முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

``வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்'' என்கிறார்கள். எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 16-17. 18-19

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி

18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19 அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
`உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்,' என்கிறார் ஆண்டவர்.

லூக்கா 18:09-14

தவக்காலம் -மூன்றாம் வாரம் சனி


நற்செய்தி வாசகம்
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.'' இயேசு, ``பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 18: 9 – 14
தாழ்ச்சி மாத்திரை

தாழ்ச்சி தாரகை சூடக்கூடிய அளவிற்கு ஒருவனுடைய வாழ்வை மாற்றியமைக்கும். அதற்கு பல மனிதர்களை நர் உதாரணத்திற்கு கூறலாம். கிரிக்கெட் வீரர் டோனி, ஐந்து ரூபாய் மருத்துவர் திரு. வெங்கடம், நம்முடைய திருத்தந்தை. பிரான்சிஸ். இவர்கள் அனைவருமே தங்கள் வாழ்வில் எத்தகைய பெருமையை தங்கள் வாழ்வில் அடைய வேண்டுமோ அடைந்து விட்டார்கள். காரணம் தாழ்ச்சி என்ற மாத்திரையை தங்கள் வாழ்வில் உண்டதால். தாழ்ச்சி என்ற மாத்திரை விலை மதிப்பற்றது. ஆனால் அதனை உண்கின்ற நபர்களை அது விலைமதிப்புள்ள மனிதர்களாக மாற்றுகின்றது.

இத்தகைய ஒரு சிந்தனையைத் தான் லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். முதலில் ஆலயம் சென்ற இரண்டு நபர்களின் பிண்ணனி நாம் அறிந்து கொள்ள வேண்டும். பரிசேயர்கள் உயர்குடி மக்களாகவும், இயேசுவைப் பலமுறை எதிர்த்து, இயேசுவின் எதிர்ப்புக்கும் ஆளாயிருந்தனர். இவர்கள் யூத சமுதாயத்தில் வாழ்ந்த தாழ்ந்த குலத்தவரை ஒதுக்கி வாழ்ந்தவர்கள். இக்காரணத்திற்காகவே இயேசுவின் சவாலுக்கு ஆளாகியவர்கள். இதனை வாழ்வோடு நிறுத்தாமல், ஆலயத்திற்கு கொண்டு சென்று கடவுள் முன் போலித்தனத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஆயக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட வரிதண்டுபவர்கள் உரோமை அரசால் மக்களிடம் வரிவசூல் செய்வதற்காகவே அமர்த்தப்பட்ட ஊழியர்கள். இவ்வாறு காலனி ஆதிக்கம் செய்து வந்த அந்நிய அரசிற்கு ஊழியம் செய்து உள்நாட்டு மக்களிடையே அநியாயமாக வரிகளை பிரித்து, அவர்களின் கோபதானங்களுக்கு ஆளாகி, பாவிகள் எனக் கருதப்பட்டவர்கள். ஏதோ தங்கள் பிழைப்புக்காக இவர்கள் பணியாற்றி ஊதியம் பெற்றவர்கள் அவ்வப்போது சில மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றியவர்கள். இயேசுவின் அன்பான அணுகுமுறையில் மனம் மாறியவர்கள். அதனால் தான் தாழ்ச்சி என்ற மாத்திரையை இவர்கள் உண்டு கடுவுளிடம் நெருங்கி வர அச்சத்தோடு தூரத்தில் நின்றார்கள். ஆனால் பரிசேயர்கள் இத்தகைய தாழ்ச்சி என்ற மாத்திரையை கையில் எடுத்துக் கொண்டு கடவுள் என்ற மருத்துவரிடம் நெருங்கி வந்தார்கள். மாத்திரை உண்டவன் கடவுளால் பெருமை பாராட்டப்படுகின்றான். ஆனால் மாத்திரையை கையில் வைத்து வெளிவேடம் அணிந்தவன் நிராகரிக்கப்படுகின்றான்.

நாம் மாத்திரையோடு அழைக்கின்றோமா? அல்லது மாத்திரையை உண்ண முயற்சி எடுக்க போகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

லூக் 18: 9-14
அரசியல்வாதி பரிசேயன்

மக்களின் பணத்தினைப் பறித்து, காசினைக் கறியாக்கி, மக்களை ஏமாற்றி அவர்களின் மானத்தையும் மரியாதையையும் அடகு வைத்து ‘இலவசம்’ என்ற பெயரில் சில பொருட்களைக் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி உங்களுக்கு நான் அதைச் செய்தேன், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டுவர வலியுறுத்துவேன் என்று மக்களை மையப்படுத்தாமல், தன்னையும் தனது குடும்பத்தையும் மையப்படுத்திப் பேசுகிற இன்றைய அரசியல்வாதிகளைப் போலவே நற்செய்தியில் வரும் பரிசேயனும் பேசுகிறான். இப்பரிசேயன் தான் சிறந்தவன், நல்லவன் என்பதைக் கூற செபத்தைக் கையாளுகிறான். இறைவனை மையப்படுத்துகிற செபத்தை, அவனை மையப்படுத்தி மாற்றியமைக்கிறான் (இதுவும் ஒரு வித சிலை வழிபாடே) தன்னை மேம்பட்டவன் என்று காட்ட மற்றவர்களை இகழ்கிறான். மொத்தத்தில் இப்பரிசேயன் தன்னிலன்பு, இறையன்பு, பிறரன்பு ஆகிய மூன்றிற்கும் எதிராகச் செயல்படுகிறான்.

இந்த மூன்றையும் நாம் வலுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதே இத்தவக்காலம். இதை மீண்டும் மீண்டும் உணர்ந்தவர்களாய் மாறி நம் அகந்தையை அகற்றி தாழ்ச்சியைக் கையிலெடுத்து நம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

புகழ்ச்சியும் தற்பெருமையும்

நம்மைப்பற்றி நாமே புகழ்வது தற்பெருமை. அடுத்தவர் நம்மைப்பார்த்து வியந்து பேசுவதுதான் புகழ்ச்சி. இந்த தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரியாமல், வாழ்வையே இழந்தவர்கள் தான் பரிசேயர்கள். பரிசேயர்கள் தாங்கள் செய்வது சரி என்று நினைத்தார்கள். அது தவறு இல்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், தாங்கள் செய்வது மட்டும் தான் சரியென்று நினைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இதனைத்தான் இயேசு நேரடியாகக் கண்டிக்கிறார்.

இயேசு எப்போதுமே தன்னைப்பற்றி உயர்வாகப் பேசியதில்லை. ஆனால், மக்கள் அவரை உயர்வாகப் பேசினார்கள். பரிசேயர்கள் எப்போதுமே தங்களை உயர்வாகவே எண்ணினார்கள். ஆனால், மக்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இது அவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனாலும், தங்களது அதிகாரத்தினால், மக்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் நினைத்ததைச் சாதித்தனர். இப்படிப்பட்ட தற்புகழ்ச்சியை இயேசு கடுமையாக எதிர்க்கிறார்.

இன்றைக்கு புகழ்ச்சி என்பது நமது வாழ்வைப்பார்த்து, மக்கள் நமக்குக் கொடுக்கக்கூடிய அடையாளம். அதனை நாமே கேட்டுப்பெற முடியாது. நாம் வாழக்கூடிய வாழ்வைப்பார்த்து, அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட அடையாளம் நமக்குக் கிடைக்கக்கூடிய வகையில் நமது வாழ்வும் வாழப்பட வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்

இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது.

வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக்கொள்வது. செபம் என்பது கடவுளின் இரக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மன்றாடுவது. இரக்கமே தேவை இல்லை, என்கிற மனநிலையில் உள்ள ஒருவர், நிச்சயம் செபிக்க முடியாது.

தற்புகழ்ச்சியும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதும் நாம் கடவுளோடு பேசுவதற்கு தடையாக இருப்பவை. செபிக்கின்ற மனநிலையை கெடுக்கக்கூடியவை. எனவே, கடவுள் முன்னிலையில் செபிக்கக்கூடிய மனநிலையைப் பெறுவதற்கு, தாழ்ச்சியை நாம் கேட்போம். தாழ்ச்சி மனநிலையோடு செபிப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

செபிக்கும் மனநிலை

பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.

வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில் திறந்த புத்தகமாக ஆய்வு செய்யக்கூடிய அருமையான நேரம். நமது வாழ்வைச் சிந்தித்துப்பார்ப்பது, சீர்தூக்கிப்பார்ப்பது மற்றும் நல்ல வாழ்வு வாழ உறுதி எடுப்பது. மற்றவர்களைப்பார்க்காமல் நமது வாழ்வை நாம் எண்ணிப்பார்த்தாலே, உலகத்தில் பாதிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

நமது செபம் எப்படி இருக்கிறது? நாம் செபிக்கும்போது எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறோம்? நம்மைப்புகழ்வதையும் நாம் செய்கிற நல்ல காரியங்களையும் வைத்து, நமது வாழ்வைப்பற்றிப் பேசுவதிலே நமது நேரத்தைச் செலவிட்டால், அது உண்மையான செபமாக இருக்காது. மாறாக, நமது வாழ்வை ஆராய்வதற்கான நல்ல முயற்சியாக  இதை நினைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள்.

இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள். பரிசேயர் சொன்னது அனைத்தையும் உண்மையிலே அவன் கடைப்பிடித்தான். பரிசேயர், தான் செய்யாததை அங்கே ஆலயத்தின் முன்நின்று சொல்லவில்லை. தினமும் செபித்தான், வாரம் இருமுறை நோன்பிருந்தான் மற்றும் பத்தில் ஒரு பங்கு கடவுளுக்குக்கொடுத்தான். ஆனால், செபம் என்பது தான் செய்வதை சொல்வது அல்ல, தன்னைப்புகழுவது அல்ல, அல்லது தன்னை மற்றவரோடு ஒப்பிடுவது அல்ல. மாறாக, செபம் என்பது கடவுளைப்புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணைநாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்பயணம், என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். செபம் என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதில் நான் மற்றவர்களை விமர்சனம் செய்வரோ, மற்றவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதோ சரியானது அல்ல. செபத்தில் நான் கடவுளிடம் என்னுடைய வாழ்வு பற்றிப்பேச வேண்டும். நான் சரிசெய்ய நினைப்பவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும். அதற்கான அருளை நான் கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டுமேயொழிய, மற்றவர்களைப்பற்றி கடவுளிடம் குறைகூறுதல் சரியான செபம் அல்ல.

செபம் கடவுளிடம் நம்மைப்பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். நம்முடைய பெருமைகளையோ, திறமைகளையோ, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்புகழ்வதாகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது செபம் அல்ல. அந்த செபம் கடவுள் முன்னிலையில் கேட்கப்படாது. மாறாக, செபம் என்பது நம்மைப்பற்றி, நாம் இன்னும் விசுவாச வாழ்வில் போக வேண்டிய தூரம் பற்றி, நம்முடைய பலவீனங்களை வெல்வதற்கான கடவுளின் அருளைப்பெறுவது பற்றியதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான செபமாக இருக்க முடியும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இறைபுகழ்ச்சியிலும் ஆபத்து !

இயேசுவின் ஆன்மீக ஆழம் மற்றும் அவரது படைப்பாற்றலுக்கு அழகியதோர் எடுத்துக்காட்டாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இறைவேண்டல் பற்றிய அவரது உவமை.

செபம், இறைவேண்டல் எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதை இதைவிட அழகாக யாரும் கூறிவிடமுடியாது என்னும் அளவுக்கு இயேசுவின் உவமைவழி போதனை அமைந்திருக்கிறது.

இறைவேண்டலில் ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ளவேண்டும் என்னும் பகுதி எளிதான போதனையே. ஆனால், இறைபுகழ்ச்சி, நன்றி செபத்தில்கூட ஆபத்து அடங்கியிருக்கலாம் என்பது கொஞ்சம் புதிதான போதனையே. கோவிலுக்குச் செல்லும் பரிசேயர் இறைவனுக்கு நன்றி செபம் சொன்னார். "உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்னும் வார்த்தைகளில் அவரது இறைபுகழ்ச்சி வெளிப்படுகிறது, ஆனால், அந்தப் புகழ்ச்சி, நன்றியின் அடிநாதமாக தற்பெருமையும், தாழ்ச்சியற்ற தன்மையும் அடங்கியிருந்தது. எனவே, அவரது செபம் ஏற்கப்படவில்லை என அடித்துச் சொல்கிறார் ஆண்டவர்.

எனவே, செப ஆர்வலர்கள், செபக் குழு உறுப்பினர்கள், அன்றாடம் செபித்து மனநிறைவுகொள்வோராகிய நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம். ஒருவேளை நமது இறைபுகழ்ச்சியும், நன்றிப் பாடல்களும் இறைவனுக்கு ஏற்புடைமை ஆகாத வாய்ப்பு இருக்கிறது. எனவே, நம்மையே தாழ்த்திக்கொள்ளும், பிறரது வாழ்வை, பணிகளை, ஆன்மீகத்தைக் குறைசொல்லாதிருக்கக் கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களது செபமும், வேண்டுதலும் உமது திருமுன் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் எங்கள் வாழ்வும், மனநிலைகளும் அமைய அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

பயனற்ற செபம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு சொன்ன செபம் பற்றிய இந்த உவமை நம் கண்களைத் திறக்க, எச்சரிக்கை விடுக்கும் ஓர் அபாய மணி. இறைபுகழ்ச்சியும், நன்றியும், நோன்பும், பத்திலொரு பங்கு காணிக்கையும் பயனற்றதாக மாறிவிடும் என்று உணர்த்தும் அருமையான உவமை. உவமையின் முன்னுரையே செய்தியைத் தெளிவாகப் பறைசாற்றிவிடுகிறது. “தாங்கள் நேர்மையாளர்கள் என்று நம்பி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்”. எனவே, செபம், நன்றி, நோன்பு, காணிக்கைரூhநடடip; இவை அனைத்துக்கும் மேலானது பிறர் அன்பு, மனத் தாழ்மை. தங்களை நேர்மையாளர்கள் என்று எண்ணுவதும், பிறரை இகழ்ந்து ஒதுக்குவதும் ஆணவம், இறுமாப்பின் வெளிப்பாடுகள். “தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்” என்று இயேசு எச்சரித்திருந்தார். “நெஞ்சிலே செருக்குற்றோரை இறைவன் சிதறடிப்பார்” என்று அன்னை மரியா முன்னுரைத்திருந்தார். ஆணவம் நிறைந்த இதயத்தை இறைவன் ஏற்பதில்லை. தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை மட்டுமே இறைவன் புறக்கணிக்காமல், ஏற்றுக்கொள்கிறார் (திபா 51).

எனவே, இத்தவக்காலத்தின் நமது தவம், செபம், நோன்பு, அறச் செயல்கள் அனைத்தையும் சற்று ஆய்வு செய்துகொள்வோம். இவற்றின் பின் இருக்கும் நமது மனநிலையையும் ஆய்வு செய்வோம். இறுமாப்பு நிறைந்த மனநிலையை அகற்றி, மனத் தாழ்மை கொள்வோம். அப்போது இறைவன் நம் செபங்களையும், நோன்பையும் உவப்புடன் ஏற்றுக்கொள்வார்.

மன்றாடுவோம்: மாசின்மையை நேசிக்கும் இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உள்ளத்திலிருந்து ஆணவத்தை, இறுமாப்பை, செருக்கை, ‘நான் உயர்ந்தவன்’ என்னும் பெருமையை அகற்றியருளும். தாழ்ச்சியும், சாந்தமும் நிறைந்த உமது இதயத்தைப்போல் எமது இதயங்களை மாற்றும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா