முதல் வாசகம்
.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 20-25

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம் ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். ஆகவே ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' ``நீதியாகக் கருதினார்'' என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை; நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம். நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
லூக் 1: 69-70. 71-73. 74-75
பல்லவி: தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப் போற்றுவோம்.

69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். -பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். -பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

லூக்கா 12:13-21

பொதுக்காலம், வாரம் 29 திங்கள்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், ``போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, ``என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, ``எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ``செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். `ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, ``என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்'' என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75
”அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்”

செக்கரியா கடவுளை மீட்பராக அறிமுகப்படுத்துகிறார். செக்கரியா ஆலயத்தில் பலி செலுத்தக்கூடிய குருவாக இருக்கிறார். சாதாரண மக்களை விட, அவருக்கு திருச்சட்டத்தைப் பற்றிய அறிவுத்தெளிவு அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களை விட, நடக்கிற நிகழ்வுகளை, உன்னிப்பாக பார்ப்பது அவருக்கு இயல்பானது. ஏனென்றால், இஸ்ரயேல் வரலாற்றையும், வாக்களிப்பட்ட மீட்பரையும், அவர் வரவிருக்கிற நேரத்தையும் அவரால் கணிக்க முடியும். அதைத்தான் இறைவாக்காக இன்றைய பாடல் வழியாக அவர் உணர்த்துகிறார்.

செக்கரியாவைப் பொறுத்தவரையில் காலம் கனிந்துள்ளதாகச் சொல்கிறார். என்ன காலம் கனிந்துள்ளது? கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து, நோய்நொடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பு அளிக்க இருப்பதாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கடவுள் மக்களை அனைத்து அடிமைத்தனத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க இருக்கிறார். அது நடக்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தவராக, அந்த செய்தியை அறிவிக்கிறார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த மெசியா தோன்றிவிட்டார் என்கிற மகிழ்ச்சியான செய்தி தான், இந்த பாடலின் சாராம்சமாக இருக்கிறது.

இறைவன் நம்மோடு இருந்து நம்மை மீட்கிறவராக இருக்கிறார் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது. இறைவனின் அன்பையும், அவர் நம் மேல் வைத்திருக்கிற கனிவான அன்பையும் இது உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இறைவனின் அன்பை முழுமையாக உணர்வோம். எந்நாளும் அவரது திருப்பெயரை செக்கரியாவைப் போல போற்றுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

பகிர்ந்து வாழ்வோம்

பேராசை பிடித்த மனிதர்கள் கூட்டம் இந்த உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பேராசை. உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில், நண்பர்கள் மத்தியில் எங்கும் பேராசை என்கிற தீய பண்பு தலைவிரித்தாடுகிறது. இந்த பேராசை பிடித்த உலகில், நாமும் மற்ற மனிதர்களோடு சேர்ந்து பேராசை பிடித்தவர்களாக மாறிவிடுகிறோம். இத்தகைய பேராசை எண்ணத்திலிருந்து விடுபட நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம்.

இந்த உலகத்தில், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளிக்கு இந்த பேராசை தான் காரணமாக இருக்கிறது. ஏழைகள், ஏழைகளாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களோ தங்களது பேராசை எண்ணத்தினால், செல்வங்களைச் சேர்ப்பதில் தங்கள் வாழ்வை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது தேவைக்கு போக, மீதமிருப்பது அனைத்துமே நமக்கானது அல்ல. அது மற்றவருடையது. அது மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதை விட கேவலமானது. அந்த தவறைத்தான் அறிவற்ற செல்வந்தன் செய்கிறான். நாம் சேர்த்து வைப்பது அனைத்துமே, மற்றவருக்கான என்கிற எண்ணமில்லாமல் வாழ்ந்ததால், அறிவற்ற செல்வந்தன், தனக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறான்.

இறைவன் நமக்கு பல கொடைகளை வழங்கியிருக்கிறார். அந்த கொடைகளை நாம் நமக்கென்று மட்டும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தும் திறந்த மனதை கடவுள் நமக்குத் தந்தருள இறைவனிடம் வரம் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இயேசுவைப்பற்றிய புரிதல்

தேவைக்கு மற்றவர்களைப் பயன்படுத்துதல் தான், இந்த உலகத்தின் தற்போதைய வாழ்வியல் நடைமுறை. எந்த அளவுக்கு ஒருவரை நாம் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பயன்படுத்தி, இலாபம் சம்பாதிப்பதே வாழ்வின் தத்துவமாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு இத்தகைய மனநிலையோடு வந்த, ஒருவரை இயேசு சரியான பாதையில் சிந்திப்பதற்குப் பணிக்கிறார்.

இயேசுவிடத்தில் பல மனிதர்கள் பல தேவைகளுக்காக வந்திருக்கிறார்கள். நோயிலிருந்து விடுதலை பெற வேண்டும், பார்வை பெற வேண்டும், பாவங்கள் மன்னிப்புப் பெற வேண்டும். ஆனால், இந்த மனிதன் சொத்துப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இயேசுவிடத்தில் வருகிறான். அவன் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும் புரிந்து கொள்ளாத நிலையையே இது காட்டுகிறது. ஒருவேளை அவன் இயேசுவைப் புரிந்து கொண்டிருந்தால், இங்கே இயேசுவிடம் வந்திருக்க மாட்டான். இன்றைக்கு எங்கெல்லாம் திருத்தலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. காரணம், அங்கு தான் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகாரத்திற்கும், பதவிக்கும் போட்டியும், வன்முறையும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது நாம் இன்னும் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இயேசுவை நாம் எப்போது முழுமையாகப் புரிந்து கொள்ளப்போகிறோம்? இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும், இன்னும் நாம் இயேசுவை முழுமையாக உணராமல் இருந்தால், அவரது பணிவாழ்வு நமது வாழ்வில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தால், நாம் எப்படி இந்த கிறிஸ்தவ வாழ்வுக்கு உண்மையாக இருக்கப்போகிறோம்? சிந்தித்துப் பார்ப்போம். செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

செல்வத்தினால் வரும் கேடு

இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஓர் ஊரில் சண்டையோ, வாக்குவாதமோ வந்தால், அவர்கள் உடனே, ஊரிலிருக்கக்கூடிய பெரிய மனிதர்களிடம் முறையிடுவார்கள். அதுபோல, பொதுவாக பாலஸ்தீனத்திலே போதகர்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஏதாவது பிரச்சனை என்றால், போதகர்களிடம் சென்று, பிரச்சனையைத் தெரிவித்து, தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வார்கள். அதுபோன்று தான், இயேசுவிடமும் ஒரு மனிதர் வருகிறார்.

இயேசு அந்த மனிதனின் தேவையில்லாத பிரச்சனையைத் தீர்ப்பது தனது பணி அல்ல என்பதைத் தெரிவித்தாலும், அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருக்கிறவர்களுக்கு செல்வத்தினால் விளைகின்ற, கடுமையான விளைவுகளை எடுத்துரைக்கின்றார். செல்வம், அந்த செல்வந்தனை இந்த உலகத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. இந்த உலகத்தைத் தாண்டி அவன் சிந்திக்கவும் இல்லை. அப்படி ஓர் உலகம் இருப்பது, அவனது எண்ணத்திற்கு வரவும் இல்லை. அவனுடைய சிந்தனை, எண்ணம் முழுவதும் இந்த உலகம் சார்ந்ததாக இருக்கிறது. அதைத்தாண்டி, அவனால் சிந்திக்க முடியாததற்கு காரணம், அவன் சேர்த்து வைத்திருந்த செல்வம். கடல் தண்ணீரை எவ்வளவுக்கு குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு நமக்கு தாகம் எடுக்கும். அதேபோல, செல்வத்தை எந்த அளவுக்கு சேர்க்கிறோமோ, மீண்டும், மீண்டும் நமக்கு சேர்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

நமது வாழ்க்கையில் செல்வத்தைத் தேடுகிறபோது, செல்வத்தை தாண்டி, நம்மால் சிந்திக்க முடியாது என்பது, இன்றைய அறிவற்ற செல்வந்தர் உவமை, சிறந்த பாடம். செல்வம் நமக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அது முதன்மையானது அல்ல. நாம் வாழ்வதற்கான ஓர் உதவும் காரணி. அவ்வளவுதான். அந்த மனநிலை நமக்கு வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளே நமது மையம்

பாலஸ்தீனப்பகுதிகளில் தங்களுக்குள் ஏற்படும் பொதுவான சிக்கல்களை போதகர்களை நடுவராகக்கொண்டு தீர்த்துக்கொள்வது மக்களின் வழக்கமாக இருந்தது. போதகர்கள் மக்கள் மத்தியில் மதிப்பு மிகுந்தவர்களாகக் காணப்பட்டதால், மக்கள் அவர்களை நாடி வந்தனர். எனவே, தனது பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள ஒருவர் இயேசுவை நாடி வந்ததில் எந்தவிதமான வியப்புமில்லை. ஆனால், பணம் தொடர்பான எந்தவித வழக்கையும் இயேசு விசாரிப்பதற்கு தயாரில்லை. ஆனால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் கூடியிருந்த மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்கிறார்.

உரோமையர்கள் மத்தியில் பழக்கமான ஒரு சொல்லாடல் இருந்தது. ”பணம் என்பது கடல் நீரைப்போன்றது. எவ்வளவுக்கு அதிகமாக நாம் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு நமக்குத் தாகம் எடுக்கும்”. பணம் என்பதை நம் வாழ்வின் மையமாகக்கொண்டு நமது வாழ்வை அமைத்தால், அதிலிருந்து நாம் வெளியே வருவது என்பது இயலாத காரியம். கிறிஸ்தவம் என்பது இதற்கு நேர்மாறானது. எவ்வளவுக்கு நாம் செல்வத்திலிருந்து விலகிச்செல்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளோடு நெருங்கி வருகிறோம். எனவேதான் இயேசு, பணத்தை மையமாகக்கொண்டு வாழும் வாழ்விலிருந்து நம்மை மாறி வரச்சொல்கிறார்.

இன்றைய நவீன உலகில், மனித வாழ்வு இந்த பணத்தை மையமாகக்கொண்டு தான் அமைந்திருக்கிறது. பிள்ளைகளை பணம் செலவழித்துப்படிக்க வைக்கிறோம். எதற்காக? பணத்தை பல மடங்கு அதிகம் பெறுவதற்காக. மனிதன் செய்கிற ஒவ்வொரு செயலின் வழியாகவும் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் செயல்படுகிறான். நம் வாழ்வில் கடவுளை எப்போது மையமாகக்கொண்டு செயல்படப்போகிறோம்? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பயனற்ற செல்வம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய மூன்று வாசகங்களும் இவ்வுலக செல்வங்களின் நிலையாமையையும், இறைவனே நம் ஒப்பற்ற செல்வம் என்னும் கருத்தையும் வலியுறுத்துகின்றன. இவ்வுலக செல்வத்திற்காக உழைப்பதனால் ஏற்படும் இழப்புகளை நாம் பட்டியல் இடலாம்:

  1. எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் இறுதியில் அது நம்மோடு வரப்போவதில்லை. வேறொருவர்தான் அதை அனுபவிக்கப்போகிறார்.
  2. இவ்வுலக செல்வம் நம்மை இறைவனிடம் சேர்ப்பதில்லை. இறைவனைவிட்டுப் பிரிக்கிறது.
  3. மிகுதியான செல்வம் இருந்தாலும், நிறைவாழ்வு, மகிழ்ச்சி கிடைக்காது. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

இதை நாம் உணரவேண்டும். எனவே, எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு நம் எச்சரிக்கையாய் இருப்போம். இவ்வுலக செல்வத்தைச் சேர்ப்பதற்குப் பதில் இறைவனின் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம். நமது நல்ல எண்ணங்கள், செபங்கள், நற்செயல்களே இறைவனின் முன்னிலையில் நமது செல்வங்கள். அத்தகைய செல்வத்தின்மீது ஆர்வம் காட்டுவோம்.

மன்றாடுவோம்: எங்கள் ஒப்பற்ற செல்வமாகிய இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அழிந்துபோகும்;, பயனற்ற செல்வத்திற்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும் செல்வத்திற்காக உழைக்க அருள் தாரும். நீரே எம் ஒப்பற்ற செல்வமாய் இருந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

பேராசைக்கு இடங்கொடாதீர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பேராசையைப் பற்றிய இயேசுவின் போதனை இது: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். பேராசைகள் பல வகைப்படுகின்றன. பணத்தின்மீது பேராசை, பொருள்களின்மீது பேராசை, பதவியின்மீது பேராசை, புகழ்மீது பேராசை ... எனப் பல்வேறு விதமான பேராசைகள் இருக்கின்றன. அளவுக்கதிகமான ஆசைதானே பேராசை. ஓரளவு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்காகவே ஏக்கம் கொண்டு, எந்நேரமும் அதே எண்ணமாக இருப்பது பேராசை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, நமது எண்ணங்களை, விருப்பங்களை நாம் அவ்வப்போது ஆய்வு செய்துகொள்வது அவசியம். பணத்தை, பொருள்களை சேமிப்பவர்கள், பதவிகளில் அமர்ந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் பெரும்பாலும் அதில் நிறைவடைவதை நாம் காண்பதில்லை. இன்னும் அதிகமாகப் பணமும், பொருள்களும் சேர்க்க விரும்புகிறார்கள், இன்னும் அதிகமாகப் புகழும், பதவிகளும் அடைய விரும்புகிறார்கள். இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பை உடைத்து, மனநிறைவு என்னும் இறை இயல்புக்குள் நுழைய முயற்சி செய்வோம். எனக்க வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ எதற்கும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன் (பிலி 4:13) என்று அறிவித்த புனித பவுலடியாரைப் போல நாமும் பயிற்சி பெறுவோமாக.

மன்றாடுவோம்: மனநிறைவின் ஊற்றே இறைவா, எவ்வகைப் பேராசைக்கம் இடங்கொடாத மனதை எனக்குத் தந்தருளும். நீர் எனக்குத் தந்திருக்கிற கொடைகள், நன்மைகள், செல்வங்களை எண்ணிப்பார்த்து, நன்றி சொல்கிற, மகிழ்ச்சி அடைகிற மனநிலையை எனக்குத் தாரும். நீர் தரும் ஆறுதலும், உம்மோடு;, உமக்காக செலவழிக்கும் நேரமும் எவ்வளவோ மேலானவை என்பதை நான் உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்.
அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'' (லூக்கா 12:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''அறிவற்ற செல்வன்'' உவமை உண்மையான செல்வம் எதில் அடங்கியிருக்கிறது என விளக்குகிறது (லூக் 12:13-21). இந்த உவமையைக் கூறிய இயேசு நம்மைப் பார்த்து, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைக்க'' கேட்கிறார் (லூக் 12:21). உலகப் பார்வையில் செல்வம் சேர்;த்து வைக்கும் மனிதர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றலாம். பணம் பாதாளம் வரைப் போகும் என்றொரு கூற்றும் உண்டு. ஆனால் பாதாளத்தையும் எட்டுகின்ற சக்தி வாய்ந்த பணம் நம்மைப் பாதாளத்திற்கே இழுத்துச் சென்றுவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மனித வாழ்வு நிறைவு பெற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் மட்டும் போதாது. மாறாக, செல்வம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடக் கூடும். செல்வத்தையே தெய்வமாகக் கொள்வோரும் உண்டு. இவர்கள் செல்வம் திரட்டுவதற்காக எந்தவிதமான தியாகங்களையும் செய்யத் தயங்குவதில்லை. ஏன், ஏமாற்று வழிகளையும் ஏய்ப்பு முறைகளையும் கையாண்டு கூட இவர்கள் செல்வம் குவிக்க நினைப்பார்கள். ஆனால் இத்தகைய முயற்சிகள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவே நம்மைவிட்டு நம் உயிர் பிரிகின்ற நாள். இறப்பு எல்லா மனிதருக்கும் உண்டு. அதை முறியடிக்கின்ற சக்தி மனிதருக்கு இல்லை. வள்ளுவரும் இதை ''நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு'' எனக் கூறிப் போந்தார் (காண்க: குறள் 336). இவ்வளவுதான் இவ்வுலகத்தின் ''பெருமை'' என வள்ளுவர் கூறுவதில் எதிர்ப்பொருளணி துலங்குவதையும் நாம் காணலாம். நிலையாமைதான் மனித வாழ்க்கையின் முடிவா அல்லது நிலையாமைக்கு அப்பாற்பட்ட நிலைவாழ்வு ஒன்று உளதா?

-- கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, கடவுள் நமக்கு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வை வாக்களித்துள்ளார். அதுவே இம்மண்ணக வாழ்வின் உண்மையான, உயரிய குறிக்கோளாகவும் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். இவ்வுலகச் செல்வத்தைக் கொண்டு நாம் ''கடவுள் முன்னிலையில்'' செல்வம் சேர்த்துவைக்க முடியும். இதற்கான வழியையும் இயேசு நமக்குக் காட்டுகிறார். ''உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்'' (லூக் 12:33) என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். ஆகவே, சுய நலப் போக்கும் பேராசையும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் இவ்வுலகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே கருத்தாய் இருப்போம். அச்செல்வங்களால் நமக்கு நிலையான மன அமைதியைத் தர இயலாது. ஆனால் பிறரன்பு என்னும் இலட்சியம் நம்மில் உறதியாக இருந்தால் நாம் தேவையில் உழல்வோரோடு நம் செல்வத்தைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைப்போம்'' (லூக் 12:21). அதுவே உண்மையான செல்வம்.

மன்றாட்டு
இறைவா, அழிந்துபோகும் செல்வத்தை நம்பி வாழாமல் உம் முன்னிலையில் செல்வம் கொண்டவர்களாக மாறிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' (லூக்கா 12:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இன்றைய உலகத்தில் ஒரு பெரிய முரண்பாடு நிலவுவதை நாம் பார்க்கின்றோம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு இல்லாமல் பசியால் வாடுகின்ற மக்கள் ஒருபுறம்; தேவைக்கு அதிகமாக செல்வம் குவித்து, தம்மிடம் இருக்கின்ற உடைமைகளை எங்கே பத்திரப்படுத்தி வைப்பது என்று தெரியாமல் கவலைப்படுகின்ற பணக்கார முதலைகள் கூட்டம் மறுபுறம். செல்வக் கொழிப்பும் வறுமையும் அருகருகே உள்ளதை நாம் எங்குசென்றாலும் பார்க்கலாம். வறுமையால் வாடி மனித மாண்பு இழந்து வாழவேண்டும் என்று கடவுள் யாரிடமும் கேட்பதில்லை. ஆனால் செல்வத்தின்மீது நம்பிக்கை வைத்து, பேராசையால் தூண்டப்பட்டு பொருள்களைக் குவித்துக்கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் என்று மனப்பால் குடிக்கின்ற போக்கினை இயேசு கண்டிக்கிறார். ''அறிவற்ற செல்வன்'' தன் செல்வமே தனக்கு நிலையான மகிழ்ச்சியைத் தரும் என நினைத்தான் (லூக்கா 12:13-21). ஆனால் செல்வத்தை அனுபவிக்கும் முன்னரே அவன் உயிர் அவனைவிட்டுப் பிரிகிறது. செல்வம் நமக்கு நிலையான மகிழ்ச்சியைத் தராது என்னும் போதனை கிறிஸ்தவத்திற்கே உரியது என்பதற்கில்லை. புத்தரும் ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்று போதித்தார்.

-- உடைமைகளும் செல்வமும் நமக்கு நிலையான மகிழ்ச்சியைத் தரா என்றால் எங்குதான் நாம் மகிழ்ச்சியைக் காண்பது? மனிதர் விரும்புவது நிலையான வாழ்வு. இவ்வுலக வாழ்க்கை நிலையானதல்ல என்பதை நாம் அனுபவத்தால் அறிகிறோம். நிலையான வாழ்வு வேண்டும் என்னும் ஆர்வம் மனித உள்ளத்தில் என்றுமே உண்டு. ஆனால் அந்த நிலையான வாழ்வை நாம் நமது சொந்த முயற்சியால் பெற்றுவிட இயலாது. ஆனால் கடவுளின் அருள்துணை கொண்டு நாம் நிலைவாழ்வில் பங்கேற்க இயலும் என்னும் அரிய உண்மையை இயேசு நமக்கு அறிவிக்கிறார். கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டு, அவருடைய வழியில் நடந்து சென்று வாழ்கின்ற மக்கள் இவ்வுலகச் செல்வத்தை நம்பி ஏமாந்துபோகாமல், கடவுள் தரும் செல்வமாகிய நிலைவாழ்வைப் பெறுவர்.

சிந்தனை
இறைவா, அழிந்துபோகின்ற உலகப் பொருள்கள் மீது பற்றுக்கொள்ளாமல், ஒப்புயர்வற்ற செல்வமாகிய உம்மையே நாங்கள் பற்றிக்கொள்ள அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

அறிவுள்ள செல்வன் நீ

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உயிர் இல்லாத அழகு, பிணம். சாதனை இல்லாத அறிவு,மதியீனம். பணிவு இல்லாத வீரம், மூர்க்கத்தனம். தர்மம் இல்லாத செல்வம் பாலைவனத்து மழை, ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை ஒளியில்லா உலகம்.

வீட்டைப் பெரியதாக்குவதால், வீட்டுப்பொருட்களை பெருக்குவதால், சொத்துக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதால் ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடுவதில்லை.
"மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது".(லூக்12'15) "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத் 16 :26).

பணத்துக்கும் சொத்துக்கும் சொந்தக்காரன் நாம் அல்ல. வீடும் உடைமையும் நமக்கு நிரந்தரமல்ல. வாழ்வு நம்முடையதல்ல. எல்லாம் அந்த ஆண்டவனுடையது.எதைத்; தேடுகிறோமோ(நிம்மதி) அது அவருடையது. எதில் தேடுகிறோமோ(உடைமை) அது அவருடையது. யாருக்காக(உயிர்) தேடுகிறோமோ அதுவும் அவருடையது. “கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்”(கொலோ 3'4). இதில் என்ன பெரிய சவடால் வேண்டிகிடக்கிறது. அறியாமை தவிர வேறு என்ன சொல்ல.

ஆண்டவனோடும் ஆன்மீகத்தோடும் தொடர்பு இல்லாத வாழ்க்கை நூல் அறுந்த பட்டம் போன்றது. தொடர்பிழந்த விமானம். அழிவது உறுதி. இறைவன் காட்டும் விழியில் விவேகத்துடன் வாழ்வோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்