முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27

அந்நாள்களில் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, ``அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?'' என்றார்கள். அதற்கு அரசன், ``ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே'' என்றான். உடனே அவர்கள் அரசனை நோக்கி, ``யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்'' என்றார்கள். ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான். ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, ``அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்'' என்றனர். ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, ``நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!'' என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்திரையிட்டான். பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, ``தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?'' என்று உரக்கக் கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், ``அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே'' என்று மறுமொழி கொடுத்தார். எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும் நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். ``உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

45 பனித் திவலைகளே, பனி மழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

46 பனிக் கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
47 உறை பனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

48 இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
49 ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

50 மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
51 மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

லூக்கா 21:20-28

ஆண்டின் 34ஆம் வாரம்வியாழன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுள் மீது நமது நம்பிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர். இரக்கமும், அன்பும் உருவான கடவுளால் நல்லவர்களையும், தீயவர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியும்? கடவுளின் மன்னிப்பு தீயவர்களைக் கரைசேர்த்து விடாதா? கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமா? அன்பே உருவான கடவுளிடமிருந்து, தீர்ப்பிடக்கூடிய நாள் எப்படி வர முடியும்? இதுபோன்ற கேள்விகளையும், வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் பலர். நல்ல எண்ணத்தோடு வாழ்கிறவர்களுக்கு இது சற்று நெருடலாகவும், தீமை செய்கிறவர்களுக்கு தொடர்ந்து அதனைச் செய்வதற்கு பக்கபலமாகவும் இருப்பது இதுபோன்ற வாதங்கள். அப்படியென்றால் கடவுளின் நீதி என்ன? என்று கேட்போர் பலர். இந்த கேள்விகளுக்கு நம்மால் தீர்வு காண முடியாது. ஏனென்றால், மனிதர்களாகிய நமது சிற்றறிவிற்கு இந்த கேள்விகளே அதிகமானதாக இருக்கிறது.

தீயவர்கள் தீயவர்களாகவே இருந்துவிட்டு செல்லட்டும். நல்லவர்கள் உறுதியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆவலாக இருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முரண்பாடுகளைக்க கண்டோ, நல்லவராக இருப்பதால் வரக்கூடிய தடைகளைக் கண்டோ, நாம் கலங்கிவிடக்கூடாது. மாறாக, விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும். தளர்ச்சியடையாத விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். இது சற்று கடினமானதுதான். ஆனால், அதுதான் நமக்கு பலன் தரக்கூடியது.

நமது வாழ்விலும் இத்தகைய கேள்விகள் எழுகிறபோது, நாம் எதற்கு கவலைப்படாமல் துணிவோடு  கடவுள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையில் நிலைத்திருந்து வாழ அருள்வேண்டி, இந்த நாளில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசுவின் வருகை

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருமே இயேசுவின் இரண்டாம் வருகையில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறோம். இயேசு மீண்டும் வருவார் என்று நம்புகிறோம். திருத்தூதர் பணிகள் 1: 11 ல் வானதூதர்களின் வார்த்தைகள் இதற்கு வலுசேர்க்கிறது, ”கலிலேயரே! நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே மீண்டும் வருவார்”. இந்த வருகையைத்தான் நாம் ஒவ்வொருநாளும் திருப்பலியில் அறிக்கையிடுகிறோம். கிறிஸ்து இறந்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார் என்று, நமது விசுவாசத்தின் மறைபொருளாக நாம் அறிக்கையிடுகிறோம்.

இயேசுவின் இந்த இரண்டாம் வருகையை எதிர்பார்த்து இருக்கிற நாம், எப்போதும் நிறைவை நோக்கி, நிறைவாழ்வை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். நிறைவை அடைந்து விட்டேன், இதற்கு மேல், எனது வாழ்வில் என்னால், முன்னே செல்ல முடியாது, என்று நின்று விடக்கூடாது. ஏனென்றால், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, தொடர்ச்சியான பயணம். அது ஒரு நீண்ட பயணம். அந்த நீண்ட பயணத்தில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிறபொழுதும், நம்மையே நாம் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியான நமது பயணத்தில், நாம் இயேசுவுக்கு அருகில் நெருங்கிவர முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும். ஏனெனில் மனுமகனின் வருகை, எப்போது என்பது யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது, தகுந்த தயாரிப்போடு, நம்மால் எவ்வளவுக்கு சிறப்பான விசுவாச வாழ்வை வாழ்ந்திருக்க முடியுமோ? அவ்வளவுக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

நமது விசுவாச வாழ்க்கை பெரும்பாலான வேளைகளில், ஆங்காங்கே வழிப்பயணத்தில் நின்றுவிட்டு, இலக்கை எட்டாமல் திரும்பிவருவதாகத்தான் இருக்கிறது. இல்லையென்றால், இதற்கு மேல் நம்மால் சிறப்பாக வாழ முடியாது என்று, நமக்கு நாமே திருப்தியடைந்து கொள்கிறோம். அத்தகைய திருப்தியை அடைந்து விடாமல், விடாது பற்றிக்கொண்டிருக்கக்கூடிய அருளை நாம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுள் நமக்கு வேண்டும்

கி.பி 66 ம் ஆண்டில், யூதேயாவைச்சோ்ந்த புரட்சியாளர்கள் உரோமைக்கு எதிராகப்புரட்சியில் ஈடுபட்டனர். வெஸ்பாசியன் என்கிற தளபதியின் தலைமையில், கிளர்ச்சியாளர்களை அடக்க, நீரோ மன்னன் வீரர்களை அனுப்பினான். இந்த நிலையில் நீரோ மன்னன் இறக்க, உரோமைத்தலைமை பதவி காலியானது. வெஸ்பாசியன் உரோமை அரசராகத்தோ்ந்தெடுக்கப்பட்டார். படைகளை வழிநடத்தும் பொறுப்பு அவரது மகன் டைட்டஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் யெருசலேம் நகரை முற்றுகையிட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பாதிக்க வைத்தனர். அதனுடைய சதித்திட்டமாக, உலகின் பல பகுதிகளிலிருந்து பாஸ்கா விழாவைக்கொண்டா வந்திருந்த பிற யூதர்களை கோட்டைக்குள் செல்ல அனுமதித்தனர். ஆனால், திருவிழா முடிந்ததும், அவர்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தண்ணீரும், உணவும் இல்லாமல் மக்கள் தவிக்கத்தொடங்கினர். இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்ட உரோமைப்படை கோட்டைக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தனர். பலரை அடிமைகளாகவும், விலங்குகளுக்கு இரையாக்கி, பொழுதுபோக்குக்காகவும் அவர்களைப் பயன்படுத்தினர். புதுப்பிக்கப்பட்ட யெருசலேம் தேவாலயம் இரண்டாம் முறையாக தரைமட்டமாக்கப்பட்டது.

கடவுளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல், தங்களை அறிவையும், ஆற்றலையும் நம்பி, கடவுளுக்கு செவிகொடுக்க மறுத்தவர்களுக்கு சாட்டையடியாக இயேசுவின் இறைவார்த்தை தரப்படுகிறது. அமைதியின் வழியில்தான் மீட்பு பெற முடியும், அடக்கி ஆள்வதிலோ, கிளர்ந்தெழுவதிலோ யாரும் வெற்றி பெற முடியாது என இயேசு பலமுறை போதித்தாலும், அவரின் போதனை விழலுக்கு இறைத்த நீராகத்தான் போனது. ஆனால், அந்த மோசமான நிலையையும், கடவுள் நம்பிக்கையின் தருணமாக மாற்றுகிறார். மனிதர்களின் மடமையால் நிகழ்ந்த பேரழிவிலும், கடவுள் நன்மையாக மாற்றுகிறார். அத்தகைய அழிவுகள் நடக்கும்போது, மீட்பு நெருங்கி வந்துவிட்டது என உணருமாறு, மக்களை நம்பிக்கையின்பால் கட்டியெழுப்புகிறார்.

நமது மடமையான காரியங்களையும் கடவுள் நன்மை தரும் செயலாக மாற்ற ஆற்றல் படைத்தவர். கடவுளுக்கு திறந்த உள்ளத்துடன் செவிமடுப்போம். இந்த உலகத்தில் நடைபெறும் அழிவுகளுக்கும், துன்பத்திற்கும் காரணம், கடவுளை நாடாததும், அவரைப்புறக்கணிப்தும்தான் காரணம். கடவுள் எனக்குத் தேவையில்லை என்ற மனநிலையும் அதற்கு வலுசேர்க்கிறது. கடவுளை எந்நாளும் பற்றிக்கொள்ளும் வரம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை.

முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழி;ப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின் இந்த நினைவூட்டல் அழைப்பை முழு மனதோடு ஏற்று, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுவோமாக!

மன்றாடுவோம்: எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாட அழைப்பு விடுத்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கெல்லாம் எடுத்துக்;காட்டாக வாழ்வி;ன் அனைத்துச் சூழல்களிலும் நீர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் விழிப்பாயிருந்தீர். அதற்காக எப்போதும் மன்றாடினீர். நாங்களும் உமது மாதிரியைப் பின்பற்றி, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாட அருள் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''மண்ணுலகில் மக்களினங்கள் கடல் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி,
என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்'' (லூக்கா 21:25)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மானிட மகன் மீண்டும் வருவார் என்னும் செய்தியை மக்களுக்கு இயேசு அறிவித்தார். அந்த இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பதை நாமறியோம். ஆனால் அது கட்டாயம் நிகழும் என்பது பற்றி இயேசு நமக்கு உறுதியளித்திருக்கிறார். இறுதிக் காலம் பற்றி இயேசு கூறிய கருத்துக்களைச் சிலர் திரித்துப் பொருளுரைக்கிறார்கள். அதாவது, உலகமும் உலகத்திலுள்ள அனைத்தும் அழிந்துபோகின்ற விதத்தில் வானத்திலிருந்து நெருப்பு மழை பொழியும் என்றும், சூரியனும் சந்திரனும் இருண்டுபோய், கோள்கள் இடம் பெயர்ந்து, அதனால் ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக மனித இனமே நிலைகுலைந்துபோகும் என்றும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் இயேசு அறிவித்த செய்திக்கு நேர்மாறாகப் போகிறது என்பதை நாம் உணர வேண்டும். இறுதிக் காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற செய்தியில் இரண்டு முக்கியமான கருத்துக்களை நாம் மறந்துவிடலாகாது. முதலாவது, இறுதிக் காலம் பற்றி இயேசு கூறுவது உருவக மொழியில் அமைந்த கூற்றே தவிர அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேறப்போகும் முன்னறிவிப்பு அல்ல. இதை ''இறுதிக்கால மொழி வழக்கு'' (யிழஉயடலிவiஉ டயபெரயபந) என அறிஞர் கூறுவர். இம்மொழி வழக்குப்படி, பிரமாண்டமான அளவில் நிகழப் போவதாகக் கூறப்படுகின்ற காரியங்கள் மனிதரின் அன்றாட வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், அவர்களது உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளையும் பிரதிபலிப்பனவாகும். எனவே, இயேசு, இயற்கையில் நிகழ்கின்ற சேதங்களைக் கண்டு ''மக்கள் குழப்பம் அடைவார்கள்'' என்கிறார் (லூக் 21:25). இந்தக் குழப்பம் ஏற்படும்போது நாம் மன உறுதியோடு நிலைத்து நிற்க வேண்டும். இதுவே இறுதிக்காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற இரண்டாவது கருத்து.

-- நாம் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார்: ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்ப நெருங்கி வருகின்றது'' (லூக் 21:28). நமக்கு மீட்புக் கொணர்கின்ற கடவுள் நம்மைத் தண்டிப்பதற்கோ நமக்குத் தீங்கிழைப்பதற்கோ வருகின்ற கொடூரமான நீதிபதி அல்ல; மாறாக, நம்மேல் அன்புகொண்டு, நம் பாவங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற நம் தந்தை. இந்த உண்மையைக் குறிக்கும் விதத்தில் இயேசு ''நம் மீட்பு நெருங்கி வருகின்றது'' என நமக்கு ஊக்கமும் ஆறுதலும் அளிக்கின்றார். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் நம் மீட்புக்கு அடித்தளமாக உள்ளன. நாம் ஏற்கெனவே மீட்பில் பங்கேற்கின்றோம். நம் மீட்பின் நிறைவு இறுதிக்காலத்தில் நிகழும். இது நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொணர்கின்ற நல்ல செய்தி. இந்த நிலை வாழ்வை நாம் பெற வேண்டும் என்றால் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவர் இயேசு வழியாக நமக்கு வழங்குகின்ற மீட்பினை நாம் நன்றியோடு ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்வின் நிறைவு நீரே என உணர்ந்து உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்;
ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர். அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும்.

-- மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான். இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன? பண்டைக் காலத்தில் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் அவர்களுடைய ஏக்கமிகு மன்றாட்டுக்குச் செவிமடுத்தார். தம் மக்களின் வேதனையைப் போக்கிட அவர் முன்வந்தார். எனவே, இஸ்ரயேல் மக்கள் ''இடையில் கச்சை கட்டி'', ''கால்களில் காலணி அணிந்து'', ''கையில் கோல்பிடித்து'' பாஸ்கா உணவை உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர் (காண்க: விப 12:11). இவ்வாறு, பயணம் போகத் தயாரான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கடவுளின் வல்லமையால் அவர்கள் விடுதலையும் மீட்பும் அடைந்தார்கள். இயேசுவும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார். உலகம் என்று முடிவுக்கு வரும் எனத் தெரியா நிலையிலும் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க இயேசு நம்மை நோக்கித் ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' எனக் கேட்கின்றார் (லூக் 21:28). நமக்குக் கடவுள் வழங்குகின்ற மீட்பு நம்மை நெருங்கி வந்துவிட்டது என்னும் நல்ல செய்தி நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும். உலக அழிவு பற்றி அச்சமுறாமல் நாம் ''தலைநிமிர்ந்து நின்று'', நம் கடவுளிடமிருந்து வருகின்ற மீட்பை நன்றியோடு ஏற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, அழிவுச் சக்திகளைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல் 

------------------------

இறுதி நாட்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

எருசலேம் தேவாலயத்தின் அழிவைப்பற்றி சொன்ன இயேசு, எருசலேம்; நகரின் அழிவைப்பற்றி குறிப்பிடவும் தயங்கவில்லை. தேவாலயத்திற்கு அடுத்தபடியாக இந்த நகரம் முக்கியமானது. இது பேரரசரின் நகரம். சவுல்,தாவீது,சாலமோன் தொடங்கி ஏரோது உரோமைப் பேரரசின் ஆளுநர் பிலாத்து என பேரரசரின் அரண்மனை இங்கு இருந்தது. ஆன்மீகத்தின் தலை நகராகவும் தலைமைக் குருக்களின் ஆளுமை ஆதிக்கம் அரண்மனை அனைத்தும் இந்நகரில் இருந்தது. இத்தனை சிறப்பு மிக்க எருசலேம் அழிக்கப்படும் இப்பகுதி உணர்த்தும் செய்தி.

லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தியை கி.பி. 70 ஆண்டுகளில் எழுதிய காலகட்டத்தில் எருசலேம் நகரை உரோமை படை முற்றுகையிட்டதையும் அதனால் எருசலேம் நகரம் அழிந்ததையும் அறிவார். அதோடு தொடர்புபடுத்தி இயேசுவின் எச்சரிக்கையையும் எல்லா காலத்துக்குமாக இப்பகுதியை ஆசிரியர் லூக்கா அருள் வாக்காகத் தந்துள்ளார்.

எருசலேமின் அழிவை உலகின் அழிவாக, ஒவ்வொரு தனி மனிதனின் இறப்பாகக் கொள்வோம். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது. ஆனால் இக்கடுமையான சூழலை முறைப்படிச் சந்திக்க தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும். புனித வாழ்வால் நம்மை அணியமாக்கிக் கொள்வோம்.

--அருட்திரு ஜோசப் லியோன்