முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச் சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்கள் அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே! இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும். இவற்றைச் செய்வோர்மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்துவருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா? அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கடின உள்ளம் உங்களை மனம்மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்படவேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 62: 1-2. 5-6. 8 (பல்லவி: 12b)
பல்லவி: மனிதரின் செயல்களுக்கேற்ப கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.

1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே;
2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். -பல்லவி

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே;
6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். -பல்லவி

8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில்
உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

லூக்கா 11:42-46

பொதுக்காலம், வாரம் 28 புதன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.'' திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்'' என்றார். அதற்கு அவர், ``ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

போதனையும், வாழ்வும்

அடுத்தவர்கள் மீது சுமைகளைச் சுமத்துகிற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை, சோம்பேறித்தனத்தின் பொருட்டு செய்யாமல், அடுத்தவர்களை ஏவுகிற வேலையைச் செய்கிறவர்களை நாம், அன்றாட உலகில் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தியும் பேசுகிறது.

திருச்சட்ட அறிஞர்களைப்பார்த்து இயேசு இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்திற்கு விளக்கம் கொடுக்கிறவர்கள். அவர்கள் மக்களுக்கு சட்டங்களை விளக்கிக்கூறுகிறவர்கள். எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்? எதையெல்லாம் பின்பற்றக்கூடாது? என்று, மக்களுக்கு அறிவுறுத்துகிறவர்கள். மக்களுக்கு சட்டங்களைப் பின்பற்றச் சொல்கிற இவர்கள், தாங்கள் சொல்பவற்றை ஒருபோதும் பின்பற்றுவது கிடையாது. ஆனால், மக்கள் பின்பற்றவில்லை என்றால், அதற்கான தண்டனையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மீது, தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திக்கொண்டிருந்தார்கள். தாங்களோ, சட்டங்களை மதிப்பதை ஒரு பொருட்டாக எண்ணியது இல்லை. இந்த வழக்கத்தை இயேசு எதிர்க்கிறார். கண்டிக்கிறார்.

நமது வாழ்விலும் கூட, மற்றவர்களுக்கு பலவற்றைப் போதிக்கிற நாம், அவர்களை இறைவன்பால் கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களைத் தீட்டக்கூடிய நாம், பல நேரங்களில் கடமைக்காக போதிக்கிறோமே தவிர, போதனையானது நமக்கும் பொருந்தும் என்கிற மனநிலையோடு போதிப்பது கிடையாது. போதிப்பது நமது கடமை மட்டும் அல்ல, அது வாழ்ந்து காட்டப்பட வேண்டிய மதிப்பீடு என்பதை உணர, இறைவனின் அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

ஒழுங்குகள் காட்டும் ஒழுக்கம்

திருச்சட்ட அறிஞர் ஒருவர், தங்களை இயேசு இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இயேசு இன்னும் அதிக வேகத்தோடு அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். தங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டங்களை, விளக்கினார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில், யாரும் 1000 அடிக்கு மேல் நடக்கக்கூடாது. நடந்தால் அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதியில், ஊருக்கு தொடக்கத்தில் ஒரு கயிறு குறுக்கே கட்டியிருந்தால், அந்த கயிறு வரை, ஒருவரின் வீடாக மாறிவிடும். எனவே, அந்த கயிற்றிலிருந்து, அவர் இன்னும் 1000 அடிகள் நடக்கலாம்.

அதே போல, ஏதாவது ஒரு இடத்தில், இரண்டு வேளைக்கான உணவை வைத்தால், அதுவரை அந்த மனிதரின் வீடாக மாறிவிடும். அதிலிருந்து இன்னும் 1000 அடிகள் அவர் நடந்து செல்லலாம். இந்த ஒழுங்குகளையெல்லாம் கடவுள் நிச்சயம் கொடுக்கவில்லை. தாங்கள் நினைத்ததை எல்லாம், இந்த திருச்சட்ட அறிஞர்கள் ஒழுங்குகள் என்ற பெயரில் மக்களைப் பின்பற்ற வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏதாவது வருகிறபோது, இதுபோன்ற, குறுக்கு வழியைப் பின்பற்றி, அந்த ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார்.

ஒழுங்குகள் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ஒன்றும், அதிகாரவர்க்கத்தினருக்கு ஒன்றுமாக இருந்தால், அது எதிர்க்கப்பட வேண்டும். இன்றைக்கு, இருப்பவர்களுக்கு ஒரு ஒழுங்கு, இல்லாதவர்க்கு ஒரு ஒழுங்கு என்று, ஏழை, எளிய மக்களை ஒடுக்குகின்ற வழிமுறைகளை மக்களாட்சி என்ற பெயரில், அரசியலவாதிகள் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் இதனை உணர்ந்தால் தான், இந்த முடிச்சுகளை அவிழ்க்க முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளை மகிமைப்படுத்துவோம்

தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் பரிசேயர்கள் விரும்புவதாக இயேசு அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கை என்பது மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமரக்கூடிய இடமாகும். ஆலயத்தில் ஆண்டவரை தொழுவதற்காக இருக்கிற இடத்தில் தன்னை முன்னிறுத்துகிறவர்களாக இருப்பதை இயேசு அறவே விரும்பவில்லை.

இறைவன் நமது வாழ்வில் முதன்மையான இடத்தைப்பெற்றிருக்க வேண்டும். இறைவனை விடுத்து செல்வத்தையோ, அதிகாரத்தையோ, நமது பலத்தையோ முதன்மையாக வைத்தால் அது சரியான பார்வையாக இருக்க முடியாது. கடவுளை நாம் முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசேயர்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள் தான். ஆனால், தங்களை முன்னிறுத்துகிறவர்கள். இறைவனுடைய கட்டளைகளை அடிபிறழாமல் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணுகிறவர்கள் தான். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை, கடவுள் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற பாடத்தை முழுவதுமாக மறந்துவிட்டவர்கள்.

நமது வாழ்வில் கடவுள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். கடவுள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இந்த வாழ்வு கடவுள் நமக்குத் தந்தது. நம்மை முன்னிறுத்தாமல், கடவுளுக்காக வாழும் அருள் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சுமைகளைத் தொடாத விரல்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பரிசேயர்களையும், திருச்சட்ட அறிஞர்களையும் கடுமையாகச் சாடும்; இயேசு, அவர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். பரிசேயர்கள் சட்ட ஒழுங்குகளை மனதாரக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், நீதியையும், கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதேயில்லை. ஆகவே, சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களை அவர்கள் இழக்கின்றனர். அதுபோலவே, திருச்சட்ட அறிஞர்களும் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகின்றனர். ஆனால், அவர்கள் அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டார்கள் என்று அறிவிக்கிறார். இந்த இரண்டு வகையான மனிதர்கள் போல நாம் நடந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் கடைப்பிடிக்காத எந்த ஒரு விதியையும் பிறர்மீது சுமத்தக் கூடாது. நம் பணியகத்தில், இல்லத்தில் பிறர்மீது பணிகளை, பாரங்களைச் சுமத்திவிட்டு, நாம் சுகமாக அயர்ந்துவிடக் கூடாது. மாறாக, நாமும் பிறரின் பாரங்களைச் சுமக்க கொஞ்சம் முன் வரவேண்டும். இல்லாவிட்டால், இயேசுவின் கடின மொழிகளுக்கு நாமும் இலக்காக வேண்டியிருக்கும்.

மன்றாடுவோம்: முரண்பாடுகளைக் கண்டித்த இயேசுவே, உம்;மைப் போற்றுகிறேன். ஆண்டவரே, எனது வாழ்வு முரண்பாடுகள் அற்றதாக அமைய அருள்தாரும். பரிசேயர்கள் போலோ, திருச்சட்ட அறிஞர்கள் போலவோ, வாழாமல் உம்மைப் போல வாழும் வரதம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு,'ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்கமுடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்;
நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்' என்றார்'' (லூக்கா 11:46)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யூத மக்களின் சமய வாழ்வையும் சமூக வாழ்வையும் வழிப்படுத்தியது ''திருச்சட்டம்''. அது வெறும் சட்டத் தொகுப்பு அல்ல, மாறாக ஒரு வாழ்க்கை நெறி. மக்கள் அதை மகிழ்ச்சியோடும் நிறைவான உள்ளத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். ஆனால் திருச்சட்டத்தை விளக்கிய ''அறிஞர்கள்'' பல துல்லியமான நுணுக்கங்களை அதில் புகுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, ''ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி'' (காண்க: இச 5:12) என்னும் கட்டளைக்கு விளக்கம் அளித்த அறிஞர்கள் அந்த நாளில் மக்கள் 39 வகையான வேலைகளைச் செய்யலாகாது என்று கற்பித்தார்கள். இது ''மனித சட்டம்'' எல்லைமீறிப் போனதையே காட்டுகிறது. எனவே, இயேசு இத்தகைய விளக்கங்களை ''மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக''க் காண்கிறார் (லூக் 11:46). இத்தகைய சட்டங்களும் சடங்குமுறை சார்ந்த துல்லியமான விளக்கங்களும் ''சுமக்க இயலாத நுகமாக'' மாறிவிட்டிருந்தன (காண்க: திப 15:10).

-- இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையைக் கடினமாக மாற்றிய திருச்சட்ட அறிஞர்கள் அந்த மக்களுக்கு உதவி புரிவதற்கு மாறாக அவர்களுக்குக் கொடுமைதான் இழைத்தார்கள். ஒருவேளை அந்த திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்திருக்கலாம் என்றாலும் அவர்கள் சட்டத்திற்கு அளித்த விளக்கம் மக்களுக்குத் துன்பத்தையே கொணர்ந்தது. கடவுள் காட்டுகின்ற வழியில் நடந்துசெல்வது மனிதருக்கு ஒரு சுகமான அனுபவமாக மாற வேண்டும். அந்த வழியில் நடப்பது எப்போதும் எளிதாக இல்லாமல் இருக்கலாம்; ஏன், சில வேளைகயில் நாம் தியாகம் செய்வதும் தேவையாகலாம். ஆனால் கடவுள் நமக்கு அளித்துள்ள நெறியைக் கடைப்பிடிப்பது நம் உள்ளத்திற்கு நிறைவையும் நம் வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் நெறியில் நடப்பதற்கு மாறாக, மகிழ்ச்சி கலந்த உணர்வுகளோடு அவரை அன்புசெய்து அவர் காட்டுகின்ற வழியில் பயணம் செய்வதே நமக்கு அழகு.

மன்றாட்டு
இறைவா, உம் திருச்சட்டத்தை நாங்கள் விருப்போடு செயல்படுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்'' (லூக்கா 11:42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சில கிறிஸ்தவ சபைகளில் ''பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கின்ற'' வழக்கம் உண்டு. இதற்கு அடிப்படை லேவியர் நூலில் உள்ளது: ''நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது'' (லேவி 27:30). கடவுளிடமிருந்து நாம் அனைத்தையுமே கொடையாகப் பெறுகின்றோம். எனவே, கடவுளுக்கென நாம் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பது பொருத்தமே. இயேசு அக்காலத்தில் நிலவிய இப்பழக்கத்தைக் கண்டித்தார் என்பதற்கில்லை. மாறாக, கடவுளுக்குக் காணிக்கை கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடவுளின் அன்பில் நிலைத்திராமல் வாழ்வது முன்னுக்குப்பின்முரணாக உள்ளது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் (லூக்கா 11:42).

-- கடவுளுக்குக் கொடுக்கப்படுகின்ற காணிக்கை கடவுளின் புகழுக்காகவும், கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வர். எனினும், பத்திலொரு பங்கைக் காணிக்கையாக்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. கட்டாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது உண்மையான கொடை என்று சொல்ல முடியாது. உளமார உவந்து வழங்குவதே உண்மையான கொடை, அன்பளிப்பு. கடவுளிடமிருந்து நாம் கொடையாகப் பெற்றவற்றை மக்களின் நலனுக்காகக் கொடுக்கும்போது கடவுளுக்கே நாம் புகழ் செலுத்துகிறோம். மனிதரின் பொருள்கொடை கடவுளுக்குத் தேவையல்ல; ஆனால், நம் உள்ளத்தில் அவரை உண்மையாக ஏற்று வழிபடுகின்ற செயலே நாம் அவருக்கு அளிக்கின்ற மேலான கொடை. அதுபோலவே, கடவுளின் அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் கடவுளுக்கு விருப்பமானதாகும். எனவே, ''நீதியையும் கடவுளின் அன்பையும் கடைப்பிடிக்க'' நாம் அழைக்கப்படுகிறோம் (காண்க: லூக்கா 11:42)

சிந்தனை
இறைவா, பொருளை அல்ல எங்கள் இதயத்தையே நீர் கேட்கிறீர் என உணர்ந்து எங்களையே உமக்குக் கையளிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

பழையதும் புதியதும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஐயோ! பெரிய மனிதர்களே, மனுஷிகளே, உங்களுக்குக் கேடு! நீங்கள்; எல்லாவற்றிலும் பத்திலொரு கமிஷன் வாங்குகிறீர்கள். மேஜைமேல் சம்பளமாக வாங்குவது ஒருபக்கம். மேஜைக்கு கீழ் கிம்பளமாக வாங்குவது இன்னொரு பக்கம். அலுவலகத்தில் ஒரு தொகை. வெளியே ஒரு பெருந்தொகை.ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

ஐயோ! பெரிய மனிதர்களே,மனுஷிகளே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஆமா, முதல் மரியாதை, ஆளுயர மாலை, சாஷ்ட்ராங்க மரியாதைக்கு அலையாய் அலைகிறீர்களே!

ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். ஆமாம். நடை பிணமாக,நம்மிடையே நடக்கும் அநியாயங்களைக் கண்டும் சூடு சுரணையற்று அலையவில்லையா! மக்களும், பிணம் எனத் தெரியாமல் அவர்களுக்கு பொன்னும் பொருளும் பணமும் பதவியும் கொடுத்து அபிஷுகம் செய்கிறார்கள்.

கொஞ்சம் வரட்டு கௌரவம் உள்ளோர், இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர் என்று சலித்துக்கொள்ளலாம். "ஐயோ! ,வரட்டு கௌரவம் உள்ளவரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை உங்களுக்கு கீழ் உள்ள அப்பாவி மனிதர் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள். உங்கள் அறிவின் முதிற்சியை முறை கேடாகப் பயன்படுத்தி அப்பாவிகளை கொடுமைப்படுத்துகிறீர்கள்.

வேண்டாம் இந்த சாபக்கேடான வாழ்க்கை.

--அருட்திரு ஜோசப் லீயோன்