முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின. அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப் போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது. அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. `எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது. இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறொரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரிநெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது. இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

52 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

53 நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
54 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

55 நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
56 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

57 வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
58 காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

லூக்கா 21:29-33

ஆண்டின் 34ஆம் வாரம்வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: ``அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தானியேல் 1: 52, 53 – 54, 55 – 56, 57 – 58
”உயிரினங்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்”

இறைவனின் படைப்புக்களை அவரைப் போற்றுவதற்கு இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. கடல் உயிரினங்கள், விலங்குகள் என்று ஒவ்வொன்றாக இந்த பாடல் இறைவனைப் புகழ்வதற்கு அழைப்புவிடுக்கிறது. இது ஒவ்வொரு உயிரினமும் இறைவனிடமிருந்து பல கொடைகளை, நன்மைகளைப் பெற்றிருப்பதையும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளை நினைவூட்டுவதாகவும் அமைகிறது.

இறைவன் எல்லாரையும் அன்பு செய்கிறார். குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமல்ல, படைப்புக்களையும் அன்பு செய்கிறார். அவற்றிற்கு தலைவராக இருந்து அவைகளுக்குத் தேவையானவற்றையும் செய்து வருகிறார். அவற்றிற்கு கட்டளை தருகிறவரும் ஆண்டவரே. அவையும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. இவ்வாறு பல்வேறு நன்மைகளைப் பெற்ற இயற்கையும், இறைவனைப் போற்றிப் புகழ்வதற்கான பொறுப்பை கொண்டிருப்பதை, இந்த பாடல் உறுதிப்படுத்துகிறது.

இறைவன் உடனிருந்து எல்லாவற்றையும் இயக்குபவராக இந்த பாடல் பார்க்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இறைவனை கருதுகிறது. இறைவனைப் போற்றுவது எல்லாருக்கும் மிகப்பெரிய பொறுப்பு என்பதை, இது உணர்த்தி இறைவனைப் புகழ்ந்தேத்த அழைப்புவிடுக்கிறது. நாமும் இயற்கையோடு இணைந்து இறைவனைப் போற்றுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார்.

இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட நோய்கள் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மன அமைதியையும் இதனால் மனிதன் இழந்துவிட்டான். இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால், மீண்டும் நாம் இயற்கையோடு இணைந்து வாழ ஆரம்பிக்க வேண்டும். இயற்கையை அழிப்பதை நிறுத்த வேண்டும். பணத்திற்காக இயற்கை வளங்களைச் சுரண்டுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இயற்கையை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற நமது எண்ணம் சரியானதாக இருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்த நம் ஒருவரால் முடியாது. ஆனால், தனிப்பட்ட நமது வாழ்வில் இயற்கையைச் சீரழிக்காதவாறு வாழ, நாம் உறுதியும், முயற்சியும் எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

செய்ய வேண்டிய கடமை

இறையாட்சியை இயேசு தனது இரண்டாம் வருகையோடு ஒப்பிடுகிறாரா? இயேசு இறையாட்சி மூலமாக சொல்ல வருகிற செய்தி என்ன? இவை போன்ற கேள்விகள் தீர்ப்பதற்கு எளிதானது அல்ல. இன்றைய நற்செய்தி மேலும் நம்மை குழப்பச்செய்கிறது. ஒரு பகுதியில் இயேசு தனது இரண்டாம் வருகை எவருக்கும் தெரியாது. தந்தைக்கு மட்டுமே தெரியும் என்று சொல்கிறார். இன்றைய நற்செய்தியில், அத்திமரம் காட்டும் அடையாளங்களுக்கு ஏற்ப, காலத்தை அறிந்து கொள்கிறீர்கள். அதுபோல, மானிட மகனின் வருகையையும், நிகழ்கிற அடையாளங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், என்று சொல்லி மேலும் நாம் குழப்படையச் செய்கிறார். எப்படி புரிந்து கொள்வது? இதற்கு என்ன விளக்கம் கொடுப்பது?

மேற்கூறிய பகுதிகள் நமக்கு குழப்பத்தைத் தருவதாக தோன்றினாலும், சற்று ஆழமாக நோக்கினால் ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு வீட்டுத்தலைவனைப்பற்றிய உதாரணத்தை கொண்டு நாம் அறிந்து கொள்ள முற்படலாம். ஒரு வீட்டுத்தலைவன் எந்த வேளையில் வருவான் என்பது, வீட்டு வேலைக்காரனுக்கு தெரியாது. ஆனால், கட்டாயம் வருவான் என்பது தெரியும். தலைவன் எப்போதும், எந்த நேரத்திலும் வரலாம், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவனே, விழிப்பாயிருக்கக்கூடிய பணியாள். ஏனென்றால், தலைவன் வருகிறான் என்பதற்காக அல்ல, மாறாக, விழிப்பாயிருப்பது அவனது கடமை. அவனது கடமையைச் சரியாக செய்தால், தலைவன் எந்த நேரத்தில் வந்தாலும், ஒருவன் பயப்பட மாட்டான். தனது கடமையை சரியாகச் செய்யாதவனே, தலைவனுக்குப் பயப்படுவான்.

நமது வாழ்வில் நீதித்தீர்ப்பு இருக்கிறது, நாம் கடவுள் முன்னிலையில் நிற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும், என்பதற்காக பணி செய்தால், அது சரியான பார்வையாக இருக்காது. மாறாக, கடவுள் இந்த வாழ்வை எனக்குத் தந்திருக்கிறார். நான் நல்ல முறையில் வாழ்வேன், என்கிற உறுதியோடு வாழ்கிறபோதுதான், அது சிறந்த வாழ்க்கை முறையாக இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

அருங்குறிகள் வெளிப்படுத்தும் செய்தி

காலத்தின் அருங்குறிகளைப்பார்த்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாதவர்கள் வரப்போகின்ற அழிவிலிருந்து தங்களைக்காப்பாற்றிக் கொள்வது இயலாத காரியம் என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கை விடுக்கிறார். கிறிஸ்து பிறப்பின் தயாரிப்பு காலத்திற்கு முன்னதாக, உலக முடிவையும், இறுதி நாட்களின்போது நிகழும் காரியங்களையும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். காரணம் நாம் ஒவ்வொரு மணித்துளியும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்தக்கருத்தின் அடிப்படையில் இன்றைய நற்செய்தியை வாசித்தால், இயேசு நமக்குச்சொல்ல வருகிற செய்தியை அறிந்துகொள்ளலாம்.

வரப்போகிற நிகழ்வு கண்டிப்பாக நிகழும். அது திடீரென்று நிகழும். வரப்போகிற நிகழ்விற்கு இப்போதே நாம் தயாராக இல்லையென்றால், அதை நம்மால் எதிர்கொள்ள முடியாது. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றால், அது நிச்சயமாக முடியாது. ஆனால், அதற்கான அருங்குறிகள் நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த அருங்குறிகள் வரும்போதே நாம் நம்மை நன்றாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. நோவாவிற்கு அழிவு வரப்போவதை நடந்த அருங்குறிகளால் கண்டுகொள்கிறார். அவருடைய உள்ளம் வரப்போகிற நிகழ்விலிருந்து, அழிவிலிருந்து காத்துக்கொள்ள முயற்சி எடுக்கிறது. ஆனால், மற்ற மக்கள் உண்பதிலும், குடிப்பதிலும், உறங்குவதிலும் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்கள் காலம் காட்டும் அருங்குறிகளை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அதனால் தான் மீட்கப்பட முடியாத அழிவை சந்திக்கின்றனர். நோவா மீட்கப்படுகிறார்.

நாம் எப்படி வாழ்கிறோம்? எனது வாழ்வு கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வாக இருக்கிறதா? எனது வாழ்வில் நாம் எதையாவது மாற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் நமக்கு விடைகிடைக்க வேண்டுமென்றால், அதைப்பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும். விழிப்போடு இருக்கிறபோது, அதைப்பற்றிய அருங்குறிகள் நிச்சயம் நமக்கு வெளிப்படும். அதற்கேற்ப நமது வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டு, மீட்பைப் பெற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வரிகள் இயேசுவின் வார்த்தைகளின் வலிமையை, சீர்மிகு செழுமையைப் பறைசாற்றுகின்றன. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்று ஆண்டவர் இயேசு ஆணித்தரமாகச் சொல்கிறார். இயேசுவைத் தவிர வேறு யார் இத்துணை அதிகாரத்தோடும், தன் உணர்வோடும் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும்? இறைவார்த்தையின் சிறப்பை இதைவிட வலிமையாக யார் சொல்ல முடியும்? எனவேதான், பேதுரு ஆண்டவரே, நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நாங்கள் வேறு யாரிடம் போவோம் என்று அறிக்கையிட்டார்.

நாள்தோறும் இறைவார்த்தையை வாசிக்கின்ற, கேட்கின்ற, சிந்திக்கின்ற நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள் என்பதை நாம் உணர்கிறோமா? ஒருநாளும் அழியாத, நிலைவாழ்வு தருகின்ற இயேசுவின் வார்த்தைகளில் நாம் நம்பி;க்கை கொள்வோம். அந்த வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோம். அந்த வார்த்தைகளின்படி வாழ்ந்து பலன் தருவோம்.

மன்றாடுவோம்: நிலைவாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசுவே, உம் வாக்கு எம் காலடிக்கு விளக்கு. எம் பாதைக்கு ஒளியும் அதுவே. உம் வார்த்தைகளுக்காக நன்றி கூறுகிறோம். இந்த வார்த்தைகளால் பிறரும் வாழ்வடைய இறைவார்த்தையைப் பரப்பும நற்செய்தியாளர்களாக வாழ எங்களுக்கு அருள்தாரும். நாங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் நற்செய்தி நூல்களாக, உமது வார்த்தைகளை வாழ்வில் அறிக்கையிடுபவர்களாக வாழ்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்.
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா' என்றார்'' (லூக்கா 21:33)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- ''காலத்தின் அறிகுறிகளை'' அறிந்து, அவற்றை இறைவார்த்தையின் ஒளியில் புரிந்துகொண்டு, அப்புரிதலின் அடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக்கொள்வோர் இயேசுவின் வழியில் நடப்போர் ஆவர். காலத்தின் அறிகுறிகள் என்றால் என்னவென்பதை இயேசு ஓர் உருவகம் வழியாக விளக்குகிறார். அதுவே ''அத்தி மர உவமை'' என அழைக்கப்படுகிறது. இதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ளனர். வசந்த காலத்தில் அத்திமரம் தளிர்விடுவதைப் பார்த்ததும் விரைவில் அது காய்த்து, பலன் நல்கும் என்பதை மனிதர் அறிந்துகொள்கின்றனர். அந்த அறிவு அவர்களுக்கு இருக்கும்போது அவர்கள் கடவுளாட்சி வருவதை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களை அறிந்துகொள்ளாதது ஏன் என்னும் கேள்வியை இயேசு எழுப்புகிறார். கடவுளாட்சி பற்றி செய்தியை மக்களுக்கு இயேசு அறிவித்தார். அவர் சென்ற இடம் எல்லாம் நன்மை செய்துகொண்டே போனார். இவ்வாறு நிகழ்ந்த பின்னும் சில மனிதர்கள் கடவுளாட்சி அவர்கள் நடுவே வந்ததைக் கண்டுகொள்ளவில்லை.ஷ

-- உலகமே அழிந்துபோனாலும் இயேசு கூறிய ''வார்த்தைகள் ஒழியவே மாட்டா'' என்பதன் பொருள் என்ன? இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வாழ்வு தருகின்ற வார்த்தைகள். அந்த வார்த்தைகளின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை யாரலும் முறியடிக்கவும் இயலாது. இந்நிலையில் உலகமே அழிந்து மாய்ந்துபோனாலும் இயேசுவின் வார்த்தைகள் ''ஒழியவே மாட்டா''. இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை இதிலிருந்து அறிகிறோம். கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்வதற்காக இயேசு நம்மைத் தேடி இவ்வுலகிற்கு வந்தார். இவ்வாறு வந்த இயேசு நமக்காகத் துன்பங்கள் பல அனுபவித்தார். அவர் அனுபவித்த துன்பங்களைக் காண்கின்ற நாம் அவருடைய ஆட்சி எந்நாளும் நிலைத்து நிற்பது என்பதை மறந்துவிடலாகாது. அவ்வாறு நிலைபெறுகின்ற ஆட்சியில் துன்பம் என்பது முக்கிய இடம் வகிக்கிறது எனவும் நாம் அறிய வேண்டும். துன்புறுகின்ற மெசியாவாக வந்த இயேசு நமக்குக் கடவுளின் அன்பைத் தம் போதனை வழியாக எண்பித்துள்ளார். என்றும் வாழ்கின்ற கடவுளின் வார்த்தையை நமக்கு இயேசு அறிவிப்பதால் அந்த வார்த்தைக்கு முடிவே இராது. அந்த வார்த்தையே நம் வாழ்வுக்கு வழிகாட்டி; நம் பாதைக்கு ஒளிவிளக்கு. மனித மொழியில் கடவுளின் வார்த்தையை நமக்குத் தருகின்ற திருவிவிலியத்தில் மட்டுமே கடவுளின் வார்த்தை அடங்கியிருப்பதில்லை. மாறாக, திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தையின் எதிரொலிப்பை நாம் கேட்கலாம். அந்த வார்த்தைக்குச் செவிமடுத்து, அதன்படி ஒழுகுவது நம் பொறுப்பு.

மன்றாடு
இறைவா, எந்நாளும் நிலைத்து நிற்கின்ற உம் வார்த்தையை நாங்கள் பக்தியுடன் கேட்டு நல வாழ்வு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''அத்திமரம்...தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே
கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்'' (லூக்கா 21:29-30)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றி அறிவித்தபோது பல உவமைகளைப் பயன்படுத்தினார். அந்த உவமைகள் பெரும்பாலும் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இயேசு வாழ்ந்த பாலஸ்தீனப் பகுதியில் அத்திமரம் பரவலாக வளரும். அத்திமரம் (பிற மரங்களைப் போல) வசந்த காலத்தில் தளிர்விடும். குளிர்காலம் தாண்டிய பிறகு மரங்களில் பசுமையான தளிர் தோன்றுவது மக்கள் உள்ளத்தில் நம்பிக்கையைத் தூண்டும் இயல்புடையது. வசந்த காலம் தொடங்கிவிட்டால் கூடிய விரைவில் கோடைக்காலமும் வந்துவிடும். இதைத் தம் அனுபவத்தில் உணர்ந்த இயேசு ஒரு சிறு உவமை வழியாக அரியதோர் உண்மையைப் புகட்டுகிறார். அதாவது, அத்திமரம் வசந்த காலத்தில் தளிர்விடும்போது கோடைக்காலம் அடுத்துவருகிறது என மக்கள் முடிவுசெய்வதுபோல, இயேசு அறிவித்த அழிவுகள் நிகழும்போது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். எருசலேமின் அழிவு கி.பி. 70இல் நிகழ்ந்தபோது அதுவே இறுதிக்காலத்தின் தொடக்கம்போல, இறுதிக்காலத்தை முன்னறிவிப்பதுபோல அக்காலத் தலைமுறையினருக்கு அமைந்தது.

-- ஆனால் இயேசு அறிவித்த செய்தி அழிவு பற்றியது மட்டுமல்ல. அழிவு ஏற்படப்போகிறது என்பதை முன்னுணர்ந்து, அதற்குத் தங்களையே தயாரித்துக்கொள்ள வேண்டும் என்றும், நம்பிக்கையோடு நிலைத்திருந்தால் ''வாழ்வைக் காத்துக்கொள்ள முடியும்'' (காண்க: லூக் 21:19) என்றும் இயேசு உணர்த்தினார். இயேசு அறிவித்த இறுதிக்காலம் அவருடைய வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் என்னும் நிகழ்வுகள் வழியாக ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த இறுதிக்காலத்தின் நிறைவு ஒருநாள் வரும் என்பது நம் நம்பிக்கை. இந்நம்பிக்கை நம் வாழ்வுக்கு ஓர் உந்துதலாக அமைய வேண்டும். அப்போது அழிவு பற்றிய செய்தி நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவதற்கு மாறாக, நம் உள்ளத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். ஏனென்றால் கடவுள் முன்வகுத்த திட்டம் நிறைவேறுவதோடு நம் வாழ்வின் நிறைவும் நிகழும் நேரம் வந்துவிட்டதை அறிந்து நாம் அகமகிழ்வோம்.

மன்றாட்டு
இறைவா, காலத்தின் அறிகுறிகளை அறிந்து அவற்றின் வழியாகத் துலங்கும் உம் உடனிருப்பை நாங்கள் அனுபவித்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்