முதல் வாசகம்

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

அந்நாள்களில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள். மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, ``நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், ``மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்'' என்று கூறினார். மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார். பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, ``திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்'' என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள். அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 50: 1-2. 5-6. 14-15
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்;
கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.
2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். -பல்லவி

5 `பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.'
6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! -பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.
15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்;
அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

 

லூக்கா 19:41-44

ஆண்டின் பொதுக்காலம் 33 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள் உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள் மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15
”வழியைச் செம்மைப்படுத்துங்கள்”

செம்மைப்படுத்துதல் என்றால் என்ன? பண்படுத்துவது, தூய்மைப்படுத்துவது, நடப்பதற்கு ஏதுவாக தயார் செய்வது என்று பலவிதமான அர்த்தங்களில் நாம் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளலாம். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: ”தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் ஆண்டவர் தரும் மீட்பைக் கண்டனர்”. மனித வாழ்க்கை நீண்டதொரு பயணம். இந்த பயணத்தில் நாம் செல்லும் பாதை முக்கியமானது. நம்முடைய பயணத்தில் பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியாக பயணிக்க வேண்டும். நம்முடைய வழிகளில் தடைகள் வரலாம், சோதனைகள் வரலாம், ஆனால், அவற்றைக் கடந்து நாம் செல்ல வேண்டும். அதைத்தான் இங்கே நாம் பார்க்கிறோம்.

வாழ்வில் எதை நோக்கி நம்முடைய பயணம் அமைகிறது? என்பது முக்கியமானது. கடவுள் தரும் மீட்பையும், நிறைவையும் நாம் அடைய வேண்டுமென்றால், குறிப்பிட்ட பாதையைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் விருப்பப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், “இப்படித்தான் வாழ வேண்டும்“ என்கிற வரையறைக்குள்ளாக வாழ வேண்டும். அந்த வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானது அல்ல. அது சவால்களும், சங்கடங்களும் நிறைந்தது. ஆனால், நிச்சயம் அது நமக்கு கடவுள் தரும் மீட்பை வழங்கும். அந்த மீட்பை அனுபவித்து உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர், தான் பெற்ற அனுபவத்தை, மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக, இதனை பாடலாக வடிக்கிறார்.

நம்முடைய வாழ்வில் கடவுளை நோக்கிய நம்முடைய பயணத்தில் நாம் எதனை நோக்கிப் பயணிக்கிறோம்? சவால்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா? கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற மீட்பின் விருந்தில் பங்கு கொள்வதற்கு தயாராக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

அமைதியின் அரசர் இயேசு

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் கடைசிப்பகுதியில் இருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது. மூன்றாண்டு காலங்களாக மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார். புதுமைகள் புரிந்திருக்கிறார். சீடர்களை பயிற்றுவித்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான், ஒட்டுமொத்த நிகழ்வின் உச்சகட்டம் என்று சொல்லப்படுகின்ற, கிளைமேக்ஸ். ஒரு திரைப்படத்தில் எவ்வளவு நேரம் தான் நாம் செலவிட்டாலும், அதனுடைய முடிவைப் பொறுத்துதான், அந்த திரைப்படம் அமையும். அதுதான் இயேசுவின் வாழ்விலும் நடக்க இருக்கிறது. இப்படியெல்லாம் இயேசு வாழ்ந்திருக்கிறாரே? அவருடைய வாழ்வின் முடிவு எப்படி இருக்கும்? எப்போது எழுதப்படும்? இதுதான் மற்றவர்கள் மனதில் இருக்கிற கேள்வி. அந்த கேள்விகளுக்கான பதில் தரக்கூடிய கடைசிக்கட்டத்தில் இயேசு இருக்கிறார். அதுதான் இந்த கடைசிப்பகுதி.

இயேசு மக்களை அமைதியின் வழியில் நடத்த விரும்பினார். தன்னை அமைதியின் அரசராக அவர் வெளிப்படுத்தினார். அவர் கழுதையில் ஏறி, “ஓசான்னா” என்று மக்களின் ஆர்ப்பரிப்போடு வந்தது, இதன் அடிப்படையில் தான். எரு”சலேம்” என்கிற வார்த்தையின் பொருளும் அமைதி தான். எருசலேமை, அதாவது கடவுளின் மக்களின் அமைதியின் பாதைக்கு அழைத்துச் செல்வது தான், இயேசுவின் பணிவாழ்வின் நோக்கமாக இருந்தது. ”இந்த நாளிலாவது நீ அமைதியின் வழியை அறிந்திருக்கக் கூடாதா?” என்கிற வார்த்தைகள் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்களின் தற்பெருமையிலும், ஆணவத்திலும், செருக்கிலும், தாங்கள் எப்போதும் உயர்ந்தவர்கள் என்கிற மமதையிலும் முழுக்க நாளைச் செலவிட்டனர். அதுதான், அவர்களுக்கு பேரிடியாக அமைய இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு அவர்களே காரணமாக போகிறார்கள்.

நமது வாழ்விலும் நாம் கடவுளின் வழியில், அமைதியின் வழியில் வாழ்வதற்கு எவ்வளவோ வாய்ப்புக்களை நமக்கு தந்து கொண்டிருக்கிறார். கடவுளின் முன்னிலையில் நல்லவர்களாக வாழ, அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்று, அவரது பிள்ளைகளாக வாழ, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

கடவுளின் தேடல்

கடவுள் நம்மைத் தேடி வருகிறார். எப்போதும் நம்மைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். நாம் அவரைக்கண்டு கொண்டு, அவருடைய அன்பைப் புரிந்து கொள்கிறோமா? என்பது தான், நாம் கேட்க வேண்டிய கேள்வி. இந்த உலகத்தில் அநீதிகளும், அக்கிரமங்களும், வேதனைகளும், துன்பங்களும் தலைதூக்கும்போது, கடவுள் எங்கே? என்று நாம் குமுறுகிறோம். ஆனால், நாம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது, கடவுளை மறந்து விடுகிறோம். நாம் மற்றவர்களை பழித்துப்பேசும்போது, கடவுளை புறந்தள்ளி விடுகிறோம். நமக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும், கடவுள் நமக்கு வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒன்று நமக்கு உறுதியாகத் தெரிய வேண்டும். நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், நாம் எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்கவில்லை என்றாலும், கடவுள் எப்போதும் நமது உதவிக்காக, நம்மைத் தேடி வருகிறார்.

கடவுளின் வருகையைப் புரிந்து கொண்டால், அவருடைய உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், அதை நாம் உதறித்தள்ளுகிறவர்களாக, அந்த வாய்ப்பை இழந்து விடுகிறவர்களாக மாறுகிறோம். இதுதான், யெருசலேமுக்கும் நடக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம், உண்ணாமல், உறங்காமல், மக்கள் நடுவில் அடையாளங்கள் காட்டி, அற்புதங்கள் செய்து, எப்படியாவது, யெருசலேமை, அதாவது யூதர்களை மனம் திருப்பிவிடலாம், என்று இயேசு எவ்வளவோ முயன்றார். கோழி, தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல, அவர்களை அணைப்பதற்கு முயற்சி செய்தார். அவை அனைத்துமே, பயனில்லாமல் போய்விட்டது. தன்னுடைய நிலைமையை எண்ணி, இவ்வளவு முயற்சி செய்தும், தன்னால், யெருசலேமை காப்பாற்ற முடியவில்லையே, என்கிற ஆதங்கம், இயேசுவிடத்தில் அழுகையாக, அங்கலாயிப்பாக மாறுகிறது.

நமது வாழ்விலும், கடவுள் நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கிறார். நம்மை பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க, நமது துன்பங்களிலிருந்து மீட்டெடுக்க, அவர் நம் அருகே நின்று கொண்டேயிருக்கிறார். நாம், அவரைத் தேடுகிறோமா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

பொறுமையைக் கடைப்பிடிப்போம்

யெருசலேமைப்பார்த்து இயேசுவின் மனக்குமுறலின் ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி பகுதி. ஒலிவ மலைக்குன்றின் மேலிருந்து கீழாக பார்த்தால், யெருசலேம் மிக நன்றாகத்தெரியும், பார்ப்பதற்கே நன்றாக இருக்கும். யெருசலேமுக்கு என்ன நடக்கப்போகிறது? என்பது இயேசுவுக்கு நன்றாகத்தெரிந்திருந்தது. புரட்சி என்ற பெயரிலும், கலகம் என்ற பெயரிலும் சிலர் நடத்தும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால், நடக்கப்போகிற விபரீதங்களை அறிந்து இயேசு வருந்துகிறார். அவர்கள் அமைதிக்கு செவிசாய்க்க, அவர்களை அமைதியின் பக்கம் திருப்ப எவ்வளவோ முயல்கிறார். அனைத்துமே விழலுக்கு இழைத்த நீரானது. இறுதியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இயேசுவின் கண்ணீர் சாதாரண மனிதனின் கண்ணீர் அல்ல. அது மனுக்குலத்தை படைத்துப் பராமரிக்கும் கடவுளின் கண்ணீர். மானிட சமூகம் தாங்க இயலாத துயரங்களால், துன்பங்களால் வருந்தும்போது, கடவுளும் அழுகிறார். மனமுடைந்து போகிறார். அரசியல் தீர்வு காண்பதற்கு இது உகந்த நேரம் அல்ல என்பதை, பலமுறை மக்களுக்கு உணர்த்தியும், தங்களின் மேலும், தங்களின் பலத்தின் மேலும், தங்களின் அறிவின் மேலும் நம்பிக்கை வைத்து, அழிவைத்தேடிக்கொள்ளப்போகும் அவர்களின் நிலைமையை நினைத்து, கடவுள் வேறு என்னதான் செய்ய முடியும்? நமது வாழ்க்கையில் பொறுமை மிகப்பெரிய ஆயுதம். பொறுமை நமக்கு மிகப்பெரிய பலம். அதனை உணர்கின்றபோதுதான், அதனை செயல்படுத்துகின்றபோதுதான், அதன் பலம் நமக்குப்புரியும்.

வாழ்வில் அனைத்தையுமே நம்முடைய அறிவினாலும், பலத்தினாலும் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. கடவுள் நமக்கு நம்முடைய தேவையில் நிச்சயம் வெளிப்படுத்துவார். அவரின் வெளிப்பாட்டுக்கு நாம் காத்திருக்க வேண்டும். பொறுமையோ இருக்க வேண்டும். அதற்கும் மேலாக, கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்பதை நான் முழுமையாக உணர வேண்டும். அத்தகைய வரத்தை இறைவனிடம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தேடி வந்த காலம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு கண்ணீர் விட்டு அழுத மூன்று நிகழ்வுகளைப் புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது. அவற்றுள் ஒன்றுதான் எருசலேம் நகரையும், கோவிலையும் பார்த்து அவர் அழுதது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள் இறைவனின் கோவில் அங்கே இருந்தாலும்கூட, இறைவனைவிட்டு வெகு தொலைவில் வாழ்ந்ததற்காக மனம் வருந்தி அவர் அழுதார். அது மட்டுமல்ல, கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை என்ற பரிதாப நிலையையும் மனதில் கொண்டு அவர் அழுதார்.

ஒருவேளை இன்று இயேசு நமக்காகவும்கூட அழலாம். இறைவன் நம்மைத் தேடிவந்து, அருளாசிகள் பல பொழிந்து, நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பியிருந்தும்கூட, நாம் அவரைக் கண்டுகொள்ளாமல், புறக்கணித்த காலங்களுக்காக இயேசு அழலாம். நாமே அந்த எருசலேம் என்பதை உணர்வோம். நமது வாழ்வில் பல்வேறு சூழல்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக இறைவன் நம்மைத் தேடிவருகிறார், அறிவுரைகள் தருகிறார், எச்சரிக்கையும் தருகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மன்றாடுவோம்: தேடிவரும் தெய்வமே இறைவா, நாங்கள் உம்மைத் தேடிவருவதைப் போலவே, நீரும் எங்களைத் தேடிவந்து மீட்பும், நலமும் தரும் இறைவனாய் இருப்பதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் பல்வேறு சூழல்களில் நீர் எங்களைப் பல்வேறு வடிவங்களில் தேடி வருகிறீர் என்பதை உணரவும், உம்மைக் கண்டுகொள்ளவும் எங்களுக்கு ஞானப் பார்வையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்... அதைப் பார்த்து,
'...உன் பகைவர்கள் உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து
உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்' என்றார்'' (லூக்கா 19:41,43-44)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- யூத மக்களின் வரலாற்றில் எருசலேம் நகரமும் அங்கிருந்த கோவிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒரு நாள் இயேசு எருசலேம் நகரை நெருங்கிவந்து, அது விரைவில் அழியப்போவதை முன்னறிவித்தார். பளிங்குக் கற்களும் பொன்னும் வெள்ளியும் அழகு செய்த அந்நகரம் தரைமட்டமாக்கப்படும் என்று இயேசு கூறிய சொற்கள் கி.பி. 70இல் நிறைவேறின. உரோமைப் படையினர் எருசலேமை அழித்து அங்கிருந்த மக்கள் பலரையும் கொன்றுகுவித்தார்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அடிப்படையில் சிலர் யூத மக்களுக்கு எதிரான ஒரு போக்கினைத் தூண்டிவிட்டது உண்மைதான். இருபதாம் நூற்றாண்டில் 6 மில்லியன் யூத மக்களை அடோல்ஃப் ஹிட்லர் கொன்று குவித்ததும் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் கொடுமை ஆகும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) யூதர்-வெறுப்பு மனநிலை தவறு என்று அறிக்கையிடுகிறது. யூதர்கள்தான் இயேசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதும் சரியல்ல; இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர் இயேசுவை ஏற்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி இக்காலத்தில் வாழ்கின்ற யூதர்களை வெறுப்பதும் சரியல்ல. அண்மைக் காலத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் யூத மக்களோடு நாம் நல்லுறவை வளர்க்கவேண்டும் என்பதை மிகவே வலியுறுத்தினார். கிறிஸ்தவர்கள் பலர் யூத வெறுப்பு மனநிலையோடு செயல்பட்டதற்காக அவர் 1994இல் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் 2000ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் எருசலேம் சென்று, அழிந்துபட்ட கோவிலின் மேற்குச் சுவர் அருகே நின்று யூதர்களுக்காக இறைவேண்டல் செய்தார். வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து கத்தோலிக்க திருச்சபை வருத்தம் தெரிவிக்கிறது என அறிவித்தார். யூத சமயத்தோடும் யூத மக்களோடும் நாம் உரையாடலில் ஈடுபட வேண்டும் என்னும் கருத்தை இன்றைய திருச்சபை மிகவும் வலியுறுத்துகிறது.

-- இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைத் திருச்சபை போதிய அளவு கண்டித்துப் பேசவில்லை என்று பல யூத அமைப்புக்கள் குறைகூறுகின்றன. அப்போது திருச்சபைத் தலைவராக இருந்த திருத்தந்தை 12ஆம் பயஸ் (பத்திநாதர்) போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அக்கால நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் திருச்சபைத் தலைமைப் பீடம் முற்றிலுமாக வெளியிட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. நாசி ஆட்சியினரின் கொடுமையிலிருந்து தப்பிக்கும் வண்ணம் பல யூத குழந்தைகளுக்குக் கிறிஸ்தவ சபை வழக்கப்படி திருமுழுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட குழந்தைகளை மீண்டும் யூத குடும்பத்தினரோடு சேர்த்துவைக்கவில்லை என்பது இன்னொரு குற்றச் சாட்டு. இவ்வாறு பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றைய திருச்சபை யூத சமயத்தோடும் யூத மக்களோடும் தனக்குள்ள உறவுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயேசு யூத குடும்பத்தில் பிறந்து, யூதராக வளர்ந்து இறந்தார் என்னும் உண்மையை நாம் மறக்கலாகாது. அவருடைய வாழ்வுக்கு ஊற்றாக இருந்தது யூத சமய ஆன்மிகம்தான். எனவே, கடவுளின் திட்டத்தில் யூத சமயம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை எல்லாக் கிறிஸ்தவ மக்களும் உணர்ந்து, யூத சமயத்தாரோடு உரையாடலில் ஈடுபட்டு, நல்லுறவு கொண்டு வாழ்ந்திட திருச்சபை நம்மை அழைக்கிறது.

மன்றாட்டு
இறைவா, உம் அருள் பெருக்கின் பெருமையை நாங்கள் வியந்து பாடிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 19:44)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- எருசலேம் நகர் யூதர்களுக்கு முக்கியமான இடமாக விளங்கியது. அங்கேதான் யூத மக்களின் தலைசிறந்த மன்னராக விளங்கிய தாவீது தம் தலைநகரை அமைத்திருந்தார். அங்குதான் சாலமோன் மன்னர் கடவுளுக்கு அழகியதொரு கோவில் கட்டியெழுப்பினார். யூத மக்களின் சமய-சமூக மையமாக விளங்கிய எருசலேம் நகருக்கு வெளியேதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். எருசலேமுக்கு இயேசு எத்தனை தடவை சென்றார் என்பது பற்றித் தெளிவில்லை. எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டியடித்த செய்தியை எல்லா நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத் 21:12-17; மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22). அந்த நிகழ்ச்சிக்கு முன் இயேசு ''எருசலேமைப் பார்த்து அழுதார்'' (லூக் 19:41) என்னும் செய்தியை லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நகரம் அழிந்துபடும் எனவும் இயேசு முன்னறிவிக்கிறார். இயேசு அறிவித்தபடியே, கி.பி. 70ஆம் ஆண்டில் தீத்து என்னும் உரோமை மன்னரின் படைகள் எருசலேமுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன; பலர் நாடுகடத்தப்பட்டார்கள்; எருசலேம் கோவிலும் நகரமும் தரைமட்டாக்கப்பட்டன. இத்தகைய அழிவு ஏற்பட்டதற்குக் காரணம்? யூத மக்கள் நடுவே வந்த மெசியாவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் எருசலேமை நோக்கி இயேசு, ''உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' என்றார்.

-- கடவுள் நம்மைத் தேடி வருகின்ற வேளைகளில் நாம் அவரைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். நம் கண்கள் திறந்திருப்பதுபோலத் தோன்றினாலும் நாம் உண்மையிலேயே பார்வையற்றுப் போகிறோம். கடவுள் நம்மைத் தேடி வருவதை நாம் எப்படிக் கண்டுகொள்வது? கடவுள் நம்மைத் தேடி வருகிறார் என்பதன் முதல் பொருள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதே. நம்மிடம் இருக்கின்ற ஒரு பொருளை நாம் தேடிச் செல்வதில்லை. அதுபோல நாமும் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்கெனவே கொண்டுள்ளதால் அவரைத் தேடி வெளி உலகில் அலைய வேண்டியதில்லை. கடவுள் குடிகொள்ளாத மனிதர் யாரும் இல்லை. எனவே கடவுளை அறிய வேண்டும் என்றால் நாம் பிற மனிதரை அன்புசெய்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் உலக நிகழ்ச்சிகள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். நமது நம்பிக்கை அனுபவத்தின் வழியாக அவர் நம்மை அணுகி வருகிறார். அவரைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கை என்னும் நம் அகக்கண்களை நாம் அகலத் திறக்கவேண்டும். அப்போது அவருடைய வருகை நமக்கு மகிழ்ச்சியைக் கொணரும்.

மன்றாட்டு
இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை அன்போடு எங்கள் உள்ளங்களில் ஏற்றிட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

------------------------

ஆனந்தத்தில் அழு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசு உன்னைப் பார்த்து அழலாம். தப்பு இல்லை. உன் ஊரைப் பார்த்தும் அழலாம் பிரச்சினை இல்லை. இயேசு இரண்டு முறை அழுததாக நற்செய்தி நூல்கள் சான்றுபகர்கின்றன. யோவான்11:35 "அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்." இரண்டாவதாக லூக்கா 19:41, "இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்."

இலாசரின் கல்லறையில் அழுதபோது வேதனை இருந்தபோதும் மகிழ்ச்சியில் அழுதார். கடவுளின் மாட்சி வெளிப்படும் (யோவா 11:4) என்பதாலும் இலாசர் உயர்த்தெழுவான் (யோவா 11:11) என்ற நம்பிக்கையிலும் ஆனந்தத்தில் அழுதார்.

எருசலேமை நோக்கி அழுத போது வேதனையில் அழுதார்.விரக்தியில் அழுதார். "கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்பதால் அழுதார். இஸ்ராயேலரின் இறைவன் அந்த மக்களுக்குச் செய்தவைகளை எல்லாம் நினைத்து அழுதார்.அனுப்பிய அரசர்கள், இறை வாக்கினர்கள், நீதித்தலைவர்கள் அனைவரையும் நினைத்து அழுதார். அம்மக்கள் படப்போகும் வேதனை, அந்நகர் சந்திக்க இருக்கும் அழிவு இவைகளை நினைத்து அழுதார். நன்றிகெட்ட மக்களை நினைத்து அழுதார்.

இப்படிதான் அழக் கூடாது. இலாசருக்கு அழுததுபோல அழுதால் நல்லது. முதல் வாய்ப்பு கிடைக்க பார்த்துக்கொள்வோம். இரண்டாது நிலை வருவதைத் தவிர்த்துவிடுவோம்.

--அருட்திரு ஜோசப் லியோன்