முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டும் எனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 13: 3-4. 5-6
பல்லவி: ஆண்டவரே, நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

3 என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்;
என் விழிகளுக்கு ஒளியூட்டும்.
4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்;
என் எதிரி, `நான் அவனை வீழ்த்தி விட்டேன்' என்று சொல்லமாட்டான்;
நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார். -பல்லவி

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்;
நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.
6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா. .

லூக்கா 13:22-30

பொதுக்காலம், வாரம் 30 புதன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுள் தரும் மீட்பு

யார் தான் மீட்புப் பெற முடியும்? என்பதுதான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இந்த உலகத்தில் ஆன்மீகச்சிந்தனையோடு வாழும் அனைவருமே, தங்களது இலக்காகக் கொண்டிருப்பது, மீட்பு. அனைத்து மதங்களும் இந்த மீட்பைப் பற்றித்தான் வெளிப்படையாக பேசுகின்றன. மதங்களின் கோட்பாடுகளும், அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

மீட்பு பெறுவது என்பது, நாம் வாழும் உலகில் எளிதானது அல்ல. மீட்பு என்பது நிலைவாழ்வைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த உலகம் நிலையானது அல்ல என்பதுதான், பெரும்பாலான மதங்களின் கருத்தாக இருக்கிறது. அந்த நிலையான வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையான வாழ்வை, நாம் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக, கடினமாக உழைக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு வாழும் மக்கள், சவால்களை சந்திப்பதற்கோ, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கோ தயாராக இல்லை. எவ்வளவு குறுகிய வழியில் வெற்றி பெற முடியுமோ, எவ்வளவு கஷ்டம் இல்லாமல் நினைத்ததைப் பெற முடியுமோ, அதனைப் பெறுவதில் தான், தங்களது வாழ்வின் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும்.

எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது.

நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள் பலவிதமான சோதனைகளுக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாவார்கள். அப்படி இருந்தாலும், கடவுளின் துணைகொண்டு நாம் நேரிய வழியில் நடப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

உள்ளத்தில் இயேசு!!!

இந்த கேள்வியை இயேசுவிடத்திலே கேட்டவர் நிச்சயம் யூதர்களுக்கு மட்டும்தான் மீட்பு உண்டு என்ற எண்ணத்தின் அடிப்படையில், நம்பிக்கையின் அடிப்படையில் கேட்டிருக்க வேண்டும். புறவினத்தார் அனைவரும் கடவுளின் மீட்புத்திட்டத்திலிருந்து வெளியே அனுப்பப்படுவர் என்ற அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால், இயேசுவின் பதில் அவர் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது.

பொதுவாக மக்கள் மனதில், “நான் இயேசுவை ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னாலே, நாம் சாதித்து விட்டோம், மீட்பு பெற்றுவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால், அது தவறு. கிறிஸ்தவ வாழ்வில் நாம் நிச்சயம் முடிவை அடைய முடியாது. அது ஒரு நீண்ட பயணம். சவாலான பயணம். நாம் பயணிக்கும் பாதையில் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இந்த பயணத்தில் நாம் நின்றுவிட்டால் பின்னோக்கிச்செல்கிறோம் என்பதாக அர்த்தமாகிவிடும். ஒவ்வொருநாளும் நாம் முன்னேறிச்செல்ல வேண்டும். தடைகளைப்பார்த்து தயங்காமல், துணிந்து முன்னேற வேண்டும். நமது மீட்பிற்கு நாம் ஒவ்வொருவருமே கடினமாக உழைக்க வேண்டும். அடுத்தவர் உழைப்பில் நாம் மீட்பைப்பெற்று விடலாம் என்று நினைத்தால், அது நிச்சயம் தோல்வியில்தான் முடியும்.

இயேசுவை உதட்டளவில் நாம் ஏற்றுக்கொண்டாலும், நமது வாழ்வு நாம் இன்னும் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை என்பதையும், உள்ளத்தளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது. இயேசுவை அறிந்திருந்தால், அனுபவித்திருந்தால் நமது வாழ்வு முழுமையான மாற்றத்தை நிச்சயம் பெற்றிருக்கும். இயேசுவை உள்ளத்தளவில் ஏற்றுக்கொள்ள தொடர்ந்து உழைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இன, மொழித் தடைகள் தகர்க !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மார்டின் லூத்தர் கிங் அவர்களின் “எனக்கொரு கனவு உண்டு. ஒருநாள் வெள்ளை நிறக் குழந்தைகளும், கறுப்பினக் குழந்தைகளும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடப்பர்” என்னும் பிரபலமான கனவை இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனின் மாபெரும் கனவொன்று வெளிப்படுகிறது. “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” என்று உரைக்கிறார் ஆண்டவர். இதுதான் இறைவனின் கனவு. மண்ணுலகில் வாழும் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். எந்தவிதமான பிளவுகளோ, தடைகளோ இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இறைவனின் இந்தக் கனவு நிறைவேறுவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்;னும் கேள்விக்கான விடையை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம். அனைவருக்கும் மீட்பு உண்டு. ஆனால், அனைவருக்கும் அந்த மீட்பின் செய்தியை அறிவிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எப்படி அந்த செய்தியை அறிவிப்பது? நமது வாழ்வால்தான்! நம்மிடையே எந்தப் பிளவுகளும் இன்றி கிறித்தவர்களாகிய நாம் வாழும்போது, பிறருக்கு இறைவனின் கனவை நாம் அறிவிக்கிறோம். குறிப்பாக, சாதியின் பெயரால் கிறித்தவர்கள் பிளவுபட்டு நிற்பது இறைவனின் கனவை முறியடிக்கும் செயல். ஒற்றுமையுடன் வாழ்வோம், இறைவனின் கனவை நனவாக்குவோம்.

மன்றாடுவோம்: ஒற்றுமையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஒரே ஆயனும், ஒரே மந்தையுமாக நாங்கள் அனைவரும் வாழும் வரம் தாரும். எங்களிடையே சாதி, மதம், மொழி, நாட்டின் பெயரால் அமைந்துள்ள வேலிகளை, தடைகளைத தகர்த்தெறிந்து, அனைவரும் உமது பிள்ளைகள் என்னும் உம் கனவை நனவாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்த எங்களை ஆசிர்வதித்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

 

இடுக்கமான பாதை

இயேசு எருசலேம் நகர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். எருசலேம் அரண் சூழ்ந்த நகர். சுற்றுச் சுவர்கள், காவல்மாடங்கள் நிறைந்த நகர். காரணம், அது அரசரின் நகர். ஏரோதின் அரண்மனை, பிலாத்துவின் அரண்மனை, தலைமைக்குருக்களிள் அரண்மனை எல்லா இங்கு உண்டு.
இவை அனைத்திற்கும் மேலாக, பேரரசரின் நகர் இது. அரசர்க்கரசராம் யாவே இறைவனின் ஆலயமே அவ்வரண்மனை.

எருசலேம் நகருக்குள் நுழைவதாயினும், எருசலேம் தேவாலயத்துள் நுழைவதாயினும் அவ்வளவு எளிதல்ல. பல சிரமங்கள் துன்பங்கள் அடைந்தே நுழைய முடியும். இடுக்கான வாயில்கள், சில நுழைவாயில்களில் மிகக் குனிந்தும் தவண்டும் செல்லவேண்டும். எருசலேம் தேவாலயத்துள் நுழைவதும் அவ்வளவு எளிதல்ல.

இந்த அன்றாட அனுபவத்தை, புதிய எருசலேமாம் விண்ணகத்தில் நுழைய "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்" என்கிறார் இயேசு. நாங்கள் உம்மோடு உண்டோம், குடித்தோம் என்பதெல்லாம் வகைக்கு உதவாதவை. தன்னுடைய சிலுவையை நாள்தோறும் சுமந்து இயேசுவைப் பின் செல்பவனும், எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து இயேசுவைப் பின் செல்பவனும், பசியாய் இருந்தவனுக்கு உண்ணக்கொடுத்தவனும், தாகத்தைத் தணித்தவனும், அன்னியனை ஏற்றுக்கொண்டவனும்,.. ரூhநடடip; .. .. இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்களே.

இப்பாதையில் நுழையும் ஒருவராக உன்னை உறுதிப்படுத்திக்கொள்.

:-- ஜோலி --: