முதல் வாசகம்

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது. உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 105: 2-3. 36-37. 42-43
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! -பல்லவி

36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்;
அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.
37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்;
அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. -பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த
தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;
அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

 

லூக்கா 18:1-8

ஆண்டின் பொதுக்காலம் 29 ஞாயிறு

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின் ஆண்டவர் அவர்களிடம், நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 105: 2 – 3, 36 – 37, 42 – 43
”ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக”

இந்த பாடல் எகிப்தில் இறைவன் செய்த ஆச்சரியங்களை மீண்டும் நினைவுபடுத்துகிற பாடல். எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்கள் பட்ட துன்பங்கள் மக்களின் அழுகுரல் வழியாக கடவுளைச் சென்று அடைந்தது. மக்கள் கடவுளைத் தேடினார்கள். தங்களை அவருடைய சொந்த இனமாக தேர்ந்து கொண்ட கடவுள் எங்கே? என்று தேட ஆரம்பித்தார்கள். அவர்களின் தேடல் கடவுளை, அவருடைய வல்லமையை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் கடவுளின் வல்லமையை உணர ஆரம்பித்தார்கள்.

கடவுளை நாம் தேடுகிறபோது, நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியடைகிறவிதத்தில் கடவுள் செயல்படுகிறார். மீட்பின் வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, யாரெல்லாம் துன்பங்களில் கடவுளின் துணையை நாடினார்களோ, அவர்கள் அனைவருமே கடவுளின் அளப்பரிய வல்லமையைப் பெற்று மகிழ்ச்சியடைந்தார்கள். பாவங்களைச் செய்தபோது அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளைத் தேடியபோது, அதற்கான பலனையும் மகிழ்ச்சியாக அவர்கள் அனுபவித்தார்கள்.

நம்முடைய வாழ்விலும் நாம் கடவுளை எப்போதும் தேடுகிறவர்களாக வாழ்வோம். கடவுள் நமக்கு உடனிருந்து நம்மை வழிநடத்துவார். நமக்குள்ளிருந்து செயலாற்றுவார். கடவுளை நாம் முழுமையாகப் பற்றிக்கொண்டு, அவர் நமக்கு காட்டுகிற பாதையில் பயணிப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன?

தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குள் செல்லாமல், நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் சிரத்தை எடுப்போம். நமது வாழ்க்கையை கடவுளுக்கு பயந்து நடக்கக்கூடிய வாழ்க்கையாக மாற்றியமைப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

தளராத இறைநம்பிக்கை

இந்த உலகத்தில் நமக்கு பல தேவைகள் இருக்கிறது. எல்லா தேவைகளையும நாமே நிறைவேற்றிவிட முடியுமா? நம்மால் முடியாதது இருக்கிறதா? என்றால், இருக்கிறது. நமக்கென்று பல தேவைகள் இருந்தாலும், அவையனைத்தையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மை கடந்த ஒரு ஆற்றல் நமக்கு தேவைப்படுகிறது. அதுதான் கடவுள் சக்தி. அந்த கடவுளிடம் நம் தேவைகளை எடுத்துரைக்கிறபோது, அவர் நமது தேவையை நிறைவேற்றித் தருகிறவராக இருக்கிறார்.

இந்த உலகத்தில் நமது தேவையை நிறைவேற்றுகிறவர்கள் நமது தந்தையும், தாயும். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதையே, தங்களது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்கிறவர்கள் நமது பெற்றோர். அதைப்போலத்தான் கடவுள் நம் தந்தையாக, தாயாக இருந்து நமது தேவைகளை உடனிருந்து நிறைவேற்றித்தருகிறார். நமது பெற்றோர் நமக்கு தேவையானதை, நாம் கேட்பதற்கு முன்னமே நிறைவேற்றித்தருகிறார்கள். அதுபோல கடவுளும் நமது தேவைகளை அறிந்து, நமக்கு நிறைவேற்றித்தரக்கூடியவராக இருக்கிறார்.

எப்படி நம்முடைய பெற்றோர் நமக்கு தேவையான காரியங்களை நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறோமோ, அதேபோல கடவுளும் நம் தேவைகளை நிறைவேற்றுவார் என்று, நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை தளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்கான வரத்தை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

ஏழைகளின் கடவுள்

இன்றைய நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் மற்றும் கைம்பெண் பற்றிய உவமை தரப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் நேர்மையற்ற நடுவர் கடவுளுக்கு ஒப்பிடப்படவில்லை. நேர்மையற்ற நடுவரை, நிச்சயம் நம்மால் கடவுளுக்கு ஒப்பிட முடியாது. அவரது இரக்கத்திற்கு முன்னால், இந்த நேர்மையற்ற நடுவரின் செயல், ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அவருக்கு எதிராக, கடவுள் ஒப்பிடப்படுகிறார். நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், கடவுள் எப்படி இருப்பார்? என்று, எதிர்மறையான விதத்தில், நற்செய்தி சொல்லப்படுகிறது.

இந்த நற்செய்தியில் நாம் காண்கிற மற்றொரு செய்தி: ஏழைகள்பால் கடவுள் கொண்டிருக்கிற அன்பு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் பெண், கணவனை இழந்த பெண். அவளுக்கு ஒரு பிரச்சனை. அவளுக்கு ஒரு எதிரி. அவளுக்கு ஒரு அநீதி நடந்து விட்டது. அவளுக்கு அநீதி செய்தவன், இவள் சார்பாக யார் வர முடியும்? என்ற மமதையோடு, நடந்திருக்கிறான். அந்த பெண், நடுவரிடம் நிச்சயம் செல்வாள் என்பது, அவளது எதிர்க்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும், பணத்தைக்கொண்டு எதையும், சாதிக்கலாம் என்று, அவளுடைய எதிரி நினைத்திருந்தான். ஆனால், அவன் ஒன்றை மறந்து விட்டான். எளியவர்கள் சார்பாக, கடவுள் எப்போதும் இருப்பார், என்கிற செய்தியை அவன் முற்றிலும் புறக்கணித்துவிட்டான்.

நமது கடவுள் எளியவர்களின் கடவுள். ஏழைகளின் கடவுள். துன்பப்படுகிற மக்களின் சார்பாக இருந்து பேசுகிற கடவுள். ஏழைகளுக்காக இரங்குகிற கடவுள். ஏழைகளாக இருக்கக்கூடிய மக்கள், நமக்காக யார் இருக்கிறார்கள்? நம் சார்பாக யார் வாதாடுவார்கள்? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், கடவுள் அவர்களுக்காக இருக்கிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இன்றைய நற்செய்தியில் வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும்.

இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது சார்பில் அவர் என்றும் இருப்பார். நம்மை வழிநடத்துவார். நம்மோடு எந்நாளும் அவர் பயணிப்பார்.

கடவுளிடத்தில் செபிக்கின்றபோது, எப்போதும் நாம் மனம் உடைந்துவிடக்கூடாது. நாம் கேட்பது கிடைக்கவேண்டிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். செபத்திலே நாம் நினைத்தது கேட்கப்படவில்லை என்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. உறுதியாக, நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு கேட்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனந் தளராமல் செபிப்போம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை இன்று வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாடுவோம்: புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

 

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு, 'மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்றார் (லூக்கா 18:8)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு நாம் வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனையில் மிக மையமான கருத்து. இங்கே நம்பிக்;கை எனப்படுவது பழைய மொழிபெயர்ப்பியல் ''விசுவாசம்'' என அமைந்திருந்தது. இதையே பற்று, பற்றுறுதி எனவும் நாம் கூறலாம். கடவுளையே பற்றிக் கொள்வோர் வேறு பற்றுக்களால் பிணைக்கப்பட மாட்டார்கள். பிற பற்றுக்களிலிருந்து நாம் விடுதலை பெறுகின்ற வேளையில்தான் கடவுளிடத்தில் நாம் கொள்கின்ற நம்பிக்கை என்னும் பற்று பொருளுள்ளதாக மாறும். எனவே, இயேசு மண்ணுலகில் நம்பிக்கை எவ்வளவு நாள் தொடர்ந்து இருக்குமோ எனக் கேட்கின்ற கேள்வி நம் உள்ளத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு கூறிய உவமையில் வருகின்ற ''நேர்மையற்ற நடுவர்'' மற்றும் அவரை அணுகிச் சென்று நீதிகேட்ட ''கைம்பெண்'' ஆகியோரை (காண்க: லூக் 18:1-8) நாம் உருவகமாகப் பார்க்கலாம். அதாவது, அந்த நடுவர் அநீதியான ஓர் அமைப்பைக் காட்டிக் காத்தவர் எனலாம். நீதி வழங்கும் பொறுப்பை முறையாகச் செய்ய அவர் தவறிவிட்டார். அதிலும் குறிப்பாக, ஒரு கைம்பெண் தன்னைப் பல முறை அணுகி வேண்டிய பிறகும் அந்த நடுவர் நீதி வழங்க முன்வரவில்லை. இங்கே அநீதியான அமைப்பை எதிர்க்கின்ற பெண்ணாக அந்தக் கைம்பெண்ணை நாம் பார்க்கலாம்.

-- நீதி தேடி அலைந்து ஓயாமால் செயல்பட்ட அக்கைம்பெண் சமுதாய அமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார். நேர்மையற்ற அதிகாரியை மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்து அவருக்குத் ''தொல்லை கொடுக்கிறார்''. ஏன், அந்த நடுவரின் ''உயிரை வாங்கிக் கொண்டேயிருக்கும்'' அளவுக்கு அப்பெண் தொல்லை கொடுக்கிறார் (லூக் 18:5). கிரேக்க மூலத்தில் ''என்னை சித்திரவதை செய்கிறார்'' என்னும் பொருள்படும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்றாற்போல, அக்கைம்பெண் விடாமுயற்சியோடு செயல்படுகிறார். அநீதிகள் நிலவும் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் அது ஒருநாள் இருநாள் முயற்சியால் கைகூடும் இல்லை. பல மனிதரின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெறுகின்ற செயல்பாடு விடாமுயற்சியோடு நிகழும்போதுதான் வேரோட்டமான மாற்றங்கள் ஏற்படும். மேலும், அக்கைம்பெண் ''நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்'' (லூக் 18:1) என்பதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளார். இறைவேண்டல் வழியாக நாம் நம்மை அன்புசெய்யும் கடவுளோடு நெருங்கி உறவாடலாம். அவருடைய ஆற்றலால் நம் வாழ்வில் புதிய திருப்பங்கள் நிகழும். நாம் கடவுளிடம் நிறைவான பற்றுக் கொண்டிருப்பதே இதற்கு உறுதியான அடிப்படை.

மன்றாட்டு
இறைவா, நேர்மையோடு நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால்
நான் இவருக்கு நீதி வழங்குவேன்'' (லூக்கா 18:5)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இறைவேண்டலின் தேவை பற்றி இயேசு கூறிய உவமைகளில் ஒன்று ''நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்'' பற்றியதாகும் (காண்க: லூக்கா 18:1-8). லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமையில் வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நடுவரிடம் மீண்டும் மீண்டும் செல்கிறார். நடுவரோ அக்கைம்பெண்ணைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கைம்பெண்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இருக்கவில்லை. கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் நடக்கின்ற நடுவர் அக்கைம்பெண்ணின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றார். ஆனால் அப்பெண் எளிதில் விடுவதாக இல்லை. நடுவரை அணுகிச் சென்று எப்படியாவது தனக்கு நீதி வழங்கவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறார். தொல்லை பொறுக்கமுடியாமல், இறுதியில் நடுவரின் மனமும் இளகுகிறது. அப்பெண் கேட்டவாறே அவருக்கு நீதி வழங்குகிறார் நடுவர்.

-- இயேசு இந்த உவமையைக் கூறிய பிறகு, கடவுளை நோக்கி நாம் வேண்டுவது எத்துணை இன்றியமையாதது என விளக்குகிறார். மீண்டும் மீண்டும் கடவுளை நாம் அணுகிச் செல்லும்போது கடவுள் நமக்குத் ''துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார்'' (காண்க: லூக்கா 18:7). இவ்வுளவு உறுதியான உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகுகிறோமா? சில வேளைகளில் நம் உள்ளத்தில் உறுதி இருப்பதில்லை. கடவுள் நம் மன்றாட்டைக் கேட்பாரோ மாட்டாரோ என்னும் ஐயமும் நம் உள்ளத்தில் எங்காவது எழும். அல்லது நம் மன்றாட்டு முறையானதாக இல்லாததால்தான் கடவுள் நாம் கேட்பதை நமக்குத் தரவில்லை என நாம் தவறாக முடிவுசெய்திடக் கூடும். ஆழ்ந்த நம்பிக்கையோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் இயேசு வலியுறுத்துகிறார். நாம் கேட்டது கிடைக்காவிட்டாலும் கடவுளிடம் நமக்குள்ள நம்பிக்கை ஆழப்படுவதே நம் வேண்டுதலுக்குக் கிடைக்கின்ற பெரிய பயனாகும் எனலாம். ஆகவேதான் இயேசு மனிதரிடம் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்குமா என்றொரு கேள்வியோடு இந்த உவமையை முடிக்கின்றார் (லூக்கா 18:8). நாம் கடவுளிடத்தில் கொள்கின்ற நம்பிக்கை ஒருநாளும் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவேண்டலின் இறுதிப் பொருள்.

மன்றாட்டு
இறைவா, நம்பிக்கையோடு உம்மை அணுகிவந்து, உம் திருவுளத்திற்கு ஏற்ப வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

------------------------

நீ தேர்ந்துகொள்ளப்பட்டவன்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" (லூக் 18'7)

விவிலியத்தை வாசிக்கும்போது நம் இறைவன் தேர்ந்துகொண்டவர்கள் யார் யார் என்பதை தெறிய வருகிறோம். ஏழைகள், சிறியோர், பின் தங்கியோர், யாருமற்றோர்,வஞ்சிக்கப்பட்டோர், பாவிகள், கடவுளைச் சார்ந்திருப்போர் இவர்கள் இறைவன் தேர்ந்துகொண்டோர் ஆவர்.

இவர்கள் தங்கள் இறைவனை நோக்கிக் குரல் எழுப்பும்போதெல்லாம் அந்த இறைவன் அவர்கள் குரலுக்கு குரல் கொடுப்பார்,நீதி வழங்குவார்,துணை செய்வார்.

"நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது"(தொ.நூ 4'10) ஆபேலின் சிந்திய இரத்தத்தின் கூக்குரலுக்கு அவரின் பதில்.

"எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்".(வி.ப 3'7) இஸ்ராயேல் மக்களின் கூக்குரலுக்கு இறைவனின் பதில்.

"நீ கூக்குரல் இடுவாய்; அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார்" ( ஏசா 58'9)

நீ செபிக்கும்போது செவி சாய்க்காமல் பாராமுகமாய் இருப்பவர் அல்ல. கடவுளுக்கும் மனிதனுக்கும் பயப்படாத மனிதனே நீதி வழங்கும்போது, காருண்ய தேவன் கருணை காட்டாதிருப்பாரோ!

--அருட்திரு ஜோசப் லியோன்