், தென்னாட்டு அரசியும் குறிப்பிடப்படுகிறார்கள். யோனா ஓர் இறைவாக்கினர். கடவுளின் ஆவியால் உந்தப்பட்டு, நினிவே நகரில் இறைவாக்கு உரைத்தவர். அவரும், கடவுளின் வார்த்தையை அந்த மக்களுக்கு அப்படியே உரைக்கிறார். தென்னாட்டு அரசியாகச் சொல்லப்படுகிறவர் சேபா நாட்டு அரசி. (1 அரசர்கள் 10: 1 – 13). தெற்கு அரேபியாவில் இருக்கக்கூடிய ஏமன் நாடு தான், விவிலியத்தில் குறிப்பிடப்படுகிற சேபா நாடு. அந்த அரசியும் சாலமோன், அவரது நாடு, மக்கள், அவரது அறிவு ஆகியவற்றைப்பார்த்து ஆச்சரியப்படுகிறார். அது அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ”நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும்வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ, இங்குள்ளவற்றுள் பாதியைக்கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன்”. தன்னுடைய மனதில்பட்ட வார்த்தைகளை, உண்மையை, துணிவோடு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறார். இதனால், தான் தாழ்ந்து போக நேரிடுமே, என்ற எண்ணமே அவரிடத்தில் சிறிதும் இல்லை.

உண்மையை நாம் துணிவோடு அறிவிக்க வேண்டும். அது புகழ்வதாக இருந்தாலும் சரி, மற்றவர்களைக் கண்டித்து திருத்துவதாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாகிய நமக்கு, துணிவு அவசியமாகிறது. நாம் உண்மையாக இருந்தால், நிச்சயம் அந்த துணிவு நமக்குள்ளாக இருக்கும். நம்மிடத்தில் உண்மை இல்லையென்றால், துணிவும் இருக்காது. துணிவிற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

அருங்குறிகளும், அடையாளங்களும்

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை ஒட்டுமொத்தமாக தீய தலைமுறையினராகக் குறிப்பிடுகிறார். எதற்காக இயேசு அவர்களை இப்படிச்சொல்ல வேண்டும்? அவர்கள் செய்த தவறு என்ன? பொதுவாக, அந்த மக்கள் யாரையும் நம்புவதற்கு அற்புதங்களைச் செய்யச்சொன்னார்கள். ஒருவரை நம்புவதற்கு அவர்களின் செய்கின்ற மாய, தந்திரங்கள் தான் அளவுகோல். அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவர் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்பது அவர்களின் கண்ணோட்டம்.

இயேசுவையும் அத்தகைய கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் நம்புவதற்கு அவர் செய்த புதுமைகளே போதும். ஆனாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அருங்குறிகளைச் செய்யச்சொல்கிறார்கள். இது இயேசு முதல்முறையாக அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கல்லை அப்பமாகவும், மலையிலிருந்து கீழே குதிக்கவும், அலகையை வணங்கவும் சொல்கிற அந்த சோதனைகளில், இயேசுவை இறைமகன் என அறிந்திருந்தும், இயேசுவை சோதிப்பதற்காக இவைகளை அலகை சொல்கிறது. அதேபோல்தான், மக்களுடைய எண்ணங்களும். கடவுளை நாம் சோதிக்க முடியாது. கடவுளின் வல்லமையை நாம் சந்தேகிக்க முடியாது.

அருங்குறிகளாலும், அற்புதங்களாலும் மட்டும் நமது விசுவாசம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது உண்மையான விசுவாசம் அல்ல. அந்த விசுவாசம் நிலைத்திராத விசுவாசம். எப்போது வேண்டுமானாலும், அது பலவீனமாகலாம். கடவுளை நம்புவதற்கு அடையாளங்களும், அற்புதங்களும் நமக்குத்தேவையில்லை. கடவுள் மட்டில் உண்மையான நம்பிக்கை போதும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

நம்பிக்கை இறைவனை காணச்செய்யும்

புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ள முயலாத மனநிலை இருக்கிறவரை எத்தனை அடையாளங்கள் கொடுத்தாலும் அது வீணானதுதான் என்பது தான் இயேசு இன்றைய நற்செய்தி மூலமாக கற்றுத்தரும் செய்தி. யூதர்கள் நம்புவதற்கு ஏற்றவாறு ஏதாவது அதிசயங்களைச் செய்யச் சொல்லி இயேசுவிடம் வலியுறுத்துகிறார்கள். ஏனென்றால், அடையாங்களை வைத்தே யூதர்கள் ஒருவரை நம்புவதா? வேண்டாமா? என்று முடிவு செய்வர்.

இயேசுவுக்கு பிறகு கி.பி. 45 ம் ஆண்டில் தேயுதஸ் என்பவர், மக்களை எல்லாம் அழைத்து ஓடுகின்ற ஆற்றை இரண்டாகப்பிளக்கப் போகிறேன் என்று மக்களையெல்லாம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவனால் முடியவில்லை. இது போன்ற அடையாளங்கள் செய்கிறவர்களின் பின்னால் செல்வது யூதர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், அடையாளமாக இருக்கக்கூடிய இயேசுவை அடையாளம் காண, அவர்களால் முடியவில்லை. சாலமோனின் ஞானத்தை எங்கிருந்தோ ஆட்சி செய்த, ஓர் அரசியால் அடையாளம் காண முடிந்தது. யோனா கடவுளின் தூதர் என நினிவே மக்களால் அடையாளம் காண முடிந்தது. ஆனால், கண்ணெதிரே நிற்கக்கூடிய கடவுளின் மகனை, யூதர்களால் அடையாளம் காண முடியாதது கண்ணிருந்தும் குருடர்கள் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கடவுளை நாம் எதிலும் காணலாம். கடவுளைக்காண விசுவாசம் இருந்தால் போதும். நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்படியாவது நம்மை கடவுளிடத்திலே சேர்த்துவிடும். அந்த நம்பிக்கையை ஆண்டவரிடம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

அடையாளங்களும், அருங்குறிகளும்

யூதர்கள் இயேசுவை மெசியா என்று நம்புவதற்கு, சில அடையாளங்களை இயேசுவிடம் செய்து காட்டச்சொல்கிறார்கள். இயேசு மறுக்கிறார். யோனாவின் அடையாளத்தைத்தவிர, வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்பட்ட மாட்டாது என்று சொல்கிறார். இயேசு வாழ்ந்த காலத்தில், பல போலிப்போதகர்கள் தாங்கள்தான் வரவிருந்த மெசியா என்று சொல்லி, சில அடையாளங்களைத் தாங்கள் செய்து நிரூபித்தக்காட்டுவதாக மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால், விரைவிலேயே மக்கள் அவர்களின் ஏமாற்றுத்தனத்தை அடையாளம் கண்டுகொண்டனர். அதேவேளையில், அடையாளங்கள், அருங்குறிகளைப் பற்றிய மாயை மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இந்தப்பிண்ணனியில்தான் இயேசுவிடமும் அவர்கள் அடையாளங்களைச்செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

இயேசு யோனாவின் அடையாளத்தை அவர்களுக்கு அடையாளமாகத்தருகிறார். யோனா செய்த அடையாளம் என்ன? ஆண்டவர் யோனாவிடம் கூறியது: “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி.” அவ்வாறே யோனாவும் நினிவே நகருக்குச் சென்றார். பின் உரத்த குரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்றார். யோனா சொன்னது அவ்வளவுதான். அவர் அங்கு சென்று எந்த அடையாளத்தையும், அற்புதத்தையும் செய்யவில்லை. யோனாவை மக்களுக்கு யாரென்றே தெரியாது. நாற்பது நாட்கள் அந்த மக்கள் காத்திருக்கவும் இல்லை. யோனா சொன்ன செய்தியைக் கேட்ட மறுகணமே, மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். அரசர் முதல் கீழ்மட்ட குடிமக்கள் வரை சாக்கு உடை உடுத்தி நோன்பிருந்தனர். யோனாதான் அவர்களுக்கு அடையாளம். யோனாவிலே அவர்கள் இறைவனின் வார்த்தையை கண்டுகொண்டார்கள். காரணம்: மீட்பைப்பெற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் இருந்தது.

இன்றைக்கும் இறைவன் நம்மோடு இருக்கிறார். நம்மிடையே இறைவார்த்தை மூலமாக ஒவ்வொருநாளும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த இறைவார்த்தையில் இறைவனின் மீட்புச்செய்தியைக் கண்டுகொள்கிறோமா? இறைவனே வார்த்தையாக இருக்கிற விவிலியத்தை நம்பாமல், இன்றைக்கும் மக்கள் அடையாளங்களையும், அருங்குறிகளையும் தேடி, கடவுள் இங்கே தோன்றினார், மாதாவின் கண்களில் இரத்தம் வருகிறது, மாதாவின் சுரூபம் சுற்றுகிறது, என்று அலைவது விசுவாசத்திற்கு எதிரான செயல். விவிலியம் என்கிற அடையாளத்தில் நம் நம்பிக்கையை வைப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

====================================

நினிவே மக்களின் எடுத்துக்காட்டு !

"தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!" என்னும் இயேசுவின் ஆதங்கத்தை இன்றைய அறைகூவலாக எடுத்துக்கொள்வோம்.

நினிவே மக்கள் பேறு பெற்றவர்கள். காரணம், இறைவாக்கினர் யோனாவையும், அவரது செய்தியையும் ஏற்றுக்கொண்டார்கள். மனம் மாறினார்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். எனவே, இறைவனும் அவர்கள்மீது இரக்கம் காட்டினார்.

ஆனால், இயேசுவின் காலத்துப் பரிசேயர், சதுசேயர், பல யூதர்கள் இயேசுவையும், அ வரது போதனையையும் புறக்கணித்தார்கள். இயேசுவைக் கொல்ல முன்வந்தார்கள். எனவே, இறைவனின் இரக்கத்தைப் பெற இயலவில்லை. நினிவே நகர மக்கள் அவர்களைப் பார்த்து நகைப்பார்கள், கண்டனம் செய்வார்கள்.

நாம் எப்படி? இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கிறோம், தியானிக்கிறோம், செபிக்கிறோம். ஆனால், நம் வாழ்வு மனம் மாறியவர்களுக்குரிய வாழ்வாக இருக்கின்றதா? இல்லை, பார்த்தும், பார்த்தும் பாராமலும், கேட்டும், கேட்டும் கேளாமலும், மனம் மாறாமலும் இருக்கின்றோமா? நினிவே மக்கள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்வர், கண்டனமும் செய்வர்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம் காலத்தைய யூதர்களைப் போல அல்லாது நினிவே நகர மக்களைப் போல இந்தத் தவக்காலத்தில் உமது செய்தியை ஏற்று, மனந்திரும்பியவர்களாய் வாழ அருரும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா
---------------------------------------------------------

இணையதள உறவுகளே

அடையாளம் உங்களுக்கு வேண்டுமா? ஜப்பானுக்கு இன்றைக்கு உடனே ஒரு பயணம் போங்கள். மனித அறிவு தவிடு பொடியாகி கிடக்கிறது. பணம் தன் இயலாமைமையை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆணவமும் அகங்காரமும் முகவரி இழந்து கிடக்கிறது, ஆடம்பரமும், சுகபோக வாழ்க்கையும் சுடுகாடாக ஒரு மணிநேரத்தில் மாறியிருக்கிறது. இயற்கையை கசக்கிப் பிழிந்து சுயநல சுகம் கண்ட காரணத்தால் இன்று இயற்கை மறுப்பு தெறிவித்துள்ளது.

அப்பாவிகள் தங்கள் உயிரை இழந்து, இரத்தம் சிந்தி, உடைமைகளை சிதரடித்து, ஏன்தான் எங்களை விட்டு வைத்தாய்? என்று ஓலமிட வைத்தாய்? அணு உலைகளை உடைத்து எங்கனை ஏன் உயிரோடு எங்களை சித்திரவதை செய்கிறாய்? கடலுக்குள் கார். வீதியில் கப்பல். வீட்டுக்கு மேல் படகு என்ன வினோதம்? விபரீதம்.

இவ்வளவு நடந்தும் எத்தனை மனிதர்கள் இன்னும் அடையானம்; கேட்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் எங்கோ யாருக்கோ நடந்ததுபோல, எதுவுமே நடக்காததுபோலத்தான் மனிதன் வாழப்போகிறான்.அடுத்து என்ன அடையாளம் என்று கேட்கப்போகிறான்.

- அருட்திரு ஜோசப் லீயோன்-

-------------------------

நினிவே மக்கள் பேறுபெற்றோர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தம் தலைமுறை மக்களை நினிவே நகர மக்களோடு ஒப்பிட்டு, நினிவே நகர மக்களைப் பாராட்டுகிறார். தமது தலைமுறையினரைக் கண்டனம் செய்கிறார். இந்த வாசகத்தின் மூலம் இன்று நாமும் நினிவே நகர மக்களோடு ஒப்பிடப்படுகிறோம். நினிவே நகர மக்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள், காரணம் யோனாவின் மனந்திரும்புவதற்கான அறைகூவலை அவர்கள் கேட்டபொழுது குறைகூறவில்லை, ஏளனம் செய்யவில்லை, தள்ளிப்போடவில்லை. மாறாக, உடனே அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வாழ்வை மாற்றிக்கொண்டார்கள்.

நாம் எப்படி? இத்தவக்காலம் மீண்டும் ஒருமுறை நமது வாழ்வை ஆய்வு செய்ய, மாற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது. நாம் என்ன செய்கிறோம். அலட்சியம் செய்கிறோமா? புறக்கணிக்கிறோமா? ஒத்திப்போடுகிறோமா? அல்லது நினிவே நகர மக்களைப் போல உடனே கீழ்ப்படிகிறோமா? உடனே செயல்பட்;டால், நினிவே மக்களைப் போல நாமும் பேறுபெற்றவர்களாவோம். அல்லது கண்டனம் செய்யப்படுவோம்.

மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். இத்தவக்காலத்தில் நான் மனம் மாற வேண்டும், என் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என நீர் தருகின்ற அழைப்புக்காக நன்றி கூறுகிறேன். நினிவே நகர மக்களைப் போல, உமது அழைப்புக்கு உடனே கீழ்ப்படியும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

சாலமோன், யோனாவைவிடப் பெரியவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பழைய ஏற்பாட்டு நாயகர்கள் ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமோன் மற்றும் அனைத்து இறைவாக்கினர்களைவிடத் தாம் பெரியவர் என்னும் உரிமையை இயேசு கோருவதை நற்செய்தி நூல்களில் நாம் வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தாம் சாலமோனை விடவும், யோனாவைவிடவும் பெரியவர் என்று அறிக்கை இடுகிறார். சாலமோன் பழைய ஏற்பாட்டு நாயகர்களிலே அதிக ஞானம் நிறைந்தவர். இறைவனிடமே ஞானம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக்கொண்டவர். ஆனால், இயேசு சாலமோனைவிட ஞானம் நிறைந்தவர். இயேசுவின் ஞானம் அவரது பேச்சாற்றலில், போதனையில், வாதத் திறனில், செயல்பாடுகளில், அருங்குறிகளில் இன்னும் சிறப்பாக அவரது சிலுவை மரணத்தில் வெளிப்பட்டது. எனவேதான், சிலுவையில் அறையுண்ட மெசியா இறை வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார் என்று பவுலடியார் கொரிந்தியர் முதல் திருமுகத்தில் கூறுகிறார். யோனா பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களில் சிறப்பிடம் பெறுபவர். காரணம் நினிவே நகரத்தின் மக்கள்தொகை அனைத்தையும் தம் போதனையால் மனம் திருப்பியவர். ஆனால், யேசு யோனாவைவிடப் பெரிய இறைவாக்கினர். காரணம், அவரது இறைவாக்கை இன்று உலகம் முழவதுமே மனம் உவந்து கேட்கிறது.

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றும், இறைவனின் வாழ்வு தரும் வார்த்தையுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்தையும், இறைவாக்குரைக்கும் வல்லமையையும் எங்களுக்கும் தந்தருளும். நாங்களும் சாலமோனை விட ஞானம் நிறைந்தவர்களாகவும், யோனாவைவிட அதிக ஆர்வத்துடன் இறைவாக்கு உரைப்பவர்களாகவும் மாறும் அருள்தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

----------------------------------------

''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும்
இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோனா இறைவாக்கினர் பற்றிய கதை விவிலியத்தில் ''யோனா'' என்னும் நூல் வடிவத்தில் உள்ளது. யோனா எந்த விதத்தில் ''அடையாளமாய்'' இருந்தார் எனப் பார்க்கும்போது, மூன்று கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில் யோனாவைப் பெரியதொரு மீன் விழுங்கிற்று; கடவுளின் கட்டளைப்படி யோனாவை உயிருடன் கரையிலே கக்கிற்று. இதை அடையாளமாகக் கருதினால் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி இதனால் குறிக்கப்படுகிறது எனலாம். இரண்டாவது, யோனா நினிவே நகருக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு மனமாற்றம் அடைந்து, கடவுளிடம் திரும்பவேண்டும் என போதித்ததை நாம் அடையாளமாகக் கருதலாம். இயேசுவும் மக்கள் மனமாற்றம் பெற்று இறையாட்சியில் புக வேண்டும் என போதித்தார். மூன்றாவது, யோனா நினிவே மக்கள் மீது கடவுளின் தண்டனை வரும் எனப் போதித்ததை அடையாளமாகக் கொள்ளலாம். அப்படியென்றால், கடவுளாட்சியை ஏற்காதோர் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என இயேசு கூறியதைக் குறிப்பதாக விளக்கலாம்.

-- இயேசு குறிப்பிடுகின்ற ''தலைமுறையினர்'' யார்? முதலில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களே அவர்கள் எனலாம். மேலும், லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அங்கே குறிக்கப்படுகிறார்கள் எனலாம். தொடர்ந்து, இக்கால உலகில் வாழ்கின்ற நாமும் அத்தலைமுறையினருள் அடங்குவோம் எனலாம். எனவே, இயேசுவின் சொற்கள் பண்டைக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தும். அந்த இரு காலங்களையும் நாம் மனத்தில் கொண்டு இயேசுவின் போதனையை இக்காலத்தில் வாசிக்கும்போது நாமும் இயேசு குறிப்பிட்ட ''தலைமுறையினராக'' மாறுகிறோம். நமக்கும் இயேசு அடையாளமாக இருக்கிறார். அவர் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து நமக்குத் தம் உயிரில் பங்களிக்கிறார் என்பது நம் நம்பிக்கை. மேலும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாக மாறி இறையாட்சியின் மதிப்பீடுகளை நம் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிட அழைக்கப்படுகிறோம். தொடர்ந்து, நாம் தவறிழைத்தாலும் நம்மை இடையறாது அணுகிவந்து நம்மில் நற்சிந்தனைகளையும் நற்செயல்களையும் தூண்டியெழுப்புகின்ற சக்தியாக இயேசு உள்ளார். இந்த வேறுபட்ட விதங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர்ந்து, அதிலிருந்து பிறக்கும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ்ந்திட வேண்டும். இயேசு என்னும் அடையாளம் நம் வாழ்வை மாற்றியமைக்கின்ற வெற்றிச் சின்னமாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் மனமாற்றம் பெற்று உம்மை விடாது பற்றிக்கொள்ள அருள்தாரும்.

-அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------

''இயேசு, 'யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள்.
ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா?' என்றார்'' (லூக்கா 11:32)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோனா என்னும் இறைவாக்கினரைப் பற்றிய கதை பழைய ஏற்பாட்டுப் புனைவுரைகளில் மிகச் சிறப்பான ஒன்று. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்கத் தயங்கிய யோனாவைக் கடவுள் விட்டபாடில்லை.. தப்பித்து ஓடிவிடலாம் என்று நினைத்த யோனாவைத் துரத்திப் பிடித்தார் கடவுள்; ஒரு முக்கியமான பணியை ஆற்ற அவரை அனுப்பினார். பிற இன நகரமாகிய நினிவே சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்னும் செய்தியை அறிவிப்பதே அப்பணி. அரைகுறை மனத்தோடு யோனா அப்பணியை ஆற்றினார் என்றாலும், மக்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்பினார்கள். இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்பிட்டு, அதே நேரத்தில் அவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். யோனாவைப் போல இயேசுவும் மக்கள் மனம் மாற வேண்டும், கடவுளிடம் திரும்பவேண்டும் என்னும் செய்தியை அறிவிக்கிறார். ஆனால் யோனாவைவிடவும் பெரியவர் இயேசு. யோனா கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தார். இயேசுவோ கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர்வதற்காக நம்மிடையே வந்தார்.

-- இயேசு அறிவிக்கின்ற செய்தியைக் கேட்போர் அச்செய்தியில் அடங்கியிருக்கின்ற கருத்தைத் தம் உள்ளத்தில் ஏற்க வேண்டும்; அதைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். கடவுள் பேரன்பும் இரக்கமும் உள்ளவர் என்னும் செய்தி யோனா வழியாக நினிவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் இயேசுவின் நற்செய்தி வழங்கப்படுகிறது. இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுளின் எல்லையற்ற அன்பையும் இரக்கத்தையும் நாம் அனுபவிக்கின்ற பேறு பெற்றுள்ளோம். அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உங்கள் உள்ளத்தில் உண்மையான மாற்றத்தைக் கொணர்ந்தருளும்.

-அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"யோனாவைவிடப் பெரியவர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் யோனா எல்லோரையும் கவர்ந்த ஒரு இறைவாக்கினர். கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் இவர் தன் வாழ்வாலும் போதனையாலும் சான்று பகர்கிறார்.
கடலில் வீசப்பட்ட இவர், மூன்று இரவும் மூன்று பகலும் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தார். மூன்றாம் நாள் அந்த பெரிய மீன் அவரைக் கரையில் கக்கியது.

அடையாளம் கேட்ட மக்கள் கூட்டத்திற்கு இயேசு இந்த யோனாவின் வாழ்க்கையைத் தன் வாழ்வில் நடைபெற இருக்கும் மரணம், உயிர்ப்புக்கு அடையாளமாகச் சொன்னார். இந்த யோனாவின் செய்தியைக் கேட்டு, நினிவே மாநகர மக்கள் அனைவரும் நோன்பிருந்து மனமாற்றம் பெற்றனர். அரசன், குழந்தை, முதியவர் அனைவரும் பாவ வாழ்வை விட்டு மனம் திரும்பினர்.

அந்த யோனாவை விட பெரியவர் இயேசு என்பதை அந்த மக்கள் கூட்டம் உணரவில்லை. இயேசு இதைச் சொல்லியும் அவர்கள் புறிந்துகொள்ளவில்லை. சலித்துப்போன இயேசு, இருப்பினும் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்தும் இந்த யோனாவின் அடையாளத்தை தன் மரணத்திற்கும்; உயிர்ப்புக்கும் ஒப்பிட்டு அடையாளமாகக் கொடுக்கிறார்.

நம் வாழ்விலும் இயேசு இவ்வாறு பல அடையாளங்களைத் தருகிறார். அந்த அடையாளங்களில் ஆண்டவனின் அன்பை, ஆற்றலை,இரக்கத்தைக் காண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- அருட்திரு ஜோசப் லீயோன்--: