முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 3-9, 16, 22-27

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன்முதல் ஏற்றுக்கொண்டவர் இவரே. உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துகள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர் பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துகள். கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன. இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 145: 2-3. 4-5. 10-11
பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம் பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்;
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். -பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி.

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

லூக்கா 16:9-15

பொதுக்காலம், வாரம் 31 சனி

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.' பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: ``நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.'

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-------------------------

திருப்பாடல் 145: 2 – 3, 4 – 5, 10 – 11
”உம் பெயரை நான் எப்போதும் போற்றுவேன்”

புகழ்ச்சி என்பது இன்று நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது? பதவியைப் பெற வேண்டும் என்பதற்காகவும், எப்படியாவது எதையாவது சொல்லி புகழை அடைந்து விட வேண்டும் என்பதற்காகவும், தகுதியில்லாத புகழ்ச்சி இன்றைய மக்கள் நடுவில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அரசியலில் இந்த பழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. கடவுளை நாம் எப்படி புகழ வேண்டும்? எப்படி நம்முடைய புகழ்ச்சி அமைய வேண்டும் என்பதை இன்றைய திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

கடவுளை எல்லா நேரமும் புகழ்வேன் என்கிற வார்த்தைகள் திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் மீது வைத்திருக்கிற ஆழமான அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ”எல்லாநேரமும்” என்பது வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. கடவுள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கடவுளிடமிருந்து எதையாவது எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவோ, இந்த புகழ்ச்சி கிடையாது. மாறாக, எல்லா நேரங்களிலும் கடவுளைப் புகழ்வதாக ஆசிரியர் கூறுகிறார். ஆக, திருப்பாடல் ஆசிரியரின் இந்த கடவுள் புகழ்ச்சி சுயநலமில்லாதது, எதையும் எதிர்பார்க்காதது.

நாம் கடவுளைப் புகழ்கிறபோதும், இப்படிப்பட்ட மனநிலையோடு புகழ வேண்டும். நம்முடைய அன்பு தூய்மையானதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் கறைபடியாத, எதையும் எதிர்பார்க்காத அன்பாக இருக்க வேண்டும். அத்தகைய அன்பை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

பொதுநலப்பணி

பிறருக்கு உரியவற்றில் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகுந்தவராய் இருக்க வேண்டும் என்று இயேசு அழைப்புவிடுக்கிறார். பிறருக்கு உரியது எது? இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கக்கூடிய பலவிதமான பொருட்கள், பணிகள் மற்றவர்களுக்கு உரியது தான். உதாரணமாக, மக்களுக்கு பணியாற்றுவதற்காக அரசு பதவிகள், அதிகாரம் படைத்த பதவிகள், மக்களின் வரிப்பணம் – அனைத்துமே மற்றவர்களுக்குரியது. பொதுமக்களுக்குரியது. அந்த பதவியும், பணமும் ஒரு சிலரிடத்தில் கொடுக்கப்படுகிறது. எதற்காக? அதனை திறம்பட கையாண்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக. அந்த பணியைச் செய்வதில் நாம் நம்பத்தகுந்தவராய் இருக்கிறோமா? என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

பிறருக்கு உரிய இந்த பணிகளை எத்தனையோ மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, நம்மை ஆளக்கூடிய தலைவர்கள். அவர்களின் ஆட்சியில் பணிசெய்யக்கூடியவர்கள். பிறருக்கு உரிய இந்த பணிகளை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதின், இலட்சணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் மற்றவர்களைக் குறைசொல்லாமல், நாம் அந்த பணிகளில் இருந்தால், எப்படி செய்கிறோம்? என்பதை, நாம் நம்மைப்பார்த்துக் கேட்க வேண்டும். இன்றைக்கு கேள்வி கேட்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் அந்த பொறுப்பு கொடுக்கப்படுகிறபோது, அவர்களும் அதே தவறுகளைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், அடிப்படையில் எங்கே தவறு இருக்கிறது? ஏன் மக்களுக்கான பணிகள் சரியான வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை? எது மக்கட்பணிகளுக்கு இடையூறாக இருப்பது? இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மனிதனும் பொறுப்பேற்று, இடையூறுகளைக் களைய முன்வர வேண்டும்.

பொதுநலப்பணிகளில் நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். அது நமக்கான ஆதாயம் அல்ல. அது நமக்கான முழுமையான பணி. அந்த பணியின் மூலமாக, நாம் கடவுளின் முழுமையான ஆசீரைப்பெற்றுக்கொள்ள முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

நாம் கடவுளின் பணியாளர்கள்

”எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது” என்று நற்செய்தி சொல்கிறது. பாலஸ்தீனத்திலே அடிமைகளாக இருந்தவர்கள் வேலையாட்களாக இருந்தார்கள். அடிமைகள் என்று சொல்கிறபோது, அதன் அர்த்தத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு பொருள். தலைவருடைய உடைமை. அவர்களை மனிதர்களாக மதிக்காத சமுதாயப்பிண்ணனியோடு இந்த வாசகத்திற்கு நாம் அர்த்தம் காண முயல வேண்டும்.

அடிமை தலைவருடைய உடைமையாக இருப்பதால், யார் தன்னை விலைக்கு வாங்கியிருக்கிறாரோ, அவர்களுக்கு மட்டும் தான், அந்த அடிமை பணிவிடை செய்ய முடியும். இப்போது, இரு இடங்களில் வேலை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். காலையில் ஒரு உணவகத்திலும், மாலையில் வேறு ஏதாவது கடைகளிலும் வேலை செய்து, பணம் அதிகமாக சம்பாதிக்க நினைக்கிறவர்கள் ஏராளம். ஆனால், அடிமைகளுக்கு அது பணி அல்ல, மாறாக அது ஒரு நிலை. பணி என்றால், நாம் விரும்புகிற வரை செய்யலாம். இல்லையென்றால், வேறு எங்காவது போய் விடலாம். ஆனால், நிலை என்பது அப்படியல்ல. காலம் முழுவதும் தலைவருக்கு பணிவிடை செய்வதுதான், அவரின் தலையெழுத்து. ஆக, அவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது என்பதன் அர்த்தம் இதுதான்.

அதேபோல, நாம் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியவர்கள். நாம் முழுக்க, முழுக்க கடவுளுக்கு மட்டும் சொந்தமானவர்கள். ஆகையால், கடவுளுக்கு பணிவிடை செய்வது என்பது, நாம் நினைத்த நேரத்தில் மட்டும் தான், என்று நினைப்பது தவறு. நமது வாழ்வு முழுவதும் கடவுளுக்கானதாக இருக்க வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவனின் பணியாளர்களாவோம்

புனித அம்புரோஸ் சொல்வார்: ஏழைகளின் வயிறும், விதவைகளின் இல்லமும், ஏழைக்குழந்தைகளின் வாயும் தான், நாம் நிரப்ப வேண்டிய தானியக்கிடங்குகள். ஏழைகளுக்குச் செய்கின்ற ஒவ்வொன்றும் கடவுளுக்கு செய்வதாகும் என்பதன் பொருள்தான் அவர் கூறிய வார்த்தைகள். உண்மையான செல்வம் சேர்த்து வைப்பதில் அல்ல, மாறாக கொடுப்பதில்தான் இருக்கிறது. இந்த கருத்தை மையப்படுத்தியதுதான் இன்றைய வாசகம்.

 

எந்தவொரு பணியாளரும் இரு தலைவர்க்கு பணிவிடை செய்ய முடியாது. காரணம், அந்தப்பணியாளர் தலைவருக்குச்சொந்தம். அந்த பணியாளர் தலைவருடைய உடைமை. தலைவர் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை அப்படியே செய்ய வேண்டும். கூட்டியோ, கழித்தோ செய்யக்கூடாது. இன்றைய காலத்தில் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்வது என்பது கடினமான ஒன்றல்ல. காலையில் ஒரு அலுவலகத்திலும், மாலையில் பகுதிநேர பணியாளாகவும் பணி செய்யலாம். ஆனால், அன்றைய காலத்தின் காலச்சூழ்நிலை வேறு. ஒரு அடிமை முழுக்க, முழுக்க தலைவருக்குத்தான் சொந்தம். அவருக்கென்று தனிப்பட்ட நேரம் கிடையாது. ஒவ்வொரு கணமும் தலைவருக்குப்பணிசெய்ய தயாராக இருக்க வேண்டும். இந்தப்பிண்ணனியில் நாம் இந்தப்பகுதியை வாசித்தால், நாம் எவ்வாறு கடவுளுக்குப்பணி செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும்.

கடவுள் தான் நமது தலைவர். நாம் அவருடைய பணியாளர்கள். கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் நமது தலையாய பணி. அதை கருத்தாய் நிறைவேற்றுவதுதான் நமது கடமை. கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவை நல்லமுறையில் அறிந்துகொண்டால், நமது வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

மூன்று அறிவுரைகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் இயேசு. 1. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம்... இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம். 2. நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார். 3.ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. நாம் இரு கடவுள்களை வழிபட முடியாது. கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப் பற்று சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.

மன்றாடுவோம்: செல்வத்தில் எல்லாம் பெருஞ்செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நீர் எங்களுக்குத் தருகின்ற இந்த மூன்று அறிவுரைகளையும் நாங்கள் ஏற்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------------

''இயேசு, 'நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்' என்றார்'' (லூக்கா 16:9

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- செல்வம் நிலையானதல்ல என்னும் உண்மையை இயேசு பல இடங்களில் எடுத்துக் கூறுகிறார் (காண்க: மத் 6:19-21; லூக் 12:15). எனவே ''நேர்மையற்ற செல்வம்'' என இயேசு கூறுவதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம். இவ்வுலகு சார்ந்த செல்வம் பெரும்பாலும் நேர்மையற்ற வழிகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கப்படுவது என்பது ஒரு பொருள். இவ்வுலகச் செல்வத்தை மனிதர் நேர்மையற்ற நோக்கத்தோடும் செலவிடுகிறார்கள் என்பது மறுபொருள். எவ்வாறாயினும், இவ்வுலகு சார்ந்த செல்வத்தை மனிதர் பலகாறும் தீய முறைகளில் செலவழித்து வீணடிப்பது நாம் அனுபவத்திலிருந்து அறிகின்ற உண்மை. இதனால் செல்வம் என்பது தன்னிலேயே தீமையானது என இயேசு கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாகாது. ஏனென்றால் மனிதர் மனித மாண்போடு வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பது எல்லாரும் ஏற்கின்ற உண்மை. உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் இல்லாத நிலையில் மனித மாண்பு சீரழியவே செய்யும். இந்நிலையிலிருந்து மனிதரை விடுவிக்க வேண்டும் என்பதும் அதற்கு இவ்வுலக செல்வம் துணையாகும் என்பதும் இயேசுவின் போதனையே. ஆக, செல்வம் என்றால் தன்னிலேயே தீமையானது என நாம் கருதாமல், செல்வம் எவ்வாறு ஈட்டப்பட வேண்டும் எனவும், எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கருதுவது பொருந்தும். இவ்வுலக செல்வங்களைக் கொண்டு ''நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்'' (லூக் 16:9) என இயேசு கூறுகிறார். நேர்மையற்ற விதத்தில் நடந்த வீட்டுப் பொறுப்பாளர் ''முன்மதியோடு'' செயல்பட்டார் என்றால் (காண்க: லூக் 16:8), இவ்வுலக செல்வங்களைப் பயன்படுத்தும் நாமும் முன்மதியோடு செயல்பட வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். செல்வத்தைக் கொண்டு நாம் ''நண்பர்களைத் தேடிக் கொள்ள வேண்டும்''.

-- நாம் தேட வேண்டிய ''நண்பர்கள்'' யார்? மனித மாண்புக்கு ஏற்ற விதத்தில் வாழ இயலாமல் வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு நாம் இவ்வுலக செல்வத்தைக் கொண்டு உதவும்போது ''நண்பர்களைத் தேடிக் கொள்கின்றோம்''. இவ்வாறு நாம் செய்கின்ற உதவி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும். இதையே இயேசு ''நிலையான உறைவிடம்'' என்கிறார் (லூக் 16:9). இவ்வுலக செல்வம் நிலையற்றது; ஆனால் நிலையான செல்வம் ஒன்றுளது. அதுவே கடவுளோடு நாம் நிறைவாழ்வில் பங்கேற்கின்ற பேறு. அத்தகைய பேற்றினை நாம் அடைந்திட வேண்டும் என்றால் இவ்வுலக செல்வத்தை ''முன்மதியோடு'' ஈட்டவும் பயன்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மையான உழைப்பின் வழி ஈட்டப்படுகின்ற செல்வத்தைக் கொண்டு பிறரன்புச் செயல் புரிகின்றவர்கள் ''நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்'' (லூக் 16:9). அதாவது, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்க்கும்'' மனிதர்கள் இவர்களே (லூக் 12:21). இத்தகையோர் உண்மையிலேயே பேறுபெற்றோர்.

மன்றாட்டு
இறைவா, நேர்மையான வழியில் நடந்து உண்மையான செல்வத்தை அடைந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர்
பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்'' (லூக்கா 16:10)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- ''ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பார்கள். சிறிய பொறுப்புகளைக் கவனமாக நிறைவேற்றுபவர் பெரிய பொறுப்பையும் அவ்வாறே நன்முறையில் நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கலாம். மனித வாழ்க்கையில் சிறிதும் பெரிதுமாகப் பல பொறுப்புகள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை நிலைக்கும் பணிக்கும் வளர்ச்சிப்படிக்கும் ஏற்ப வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுவது வழக்கம் என்பதை நாமறிவோம். ஆனால் எந்த நிலையில், பணியில், வளர்ச்சிப்படியில் நாம் இருந்தாலும் சரி, கடவுளால் நமக்குத் தரப்படுகின்ற அடிப்படையான பொறுப்பு ஒன்று உண்டு. அதுவே கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் மொழி. கடவுளுக்கு நாம் ''ஆம்'' எனப் பதில் இறுக்கலாம், அல்லது ''இல்லை'' என்றுகூடப் பதில் இறுக்கலாம். ஏனென்றால் நமக்குக் கடவுள் சுதந்திரத்தைத் தந்துள்ளார். வரம்புகடந்த சுதந்திரம் நமக்குக் கிடையாது; ஆனால், எல்லைகளுக்க உட்பட்ட விதத்தில் நாம் சுய முயற்சியோடு முன்வந்து கடவுளின் திட்டத்தை ஏற்றோ மறுத்தோ பதில் வழங்கும் திறமையைக் கடவுள் நமக்கு அளித்திருக்கின்றார்.

-- சில நாட்களுக்கு முன் (நவம்பர் 4, 2008) அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவான 1776இலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு மோலாக வெள்ளையர் இனமே ஆட்சிநடத்தி வந்த இந்த நாட்டின் தலைவராகக் கறுப்பு இனத்தைச் சார்ந்த பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கறுப்பு இனத்தவர் அடிமைகளாக நடத்தப்பட்டு, பிரித்து வேறுபடுத்தப்பட்டு எத்தனையோ கொடுமைகள் அனுபவித்தது வரலாற்று உண்மை. ஆனால் இன்றைய உலகில் மனித மாண்பு பற்றிய உணர்வு முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்பதற்கு பராக் ஒபாமாவின் வெற்றி ஒரு சான்றாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசுவின் கூற்றை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நமக்குக் கடவுள் தருகின்ற பொறுப்பு யாது? கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதர் யாராக இருந்தாலும் சரி, எந்த குலத்தை அல்லது நாட்டை அல்லது இனத்தைச் சார்ந்தவராயினும் சரி, அவர்கள் அனைவருமே நம் மதிப்புக்கு உரியவர்கள். யாதொரு வேறுபாடும் காட்டாமல் மனிதர் ஒருவர் ஒருவரை மதித்து, அன்புசெய்ய வேண்டும். இப்பொறுப்பைப் பெற்றுள்ள நாம் நம்பத்தகுந்த விதத்தில் நடந்துகொள்ள கடவுள் நம்மை அழைக்கிறார். ''சிறியவற்றிலும்'' ''பெரியவற்றிலும்'' நாம் நம்பத் தகுந்தவராய் செயல்பட வேண்டும் (லூக்கா 16:10).

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைக்கின்ற பொறுப்பை நாங்கள் மனமுவந்து நிறைவேற்றிட அருள்தாரும்.

 

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

_________________________________

அறிவுள்ள செயல்பாடு

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

"நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்" இயேசுவின் இந்த அறிவுரை அதிர்ச்சியை தருகிறதா? உண்மை. ஆனாலும் அவர் சொல்ல வந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நேர்மையற்ற செல்வம் என இயேசு குறிப்பிடுவது இவ்வுலக செல்வங்களையே. இயேசுவின் பார்வையில்,விண்ணகச் செல்வத்தோடு ஒப்பிடும்போது இவை நேர்மையற்ற செல்வம். இருப்பினும் மனித கண்ணோட்டத்தில், நேர்மையான வழிகளில் சம்பாதித்தவை அனைத்தும் நேர்மையான செல்வம்தான். இந்த செல்வத்தைக்கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். விண்ணக செல்வத்தைத் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நேர்மையான செல்வம் என்பது விண்ணகச் செல்வம் ஒனறே. "கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்"; (பிலிப்பியர் 3 :8). "எகிப்தின் செல்வங்களைவிட, "மெசியாவின்" பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம்"(எபிரேயர் 11 :26)

இவ்வுலகில் கடவுள் நமக்குத் தந்த செல்வத்தைப் பயன்படுத்தி எவ்வாறு நண்பர்களை தேடிக்கொள்வது விண்ணக செல்வத்தைச் சேர்த்துக்கொள்வது என்பதற்கான வழிகளை ஆராய்வோம். அதைச் செயல்படுத்துவோம். அப்பொழுது நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நாம் நம்பத்தகுந்தவராய் இருப்போம்.நம்மை நம்பி உண்மைச் செல்வத்தை நம்மிடம் ஒப்படைப்பார்.

--அருட்திரு ஜோசப் லீயோன்