முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 124: 1-3. 4-6. 7-8
பல்லவி: ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.
6 ஆண்டவர் போற்றி! போற்றி!
எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. -பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்;
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். அல்லேலூயா.

லூக்கா 12:39-48

பொதுக்காலம், வாரம் 29 புதன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 124: 1ஆ – 3, 4 – 6, 7 – 8
”ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்…”

நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களை நம்மோடு நாம் ஒப்பீடு செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமாக சிந்திப்பதற்கு அழைப்பதற்கான பாடலாக இருக்கிறது. ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்ததனால், அவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்தது. ஒருவேளை ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சிந்தனையாக தருகிறார்.

திருப்பாடலில் வருகிற சிந்தனையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையில் இல்லாமல், நம்மை விட கீழான நிலையில் உள்ளவர்கள் போல, நம்முடைய வாழ்வு அமைந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம்? ஆக, கடவுள் நம்மை பல மனிதர்களை விட சிறப்பான அன்பாலும், அருளாலும் நிரப்பியிருக்கிறார். நம்மை விட ஒரு படி கீழாக இருக்கிறவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் தான், நம்மால் கடவுளின் உண்மையான அன்பையும், அவர் நம்மீது வைத்திருக்கிற உண்மையான பாசத்தையும் உணர முடியும்.

கடவுள் நம் மீது வைத்திருக்கிற பாசத்தை, இந்த திருப்பாடல் நமக்கு நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அன்பை நாம் முழுமையாக உணர்வோம். அவருடைய திட்டப்படி, நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொண்டு, உன்னதமான வாழ்க்கை வாழ நாம் முயற்சி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

ஆயத்தமாக இருக்கிறோமா?

ஆயத்தமாக இருக்க வேண்டும், தயாராக இருக்க வேண்டும் என்பது இன்றைய நற்செய்தி வழியாக இயேசுவின் அழைப்பாக இருக்கிறது. எதற்காக ஆயத்தமாக இருக்க வேண்டும்? எதை நோக்கி ஆயத்தமாக இருக்க வேண்டும்? என்கிற கேள்விகள் நமக்குள் இயற்கையாகவே எழுவது உண்டு. அதைப்பற்றி சிந்திக்கத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் சிறப்பான விதத்தில் அழைப்புவிடுக்கிறது.

நமது வாழ்க்கையில் பலவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அது இறப்பாக இருக்கலாம், இழப்பாக இருக்கலாம், துன்ப, துயரமாக இருக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். இப்படி பலவிதமான உணர்வுகள் நம்மை ஆட்கொள்கிறபோது, அவற்றை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இயேசுவின் சீடராக வாழ விரும்புகிற ஒருவர், வாழ்க்கையில் கவலையும், துன்பமும் இருக்கக்கூடாது என்று எண்ணிவிட முடியாது. மாறாக, அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது வாழ்வைப்பற்றி ஆராய்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும். எனவே, நமது வாழ்வில் என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலை நாம் ஒவ்வொருநாளும் கடவுளிடம் மன்றாட வேண்டும்.

இன்றைக்கு சாதாரண பிரச்சனைகளுக்கும், இன்றைய இளைய தலைமுறையினர் தீர்வு காண முடியாமல், ஏமாற்றமடைந்து வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகின்றனர். பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல, அவர்களுக்கு ஆன்மீக ஆற்றலும் இல்லை. மனப்பக்குவமும் இல்லை. அதனைக்கடந்து, அவர்களைப் பக்குவப்படுத்துவது, நமது தார்மீக பொறுப்பாக இருக்கிறது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

விவேகமுள்ள பணியாள்

அறிவாளி யார்? அறிவீனன் யார்? என்பதற்கு இயேசு இன்றைய உவமை வாயிலாக பதில் சொல்கிறார். மத்திய கிழக்குப் பகுதியில், வேலைக்காரர்களுக்கு அதிகமான அதிகாரத்தை தலைவர் கொடுத்திருந்தார். ஒரு வேலைக்காரன் அடிமையாக இருக்கலாம். ஆனால், மற்ற வேலைக்காரர்களுக்கு, அவனைப் பொறுப்பாக தலைவர் நியமிக்கிறபோது, அவனுக்கு நிச்சயம், அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே, அறிவாளி, மற்றவன் அறிவீனன் என்பது, இயேசு தரக்கூடிய செய்தி.

அறவீனனாக இருக்கிற வேலையாள் இரண்டு தவறுகளைச் செய்கிறான். 1. ”தன் மனம் நினைத்ததை செய்ய வேண்டும்” என்று தனக்குள்ளாக நினைக்கிறான். தலைவர் அவனிடம் பொறுப்பைத்தான் விட்டிருக்கிறார். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது வேலைகளை நான் செய்துகொண்டிருப்பேன், என்று நினைக்காமல், தலைவர் இருந்தால் ஒன்று, இல்லையென்றால் ஒன்று, என்று, அவன் நினைக்கிறான். இது நேர்மையற்றத்தனம். 2. ”தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்”. தான் செய்வது நேர்மையற்றத்தனம் என்பது, அந்த வேலைக்காரனுக்கு தெரிந்தே இருக்கிறது. அப்படியே, தான் செய்வது நேர்மையற்றத்தனமாக இருந்தாலும், தலைவர் வருவதற்குள்ளாக, அனைத்தையும் சரிசெய்து, தனது தவறை மறைத்துக் கொள்ளலாம், என்று அவன் நினைக்கிறான். தவறை தெரிந்தே செய்துவிட்டு, அதை மறைக்கவும் முயல்வது, மிகப்பெரிய பாதகச்செயல். அதைத்தான், அந்த வேலைக்காரன் செய்கிறான். அதற்கான பரிசையும், அவன் பெற்றுக்கொள்கிறான்.

கடவுள் தந்திருக்கிற வாழ்வை இதனோடு ஒப்பிடலாம். கடவுள் தான் நம் தலைவர். நாம் தான், வேலைக்காரர்கள். இந்த உலகமே என் கையில்தான். நான் நினைத்ததைச் செய்வேன், என்று நினைப்பதும் தவறு. செய்த தவறை, கடவுளிடமிருந்து மறைத்துவிடலாம், என்று மறைக்க நினைப்பது, தவறு மட்டுமல்ல. அறிவீனமும் கூட. கடவுள் கொடுத்த வாழ்வை, நேர்மையாக வாழ முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

வாழ்வு என்னும் கொடை

அறிவுள்ள, அறிவற்ற பணியாளர்களைப்பற்றி இயேசு இங்கே பேசுகிறார். மத்திய கிழக்குப் பகுதிகளில் வீட்டுப்பொறுப்பாளர் எனக்கூறப்படுபவரும் அடிமைதான். அவருடைய பொறுப்பு மற்ற அடிமைகளைப் பொறுப்பாக, அவரவர்க்கு கொடுக்கப்பட்டிருக்கிற  பணியைச்செய்யச் சொல்வது. தலைவருடைய நம்பிக்கைக்கு உரியவர் என்றால், இன்னும் அதிகப்பொறுப்பை தலைவர் அவருக்குக் கொடுப்பார்.

அறிவற்ற பணியாளரின் நெறியில்லாத இரண்டு தவறுகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார். 1. தனது பொறுப்பை தவறாகப்பயன்படுத்துவது. தலைவர் அவரைத் தனது வீட்டின் பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம், இந்த அடிமை தலைவருடைய மதிப்பைப் பெற்ற அடிமை. எனவேதான், தலைவர் அவரை பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப்பொறுப்பாளரின் வாழ்வை சற்று ஆழமாகச்சிந்தித்துப்பார்த்தால், அவர் தலைவரின் நன்மதிப்பைப்பெற நடித்திருக்கிறார். வீட்டுப்பொறுப்பாளராக மாற வேண்டும் என்பதற்காக, தலைவர் முன்னிலையில் தன்னை நல்லவராக காட்டி வந்திருக்கிறார். ஆனால், நேர்மையற்றவர்களின் சாயம் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக வெளுத்துவிடும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு. 2. தலைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத சோம்பல்தன்மை. தலைவர் இவ்வளவு பெரிய பொறுப்பைக்கொடுத்திருக்கிறார் என்றால், அவரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது, அந்த அடிமைக்கு நன்றாகத்தெரியும். இருந்தபோதிலும், அவர் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.

கடவுள் நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு என்கிற மிகப்பெரிய கொடையைத்தந்திருக்கிறார். நாம் அனைவருமே இந்த வாழ்வை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்வாக வாழ வேண்டும். அப்போதுதான், நமக்கும், கடவுள் கொடுத்த இந்த வாழ்விற்கும் பெருமை. கொடையாகப் பெற்றுக்கொண்ட வாழ்வைக் கொடையாக மற்றவர்களுக்குக் கொடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடரிடம் இருக்கவேண்டிய இரு முக்கியமான பண்புகளை இன்றைய வாசகம் சுட்டிக்காட்டுகிறது: அவர்கள் நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியுமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஆண்டவர். இயேசு தம் சீடரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். நற்செய்தி அறிவித்தல், சான்றுகளாய் வாழ்தல், நலப்படுத்துதல் போன்ற பணிகளே அவை. இப்பணிகளை நாம் நம்பிக்கைக்குரிய விதத்தில் ஆற்றவேண்டு;ம் என எதிர்பார்க்கிறார் இயேசு. யாரெல்லாம் இப்பணிகளை நம்பிக்கைக்குரிய விதத்தில் நிறைவேற்றுகிறார்களோ, அவர்களே திருச்சபையால் புனிதர்கள் என்று ஏற்பிசைவு செய்யப்படுகிறார்கள். இரண்டாவது பண்பு: அறிவாற்றல். அறிவுக் கூர்மையுடன் காலத்தின் தேவைகளை அறிந்து, செயல்படுபரே நல்ல சீடர். இந்த அறிவு மறையறிவு, இறைமொழி அறிவு, பொது அறிவு, உளவியல் அறிவு என முழமையான அறிவாற்றலாக இருத்தல் வேண்டும்.

இயேசு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். தந்தை  இறைவன் அவரிடம் ஒப்படைத்த பணியை இயேசு நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் செயல்படுத்திக்காட்டினார். தந்தையின் பாராட்டைப் பெற்றார். இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகிறேன் என்று வாழ்த்தினார். நாமும் நமது கடமைகளை, பொறுப்புகளை நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் ஆற்றி, இயேசுவின் பாராட்டை, திருச்சபையின் ஏற்பிசைவைப் பெறுவோமா!

மன்றாடுவோம்: எங்களைப் பெயர் சொல்லி அழைத்த அன்பின் தெய்வமே, இயேசுவே. உம்மைப் போற்றுகிறோம். நீர்; எங்களுக்குத் தந்த அழைத்தலின்படி, நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் பணி செய்ய எங்களுக்கு உமது தூய ஆவியை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும்
அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?' என்று கேட்டார்'' (லூக்கா 12:42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கூறிய உவமைகள் மக்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன. சில வேளைகளில் இயேசு தம் சீடர்களுக்கு நேரடியாகப் பொருந்தும் விதத்தில் உவமைகள் சொன்னார். லூக்கா பதிவுசெய்துள்ள ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றிய உவமை இத்தகைய ஒன்றாகும். பன்னிரு சீடர்களுக்கும் இயேசு தனிப்பட்ட விதத்தில் பயிற்சி அளித்தார். அவர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் ஆதலால் அவர்களை இயேசுவின் போதனைகளைக் கருத்தாய் உள்வாங்கி, பொறுப்போடு மக்களுக்கு அளிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். தம் சீடர்கள் ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' போல நடக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். இயேசுவே தலைவர். அவர் வீட்டுப் பொறுப்பாளரிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைக்கிறார். அந்த வீடு கடவுளின் இல்லமாகிய திருச்சபை. அது கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம் போன்றது. அக்குடும்பத்தை நன்முறையில் பராமரித்துக் காக்கும் பொறுப்பு சீடர்களிடம் கொடுக்கப்பட்டது.

-- சீடர்களின் பொறுப்பு என்ன? அவர்கள் கடவுளின் குடும்பத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு ''வேளாவேளை உணவளிக்க'' வேண்டும். அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். சுய நலப்போக்கில் செல்லாமல் பிறருக்கு நன்மை செய்வதில் ஈடுபட வேண்டும். இயேசு வழங்கிய இந்த அறிவுரை இன்றைய திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் மிகவே பொருந்தும். திருச்சபையில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்குத் தேவையான ஆன்ம உணவு வழங்கப்பட வேண்டும். தலைவர்கள் திருச்சபை உறுப்பினரைக் கொடுமைப்படுத்தலாகாது. மனம்போன போக்கில் சென்று, தங்களுடைய வசதியைக் கவனிப்பதிலேயே காலத்தைச் செலவிடலாகாது (காண்க: லூக் 12:45-46). இயேசு தம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தெரிந்துகொண்ட மனிதரிடம் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். எனவேதான், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என இயேசு கூறினார் (காண்க: லூக் 12:48). நம்மிடம் கொடுக்கப்பட்டது யாது? நாம் நமதெனக் கருதுகின்ற அனைத்துமே நம்மிடம் கடவுள் ஒப்படைத்த கொடையே. ஆக, நாம் பெற்றுக்கொண்ட கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட அழைக்கப்படுகிறோம். ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' என நம்மைத் தேர்ந்துகொண்ட ஆண்டவர் நம்மிடமிருந்து உளமார்ந்த ஒத்துழைப்பையும் பதில்மொழியையும் எதிர்பார்க்கின்றார்.

மன்றாட்டு
இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' (லூக்கா 12:48)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார்.

-- கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும் பொறுப்புகளும் பிறருடைய நலனுக்குப் பயன்பட வேண்டும். கடவுளிடமிருந்து வருகின்ற கொடைகள் நமக்குத் தரப்படவேண்டும் என நாம் உரிமை கொண்டாடுவது சரியல்ல. ஏனென்றால் நாம் உரிமையாளர் அல்ல, மாறாக, பொறுப்பாளர் மட்டுமே. பொறுப்பாளராகிய நாம் உரிமையாளராகிய கடவுளுக்குக் கடன்பட்டவர்கள்; எனவே, நம்மிடம் தரப்பட்ட பொறுப்பை நாம் எவ்வாறு செயல்படுத்தினோம் என்பது குறித்துக் கடவுளின் முன்னிலையில் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஆக, மிகுதியாகப் பொறுப்புப் பெற்றவர்களிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என இயேசு கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பு நாம் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் அனைவரும் கடவுளைக் கண்டடைய நாம் வழியாக வேண்டும் என்பதுமே. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை அவருக்கு அளிக்க நாம் தயாரா?

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை நன்றியோடும் கடமையுணர்வோடும் செயல்படுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

வாழ்வின் கடமை

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கிடைத்துள்ள பதவி, பணம், சேர்த்துள்ள சொத்து, நீண்ட ஆயுள், அன்புள்ள குடும்பம் இவை எல்லாம் கடவுள் தந்த பொறுப்பு. இவை உண்டு குடித்து, அனுபவித்து, கடைசியில் அனைத்தையும் இழந்து,கைகட்டி நிற்க அல்ல. அருகில் உள்ளோரை ஆண்டு ஆட்டிப்படைக்க அல்ல.மாராக,நாம் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க தெய்வம் தந்த வாய்ப்புக்கள் இவைகள்.ஒவ்வொன்றின் பின்னணியிலும் பெரியதொரு பொருப்பும் கடமையும் புதைந்திருப்பதை உணர்த்துவதே இப்பகுதி.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஒரு பொருப்பாளர் என்ற முறையில் நம்மிடம் பொருப்பை ஒப்படைத்த தலைவருக்கு நம்பிக்கைக்குரியவராயும் அறிவுடையவராகவும் செயல்பட வேண்டும். அதே வேளையில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்பத்திற்கு, இறை மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு, குடிமக்களுக்கு நாம் பொருப்புள்ளோராயும் இருப்பது நம்மேல் உள்ள கடமையும் கூட.

நம் அன்றாட வாழ்க்கையில் கடவுள் இப்பொருப்பை நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார். அதைச் சிறப்பாகச் செய்தால் வாழ்வில் உயர்வும் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பொருப்பைப் பொருப்புடன் செய்யவில்லையாயின் தண்டனையும் வாழ்க்கை நிலையில் தாழ்வும் வந்து சேரும்.

"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். (லூக் 12'48) இதுவே நம் கடமை. சிறப்பாகச் செய்து சிறப்படைவோம்.

 

--அருட்திரு ஜோசப் லீயோன்