முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 130: 1-2. 3-4. 5-6
பல்லவி: பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

.
1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். -பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

லூக்கா 11:47-54

பொதுக்காலம், வாரம் 28 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.'' இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7)
”பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு”

வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல்.

மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால், என்னுடைய பதவியால் எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் எல்லாமே நம்மை கைவிட்டுவிடும் என்று ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக சொல்கிறார். கடவுள் ஒருவரை நம்பியிருந்தால் மட்டுமே, நமக்கு வாழ்க்கை உண்டு. மற்ற அனைத்துமே நம்மை கைவிட்டுவிடும் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம்.

இது திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம் மட்டுமல்ல. இன்றைக்கு இருக்கிற மனிதர்கள் பெரும்பாலோனோரின் அனுபவமும் இதுவாகத்தான் இருக்கிறது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறபோது மட்டும் தான், நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும், சவால்களை துணிவோடு சந்திக்க முடியும் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

தன்னலமில்லாத தலைவர்கள்

இன்றைக்கு நமது நாட்டில் ஏராளமான தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறோம். ஒரு சில தலைவர்களின் பிறந்தநாளில் பொதுவிடுமுறை அறிவித்து, அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். முகநூல் பதிவுகளில் இன்றைக்கு சமுதாயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நல்ல மனிதர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், இவர்கள் வாழ்ந்தபோது, இப்போது வாழ்ந்தகொண்டிருக்கிற நல்ல மனிதர்களுக்கு, அவர்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கிறோமா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. “லைக்“ போடுவதோடும், “கமெண்ட்” எழுதுவதோடும் நின்றுவிடுகிறோம். அவர்களை வெறும் அடையாளத்திற்குத்தான் வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை ஆளவோ, அதிகாரத்தைக் கொடுக்கவோ நாம் விடுவதில்லை.

இரோம் ஷர்மிளா, மேதாபட்கர், சுப.உதயகுமார், தோழர் நல்லகண்ணு என்று, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மக்களுக்காக உண்மையாக உழைக்கிறவர்களை நாம் எப்போதும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது இப்போது மட்டும் அல்ல. இஸ்ரயேல் மக்களின் தொடக்க கால வரலாற்றிலிருந்தே நாம் பார்க்கலாம் என்பதைத்தான், இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் இந்த உலகத்தைப் படைத்த தருணத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் கடவுளின் ஆவியால் தூண்டப்பட்டு, மக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் முடிவு பரிதாபமாக இருந்திருக்கிறது. கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நினைவுச்சின்னங்களையும் எழுப்பியிருக்கிறார்கள். உயிரோடு இருந்தபோது அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்கள், கொலை செய்தவர்கள், நினைவுச்சின்னங்களை எழுப்பியிருப்பது, கொடுமையிலும் கொடுமை. இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

நல் மனிதர்களை நாம் எப்போதும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய சமூக அங்கீகாரத்தையும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்த சமூகத்திற்கு விடிவு கிடைக்குமேயன்றி, மற்ற வழிகளில் வாய்ப்பு இல்லை. உண்மையான பொதுநலவாதிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------

உண்மையான வாழ்க்கைமுறை

இறைவாக்கினர்கள் பற்றிய, திருச்சட்ட அறிஞர்களின் பார்வை முரணானதாக இருந்தது. அவர்கள் மக்கள் முன்னிலையில், இறைவாக்கினர்களைப் பற்றி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர்கள் போல நடந்து கொண்டார்கள். ஆனால், உண்மையில், இறைவாக்கினர்களின் இறப்பிற்கு காரணமானவர்கள் அவர்களே. அவர்கள் போற்றிய இறைவாக்கினர்கள் அனைவருமே இறந்து போனவர்கள். ஆனால், வாழும் இறைவாக்கினர்களை அவர்கள் கடுமையாக துன்புறுத்தினர். இறந்த இறைவாக்கினர்களுக்கு உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். ஆனால், வாழ்ந்து கொண்டிருந்த இறைவாக்கினர்களுக்கு, இறப்பைப் பரிசாகக் கொடுத்தனர்.

”உங்கள் அமாவாசை, திருவிழாக்கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது” (எசாயா 1: 14). ” ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக்கா 6: 8). மேற்கூறிய இறைவார்த்தைகள் தான், இறைவாக்கினர்களின் போதனையின் அடிப்படை சாராம்சம். ஆனால், திருச்சட்ட அறிஞர்களின் வாழ்வுமுறைக்கு எதிரானது இதுதான். இயேசு, இறைவாக்கினர்களின் அடியொற்றி, தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர். எனவே, நிச்சயம், அவர் திருச்சட்ட அறிஞர்களால், எதிர்க்கப்பட்டது, நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

நாம் அனைவருமே, நமக்கென்று ஒரு வாழ்வுமுறையை வகுத்து வைத்திருக்கிறோம். நாம் நினைப்பதுதான் நேர்மை, உண்மை, சரியான பார்வை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுவான பார்வையில் எது நேர்மையோ, எது உண்மையோ, எது சரியோ அதற்கு நாம் முன்னுரிமை கொடுத்து, நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இறைவாக்கினர்களின் மாண்பு

இறைவாக்கினர்களைப் பற்றிய மறைநூல் அறிஞர்களின் கருத்தும் வாழ்வும் முரண்பாடாய் அமைந்திருந்தது. அவர்கள் இறைவாக்கினர்களைப் புகழ்ந்தார்கள். ஆனால், அவர்கள் புகழ்ந்த அனைத்து இறைவாக்கினர்களும் மறைந்து போனவர்கள். கண்முன்னால் நிற்கக்கூடிய இறைவாக்கினர்களை அவர்கள் எதிர்த்தார்கள். அவர்களை குற்றம் சுமத்தினார்கள். அவர்களை ஒழித்துவிட துடித்தார்கள். இறந்துபோன இறைவாக்கினர்களுக்கு நினைவிடங்கள் அமைத்தார்கள். ஆனால், உயிருள்ள இறைவாக்கினர்களைத் துன்புறுத்தினார்கள்.

”உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது” (எசாயா 1: 14). ”ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக்கா 6: 8). மேற்கண்ட இறைவார்த்தைகள், இறைவாக்கினர்களின் போதனையின் சாராம்சம். இதைத்தவிர்த்து மறைநூல் அறிஞர்கள் அனைத்தையும் செய்ததை இயேசு கண்டிக்கிறார்.

எதைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். செய்யக்கூடாததைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், நமது வாழ்க்கையில் செய்யக்கூடியவைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. வேண்டாதவைகளை நாம் செய்வதற்கு முனைகிறோம். இதனைத் தவிர்ப்பதற்கு முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

கணக்கு கேட்கப்படும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் ஆவேசமான அறைகூவல் அன்றைய பார்வையாளர்களுக்கு அச்சம் கலந்த திகைப்பை ஏற்படுத்தியிருக்கும். ஏன், இன்றும்கூட நமக்கு அத்தகைய உணர்வையே அவரது சொற்கள் தருகின்றன. ஆபேலின் இரத்தம் முதல், உலகம் தோன்றியதலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்கு கேட்கப்படும். ஆம், முன்னாள் தலைமுறையினரின் தவறுகளுக்காக இன்றைய தலைமுறையினர் கணக்கு கொடுக்கப்படும். ஏனென்றால், நாம் எல்லோருமே ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டவர்களாக, ஒருவரால் மற்றவர் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். இதனையே இறையியல் சமூகப் பாவம் என்று அழைக்கிறது. ஒரு தலைமுறையினரின் பாவம் அடுத்த தலைமுறையினரை, அவர்கள் தவறு செய்யாவிட்டாலும்கூட, அவர்களைத் தாக்குகிறது. இன்றைய மிகச் சிறந்த எடுத்துக்காட்டு: கடந்த தலைமுறையினரின் தவறுகளால் ஓசோன் படலம் உடைபட்டு, உலகம் வெப்பமயமாகிக் கொண்டு வருகிறது. இன்று நாம் செய்யும் தவறுகளால், அடுத்த தலைமுறைக்குத் தூய்மையான தண்ணீரோ, காற்றோ இல்லாமல் போகும் நிலையை நாம் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம். எனவே, நமது ஒவ்வொரு செயலும் அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது என்பதை உணர்வோம். நமது ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்கு கொடுப்பவர்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: நீதியின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஒரு தலைமுறையினரின் தவறுகளுக்காக அடுத்த தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும் என்னும் உமது எச்சரிக்கை மொழிகளுக்காக நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, எங்களது ஒவ்வொரு சொல்லும், செயலும் பிறர்மீது, அடுத்த தலைமுறைமீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உணர்ந்து, நாங்கள் பொறுப்புணர்வோடு வாழும் வரம் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள்.
ஆனால் அவர்களைக் கொலைசெய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே' என்றார்'' (லூக்கா 11:57)

-- தனி மனிதரும் சமூகங்களும் எத்தகைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கடவுளின் பெயரால் உணர்த்தியவர்கள் இறைவாக்கினர்கள். அவர்கள் ஒருவிதத்தில் மனித குலத்தின் ''மனச் சான்றாக'' விளங்குபவர்கள். இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் பேசினார். அதுபோலவே இன்றைய உலகிலும் மனிதரின் மனச்சான்றைத் தொட்டுப் பேசிய மகான்கள் வாழ்ந்துள்ளார்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட காந்தியடிகள், கருப்பரானாலும் வெள்ளையரானாலும் எல்லாருமே மனிதர் என்னும் முறையில் சம உரிமை கொண்டவர்களே என காந்தி வழியில் நின்று போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், ஏழையரின் முகத்தில் இயேசுவைக் கண்ட அன்னை தெரேசா போன்றோர் இக்கால இறைவாக்கினர்கள். சாவுக்குப் பிறகும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள் எனலாம். ஆனால் கடந்த கால இறைவாக்கினரைப் போற்றிவிட்டு, அவர்கள் கற்பித்ததைக் காற்றில் விட்டுவிட்டால் நமக்கு என்ன பயன்?

-- இந்த உண்மையைத்தான் இயேசு உணர்த்தினார். இறைவாக்கினர் உயிர் வாழ்ந்த போது அவர்களுடைய போதனையை ஏற்காமல் அவர்களைத் துன்புறுத்திக் கொன்றுபோட்டார்கள்; அத்தகைய கொடிய செயலைப் புரிந்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்களோ முற்காலத்தில் இகழப்பட்ட இறைவாக்கினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறார்கள். இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இன்றும்கூட, காந்தியடிகளின் சிலைகளுக்குத் தவறாமல் மாலை அணிவிக்கிறவர்கள் காந்தி வழங்கிய போதனையைக் காற்றில் பறக்க விடுவதை நாம் காணவில்லையா? சடங்குமுறைக்காகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் அத்தலைவர்கள் காட்டிய நல்வழியை விட்டு விலகிச் செல்வதில்லையா? இந்த முரண்பாடு நம்மோடு இருப்பதை நாம் கருத வேண்டும். இயேசு காட்டிய வழியில் நடப்பதற்கு மாறாக, அவரைப் பெயரளவில் போற்றி, வாயாரப் புகழ்ந்து பாடுவதோடு நின்றுவிடாமல் இறைவார்த்தையைச் செயல்படுத்துவோராக நாம் வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் சொற்படி நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' (லூக்கா 11:52)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ''ஐயோ! உங்களுக்குக் கேடு!'' என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார்.

-- நுழைதலும் நுழையவிடுதலும் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்கின்ற அனுபவங்கள். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும்போது, அவரிடத்தில் முழுமையாக நம்மைக் கையளிக்கும்போது நாம் அவருடைய ஆட்சியில் நுழைகிறோம் எனலாம். அதுபோல, பிறர் நம்மைக் காணும்போது நம் வாழ்வில் கடவுளின் பண்புகள் துலங்குகின்றன என உணர்ந்து, அதே பண்புகளைத் தம் வாழ்விலும் கடைப்பிடிக்க முன்வரும்போது நாம் அவர்கள் இறையாட்சியில் நுழைவதற்கு வழியாகின்றோம் (காண்க: லூக்கா 11:42).. இதுவே தூயவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கின்ற உயர்ந்த நெறி. அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகத் துலங்கும். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் கடவுளின் பிள்ளைகள் என்றுதான் பார்த்தாரே தவிர மனித மாண்பு இல்லாத பொருள்களாகக் கருதவில்லை. கடவுளிடம் துலங்குகின்ற அன்பும் இரக்கமும் நம் வாழ்விலும் துலங்கும்போது இறையாட்சியில் நாமும் நுழைவோம், பிறரும் அந்த ஆட்சியில் பங்கேற்று அதில் நுழைவதற்கு நாம் கருவிகளாகச் செயல்படுவோம். அப்போது ''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் நமக்குப் பொருந்தாது எனலாம். அந்த அளவுக்கு நம் வாழ்க்கை விளங்குகிறதா?

மன்றாட்டு
இறைவா, இறையாட்சியில் நாங்கள் நுழைந்திட இயேசுவை வாயிலாகத் தந்ததற்கு உமக்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________