முதல் வாசகம்

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 10-15, 41-43, 54-57, 62-64

மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான். அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, ``வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பலவகைக் கேடுகள் நேர்ந்துள்ளன'' என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர். இது அவர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது. உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான். வேற்றினத்தாருடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்; விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லா வகைத் தீமைகளையும் செய்தார்கள். எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும் என்றும் அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர். இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டு முறைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தினர். நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள். எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மன்னனது கட்டளை. எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப் பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்; உணவுப் பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதை விட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதை விடச் சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 119: 53,61. 134,150. 155,158
பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.
61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன;
ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன். -பல்லவி

134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்!
உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.
150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்;
உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு. -பல்லவி

155 தீயோர்க்கு மீட்பு வெகுதொலையில் உள்ளது;
ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.
158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்;
ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

லூக்கா 18:35-43

ஆண்டின் பொதுக்காலம் 33 திங்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில் இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், ``இது என்ன?'' என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், ``இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், ``தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், ``நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார். இயேசு அவரிடம், ``பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 119: 53 & 61, 134 & 150, 155 & 158
”ஆண்டவரே! உமது ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்”

திருச்சட்டத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரின் பாடல் தான் இன்றைய திருப்பாடல். திருச்சட்டம் என்பது இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய சட்டம். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வாழ்வை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளின் தொகுப்பு தான் திருச்சட்டம். இந்த சட்டத்தை அனைத்து இஸ்ரயேல் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனைப்பற்றிய சிந்தனையைத் தருவதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது.

திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போருக்கு ஏற்படும் துன்பங்களையும் இந்த திருப்பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதே வேளையில் அதனை துன்பங்களுக்கு மத்தியில் கடைப்பிடிப்போருக்கு வரும் இடர்களும் சாதாரணமானவை அல்ல. அது மிகவும் கடினமானது. அதனை நாம் எதிர்கொள்வது கடினம் என்றாலும், இறைவல்லமையில் நாம் நம்பிக்கை வைத்து முன்னேறுகிறபோது, அது நிச்சயம் சாத்தியமாகவே இருக்கும். அந்த நம்பிக்கையை இந்த திருப்பாடலில் பார்க்கிறோம். கண்டிப்பாக எல்லாருக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வரும். அது வருகிறநாளில் மீட்பும் அவர்களுக்கு வரும்.

நம்முடைய வாழ்வில் நாம் திருச்சட்டத்தை, கடவுளின் அன்புச்சட்டத்தை கடைப்பிடிக்க நாம் எடுக்கிற முயற்சி என்ன? எப்படி கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடித்து அவரோடு உறவு நிலையில் நாம் வாழ்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்றாற்போல, நம்முடைய வாழ்க்கைமுறையை நாம் அமைத்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிய வருகிறோம்.

பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு. அதனை அவன் பயன்படுத்திக் கொண்டான். வாழ்வில் ஒளியைப் பெற்றுக்கொண்டான்.

நமது வாழ்விலும் இந்த வாய்ப்புகள் வருகிறபோது, அதனை முழுமையாகப் பற்றிக்கொள்வோம். அது நமது வாழ்வையே மாற்றக்கூடிய வாய்ப்பாகக் கூட இருக்கலாம். எதனையும் உதறித்தள்ளாது, அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தி, நாமும் பயன்பெற்று, மற்றவர்கள் வாழ்விலும் ஒளியேற்றுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விசுவாசம்

“இடைவிடாத, நம்பிக்கையுள்ள, தளர்ச்சியற்ற, விடாமுயற்சியான, சோர்ந்துபோகாத, ஓய்வில்லாத“ – இது போன்ற வார்த்தைகள் நமது விசுவாச வாழ்விற்கு உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த வார்த்தைகளை நாம் மதிப்பீடுகளாகக் கொண்டு, இந்த வார்த்தைகளுக்கு, நமது வாழ்வில் உயிர்கொடுத்து வாழ்ந்தால், நமது விசுவாச வாழ்வு எடுத்துக்காட்டான வாழ்வாக இருக்கும், என்பதை இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது.

இன்றைய நற்செய்தியில் வரக்கூடிய பார்வையற்ற மனிதன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டான மனிதனாக இருக்கிறான். அவனுடைய விசுவாசம் நம்மை மலைக்க வைக்கிறது. இயேசுவை எதிர்நோக்கி இருக்கக்கூடிய அவனது, தளர்ச்சியற்ற விசுவாசம் நமக்கெல்லாம் எடுத்துக்காட்டு. இயேசுவின் அருகாமையை உணர்ந்தவுடன், யாரைப்பற்றியும் கவலைப்படாமல், எதைப்பற்றியும் எண்ணாமல், இயேசு ஒருவரையே, அவனது உள்ளத்தில் வைத்து, அவனது உடல், உள்ளம், ஆன்மா அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, இயேசுவை நோக்கிக் கூவியழைக்கிறான். அவனது ஓய்வில்லாத விசுவாசத்திற்கு, பலன் பெற்றுக்கொள்கிறான்.

நமது கிறிஸ்தவ வாழ்விலும், இறுதிவரை விசுவாசத்தில் நிலைத்திருக்கிறவன், மீட்பு பெறுவான், என்கிற வார்த்தையை, நமது உள்ளத்தில் நிறுத்துவோம். அதை வாழ்ந்து காட்ட முயற்சி எடுப்போம். அது நமது விசுவாசப்பயணத்தை, மகிழ்ச்சியின் அனுபவமாக மாற்றும், என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசு எந்நாளும் நமக்காக….

இயேசு பாஸ்கா விழாவில் பங்கெடுப்பதற்காக யெருசலேம் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறார். பொதுவாக, அத்தகைய விழாக்களுக்கு கூட்டமாகச்செல்வது வழக்கம். நடந்துசென்று கொண்டே இயேசு அவர்களுக்குப் போதிக்கிறார். அவருடையப்போதனையைக் கருத்தாய் கேட்பதற்காக, கூட்டமும் அவரை நெருங்கிச்சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு பாஸ்கா விழாவுக்கு போகிற மக்கள் கூட்டத்தை, விழாவில் பங்கேற்க முடியாதவர்கள் வழிநெடுகிலும் நின்று, அவர்களைப்பார்ப்பது வழக்கம். எனவே, சாலையின் இருமருங்கிலும், மக்கள் திரளாக நின்றுகொண்டிருக்கின்றனா்.

மக்கள் கூட்டத்தைப்பார்த்து, அங்கு நின்றுகொண்டிருந்த பார்வையற்றவர் ஒருவர், இயேசு அந்த கூட்டத்திலே செல்கிறார் என்பதைக்கேள்விப்பட்டு, நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு இயேசுவைக்கூப்பிடுகிறார். அவனுடைய கூப்பாடு சாதாரணமானது அல்ல, அடிவயிற்றிலிருந்து எழுந்த மரண ஓலம் என்று சொல்லலாம். வேதனை, வெறுப்பு, இதோ ஒரு வாய்ப்பு என்ற உணர்வு, இவையெல்லாம் கலந்த ஒரு கத்தல் என்று சொல்லலாம். போதனையில் முழுமனதோடு இருந்தாலும், தேவையின் நிமித்தம் கத்துகின்ற ஒரு மனிதனின் கேவல், இயேசுவுக்கு கேட்காமலில்லை. கேட்டவுடனே, அவனுக்கு செவிமடுக்கிறார்.

இறைவன் எப்போதும் நமது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். நமது தேவைகளை அவர் நிறைவேற்றுவதற்கு அவர் எப்போதும் தயங்கியது இல்லை. எதன்பொருட்டும் அதை இரண்டாம்பட்சமாக கருதியதில்லை. தனது இரக்கத்தை, அருளைக் கொடுப்பதற்கு கடவுள் எல்லா நேரமும் தயாராக இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பார்வை எதற்காக?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வை அளித்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை தியானிக்கிறோம். எனவே, இன்று வாசகத்தின் கடைசி வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். உமது நம்பி;க்கை உம்மை நலமாக்கிற்று என்று இயேசு கூறியதும், அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார் என்று வாசிக்கிறோம். பார்வை பெற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பார்வை பெறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், இயேசுவைப் பின்பற்றுவதற்காகவும்தான் என்பது அவரது அனுபவம். பார்வை பெற்றதும் தனது குடும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, கடவுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் தொடர்ந்தார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். எனவே, ஒரு நற்செய்தியாளராகவும் மாறிவிட்டார்.

நாமும் புதிய பார்வை பெறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் கடவுளைப் புகழ்வதும், இயேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான் என்பதை உணர்வதே அந்தப் புதிய பார்வை. வேறு எதற்காக இந்த வாழ்வு? வேறு எது நம் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும்? வேறு எதுவுமல்ல. இவை மட்டும்தான். எனவே, இறைவனைப் புகழ்வோம். இயேசுவைப் பின்பற்றுவோம். இந்தப் புதிய பார்வையை இயேசுவிடமிருந்து பெறுவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, பார்வையற்ற மனிதர் மேல் பரிவு கொண்டு அவருக்குப் பார்வை அளித்தீரே. அதே பரிவோடும், இரக்கத்தோடும் எனக்கும் புதிய பார்வையை அருள்வீராக. உமது ஒளியைப் பெற்றுக்கொண்டு, நான் இறைவனைப் போற்றிப் புகழவும், உம்மைப் பின்பற்றவும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------------

''இயேசு அவரிடம், 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார்.
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார்.
இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்'' (லூக்கா 18:42-43)


அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கலிலேயாப் பகுதிகளில் இறையாட்சி பற்றிய செய்தியை அறிவித்துவிட்டு அங்கிருந்து எருசலேமுக்குப் பயணமாகச் செல்கின்றார். கலிலேயாவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இயேசு யோர்தான் பள்ளத்தாக்கை அடைந்து, எரிகோ நகரை நெருங்கி வருகின்றார். எரிகோவிலிருந்து எருசலேம் ஏறத்தாழ 27 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எருசலேம் கோவிலில் குருக்களாகப் பணியாற்றியோர் மற்றும் அதிகாரிகள் எரிகோவில்தான் பெரும்பாலும் தங்கியிருந்தார்கள். எருசலேமை நோக்கிச் செல்கின்ற திருப்பயணிகளும் எரிகோவில் தங்கி இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்வார்கள். எனவே, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நகரமாக எரிகோ விளங்கியது. கோவிலுக்குச் செல்வோரிடம் கையேந்தி பிச்சை கேட்கும் பழக்கம் நம் நாட்டில் இருப்பதுபோல அன்று பாலஸ்தீன நாட்டிலும் இருந்தது. ஆக, எரிகோவில் பார்வையற்ற ஒரு ஏழை மனிதர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். இயேசு அவ்வழியே நடந்துசெல்கிறார் என்பதை அறிந்த அந்த மனிதர் இயேசுவிடம் உதவி கேட்கிறார். ''இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என அந்த மனிதர் கத்துகின்றார். இயேசு அவரை அணுகிச் செல்லவில்லை. மாறாக, தம்மோடு வந்தவர்களிடம், ''அவரை இங்கே அழைத்துவாருங்கள்'' என்று கூறுகிறார். இயேசு செய்யவிருக்கின்ற அதிசய நிகழ்ச்சியில் பிறரும் பங்கேற்க வாய்ப்புப் பிறக்கிறது. பார்வையற்றவராக இருந்ததால் யாராவது அவரை அணுகிச் சென்று, கைபிடித்து அவரை இயேசுவிடம் இட்டுச் சென்றிருப்பார்கள். அருகே வந்த அந்த மனிதரிடம் இயேசு, ''நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கிறார்.

-- இயேசு கேட்ட கேள்விக்கு அந்த மனிதர் ''ஐயா, பிச்சை போடுங்கள், ஐயா'' என்று கேட்டிருக்கலாம். அதற்கு மாறாக, அவர் ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்னும் கோரிக்கையை முன்வைக்கிறார். இது ஓர் அதிசயமான கோரிக்கைதான். இயேசுவைப் பற்றி அந்த மனிதர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்திருக்க வேண்டும். இயேசு கடவுளின் பெயரால் வந்தவர், கடவுளின் வல்லமையோடு செயல்படுபவர், எனவே மனது வைத்தால் அவரால் தனக்கு மீண்டும் பார்வை அளிக்க இயலும் என அந்த மனிதர் உளமார நம்புகிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அவருடைய உதடுகளிலிருந்து வெளிவந்த கோரிக்கை: ''நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்''. இயேசு அந்த மனிதரின் நம்பிக்கையைக் காண்கின்றார். தம்மில் நம்பிக்கை கொண்டவர்களைக் கடவுள் கைவிடுவதில்லை என்னும் உண்மை இங்கே தெளிவாகிறது. பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்கிறார் இயேசு. பார்வை பெற்ற மனிதரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் ''கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார்''. இயேசுவைப் ''பின்பற்றுகிறார்''. நமது உள்ளத்தில் நிலவுகின்ற இருளை அகற்றி நமக்கு உள்ளொளி தருகின்றவர் இயேசு. உலகுக்கு ஒளியாக வந்த அவர் நம் உள்ளத்தை ஒளிர்விக்கின்றார். நாமும் நலம் பெறுகின்றோம். நம் உள்ளத்தில் பெருக்கெடுக்கின்ற நன்றியுணர்வு இறைபுகழாக வெளிப்பட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம் வல்லமையால் அக ஒளி பெற்று உம்மைப் போற்றிப் புகழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' (லூக்கா 18:42)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த புதுமைகள் மக்கள் வியந்து தம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படவில்லை. தம்மைக் கடவுள் என்று நிரூயஅp;பிப்பதற்காகவும் மட்டுமே அவர் புதுமைகள் ஆற்றவுமில்லை. இயேசு புரிந்த அதிசய செயல்கள் அவர் கடவுளின் வல்லமையோடு செயல்பட்டார் என்பதைக் காட்டியது உண்மைதான். ஆனால் மக்கள்மீது இயேசு இரக்கம் கொண்டு அவர்களுடைய பிணிகளைப் போக்குவதற்கும் அவர்களுக்குப் புதிய வாழ்வு அளிப்பதற்கும் அந்த வல்லமையைப் பயன்படுத்தினார். லூக்கா நற்செய்திப்படி, எருசலேமை நோக்கி நெடிய பயணம் மேற்கொள்கின்றார் இயேசு. வழியில் அவர் தம் சீடர்களுக்கும் பிறருக்கும் இறையாட்சி பற்றிப் போதிக்கிறார். இறையாட்சியின் பண்புகளை விளக்கும் விதத்தில் அவர் புரிந்த புதுமைகளும் அமைகின்றன. பார்வையற்ற ஒருவர் இயேசு அவ்வழியே போவதை அறிந்து, ''இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று உரக்கக் கத்துகிறார். அவர் அப்படி குரல் எழுப்புவது முறையல்ல என்று கூறி மக்கள் அவரை அதட்டுகின்றனர். ஆனால், இயேசுவின் இரக்கப் பண்பு பற்றிக் கேள்விப்பட்ட அந்த மனிதர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் எப்படியாவது தனக்குப் பார்வை அளிக்க முடியும் என்று அந்த மனிதர் நம்புகிறார். எனவே, இயேசுவைப் பார்த்து, ஆழ்ந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் அவர், ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என மனதுருக இறைஞ்சி வேண்டுகின்றார்.

-- ''பார்வை பெற வேண்டும்'' என்பது நம் மன்றாட்டும் கூட. சில சமயங்களில் நாம் பார்வை இழந்தவர்கள் போல நடந்துகொள்கின்றோம். நம் அகக் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகளைக் கூட மறுக்க நாம் தயங்குவதில்லை. சில உண்மைகள் நமக்குக் கசப்பாகத் தோன்றும்போது அவற்றைப் பார்க்க நம் கண்கள் மறுக்கின்றன. சில சமயங்களில் பழைய பார்வைகள் நம் கண்களைப் பார்வையிழக்கச் செய்துவிடுவதும் உண்டு. அந்த வேளைகளிலெல்லாம் நாம் எழுப்ப வேண்டிய மன்றாட்டு, ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை வெற வேண்டும்'' என்பதே. நம் கண்கள் நன்றாகத்தானே இருக்கின்றன என நினைத்து நாம் சில வேளைகளில் நமது பார்வையற்ற நிலையை மூடி மறைக்க எண்ணுகிறோம். ஆனால் நம் அகக் கண்களைத் திறந்து பார்த்தால் நாம் உண்மையிலேயே கடவுளின் பார்வையைப் பெறாமல் இருக்கிறோம் என உணர்ந்துகொள்ள வாய்ப்புப் பிறக்கும். கடவுளின் பார்வையைப் பெற வேண்டும் என்றால் நாம் நம்முடைய குறுகிய பார்வைகளை அப்புறப்படுத்திவிட்டு, நம் அகக்கண்களை அகலத் திறக்க வேண்டும். இதற்குக் கடவுளின் அருள் நமக்குத் தேவை. எனவே, பார்வை பெற நாம் எப்போதுமே இறைஞ்சுவது முறையே.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்குப் புதிய பார்வை தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

------------------------

குறைபட்டால் குறைந்துவிடும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இது இல்லையே என்று குறைபட்டுக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுதும் குறை சொல்லி வாழ்வும் குறைந்துகொண்டே போய்விடும். இருப்பதில் நிறைவுடன் வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் நிறைவாக இருக்கும்.

எரிக்கோ நகரத்து நடை பாதை அவனது மாளிகை. வருவோர் போவோர் கொடுத்த உணவும் பணமும் அவனை ஊட்டியது.கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான்.பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தினான். நிறைவைத் தேடினான்.

கண் மட்டுமே செயலிழந்திருந்தது. "மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார்." (லூக் 18'36) காதைப் பயன்படுத்துகிறார். "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்." (லூக் 18'39) உரக்க கத்த தன் வாயை, தொண்டையை,உயிர் மூச்சை பயன்படுத்துகிறார்.

ஒரு புலனை இழந்ததால் துவண்டுவிடவில்லை. இருப்பதில் நிறைவடைந்து அவற்றைப் பயன்படுத்தி முழுமைகாண முயல்கிறார்.இறைவனும் அவனது முயற்சியை ஆசீர்வதிக்கிறார். ஒரு பொருள் இல்லை என்றால் எவ்வளவு சலித்துக்கொள்கிறோம்.ஆசைப்பட்டதை அடைய முடியவில்லையென்றால் ஆதங்கப்படுகிறோம். இருப்பதில் நிறைவடைந்து அவற்றைப் பயன்படுத்தி ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனநிறைவடைவோம். வாழ்க்கை இனிக்கும்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்