முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, ``எங்களைப் பார்'' என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ``வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்'' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 105:1-2, 3-4, 6-7, 8-9

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!
அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! -பல்லவி

3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! -பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. -பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

லூக்கா 24:13-35

பாஸ்கா காலம் முதல் வாரம் புதன்


+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, ``வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?'' என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ``எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!''என்றார். அதற்கு அவர் அவர்களிடம், ``என்ன நிகழ்ந்தது?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை'' என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!'' என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ``வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'' என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், ``ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 24: 13 - 25
திறக்கப்படட்டும்

கடந்த வருடம் கோவை அருகில் உள்ள கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்து இறந்து விடுகின்றது. அதற்கு பிறகு தான் அனைத்து வெளிப்புற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. இதுவரை சேலம் செல்லாத தலைவர்கள், கனிம வளங்கள் இறக்கின்றன என்பதனை அறிந்த உடனே நான்கு வழிசாலை அமைத்து செல்ல திட்டமிடுகின்றனர். இதுவரை நகை கடன் அதிக அளவில் கொடுக்காத ரிசர்வ் வங்கி, திடீரென்று கடன் தொகையினை அதிகரிப்பதாக தீர்மானங்கள் வெளியிடுகின்றது, காரணம் தனியார் வங்கிகள் அதிகரிப்பதனால். இவ்வாறு ஒன்று நடைபெறுகின்ற போது தான் மற்றவர்களின் கண்கள் திறக்கப்படுகின்றன. அதுவரை மூடப்பட்ட நிலையில் தான் செயல்படுகின்றது.

இயேசு பாடுபட்டு மரித்தபின் அவர் மீது வைத்த நம்பிக்கை இழந்தவர்கள் பலர். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள இரு சீடர்கள் பன்னிருவரைச் சார்ந்தவர்கள் அல்ல. இவ்விருவருக்கும் பெரிய பிரச்சனை நம்பிக்கை. இயேசுவின் இறுதி நாட்களில் நிகழ்ந்த பாடுகள், மரணம் ஆகிய கசப்பான நிகழ்வுகளால் அவர்கள் மிகவும் நொந்து போயிருந்தார்கள். இயேசு உயிர்த்தார் என்னும் அவருடைய கல்லறை காலியாக இருந்தது என்றும் பெண்கள் கூறிய செய்தியை ஏற்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. எனவே தான் அவர்கள் தங்கள் சொந்த ஊராகிய எம்மாவுக்கு செல்ல தீர்மானிக்கின்றார்கள். இத்துடன் அவர்களுடைய சீடத்துவ வாழ்வும் நிறைவு பெறுகின்றது. சீடர்களின் மனக்குமுறல்களைக் கேட்ட இயேசு தம்மை இன்னும் யாரென்று அவர்களுக்கு வெளிப்படுத்தாமல் அவர்களை மிகவும் அதிகமாக வருத்திய மெசியாவின் பாடுகள் மரணம் பற்றியும், பிறகு உயிர்ப்பு வழியாக அவருக்கு நிகழவிருந்த மாட்சி பற்றியும் விளக்குகிறார். குறிப்பாக மோசேயின் சட்டங்களிலிலிருந்தும் வேறு இறைவாக்கு நூல்களிலிலிருந்தும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கூறுகின்றார். இத்தகைய விளக்கத்திற்கு பின்தான் சீடர்களோடு பந்தியில் அமர்கிறார். அத்தகைய அமர்தல் தான் அவரை அப்பத்தை பிட்க செய்கிறது. அத்தகைய பிடுதல் தான் அவர் இயேசு என்று உணர வைக்கின்றது.

நான் இயேசுவை எப்படி ஏற்றுக் கொள்கிறேன். எல்லா சூழல்களிலுமா? அல்லது துன்பங்கள் எழுகின்றபோதா? அல்லது புதுமைகள் நடக்கின்ற போதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=====================

உரையாடல் உள்ளாடலாக ! (லூக்கா 24 : 13-35)

கத்தோலிக்கத் தாய்த் திரு அவையின் புதையல் நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே தான் நம் இருத்தலும் இயங்குதலும் நடைபெறுகின்றன. இந்த நற்கருணையின் மறைபொருளை உணர இன்றைய நற்செய்தி நமக்கொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நமது திருப்பலியின் அமைப்பு முறையும் இன்றைய நற்செய்தியினைப் பார்த்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. முதல் பகுதி இன்றைய நற்செய்தியில் திருப்பலியின் இறைவார்த்தைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. இரண்டாம் பகுதி திருப்பலியின் நற்கருணைப் பகுதியினை ஒத்து அமைகின்றது.

நற்கருணைப் பகிர்விற்கான தயாரிப்பே இறைவார்த்தைப் பகிர்வு. இறைவார்த்தைப் பகுதியின் நோக்கமே நற்கருணையின் மறைப்பொருளை உணரச் செய்வதே. வார்த்தையானவர் மனுவுரு எடுத்ததே நம்மோடு தங்குவதற்குத்தானே! ஆனால் பல வேளைகளில் நம்மில் பலர் நற்கருணையில் இறைவனைக் காண முடியாதவர்கள்தான், இன்று இறைவார்த்தையில் இறைவனைக் கண்டுவிடலாம் என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டினை நோக்கி பயணம் செய்வதை விட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டிலேயே இன்னும் பல பிரிவினையன்பர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு நடைப்பயணத்தில் இயேசுவைக் கண்டுகொள்ள முடியாமல் அவர்களது கண்கள் மறைக்கப்பட்டிருந்ததோ அதனைப்போல மறைக்கப்பட்டவாகளாக நாமும் வாழ வேண்டாம். நடைப்பயணத்தின் போது இயேசுவுக்கு எதுவும் தெரியாது என்று பிதற்றிக் கொண்டு வந்தார்களே அதனைப்போல எனக்கு எல்லாம் தெரியும் என்று பிதற்ற வேண்டாம். இயேசுவைப் பற்றி அறியும் அறிவு அவரைக் கண்டுணர நம்மை இட்டுச் செல்லட்டும்.

ஆம், இறைவார்த்தையினை அறிதல், (அவரோடு உரையாடுதல்) நற்கருணையில் அவரைக் காண (அவருடன் உள்ளாடல்) நம்மைத் தயாரிக்கட்டும். திருப்பலியைவிட தலைசிறந்த செபமும் இல்லை, செபக்கூட்டமும் இல்லை. சாதாரண அப்பத்தில் இறைவனைக் காண்பதைவிட தலைசிறந்த புதுமையில்லை, அவை தேவையுமில்லை.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 (3b)
”ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக”

இந்த உலகத்திலே பணத்தைத் தேடுகிற மனிதர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். புகழுக்காக, அதிகாரத்திற்காக, வெற்றுப்புகழ்ச்சிக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில், கடவுளைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள். அவர்களிலும் பலர், தேவைக்காகவே கடவுளைத் தேடுகிறார்கள். கடவுளை தங்களது தேவைகளை நிறைவேற்றித்தரும், ஒரு வல்லமையுள்ளவராகப் பார்க்கிறவர்களே அதிகம். இங்கே, “ஆண்டவரைத் தேடுகிறவர்களாக“ திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, மேற்சொன்ன மனிதர்களை அல்ல. மாறாக, அனைத்தையும் இழந்து, இறைவன் ஒருவர் தான் உண்மை என்று, உண்மையான மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆண்டவரைத்தேடுகிறவர்களையே குறிப்பிடுகிறார். அவர்கள் இறைவனை தேடுவதிலே மகிழ்ச்சி காண வேண்டும் என்பது அவரது அறிவுரையாக இருக்கிறது.

கடவுளை நமது வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடுவதுதான் உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும். எதிர்பார்ப்புக்களோடு தேடுகிறபோது, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஒருவிதமான வெறுமை எப்போதுமே நம்மை ஆட்கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். நாம் அனைவரும் கடவுளை மட்டும் தேடுவதற்கு தயாராக இருக்கிறோமா?

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

இறையனுபவத்தின் பகிர்வு

தூய பவுலடியார் தனது திருமுகத்தில் விசுவாசத்தைப் பற்றி கூறுகிறபோது, நாம் எப்படி மற்றவரின் விசுவாசம் தளர்ச்சியடைகிறபோது தாங்கிப்பிடிக்க வேண்டும்? என்பதை அருமையாகச் சொல்வார். விசுவாசத்தளர்ச்சி என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதற்கு நமது பலவீனம் நிச்சயம் முதன்மையான காரணம். அந்த விசுவாசத்தளர்ச்சி வருகிறபோது, மற்றவர்கள் அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இந்த எம்மாவு சீடர்களின் இந்த உயிர்ப்பு அனுபவமும் இதனையொற்றி வரக்கூடிய நிகழ்ச்சி தான்.

எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகு, தங்களோடு அந்த அனுபவத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவருடைய அனுபவப்பகிர்வு மற்றவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய பகிர்வு தான் அவர்களின் விசுவாசத்தை வளர்க்கிற ஆணிவேராக இருந்து வந்தது. அனைவருமே உயிர்த்த இயேசுவைப் பார்த்ததில்லை. ஆனால், உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றார்கள். எப்படி? உயிர்த்த இயேசுவை நேரடியாகப் பார்த்த சீடர்களிடமிருந்து.

நமது விசுவாசமும் இத்தகைய இறையனுபவத்தை நேரடியாகப் பெறுகிறபோது, அந்த அனுபவத்தை, மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஏனென்றால், இத்தகைய இறையனுபவம் தான், திருச்சபையின் வளர்ச்சியில் அதிக பங்கு கொண்டிருக்கிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தொடக்ககால கிறிஸ்தவர்கள்

எம்மாவு சென்ற சீடர்களின் வாழ்க்கை நமது கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான பல அரிய கருத்துக்களையும், சிந்தனைகளையும் நமக்குத் தருகிறது. அது ஏழு மைல் தூர பயணம். ஆனாலும், அந்த நற்செய்தியை தங்களுக்குள்ளாக அவர்கள் மறைத்து வைக்க முடியவில்லை. தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியை உடனடியாக மற்றவர்களுக்கு அறிவித்தனர். கிறிஸ்தவ வாழ்வு என்பது, இருப்பதை, இறையாசீரை உடனடியாக பகிர்ந்து கொள்வதுதான என்கிற சிந்தனை இங்கே அழுத்தம் பெறுகிறது.

தொடக்க கால கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இங்கே நாம் உதாரணமாகக் காணலாம். அவர்கள் எல்லாமே தங்களுக்குத்தான் என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளாக எப்போதும் வாழவில்லை. அவர்களின் சிந்தனை பரந்துபட்ட ஒன்றாக இருந்தது. அவர்கள் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தனர். அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி. எது எப்படி என்றாலும், பெற்றுக்கொள்கின்ற அனுபவங்கள் மற்றவர்களோடு பகிரப்பட வேண்டும் என்பதை தங்கள் வாழ்வின் இலக்காகக் கொண்டு வாழ்ந்தனர்.

இன்றைக்கு எல்லாமே “தனக்கு”, ”எனக்கு” என்கிற மனநிலை மக்களிடையே அதிகமாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படிப்போனாலும், அதைப்பற்றிய கவலை எனக்கில்லை என்பதுதான், இன்றைய மக்களின் யதார்த்தம். அதிலிருந்து, தொடக்க கால கிறிஸ்தவர்களைப் பின்பற்றி வாழுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவை வரவேற்போம்

யெருசலேம் நகரத்திற்கு மேற்கே அமைந்திருக்கிற ஊர் எம்மாவு. ஏறக்குறைய மாலை வேளையானதால், சீடர்களால் தங்களோடு பேசிக்கொண்டு வந்த இயேசுவை சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அத்தோடு அவர்களின் விசுவாசக்குறைவும் இயேசுவை அடையாளம் காண முடியாதமைக்கு ஒரு காரணம். இயேசு தன்னை வெளிப்படுத்திய விதம் அருமையானது. அதுதான் இந்த நற்செய்தியின் முக்கிய அம்சம். இயேசு தன்னை இன்னும் அதிக தூரம் செல்கிறவர்போல காட்டிக்கொள்கிறார். அதேவேளையில், அவர்கள் அழைத்தவுடன் அவர்களோடு செல்கிறார்.

இயேசு தன்னை நம்புவதற்கு யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், தன்னை மக்கள் அறிந்துகொள்வதற்கு பல வழிகளில் உதவிசெய்கிறார். தன்னை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு நற்செய்தியில் கூட, இயேசு அந்த இரண்டு சீடர்களோடு நடந்தபொழுது, அவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கட்டாயப்படுத்தவில்லை. அவர்களிடம் தான் யார் என்பதையே தெரிவிக்கவில்லை. மாறாக, அவர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வதற்கு ஏதுவாக, தன்னை அறிந்துகொள்வதற்கு வசதியாக அவர்களுக்கு பல வழிகளில் உதவி செய்கிறார். அவர் விடுத்த செய்திக்கு செவிமடுத்து ஏற்றுக்கொள்கிறபோது, இயேசு அவர்களோடு தங்குகிறார்.

ஆண்டவரின் நற்செய்தி பல மனிதர்கள் மூலமாக, பல நிகழ்ச்சிகள் வாயிலாக நமக்கு தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்மோடு தங்குவதற்கு ஆண்டவர் காத்துக்கொண்டிருக்கிறார். நம்மோடு பேசுவதற்கு அவர் ஆவலாக இருக்கிறார். நம் வழியாக பலபேரின் உள்ளங்களை வென்றெடுப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். நமது கடமை, அவரை ஏற்றுக்கொள்வது, அவருக்கு நமது இதயத்தில் இடமளிப்பது, அவருக்கு சாட்சியமாக வாழ்வது. அத்ததைய அருள்வேண்டி உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

கடவுள் அனுபவம்

கடவுள் அனுபவம் என்பது நம்ப முடியாத வகையில், அதிசயிக்கத்தக்க வகையில் நடைபெறும் ஆச்சரியமான ஒரு அனுபவம் அல்ல, அது ஓர் எளிமையான அனுபவம். உள்ளத்தைத் தொடுகின்ற அனுபவம். நம் வாழ்வோடு கலந்த அனுபவம். வெறும் கவர்ச்சி, மாயை சார்ந்தது அல்ல. வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த அனுபவம். அத்தகைய அனுபவம் நமக்கு கிடைக்கின்றபோது, பல வேளைகளில் அதை உணரவோ, நம்பவோ, அனுபவிக்கவோ மறந்து விடுகிறோம். அப்படி ஒரு அனுபவத்தைப்பெற்ற இரண்டு சீடர்களின் கதைதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

எம்மாவுக்கு இரண்டு சீடர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து செல்கிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்களிடம் கேள்விகள் கேட்கிறார். பதில் சொல்கிறார். ஆனால், சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதற்கு, இயேசு உருமாறியிருந்தார் என்பது அர்த்தமல்ல. மாறாக, சீடர்களின் கடவுள் அனுபவத்தைப்பற்றிய தவறான பார்வைதான் காரணம். பொதுவாக, மக்கள் மத்தியில் கடவுள் அனுபவம் என்பது, ஆச்சரியமூட்டுகிற வகையில் ஏற்படுகின்ற ஒன்றாக கருதப்படுகிறது. எனவேதான், யூதர்கள் இயேசுவிடம் அடையாளங்களையும், அருங்குறிகளையும் செய்துகாட்டுமாறு சொன்னார்கள். அதேவேளையில் அவர்களில் ஒருவராக வாழ்ந்த கடவுளின் மகனை முழுமையாக அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. கடவுள் அவர்களோடு இருந்தும், கடவுள் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளை எங்கோ இருக்கிறவராக நாம் பார்க்கிறோம். ஆனால், கடவுள் நம்மில் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை. ஆனால், கடவுள் அனுபவம் என்பது, கடவுள் நம்மில் ஒருவராக இருப்பதை உணர்ந்து கொள்வது என்பதை உயிர்த்த இயேசு அந்த இரு சீடர்களுக்கும் உணர்த்துகிறார். உண்மையான கடவுள் அனுபவத்தை, அவர்கள் பெற்றுக்கொள்ளச்செய்கிறார்.

நாமும் கூட கடவுள் அனுபவத்தைத்தேடி பல இடங்களுக்கு அலைகிறோம். பலர் வாழ்வை விட்டு விட்டு, காடு, மலை போன்ற இடங்களில் கடவுளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் கடவுள் நம்மோடு இருக்கிறார். அவரை அறிந்து ஏற்றுக்கொள்வதுதான் கடவுள் அனுபவம். அத்தகைய கடவுள் அனுபவத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இயேசுவின் உயிர்ப்பு கவலையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மனக் கவலையை, கலக்கத்தை அகற்றும் அருமருந்து என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் இனிமையுடன் விளக்குகிறது. எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்கள் இருவரும் மிகுந்த கவலையுடன் நடந்துசெல்கின்றனர். "அவர்கள் முகவாட்டத்துடன் நின்றனர்" என்று லூக்கா நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

நாசரேத் இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகின்றார் என்று அனைவரும், குறிப்பாக இந்தச் சீடர்கள், எதிர்பார்த்திருந்தனர். ஆனால், "தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்" எனத் தங்களின் கவலை, கலக்கம், ஏமாற்றம், விரக்தி... அனைத்தையும் இயேசுவிடமே பகிர்ந்துகொண்டு நடக்கின்றனர். இயேசுவோ மறைநூலை அவர்களுக்கு விளக்குகின்றார், அப்பத்தை பிட்டுக்கொடுக்கின்றார். அவர்களது கண்கள் திறக்கப்பட, அவர்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டுகொள்கின்றனர்.

உடனே அவர்களின் கவலை, கலக்கம், குழப்பம் ... அனைத்தும் மறைகின்றன. அந்நேரமே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து, தங்களது அனுபவத்தை அனைத்துச் சீடர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றனர்.

உயிர்;த்த இயேசு நம் கவலைகளைக் களைந்து, நம் பாதையைத் திருப்பி விடுகிறார். எதைக் கண்;டு அஞ்சி அகன்று சென்றோமோ (எருசலேம்), அதை நோக்கியே திரும்பிச் செல்ல ஆற்றலும், துணிவும் தருகின்றார். நாம் செய்யவேண்டியதெல்லாம், இறைவார்த்தையிலும், நற்கருணையிலும் உயிர்த்த இயேசுவைச் சந்திக்க வேண்டியதுதான்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் கவலையையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆற்றலை, துணிவை உமது தூய ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இயேசு உயிர்த்தார், அல்லேலுயா !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நாற்பது நாள் தவநாள்கள் நிறைவுற்று, இயேசுவின் உயிர்ப்பு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.  #8220;நீங்கள் உயிர்ப்பின் மக்கள். அல்லேலுயா என்பதே உங்கள் பாடல்” என்று புனித அகுஸ்தினார் சொன்னபடி,  நாம் உயிர்ப்பின் மக்கள், இறப்பின் மக்கள் அல்ல. நமது பாடல் புகழ்ச்சிப் பாடல், ஒப்பாரிப் பாடல் அல்ல. எனவே, நாம் நம்பிக்கையும், ஊக்கமும் நிறைந்தவர்களாய் வாழ அழைக்கிறது இந்த ஈஸ்டர் விழா.

#8220;கிறிஸ்துவோடு நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின், மேலுலகில் உள்ளவற்றையே நாடுங்கள். அங்கேதான் கிறிஸ்து தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கிறார்” (கொலோ 3:1) என்னும் பவுலடியாரின் அறிவுரைக்கேற்ப, நாம் இனி மேலுலகில் உள்ளவற்றையே நாடுவோமாக. இனி நாம் சாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர், மாறாக, சாவையும், பாவத்தையும் வென்ற கிறிஸ்துவின் சீடர்கள். எனவே, புதிய எழுச்சியோடும், புதிய ஆர்வத்தோடும் நாம் உயிர்ப்பின் மக்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: உயிர்ப்பின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது வெற்றியில் எங்களுக்கும் பங்கு தருவதற்காக உமக்கு நன்றி சொல்கிறோம். ஆண்டவரே, பாவத்தின்மீது நீர் கொண்ட வெற்றியால் நாங்கள் புதிய நம்பிக்கையுடன் வாழ அருள்தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.இயேசுவில்

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''சீடர்களோடு இயேசு பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரைக் கண்டுகொண்டார்கள்'' (லூக்கா 24:30-31)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உயிர்த்தெழுந்த இயேசு பல சீடர்களுக்குத் தோன்றினார். அவ்வாறு இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளுள் மிகச் சிறப்பான ஒன்று அவர் எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தது ஆகும் (லூக் 2:13-35). லூக்கா நற்செய்தியாளர் இதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இயேசுவின் இரு சீடர்கள் (அவர்களது பெயர்கள் தரப்படவில்லை) எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு அடையாளம் தெரியாத ஒரு மனிதரை வழியில் சந்திக்கின்றனர். அவர்தான் இயேசு என்பதை அவர்கள் பிறகே கண்டுகொள்வர். அன்னியராக வந்த மனிதர் சீடர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்கிறார். அங்கே உணவருந்தும் வேளையில் எதிர்பாராத ஓர் அனுபவம் சீடர்களுக்குக் கிடைக்கிறது. அந்த அன்னியர் அப்பத்தை எடுக்கிறார், கடவுளைப் போற்றுகிறார், அப்பத்தைப் பிட்கிறார், அதை அவர்களுக்குக் கொடுக்கிறார். இச்செயல்களைக் கண்ட சீடர்கள் இருவரும் முன்னாளைய அனுபவத்தை நினைத்துப்பார்க்கிறார்கள். அவர்களுக்குப் போதகராக இருந்த இயேசு செய்த செயல்கள் அனைத்தையும் இந்த அன்னியரும் செய்கிறார் என்பதைத் தொடர்புபடுத்துகின்றனர். அந்த நேரத்திலேயே அவர்களுடைய ''கண்கள் திறக்கின்றன''. அவர்களும் இயேசுவை ''அடையாளம் கண்டுகொண்டார்கள்''.

-- பெயர் குறிப்பிடப்படாத இந்த இரு சீடர்களின் கதை நம் கதை ஆகும். இயேசுவை நாம் நம்புகிறோம். அவர் நம்மோடு நடமாடி, நம்மோடு பழகிச் செயல்படாவிட்டாலும் அவர் நம்மோடு தங்கி வாழ்கின்றார் என்பதை நம் கண்கள் காண வேண்டும். நம் கண்கள் ''திறக்கப்பட வேண்டும்''. குறிப்பாக இயேசு இரு செயல்களைச் செய்கிறார். முதலில் மறைநூலை அவர் சீடர்களுக்கு விளக்கி உரைக்கிறார். பின்னர் சீடர்களோடு ''அப்பம் பிட்டுப் பகிர்ந்துகொள்கிறார்''. இந்த இரு நிகழ்ச்சிகளும் திருப்பலியின் போது நிகழ்கின்றன. இறைவார்த்தை அங்கே வாசித்து விளக்கப்படுகிறது. அப்பம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கடவுளின் வார்த்தையைக் கேட்டு, இயேசு நமக்கு அளிக்கின்ற அவருடைய உடல் என்னும் உணவை உட்கொண்டு நாம் வளம்பெறுகிறோம். திருச்சபையில் இயேசு தொடர்ந்து உடனிருக்கிறார் எனவும் செயல்படுகிறார் எனவும் நாம் நம்புவதை ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக நாம் நினைவுகூர்கிறோம், இயேசுவோடு ஆழ்ந்த விதத்தில் ஒன்றிணைகிறோம். இயேசுவிடமிருந்து நாம் பெறுகின்ற வாழ்வு பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

மன்றாட்டு
இறைவா, எங்களோடு நீர் தங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"எங்களோடு தங்கும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் தேவன் நம்மோடு தங்க வேண்டும். எந்த தலைவரும் பெரிய மனிதரும் தரும் மகிழ்ச்சியை விட பல பல மடங்கு பெரிதல்லவா. ஒப்பிட முடியா அனுபவம் அது. இயேசுவோடு தங்கும் நபராக, குடும்பமாக நீங்களும் உங்கள் குடும்பமும் இருக்கட்டும். உங்களுக்கு எதுவும் குறையிருக்காது; எல்லாம் நிறைவாக இருக்கும். ஒன்றில் இயேசு உங்களோடு தங்க வேண்டும் அல்லது நீங்கள் இயேசுவோடு தங்கவேண்டும்.

எம்மாவு சீடரோடு இயேசு தங்கியதால் அவர்கள் கண்கள் - அகக்கண்கள், அறிவுக்கண்கள், சமூகப் பார்வைகள்- திறக்கப்பட்டது. பயம் நீங்கியது. நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. அன்பால், ஆர்வத்தால் பற்றி எரியும் இதயம் பெற்றவராயினர்.புதிய வலிமை பெற்றனர். தங்கள் வாழ்க்கையில் புது நிறைவைக் கண்டனர். "சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்று சொல்லி இயேசு அவரது வீட்டில் தங்கி விருந்துண்டார். சக்கேயுவின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அவரது வீடு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்றுள்ளதல்லவா. அவரது உள்ளத்து மகிழ்ச்சி அவரது மன மாற்றத்தில் வெளிப்படுகிறதல்லவா. திருத்தூதர் அந்திரேயா இயேசுவோடுள்ள நெருக்கத்தை அவரோடு தங்கியபோது பெறுகிறார்." ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"(யோவா 1:38) என்று விவரங்கள் கேட்டு, மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.(யோவா 1:39) அன்று அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. வாழ்க்கையில்; காணாத எதையோ கண்ட நிறைவு. நிம்மதி. ஓடிப்போய் பேதுருவிடம் சொல்லுகிறார்.

இதுதான் இயேசு நம்மோடு தங்குவதிலும் நாம் இயேசுவோடு தங்குவதிலும் உள்ள பலன். ஆகவே இயேசுவோடு தங்கும் பெரும் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுவோம். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாக இருக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்