முதல் வாசகம்

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார். பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், ``நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை'' என்றார். தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, ``உன் மூதாதையரின் பழக்க வழக்கங்களை நீ கைவிட்டு விட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறு கொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டு உனக்கு உயர்பதவி வழங்குவேன்'' என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான். அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து அந்த இளைஞர் தம்மையே காத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார். ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், ``மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; முன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக்காத்து வந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்து கொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்'' என்று சொல்லி ஊக்கமூட்டினார். தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: ``எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 17: 1. 5-6. 8,15
பல்லவி: நானோ விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்;
வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். -பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.
என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். -பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்;
விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

 

லூக்கா 19:11-28

ஆண்டின் பொதுக்காலம் 33 புதன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள் என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். முதலாம் பணியாளர் வந்து, ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன் என்றார். அதற்கு அவர் அவரிடம், நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன் என்றார். அவர், எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் என்று அவரிடமும் சொன்னார். வேறொருவர் வந்து, ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் நீர் விதைக்காததை அறுக்கிறவர் என்றார். அதற்கு அவர் அவரிடம், பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன் வைக்காததை எடுக்கிறவன் விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே என்றார். பின்பு அருகில் நின்றவர்களிடம், அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள், ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே என்றார்கள். அவரோ, உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். மேலும் அவர், நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள் என்று சொன்னார். இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 17: 1, 5 – 6, 8 & 15
”என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை”

கடவுளிடம் உதவிக்காக ஆசிரியர் மன்றாடுகிறார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ”என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்” என்கிற வார்த்தைகள், மற்றவர்கள் அவருக்கு எதிராக இருப்பதையும், யாருமே அவருக்கு ஆதரவாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துககிறது. ஆனாலும், அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு தன் மீது நம்பிக்கை இருக்கிறது. தான் வாழும் வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது. கடவுள் முன்னிலையில் தான் மாசற்ற வாழ்க்கை வாழ்வதால், தன்னால் கடவுளிமிருந்து உதவியைப் பெற முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் இங்கே வெளிப்படுகிறது.

கடவுள் நமக்கு உடனிருந்து உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். எப்போது என்றால், நாம் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது. கடவுளின் ஒழுங்குமுறைகளின்படி நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்கிறபோது, கடவுள் நமக்கு எப்போதும் உதவக்கூடியவராக இருக்கிறார். நம்மை துன்பங்களில் தாங்கிப்பிடிக்கிறவராக இருக்கிறார். நம் மீது மிகுதியான பாசத்தைப் பொழிகிறவராக இருக்கிறார். நேர்மையும், உண்மையும் கடவுளின் அருளையும், ஆசீரையும் நமக்கு மிகுதியாக பெற்றுத்தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளில் நம்பிக்கையாக வெளிப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும், உண்மையானவர்களாக, நேர்மையைப் பற்றிப்பிடிக்கிறவர்களாக வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் உதவியை நாம் எப்போதும் பெற்றுக்கொள்ளலாம். கடவுளும் நமக்கு உடனடியாக உதவ விரைந்து வரக்கூடியவராக இருக்கிறார். உண்மையும், நேர்மையும் நம்முடைய வாழ்வின் மதிப்பீடுகளாகட்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால்.

இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மையுள்ளம்

இன்றைய நற்செய்தியில் வரக்கூடிய உயர்குடிமகன், தம் பணியாளர்கள் பத்துப்பேரை அழைத்து, அவர்களுக்கு பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து, வாணிகம் செய்வதற்கு பணிக்கிறான். மினா என்பது, நூறு திராக்மா மதிப்புள்ள ஒரு நாணயம். ஒரு திராக்மா என்பது ஒரு தொழிலாளியின் ஒருநாள் சம்பளத்திற்கான வெள்ளி நாணயம். இங்கே தலைவர் தன்னுடைய பணியாளர்களுக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. கடுமையான கட்டளைகள் எதுவும் பிறப்பிக்கவில்லை. எந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தான் என்பதற்கும் பதில் இல்லை. அவன் வரும்வரை வாணிகம் செய்வதற்குச் சொல்கிறான்.

பொதுவாக, ஒரு மனிதருக்கு பல முகங்கள் இருக்கலாம். தெரிந்த முகம் ஒன்று, தெரியாத முகம் ஒன்று என்று நாம் அதனை, இரண்டு வகையாகக்கூடச் சொல்லலாம். வெளியில் கடினமாக, அராஜகமாக நடந்து கொள்கிறவர்களைப் பற்றி, அவரிடத்தில் பணிசெய்யக்கூடிய பணியாளர்களைக் கேட்டால், அவரைப்போல நல்ல மனிதரை நாங்கள் பார்த்தது கிடையாது, என்று கூட சொல்வார்கள். அதேபோல, இந்த உயர்குடிமகன், மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாத்தித்தவன் கிடையாது என்பதை, இந்த உவமையில் நாம் பார்க்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய பணத்தை, தனது பணியாளர்களை நம்பிக் கொடுக்கிறான் என்றால், அதை அவர்கள் மீது , அவன் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம், அதே வேளையில், அவர்களுக்கு அவன் வைக்கக்கூடிய ஒரு தேர்வு என்றும் நாம் எண்ணலாம். எது எப்படி இருந்தாலும், அவன் திரும்பி வந்தபிறகு கொடுத்த, அந்த வெகுமதிகள், அவனை தாராள உள்ளம் கொண்டவனாக, தன்னுடைய ஊழியர்களின் நலனில் அக்கறை உள்ளவனாக, அவனைக் காட்டுகிறது. அதிலும், கொடுக்கப்படுகிற பணியில் உண்மையாக, நேர்மையாக இருக்கிறபோது, அதற்கேற்ற சன்மானத்தை, வெகுமதியை அந்த தலைவர் பணியாளர்களுக்குக் கொடுக்கிறார்.

நமது வாழ்விலும், நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நேர்மையோடு வாழ்கிறவர்களாக இருந்தால், கடவுளின் அருள் நமக்கு நிறைவாக உண்டு என்பதை, இந்த உவமை நமக்கு எடுத்துச் சொல்கிறது. வாழ்வில் அதனால், நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகமாகலாம். ஆனால், உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும், என்ற இறைவார்த்தை, நிச்சயம் நம்மில் உண்மையாகும், என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளின் நம்பிக்கை

இன்றைய உவமை ஆட்சியுரிமை பெற்று வர தொலைநாட்டிற்குப் புறப்பட்ட உயர்குடிமகனைப்பற்றி நமக்கு சொல்கிறது. அவனை மக்கள் அரசராக விரும்பாததால், அந்த உரிமையைப்பெற்றுக்கொள்ள உரியவரிடம் அவன் செல்கிறான். இதன் வரலாற்றுப்பிண்ணனியோடு பார்த்தால், அதனுடைய பொருளை நாம் அறிந்துகொள்ளலாம். பெரிய ஏரோது இறந்தபோது, தனது இராச்சியத்தை தனது மூன்று மகன்களான ஏராது அந்திபாஸ், ஏரோது பிலிப்பு மற்றும் ஏரோது ஆர்க்கேலாஸ் ஆகியோருக்கு பிரித்துக்கொடுத்தான். ஏரோது பிரித்துக்கொடுத்தாலும், பாலஸ்தீனத்தைப்பிடியில் வைத்திருந்த உரோமை அரசரிடம் அதற்கான ஆணையை உறுதிப்படுத்த வேண்டும். ஆர்க்கேலாசுக்கு யூதேயா பகுதி பிரித்துக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் அவனை அரசராக்க விரும்பவில்லை. எனவே, அதற்கான ஆணையை உறுதிப்படுத்த, அவன் உரோமை நகருக்குச்சென்று அகஸ்துஸ் சீசரை சந்திக்கச்சென்றான். இதுதான் இந்த உவமையின் பிண்ணனி. இந்த உவமையைக்கேட்ட அனைத்து யூத மக்களுக்கும், அதனுடைய பிண்ணனி நிச்சயம் தெரிந்திருக்கும்.

இந்த நற்செய்தியில் வரும் உயர்குடிமகன் தனது பணியாளர்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறான். அந்த பணியாளர்களுக்கு பணம் கொடுத்து, இப்படிச்செய்ய வேண்டும், இதைச்செய்யக்கூடாது என்று அவன் கட்டளையிடவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பார்க்க, உளவு ஆட்களையும் அவன் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கென்று தனித்திட்டங்களை அவன் கொடுக்கவில்லை. அவன் செய்ததெல்லாம் மினாக்களை கொடுத்து, வாணிகம் செய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறான். கடவுளும் நம்மீது வைத்திருக்கிற அளவுகடந்த நம்பிக்கையை இந்த நற்செய்தி நமக்குத்தருகிறது. நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ இல்லையோ, கடவுள் நம்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

கடவுளின் நம்பிக்கைக்கு நாம் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுள் இந்த அளவுக்கு நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், நம்மை இந்த வாழ்வை வாழ சுதந்திரம் தந்திருக்கிறார் என்றால், அதற்கேற்ப நமது வாழ்வையும் நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இரு மனநிலைகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மினாக்களைப் பற்றிய இயேசுவின் உவமை இருவிதமான மனநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. உயர்குடிமகன் தன் பணியாளர்களுக்கு பத்து மினாக்களைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வாணிகம் செய்யப் பணிக்கின்றார். சில காலம் கழித்து அவர் திரும்பி வரும்போது அவர்களில் பலரும் வாணிகம் செய்து ஈட்டியதைப் பெருமையுடன் அறிக்கை இடுகின்றனர். உயர் குடிமகன் அவர்களைப் பாராட்டுகிறார். ஈட்டியது எவ்வளவு என்று கணக்குப் பார்க்கவில்லை. அவர்களது நம்பிக்கைக்குரிய பண்பைப் பாராட்டுகிறார். ஒரே ஒரு பணியாளன் மட்டும் பணம் ஈட்டாதது மட்டுமல்ல, தம் தலைவரையே குறைசொல்லவும் துணிகிறார். நீர் கண்டிப்புள்ளவர், வைக்காததை எடுக்கிறவர், விதைக்காததை அறுக்கிறவர் என்று அவரையே தன் உழைப்பின்மைக்குப் பொறுப்பாளியாக்குகிறார். தலைவரோ அவருக்கு அவரது வாய்ச்சொல்லைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

இரண்டாவதாக உள்ள மனநிலையைப் பலரிடமும் நாம் பார்க்கிறோம். ஒருவேளை நம்மிடம்கூட அந்த மனநிலை இருக்கலாம். பொறுப்புகளை ஏற்காமல், உழைக்காமல், உழைக்க மனமில்லாமல் வாழ்வதோடு, அதற்கான பொறுப்பையும் பிறர்மேல் சுமத்துகின்ற மனநிலையெ அது. ஆசிரியர் சரியில்லை, பள்ளி சரியில்லை, நாடு சரியில்லை, அதிகாரிகள் சரியில்லை... என்று குறை மட்டுமே கூறி, நமது கடமையைச் செய்யத் தவறுவது பெரிய குற்றம். அது இறைவனுக்கும், இந்த சமூகத்துக்கும் எதிரான பாவம். நமது குறைகளை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். இருப்பதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்தவும், நம்பிக்கைக்குரியவராய் வாழவும் பயிற்சி பெறுவோம்.

மன்றாடுவோம்: கொடைகளின் நாயகனே இயேசுவே, நீர் எமக்குத் தந்திருக்கிற பல்வேறு கொடைகளுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். இந்தக் கொடைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் பெருமை சேர்க்க அருள் தந்தருளும். எங்களது தோல்விகளுக்குப் பிறர்மீது பழிபோடாமல், நேர்மையாக எங்களையே ஆய்வு செய்யும் ஞானத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.
எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்'' (லூக்கா 19:17)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்னும் செல்வரின் வீட்டில் இயேசு விருந்துண்டார். அந்த நிகழ்ச்சியை விவரித்த பிறகு லூக்கா நற்செய்தியாளர் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஓர் உவமை வழி விளக்குகிறார். இதுவே ''மினா நாணய உவமை'' என அழைக்கப்படுகிறது (லூக் 19:11-28). செல்வக் கொழிப்பில் மிதந்த சக்கேயு மனம் திரும்பினார். தம் செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வந்தார். இங்கே செல்வத்தைப் பயன்படுத்தும் முறை என்னவென்பதை இயேசு எடுத்துக் கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம். அந்நிகழ்ச்சிக்குப் பின் இயேசு கூறிய ''மினா நாணய உவமை''யை லூக்கா குறிப்பிடுகிறார். இந்த உவமையிலும் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்னும் கருத்து மேலும் விளக்கம் பெறுகிறது. உவமையில் வருகின்ற பணியாளர் மூன்று பேர். அவர்களில் முதல் இருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தைக் கொண்டு மேலும் அதிக பணம் ஈட்டுகின்றார்கள். ஆனால் மூன்றாவதாக வருகின்ற பணியாளரோ தம்மிடம் கொடுக்கப்பட்ட பணத்தை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்துவிட்டு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிறார்.

-- கடவுள் நமக்குத் தருகின்ற செல்வத்தையும் நேரத்தையும் திறமைகளையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்னும் உண்மையை இயேசு இந்த உவமை வழி உணர்த்துகிறார். கடவுளாட்சியை நம்மிடையே நிறுவ வந்த இயேசுவின் கட்டளையை ஏற்று, அவரோடு ஒத்துழைக்க முன்வருவோர் சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள்; மாறாக, கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளைக் கொண்டு அவருடைய ஆட்சியை இவ்வுலகில் நிலைநாட்டிட மனமுவந்து உழைப்பார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு மேலும் அதிக செல்வத்தை ஈட்டிய பணியாளர்களைப் போல நாமும் செயல்பட்டால், ''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்'' (லூக் 19:17) என்னும் பாராட்டு மொழியைக் கேட்கும் பேறு நமதாகும். மேலும், தான் பெற்ற பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்த பணியாள் தன் தலைவரின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்பதையும் நாம் கருத வேண்டும். எனவே, முன்மதியோடு செயல்பட நம்மை அழைக்கின்ற கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடந்தால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்ற நல்ல பணியாளர்களாக இருப்போம். அவரிடமிருந்து நாம் பெறுகின்ற கைம்மாறு நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொணரும்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்கு நீர் வழங்குகின்ற கொடைகளைக் கொண்டு இறையாட்சி வளர நாங்கள் உழைத்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை?
நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே'' (லூக்கா 19:23)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ''தாலந்து உவமை'' (மத் 25:14-30) லூக்கா நற்செய்தியில் ''மினா நாணய உவமை'' என வருகிறது (லூக் 19:11-27). இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு விண்ணகம் சென்றார் என்றும், கடவுளின் மாட்சியில் வீற்றிருக்கிறார் என்றும் கிறிஸ்தவ சமூகம் நம்பியதை இந்த உவமையில் காண்கின்றோம். தொலை நாட்டிற்குப் புறப்பட்டுப் போய் ஆட்சி உரிமை பெற்றுவரச் சென்ற உயர்குடி மகன் (லூக் 19:12) இயேசுவைக் குறிக்கும் உருவகம். இவ்வாறு இயேசு தம் சீடர்களுக்குக் கட்புலனாகா வண்ணம் சென்றுவிட்டதால் சீடர்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களை விட்டுப் பிரிந்த தலைவர் ஆட்சி உரிமை பெற்று மீண்டும் வருவார். அவர் தம் சீடர்களுக்குப் பல கொடைகளை அளித்துச் செல்கிறார். அக்கொடைகளை (''மீனா'' என்னும் நாணயம்) பெற்ற சீடர்கள் அவற்றை நன்முறையில் பயன்படுத்தி, அவற்றைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். விழிப்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுகின்ற பணியாளர்களுக்குத் தலைவர் பெருந்தன்மையோடு பரிசளிப்பார் (லூக் 19:24). ஆனால், கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளைப் பயன்படுத்தாமல் சோம்பேறியாய் இருப்போருக்கு ஒன்றுமே தரப்படமாட்டாது (லூக் 19:26).

-- கடவுள் நமக்குத் தருகின்ற கொடைகள் பல. நம்மைப் படைத்துக் காத்துப் பேணிவருவது கடவுள் நமக்குத் தருகின்ற முதற்கொடை. கிறிஸ்துவின் வழியாக நம்மை மீட்டுத் தம் வாழ்வில் நமக்குப் பங்களிப்பது நம் உயிரைவிடவும் மேலான கொடை. மனித உறவுகளை வளர்த்துக் கொண்டு, ஒருவர் ஒருவருக்கு உறுதுiணாயாய் இருந்து, கடவுளின் அன்பை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள நமக்குத் தரப்படுகின்ற வாய்ப்புக்களும் கடவுளின் கொடையே. இக்கொடைகளைப் பெறுகின்ற நாம் இயேசுவின் இரண்டாம் வருகையை நோக்கி விழிப்போடு எதிர்நோக்கிட அழைக்கப்படுகிறோம். இறை மாட்சியோடு நம் அரசராகவும் நடுவராகவும் வரவிருக்கின்ற இயேசு எப்போது தோன்றுவார் என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், அவரது வருகைக்கு எப்போதுமே நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட கொடைகளை நன்முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கொடைகளை ''வட்டியோடு சேர்த்து'' நாம் கடவுளின் முன்னிலையில் திருப்பிக் கொடுக்க இயலும் (லூக் 19:23).

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம்மிடமிருந்து பெறுகின்ற கொடைகளைப் பிறர் நலனுக்காகச் செலவிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

 

--அருட்திரு ஜோசப் லியோன்