முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25

சகோதரர் சகோதரிகளே, நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. ஏனெனில் ``நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்'' என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 19: 1-2. 3-4
பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

லூக்கா 11:37-41

பொதுக்காலம், வாரம் 28 செவ்வாய்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41

அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4, (1அ)
”வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன”

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது நம்முடைய நம்பிக்கை. இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் பார்க்கிறபோது, பலவிதமான அறிவியல் வாதங்கள் நம் முன்னால் வைக்கப்படுகிறது. ஒரு செல் உயிரிலிருந்து மனித இனம் உருவானது என்று சொல்லப்படுகிறது. பரிணாம வளர்ச்சி தான் அடிப்படை என்கிற கருத்து வைக்கப்படுகிறது. கோள்கள் வெடித்துச் சிதறியதில் தற்செயலாக உயிரினங்கள் தோன்றின என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இப்படி இந்த உலகம் தோன்றியதற்கு பலவிதமான வாதங்களை அறிவியல் உலகம் நம் முன்னால் வைக்கிறது. ஆனால், விசுவாசிகளுக்கு, கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை.

விவிலியத்தின் தொடக்கநூலில் நாம் பார்க்கிறோம், கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். தொடக்கநூலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதையும் நாம் அறியாதவர்கள் அல்ல. விவிலியத்தை அறிவியல்பூர்வமாக ஆராய முற்படுகிறபோது, முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், விவிலியத்தை எழுதிய இறை ஏவலால் தூண்டப்பட்டவர்களின் நோக்கம், நமக்கு அறிவியலைத் தர வேண்டும் என்பதல்ல. மாறாக, உண்மையைத் தர வேண்டும். தாங்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தைத் தர வேண்டும். நாம் அனைவரும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே, அது மீட்பின் வரலாறாக படிக்கிறபோது, நமக்கு உண்மையைப் போதிக்கிறது, நமக்கு மீட்பைத் தருகிறது. உதாரணமாக, தொடக்க நூலில் படைப்புக்களைப் பற்றி முரண்பாடான செய்திகள் இருந்தாலும், ஆசிரியர் சொல்ல வருகிற கருத்து, கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதாகும். கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதில் அவருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சொல்கிற பாணியில் தவறு இருக்கலாம். இந்த திருப்பாடலும், இயற்கையின் வழியாக நாம் அவர்களைப் படைத்தது கடவுள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்கிற உண்மையை வலியுறுத்திக் கூறுகிறது. கடவுளை மகிமைப்படுத்த அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பார்க்க முடியாது. அறிவியல்பூர்வமாக விளக்கம் தர முடியாது. ஒரு சில நிகழ்வுகளை விசுவாசக் கண்ணோடு பார்க்கிறபோது மட்டும் தான், அதற்கான விடையைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுளை விசுவாசத்தோடு அணுகுவோம். இறையனுபவத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

வாழ்வின் முரண்பாடுகள்

இந்த வாரத்தில் வரக்கூடிய வாசகங்கள் அனைத்துமே, தூய்மை என்கிற கருத்தை, மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இயேசு தூய்மையான எண்ணம் கொண்டிருந்தார் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் ஒரு நல்ல உதாரணம். இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, பரிசேயர் ஒருவா் தம்மோடு உணவருந்த வரும்படி, இயேசுவைக் கேட்டுக்கொள்கிறார். பரிசேயர் யார்? இயேசுவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள். இயேசுவை எப்படி தொலைக்கலாம் என்று, சதுசேயர்களோடு சதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள். தங்களை நீதிமான்கள் என்று காட்டிக்கொண்டவர்கள். இயேசுவை விரோதியாகப் பார்த்தவர்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களின் வீட்டிற்கு கூட, இயேசு செல்வதற்கு தயாராக இருக்கிறார். இது அவருடைய தூய்மையான எண்ணத்தின் வெளிப்பாடு.

தூய்மையான எண்ணம் என்றால் என்ன? தூய்மையான எண்ணம் என்பது, விழுமியங்களோ, மதிப்பீடுகளோ இல்லாத வாழ்க்கை அல்ல. மாறாக, கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்க்கிற மனநிலை. அதனை ஓர் ஆளோடு பொருத்திப்பார்க்காமல், கருத்துக்களாக மட்டும் பார்க்கிற ஓர் உயர்ந்த எண்ணம். இன்றைக்கு ஒருவர், நாம் ஒத்துக்கொள்ளாத கருத்தைச் சொல்கிறோம் என்றால், அவரையே நாம் வெறுக்கக்கூடிய மனநிலை நம்மிடம் இருக்கிறது. இதுதான் கருத்துக்களை மனிதர்களோடு பொருத்திப்பார்ப்பது. கருத்துக்களில் நாம் முரண்படலாம். ஆனால், மனிதரை அன்பு செய்ய, நாம் முயற்சி எடுக்க வேண்டும். அது கடினமான சோதனை தான். பயிற்சியின் மூலமாக மட்டுமே, இந்த பண்பை நமதாக்க முடியும். அதனை நமது வாழ்வில் நாம் செயல்படுத்த முயற்சி செய்வதை, இன்றைய வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது.

நமது வாழ்வில் நாம் பல மனிதர்களோடு உறவை முறித்துக்கொள்வதற்கு, அவர்களின் கருத்துக்களில் நமக்கு இருக்கும் முரண்பாடுகளே அன்றி, பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் அவர்களோடு பகைமை இருக்காது. ஆக, கருத்தக்களில் காணப்படக்கூடிய முரண்பாடுகள், நம்மை மற்றவர்களை எதிரியாகப் பார்க்கக்கூடிய மனநிலையிலிருந்து விடுபட, இறையருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

எதற்கு முன்னுரிமை?

இன்றைய நற்செய்தியிலே இயேசு, உணவருந்துவதற்கு முன்பாக, தனது கைகளைக் கழுவாமல் சாப்பிடுவதைக்கண்ட, பரிசேயர்கள் வியப்படைகிறார்கள். போதகராக இருக்கிறவருக்கு, ஒரு யூதர் பின்பற்றக்கூடிய சாதாரண நடைமுறைகூட தெரியவில்லையா? என்பதுதான், அவர்களின் வியப்பிற்கான காரணம். பரிசேயர்கள் சட்டங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தனர். உணவு உண்பதற்கு முன்னதாக செய்யக்கூடிய ஒழுங்குகள், என்று பலவற்றை அவர்கள் பின்பற்றினார்கள். கைகளை எப்படிக் கழுவ வேண்டும்? கழுவுகின்றபோது, தண்ணீரை எப்படி ஊற்ற வேண்டும்? எப்படி அமர வேண்டும்? என்று பலதரப்பட்ட ஒழுங்குகளை அவர்கள் வைத்திருந்தனர். இயேசு அவர்கள் வைத்திருந்த சட்டங்களுக்கு எதிரானவற்றைப் பேசவில்லை. மாறாக, சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதில் காட்டக்கூடிய அக்கறையை, மக்களுக்கு நீதி வழங்குவதிலும், இரக்கம் காட்டுவதிலும் காட்டினால், மிகச்சிறப்பாக இருக்கும், என்று ஆதங்கப்படுகிறார். இயேசு, அப்படி ஆதங்கப்படுவதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு பாரம்பரிய யூதர்களும், கடவுளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளைச் செலுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். 1. நிலத்தின் விளைச்சலிலிருந்து பெறப்படும் ஏழு வகையான முதற்கனிகளை, அவர்கள் ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினர். அவை: கோதுமை, பார்லி, திராட்சை, அத்திப்பழங்கள், மாதுளை, ஒலிவமரத்தின் விளைச்சல் மற்றும் தேன். 2. நிலத்தில் வளரக்கூடிய அனைத்து பயிர்வகைகளிலிருந்தும், ஐம்பதில் ஒரு விழுக்காடு, ஆலயத்தில் பணிபுரியக்கூடிய குருக்கள் பயன்பெறுவதற்கு கொடுக்கக்கூடியது. 3. பத்தில் ஒரு பங்கு விளைச்சலை, ஆலயத்தில், குருக்களுக்கு உதவிசெய்யும், லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதையும் பரிசேயர்கள், எந்த குறையும் இல்லாமல் கொடுத்தனர். இவ்வாறு, ஒழுங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில், இவ்வளவு அக்கறையோடும், கவனத்தோடும், ஆர்வத்தோடும் செய்கிற பரிசேயர்கள், மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதிலும், மற்றவர்களை குறிப்பாக, ஏழைகளை, அனாதைகளை மதித்து நடப்பதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலும், கோட்டை விட்டனர். அவற்றை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்தனர். இயேசு இதைப்பார்த்து வியப்படைகிறார். ஆச்சரியப்படுகிறார்.

நமது வாழ்க்கையும் பரிசேயர்களின் வாழ்வை அடியொற்றியதாகத் தான் இருக்கிறது. நாம் எதைச்செய்ய வேண்டுமோ, அதைச்செய்வதற்கு அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால், எது செய்யவில்லை என்றாலும், தாழ்வில்லையோ, அதைச் செய்தவற்கும், அதற்காக வீணாகப்பணத்தை செலவழிப்பதற்கும், அதிக அக்கறை கொள்கிறோம். அத்தகைய மனப்போக்கிலிருந்து, மாற முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

உண்மையான வாழ்வு வாழுவோம்

உணவருந்துவதற்கு முன் இயேசு தனது கைகளைக் கழுவாவதைக்கண்டு பரிசேயா்கள் வியப்படைந்திருக்க வேண்டும். அது சுகாதாரம் என்பதற்காக  அல்ல, மாறாக, அது கடைப்பிடிக்க வேண்டிய சடங்குமுறைகளுள் ஒன்று. மக்கள் மத்தியில் மிகப்பெரிய போதகராக மதிக்கப்படும் இயேசு அடிப்படை சடங்குகளைக்கூட பின்பற்றாதது, பரிசேயர்களுக்கு எரிச்சலையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

பரிசேயர்களுக்கு வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அது காட்டும் உள்ளார்ந்த அர்த்தத்திற்கு கொடுக்க மறந்துவிட்டார்கள். வெளிப்புற அடையாளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்ற மனநிலை அவர்களுக்கு இருந்தது. அப்படி வாழ்ந்தாலே கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்க முடியும் என்ற தவறான எண்ணம் அவர்களிடத்திலே இருந்தது. இத்தகைய மனநிலையை தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

தினமும் ஆலயத்திற்கு செல்வதும், விவிலியத்தை ஆழ்ந்துபடித்து தியானிப்பதும், திருச்சபைக்கு நம்மால் இயன்றதைக் கொடுப்பதும் மட்டும்தான் கிறிஸ்தவனின் கடமை என்ற பாணியில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டு உள்ளத்தில் வஞ்சகமும், தற்பெருமையும், பொறாமையும் இருந்தால் நாமும் பரிசேயர்களைப்போலத்தான். அப்படிப்பட்ட நிலைக்கு நம்மை ஆட்கொள்ளாமல், யதார்த்தமான கிறிஸ்தவ வாழ்வை வாழ முனைவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தர்மமாகக் கொடுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தூய்மையைப் பற்றிய இயேசுவின் போதனை இன்று நம் கவனத்தைக் கவர்கிறது. இயேசுவின் பார்வையில் புறத்தூய்மையை விட அகத் தூய்மையே மேலானது, அதிகக் கவனத்துக்குரியது. எனவே, வெளித் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உள்ளத் தூய்மைக்கு, தூய மனநிலைக்கு அதிக அழுத்தம் கொடுக்க ஆண்டவர் இன்று நம்மை அழைக்கிறார். அதற்கான ஆலோசனையையும் அவரே தருகிறார். உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும் என்கிறார் இயேசு. உட்புறத்தில் இருப்பவை எவை? மனநிலை, எண்ணங்கள், ஆலொசனைகள், சிந்தனைகள், நன்றியுணர்வு, மகிழ்ச்சி... இவை அனைத்துமே நமது உட்புறத்தில் இருப்பவைதாம். இவற்றைத் தர்மமாகக் கொடுக்க இயேசு அறைகூவல் விடுக்கிறார். பிறரோடு பகிர்ந்துகொண்டால், நமது உள்ளமும், மனநிலையும் நிச்சயம் தூய்மை அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

மன்றாடுவோம்: தூய்மையின் திரு உருவே இயேசுவே, எங்களைத் தூய்மைப்படுத்தும். எங்களுடைய மனம், சிந்தனை, ஏக்கங்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் இனிமேல் எங்களுக்காக வாழாமல், எங்களுக்காக இறந்து உயிர்த்த உமக்காக வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''ஆண்டவர், 'அறிவிலிகளே,...உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்' என்றார்'' (லூக்கா 11:40-41)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உணவு அருந்துமுன் சட்டப்படி கைகழுவாத இயேசுவை லூக்கா ''ஆண்டவர்'' எனவும், சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயரை இயேசு ''அறிவிலிகளே'' எனவும் அழைப்பது நமக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ''அறிவிலி'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் ''தீயவர்'' என்றும் ''கடவுளை மறுப்பவர்'' என்றும் பொருளுண்டு (காண்க: நீமொ 6:12; திபா 14:1). மேலும் பரிசேயர்கள் பேராசை கொண்டு மக்களிடம் கொள்ளையடித்தார்கள் எனவும் இயேசு குற்றம் சாட்டுகிறார் (லூக் 39). இதற்கு மாற்று மருந்தாக இயேசு குறிப்பிடுவது ''தர்மம் கொடுத்தல்'' ஆகும் (லூக் 11:41). யூதர்கள் தர்மம் கொடுத்தலைச் சிறப்பான நற்செயலாகக் கருதினார்கள். நம்மை அணுகி வருகின்ற பிச்சைக்காரர்களுக்கு நாம் சில காசுகளைத் ''தர்மமாக''க் கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல. மாறாக, நாம் வாழ்கின்ற அநீதியான சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்னும் எண்ணத்தோடு நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதே உண்மையான ''தர்மம்''.

-- பரிசேயர் பிறரிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் ''தூய்மையடைவார்கள்'' என இயேசு குறிப்பிடுகிறார். தூய்மை என்பது வெளியிலிருந்து வருவதல்ல, மாறாக, உள்ளார்ந்த விதத்தில் மனமாற்றம் பெற்று, நம் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது (''தர்மம் கொடுத்தல்'') நாம் தூயவர்களாக மாறுவோம். சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் நாம் அடிப்படையான விதத்தில் மாற்றம் பெற வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, பிறரை அன்புசெய்வதில் நாங்கள் சிறந்தோங்கிட அருள்தாரும்.

 

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''உணவு அருந்துமுன் இயேசு கைகழுவாததைக் கண்டு
பரிசேயர் வியப்படைந்தார்'' (லூக்கா 11:38)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கைகழுவாமல் உணவு அருந்துவது நோய்கள் பரவுவதற்குக் காரணமாகலாம். எனவே நல வாழ்வு பற்றி அக்கறை கொண்டோர் கைகழுவாமல் உணவு அருந்தமாட்டார்கள். ஆனால், இயேசுவின் காலத்தில் கைகழுவிய பின்னரே உணவு அருந்தவேண்டும் என்பது பரிசேயர் நடுவே நிலவிய ஒரு முக்கியமான சடங்குமுறை ஒழுங்காக இருந்தது. இயேசு யூத சமயத்தில் வேரூயஅp;ன்றியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் வெளிச்சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் நோக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களை இயேசு கடிந்துகொண்டார். வெளிச்சடங்குகள் உள்ளத்தின் உட்கிடக்கையை வெளிப்படுத்துவனவாக மாற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவை பொருளற்றவையே.

-- சில சமயங்களில் நாம் வெளிச்சடங்குகள் சரியாக நடந்துவிட்டால் எல்லாம் நலமாக முடிந்தது என நினைத்து நிறைவடைந்துவிடுகிறோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற சிந்தனைகள் தூயவையாக இருக்கவேண்டும். நலமான சிந்தனைகள் எழுகின்ற இடத்தில் பிறருக்கு நலம் பயக்கின்ற செயல்களும் வெளிப்படும். அப்போது வெறும் சடங்குகள் பற்றி நாம் அக்கறை கொள்ளாமல் அச்சடங்குகள் எதைக் குறிக்கின்றன, அவை குறிக்கின்ற உள்கருத்து நலமான வெளிப்படுகிறதா என்னும் கேள்விகளை எழுப்பமுடியும். நலமான சிந்தனையும் அதிலிருந்து பிறக்கின்ற நலமான செயலும் நம் வாழ்வில் துலங்க வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. உள்ளமும் செயலும் நன்மையைக் கனியாக ஈந்தால்தான் முழுமையான மனிதம் மலர்கிறது என நாம் கூறலாம். மனிதம் மலரும் இடத்தில் புனிதம் மணம் வீசும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தைக் கழுவித் தூய்மையாக்கவும் நேர்மையாகச் செயலாற்றவும் எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

இயேசு விரும்பும் விருந்து

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

விருந்தை மட்டுமே குறியாகக் கொண்டால், கை கழுவுவதும் கிண்ணத்தையும் தட்டையும் தூய்மைப்படுத்;துவதும்தான் பெரிதாகத் தோன்றும். அன்பை இலக்காகக்கொள்ளாத குடும்ப வாழ்வுக்கு பொன்னும் பொருளும் நகையும் நட்டும்தான் முக்கியமானதாகத் தோன்றும். அருளை நோக்கமாகக் கொள்ளாத திருவிழாவில், அலங்காரமும் ஆடம்பரமும்தான் முதன்மைப்படுத்தப்படும்.

பரிசேயரிடம் எதிர்பார்த்து ஏமாந்த ஒன்று. உள்ளத்திற்கான விருந்து, ஆன்ம விருந்து. உள்ளத் தூய்மையில் மகிழும் விருந்து. அன்புச் செயல்களால் ஆன்மாவை அலங்கரிக்கும் விருந்து. உள்ளத்தே ஒழிந்திருக்கும் கொள்ளை, காமம், பேராசை, வஞ்சகம், இவற்றை அறவே அப்புரப்படுத்தி, ன்புறவிலும் நட்புறவிலும், ஆண்டவனோடும் அயலானோடும் உள்ள உறவில், வாழ்வை துலங்கச்செய்வதே இயேசு விரும்பும் விருந்து.

இத்தகைய விருந்தையே இயேசு அன்றும் இன்றும் எதிர்பார்த்தது, எதிர்பார்ப்பது. வெளி ஆடம்பரத்தை,அழகை விட, உள்ளத்தின்ஆழத்தில் புதுப்பிக்கப்பட்ட அழகையும், பொன்பொருள் அழகைவிட ஆன்மீக அழகையும், அலங்காரம் ஆர்ப்பாட்டத்தைவிட அருளால், அருட்சாதனங்களால் நிறைந்த வாழ்வையும் விருந்தாகப் படைப்போம். இயேசுவின் பாராட்டைப் பெறுவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்