முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார். ஏனெனில், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4. 5-6
பல்லவி: கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

லூக்கா 13:1-9

பொதுக்காலம், வாரம் 29 சனி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுளின் கருணை

இந்த உலகத்தில் விபத்துக்களில் மனிதர்கள் சிக்கி இறக்கிறபோது, குறைந்த வயதில் வாழ்வை இழக்கிறபோது, நமது மனித சிந்தனையில் எழுவது, இவர்கள் முற்பிறவியில் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். எனவே தான், இவர்கள் இந்த பிறவியில் வாழ்வை முடிக்க இயலவில்லை என்பது. ஆனால், இறப்பிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்கிற கருத்தை இயேசு சொல்கிறார்.

இறப்பு யாரையும் எப்போதும் தழுவலாம். இறப்பு எப்போது, யாருக்கு, எங்கே வரும் என்பது தெரியாது. நாம் உயிர் வாழ்வதால், நாம் புனிதர்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை அதுவே கடவுள் நாம் மனம்மாறுவதற்கு கொடுத்திருக்கிற அழைப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் நாம் பயன்படுத்தி, நமது வாழ்வை சீர்படுத்த எண்ணுவதுதான், மிகச்சிறந்த சிந்தனையாக இருக்கும். ஒவ்வொருநாளும் கடவுள் நம்மீது வைத்திருக்கிற கருணையின் வெளிப்பாடு. அந்த கருணையை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி, நமது வாழ்வை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

வாழ்க்கை என்கிற புனிதமான கொடையைப் பெற்றிருக்கிற நாம், அதன் புனிதத்தன்மையை போற்றும் வகையில் நமது வாழ்வை, நாம் வாழ்வோம். கடவுளின் கருணையை எண்ணிப்பார்த்து, நமது வாழ்வை மாற்றுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருந்திவாழ அழைப்பு

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர். ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது. பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா? என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும்.

இயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன? வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார்.

இன்றைக்கு நாமும் நமது குற்றங்களை மறைத்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை, சிறிய குற்றங்களை, மிகப்பெரிதாக நாம் உருவாக்கிவிடுகிறோம். நாம் செய்கிற பாவம், நமது கண்களுக்கு தெரிவதில்லை. அடுத்தவரின் குற்றங்கள் தான், நமக்கு மிகப்பெரிதாகத் தெரிகிறது. அந்த தவறான மனநிலையிலிருந்து திருந்தி வாழ, இயேசு விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

பழிவாங்கல்

பெரிய ஏரோது, தனக்குப் பிறகு தான் ஆண்ட நிலப்பரப்பை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்துக்கொடுத்தான். யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா பகுதிகளுக்கு ஆர்க்கிலாஸ் பொறுப்பாகவும், கலிலேயா, பெரீயா பகுதிகளுக்கு ஏரோது அந்திபாசும் மற்றும் யோர்தானின் கிழக்குப்பகுதிகளுக்கு உட்பட்ட பரப்பிற்கு பிலிப்பும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதில், ஆர்க்கேலாஸ், நிர்வாத்திறமை இல்லாதவனாக இருந்தான். உடனே, உரோமையர்கள் அவரைப் பதவியில் இருந்து எறிந்துவிட்டு, உரோமை ஆளுநரைப் பொறுப்பாக நியமித்தனர். அந்த உரோமை ஆளுநர் தான் பிலாத்து.

பிலாத்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்ட வேண்டும், என்று முடிவு செய்கிறான். அதற்கு நிறைய பணம் தேவை. அதை யெருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்க முடிவு செய்கிறான். ஏனென்றால், யெருசலேம் ஆலயம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கீழாக வரக்கூடிய பகுதி. பிலாத்துவின் இந்த முயற்சிக்கு, யூதர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், யெருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை கடவுளுடையது, கடவுளுக்கு உரியது. அதை வேறு யாரும் எடுத்து, வேறு எதற்காகவும் பயன்படுத்த மாட்டோம், என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதிலும், கலிலேயாவில் வாழ்ந்த யூதர்கள் துணிச்சல்மிக்கவர்கள். பிலாத்துவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்கள். எனவே, அவர்களைக் கொல்ல, பிலாத்து தருணம் பார்த்துக்கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்ததும் கொன்றுவிட்டான்.

பழிவாங்குகின்ற மனப்பாங்கு, மனித சமுதாயத்தின் தொடக்கத்திலிருந்தே, தோன்றி வந்திருக்கிறது. இன்றைக்கு அது மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து, பல மனிதர்களின் முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. பிலாத்துவும் இதற்கு எடுத்துக்காட்டு. தனது தவறை நியாயப்படுத்துவதும், தனது கருத்தியலை நியாயப்படுத்துவதின் வெளிப்பாடுதான், இந்த பழிவாங்கல். அது கிறிஸ்வத்திற்கு எதிரான செயல். நம் உள்ளத்தில் இருக்கக்கூடிய பழிவாங்குதல் குணத்தை அறவே அகற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கருணை உன் வடிவல்லவா !!!

அத்திமர உவமையில் இரண்டு கருத்துக்களை நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். 1. அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே அமைந்திருக்கிறது. திராட்சைத்தோட்டத்தின் மண் செழுமையான, வளமையான மண். தளிர்க்கவே தளிர்க்காது என்று நாம் நினைக்கிற ஒரு செடி கூட திராட்சைத்தோட்டத்தில் வைத்தால், தளிர்த்துவிடும். அந்த அளவுக்கு வாழ்வு தரக்கூடிய மண், திராட்சைத்தோட்ட மண். 2. அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. ஓர் அத்திமரம் காய்த்து கனி தர அதிகபட்சம் எடுக்கக்கூடிய ஆண்டுகள் மூன்று ஆண்டுகள். ஓர் அத்திமரம் வைத்த முதல் இரண்டாவது ஆண்டிலே கனி தர ஆரம்பித்துவிடும். ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்தும் கனி தரவில்லையென்றால், அந்த அத்திமரம் கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை.

இங்கே இந்த அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது செழுமையான, வளமையான பகுதியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. இனிமேல் அது கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி கனி தருவதற்கு வாய்ப்பே இல்லாத அந்தச் சூழ்நிலையிலும், தோட்டக்காரர் இன்னும் ஓராண்டு காத்திருக்க தன் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். மனம் திருந்தவே மாட்டான் என்று மற்றவர்களால் முத்திரைக்குத்தப்பட்டவர்களுக்கும் கடவுள் கனிவோடு காத்திருக்கிறார். இது கடவுளின் கருணையையை, இரக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
பார்வைகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வையும் வேறுபாட்டான பார்வையோடு பார்க்கிறோம். இந்த வரிசையில், கடவுளைப்பற்றி நமது பார்வையும் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறது. கடவுளை நாம் எப்படிப்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்பதை இயேசு நமக்கு சுட்டிக்காட்டுகிறார். கடவுளை வெறுமனே கண்டிக்கிறவராக மட்டும் இல்லாமல், கருணைமிகுந்தவராகவும், இரக்கமுள்ளவராகவும் நாம் பார்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இடத்தை அடைத்துக்கொண்டு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் நமது வாழ்வு கனி தருவதாக அமைந்திருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. “நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராயிருப்பதே தந்தைக்கு மாட்சி  அளிக்கிறது” (யோவா 15:8) என்னும் வார்த்தையை இங்கு நாம் நினைவுகூர வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து நற்கனிகளை எதிர்பார்க்கின்றார். நாம் கனி தராவிட்டால், நாம் பரிதாபத்துக்குரியவர்களே!

இயேசு கூறிய அத்திமர உவமையில், உரிமையாளர் தொழிலாளியிடம் சொல்லும் புகாரைக் கொஞ்சம் கவனிப்போம்: “மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடிவருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” ஆம், கனி தராத மரம் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது. கனி தராத ஒவ்வொரு கிறித்தவரும், இந்த உலகில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் கனி தரவேண்டும். உரிமையாளர் அந்த மரத்துக்குப் போதுமான காலம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகளாகக் கனி தேடியபிறகுதான், மரத்தை வெட்டும் முடிவுக்கு அவர் வந்தார். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால், இறைவன் ஏமாற்றமே அடைவார். எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் உகந்ததாக அமையட்டும்.

மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற கொடைகள், ஆற்றல்கள், திறமைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறோம். இந்தத் திறமைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், பிறருக்கும் கனிகளை வழங்கும் அருளை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் எங்கள் வாழ்வில் மாற்றங்களை அருளும். நற்கனி கொடுப்பவர்களாக எங்களை மாற்றும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------------

 

பாவமும், அழிவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

துன்பத்தின் இறையியல் என்னும் முக்கியமான கருத்தை இன்று நமக்குத் தருகிறார் ஆண்டவர் இயேசு. துன்பம் என்பது யாருக்கும் வரும், எப்பொழுதும் வரும். எதன் காரணமாகத் துன்பம் நேர்கிறது என்பதைப் பல வேளைகளில் நாம் அறிவதில்லை. இறைவன் மட்டுமே அறிவார். எனவே, துன்பத்தில் வாடுவோரைக் கண்டு நாம் தீர்ப்பிடக்கூடாது. ஏதோ அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாகத்தான் அவர்கள் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று நாம் முற்சார்பு எண்ணத்துடன் சிந்திப்பதோ, பிறரிடம் பகிர்ந்துகொள்வதோ தவறானது என்று இயேசு எடுத்துக்காட்டுகிறார்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு. எனவே, நோயில் வாடுகின்ற, விபத்தில் சிக்கிய, தோல்விகளைச் சந்தித்த யாரையும் நாம் பாவிகள் என்றோ, பாவத்தின் காரணமாகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்றோ தீர்ப்பிட்டுவிடாதபடி கவனமாயிருப்போம். அதே நேரத்தில், மனந்திரும்பாவிட்டால் நீங்கள் அழிவீர்கள் என்னும் ஆண்டவரின் எச்சரிக்கையையும் மனதில் கொண்டு, மனம் மாற்றம் பெறுவோம்.

மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். பிறரது துன்பத்தைக் கண்டு அவர்களைத் தீர்ப்பிடாத அருளைத் தாரும். அதே வேளையில் என்னுடைய வாழ்வில் மனமாற்றத்தைப் பெற்று புது வாழ்வு வாழ உமது இரக்கத்தால் என்னை நிரப்பும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள்
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்'' (லூக்கா 13:1-2).

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு பொதுத் தத்துவமாகக் கொண்டிருப்போர் பலர். அதுபோலவே, பாவம் செய்தால் அதற்குத் தண்டனையைக் கடவுள் கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை கொண்டோர் பலரின் கருத்து. நில நடுக்கம், சூறாவளிக் காற்று, நிலச் சரிவு, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற மக்கள் பாவம் செய்ததால் தண்டிக்கப்படுகிறார்களா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இயேசு வாழ்ந்த காலத்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்தது. பிறவியிலேயே பார்வை இழந்து பிறந்த ஒருவருக்கு இயேசு மீண்டும் பார்வை வழங்கியபோது அவரிடமும் இக்கேள்விதான் கேட்கப்பட்டது. ''ரபி, அவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று கேட்டவர்களுக்கு இயேசு அம்மனிதர் பார்வையற்றவராகப் பிறக்க யார் பாவமும் காரணமாக இருக்கவில்லை என்ற பதிலளித்தார் (காண்க: யோவா 9:1-3). அதே கருத்தை விளக்குகின்ற இன்னொரு நிகழ்ச்சியை லூக்கா பதிவு செய்துள்ளார். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்னும் செய்தியைக் கேட்ட இயேசு, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்ற கலிலேயரை விடப் பாவிகள் எனக் கூறுவது சரியல்ல என்று கற்பிக்கிறார் (காண்க: லூக் 13:1-2). பிலாத்து கலிலேயரைக் கொன்ற நிகழ்ச்சி வேறு எந்த வரலாற்று ஆதாரத்திலும் காணப்படவில்லை. என்றாலும் அவன் உண்மையிலேயே கொடியவன் என்பதற்கு வேறு பல நிகழ்ச்சிகள் ஆதாரமாக உள்ளன.

-- பிறருக்குத் துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் பாவம் செய்ததால்தான் அவ்வாறு துன்புறுகின்றனர் என நாம் முடிவு செய்வது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இதனால் பாவத்தின் விளைவாக யாதொரு துன்பமும் ஏற்படாது என நாம் முடிவுசெய்துவிடலாகாது. சில வேளைகளில் நாம் செய்கின்ற தவறான செயல்களின் விளைவாக நமக்கோ பிறருக்கோ துன்பம் ஏற்படுவது இயல்பு. எனவே தவறான நடத்தையை நாம் விலக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வந்தால் அது சரியானதே. ஆனால் பிறருக்கு ஏற்படும் துன்பங்கள் அவர்கள் பாவம் செய்ததின் விளைவே என நாம் முடிவுசெய்வதோ, அந்த முடிவின் அடிப்படையில் அவர்களை இழிவாக நோக்குவதே கிறிஸ்தவ மனப்பான்மைக்கு எதிரான ஒன்று. துன்பம் ஏன் வருகிறது என்பதற்கு நம்மால் முழுமையான பதில் காண்பது இயலாது. ஆனால் குற்றமற்றவராக இருந்த இயேசுவே நமக்காத் துன்பங்களை ஏற்றார் என்பது நமக்கு ஆறுதலாக அமைய வேண்டும். இயேசுவைப் போல நாமும் துன்பங்கள் வழியாக நன்மை நிகழ வழியாக மாறிட வேண்டும். பிறருடைய துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு மாறாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகின்ற மனப்பான்மை நம்மிலிருந்து மறைய வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்களைக் காக்கிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்...அழிவீர்கள்'' (லூக்கா 13:3)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் ஏற்று, அதற்கு ஏற்ற பதில்மொழி வழங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறார்.

-- மனிதர் தம் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் அழைப்பு விடுக்கும்போது அந்த அழைப்பினை யாவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வர் என்பதற்கில்லை. சிலர் தங்கள் பழைய வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருப்பர்; வேறு சிலர் மாற்றம் உடனடியாக வேண்டாம் என்று கால தாமதம் செய்வர்; மற்றும் சிலர் மனமுவந்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொணர்வர். எவ்வாறாயினும், கடவுள் பொறுமையோடு செயல்படுகிறவர். அத்திமரம் காய்த்து கனிதரும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிலிருந்து கனி தோன்றவில்லை என்றால், அம்மரத்தை உடனடியாக வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாகப் புதிதாக எருபோட்டு அதைக் கண்காணித்து அதிலிருந்து கனிதோன்றும் என்று இன்னும் ஓர் ஆண்டு பொறுமையோடு காத்திருப்பவர் நம் கடவுள் (காண்க: லூக்கா 13:6-9). என்றாலும் கடவுளின் பொறுமையை நாம் சோதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

திருந்துவதே நல் வாழ்வு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"பண்ணின அநியாயத்திற்கு இப்ப வாங்கி கட்டிக்கொள்கிறான்" இது பிறரைப்பற்றி பலர் சொல்லும் புரளி. ஆனால் இத்தகையோர் தன்னிலை உணர்வதில்லை. ஒருவனைப் பிடிக்கவில்;லை என்றால் ஊதிப்பெருக்கி உலை வைத்துவிடுவர்.

இப்படித்தான் கலிலேய யூதரைப் பிடிக்காத எருசலேம் யூதர்கள் இயேசுவிடம் வந்து, "பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?" என்று வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்சியை சுட்டிக்காட்டி கேட்டனர்.

இதற்கு மறுமொழியாக இயேசுவும்; இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டுகிறார்.
யோவா 5'2-3 , நெகே 3'15ல் சொல்லப்படுகின்ற குளத்தின் மண்டபத்தின் கோபுரம் விழுந்து 18 பேர் இறந்தார்களே, அவர்களும் பாவிகளா என்று குருக்குக் கேள்வி கேட்கிறார்.

அடுத்தவனைப்பற்றி பேசும்போது அவனது பெருமை, திறமை, நன்மைகளைப் பேசு. உன்னைப்பற்றி பேசும்போது உன் பலவீனங்கள், தவறுகள், குறைகளை மனதில் கொள். இரண்டையும் செய்யும்முன் இறைவனை உன் முன் நிறுத்திக்கொள். இயேசு சொன்ன சொற்கள்,எல்லோரும் பாவிகள், எல்லோரும்; குற்றவாளிகள். மனமாற்றம் பெறுதலே அழிவிலிருந்து காத்துக்கொள்ள சிறந்த வழி.

 

--அருட்திரு ஜோசப் லீயோன்