முதல் வாசகம்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20


ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ;
அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

லூக்கா 15:1-3, 11-32

தவக்காலம் -இரண்டாம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

02.03.2024 சனி
வாய்ப்புகள் ...
லூக் 15 : 1 - 3, 11-12

தற்போதைய தேர்வு கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக சர்ப்பஸ்கான் விளையாடி வருகின்றார். இதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தற்போது கொடுக்கப்பட்ட வாய்ப்பினை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றார். ஆந்திரா மாநிலத்திலே குறைந்த வகுப்பினை சார்ந்த வாலிபன் உதவி மாவட்ட ஆட்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுவரை மாவட்ட ஆட்சியாளர்கள் செய்யாத பணியினை முன்னின்று செய்கின்றார். அமெரிக்க நாட்டு இணை பிரதமராக கமலா ஹரிஸ் (இந்திய வம்சவளி பெண்) வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்கள். அந்த அளவிற்கு மக்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றார். இவ்வாறு பலர் பல வழிகளில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

அதுபோலவே இன்றைய வாசகத்திலும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்கள் பாவத்திலிருந்து வெளிவர, அவர்கள் குற்றங்களை ஆழ்கடலில் போட்டு மன்னித்து வாய்ப்பு கொடுக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் தந்தை தன்னுடைய ஊதாரி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை பார்க்கின்றோம். இந்த இரண்டு வாய்ப்புமே இரக்கத்தின் அடிப்படையில் பொழியப்படுகின்றது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தியவர்கள், தாங்கள் பெற்ற வாய்ப்பினை மற்றவர்களும் பெற தூண்டுதலாக இருக்கின்றார்கள். ஊதாரி மகன் கீழ்படிதல் வழியாக அதே இரக்கத்தை மற்றவர்களுக்கு கொடுக்கின்றான். இஸ்ரயேல் மக்கள் இரக்கத்தின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக கருதப்படுகின்றார்கள்.

நாம் சிந்திப்போம். தவக்காலம் நாம் இரக்கத்தை பெறவும், வழங்கவும் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. பயன்படுத்துவோமா...

- அருட்பணி. பிரதாப்

===========================

15: 1 – 3, 11 - 32
வெளிச்சமிடப்பட வேண்டுமா? மறைக்கப்பட வேண்டுமா?

பிரஃபுல் குமார் குட்ஜ் என்ற எழுத்தாளர் தன் புத்தகத்தில் இவ்வாறு கூறுவார்: “நீ செய்த தவற்றினை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள். இல்லையென்றால் அடுத்தவரை மட்டுமல்ல, உன்னையும் நீ சோ்ந்து இழப்பாய். தவறினை தவறு என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய பண்பு குறைவாக இருக்கிற சமுதாய காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒருபுறம் அறிவியலின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இன்னொருபுறம் மனித மாண்பு அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. காரணம், செய்கின்ற தவறினை நியாயப்படுத்துவது.

தவறினை தவறு என்று ஏற்றுக்கொள்கின்ற போது அங்கு நாம் கடவுளாக மாறுகின்றோம் என்ற சிந்தனையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுக் தருகிறது. இந்த உவமையில் இரக்கமுள்ள தந்தை கடவுளாக காட்டப்படுகின்றார். எதற்காக என்றால், தவறு செய்தவன் தன் நிலை உணர்ந்து வருகின்றபோது அவனை தன் நிலையிலிருந்து தந்தை ஏற்றுக் கொள்கிறார். அதனால் தான் கடவுளாக போற்றப்படுகின்றார். இதற்கு விவிலிய பேராசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள், “இயேசுவின் உவமைகளில் அன்றாட மக்களின் வாழ்வை நெறிப்படுத்த இயேசு உருவாக்கிய உவமை. ஏனென்றால் பிந்தியவர் முந்தியவரை அறவே வெறுத்து ஒதுக்கினார்கள். முந்தியவர்கள் அன்றாட வாழ்வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்களாக கருதப்பட்டனர். ஆனால் இவ்வாறு ஓரங்கட்டப்பட்டவர்களைத் தான் இயேசு இரக்கத்துடனும், அக்கறையுடனும், கண்ணோக்கினார். காணாமல் போய் ஒதுக்கப்பட வேண்டிய நிலைக்குச் சென்றவர்கள் பெறும் அக்கறையும் அன்பும் தான் இயேசு நிலைநாட்ட வந்த இறையாட்சியின் விழுமியங்கள்.

நமது வாழ்வில் தவறினை தவறு என்று ஏற்றுக்கொள்கிறோமா? அல்லது தவறினை நியாயப்படுத்தி இயேசுவின் இறையாட்சி விழுமியங்களிலிருந்து மறைந்து விடுகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

லூக் 15 : 1-3, 11-32
சனி
மூத்தவனா? இளையவனா?

“உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த இரண்டையும் மாற்றி, “நீ வணங்கும் கடவுள் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்கிறது ஊதாரி மகன் நற்செய்தி. ‘மொத்த நற்செய்தி நூல்களின் சாரம்’ என்று இந்த உவமையைக் குறிப்பிடலாம். சில விவிலிய அறிஞர்கள் இப்பகுதியினை, ‘விவிலியத்திற்குள் ஒரு விவிலியம்’ என்கிறார்கள்.

பிற மதத்தினர் கடவுளை நீதியோடு தண்டிக்கக் கூடியவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை நீதியோடு அன்பு செய்கிறவராகப் பார்க்கிறோம். இங்கு மூத்தமகன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து வாழ்ந்த யூதர்களையும், சொத்துக்களை எல்லாம் இழந்த இளையமகன் பிற இனத்தவர்களையும் பாவிகளையும் குறிக்கின்றனர். இந்த உவமையில் சிறப்பானது இறுதியில்தான் உள்ளது. அது என்னவென்றால் மூத்தமகன் வீட்டிற்குள்ளே சென்றானா? இல்லையா? என்பது தான். இதனை ஆண்டவர் இயேசு வாசிக்கின்ற, வாழ்கின்ற நம் ஒவ்வொருவரின் கைகளிலும் விட்டுவிட்டார்.

கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து அவரோடு இருந்த மூத்த மகன், கடவுளைத் தவறுகளைக் கண்டிக்கிறவராக மட்டும் பார்க்கவில்லை. ஒருபடி மேலே சென்று தன்னை அனைத்திலும் சிறந்தவன் என்றும், தன் தந்தையை நெறிதவறியவர் என்றும், பாவியான இளைய மகனை ஏன் ஏற்றுக் கொண்டீர்? என்றும், அவனைத் தண்டித்தருளும் என்றும் முணுமுணுத்துக் கொண்டே வெளியில் நிற்கிறான். வீட்டைவிட்டுப் போனவனோ தன்னிலை உணர்ந்து, முழுவதுமாகத் தன்னைத் தாழ்த்தி, தண்டிக்கும் தந்தையாக அவரைப் பாராமல், இரக்கமுள்ள பரிவுள்ள தந்தையாக அவரைப்பார்த்து, அவரிடமே திரும்பி வந்து வீட்டிற்குள் செல்கிறான்.

நமது கத்தோலிக்கக் கிறித்தவர்களிடம் குறிப்பாக தினமும் திருப்பலிக்கு வருபவர்கள், செபமாலை சொல்பவர்கள், கோவில் காரியங்களில் முன்னின்று செயல்படுபவர்களில் பலர் மூத்தமகனைப் போன்று தான் பல நேரங்களில் முணுமுணுக்கின்றனர். பலநேரங்களில் தங்களை சரியெனக் காட்டிக் கொள்ள, மற்றவர்களைக் குறிப்பாக குருக்களைத் தவறாகப் பேசி முணுமுணுப்பவர்கள் இவர்களே. நீங்கள் மூத்தமகனா? இளையமகனா? என்பதைக் கண்டுபிடிக்க மிக எளிய வழி என்னவென்றால், மேலே தரப்பட்டிருக்கும் கடைசிப் பத்தியில் கூறியதை ஏற்றுக் கொண்டால் நீங்கள் இளையமகனின் மனநிலையைக் கொண்டுள்ளீர்கள். அல்லது அதனை வாசிக்கும் போதே ஒருவித நெருடல் கொண்டு உங்கள் மனம் தடுமாறினால் நீங்கள் மூத்தமகனின் மனநிலையைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே உண்மை. மனநிலை மாற்றத்திற்காக இத்தவக்காலத்தினை சரியாகப் பயன்படுத்துவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 9 – 10, 11 – 12
”ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்”

திருப்பாடல் 103 ஒரு புகழ்ச்சிப்பாடல். ஆண்டவருடைய இரக்கத்தைப் புகழ்ந்து பாடக்கூடிய ஒரு பாடல். ஆண்டவர் அருளும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கிக்கூறும் பாடல். உடல், உள்ளம், ஆன்மாவோடு இணைந்து கடவுளைப் போற்றுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கும் பாடல். கடவுள் நம்மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தால், நமது குற்றங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், நம்மை தேடி வருவார் என்று, கடவுளின் இரக்கத்தை மையப்படுத்திச் சொல்லும் பாடல்.

இங்கே இரக்கம் என்பது நாம் செய்யக்கூடிய இரக்கச்செயல்களை மையப்படுத்தியது அல்ல, மாறாக, மன்னிப்பு என்கிற பரிமாணத்தை வலியுறுத்திச் சொல்வது. கடவுளின் மன்னிப்பிற்கு ஒரு அருமையான உதாரணம் ஒன்று தரப்படுகிறது. மேற்கும், கிழக்கும் என்றைக்குமே ஒன்று சேராது. இரண்டு திசைகளும் வெவ்வேறு துருவங்கள். இரண்டும் ஒருபோதும் நெருங்கி வர முடியாது. அத்தனை தொலைவிற்கு, கடவுள் நம் பாவங்களை அகற்றுகிறார் என்றால், அவர் நம்முடைய பாவங்களை நினைவுகூர்வதே கிடையாது என்று சொல்கிறார். நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றாற்போல நம்மை அவர் நடத்துவதும் கிடையாது. அதுதான் கடவுளின் இரக்கம், அதுதான் கடவுளின் அன்பு.

கடவுள் நம்மீது காட்டும் அன்புக்கு கடுகளவாவது நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் அவரது அன்பை உணர்ந்தவர்களாக வாழ வேண்டும். எப்போதும், கடவுள் முன்னிலையில் நமது பாவங்களை அறிக்கையிட்டு, தெளிந்த மனதுடையவர்களாக வாழ, நாம் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

மனமாற்றம்

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம்.

தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான். இன்றைக்கு மனமாற்றம் என்கிற பெயரில், மற்றவர்களின் மனதை மாற்ற, பல கேலிக்கூத்துக்கள் இந்த சமுதாயத்தில் அரங்கேறுகின்றன. தவறு செய்து விட்டேன் என்கிற உணர்வு அறவே இல்லாமல், மன்னிப்பு என்கிற மிக உயர்ந்த விழுமியத்தை, குறுக்கு வழியில் பெறத்துடிக்கும் கர்வம், ஆணவம் இன்றைக்கும் நம்மில் பலரிடம் உள்ளது. மன்னிப்பு என்கிற தியாக விழுமியத்தை, சூறையாடுவதற்கும், களங்கப்படுத்துவதற்கும், சிதைப்பதற்கும், தங்களுடைய சுயநலத்திற்காக நியாயப்படுத்துவதற்கும் பல மனிதர்கள், நல்லவர்கள் என்கிற போர்வையில், இந்த சமுதாயத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

மனமாற்றத்தின் அடிநாதம் உணரப்படவில்லையெனில், மனமாற்றத்திற்கான செயல்பாடுகள் அனைத்துமே அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். போலி மனமாற்றம் கடவுள் முன்னிலையில் நிச்சயம் அருவருக்கத்தக்கதாகவும், தண்டனைக்கு ஏற்புடையதாகவும் தான் இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பரந்த உள்ளம்

கடவுளின் மன்னிப்பைப் பெறுவதைவிட, சக மனிதர்களின் மன்னிப்பைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இது கடவுள் நம் மேல் வைத்திருக்கிற அன்பின் ஆழத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதே வேளையில், மனித மனம் எவ்வளவுக்கு குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது என்பதையும் இது வெளிக்காட்டுகிறது. தந்தையின் மூத்த மகன் இதுநாள் வரை தந்தைக்கு கீழ்ப்படிந்து நடந்ததாகச் சொல்கிறான். ஆனால், உண்மையான கீழ்ப்படிதல் எதையும் குற்றப்படுத்தாது. கீழ்ப்படிதல் வெறும் கடமையல்ல, அது அன்பின் ஆழத்தால் செய்யப்படும் பணி. அது நேர்மையின் அடையாளம். அதனை மூத்தமகனிடத்தில் நாம் காண முடியாது. எனவே, அவனை கீழ்ப்படிதல் உள்ளவனாக ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மையான அன்பு எதனையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும். தவறுகளை சகித்துக்கொள்ளும். வாழ்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். இங்கே நற்செய்தியில், தனது உடன்பிறந்தவனை “சகோதரன்“ என்று அழைக்காமல், “உமது மகன்” என்று அழைப்பது எந்த அளவுக்கு, மூத்த மகனுக்குள்ளாக வன்மமும், பகையும் மறைந்து கிடக்கிறது என்பதை, வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அங்கே உண்மையான அன்பு இல்லை. பொறுமை இல்லை. திருந்தி வந்திருக்கிற அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சகிப்புத்தன்மை இல்லை. காரணம், தனது சொத்திற்கு பாதகம் விளைவிக்க வந்துவிட்டானே, என்கிற குறுகிற மனப்பான்மை.

மேற்கண்ட பகுதியில் நாம் நமது வாழ்விற்கு பெறக்கூடிய செய்தி, எந்த நேரத்திலும் குறுகிய மனப்பான்மை உடையவர்களாக நாம் வாழக்கூடாது என்பதுதான். நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக, அன்பை மையமாகக் கொண்டு நமது வாழ்வை நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்வதற்கு, இயேசுவின் அருள் வேண்டி, மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இறைவனின் இரக்கம்

கடவுள் அளவுகடந்த இரக்கமுள்ளவர். மன்னிப்பதில் தாராள குணமுடையவர் என்கிற பண்புகளின் சுருக்கம் தான், காணாமற்போன மகன் உவமை. இந்தக் கதையில் தந்தையின் அளவுகடந்த அன்பு, இரக்கம், மன்னிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தந்தை தனது இளைய மகனைக் கட்டுப்படுத்தவில்லை. அவன் கேட்டவுடனே, சொத்தில் அவனுக்குரிய பங்கைப் பிரித்துக் கொடுக்கிறார். அவனுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இல்லை. அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார். இறுதியில் அவன் தவறு செய்துவிட்டான் என்றபோதும், அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

இங்கே, நற்செய்தியில் 20வது இறைவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. ”தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக்கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைத்தழுவி முத்தமிட்டார்”. இதனுடைய பொருள், ஒவ்வொருநாளும் தந்தை தனது மகனுக்காகக் காத்திருக்கிறார். எப்படியும் தனது மகன் வருவான் என்று வழிமேல் விழிவைத்து அவர் காத்திருக்கிறார். தவறு செய்த தனது மகன் வேறு வழியில்லாமல் தன்னிடம் திரும்பி வருவதைக்கண்டு, அவர் அவனைக்கண்டிக்கவில்லை. அவனைத் திட்டவில்லை. ஏன் இப்படிச்செய்தாய்? என்று கூட கேட்கவில்லை. இளைய மகன் செய்த தவறுக்கு, தந்தையின் பதில், தூய்மையான அன்பு. அவ்வளவுதான்.

நமது இறைத்தந்தையும் இதுபோன்ற அன்பைத்தான் நம்மீது காட்டுகிறார். அவரும் நம்மேல் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, அன்பை மட்டுமே நமக்கு பதிலாகத்தருகிற, நமது இறைத்தந்தையின் பாசத்தை நாம் எப்போது உணரப்போகிறோம்?

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வில் உயர்ந்த மதிப்பீட்டைக் கடைப்பிடிப்போம்

யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும். தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. இன்றைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன. தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார். தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார்.

இன்றைய நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும், கடவுளின் மன்னிப்பும் அதிகமாக பேசப்பட்டாலும், இந்த உவமை மற்றொரு முக்கியமான கருத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த உவமை யாருக்கு சொல்லப்படுகிறது? என்பதில்தான் இந்தப்பகுதியின் முக்கியமான கருத்து அமைந்திருக்கிறது. இயேசு இந்த உவமையைச்சொன்னபோது, பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். (லூக்கா 15: 2). இந்த உவமையில் வருகிற மூத்தமகன்தான் கவனிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். மூத்தமகனை பரிசேயர்களோடும், மறைநூல் அறிஞர்களோடும் இயேசு ஒப்பிடுகிறார். இந்த மூத்தமகன் தான் நேர்மையாளன் என்ற மமதையோடு காணப்படுகிறான். அவன் தன்னை முன்னிலைப்படுத்துகிறவனாக இருக்கிறான். தன்னுடைய மகன் திரும்பி வந்ததும் அவனை ஏற்றுக்கொள்கிற தந்தையின் மீது கோபம் கொள்கிறவனாக இருக்கிறான். அடுத்தவரை குறைகூர்கிறவனாக இருக்கிறான். தாங்கள் மட்டும்தான் நீதிமான், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று மக்கள் மத்தியில் காட்டிக்கொண்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்டையடியாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் எப்போதுமே நம்மைப்பற்றி உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறோம். அது தவறில்லை. ஆனால், நம்மை முன்னிறுத்தி, மற்றவர்களை தரம்தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எப்போதும் மற்றவர்களைப்பற்றியும் உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான, பக்குவமடைந்த மனநிலையை. அத்தகைய மனநிலையை இறைவனிடம் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

ஊதாரித் தந்தை, ஊதாரி மகன், பொறாமைச் சகோதரன் !

நாம் பலமுறை கேட்ட, வாசித்திருக்கிற ஊதாரி மைந்தனின் உவமையை இன்று மீண்டும் ஒருமுறை வாசிக்கிறோம், தியானிக்கிறோம்.

ஊதாரி மகன் எந்த அளவுக்குத் தன் சொத்துக்களை அழிப்பதில் ஊதாரியாக இருந்தானோ, அந்த அளவுக்கு அன்பு காட்டுவதிலும், இரக்கம் அளிப்பதிலும் ஊதாரியாக இருந்தார் தந்தை. அத்தகைய வானகத் தந்தையை இறைவனாகப் பெற்றிருக்கும் நாம் பேறுபெற்றவர்கள். இறைவனைப் போற்றுவோம்.

இன்று பொறாமை கொண்டு, விருந்தில் கலந்துகொள்ளாமல் வெளியே நின்ற மூத்த மகனைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.

இளைய மகன் "கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால், மூத்த மகனோ வெளிப்படையாக எந்தப் பாவமும் செய்யவில்லை. மாறாக, தந்தையின் பரிவைக் கண்டு "சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாது" வெளியே நிற்கிறார். தந்தை வந்து உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டும் உள்ளே செல்லவில்லை. மாறாக, தந்தையின் மன்னிப்பில் குறைகாண்கிறார், குற்றம் சாட்டுகிறார். இந்த மூத்த மகன் தண்டிக்கப்பட்டதாகவோ, தந்தையால் கடிந்துகொள்ளப்பட்டதாகவோ உவமை சொல்லவில்லை. இருப்பினும், பொறாமை, சினம், தந்தைக்கு அவமதிப்பு, தம்பியின் மனமாற்றத்தில் மகிழாமை, தந்தையையே குறைகாணும் மனநிலை ... எனப் பல்வகைப் பாவங்கள் இவர் செய்துள்ளார் என்பது வெளிப்படை.

நாமும் சில வேளைகளில் பொறாமை கொள்கிறோம், இறைவனின் இரக்கத்தில் எரிச்சல் கொள்கிறோம், மனமாற்றம் அடைவோரைக் கண்டு கேலி செய்யும்போது, இறைவனையே அவமதிக்கிறோம், பிறரின் மனமாற்றத்தில் மகிழாமல் இருக்கும்போது, இறைவனையே குறைகாணுகிறோம். இத்தகைய மனநிலைகளுக்காக இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோமா!

மன்றாடுவோம்: மன்னிப்பையும், இரக்கத்தையும் தாராளமாகப் பொழியும் அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்கள்மீது காட்டும் பேரன்பை பிறர்மீதும் பொழியும்போது, நாங்கள் அகமகிழவும், உம்மைப் பெருமைப்படுத்தவுமம் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

தந்தை, மகன், அண்ணன் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நமக்கு நன்கு அறிமுகமான இந்த உவமை வழியாக இன்று நம் வாழ்வை, மனநிலையை சற்று ஆய்வு செய்ய அழைக்கிறது இறைவார்த்தை.

இந்த உவமையில் வருகிற தந்தை, ஊதாரி மைந்தன், அவனது சகோதரன் மூன்று பேருமே மூன்று மனநிலைகளைச் சித்தரிக்கிறார்கள். தந்தை அன்பின், பரிவின், நிபந்தனையற்ற மன்னிப்பின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். நாம் அவ்வாறு வாழ முடியுமா? நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களைக்கூடப் பரிவுடன், பாசத்துடன் பார்க்க முடியுமா? மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களின் ஒப்புரவை மகிழ்ந்து கொண்டாட முடியுமா? முயற்சி செய்வோம்.

ஊதாரி மைந்தன் நேர்மையான மனத்துயரைப் பிரதிபலிக்கிறான். அறிவுத் தெளிவு பெற்றதும் தந்தையிடம் திரும்பி வந்தான். அத்துடன், மகனாக அல்;ல, வேலையாளாகப் பணி செய்ய முன்வந்தான். நாமும் நமது குறைகளை, பாவங்களை மனதார ஏற்றுக்கொள்ள முன்வருகிறோமா?  நமது குற்றங்களுக்கேற்ற பரிகாரத்தை, தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? முயற்சி செய்வோம்.

மூத்த மகன் குறை காணும் மனநிலையை, பொறாமையை, நன்மையை ஏற்றுக்கொள்ளாத மனதை, தீர்ப்பிடும் மனநிலையைப் பிரதிபலிக்கிறான். நாமும் பலநேரங்களில் அவ்வாறே பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பரிவின் பார்வையைப் புறக்கணித்து, தீர்ப்பிடும் பார்வையால் பிறரைப் பார்க்கிறோம். சட்டத்தின் பார்வையில், மனித நீதியின் அடிப்படையில் செயல்படுகிறோம். நம் பார்வையை மாற்றுவோமா?

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய மனநிலையை மாற்றி, தந்தையின் பரிவின் மனநிலையையும், மகனின் ஒப்புரவின் மனநிலையைத் தாரும். பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் வரத்தைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

ஊதாரித் தந்தை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஊதாரி மைந்தன் உவமை என்று இது அழைக்கப்படுகிறது. ஆனால், இதனை “ஊதாரித் தந்தை உவமை” என்றும் அழைக்கலாம் என்கின்றனர் சில விவிலிய அறிஞர்கள். காரணம், மகன் செல்வத்தைச் செலவழிப்பதில் ஊதாரியாக இருந்தான் என்றால், தந்தை அன்பிலும், மன்னிப்பிலும் ‘ஊதாரி’யாக, தாராளமானவராக, கணக்கு பார்க்காமல் செலவழிப்பவராக இருந்தார். எனவே, அவரை “ஊதாரித் தந்தை” என்று அழைப்பதில் தவறில்லை.

இதுதான் இன்றைய நற்செய்தி! நமது வானகத் தந்தை நம்மை அன்பு செய்வதில், மன்னிப்பதில், மீண்டும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதில் ஊதாரியாக இருக்கிறார். அவர் நமது குற்றங்களைப் பட்டியலிட்டுக், கணக்கு வைத்துக்கொள்வதில்லை. மாறாக, எத்தனை முறையும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார். திருப்பாடல் 103 சொல்வதுபோல, “தந்தை தம் பிள்ளைகள் மேல் இரக்கம் காட்டுவதுபோல், அவர் நம்மீது இரங்குகிறார்”. எனவே, நாம் அக்களிப்போம், அகமகிழ்வோம். நன்றி கூறுவோம். அந்தத் தாராள தந்தையின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அவரிடம் திரும்பி வந்து மன்னிப்பு கோருவோம்.

மன்றாடுவோம்: கொடை வள்ளலான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நீர் எங்களை மன்னித்து, அரவணைப்பதில் வள்ளலாக, தாராள உள்ளம் கொண்டவராக இருப்பதற்காக நன்றி கூறுகிறோம். உமது இரக்கத்தை நினைத்து வியக்கிறோம். எத்தனை முறை பாவம் செய்தாலும், மன்னித்து இரங்கும் உம் தாராள இதயம் கண்டு மகிழ்கிறோம். இதோ, மீண்டும் உம்மிடம் திரும்பி வருகிறோம். எம்மை ஏற்றுக்கொள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------------

 

''ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்'' (லூக்கா 15:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கூறிய கதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுபவை ஒருசில. அவற்றுள் ஒன்றுதான் ''காணாமற்போன மகன் உவமை'' (லூக் 15: 11-32). ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் எனத் தொடங்குகின்ற இக்கதையில் இளைய மகன் தந்தையின் சொத்தையெல்லாம் அழித்துவிட்டு, வறுமையில் வாடி, தன்மானம் இழந்து, மீண்டும் தந்தையைத் தேடி வருவதைப் பார்க்கிறோம். தம்மை விட்டுப் பிரிந்துசென்ற மகன் என்ன ஆனாரோ என்னும் கவலையால் கண்கலங்கி, ஆவலோடு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்ற தந்தையைக் காண்கிறோம். தந்தை தம் இளைய மகனுக்குத் தனிக் கவனம் செலுத்திவிட்டு, தன்னை மட்டும் ஒரு பொருட்டாக எண்ணவில்லையே என்னும் சிந்தனையில் புழுங்குகின்ற மூத்த மகனும் நம் கவனத்தை ஈர்க்கிறார். இந்த உவமையின் மையப் பொருள் பல நிலைகளில் விளக்கப்படுவதுண்டு. மூத்த மகன் இஸ்ரயேல் மக்களுக்கும் இளைய மகன் பிற இன மக்களுக்கும் உருவகம் எனக் கொண்டு, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை இஸ்ரயேலர் புறக்கணித்ததால் அது பிற இனத்தாருக்கு அறிவிக்கப்படும் என்றொரு விளக்கம் உண்டு. இயேசு பாவிகளோடும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரோடும் பழகி, உணவருந்தி, உறவுகொண்டாடுவது முறையா என்னும் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலாக இந்த உவமையை விளக்குவதுண்டு. தொடக்க காலத் திருச்சபையில் யார்யாரைத் திருச்சபை தேடிச் செல்ல வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் அளிப்பதுபோல இந்த உவமையைப் பார்ப்பதும் உண்டு.

-- அடிப்படையில் இந்த உவமை கடவுளின் அன்பு எத்துணை விரிந்தது என்பதைக் காட்டுகிறது. இளைய மகனைப் போல நாம் நம் தந்தையாகிய கடவுளை விட்டு அகன்று சென்றாலும் அவர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. அவருடைய கவனமெல்லாம் நாம் எப்போது அவரிடம் திரும்பிவருவோம் என்பதுதான். தந்தையின் அன்பு நம் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. நாம் அவரை அணுகிச் சென்றால் அதுவே போதும். நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொண்டு, அன்போடு முத்தமிட்டு அரவணைத்து நம்மைத் தம் இல்லத்தில் ஏற்றுக்கொள்வார் நம் தந்தை கடவுள்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் மன மாற்றம் அடைந்து உம்மைத் தேடி வர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

".. ..செலவழித்தார். .. ..பஞ்சம் ஏற்பட்டது. .. ..வறுமையில் வாடினார்."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வறுமையும் பஞ்சமும் செலவோடு மிக நெருங்கிய தொடர்புடையது என்பதை இங்கு உறுதியாகிறது. வீணாகச் செய்யும் ஒவ்வொரு செலவும் உலகில் கொடுமையான வறுமையையும் பஞ்சத்தையும் உண்டாக்குகிறது. மனிதன் விரயம் செய்யும் ஒவ்வொரு பொருளும் எங்கோ, யாருக்கோ,ஏதோ ஒரு விதத்தில் ஒரு பஞ்சத்தையும் வெற்றிடத்தையும் உண்டாக்குவதை எந்த விஞ்ஞானமும் பொருளாதாரமும் மறுப்பததற்கில்லை. படைத்த இறைவனின் பகுத்தறிவின் மிகச் சிறிய சான்று இது.

அந்த இளைய மகன் தந்தையின் அன்பு, பாசம், உறவு அனைத்தையும் அலட்சியப்படுத்தினான். வாரிச்சென்ற பொன், பொருளையும் தாறுமாறாக வாழ்ந்து அழித்தான். சொத்தையும் பணத்தையும் பயன்படுத்தி, உழைத்ததாகவோ, உழைத்து நஷ்டமடைந்ததாகவோ கதையில் சொல்லப்படவில்லை. மாறாக, நெடும் பயணம், தாறுமாறான வாழ்க்கை, பாழாக்கும் பழக்கம்,நட்பு, சூழல் இவற்றில் அனைத்தையும் செலவழித்துள்ளான்.

விழைவு, பஞ்சம். வறுமை. இழப்பு. தனிமை. மிருகங்களோடு வாழ்க்கை.அவனுக்கு மட்டுமா இந்த நிலைமை! அவன் வாழ்ந்த சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. பன்றிகள் தின்னும் நெற்றுக்கூட பஞ்சம். அந்த நாடு முழுவதும் வறட்சி, பஞ்சம்.

வீணாக்க வேண்டாம், விரயம் செய்ய வேண்டாம்.பஞ்சத்திற்கு நீங்கள் ஒரு சிறிய காரணமாகவும் இருக்க வேண்டாம். ஆண்டவன் தந்த உறவையும் பாசத்தையும் பரவலாக்குவோம். பொன்னையும் பொருளையும் இல்லாரோடு பகிர்வோம். இன்புற்று இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:--அருட்திரு ஜோசப் லியோன்--: