முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 119: 66,68. 76,77. 93,94
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்;
ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;
எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;
உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;
ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்;
ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.
94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்;
ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

 

லூக்கா 12:54-59

பொதுக்காலம், வாரம் 29 வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 119: 66, 68, 76, 77, 93, 94
”நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்”

வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது என்று சொல்கிறோம். இது உண்மை தானா? என்று சிந்தித்து, அதற்கான நிதர்சனத்தை நாம் பார்க்கிறபோது, அது பொய்யான தோற்றம் என்பது புலப்படுகிறது. வாழ்க்கை என்பது சிக்கலானது அல்ல, அதை நாம் தான் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறோம். உண்மையில் வாழ்க்கை என்பது அற்புதமானது. அழகானது. நம்முடைய வாழ்க்கை அழகானதாக அற்புதமானதாக இருக்க வேண்டுமென்றால், என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.

வாழ்க்கையில் நடக்கும் அநேக பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கிற தவறான முடிவுகள் தான் காரணமாக இருக்கிறது. முடிவுகளை சரியாக எடுக்கத் தெரியாததன் விளைவு, நாம் பிரச்சனைக்குள்ளாக மாட்டிவிடுகிறோம். முடிவுகளை நாம் எடுக்கிறபோது, அறிவாற்றலோடு, நன்மதியோடு எடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல், பொறுமையாகச் சிந்தித்து, நல்ல முறையில் செபித்து, அனுபவத்தின் அடிப்படையில் நேர்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கிற முடிவுகள் நிச்சயம் நம்முடைய சிக்கல்களிலிருந்து நமக்கு விடுதலை தரும். அப்படி எடுக்கிற முடிவுகள் நிச்சயம் நம்மை எப்போதும், சிக்கல்கள் இல்லாத வாழ்வு வாழ உதவிசெய்யும்.

சாலமோன் அரசர் கடவுள் அவரிடத்தில் என்ன வேண்டும்? என்று கேட்டபோது, இதைத்தான் கேட்டார். வாழ்க்கையின் வெற்றி, நாம் எடுக்கும் முடிவில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்ததால் அந்த கொடையை கடவுளிடம் கேட்டார். நாமும் கடவுளிடம் இந்த கொடைகளுக்காக மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் கண்டிப்பு

எது சரியென்பதும், எது தவறு என்பதும் தெரியதாதவர்கள், இந்த உலகத்தில். தவறு என்று தெரிந்தும், அந்த செயலை செய்யக்கூடியவர்கள் அதிகம். அதனை நியாயப்படுத்த காரணங்களையும் சொல்வார்கள். ஆக, தவறு செய்யக்கூடியவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பது தெரிந்தும், அதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டை, இயேசு பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களை நோக்கி வீசுகிறார்.

பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தவறுகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார். அப்படி சுட்டிக்காட்டுகிறபோது, அவர்கள் அந்த தவறுகளை ஏதோ அறியாமையில் செய்கிறவர்கள் போல, காட்டிக்கொள்கிறார்கள். இது இயேசுவுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் தான், இத்தகைய கடுமையான வார்த்தைகளை, கடினமான வார்த்தைகளை இயேசு பயன்படுத்துகிறார். வானத்தில் நிகழக்கூடிய அடையாளங்களை வைத்து மழை வரும், வெயில் வரும் என்று சொல்வது எளிதல்ல. அதற்கு மிகுந்த அனுபவமும் அறிவாற்றலும் தேவை. அப்படி கடினமான பணியை எளிதாகச் செய்யக்கூடிய அளவுக்கு, அறிவாற்றல் பெற்றிருக்கிற இவர்கள், அறியாமையில் தவறுகளைச் செய்கிறார்கள் என்பதை, இயேசுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது உண்மையும் கூட.

இன்றைக்கு நாமும் இவர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்வது தவறு என்பது தெரிந்திருந்தும், வேறு வழியில்லாமல் அவற்றைச் செய்வதாகக் காட்டிக்கொள்கிறோம். இந்த பொய்யான அறியாமையிலிருந்து நாம் விடுபட வேண்டும். உண்மையாக வாழ முன்வர வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

பகைமை நமக்குள் வேண்டாம்

கடவுளை நாம் சந்திக்க, நமக்கு தடைக்கல்லாக இருப்பதோ, அல்லது கடவுளை எதிர்கொள்ள நாம் வலுவில்லாமல் இருப்பதற்கோ, முக்கியமான காரணம், நமது பகைமை உணர்வு. மன்னிப்பு தான் நாம் அடைய வேண்டிய இலக்கு என்பது, கிறிஸ்தவத்தின் அடித்தளம். அது சிறிது காலம் எடுக்கலாம். அந்த இலக்கு என்றாவது ஒருநாள் நாம் அடைந்தே ஆக வேண்டும். அந்த பகைமை உணர்வை எவ்வளவு விரைவாக, நம்மிடமிருந்து நம்மால் அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நமக்கு நல்லது, என்பதுதான் இன்றைய நற்செய்தி நமக்குத்தரும் செய்தியாக இருக்கிறது.

இந்த உலகத்தில் நாடுகளுக்கு இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கக்கூடிய காலக்கட்டம் இது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக பல வேளைகளில், இது போன்ற பகைமையுணர்வுக்கு, தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள், அவ்வப்போது, இவற்றைத்தூண்டிவிட்டு, அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருக்கிற பகைமை உணர்வுக்கு நாம் விலை கொடுத்தே ஆக வேண்டும். அதற்கான, தண்டமையை அனுபவித்தே ஆக வேண்டும். இருக்கக்கூடிய சிறிய பகைமை என்றாலும், நாம் அதை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்கான தண்டனையையும், நாம் பெற்றே ஆக வேண்டும்.

நமது வாழ்வில், நம்மை சுற்றி வாழக்கூடிய நமது சகோதர, சகோதரிகளுடன் நெருங்கிய உறவுடன் வாழ்கிறோமா? எது, அவர்களோடு நான் நல்ல உறவோடு வாழ்வதற்கு, தடையாக இருக்கிறது? அந்த தடைகளை நாம் எப்படி, அகற்ற முடியும்? எப்படி, இருக்கிற சிறிய பகைமை உணர்வுகளையும், என்னால், களைய முடியும் என்று சிந்திப்போம். அதற்கான முயற்சிகளை எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

காலம் பொன் போன்றது

பாலஸ்தீனியர்கள் காலநிலையைக் கணிப்பதில் சிறந்தவர்களாக விளங்கினர். மேற்கிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் மேகம் சூழந்தால் மழை வரும் எனவும், தெற்கிலிருந்து பாலைவனக்காற்று அடிக்கும்போது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்பதைக்கணித்துச் சொன்னார்கள். அது அப்படியே நடக்கும். பருவநிலையைக்கணிப்பதில் வல்லவர்களாக இருந்த அவர்களால், நேரத்தைக்கணிக்க முடியவில்லை. அப்படி கணித்திருந்தால், இறையாட்சி அவர்கள் நடுவில் மலர்ந்திருப்பதை அறிந்திருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

இயேசு இறுதித்தீர்ப்பை ஓர் உவமை வாயிலாக அவர்களுக்கு விளக்கி, ஓர் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்குத்தருகிறார். எதிரியோடு வழக்கைத்தீர்த்துக் கொள்ள ஆட்சியாளரிடம் போகும்போது, வழக்கு பலவீனமாக இருந்தால், ஆட்சியாளரிடம் செல்வதற்கு முன்னதாகவே, வழக்கைத்தீா்த்தக்கொள்வது சிறந்தது, உகந்தது. இல்லையென்றால், கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதேபோல், கடவுள் முன்னால் நம்முடைய வாழ்வு என்னும் வழக்கு பலவீனமாகவே இருக்கிறது. அதனால் இருக்கும் நேரத்தை ஒழுங்காகப்பயன்படுத்தி, வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்வதில் கவனமாக இருக்குமாறு இயேசு அறிவுறுத்துகிறார்.

காலத்தை முறையாகப்பயன்படுத்த வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை. காலத்தின் அருமை அறியாது, மனம்போன போக்கில் வாழ்ந்தால், அதற்காக நாம் ஒருகட்டத்திலே வருந்த வேண்டிவரும். அந்த நேரத்தில் நாம் வருந்தினாலும் அதனால் நமக்கொன்றும் பயனில்லை. எப்படியும், அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே, காலம் காட்டும் அறிகுறிகளை வைத்து, நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நூற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம்.

நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும். இயேசுவின் சொற்களைக் கவனிப்போம்: வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர்;களின் துணையோடு இந்த முயற்சிகள் வெற்றி பெறும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்குமே! நமது அலுவலகங்களிலும் சிக்கல்களை மேலிடத்துக்கு எடுத்துச்n செல்லும் முன் நாமே அவற்றைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்வோமா?

 

மன்றாடுவோம்: ஞானம் நிறை நாயகனே இயேசுவே, நீர் தந்த இந்த ஞானம் நிறை வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை, சிக்கல்களை உரையாடல் மூலமே தீர்த்துக்கொள்ள எங்களுக்கு ஞானமும், நல்லறிவும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது.
தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது' என்றார்'' (லூக்கா 12:54-55)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இந்திய நாட்டில் மழை பெய்வது பருவக் காற்று வீசுவதைப் பொறுத்தது. எனவே, வடகிழக்குப் பருவக் காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் நமக்கு மழைகொணர்வதை ஏறக்குறைய முன்கூட்டியே அறிவிக்க இயலுகிறது. அதுபோலவே இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டுத் தட்ப வெப்ப நிலையும் ஒரு சில தனித்தன்மைகளைக் கொண்டது. மேற்கிலிருந்து எழும் காற்று மத்திய தரைக்கடலைக் கடந்து வரும்போது ஈரப்பசை பெற்று யூதேயா மலைப்பகுதிவரை உள்நாட்டில் வீசும். இதனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றும். இதற்கு மாறாக, தெற்கிலிருந்து காற்று வீசும்போது பாலைநிலப் பகுதியிலிருந்து எழுவதால் மிகுந்த வெப்பத்தைக் கொணர்ந்து வரும். ஒரு மணி நேரத்தில் 30 பாகை அளவுக்கு வெப்பத்தை உயர்த்திவிடுகின்ற தன்மை அக்காற்றிற்கு உண்டு. இத்தகைய கால மாற்றச் சூழல் பற்றித்தான் இயேசு பேசுகிறார். ''மேற்கிலிருந்து வீசும் காற்று மழைகொணரும் எனவும் தெற்கிலிருந்து வீசும் காற்று வெப்பத்தைக் கொணரும் எனவும் உங்களுக்குத் தெரிகிறது'' (காண்க: லூக் 12:54-55) எனக் கூறிவிட்டு, இயேசு ''இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி'' என்றொரு கேள்வியையும் மக்கள் கூட்டத்திடம் கேட்கிறார் (லூக் 12:56). இயேசு குறிப்பிடுகின்ற ''இக்காலம்'' எது? இயேசு தந்தையாம் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு எல்லா மக்களுக்கும் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருப்பதே ''இக்காலம்''. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பலர் ''அக்காலத்தை''ச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் இயேசு ''இக்காலத்தை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை?'' என்று மக்களிடம் வருத்தத்தோடு கேட்கின்றார்.

-- அன்று இயேசு கேட்ட கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்படுகின்ற கேள்வியாக மாறியுள்ளது. நாம் வாழ்கின்ற காலத்தில் கடவுளின் உடனிருப்பை நாம் எவ்வாறு உணர்கிறோம். கடவுள் நம்மோடு பேசுவதை நாம் எவ்வாறு கேட்கிறோம்? பல தடவைகளிலும் நம் உள்ளத்தில் எழுகின்ற பலவிதமான இரைச்சல்களும் ஒலிகளும் ஒன்றுசேர்ந்து கடவுளின் மென்மையான குரலை நாம் கேட்க இயலாதவாறு செய்துவிடுகின்றன. வெளியுலகிலிருந்தும் நம் உள்ளத்திலிருந்தும் எழுகின்ற இரைச்சல்கள் கடவுளின் குரலை அமுக்கிவிடுகின்றன. எனவேதான் கடவுளின் குரலைக் கேட்டு அதைக் கருத்தில் ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் அமைதி வேண்டும். கடவுளின் உடனிருப்பை நாம் ஆழமாக உணர்ந்து, அந்த உணர்வில் நிலைத்திருந்து, கூர்ந்து செவிகொடுத்துக் கேட்டால் நம் மனச் சான்றின் வழியாகப் பேசுகின்ற அவருடைய குரல் நம் உள்ளத்தில் இதமாக ஒலிப்பதை அறிவோம். நாம் வாழ்கின்ற ''காலத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது'' அங்கே வெவ்வேறு நிகழ்வுகள் வழியாகவும் மனிதர்கள் வழியாகவும் கடவுள் நம்மோடு பேசுவதை நாம் கேட்கலாம். இது நிகழ வேண்டும் என்றால் நம் உள்ளம் கடவுளை நோக்கி எழ வேண்டும்; அவருடைய அருளைப் பெற்றிட எப்போதும் திறந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்களோடு பேசுகின்ற உம் குரலைக் கேட்டு அதற்கு ஏற்ப நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''வெளிவேடக்காரரே,... இக்காலத்தை
நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?'' (லூக்கா 12:56)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக்கொண்ட மனிதர் கடவுளிடமிருந்து வருகின்ற அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு கேட்டார். வானம் சிவந்தால் கால நிலை நன்றாக உள்ளது எனவும், காற்று மந்தாரமாக இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் எனவும் (காண்க: மத்தேயு 16:2-3) அறிந்துகொள்ள மனிதருக்கு இயலும் என்றால் கடவுளாட்சி பற்றிய அடையாளங்களின் பொருளை அவர்கள் அறியத் தவறியது ஏன்? தம்மை மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் பல அடையாளங்கள் வழியாகத் தம் உடனிருப்பையும் வல்லமையையும் நமக்கு அறிவிக்கின்றார். கடவுளின் வெளிப்பாடு இன்றைய உலகிலும் தொடர்கிறது. இந்த உண்மையை 2ஆம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொரு தலைமுறையினரும் நன்முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் ''காலத்தின் குறிகளை'' நாம் கண்டுகொண்டு அவற்றின் வழியாக நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். ''காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக் கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்'' (2ஆம் வத்திக்கான் சங்கம், ''இன்றைய உலகில் திருச்சபை'', எண் 4).

-- நாம் வாழ்கின்ற காலத்தின் அறிகுறிகள் பல உள்ளன: விரைவாக நிகழ்கின்ற மாற்றங்கள், மனிதர் அனைவரும் சமமே என்னும் உண்மையை ஏற்றாலும் இன்றைய உலகில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள், அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அறநெறியில் மனிதர் பின்தங்கியிருத்தல் போன்றவற்றை நாம் இன்று காண்கின்றோம். இந்த அறிகுறிகள் நமக்கு உணர்த்துவது என்ன? கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வரவேண்டும் என்றால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும்; அறிவில் வளர்கின்ற மனித குலம் அறநெறி உணர்வோடு செயல்பட வேண்டும். இயேசு நம்மிடம் கேட்கின்ற கேள்வி இது: ''இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?''

மன்றாட்டு
இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.

 

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

காலத்தைக் கணித்து வாழுங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் துன்பங்கள் இவையே மிகச் சிறந்த அடையாளங்கள். அறம் வழுவாத நீதிபதிகள்.போதுமான, பொருத்தமான தண்டனைகள். சரியான சிறைகள், காவலர்கள். அவ்வாரே நல் வாழ்வின் பரிசும் பாதுகாப்பும் நாம் அனுபவிக்கும் இன்பங்களே.

எல்லாவற்றையும் ஊடுறுப் பார்க்கும் நாம், இதுபோன்ற அடையாளங்களை அடையாளம் காண விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடையாளங்களை அனுசரித்து வாழ்க்கைப் பயணத்தில் இறங்கினால் பலவற்றை இழக்க நேரிடும். கஷ்டப்பட வேண்டும். நாளும் நேரமும் பொருளும் செலவிட வேண்டும். அதை விட அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் குருக்கு வழியில் சென்றால், வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் ஆபத்தும் விபத்தும் நிறைந்தது என்பதும் அறிவோம்.

நமக்குச் சாதகமானவைகளுக்கு அடையாளங்களையும் தோற்றங்களையும் கணித்து வாழ்க்கையை அமைக்கும் நாம்,அதையே பொது வாழ்வுக்கும் அருள் வாழ்வுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பதே இயேசுவின் கேள்வி.இக்கேள்விக்குப் பதிலாக நாம் வாழ்ந்தால் நாம் புத்திசாலி.

--அருட்திரு ஜோசப் லீயோன்