முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்துகொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ``உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்'' என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 109: 21-22. 26-27. 30-31
பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்.

21 என் தலைவராகிய கடவுளே!
உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்!
உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!
22 நானோ எளியவன்; வறியவன்;
என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. -பல்லவி

26 ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்!
உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்!
27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்!
ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும். -பல்லவி

30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்;
பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.
31 ஏனெனில், வறியோரின் வலப் பக்கம் அவர் நிற்கின்றார்;
தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

லூக்கா 13:31-35

பொதுக்காலம், வாரம் 30 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, ``இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்'' என்று கூறினர். அதற்கு அவர் கூறியது: ``இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். `ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு.

பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை மிகப்பெரிய பாடம். நமக்கெல்லாம் அவருடைய வாழ்க்கைப்பயணம் சிறந்த உந்துசக்தி. என்ன முடிவெடுக்கலாம் என்று, பிரச்சனைகளின் நடுவில் தவித்துக்கொண்டிருக்கிறபோது, நிச்சயமாக அவருடைய துணிவு மற்றும் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை, நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அதுவே நமது வாழ்வாகவும் மாற அழைப்புவிடுக்கிறது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

பரிசேயர்களின் மறுபக்கம்

இன்றைய நற்செய்திப்பகுதி, நமக்கு ஆச்சரியமான செய்திகளைத்தருகிறது. அது பரிசேயர்களைப் பற்றிய செய்தி. பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிரிகளாக பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இன்றைய நற்செய்தி, பரிசேயர்களிலும் நல்லவர்கள் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. பொதுவாக, நற்செய்திப் பகுதிகளைப் பார்க்கிறபோது, பரிசேயர்கள், இயேசுவுடன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பது, தெளிவாக தெரிகிறது. ஆனால், அது முழுமையான உண்மையல்ல, என்பதை இன்றைக்கு வாசிக்கிற நற்செய்திப்பகுதி மூலம் நாம் உறுதிப்படுத்துகிறோம்.

சில பரிசேயர்கள் இயேசுவிடத்தில் வந்து, அந்த இடத்தைவிட்டு, அகலுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்கள். அவரது போதனை பிடிக்காததால் அல்ல, மாறாக, அவருடைய பாதுகாப்பிற்காக. ஏனென்றால், ஏரோது அந்திபாஸ், இயேசுவை கொல்லத்தேடுவதாக, அவர்களுக்கு உறுதியான தகவல் கிடைத்திருந்தது. மோசமானவர்கள், இயேசுவின் எதிரிகள், வெளிவேடக்காரர்கள் என்று, இயேசுவால் முத்திரைக்குத்தப்பட்ட பரிசேயர்களில் நல்லவர்கள் இருப்பதை, இன்றைய நற்செய்தி காட்டுவது, அருமையான செய்தியைத் தருகிறது.

எல்லா மனிதர்களிடமும், நிச்சயம் நல்ல குணங்கள் பல நிச்சயம் இருக்கும். அதை நாம் பார்க்க வேண்டுமே தவிர, மனிதர்களிடம் இருக்கிற கெட்ட குணங்களை அல்ல. நமது வாழ்வில் பல வேளைகளில், மற்றவர்களிடம் இருக்கிற சின்ன, சின்ன குறைகளைப் பார்த்து நாம் தீர்ப்பிடுகிறோம். இப்படித்தான் அவர் இருப்பார் என்று முத்தரை குத்துகிறோம். அவரைப்பற்றி மற்றவர்களிடம் இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் பேசுகிறோம். அது தவறு. ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றை நாம் இனம் காண வேண்டும். அது ஒருவருடைய வாழ்வை மாற்றுவதற்கும், உதவியாக இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவின் துணிவு

இன்றைய நற்செய்தி நமக்கு ஓர் ஆச்சரியமான செய்தியைத்தருகிறது. பரிசேயர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, ”இங்கிருந்து போய்விடும்: ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினர். பொதுவாக, நற்செய்தி நூல்களில் பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதும், எப்படியாவது இயேசுவை ஒழித்துவிடவும் முயல்வது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கே இயேசுவைக்காப்பாற்ற நினைக்கும் பரிசேயர்கள் பற்றி நாம் வாசிக்கிறோம். பரிசேயர்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

இங்கு நற்செய்தியில் சொல்லப்படுகிறவர் ஏரோது அந்திபாஸ். கலிலேயாவின் அரசர். இயேசுவை கொல்லத்தேடுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். இயேசு அவரை குள்ளநரிக்கு ஒப்பிடுகிறார். குள்ளநரி என்பது மூன்று வகையான செயல்பாடுகளுக்கான அடையாளம். தந்திரம், கொடூரத்தனம் மற்றும் ஒன்றுக்கு உதவாதது. இயேசு ஏரோதுவை தந்திரமுள்ளவனாகவும், கொடூரத்தன்மை உள்ளவனாகவும், மற்றவர்களுக்கு அவனால் எந்தவித பயனும் இல்லாதவனுமாக சித்தரிக்கிறார். நாட்டை ஆள்கிற அரசரை, “குள்ளநரி” என்று சொல்வதற்கு ஒருவருக்கு துணிவு வேண்டும். அந்த துணிவு இயேசுவிடத்தில் இருந்தது. அந்த துணிவை அவர் பெற்றது, கடவுளின் நம்பிக்கையில் இருந்து.

உள்ளதை உள்ளபடி சொல்ல, அநியாயத்திற்கு எதிராக கிளர்ந்து எழ, சமூக தீமைகளுக்கு எதிராகப் போராட நமக்கு துணிவு வேண்டும். அந்த துணிவு நமக்கு வேண்டுமென்றால், கடவுள் மட்டில் நமக்கு விசுவாசம் வேண்டும். கடவுள் நம்பிக்கை இருந்தால், இந்த உலகத்தில் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்பதை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது,

இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றி;த் துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நுhல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து இந்த தலைமைப் பண்பை நாம் கற்றுக்கொள்வோம். விரைந்து செயலாற்றவும், திட்டமிட்டுப் பணியாற்றவும், குறுகிய காலத்தில் நிறைவான பணிகள் புரியவும் இயேசுவே நமக்கு மாதிரி.

மன்றாடுவோம்: பணிகளைத் திறம்பட ஆற்றிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மிடமிருந்த இலக்குத் தெளிவு, அச்சமின்மை, திட்டமிட்டுப் பணியாற்றல், விரைந்து செயல்படுதல், பணி நிறைவை அறிந்திருத்தல் போன்ற அனைத்துத் தலைமைப் பண்புகளிலும் நானும் வளர எனக்குத் துhய ஆவியைத் தந்தருளும்.. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும்;
ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்' என்று கூறினர்'' (லூக்கா 13:31)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இங்கே பேசப்படுகின்ற ஏரோது யார்? பெரிய ஏரோது (ஆட்சிக்காலம்: கி.மு. 3 - கி.மு.4). என வரலாற்றில் அறியப்படுகின்ற மன்னன் காலத்தில் இயேசு பிறந்தார் என்பதற்கான அடிப்படை நற்செய்தி நூல்களில் உள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு இயேசு பிறந்தது கி.மு. 6ஆம் ஆண்டளவிலாகும் என்பது அறிஞர் கருத்து. பெரிய ஏரோது இறந்த பிறகு, அந்த மன்னனின் மகன் ஏரோது அந்திப்பா (ஆட்சிக் காலம்: கி.மு. 4 - கி.பி. 39) கலிலேயாவிலும், இன்னொரு மகன் அர்க்கெலா (ஆட்சிக் காலம்: கி.மு. 4 - கி.பி. 6) யூதேயாவிலும் ஆட்சிசெலுத்தினர். இவர்களுள் ஏரோது அந்திப்பா என்பவன்தான் திருமுழுக்கு யோவானைக் கொன்றவன். அவன் இயேசு புரிந்த அதிசய செயல்கள் பற்றிக் கேள்விப்பட்டதால் அவரைப் பார்க்க வேண்டும் என விரும்பினான். தொடர்ந்து அவன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்றும் திட்டம் தீட்டியதாக நற்செய்தி தகவல் தருகிறது (காண்க: லூக் 13:31).ஏரோது அந்திப்பா இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று எண்ணியதற்குக் காரணம் என்ன? திருமுழுக்கு யோவான் ஏற்கெனவே அந்த மன்னனின் நடத்தை தவறானது என அவனைக் கண்டித்திருந்தார் (மாற் 6:14-29). இறைவாக்கினராக வந்த அவருடைய போதனை மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அதுபோலவே, இயேசுவும் ஓர் இறைவாக்கினர் போல வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஏரோது அந்திப்பாவுக்கு இயேசுவைச் சந்தித்து, அவரிம் பெரியதோர் அதிசயத்தை நிகழ்த்துமாறு கேட்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆசை (காண்க: லூக் 23:6-8). இறுதியில் இயேசு கைதுசெய்யப்பட்டு அந்த மன்னனின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார் (லூக் 23:6-7).

-- ஏரோது அந்திப்பாவைக் கண்டு இயேசு பயப்படவில்லை. மாறாக, அவனை ''நரி'' என்று அழைத்துச் சவால் விட்டார் இயேசு (காண்க: லூக் 13:31-32). இயேசு, ''இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்'' என்றார் (காண்க: லூக் 13:32). அதாவது, இறையாட்சியை அறிவித்த இயேசு மக்களை ஒடுக்கிய தீய சக்திகளை முறியடிப்பார் (''பேய்களை ஓட்டுவேன்''); மக்களைச் சிறுமைப்படுத்துகின்ற அனைத்து நோய்நொடிகள் மற்றும் அநீதிகளிலிருந்து அவர்களுக்கு விடுதலையளிப்பார் (''பிணிகளைப் போக்குவேன்''). இவ்வாறு கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை இயேசு ஆற்றும்போது அவருக்கு எதிராக தீய சக்திகள் எழுந்து, அவரைக் கொன்றுபோட முனைந்துநிற்கும். ஆனால் இயேசு தாமே தம்முடைய பணியினைச் சிலுவைச் சாவு வழியாக ''நிறைவேற்றுவார்''. எனவே, ''நரி'' போலச் செயல்பட்ட ஏரோது அந்திப்பாவும் சரி வேறு எந்த அதிகாரியும் சரி, கடவுள் வகுத்த திட்டத்தை முறியடிக்க முடியாது. ஏரோது நரியைப் போல தந்திரமாகச் செயல்படலாம்; அழிவினைக் கொணரலாம். ஆனால் மனித அதிகாரம் எதுவுமே கடவுளின் மீட்புத் திட்டத்தைச் சீர்குலைக்க முடியாது. இன்றைய உலகிலும் இறையாட்சிக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் எதிரான சக்திகள் பல உள்ளன. அவற்றை முறியடிக்க வேண்டும் என்றால் நாமும் இயேசுவைப் போல மன உறுதியோடு செயல்பட வேண்டும்; கடவுளின் திருவுளத்தை முழுமனத்தோடு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் நிலைத்து நிற்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல
நானும் என் மக்களை அரவணைத்துக்கொள்ள
எத்தனையோ முறை விரும்பினேன்;
உனக்கு விருப்பமில்லையே!'' (லூக்கா 13:34)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுள் தம் மக்களைப் பாதுகாக்கிறார் என்னும் உண்மையை விளக்கிச் சொல்ல விவிலியம் பல உருவகங்களைப் பயன்படுத்துகிறது. ''ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை;...நான் புகலிடம் தேடும் மலை'' (திபா 18:2) எனவும், ''என் கற்பாறையும் கோட்டையும் நீரே'' (திபா 31:3) எனவும், கடவுள் நமக்கு அளிக்கின்ற பாதுகாப்புப் பற்றித் திருப்பாடல்கள் நூல் பல இடங்களில் குறிப்பிடுகிறது (காண்க: திபா 71:3; 89:26). மலை, பாறை, கோட்டை போன்ற உருவகங்கள் உறுதியையும் திடமான நிலையையும் குறிப்பதால் கடவுள் தம் மக்களைக் கைவிடாமல் காத்து, அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் கண்காணிப்பதோடு, எதிரிகளின் தாக்குதலால் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்னும் அடிப்படையான உண்மையை உணர்த்துகின்றன. இயேசுவும் நம்மைப் பாதுகாத்துக் கண்காணிக்கின்ற கடவுளின் அன்பு பற்றிப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கோழி தன் குஞ்சுகளோடு குப்பை மேட்டில் மேய்ந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது வானத்தில் ஒரு கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டால் போதும், உடனடியாகக் கோழி தன் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறது; தாயின் குரலில் ஒலிக்கின்ற எச்சரிப்பை உணர்ந்ததும் குஞ்சுகள் கோழியை நோக்கி ஓடிவர, கோழியும் தன் இறகுகளை விரிக்கிறது; குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் கோழியின் இறக்கையின் கீழ் பதுங்கிக்கொள்கின்றன. தனியாகத் திரிந்தால் கழுகுக்கு இரையாகிப்போகின்ற ஆபத்துக்கு உட்படுகின்ற கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் இறகுகளின்கீழ் தஞ்சம் புகும்போது பாதுகாப்பைப் பெறுகின்றன.

-- கோழி தன் குஞ்சுகளோடு மேய்ந்துகொண்டு திரிவதையும் அவற்றிற்குத் தன் சிறகின்கீழ் பாதுகாப்பு அளிப்பதையும் இயேசு பார்த்திருக்க வேண்டும். அவருடைய வாழ்க்கை அனுபவம் ஒரு போதனையாக உருவெடுக்கிறது. கடவுளின் பாதுகாப்பு என்பது அவருடைய எல்லையற்ற அன்பின் ஒரு வெளிப்பாடுதான். மனிதர் வழிதவறிச் செல்லும்போதும், இலக்குத் தெரியாமல் இங்குமங்கும் திசைதிரும்பிப் போகும்போதும் கடவுள் அவர்களைத் தனியராய் விட்டுவிடுவதில்லை. தவறிய மனிதரையும் அன்போடு அரவணைப்பதுதான் கடவுளின் பண்பு. இருப்பினும், மனிதர் கடவுளின் அரவணைப்பு வேண்டாம் என்று ஒதுங்கிப் போவதும் உண்டு. அந்த வேளைகளில்கூட கடவுளின் பாதுகாப்பு நமக்குக் குறைபடுவதில்லை என்பதுதான் கடவுளின் எல்லையற்ற அன்பின் மறைபொருள்.

மன்றாட்டு
இறைவா, உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எம்மை அரவணைப்பவர் நீரே என நாங்கள் உணர்ந்து, நம்பிக்கையோடு வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

 

 

--அருட்திரு ஜோசப் லீயோன்