முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர் நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி

2 ``ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்''
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை
நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது -
செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது -
வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

 

லூக்கா 13:18-21

பொதுக்காலம், வாரம் 30 செவ்வாய்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று கூறினார். மீண்டும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 126: 1ஆ – ஆ, 2இ – 3, 4 – 5, 6
”கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்”

இஸ்ரயேலின் ஆண்டவர் கண்ணீரைத் தரக்கூடிய இறைவன் அல்ல, மாறாக, கண்ணீரைத்துடைத்தெடுக்கிற இறைவன். எங்கெல்லாம் மானிட சமுதாயம் கண்ணீர் வடிக்கிறதோ, இறைவனிடம் முறையிடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் கண்ணீர் வடிக்கிறவரின் தகுதியைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார். மீட்பின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறபோது, இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

தொடக்கநூலில் காயினும் ஆபேலும் பலி செலுத்துகிறபோது, கடவுள் ஆபேலுடைய பலியை ஏற்றுக்கொள்கிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரனை கொன்றுவிடுகிறான். கடவுள் காயீனை தண்டிக்கிறார். ஆனால், காயீன் கடவுளிடத்தில் “என்னைப் பார்க்கிறவர் யாரும் கொன்றுவிட முடியுமே” என்று முறையிடுகிறான். தீங்கு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிற கடவுள், அவன் முறையிடுகிறபோது, அவனுக்கு ஓர் அடையாளமிட்டு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுளின் அருளைப்பெற தகுதி இல்லையென்றாலும், அவன் பாதுகாப்பு பெறுகிறான். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து, கண்ணீரோடு ஆண்டவரிடம் முறையிட்டபோது, அவர்கள விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இவ்வாறு கண்ணீரோடு ஆண்டவரிடம் முறையிட்டவர்கள், தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற தகுதியில்லையென்றாலும், தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பாடல் ஆசிரியர் சொல்ல வருகிற செய்தி, நாம் ஆண்டவரிடத்தில் முறையிடுகிறபோது, ஆண்டவரை நம்பி வருகிறபோது, நாம் அதற்கு தகுதியில்லை என்றாலும், கடவுள் தன்னுடைய பேராற்றலால், தாராள உள்ளத்தால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ அருள்புரிகிறார். அந்த ஆண்டவரின் ஆசீரை நாமும் நிறைவாகப் பெற்று வாழ, வரம் டவேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இறையரசின் வளர்ச்சி

இறையரசு என்பது வளா்ச்சிக்குரிய பாதையில் செல்வதாக இருக்க வேண்டும். அதுதான் இறையாட்சி நம் மத்தியில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடிப்படை ஆதாரம். கடுகு விதை சிறியதாக இருந்தாலும் அது வளர்ந்து மிகப்பெரிய மரமாகி, பல பறவைகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக வளர்ந்து, பலன் தருகிறது. அதேபோல, சிறிது புளிப்பு மாவு, அனைத்தையும் புளிப்பேற்றுகிறது. ஆக, மேற்சொன்ன உதாரணங்கள், இறையாட்சி என்பது, வளர்ச்சியின் மையமாக இருக்கிறது என்பதை, நமக்கு உணர்த்துகிறது.

இன்றைக்கு நம் மத்தியில் இறையாட்சி இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் கேட்டுப்பார்த்து, அதற்கான பதில் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அன்றாட வாழ்க்கையை அலசி ஆராய வேண்டியுள்ளது. அப்படிப் பார்க்கிறபோது, இறையாட்சியை நோக்கி, மக்கள் வாழ்க்கை அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நன்மை செய்கிறவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அவர்களுக்கான நமது ஒத்துழைப்பும் குறைந்து கொண்டே வருகிறது. கெட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. இது இறையாட்சிக்கு முரண்பாடாக செயல்பாடாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நாம் நல்லவர்களுக்கு துணைநிற்க வேண்டும். நல்லது செய்கிறவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். எந்நாளும் மக்கள் நீதியின் பக்கமும், நேர்மையின் பக்கமும் நின்று, இறையரசு பெருகுவதற்கு உதவி செய்ய வேண்டும். அந்த இறையரசை நோக்கி நமது பயணம் அமைய வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்வு

இன்றைக்கு எத்தனையோ சொற்பொழிவுகள் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகின்றன. அது அரசியல்வாதிகளாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம் அல்லது சமயத்தலைவர்களாக இருக்கலாம். ஆற்றப்படுகின்ற எல்லா சொற்பொழிவுகளும், ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என்றால், அது கேள்விக்குறி. விளைவுகளை ஏற்படுத்தாத எந்த சொல்லும் வீணாணவையே என்று சொல்வார் ஒரு புகழ்பெற்ற போராளி. உதிர்க்கப்படுகின்ற சொற்கள் ஒவ்வொன்றும், அதற்கான விளைவை, அது ஏற்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தியும், இதை அடியொற்றித்தான், எழுதப்பட்டிருக்கிறது.

புளிப்பு மாவு உவமை, இங்கே தரப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வும், இந்த புளிப்பு மாவைப்போல, விளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும். அளவு சிறிதளவே இருந்தாலும், அது புதிய மாவு முழுவதையும், புளிப்பேற்றச் செய்கிறது. அதேபோல, கிறிஸ்தவர்களின் வாழ்வு, மற்ற மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்று, இந்த இறைவார்த்தை அழைப்பு விடுக்கிறது. இப்படிப்பட்ட, தாக்கத்தை தொடக்க கிறிஸ்தவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினர். அதனால் தான், கிறிஸ்தவ விசுவாசம் இந்தளவுக்கு தழைத்தோங்கியிருக்கிறது. ”உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள்” (தி.பணி 17: 6). கிறிஸ்தவர்களின் வாழ்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பார்த்து, சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. அந்தளவுக்கு, விசுவாசத்திற்கு உரம் கொடுத்து, புளிப்பு மாவாக விளங்கியவர்கள் முதல் கிறிஸ்தவர்கள்.

விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட, நம் வாழ்வு, மற்றவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறதா? தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு இடறலாக இல்லாமல் இருக்கிறதா? சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்வு, தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த, இறைவனிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.

எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார் திருப்பாடலாசிரியர். நாமும் பெரிய செயல்களில் கவனம் கொள்ளாமல், சின்னஞ்சிறு செயல்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவோம், இறைவனை மாட்சிமைப்படுத்துவோம்.

மன்றாடுவோம்: சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்போரைப் பாராட்டும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இன்று முழுதும் நான் செய்ய இருக்கிற ஒவ்வொரு செயலையும் இறையாட்சிக்குரிய விதத்தில் செய்ய எனக்கு ஞானத்தைத் தந்தருளும்.. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும்.
ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று.
வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.

-- வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.

மன்றாட்டு
இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

திருச்சபை - கடுகு மரம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கடுகு விதையை தோட்டத்தில் விதைத்ததும் அது முளைத்து வளர்ந்து மரமாகிறது. அதுவும் சாதாரண மரமல்ல. வானத்துப் பறவைகள் தங்கும் பெரிய மரமாகிறது. கேட்க சிரிப்பாக இருக்கிறதல்லவா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

கொஞ்சம் புளிப்பு மாவு மூன்று மரக்கால் மாவையும் புளிக்கச் செய்கிறது. இதை ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இது அறிவியல் உண்மை.ஒரு அறிவியல் உண்மையைச் சொல்லி, அறிவுக்கு அப்பாற்பட்ட இறையியல் உண்மையை உணர்த்துகிறார்.

கடுகு விதையிலிருந்து வளர்வது செடியா? மரமா? என்ற ஆய்வு நடத்தும் அறிவியல் புத்தகம் அல்ல திருவிவிலியம். மனித மீட்பின் வரலாற்றில் இறைவனும் இறைவனின் செயல்பாடுகளின் தொகுப்பே திருவிவிலியம்.

இறையாட்சியின் தன்மையை, அதன் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை, கடுகு விதை மரமாகும் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் ஒப்பிடுகிறார். இறையாட்சி கடவுளின் செயல்பாடு. எனவே இறையாட்சியில் கடுகு செடியும் மரமாகும். "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" லூக் 1'37

தண்ணீரை இரசமாக்க முடியும். இரசத்தை இரத்தமாக்க முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும். இறந்தும் உயிர்த்தெழ முடியும். கடுகிலிருந்து மரத்தை உண்டாக்குவதா முடியாத காரியம். எனவேதான் இறை அரசு என்ற திருச்சபை மரம் எத்தனை கிளைகள் வெட்டப்பட்டாலும் என்னென்ன விதத்தில் வெட்டினாலும் என்னென்ன விதத்தில் அழித்தாலும் பரந்து விரிந்து வானத்துப்("கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து") பறவைகள்("மக்கள்" லூக்13'29) வந்து தங்கும் மரமாகும்.

 

--அருட்திரு ஜோசப் லீயோன்