முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27

தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, `இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழிஊழிக்காலமும் கொண்டிருப்பர். அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றை விடப் பெரிதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்ற இருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்; அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
தானி (இ) 1: 59-60. 61-62. 63-64
பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.

59 மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
60 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

61 ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
62 ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

63 நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
64 தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

லூக்கா 21:34-36

ஆண்டின் 34ஆம் வாரம்சனி

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தானியேல் 1: 59 – 60, 61 – 62, 63 – 64
”நீதிமான்களே! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்”

மண்ணகத்தில் இருக்கிறவர்களைப் போற்றிப் புகழ இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள், இறைவன் அதிகமாக அன்பு செய்யக்கூடியவர்களுக்கு இந்த அழைப்பானது விடுக்கப்படுகிறது. ஆண்டவரின் குருக்கள், இறைவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள், நீதிமான்கள், தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியிலும் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டவர்கள் தான், இந்த பாடலில் சொல்லப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் தான், அவர்களுக்கு உரிமைச்சொத்து. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனோடு ஒன்றித்திருக்கிறவர்கள் இவர்களே. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறபோது, இந்த உலகத்தில் இருக்கிற பலரும் இறைவனின் வல்ல செயல்களை உணர்ந்து கொள்வார்கள். எனவே, இறைவனுக்கு நெருக்கமானவர்கள், தங்களது வாழ்வில் எது நடந்தாலும் தொடர்ந்து இறைவனைப் போற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அவர்களும் இறைவனைப் போற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. எனவே, அவர்கள் இறைவனைப் போற்ற வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்கிறபோது, பல்வேறுவிதமான நெருக்கடியான நேரங்களை அனுபவிக்கலாம். ஆனால், அவற்றிற்கு மத்தியில் நாம் உறுதியாக வாழ்ந்து, இறைவனைப் போற்றுவோம். அது மற்றவர்களுக்கு சிறந்த சாட்சியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்காது.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இளைஞர்களின் குடிவெறி

குடியினால் சின்னாபின்னமான குடும்பங்களின் எண்ணிக்கையை வெறும் கணக்களவில் நாம் சொல்லி மாளாது. அதனுடைய பாதிப்பு அந்த அளவுக்கு வீரியமானது. நாம் கண்கூடாக குடிக்கு அடிமையானவர்களின் நிலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், இன்றைய இளைய தலைமுறையினர், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கின்றனர். தொடர்ந்து அதே தவறையே செய்து கொண்டிருக்கின்றனர். எனவே தான், குடியை ஒரு நோய் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட கெட்ட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கு அழைப்புவிடுப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய இளைய தலைமுறையினர் குடிவெறிக்கு அடிமையாவதன் காரணம் என்ன? இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய தவறாகக் கருதப்படுவது “குடிப்பதை தவறு என்று நினைக்காத மனநிலை”. குடிப்பதை ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கக்கூடியதாக நினைக்கும் சமூகம் தான் நாம் வாழக்கூடிய சமுதாயம். குடிக்காதவர்கள் ஆளுமை இல்லாதவர்கள் என்பது போல மாயத்தோற்றத்தை இந்த சமுதாயம் தங்களுடைய வியாபார உத்திக்காக உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த மாய வலைகளில் சிக்கிக்கொண்ட மான்களாக, இன்றைய இளைஞர்களின் நிலை காணப்படுகிறது. அறியாமை தான், இதுபோன்ற வாழ்வைச் சூறையாடும் தவறுகளை மீண்டும், மீண்டும் இளைஞர்களைச் செய்யத் தூண்டுவதாக இருக்கிறது.

நமது இளைய சமுதாயம் தான் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய சமுதாயம் என்று கட்டுரைகளிலும், சொற்பொழிவுகளிலும் புகழ்ந்து தள்ளுகிறோம். ஆனால், அவர்களை குடிபோதைக்கு ஆளாக்கி, அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றுவது நம்மை ஆளக்கூடிய அரசாங்கங்கள். அவர்களை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். தனியொரு மனிதனின் விழிப்புணர்வுதான் இத்தகைய மாய பிம்பத்தை உடைத்தெறிய முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார்.

இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து செல்கிறார். நிச்சயம் அவர் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயிருக்க வேண்டும். ஆனாலும், அடுத்த நாள் காலையிலே, மக்கள் ஏராளனமான பேர் கூடியிருக்க அவர்களுக்கு, மகிழ்ச்சியோடு போதிக்கிறார். இடையில் அவர் பலம் பெற்றது, விழித்திருந்து செபித்த அந்த வல்லமையினால் தான்.

இன்றைக்கு செபத்திற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. திருப்பலிக்கு முன்னால் செபிக்கப்படும் செபத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணமே மறைந்து விட்டது. குடும்ப செபமே சிந்தனையில் இல்லாமல் மங்கிவிட்டது. அதனால் தான், தற்கொலைகளும், கோழைத்தனங்களும் அதிகமாகிவிட்டன. செபத்திற்கு நமது வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். செபத்தை நமது வாழ்வு மையப்படுத்தியதாக இருக்கட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

வாழ்வு இனிமையான பயணம்

தத்துவயியலில் ஸ்டாயிக்ஸ் (Stoics) என்கிறவர் வரலாற்றை வட்டமாகப்பார்த்தனர். அதாவது ஆரம்பித்த இடத்தில் முடிவுறுவது என்ற அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்ளலாம். அவர்களின் கூற்றுப்படி, 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த உலகம் முடிவுறும். மீண்டும் அதிலிருந்து வரலாறு ஆரம்பிக்கும். இவ்வாறு 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் உலகம் புதுப்பித்துக்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கும். வரலாறு மீண்டும், மீண்டும் திரும்புகிற ஓர் அனுபவம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு இயேசு தான் வரலாறு. நமது வரலாறு இயேசுவைச்சுற்றி, சுற்றி வலம் வருகிறது.

இயேசுதான் நமது மீட்பர் என்பது கிறிஸ்தவர்களாகிய நமது வரலாறு. இந்த மீட்பரில் நாம் முழுமையான நம்பிக்கை வைப்பதற்கு இயற்கை பல வகைகளில் நமக்கு உதவி செய்கிறது. எச்சரிக்கிறது. இயற்கை நமக்கு காட்டும் அருங்குறிகளை அறிந்து, எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். இயேசு வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேர் இயேசுவில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் நம்பிக்கை வைத்தபோது, இன்னும் பலபேர் நம்பிக்கை வைக்காதது நமக்கு வியப்பைத் தருகிறது. நம்பிக்கை வைத்தவர்கள் இயற்கை காட்டிய அருங்குறிகளை ஏற்றுக்கொண்டனர். திறந்த மனதுடன இயேசுவுக்கு செவிசாய்த்தனர். ஆனால், மற்றவர்களோ, தாங்கள் என்ற மமதையால் அழிவைத்தேடிக்கொண்டனர். அழிவைத்தேடிக்கொண்ட குழுவில் நாம் இணைந்து விடக்கூடாது.

இந்த வாழ்வை சீராக வாழ, திறம்பட வாழ, சிறப்பாக வாழ எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. வாழ்க்கை ஒரு புதிராக இருந்தாலும், அதை நல்ல முறையில் வாழ்வது கடினமல்ல. கடவுளோடு இணைந்திருந்தால், கடவுளின் குரலுக்கு செவிகொடுத்தால், அது ஓர் இனிமையான பயணம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மந்தம் அடையும் உள்ளங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடர்களுக்கு இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. அவர்களது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: 1. குடிவெறி 2. களியாட்டம் 3. இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம். பயணம், தொலைக்காட்சி, விளையாட்டு ... முதலியவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை நம் வாழ்வின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றனவோ, அல்லது இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. உலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் சொந்தமாக வீடு கட்டுவது, பதவி உயர்வு, வங்கியில் பணம் சேர்ப்பது, குடும்பக் கவலைகள் அனைத்தும் சேரும். இவை எப்போது வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் எடுத்துக்கொள்கின்றனவோ, அல்லது இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றனவோ, அப்போது உலகக் கவலைகளும் நம்மை மந்தப்படுத்தும் பட்டியலில் சேர்ந்துவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என்று கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.

மன்றாடுவோம்: விழிப்புணர்வு தரும் வேந்தனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்த எச்சரிக்கை மொழிகளுக்காக நன்றி. ஆண்டவரே, குடிவெறியிலிருந்தும், அளவுக்கதிமான களியாட்டத்திலிருந்தும், எங்களை உம்மிடமிருந்து பிரிக்கும் உலக அக்கறையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''மேலும் இயேசு, 'உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும்
இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும்
மந்தம் அடையாதவாறு...எச்சரிக்கையாயிருங்கள்' என்றார்'' (லூக்கா 21:34-35)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் தவிர்க்க முடியாத நாளாக இருப்பது நம் இறுதி நாள் ஆகும். அன்று நம் மண்ணுலக வாழ்க்கை முடிவுக்கு வரும். அந்த நாள் என்று வரும் என யாருமே முன்கூட்டி அறிய இயலாது. நிலைமை இவ்வாறிருக்க, நாம் சில சமயங்களில் நம் வாழ்வின் இறுதி பற்றி யாதொரு கரிசனையுமின்றி இருந்துவிடுகிறோம். இது குறித்து இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்: ''உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்'' (லூக் 21:34-35). இந்த எச்சரிக்கையை நாம் கவனமாகப் பார்த்தால் அதில் நாம் ''மந்தம் அடையாதவாறு'' எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மந்தம் என்பது விழிப்பற்ற நிலையைக் குறிக்கும். குடிவெறியும் களியாட்டமும் இவ்வுலகக் கவலையும் மந்த நிலையை உருவாக்குகின்றன. குடிபோதையில் இருப்போர் தம்மைச் சூழ்ந்து நடப்பவற்றைச் சரியாக உணரமாட்டார்கள். தெளிவற்ற மனத்தோடு உளறிக்கொண்டிருப்பார்கள். அதுபோல, களியாட்டத்தில் ஈடுபடுவோரும் தம் உள்ளத்தை ஒருமுனைப்படுத்தி சிந்தனையைக் கூர்மையாக வைத்திருக்கமாட்டார்கள். மேலும் உலகக் கவலைகள் நம் உள்ளத்தை அலைக்கழிக்கும் போது அங்கே மன அமைதி இராது. இவ்வாறு நம் உள்ளம் மந்தமாகிப் போகின்ற ஆபத்து உள்ளது.

-- இயேசு இத்தகைய மந்த நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் எனக் கேட்கின்றார். இன்று நம்மை மந்த நிலையில் வைத்திருக்கின்ற சூழ்நிலைகள் என்ன? இறையாட்சி பற்றிய விழிப்பு நமக்கு ஏற்படாமல் நம்மைச் சிறைப்படுத்துகின்ற நெருக்கடிகள் யாவை? கண்ணயர்ந்துபோய் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்து போகாமல் நம் அகக் கண்களை அகலத் திறந்துவைக்க நமக்குக் கடவுள் தருகின்ற தூண்டுதல் யாது? இதற்கு இயேசு பதில் தருகின்றார்: ''எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' (லூக் 21:36). விழிப்பு, மன்றாட்டு இரண்டுமே நமக்குத் தேவை. இயேசுவே நமக்கு முன்னுதாரணம் தருகின்றார். அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து ''விழித்திருந்தார்''. அதுபோல, எப்போதும் இறைவேண்டல் செய்வதில் நிலைத்திருந்தார் (காண்க: லூக் 22:39-42). மனித வாழ்வின் நிறைவு கடவுள் நமக்குத் தருகின்ற வாக்குறுதி. அந்நிறைவை அடைய வேண்டும் என்றால் நமக்கு விழிப்புத் தேவை; நம் உள்ளம் மந்த நிலையிலிருந்து விடுபட்டு இறையுணர்வில் தோய்ந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம் உடனிருப்பை உணர்ந்து உம்மையே கருத்தில் கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''இயேசு...'எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்றார்'' (லூக்கா 21:36)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மானிட மகன் வரும் நாள் இதுதான் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூறவியலாது. எனவே மக்கள் விழிப்பாயிருக்க வேண்டும் என்று இயேசு கேட்டார். இச்செய்தியை ''ஒத்தமை நற்செய்தி'' நூலாசிரியர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் குறிப்பிடுகின்றனர். ஆனால் லூக்கா ''விழிப்பாயிருங்கள்'' என்பதோடு ''மன்றாடுங்கள்'' என்றொரு சொல்லையும் சேர்த்துக் கூறுகின்றார். பொதுவாகவே, லூக்கா நற்செய்தியில் ''இறைவேண்டல்'' பற்றிய குறிப்புகள் பல உண்டு. அக்குறிப்புகளை இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். முதன்முதலில், இறைவேண்டல் இயேசுவின் பணிவாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இரண்டாவது, இயேசுவைப் பின்செல்வோர் இறைவேண்டலில் நிலைத்திருக்க வேண்டும் என இயேசு கேட்கிறார். ''எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' (லூக் 21:36) என இயேசு கூறுவதை ''இடைவிடாமல் இறைவேண்டல் செய்யுங்கள்'' எனவும் பொருள்கொள்ளலாம் (காண்க: லூக் 18:1-8). இறுதிக் காலம் வரவிருக்கிறது என்பது உறுதியாயிருப்பதால் சீடர்கள் இறைவேண்டலை ஒருபோதும் கைவிடலாகாது. இறுதிக் காலம் என்பது நிறைவின் காலம் கூட. ஏற்கெனவே தொடங்கிவிட்ட இறையாட்சி இறுதிக் காலத்தில் முழுமை பெறும். எனவே, அந்த முழுமையை அடைவதற்கும், அது விரைவில் வருவதற்கும் இறைவேண்டல் தேவை என்பது கருத்து.

-- சில வேளைகளில் நமது மன்றாட்டுக்கள் நம் வாழ்வின் அன்றாடத் தேவைகளை இறைவனிடம் கேட்பதோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய மன்றாட்டு தவறு என இயேசு கூறவில்லை. ''எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்'' என நம் வானகத் தந்தையை நோக்கி நாம் மன்றாட வேண்டும் என இயேசுவே நமக்குக் கற்பித்துள்ளார் (காண்க: லூக் 11:3). இருந்தாலும், இறைவேண்டல் என்பது நம் வாழ்க்கையின் நிறைவு பற்றியும் அமைய வேண்டும். அதாவது, இறுதிக் காலத்தில் நாம் இறைவனோடு நிலைவாழ்வு பெற்று மகிழவேண்டும் என்பதும் நம் மன்றாட்டின் உள்ளடக்கமாக இருத்தல் வேண்டும். நிறைவை நோக்கிச் செல்லும் நாம் அந்த நிறைவு நமக்கும் பிறருக்கும் கிடைக்கவேண்டும் என மன்றாடும்போது கடவுளின் ஆட்சி மலர வேண்டும் என்பதே அம்மன்றாட்டின் உள்ளடக்கமாக அமையும். ''உமது ஆட்சி வருக!'' என்னும் மன்றாட்டு நம் இதயத்திலிருந்து எழும்போது நாம் உண்மையிலேயே ''விழிப்பாயிருந்து மன்றாடுகின்ற'' மக்களாக இருப்போம்.

மன்றாட்டு
இறைவா, உமது ஆட்சி வருக!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

------------------------

இறை உறவே வெற்றயின் பாதை

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு விறுவிறுப்பு கொடுப்பது உயிர்ப்பும் இயேசுவின் வருகையும். இந்த இரண்டும் இல்லையேல் வாழ்க்கை மந்தம் அடைந்துவிடும். கண்ணியில் சிக்கிய வாழ்வாகிவிடும். குடி வெறி, களியாட்டம், சுகபோக வாழ்க்கை என்னும் கண்ணியில் சிக்கி இவ்வுலக வாழ்வும் சிக்கலாகிவிடும், மறு வாழ்வும் மறுக்கப்பட்டுவிடும்.

இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள, இயேசு வாழ்ந்த வாழ்க்கைமுறை நமக்கு உதவுகிறது. நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக்21'36) என்பது இயேசுவின் எச்சரிக்கை.

அவரது அன்றாட வாழ்க்கை திட்டம் நமக்கு ஒரு முன்வரைவு. பகல் நேரங்களில் கோவிலில் கற்பிக்கிறார். வீதிகளிலும் வீடுகளிலும் நலிவுற்ற மக்களைச் சந்திக்கிறார். இரவு நேரங்களில் மலைக்குச் சென்று தந்தையோடு தங்குகிறார். செபிக்கிறார். இவ்வாறு எப்போதும் செபத்தில் தந்தை இறைவனோடு வாழ்ந்த வாழ்க்கைமுறை, இறுதி நாளில், மானிட மகனின் தீர்ப்பின் நாளில், தண்டனை அனைத்திலிருந்தும் தப்பிக்க வல்லவராகும் வலிமையை நமக்கு வழங்கும்.

செபிப்போம், எல்லா தண்டனைகளிலிருந்தும் தப்பிப்போம்.

--அருட்திரு ஜோசப் லியோன்