முதல் வாசகம்

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 18-31

அந்நாள்களில் தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதை விட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். உயிர்மேல் ஆசை இருப்பினும், திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல் தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும். சட்டத்திற்கு எதிரான அந்தப் பலி விருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது போல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக் கொண்டார்கள். இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும், அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள். ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய், உடனே தமது முடிவைத் தெரிவித்து, தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார். அவர் தொடர்ந்து, ``இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில், தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் ஆகும். மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது. ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்; மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச் செல்வேன்'' என்றார். இதெல்லாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது. அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, ``நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக் கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்'' என்றார். இவ்வாறு எலயாசர் உயிர் துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 3: 1-2. 3-4. 5-7
பல்லவி: ஆண்டவரே எனக்கு ஆதரவு.

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!
என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!
2 `கடவுள் அவனை விடுவிக்க மாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். -பல்லவி

3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்;
நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;
அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். -பல்லவி

5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்:
ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
7 ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

 

லூக்கா 19:01-10

ஆண்டின் பொதுக்காலம் 33 செவ்வாய்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார் மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்@ இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர் என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன் எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 3: 1 – 2, 3 – 4, 5 – 7ஆ
”ஆண்டவரே என் ஆதரவு”

இந்த உலகம் தீமைகள் நிறைந்த உலகம். இங்கே விழுமியங்களுக்கும், நல்ல மதிப்பீடுகளுக்கும் மதிப்பில்லை. நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. கெட்டவர்களுக்குத்தான் வாழ்வு இருக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தோற்றமும் இருக்கிறது. இத்தகைய உலகத்தில் நல்லவர்கள் வாழ முடியுமா? இந்த உலகத்தை எதிர்த்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா? எதிர்ப்புக்களுக்கு நடுவில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? முடியும் என்பதை இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது.

”என் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிற வார்த்தை, நல்ல மதிப்பீடுகளுக்காக திருப்பாடல் ஆசிரியர் துணிந்து நிற்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. திருப்பாடல் ஆசிரியர் விழுமியங்களுக்கு குரல் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் அவருக்கு பல எதிரிகள் வந்துவிட்டனர். அவர்களை எதிர்த்து நிற்பது எளிதல்ல. ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும், உற்சாகத்தையும் தருகிறது. கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தான், அவருக்கு உந்துசக்தியாக இருக்கிறது. ஆக, ஒரு மனிதனால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும், மதிப்பீடுகளுக்காக குரல் கொடுக்க முடியும். எப்போது என்றால், அவன் கடவுளை தன்னுடைய ஆதரவாக கொண்டிருக்கிறபோது என்பது இங்கு புலனாகிறது.

நம்முடைய வாழ்வில் கடவுள் நமக்கு துணைநிற்கிற அளவு நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும். கடவுள் எப்போதும் நமக்காக, நம் சார்பாக இருக்கிறார். நாம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். உண்மையாக நாம் வாழ வேண்டும். அப்படிப்பட்ட நல்ல வாழ்வை வாழ, நாம் இயேசுவிடம் மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

சக்கேயுவின் தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் காணப்படக்கூடிய மிக்பெரிய பலவீனமாக நாம் சொல்லலாம். அந்த மனநிலை தான், விளையாட்டு வீரர்கள், சினிமாக நடிகர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவும், சில சமயங்களில் உயிரைக் கொடுக்கவும் தூண்டுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் ஒருவிதமான போதையாகவும் மாறிவிடுகிறது.

இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கு, நமக்கு இரண்டு விதமான ஆற்றல்கள் தேவைப்படுகிறது. ஒன்று, நமது முயற்சி. இரண்டாவது கடவுளின் அருள். இந்த இரண்டையும் பெற்று, முழுமையான மனிதனாக, தனது பலவீனங்களை கடந்த மனிதனாக, சக்கேயு உயிர்பெற்று எழுகிறான். சக்கேயுவிற்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. அவனுடைய உயரம் அவனுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அவனது வரிவசூலிக்கும் தொழில் காரணமாக, சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட மனிதனாக காணப்படுகிறான். அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு வெற்றியாக மாறுகிறது. தனது பலவீனத்திலிருந்து மீண்டு வருகிறான். கடவுளின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான்.

சக்கேயு தனது பலவீனத்திலிருந்து எழ முடிந்தது என்றால், அதற்கு முழுமையான காரணம், அவன் கடவுளின் ஆற்றலின் மீது வைத்த நம்பிக்கை. கடவுளால் எல்லாம் ஆக முடியும் என்று நம்பினான். அதைச் செய்து முடித்தான். நாமும் கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இயேசு தரும் மீட்பு

இயேசு எந்த அளவுக்கு சமுதாயத்தின் கடைசி நிலையில் இருக்கிறவர்களுக்கும், விளிம்புநிலையில் இருக்கிறவர்களுக்கும் உறுதுணையாக இருந்தார் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தொடர்ந்து தன்னுடைய நற்செய்தியில் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். அந்த கருத்து தான், சக்கேயு நிகழ்ச்சியிலும் வெளிப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், ஊதாரி மைந்தன் உவமை, லூக்கா நற்செய்தியின் தனித்தன்மைக்கு சிறந்த உதாரணங்கள். சக்கேயு நிகழ்ச்சியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

லூக்கா நற்செய்தியாளர் வரிதண்டுவோர்களிடத்தில் தொடக்கமுதலே தன்னுடைய நற்செய்தியில், அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தி வருகிறார்.  3: 12 ”வரிதண்டுவோரும் திருமுழுக்கு பெற வந்து, ”போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். 7: 29 ”திரண்டிருந்த மக்கள் அனைவரும், வரிதண்டுவோரும் இதைக்கேட்டு கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்”. 15: 1 ”வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்”. இயேசுவின் திறந்த உள்ளத்திற்கு, சக்கேயு மிகச்சிறப்பான பதில்மொழியைக் கொடுக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருகிறார். தானும் திறந்த உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறார்.

திறந்த உள்ளம் என்பது இயேசுவை முழுமையாகப் பற்றிப்பிடித்துக்கொள்வதற்கான பண்பாக இருக்கிறது. யாரிடத்தில் நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கிறோமோ, இல்லையோ, இயேசுவிடத்தில் நாம் திறந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும். சக்கேயுவைப்போல நாமும் இயேசுவை நமதாக்கிக்கொண்டு, மீட்பைப் பெற்றுக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

உண்மையான மன்னிப்பு

விடுதலைப்பயணம் 22: 1 ல் நாம் பார்க்கிறோம்: ”ஆட்டையோ, மாட்டையோ ஒருவர் திருடி வெட்டிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்”. 22: 4 ”அவர் திருடின மாடோ கழுதையோ, ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக கொடுப்பர்”. 22: 7 ”ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால், திருடர் இருமடங்காக ஈடுசெய்ய வேண்டும்”. மேற்கண்ட, அனைத்து இறைவார்த்தைகளின் அடிப்படையில், சக்கேயு இயேசுவிடம் பேசுகிறார்.

இதேபோல், தவறுகளுக்கு அபராதமாக ஒருவர் செய்ய வேண்டிய பரிகாரத்தை, எண்ணிக்கை நூலில் நாம் பார்க்கிறோம்: 5: 7 ”தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். லேவியர் 6: 5 ம், இதையே வலியுறுத்திக்கூறுகிறது. இங்கே சக்கேயு, தான் மனம் மாற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை, மக்கள் முன்னால் அறிவிக்கிறார். இதுவரை சக்கேயு மக்கள் பார்வையிலும், கடவுளின் பார்வையிலும் மோசமான வாழ்வைத்தான் வாழ்ந்திருக்கிறார். அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறார். அதை மூடி மறைக்கவில்லை. தான் உண்மையில் செய்தது தவறு, என்பதற்கு பரிகாரமும் தேடுகிறார். திருச்சட்டம் என்ன சொல்கிறதோ, அதற்கு மேலும் அதை அவர் செய்வதற்கு முன்வருகிறார். அதுதான் உண்மையான மனமாற்றம். தவறு செய்து மற்றவர்களின் மன்னிப்பை எதிர்பார்க்கிறவர்கள், தங்களை முன்னிறுத்த மாட்டார்கள். மன்னிப்பையே பகடைக்காயாகப் பயன்படுத்த மாட்டார்கள். அதற்காக எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். தான் மன்னிப்பு கேட்கிறேன், கண்டிப்பாக மன்னிப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்றோ, தான் மன்னிப்பு கேட்கிற செயலையே ஏதோ, மிகப்பெரிய செயலைச் செய்கிறவர் போலவோ நினைக்க மாட்டார்கள்.

உண்மையான மன்னிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சக்கேயு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருவேளை இயேசு தண்டனை கொடுத்திருந்தால், அதையும் அவர் பணிவாக ஏற்றிருப்பார். அதுதான், சக்கேயுவை உயர்த்திக்காட்டுகிறது. அத்தகைய மன்னிப்பை, நாம் தவறு செய்கிறபோது, தவறு என்பதை உணர்கிறபோது, மற்றவர்களிடம் மன்னிப்பு வேண்டுகிறபோது, கடைப்பிடிப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவின் தன் முனைப்பு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது.

இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும் என்று காத்துக்கொண்டிராமல், தாங்களாகவே மாற்றத்தை உருவாக்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். இயேசுவின் தன் முனைப்பை, தன்னார்வத்தை நற்செய்தி நூல்களி;ன் பல பக்கங்களில் பார்க்கிறோம். சக்கேயுவைப் போலப் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் தன்முனைப்புதான். நாமும் இயேசுவைப் போல ஏன் தன் முனைப்பு உடையவர்களாக, தன்னார்வம் கொண்டவர்களாக, முதல் முயற்சியை நாமே எடுப்பவர்களாக இருக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் நாமே ஏன் வாய்ப்புகளை உருவாக்கக்கூடாது!

மன்றாடுவோம்: தாமாகவே முன் வந்து சக்கேயுவை அழைத்து, அவரோடு விருந்துண்டு, அவரது வாழ்வை மாற்றிய அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் தன்முனைப்பு உள்ளவர்களாகச் செயல்பட உமது தூய ஆவியை எங்களுக்கு நிறைவாகத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு சக்கேயுவை நோக்கி, 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;
ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்துபோனதைத் தேடி மீட்கவே
மானிடமகன் வந்திருக்கிறார்' என்று சொன்னார்'' (லூக்கா 19:9-10)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்பவர் இயேசுவைச் சந்தித்த நிகழ்ச்சியை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 19:1-10). அந்த நிகழ்ச்சியோடு லூக்கா ''ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி'' என்னும் பகுதியை நிறைவுக்குக் கொணர்கின்றார் (காண்க: லூக் 15:1-19:10). இருப்பினும், ஏழைகள் பற்றியும் தாழ்த்தப்பட்டோர் பற்றியும் அமைந்துள்ள இப்பகுதியின் இறுதியில் செல்வம் படைத்த ஒருவரின் வரலாற்றையும் லூக்கா இணைத்திருப்பது கருதத்தக்கது. இயேசு வழியாகக் கடவுள் வழங்குகின்ற மீட்பு எல்லா மனிதருக்கும் அவர் அளிக்கின்ற கொடை என்பது இதனால் விளங்குகிறது. இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த இன்னொரு செல்வர் பற்றிய கதையை லூக்கா ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தார் (லூக் 19:18-23). ஆனால் அந்த மனிதர் தம்முடைய செல்வத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அதையே பற்றிக்கொண்டிருந்தார். சக்கேயு இதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார். அதாவது, தமது செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வருகிறார் (லூக் 19:8). சக்கேயு யார்? அவர் ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அறிமுகம் செய்யப்படுகிறார். அக்காலத்தில் வரிதண்டுதல் என்பது எளிதில் செல்வம் சேர்ப்பதற்கு வழியாக அமைந்த ஒரு தொழில். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமை ஆளுநர்கள் வரிதண்டும் பொறுப்பைக் குத்தகைக்கு விட்டனர். ஆனால் வரிதண்டுவோர் மக்களிடமிருந்து அதிகமாக வரி வசூலித்தனர். எனவே, வரிதண்டுவோர் என்றாலே மக்களால் வெறுக்கப்பட்டனர்.

-- சக்கேயுவின் கீழ் பலர் வேலை செய்திருக்க வேண்டும். எனவேதான் லூக்கா அவரை ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அடையாளம் காட்டுகிறார். சக்கேயு நல்ல வசதி படைத்த மனிதர். ஆனால் தான் திரட்டிய செல்வம் மக்களிடமிருந்து அநியாயமாகப் பெறப்பட்டது என்பதை அவர் ஏற்று அதற்காக மனம் வருந்துகிறார். அதே நேரத்தில் மக்களிடமிருந்து ''எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்'' என உறுதியளிக்கிறார். இவ்வாறு மனம் திரும்பிய சக்கேயு கடவுளை நாடி வந்ததை இயேசு காண்கின்றார். ''இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று'' என இயேசு அறிக்கையிடுகிறார். மனிதரின் கடந்த கால வாழ்க்கையில் பல குறைகள் இருந்தாலும், அவர்கள் அக்குறைகளை உணர்ந்ததும் மனம் திரும்பி கடவுளிடம் செல்லும்போது கடவுள் அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதற்கு சக்கேயு சிறந்த உதாரணம். ''இழந்துபோனதைத் தேடி மீட்க வந்த'' இயேசு நம்மை இருகரம் விரித்து அழைக்கின்றார். அந்த அழைப்பை மனமுவந்து ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, எங்களை வரவேற்கக் காத்திருக்கும் உம்மை எந்நாளும் நாடிவர அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''இயேசு...'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்;
இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார்'' (லூக்கா 19:5)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். அப்போது மக்கள் திரள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டிருக்கவே, சக்கேயு என்னும் குட்டையான மனிதருக்கு இயேசுவைப் பார்க்க முடியவில்லை. ஒரு மரத்தில் ஏறி உயரமான இடத்திற்குப் போய்விட்டால் இயேசுவைப் பார்ப்பது எளிதாக இருக்கும் என நினைக்கிறார் சக்கேயு. உடனேயே, யாதொரு தயக்கமுமின்றி, மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று கூடக் கவலைப்படாமல், சக்கேயு விரைந்து ஓடிப்போய் ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கிறார். இதையெல்லாம் இயேசு பார்த்தாரோ இல்லையோ, மரத்தில் ஏறிய குள்ள மனிதர் தம்மைப் பார்க்க இவ்வளவு ஆவலோடு இருக்கிறாரே என்று இயேசு வியப்புறுகிறார். சக்கேயுவைப் பார்த்து, ''சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்'' என்று கூறுகிறார் இயேசு. இதைக் கேட்ட சக்கேயுவுக்குப் பெரிய ஆச்சரியம். இவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவிலேயும் இயேசு தன்னைக் கண்டுகொண்டாரே என்று சக்கேயு நினைக்கிறார். ஆனால், இயேசு ''இன்று உம் வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்று கூறியதும் சக்கேயுவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. இத்துணை பெரிய போதகர் பாவியாகிய தன்னுடைய இல்லத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கிறாரோ என்ற வியப்பு ஒரு பக்கம், மகிழ்ச்சி மறு பக்கம் என்று சக்கேயு திணறிப்போகின்றார்.

-- சக்கேயுவின் வாழ்வு இயேசுவின் வருகையால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்ற சக்கேயு வெறும் விருந்து மட்டும் கொடுக்கவில்லை, மாறாகத் தன்னையே கடவுளின் கைகளில் ஒப்படைக்கிறார். தன்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கிறார். தான் செய்த தவறுகளை ஏற்கிறார். வரிதண்டும் துறையில் பெரிய பொறுப்பு வகித்த சக்கேயு மக்களிடமிருந்து அநியாயமாகக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட முன்வருகிறார். ஏழைகளுக்கு தன் செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கத் தயாராகிறார். இயேசுவைச் சந்தித்த சக்கேயு பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு வருகின்ற புதிய மனிதராக மாறிவிடுகிறார். இதுவே நம் வாழ்விலும் நிகழ வேண்டும். இயேசுவை நாம் சந்திக்கின்ற தருணங்கள் ஏராளம் உண்டு. நற்கருணை விருந்தில் பங்கேற்பது இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்பதுதான். பிற மனிதரிடத்தில் நாம் இயேசுவைக் காண்கிறோம். நம் உள்ளத்தில் அவருடைய உடனிருப்பை உணர்கின்றோம். இந்த அனுபவம் நம்மை மாற்ற வேண்டும். அப்போது இயேசு கொணர்கின்ற மீட்பிலிருந்து பிறக்கின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தையும் வாழ்வையும் நிரப்புவது உறுதி.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவை எங்களுக்குக் கொடையாகத் தந்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

------------------------

சிறிய தொடக்கம் பெரிய முடிவு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஒரு சிறிய நல்;ல தொடக்கம் மிகப்பெரிய முடிவில் கொண்டு சேர்க்கும். அந்த பணக்கார சக்கேயுவுக்கும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. பணம் பாவத்திற்கு கொண்டு சென்று நிம்மதியைப் பறித்தது.இயேசுவில் மட்டுமே அதைப் பெறமுடியும் என்பதை உணர்ந்த சக்கேயு அதற்கான முயற்சியில் இறங்கினார்.

இம் முயற்சியில் அவர் கொடுத்த சிறிய தொடக்கம், இயேசு வரும்வழி பார்த்து, நேரம் பார்த்து அங்கே அமர்ந்து கொண்டதுதான். இயேசுவின் பார்வையில் படவேண்டும் என்பதற்காக, தன் கௌரவம் பாராது அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசுவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டத்தின் முன்னே ஓடவும் அந்த பெரிய மனிதர் சக்கேயு தயங்கவில்லை.

இச்சிறிய தொடக்கம் மனமாற்றம், மன்னிப்பு, மகிழ்ச்சி, விருந்து,மீட்பு என்றெல்லாம் விரிவடைந்து இறுதியில் "ஆபிரகாமின் மகன்" என்னும் உன்னத நிலையை அடைகிறது. நம் வாழ்விலும் நாம் கொடுக்கும் சில நல்ல தொடக்கங்கள் ஆச்சரியமான முடிவைத் தரும்.

இயேசு வரும் பாதையில் நான் அமர்ந்து கொள்ளும் விதத்தில் தினமும் திருப்பலியில் கலந்து கொள்வேன், தினமும் விவிலியத்திலிருந்து ஒரு பகுதி வாசிப்பேன் என தீர்மானித்து நான் எடுக்கும் சிறு தொடக்கம் சொல்ல முடியா பெருங்கொடைகளைக் கொண்டு குவிக்கும்.

--அருட்திரு ஜோசப் லியோன்