முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-12

சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? ஏனெனில், ``ஆண்டவர் சொல்கிறார்: நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும், நாவு அனைத்தும் என்னைப் போற்றும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 27: 1. 4. 13-14
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

1 ஆண்டவரே என் ஒளி;
அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

லூக்கா 15:1-10

பொதுக்காலம், வாரம் 31 வியாழன்

தூய லூக்கா எழுதிய நற்செய்தி : 15:1-10

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்; "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். "

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

இயேசுவின் எல்லையில்லா அன்பு

வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஆனால், பரிசேயரோ இயேசு சொல்வதைக் கேட்டு முணுமுணுத்தனர். இந்த முதல் இறைவார்த்தையே இருவேறான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இயேசுவை நோக்கி எதற்காக பாவிகள் நெருங்கி வர வேண்டும்? பாவிகள், ஏழைகள், வரிதண்டுவோர் தங்களது வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினர். தாங்கள் கடவுளால் ஏற்கெனவே தீர்ப்பிடப்பட்டதாகக் கருதினர். தங்களுக்கு இனிமேல் வாழ்வு இல்லை என்று நினைத்தனர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. தங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை அவை விதைத்தன.

மற்றொருபக்கத்தில் பரிசேயர்களோ, தாங்கள் ஏற்கெனவே கடவுளின் அரசுக்கு தகுதிபெற்று விட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர். தாங்கள் மட்டும் தான், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று நினைத்தனர். ஏழைகளையும், பாவிகளையும் வாழ்வை இழந்துவிட்டதாகப் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை இப்போது, இயேசுவின் போதனையால் வெல்லப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, அவர்களுக்கே அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இதுவரை தங்களிடம் பணிந்து நின்றவர்கள், இப்போது இவர்களைப் பார்த்து பரிகாசிக்க தொடங்கியவுடன், அவர்களது கோபம் அதிகமாகிவிட்டது. அந்த கோபத்தின் தொடக்கம் தான் முணுமுணுப்பு. கோபத்தின் உச்சகட்டம், இயேவிற்கு எதிராக சதித்திட்டம்.

இயேசு நம் அனைவருக்கும் வாழ்வு தருவதற்காக வந்திருக்கிறார். நம்மை கடவுளோடு சேர்ப்பதற்கு வந்திருக்கிறார். அவருடைய ஆறுதலும், ஆசீரும் நமக்கு எந்நாளும் தேவையாக இருக்கிறது. ஒருபோதும் அவரை விட்டு பிரியாமல், எந்நாளும் அவரது பிள்ளைகளாக வாழ்வதற்கு கடவுளின் அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

கடவுளின் ஆசீரைப் பெற்றவர்கள்

லூக்கா நற்செய்தியின் இந்த பதினைந்தாவது அதிகாரத்தைப்போல, வேறு எந்த நற்செய்தியிலும், பகுதியிலும், கடவுள் கொண்டு வந்த நற்செய்தியின் சாராம்சத்தை நாம் பார்க்க முடியாது. எனவே, இந்த 15 வது அதிகாரத்தை, “நற்செய்தியின் நற்செய்தி“ என்று கூட, நாம் அழைக்கலாம். இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த நற்செய்தி, இதில் தான் அடங்கியிருக்கிறது. எதற்காக இந்த பகுதி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இதில் அடங்கியிருக்கக்கூடிய உண்மை என்ன? அவற்றை நாம் பார்ப்போம்.

இயேசு சாதாரண மக்களோடு நெருங்கிப்பழகினார். ஆனால், அந்த மக்கள் பரிசேயர்களால் புறந்தள்ளப்பட்ட மக்கள். அவர்களை பரிசேயர்கள் ”மண்ணின் மைந்தர்கள்” (The People of the Land) என்ற பெயரில் அழைத்தனர். தங்களின் ஒழுங்குமுறைகளில், பரிசேயர்கள் இந்த மக்களைப்பற்றி சொல்லியிருப்பதைக் கவனிப்பது, அவர்கள் எப்படி, இந்த மக்களைப் பார்த்தனர் என்பதை, நாம் உணரச்செய்யும். ”மண்ணின் மைந்தர்களிடம் பணத்தை பொறுப்பாகக் கொடுக்க வேண்டாம். அவரிடத்தில் எந்த இரகசியத்தையும் சொல்ல வேண்டாம். யாருக்கும் பொறுப்பாளராக அவரை, நம்பி நியமிக்க வேண்டாம். தர்மத்திற்காக செய்யப்படும் காரியங்களுக்கு, அவர்களைப் பொறுப்பாக நியமிக்க வேண்டாம். அவர்களோடு எந்த பயணத்திலும் கலந்து கொள்ள வேண்டாம்”. இது தான், சாதாரண மக்களைப்பற்றி, பரிசேயர்கள் வைத்திருந்த எண்ணம். இயேசு அவர்களின் இந்த அடக்குமுறையை, ஆணவத்தை உடைக்கிறார். கடவுள் என்றால், எங்களுக்கு மட்டும் தான், என்று கடவுளைக் கட்டிப்போட்டிருந்த, அந்த அடிமைத்தனத்தின் விலங்குகளை, சுக்குநூறாக்குகிறார். உண்மையான கடவுளை, ஏழைகள் மீது இரங்கும் கடவுளை, இரக்கமுள்ள கடவுளை, மக்களுக்காக ஏங்கும் கடவுளை, இயேசு அறிமுகப்படுத்துகிறார்.

நாமும் இந்த சமுதாயத்தில் பலரை இழிவாகக் கருதுகிறோம். புறந்தள்ளுகிறோம். ஒதுக்கி வைக்கிறோம். அவர்களுக்கு நிச்சயம் கடவுளின் அருள் கிடைக்காது, கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று, அவர்களை உதாசீனப்படுத்துகிறோம். ஆனால், அவர்கள் தான், கடவுளின் ஆசீரை நிறைவாகப் பெற்றுக்கொண்டிருக்கிறர்வள்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நல்ல ஆயன் இயேசு

இயேசு பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் நெருங்கிப்பழகுவதைக்கண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தங்களுக்குள்ளாக முணுமுணுத்தனர். அவர்களின் முணுமுணுப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக, சாதாரண மக்களை பரிசேயர்கள் மதிப்பதில்லை. ஏனென்றால், அவர்கள் சட்டத்தை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதில்லை என்ற எண்ணம் பரிசேயர்களின் மனதில் இருந்தது. எனவே, அவர்களோடு உரையாடுவதையும், உறவாடுவதையும் தவிர்த்து வந்தனர். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது, கடவுள் அவர்களை மன்னிக்கவே மாட்டார், கடவுள் தரும் மீட்பில் அவர்களுக்கு பங்கில்லை போன்ற எண்ணங்கள் பரிசேயர்கள் மத்தியில் இருந்தது. அப்படிப்பட்ட மக்களோடு இயேசு நெருங்கிப்பழகுவது, அவர்களுக்கு வெறுப்பைத்தந்தது.

பாலஸ்தீனப்பகுதியில் ஆயனுடைய பணி கடினமான பணியாகும். அது நேர்த்தியாக செய்ய வேண்டிய பணியும், பொறுப்பான பணியுமாகும். பாலஸ்தீனப்பகுதியில் மேய்ச்சலுக்கான நிலம் தொடர்ந்து இருக்காது. சிறிது மேய்ச்சல் நிலம், பின் வறண்ட பகுதி என தொடர்பில்லாமல் இருக்கும் நிலப்பரப்பு அதிகம். எனவே ஆடுகள் புல்வெளியைத்தேடிச்சென்று விடும்போது காணாமல் போய்விடும். காணாமல் போன ஆட்டை கட்டாயம் ஆயன் கண்டுபிடிக்க வேண்டும். காட்டு விலங்குகள் கொன்றுவிட்டால், அதற்கான சான்றையாவது கொண்டு வரவேண்டும். பொதுவாக, இரண்டு, மூன்று இடையர்கள் சோ்ந்து ஆடுகளை மேய்ப்பார்கள். யாருடைய ஆடாவது காணாமல் போய்விட்டால், மற்றவர்கள் ஊருக்குள் வந்து விடுவார்கள். தொலைத்த ஆயன் ஆட்டினைத்தேடிச் செல்வார். அவரின் வருகையை எதிர்பார்த்து, ஊரே காத்திருக்கும். தூரத்தில் ஆட்டுக்குட்டியோடு ஆயன் வருவதைப்பார்த்ததும், அந்த ஊரே திருவிழா போல அவரை வரவேற்கும். இந்த நிகழ்வைத்தான் இயேசு இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

ஒருவர் கூட தவறான நெறிக்குச் சென்று மீட்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார். எனவே தான், தன்னை பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் இணைத்து அடையாளப்படுத்திக்  கொள்கிறார். எனது வாழ்விற்கு மட்டுல்ல, மற்றவர்களின் வாழ்விற்கும் பொறுப்பேற்று வாழக்கூடிய வாழ்வே சிறந்த வாழ்வாகும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

காணாமல் போன நாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது.

இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்â€?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்.

ஆனால், இறைவனின் இயல்போ மாறானது. மோசேயின் பரிந்துரை மன்றாட்டைக் கேட்டு, பரிவு கொண்டவர். இப்போதும், தந்தை பிள்ளைகள்மேல் இரக்கம் காட்டுவதுபோல, நம்மீது இரக்கம் காட்டுபவர். நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்பவர். காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக நம்மைத் தேடி வருபவர்.

இந்த நாளில் இறைவனின் பேரன்பை உணர்ந்து, நன்றி சொல்வோமா! வணங்காக் கழுத்தினராய் வாழ்வதற்காக மன்னிப்பு கோருவோமா? நம்மைத் தேடி வரும் ஆயனின் குரல் கேட்டு மனந்திரும்புவோமா!

மன்றாடுவோம்: தேடி வரும் தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மை விட்டுப் பிரிந்து வாழும் எங்களை ஆயனாகத் தேடி வருபவரே, எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

 

நான் காணாமல் போன ஆடல்லவா !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

காணாமல் போன ஆடு, காணாமல் போன நாணயம் என்னும் இரண்டு அருமையான உவமைகளை இன்று வாசிக்கிறோம். எதையாவது தொலைந்துபோன அனுபவம் உள்ளவர்களுக்குத்தான், தொலைந்ததைக் கண்டுபிடிக்கும்போது உண்டாகும் பெருமகிழ்ச்சியின் பரிமாணம் புரியும். ஆடு ஒன்றை இழந்த மனிதன் காடு, மேடெல்லாம் அலைந்து அதைத் தேடுகிறான். கண்டுபிடித்ததும், அதைத் தோள்மேல் போட்டுக்கொண்டு, அயலாரோடும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். அதுபோலத்தான், திராக்மாவை இழந்த பெண்ணும் அதைத் தேடிக் கண்டதும், மகிழ்ந்து, தன் தோழியரோடு அதைக் கொண்டாடுகிறாள். அவ்வாறே, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் ஆண்டவர்.

ஒப்புரவு அருள்சாதனத்தில் கலந்துகொண்டு, பாவங்களை அறிக்கையிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பாவ அறிக்கை செய்யும்போது நமக்கு மட்டும் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. வானதூதர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்னும் இயேசுவின் செய்தி நமக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் ஆண்டவரே, நான் பாவி, என்னை மன்னியும் என்று நாம் அறி;க்கையிடும்போதெல்லாம். விண்ணகத் தூதரிடையே நாம் மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை உண்டாக்குகிறோம். இதை மனதில் கொண்டு, பாவ அறிக்கை செய்வோமா? வான்தூதருக்கு மகிழ்ச்சியைத் தருவோமா!

மன்றாடுவோம்: மன்னிப்பின் நாயகனே இறைவா, மனமாற்றம் என்னும் இனிய கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பாவி என்று ஏற்று, உம்மிடம் திரும்பி வருகின்றபொழுது, வானகத் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாவதற்காக உம்மைப் போற்றுகிறேன். அந்த மன்னிப்பின், மனமாற்றத்தின் அனுபவத்தை எனக்க எப்போதும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------------

''இயேசு, 'பெண் ஒருவரிடம் இருந்த பத்து திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால்
அவர் எண்ணைய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்.
ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பார்' என்றார்'' (லூக்கா 15:8-9)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- காணாமற்போன ஆடு பற்றி உவமையும் (லூக் 15:4-7) காணாமற்போன திராக்மா உவமையும் (லூக் 15:8-10) பல வகைகளில் மிகவும் ஒத்திருக்கின்றன. இரண்டுமே ''மகிழ்ச்சி'' பற்றிய உவமைகள். காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயர் ''நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:6). அதுபோலவே, காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண்ணும் தம் ''தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:9). அக்கால பாலஸ்தீன நாட்டில் சாதாரண வீடுகளின் உள்ளே அவ்வளவு வெளிச்சம் இருப்பதில்லை. எனவேதான் தன்னிடமிருந்த திராக்மா (ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்) தவறிப் போனதும் அது வீட்டுக்குள்ளேதான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும் என அப்பெண் சரியாக முடிவுசெய்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நாணயத்தை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என அவர் உறுதியாயிருந்ததால் முதலில் ''எண்ணெய் விளக்கை ஏற்றுகிறார்''; பின் வீட்டைப் பெருக்குகிறார்; கவனமாக அந்த நாணயத்தைத் தேடுகிறார் (லூக் 15:8). அவருடைய முயற்சி வீண்போகவில்லை. தான் தொலைத்துவிட்ட நாணயத்தை அவர் மீண்டும் கண்டுபிடிக்கிறார்.

-- தவறிப் போன பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. ஆனால் இப்பெண் அந்த மகிழ்ச்சியைத் தன் உள்ளத்தில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கவில்லை. தான் அடைந்த மகிழ்ச்சியை அவர் பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். எனவே, தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அணுகிச் சென்று அவர்களிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். தான் அடைந்த மகிழ்ச்சியில் அவர்களும் பங்கேற்பதைக் கண்டு அவருடைய மகிழ்ச்சி நிச்சயமாக பன்மடங்காகப் பெருகியிருக்கும். இயேசு இந்த உவமையை ஏன் கூறினார்? பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசு பாவிகளை வரவேற்பது பற்றியும் அவர்களோடு உணவருந்துவது பற்றியும் ''முணுமுணுத்தனர்'' (லூக் 15:2). அந்த முணுமுணுப்பு சரியல்ல என்று காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். கடவுள் தம்மை விட்டுப் பிரிந்துசென்ற பாவிகளைத் தேடிச் செல்கிறார். அவர்களைக் கண்டுபிடித்துத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் வரை அவர் ஓய்ந்திருப்பதில்லை. உவமையில் வருகின்ற பெண் கடவுளுக்கு உருவகம். தவறிப்போன திராக்மா கடவுளை விட்டுப் பிரிந்துவிட்ட பாவிக்கு உருவகம். பாவிகள் கடவுளிடம் திரும்பும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றார். இந்த உண்மையை இயேசு அழகான ஓர் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் நாம் அவரை விட்டு ஒருநாளும் பிரிந்துவிடலாகாது என்பதில் கருத்தாயிருக்கின்றார். அவருடைய எல்லையற்ற அன்பை நாம் உணர்ந்து அவரோடு எந்நாளும் அன்புறவில் இணைந்திருந்தால் அவர் நிறைவான மகிழ்ச்சி கொள்வார். அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்குண்டு.

இறைவாக்கு
இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்கு அளித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக்
கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

-- காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு
இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

_________________________________

இழப்பதற்கு தயாராக இல்லை.

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

காணாமல் போன ஒரு ஆடு, ஒரு திராக்மா நாணயம். ஒரு விலங்கு, ஒரு பொருள். ஒரு ஆண், ஒரு பெண். கையில் இருப்பது தொண்ணூற்றொன்பது ஆடு, ஒன்பது திராக்மா. கையில்தான் தொண்ணூற்றொன்பது ஆடு, ஒன்பது திராக்மா இருக்கிறதே ஒரு ஆட்டை ஒரு நாணயத்தைத் தேட வேண்டுமா? அவ்வளவு அவசியமா?

நண்பா! நீயே அந்த ஆடு. தோழீ! நீயே அந்த நாணயம். இயேசுவின் பார்வையில் தொலைந்தது ஆடல்ல, ஆயனும்தான். நாணயம் அல்ல, நாணயத்தின் சொந்தக்காரியும்தான். மறையுடல் கிறிஸ்துவின் அங்கங்கள் நீங்கள். எவ்விதத்திலும் நீங்கள் குறைந்த மதிப்புள்ளவர்கள் அல்ல, வேண்டாதவர்கள் அல்ல, மிகவும் அவசியமானவர்கள். உங்களை இழப்பதற்கு தயாராக இல்லை.

உன் இறைவன் உன்னைத் தேடுகிறார். கால் கடுக்க, கண்ணீர் சிந்தி, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து உன்னைத் தேடுகிறார். இருக்கும் அனைத்தையும் உனக்காக இழக்கத் தயாராக உள்ளார்.

தந்தை இறைவனும் தாய் திருச்சபையும் காணாமல்போன தன் மந்தையின் ஆடுகளை கனிவோடு தேடுகிறார்கள்.ஆனால் இன்று ஆயன் தேட வேண்டும் என்ற வீம்பில் காணாமல் போகும் ஆடுகள் நிறைய உள்ளன. ஒளிந்து விளையாடும் ஆடுகள், கண்ணாமூச்சி ஆடும் ஆடுகள், கள்ளன் போலீஸ் ஆட்டம் ஆடும் ஆடுகள் ஆண்டவன் அருளை வீணாக்குவதை அவர் விரும்பவில்லை. ஆயனோடு ஆடாக வாழ்வோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்