முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6
பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்?
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

லூக்கா 16:19-31

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: ``செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்' என்றார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6
”பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்”

நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வி திருப்பாடல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, இந்த உலகத்திற்கு வாழ்வதற்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும், கடவுளின் அருளையும் பெற்றவர் யார்? என்பது தான், இந்த கேள்விக்கான விளக்கமாக இருக்கிறது. இதற்கு பல வகையான வாழ்க்கைநெறிகளைப் பதிலாக வழங்கினாலும், ஆசிரியர் கொடுக்கிற முதல் பதில், பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்.

யார் பொல்லாதவர்? இந்த உலகத்தில் சுயநலத்தோடு சிந்திக்கிறவர்கள் அனைவருமே பொல்லாதவர்கள் தான். அவர்களின் பார்வை குறுகியதாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள். தங்களது தேவைகள் எப்படியாவது, எந்த வழியிலாவது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். அவர்களது சொல்லை நாம் எப்போதும் கேட்கக்கூடாது என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். ஏன் பொல்லாதவரின் சொல்லைக் கேட்கக்கூடாது? ஏனென்றால், அவர்கள் எப்போதும், பொதுநலனுக்காகச் சிந்திப்பவர்கள் கிடையாது. அவர்களது வழிகள் தீயதாகவே இருக்கிறது. அவர்களது எண்ணங்கள் வறண்டு போன எண்ணங்களாகத்தான் இருக்கிறது. நாம் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டால், நாமும் அவர்களைப் போல சிந்திக்கத் தொடங்கிவிடுவோம். நமது வாழ்க்கையும் அவர்களைப் போல, பயனற்ற வாழ்வாக மாறிவிடும்.

இன்றைய அரசியல் தலைவர்கள், அதிகாரம் செய்கிறவர்கள் அனைவருமே சுயநலத்தோடு சிந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள். அதுதான், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. அவர்களது வழியில் அல்லாமல், கடவுள் வகுத்துத் தந்திருக்கிற வழியில் நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

திருந்துகின்ற காலம்

கடவுள் இரக்கமுள்ளவர். மன்னிப்பு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர். நாம் திருந்துவதற்கான வாய்ப்புக்களை நமக்கு ஏற்படுத்தி தந்து கொண்டே இருக்கக்கூடியவர். ஆனால், அந்த காலங்களை, வாய்ப்புக்களை நாம் விட்டுவிட்ட பிறகு, நமக்கான தீர்ப்பு குறிக்கப்பட்ட பிறகு, கடவுள் நீதியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார் என்பதைத்தான், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது.

ஏழை இலாசர் மற்றும் செல்வந்தன் உவமையில், செல்வந்தன் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, கடவுளை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. கடவுள் மட்டில் அவனுக்கு பயம் இருந்ததாக தெரியவில்லை. செல்வம் தான், தன்னுடைய கடவுள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். மற்ற சிந்தனைகள் அவனுடைய மனதிற்குள்ளாக வரவேயில்லை. இதுதான் நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னுடைய வாழ்வை மாற்றுவதற்காக, அவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை, வசதிகளை அவன் உதறித்தள்ளவிடுகிறான். ஆனால், தீர்ப்பிற்கு பிறகு அவன் மனம் வருந்துகிறான். தான் செய்தது தவறு என்பது, அவனுக்குத் தெரிகிறது. இருந்தாலும், காலம் கடந்துவிட்ட அந்த தருணத்தில், அவன் ஆபிரகாமிடம் மன்றாடுகிறான். ஆனால், கடந்தது முடிவடைந்துவிட்டது. இனிமேல், அவனுக்கு வாழ்வு இல்லை. இழந்தது, எக்காலத்திற்கும் இழந்தது தான்.

நாமும் இந்த செல்வந்தனைப்போல, கடவுள் நமக்குத்தரக்கூடிய பல வாய்ப்புக்களை, வசதிகளை பொருட்டாக மதிக்காமல், உதறிக்கொண்டிருக்கிறோம். திருந்துவதற்கான சந்தர்ப்பங்களை புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

செல்வத்தின் சாபம்

செல்வந்தன், ஏழை இலாசர் உவமையின் தொடக்கத்தில், செல்வந்தன் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை, ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு தெளிவாக விளக்குவதைப் பார்க்கிறோம். அவன் உடுத்தியிருந்த உடைகள் தலைமைக்குரு உடுத்தும் உடைகள். சாதாரண மனிதனின் தினக்கூலியை விட பல மடங்கு அதிக மதிப்பைக் கொண்டது. உண்பது, குடிப்பது – இதுதான் அவனுடை தினசரி வேலையாக இருந்தது. விடுதலைப்பயணம் 20: 9 சொல்கிறது: ”ஆறுநாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்”. ஓய்வுநாளை அனுசரிப்பது மட்டும் புனிதம் அல்ல, மற்றநாட்களில் ஓய்ந்திராமல் வேலை செய்வதும், புனிதமான மதிப்பீடாக கடவுளால் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.

பாலஸ்தீன நாடு மிகவும் செல்வம் கொழிக்கும் நாடல்ல. அங்கே ஏழைகள். வறியவர்கள் ஏராளமானபேர் இருந்தனர். வாரத்தில் ஒருநாள் இறைச்சி உண்டாலே, அது மிகப்பெரிய பாக்கியம். இப்படித்தான் அவர்களின் பொருளாதாரம் இருந்தது. இப்படிப்பட்ட நாட்டில், உழைக்காமல் உணவை வீணடிக்கிற செல்வந்தனின் செயல், கண்டிக்கப்படுகிறது. மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளுக்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது. முட்கரண்டிகளும், கத்தியும் கண்டறியா காலத்தில், செல்வந்தர்கள் ரொட்டியின் மிருதுவான பாகத்தை, தங்களது கைகளைத் துடைக்கப் பயன்படுத்தினர். கைகளைத் துடைத்துவிட்டு, கீழே போடக்கூடிய அந்த ரொட்டித் துண்டுகளைத்தான், இலாசர் சாப்பிட முடிந்தது. இப்படி செல்வத்தை தவறாகப் பயன்படுத்தும், செல்வந்தனை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் அம்பானி. சிலவருடங்களுக்கு முன், தன் குடும்பத்திற்காக மிகப்பெரிய மாளிகையை கட்டி எழுப்பினார். இந்த மாளிகையில் இருக்கும் 600க்கும் மேற்பட்ட அறைகளும், 30 மாடி கட்டிடமும், பார்ப்போரை வியக்க வைக்கிறது. நான்கு பேருக்காக உயர்தர லிப்டுகள், தியேட்டர், பூங்கா, நீச்சல்குளம், நூலகம், குளிரூட்டப்பட்ட அறைகள், வாகன நிறுத்தம். ஏறத்தாழ 317 கோடி செலவில் உருவாக்கப்பட்டது இந்த மாளிகை. ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்கள் இருக்கும் இந்த தேசத்தில், இது பணத்தின் திமிரை வெளிக்காட்டவில்லையா? நாமும் மற்றவர்களுக்கு பயன்படாத பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால், செல்வந்தனைப்போல கண்டிக்கப்பட இருக்கிறோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

உலகம் பற்றிய நமது பார்வை

செல்வரும், இலாசரும் உவமை நமக்கு அருமையான சிந்தனைகளைத் தருகிறது. செல்வரைப்பற்றிய உயர்ந்த பார்வையும், ஏழைகளைப்பற்றிய தாழ்ந்த பார்வையும் இங்கே தவிடுபொடியாகிறது. இங்கு தீர்ப்பிடப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, இந்த சமூகத்தின் மட்டில் நமக்கு அக்கறை வேண்டும் என்கிற எண்ணத்தை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பணக்காரனின் தவறாக இங்கே சித்தரிக்கப்படுவது அக்கறையின்மை. இந்த உலகத்தைப்பற்றிய அக்கறையின்மை. துன்பத்தைப் பார்த்தும், உதவி செய்ய ஆற்றல் இருந்தும் ஒருவிதமான பாராதத்தன்மை, மற்றவர்களின் வறுமையைப்பார்த்தும் உணர்வற்ற தன்மை. இவைதான் செல்வந்தனின் தண்டனைக்குக்காரணம். தன் கண்முன்னே ஒருவன், சாகக்கிடக்கிறான் என்பது தெரிந்தாலும், அதைப்பற்றிய சிறிதும் கவனம் எடுக்காத அவனுடைய உணர்வுகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படக்கூடியவை.

இந்த உலகத்தோடு நாமும் ஒருவகையில் இணைந்தவர்கள் தான். நமக்கும் இந்த உலகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். நாம் விரும்பாவிட்டாலும், அதை நமது வாழ்வில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

முழுமுயற்சியோடு அனைத்தையும் செய்வோம்

லூக்கா நற்செய்தியாளர் பல கருத்துக்களை முதன்மையாகக்கொண்டு தன் நற்செய்தியை எழுதுகிறார். அதிலே வருகிற ஒரு முக்கியமான கருத்து: செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்துதல். செல்வத்தை சரியானமுறையில் பயன்படுத்தாத செல்வந்தர்களின் பின்நிலையை இன்றைய ‘செல்வரும் இலாசரும்’ உவமை வழியாக இயேசு விவரிக்கிறார். இன்றைய நற்செய்தியில் செல்வந்தன் நரகம் செல்கிறான், ஏழை இலாசர் வாழ்வு பெறுகிறார். செல்வந்தன் செய்த தவறு என்ன? செல்வந்தன் இலாசரை தன்னுடைய வீட்டுவாயிலிருந்து விரட்டவில்லை. தன் மேசையிலிருந்து கீழே விழும் துண்டுகளை இலாசர் எடுப்பதை தடைசெய்யவில்லை. அவன் இலாசரைப்பார்த்து எந்த ஒரு தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஆனால் அவன் செய்த தவறு: தேவையிலிருந்த இலாசரை ஏறெடுத்துப்பார்க்கவில்லை என்பதுதான். தன் கண்முன்னே உதவிவேண்டி ஒருவன் காத்திருந்தும் அவனை கண்டுகொள்ளாததுதான் செல்வந்தன் செய்த மிகப்பெரிய தவறு. அதற்காக தன் முடிவில்லாத வாழ்வையே அவன் காவு கொடுக்க வேண்டியிருந்தது.

செல்வம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை என்பது செல்வந்தனுக்கு நிச்சயம் தெரியும். அதேவேளையில் ஏழைகளுக்கு இரங்குகிறவன் இறைவனுக்கே இரங்குகிறான் என்பதும் அவனுக்கு நன்றாகத்தெரியும். விடுதலைப்பயணம் 20: 9 – 10 சொல்கிறது: ‘ஆறுநாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.’ இங்கே செல்வந்தன் இந்த கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் நாற்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். கடவுளை நினைக்கவில்லை. தான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை பொருட்படுத்தவில்லை. அவனுக்கு வாழ்வில் தெரிந்ததெல்லாம், நன்றாக உண்டு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதுதான். வேறு யாரையும் அவன் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. இந்த உலகத்திலே நான் தனி ஆள் அல்ல. மற்றவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன். மற்றவர்களது மகிழ்ச்சியை எனது மகிழ்ச்சியாகவும், மற்றவர்களின் துன்பத்தை எனது துன்பமாகவும் நான் எப்பொழுது பார்க்கிறேனோ, அப்போதுதான் நான் உண்மையான மனிதன். அதை செல்வந்தன் மறந்துவிடுகிறான்.

இந்த உலகம் பரந்துபட்டது. இதில் நான் ஒருவன் மட்டும் நல்லவனாக வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறேன்? என்று நினைத்து, நான் உண்டு, என் வேலை உண்டு என்று இந்த உலகத்தோடு இணையாமல் இருந்தால், அது இந்த வாழ்வுக்கு கொடுக்கும் மதிப்புகிடையாது. இந்த உலகம் வலுப்பெற, சம உரிமை பெற, வாழ்வு பெற என்னால் இயன்றதை நான் செய்துகொண்டே இருக்க வேண்டும். வெற்றியைநோக்கிய பயணமாக அல்லாது, முழுமுயற்சியோடு அனைத்தையும் செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

செல்வரின் பாவம் என்ன?

இலாசரும், செல்வரும் என்னும் இந்த உவமை லூக்கா நற்செய்தியில் மட்டுமே நாம் காணும் ஓர் அழகான உவமை. பல செய்திகளைத் தன்னிலே கொண்டிருக்கும் அருங்கதை.

இந்த உவமையில் வரும் செல்வரின் பாவத்தைப் பற்றி இன்று சிந்திப்போம். இந்த மனிதர் விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார் என்பது மட்டுமே அவரைப் பற்றி இயேசு தருகின்ற குறிப்பு. இன்னொரு மறைமுகமான குறிப்பும் தரப்படுகின்றது. இலாசர் என்னும் ஏழை அச்செல்வருடைய வீட்டு வாயிலருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். அவ்வளவுதான்.

ஆனால், இறந்ததும் அச்செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார் என்கிறார் இயேசு. செல்வர் செய்த பாவம்தான் என்ன? உவமையின் பார்வையில், அவர் வாழ்நாளில் நலன்களையே பெற்றதும், தம் வீட்டு வாயிலில் கிடந்த ஏழை இலாசர் என்னும் மனிதர்மீது எந்த அக்கறையும் காட்டாமல் இன்புற்று வாழ்ந்த தன்னலமும்தான் அவரது பாவங்கள்.

எனவே, நேரடியாக தீய செயல்கள் செய்யாவிட்டாலும்கூட, பகிராமல் வாழ்வதும், பிறர் துன்புறும்போது தான் மட்டும் இன்புற்று வாழ்வதும் இறைவனுக்கெதிரான பாவஙகள் என்பது தெளிவாகிறது.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தன்னலம் என்னும் பாவத்திலிருந்தும், பிறர்மீது அக்கறை கொள்ளாமல் இன்புற்று வாழும் சமூக அக்கறையற்ற தன்மையிலிருந்தும் எங்களை விடுவித்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------------------

இணையதள உறவுகளே

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை பைத்தியக்காரத்தனம் என்று சொல்வோம். வாய்ப்புகள் வரும்போது வகைப்படுத்தாதவன் முட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் இன்னொரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதைவிட கிடைத்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துவது மிகப்பெரிய தண்டனைக்கு நம்மை ஆளாக்கிவிடும். நம்மில் பலருடைய நிலை இதுதான்.

இந்த பணக்காரன் இப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. தவறாகவும் பயன்படுத்தினான். நிறைந்த செல்வம் இருந்தது. ஏழைகளுக்கு உதவும் வாய்ப்பு இருந்தது. போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுங்கள் என்ற போதனை பல விதங்களில் போதிக்கப்பட்டது. கண்டுகொள்ளாமல் இருந்தான். தன்னுடைய சுகமான வாழ்வில் நாட்களை கழித்தான். அவன் செய்யாமல் விட்ட நல்ல செயலுக்காக அவனுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

உங்கள் வருமானத்தில் ஒரு சதவீதம் ஏழை மாணவ மாணவியரின் கல்விக்காக கொடுங்கள். மொத்தமாக சேர்த்து ஒரு நாள் ஒரு மாணவனுக்குக் கொடுங்கள். உங்கள் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத தெய்வீக மகிழ்ச்சி இருக்கும். மறைவாய் செய்த நற்செயலைக் காணும் இறைவன் உங்களுக்கு அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.”(லூக் 6:38)


-ஜோசப் லீயோன்

-------------------------

இதயமற்ற செல்வர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

லூக்க நற்செய்திக்கு மட்டுமே உரிய அருமையான ஓர் உவமை செல்வரும், லாசரும். இந்த உவமையில் இறந்ததும் எரிநரகத்திற்குச் செல்லும் செல்வரின் வாழ்க்கை நிலையைப் பற்றி ஒரே வரியில் சுருங்கக் கூறிவிடுகிறார் ஆண்டவர் இயேசு. “அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்”. ஆம், அந்த செல்வர் செய்த ஒரே தவறு, தனது வீட்டு வாசலில் துன்புற்றுக்கொண்டிருந்த லாசரைப் பற்றிக் கவலைப்படாமல், தான் மட்டும் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்ததுதான்.

உலக இன்பங்களைப் பற்றிய ஆண்டவரின் போதனை தெளிவாக இருக்கிறது. உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற உலக இன்பங்கள் அனைத்தும் நல்லவையே. ஏனென்றால், இறைவனால் படைக்கப்பட்டவை. ஆனால், அந்த இன்பங்களைத் தன்னலத்தோடு அனுபவிப்பது தவறு. அதிலேயே வாழ்வைக் கழிப்பதும் தவறு. உணவுக்காகவே வயிறு. வயிற்றுக்காகவே உணவு என்றிருந்தால், இரண்டையும் ஆண்டவர் அழித்துவிடுவார் (1 கொரி 6:13) என்றார் பவுலடியார். உண்மைதான், இந்த செல்வர் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்ததால், ஆண்டவர் அவரை எரிநரகத்திற்குள்ளாக்கினார்.

மன்றாடுவோம்: நீதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இவ்வுலகில் இன்பம் மட்டுமே அனுபவித்தவருக்கு மறுவுலகில் விண்ணக பேரின்பத்தையும், துன்பங்களை மட்டுமே அனுபவித்தவர்களுக்கு மறுவுலகில் நிறைமகிழ்வு உண்டு என்று போதித்தீரே, உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் அருகில் வாழும் தேவை நிறைந்தோரை அன்பு செய்து வாழ அருள்தாரும்.   உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------

''செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார்'' (லூக்கா 16:19-20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு சொன்ன கதைகள் மக்களை மகிழ்விப்பதற்காக அவர் எடுத்துக்கூறிய புனைவுகள் அல்ல. கதைகள் வழியாக இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றி அறிவித்தார். ''செல்வரும் இலாசரும்'' என்னும் கதை லூக்கா நற்செய்தியில் மட்டுமே வருகிறது. லூக்கா பல இடங்களில் செல்வம் பற்றியும் செல்வத்தால் வருகின்ற கேடுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த உவமையில் வருகின்ற ''செல்வர்'' விலையுயர்ந்த ஆடைகள் அணிந்துகொண்டு, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். ஆனால் அவருடைய வாயில் அருகே விழுந்துகிடந்த ஏழை இலாசரோ பசியால் வாடினார்; அவருடைய உடலை மறைக்கக் கூட உடை இல்லை; மாறாக அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. இலாசர் என்னும் ஏழை தம் வீட்டு வாயில் அருகே கிடந்ததைச் செல்வர் கண்டுகொள்ளவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் அவருடைய நலம் பற்றி இருந்ததே தவிர, அந்த ஏழையைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை; அவருடைய பசியை ஆற்றிட சிறு அப்பத் துண்டு கூடக் கொடுக்கவில்லை.

-- இன்று நம்மிடையே செல்வர்களும் உண்டு இலாசர்களும் உண்டு. அன்றுபோல இன்றும் செல்வக் கொழிப்பில் உழல்வோர் பலர் ஏழைகளிள் நிலைமையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகளாய் இருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவுவோரும் உண்டு. ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' (மத் 25:42) என்னும் சொற்களை நாம் தீர்ப்பு நாளில் கேட்காமலிருக்க வேண்டும் என்றால் இன்றே இப்போதே நம்மைச் சூழ்ந்திருப்போரில், குறிப்பாக ஏழை மக்களில், இயேசுவைக் காண வேண்டும்; அவர்களுடைய பசியை ஆற்றிட முன்வர வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் பாதாளத்தில் செல்வர் அனுபவித்த துன்பம் (லூக் 16:24) நமக்கு வராது என நாம் எப்படிக் கூறமுடியும்? இறையாட்சியில் பங்கேற்க விழைவோர் அன்புக் கட்டளையை ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, இரக்கம் நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நேற்றைய தினம் வலப் பக்கம் அல்லது இடப்பக்கம் அமர, கிண்ணத்தை இயேசுவின் இரத்தத்தால் அல்லது உழைப்பின் வியர்வைத் துளிகளால் நிரப்பி நாமும் குடித்து பிறரும் குடித்து நிறைவடையச் செய்ய வேண்டும் என இயேசு கூறியதைப் படித்தோம்.

இரண்டு மனிதர்களை இன்றைய வாசகத்தில் சந்திக்கிறோம். ஒருவர் தன் கிண்ணத்தை விலையுயர்ந்த தண்ணீரால் நிரப்பியிருக்கிறார். ஒருவேளை விலையுயர்ந்த மதுவினால் நிரப்பியிருப்பார் என தெரிகிறது. ஏனெனில் அவர் பணக்காரர். செல்வர். மற்றவர் பெயர் இலாசர். இவர் வருமையின் மையத்தில் நசுங்கி கசங்கியதால் தன் கிண்ணத்தை கண்ணீராலும் செந்நீராலும் நிரப்பியிருந்தார். தன் துன்பக் கிண்ணத்தைத் தினமும் பருகி, இயேசுவின் பாடுகளின் கிண்ணத்தில் தனக்கென ஒரு பங்கும் வைத்துக்கொண்டார்.

தன் துன்பக்கிண்ணத்தை இயேசுவின் புதிய உடன்படிக்கையின் கிண்ணமாக இந்த ஏழை இலாசர் தினமும் குடித்து வாழ்ந்ததால், வலப் பக்கமோ அல்லது இடப்பக்கமோ அல்ல, மடியில் அமர்த்தி அழகு பார்க்கும் அருமையான ஆசீரை அருள்வதைக் காண்கிறோம். அன்றாடம் நம் கிண்ணங்களை இவ்வாறு நிரப்பி, குடித்து, பகிர்ந்து வாழ்ந்தால், தந்;தை இறைவனின் மடியில் தவழும் குழந்தையாக இருப்போம். இவ்வுலகிலும் அன்பு இயேசுவின் அருள் பெற்ற மக்களாக வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்