முதல் வாசகம்

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள். அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார். அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம். இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 19: 1-2. 3-4
பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தும்.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

லூக்கா 17:26-37

ஆண்டின் பொதுக்காலம் 32 வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள் வாங்கினார்கள், விற்றார்கள் நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். அவர்கள் இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, இது எங்கே நிகழும்? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும் என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4
”வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்தும்”

மனிதர்களுக்காக கடவுள் தரும் செய்தி என்ன? கடவுள் மனிதர்களை எதற்காகப் படைத்தார்? கடவுள் மனிதர்களை தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னை மாட்சிமைப்படுத்தி கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளோடு இருக்கிற தொடர்பை இழந்துவிட்டான். பாவத்திற்கு ஆளாகிவிடுகிறான். கடவுள் மனிதனை கைவிட்டுவிடவில்லை. அவனை மீட்பதற்காக தன்னுடைய ஒரே மகனையே கையளிக்கிறார்.

இயேசு இந்த உலகத்தில் மனிதராக பிறந்து, தன்னையே பலியாக்கி விண்ணகம் செல்கிறபோது, ”படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். படைப்பிற்கு நற்செய்தி அறிவிப்பதை அவர் இலக்காக மானிட சமுதாயத்திற்கு தருகிறார். ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடமையாக இருக்கிறது. இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியும் இதுதான். படைப்பு அனைத்துமே கடவுளின் மாட்சிமையை தங்களது பிரசன்னத்தின் மூலமாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ”ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கிறது. அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” என்கிற வார்த்தைகள், இந்த செய்தியை வலுப்படுத்துகின்றன.

நம்முடைய வாழ்க்கை நற்செய்தி அறிவிப்பு பொறுப்பை தாங்கியிருக்கிற வாழ்வாக அமைய வேண்டும். நம்மை படைத்த இறைவனை போற்றிப்புகழ்கிற வாழ்வாக அமைய வேண்டும். அதைத்தான் படைப்புக்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்து இன்றளவும் செய்து வருகின்றன. நாமும் இயற்கையை வழிகாட்டியாகக் கொண்டு நம்முடைய வாழ்வை மாற்றியமைப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-

------------------------------------------------

கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை

”தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதனை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதனை காத்துக் கொள்வர்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும்? என்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கிறது. சாவைப்பற்றிய பயமும் அனைவருக்கும் இருப்பது இயல்பே. ஆனாலும், இந்த பயத்திற்கு நடுவில் நீதிக்காக, நேர்மைக்காக தங்களது உயிர் எந்த நேரமும் போகலாம் என்ற பயம் இருந்தாலும், தொடர்ந்து அதே உறுதியோடு இருப்பவர்களைத்தான் இயேசு தம் உயிரை இழப்பவர்களாக சொல்கிறார். அவர்கள் நிச்சயம் விண்ணகத்தின் வாயிலை அடைந்துவிடுவார்கள். தங்கள் நிலையான வாழ்வைக் காத்துக்கொள்வார்கள்.

இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். இயேசு நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுத்தார். அதன்பொருட்டு அவருடைய உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் நிலை இருந்தது. அதற்கான பயமும், கெத்சமெனி தோட்டத்தில் எழுகிறது. ஆனாலும், தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அது தான் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது. இந்த உலகத்தில் உயிரைக்காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள், எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக பல தீய செயல்களைச் செய்து, பணத்தை தவறான வழிகளில் சம்பாதித்து, தாங்கள் வாழுகிறவரை செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் தங்களது நிலையான வாழ்வை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

மேற்கண்ட இரண்டுவிதமான வாழ்வில் நாம் எந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையை மாற்றப்போகிறோமா? அல்லது தொடர்ந்து அதே வாழ்வை நியாயப்படுத்தப் போகிறோமா? சிந்திப்போம். கடவுளுக்கு ஏற்ற வாழ்வை வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசு தரும் எச்சரிக்கை

இயேசுவின் இரண்டாம் வருகைக்காக பலபேர் நிச்சயம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவரது இரண்டாம் வருகையில் தான், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் அநியாயத்திற்கு, செய்யாத தவறுக்கு, பலபேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக தங்களது வாழ்வையே இழந்திருக்கிறார்கள். ஆற்றோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சாதாரண மீன்களைப் போல அல்லாமல், நீரோட்டத்தை எதிர்த்து நிற்கும் மீன்கள் போல, அநீதிகளுக்குச் சவால் விடுத்து, தங்கள் வாழ்வையே துறந்திருக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் நம்பிக்கை, இறைவன் முன்னால், தங்களுக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்பதுதான்.

திருவெளிப்பாடு 6: 10 ல் பார்க்கிறோம்: ”தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கிறிஸ்துவி்ன் பொருட்டு, கிறிஸ்துவுக்காக இறந்தவர்கள் கேட்பதை, அங்கே நாம் வாசிக்கிறோம். இவ்வளவுக்கு பலபேர் ஆவலோடு எதிர்பார்க்கிற, இரண்டாம் வருகை எப்போது, நடக்கும்? இரண்டாம் வருகை நிச்சயம் இருக்கும். ஆனால், அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது? அதை தேவையில்லாமல், இன்று நடக்குமா? நாளை நடக்குமா? என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதும் வீணாகத்தான் இருக்கும், என்பது இயேவின் போதனையின் மையப்பகுதி.

இயேசு நமக்குச் சொல்ல வருகிற செய்தி, தவறான செய்திகளைக் கேட்டு நாம் ஒருபோதும் ஏமாந்து போகக்கூடாது. இயேசுவின் பெயரைச் சொல்லி, அதன் மூலமாக இலாபம் சம்பாதிக்க வேண்டும், என்று நடமாடு போலிப்போதகர்கள் நடுவில், நாம் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும், என்பதை நமது வாழ்விற்கான செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

நமது வாழ்வு, நமது மீட்பு

இயேசுவின் இரண்டாம் வருகையின்போது நடைபெறும் இறுதித்தீர்வையைப்பற்றிய செய்தி இன்றைய நற்செய்தி மூலமாக நமக்குத் தரப்படுகிறது. இறுதித்தீர்ப்பின்போது, நாம் அனைவரும் கடவுள் முன் நிற்க வேண்டும். தீர்ப்பு ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட முறையில் நடக்கும். நல்லவர்களோடு இருந்தால் மட்டும் போதாது, நல்லவராக வாழ்ந்திருக்க வேண்டும். நல்லவருடனான நமது நட்பு, நம்மை வெறுமனே காப்பாற்றிவிடாது. நல்லவருடனான நமது நட்பு, நம்மை நன்னை செய்யத்தூண்டவில்லை என்றால், அவருடனான நமது நட்பு, நமது மீட்புக்கு எந்தவிதத்திலும் பயன்படாது. அவரோடு நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்து, நம்மையே நல்ல வாழ்வு வாழ பணிக்க வேண்டும்.

இன்றைக்கு சமூகத்திலே எவ்வளவோ அநீதிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து ஒருசாரார் போராடிக்கொண்டிருக்கின்றனர். அதற்காக எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் துணையாக இருப்பதும் நமது கடமைதான். இந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தெரிந்திருந்தும் அதைக்கண்டும், காணாமல் செல்வது பயன்தரக்கூடியது அல்ல. நம்மால் அந்த அநீதியை அகற்ற எந்த வழியில் எல்லாம் முயற்சி எடுக்க முடியுமோ, அந்த வகையிலெல்லாம் நாம் முயல வேண்டும். வெறுமனே பார்வையாளராக மட்டும் இருந்துவிட்டு, மனதில் தவறு எனத்தெரிந்தும், வேடிக்கைப்பார்ப்பது, நமது மீட்புக்கு வழிகாட்டாது. எவ்வாறு நல்லவரோடுடனான வெறும் நட்பு மட்டும் நம்மைக்காப்பாற்றாதோ, அதேபோல, தவறு எனத்தெரிந்தும், கைகளைக்கட்டிக்கொண்டிருப்பது, எந்த நன்மையையும் தராது.

கடவுள் கொடுத்த வாழ்க்கை எனக்கானது. அந்த வாழ்விற்கு பதில் சொல்லும் பொறுப்பும் என்னைச்சார்ந்தது. கடவுள் முன் நிற்கக்கூடிய துணிவாவது நமக்கு வேண்டும். மற்றவர்களோடு இணைந்து, கூட்டத்தோடு கூட்டமாகச்செல்லக்கூடியது அல்ல நமது வாழ்வு. நிறைவோடு வாழ்வதுதான் வாழ்வு. அப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்டார்கள், குடித்தார்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் இயேசு, வரலாற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் இறையச்சம் இன்றி உண்டும், குடித்தும் வந்தார்கள். லோத்தின் காலத்திலும் இறைவனின் கட்டளைகளை மக்கள் மறந்தார்கள். உண்டார்கள், குடித்தார்கள். வாங்கினார்கள், விற்றார்கள். நட்டார்கள், கட்டினார்கள். அதாவது, இந்த உலகின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருந்தார்கள், ஆனால், விண்ணக வாழ்வுக்குரிய செயல்பாடுகளை மறந்தார்கள் அல்லது புறக்கணித்தார்கள். எனவே, அழிந்தார்கள். எனவே, எச்சரி;க்கையாயிருங்கள் என்கிறார் இயேசு.

இந்த 21ஆம் நூற்றாண்டில் பழைய காலத் தவறுகளையே நாம் மீண்டும் செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது காலத்திலும் மக்கள் அலுவலகம் செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும், கடன் வாங்கி வீடு கட்டுவதிலும், வணிகம் செய்வதிலும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கும் நேரமும், அக்கறையும் இறைவனுக்குரிய , இறையாட்சிக்குரியவற்றில் செலவழிப்பதில்லை. எனவே, நோவாவின் காலத்தில் நடைபெற்றது போல, லோத்தின் காலத்தில் நடைபெற்றது போல, அழிவுக்குரிய செயல்கள் நமக்கும் நடக்கின்றன. புதிது புதிதாகத் தோன்றுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள், உலகம் சூடாதல் போன்ற சுற்றுச்சூழல் சிக்கல்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற தீமைகள் அனைத்தும் நம்மைச் சூழ்கின்றன. எனவே, தன்னலம் மிக்க செயல்களில் மட்டுமே ஈடுபடாது, உலகம் உய்வதற்கான செயல்பாடுகளிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

மன்றாடுவோம்: நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். கடந்த காலத் தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவும், இறையச்சம் மிக்கவர்களாக, பிறர் நலப் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------------

''அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக்
கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வர வேண்டாம்'' (லூக்கா 17:31)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசுவின் போதனைகள் மனிதரை நல்வழியில் இட்டுச் செல்வதற்காக அளிக்கப்பட்டன. நன்னெறியைக் கடைப்பிடித்து வாழ்வோர் இவ்வுலகில் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். அதே சமயத்தில் விண்ணகத்தில் நிலையான வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள். மண்ணக வாழ்வுக்கும் விண்ணக வாழ்வுக்கும் இடையே என்ன தொடர்பு என்னும் கேள்விக்கும் இயேசு பதில் தருகிறார். நாம் வாழ்கின்ற உலகில் கடவுளின் ஆட்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால் அது நிறைவடையும் காலம் ஒரு நாள் வரும். அந்த நிறைவுக் காலத்தை நாம் இருவிதங்களில் பார்க்கலாம். நம் ஒவ்வொருவரின் மண்ணக வாழ்வு சாவின் காரணமாக முடிவுக்கு வரும்போது ஒருவிதத்தில் நம் நிறைவுக்காலம் வந்துவிட்டது எனலாம். அதுபோல, மனித குலத்தின் வரலாறு முடிவடைந்து, உலகம் அனைத்துமே ஒரு நாள் கடவுளின் திட்டத்திற்கேற்ப நிறைவுக்கு வரும் என்பது மற்றொரு கூறு. இந்த உலக முடிவு எப்போது வரும் என்பது பற்றி இயேசு பதில் கூற மறுத்துவிட்டார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒருசில விளக்கங்களை இயேசு தந்துள்ளார். அதாவது, உலக முடிவும் இறையாட்சியின் நிறைவும் மானிடமகனின் வருகையும் நாம் எதிர்பாராத நேரத்தில், முன்னறிவிப்பின்றியே வந்துவிடும். உலகம் அனைத்தையும் கடவுள் தீர்ப்பிடுவார்.

-- ஆனால் கடவுள் வழங்குகின்ற தீர்ப்பு நம்மை அச்சத்தில் ஆழ்த்த வேண்டியதில்லை. ஏனென்றால் கடவுள் எல்லையற்ற இரக்கமும் அன்பும் கொண்டவர். அவர் தம் மக்களை அடக்கி ஒடுக்குகின்ற சர்வாதிகாரி அல்ல. மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவே, இறுதிக் காலம் பற்றி நாம் பயந்து நடுங்காமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கப்படுகிறோம். அப்போது எல்லாமே அழிந்து போகிறதே என நாம் அவதிப்பட்டு ஒரு சில பொருள்களையாவது காப்பாற்றிவிடலாமே என அங்கலாய்க்க வேண்டியதில்லை. வயலில் வேலைசெய்துகொண்டிருக்கும் வேளையில் இறுதிக் காலம் வருவதாக உணர்ந்ததும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பொருள்களை மீட்டுவிடலாமே என எண்ணவும் வேண்டியதில்லை. ஏனென்றால் நம் உயிரைக் காத்துக்கொள்வதற்காக நாம் ஓடிப் போக வேண்டியதில்லை (காண்க: லூக் 17:31). மண்ணக வாழ்வு எப்போதாவது முடிவுக்கு வரும். ஆனால் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்கின்ற மனிதர்கள் இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நிலையான விண்ணக வாழ்வில் பங்கேற்பார்கள். அங்கே சென்று சேர்ந்திட நமக்கு வழியாக இருப்பவர் இயேசு கிறிஸ்து. அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

மன்றாட்டு
இறைவா, உம்மை நம்பி வாழ்வோர் ஒருநாளும் அழிவதில்லை என உணர்ந்து நாங்கள் செயல்பட அருள்தாரும்.

 

 

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்;
தம் உயிரை இழப்பவரோ அதைத் காத்துக்கொள்வர்'' (லூக்கா 17:33)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு தாம் அறிவித்த இறையாட்சியின் பொருட்டு சீடர்கள் தம் உயிரையும் இழக்கத் தயங்கலாகாது என்று போதித்தார். ஒன்றை நாம் அடைய விரும்பும்போது இன்னொன்றை இழக்க நேரிடுகிறது. வளரும் பருவத்தில் ஒரு சிறுகுழந்தை தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிச் செல்ல தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், முழு மனிதராக வளர வேண்டும் என்றால் குழந்தைப் பருவ நிலையிலேயே தேங்கிப் போய்விடலாகாது. அடுத்த பருவ வளர்ச்சியும் அப்படியே. இளமைப் பருவத்தைத் தாண்டி முதிர் பருவத்தை அடைய வேண்டும் என்றால் முன்னைய பருவத்தை இழக்க வேண்டும். ஆக, புதிய ஒரு நிலையை அடைய அரும்புவோர் பழைய நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். இது இயற்கை நியதி.

-- மனிதர் தம் உயிரின்மீது பற்றுக் கொண்டிருப்பது தவறு அல்ல. கடவுள் படைத்த படைப்புகள் அனைத்துமே கடவுள் தங்களுக்கு அளித்துள்ள கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். மனித உயிர் என்பது கடவுள் நமக்கு வழங்குகின்ற அடிப்படையான கொடை. உயிர் இருந்தால்தான் இவ்வுலகில் நாம் நம்மைக் கவனித்துப் பேணி, நலமான வாழ்வு வாழ இயலும். ஆகவே தம் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் விருப்பம் எல்லா மனிதருக்கும் உண்டு.உலக சமயங்களும் இவ்வாறே மனித வாழ்க்கையின் நிலையாத் தன்மை பற்றிச் சிந்தித்துள்ளன. நம் உயிர் நமக்குக் கடவுள் தந்த ஒப்புயர்வற்ற, அடிப்படையான கொடை. ஆனால் ஒரு நாள் நம் உயிர் நம்மைவிட்டுப் பிரிந்துபோகும். இது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. இருந்தாலும், பிறப்பு ஒரு மறைபொருள் என்றால் இறப்பு அதைவிடவும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இயேசு நம் உயிரின் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துகிறார். உலக வாழ்க்கை மனிதருக்கு அறுதியான வாழ்க்கையல்ல, மாறாக, இவ்வுலக வாழ்க்கையைத் தாண்டி நிலைகொள்கின்ற அழியா வாழ்வு ஒன்று உள்ளது. இவ்வுண்மையை நாம் உணர்ந்தால் மனித உயிரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கவலை நம்மை ஆட்டிப்படைக்க இயலாது. மாறாக, நாம் கொடையாகப் பெற்றுக்கொண்ட உயிர் என்னும் கருவூலத்தைக் கடவுளுக்கே காணிக்கையாக்கிட நாம் அழைக்கப்படுகிறோம். இக்காணிக்கையின் பொருள் என்ன? சிலர் தம் வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வர்; வேறு சிலர் தம் சாவால் கிறிஸ்துவை அறிவிப்பார்கள். எவ்வாறு சான்றுபகர்ந்தாலும் சரி, நம் வாழ்க்கையின் முதன்மைகள் முறையாக இருக்கவேண்டும். கடவுளுக்கு முதலிடம் அளித்தால் நம் உயிர் கடவுளிடமிருந்து வந்து, கடவுளில் நிலைகொண்டு, கடவுளை நோக்கியே சென்றிட படைக்கப்பட்டது என நாம் உணர்ந்துகொள்வோம். அப்போது கடவுளுக்காக நம் உயிரை இழப்பது அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்குச் சமமாகும்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

---------------------------

எப்போதும் இறைவனோடு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கை உண்பதும் குடிப்பதும் பெண் கொள்வதும் கொடுப்பதும் அல்ல. நோவாவின் காலத்தில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து அனைவரையும் அழித்தபோது இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். (தொ.நூ 6'5-8) உடலின்பம் ஒன்றே வாழ்வின் இலக்காக இருந்ததால், பாவம் பெருகியது. ஆன்மீகம் மங்கியது. சோதோம் கொமோரா நெருப்பு தீயால் எரிந்து அழிய காரணமும் பாவமே. (தொ.நூ 17'20)

பாவத்திற்கு தண்டனை உண்டு என்பதி;ல் மாற்றுக் கருத்து இல்லை. பாவத்துக்கு தண்டனை உடனுக்குடனும் உண்டு, உலக முடிவில் மானிட மகன் அரசுரிமையோடு நடுவராக வரும்போதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. "மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்"(லூக் 17'30)

தண்டனையிலிருந்து தப்பும் பொருட்டு அங்கும் இங்கும் ஓட வேண்டாம். உயிரைக் காத்துக்கொள்ள அலைய வேண்டாம். வாழும்போது அன்றாடம் ஆன்மாவைக் காத்துக்கொள்ளும்படி வாழ்ந்து வாருங்கள். தினமும் பாவத்தை தவிர்த்து, இறை உறவில் வாழ்வை அமைத்துக் கொள்வோம். இறுதி தீர்;ப்பு நாளில் தண்டனைக்குப் பயப்படத் தேவையில்லை.

பாவம் செய்யும்போது ஆன்ம உயிர் செத்துவிடுகிறது. நடை பிணமாக அத்தகையோர் அலைவர். அவர்களைச் சுற்றி; கழுகுகள் வட்டமிடுவதால்,வாழ்வு இருண்டதாகவே இருக்கும். தண்டனையிலிருந்து தப்பிட, வாழும்போது பாவத்தை தவிர்த்து வாழ்வோம்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்