ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
எசா 12: 2-3. 4. 5-6
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி

4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-9

அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 29
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,``இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்'' என்றார். அல்லேலூயா.

மாற்கு 1: 7-12

நற்செய்தி வாசகம்

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, �என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

புதுப்படைப்பாவோமா

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தென்னிந்திய பகுதியை உலுக்கிய மழைநீரால், எல்லா பகுதிகளும் சேதமடைந்து, புதுப்படைப்பாகவே மாறியிருக்கின்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தால், அந்த பகுதி முழுவதுமாகவே சேதமடைந்து சிறிது, சிறிதாக இயல்பு நிலைக்கு மாறி புதுப்படைப்பாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது அப்படிப்பட்ட சூழலில்தான் ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா நம்மை புதுப்படைப்பாக மாற அழைக்கின்றது.

திருமுழுக்கின் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்கு இதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. திருமுழுக்கின் வழியாக மனிதர் கடவுளுக்குள் புதுப்படைப்பாக மாறுகின்றன என (திருச்சபை சட்ட தொகுப்பு : 849) ல் பார்க்கின்றோம். புதுப்படைப்பின் முதல்தளம் தண்ணீர். நம்பிக்கையின் வெளி அடையாளமாகிய தண்ணீரால் திருமுழுக்கு பெறுகின்றோம். பழைய ஏற்பாட்டில் வாசிப்பதுபோல சந்திப்பு கூடாரத்தின் வாயிலில் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் வரச்செய்து தண்ணீரால் தூய்மைப்படுத்து என்பது தூய்மையின் அருளடையாளமாக விளங்குகின்றது. புதுப்படைப்பாக மாறவேண்டுமென்றால் இதயத்திலிருந்து தீயதை களைய வேண்டும் என்று எரேமியா நூலில் வாசிக்கின்றோம். நாமான் புறப்பட்டுசென்று யோர்தானில் 7 முறை மூழ்கி எழ நலம்பெற்று புதுப்படைப்பை பெற்றார் என்பது நாம் அறிந்தது. இரண்டாம் தளம் வானம் திறப்பு. மக்கள் பார்க்க வானம் திறந்ததாக விவிலிய பேராசிரியர்கள் கூறுவார்கள். பல்லாண்டுகளாகவே யூத மக்களின் வாழ்வில் கடவுளின் செயல்பாடு மறையத் துவங்கிவிட்டது என்று புலம்பிய நிலையில், இந்த திறப்பு அவர்களை புதுப்படைப்பாக மாற்றப்போகிறார் இயேசு வழியாக என்று நம்பினர். இந்த படைப்பு அவர்கள் மத்தியில் நம்பிக்கையை தளிர்விட செய்கிறது. புறா யூத இனத்தை குறிக்கும் அடையாளம் (ஒசே 11 : 11) யூத இனம் தன் வழியாக ‘புதிய இஸ்ரயேல்” ஆக புதுப்படைப்பு பெற்றது.

நாம் பெற்ற திருமுழுக்கு நம்மை புதுப்படைப்பாக மாற்றியிருக்கிறதா? சிந்தித்துப்பார்ப்போம்.

- -அருட்பணி. பிரதாப்

=======================

 

நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !

இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:

1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?

2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?

3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா?

ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். திருமுழுக்கின் வழியாக என்னை உமது அன்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். இறiவா, திருமுழுக்கால் திருச்சபைக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் நான் நன்கு செய்திட ஆவியின் ஆற்றலை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி. குமார்ராஜா

 

தந்தையைப் பூரிக்கச் செய்வோம் !

"மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், "கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம். தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எம் வாழ்விலும், எம் பணியிலும் நீர் மாட்சிமை அடைவீராக. எம் சொல்லிலும், எம் நினைவிலும் நீர் பெருமை அடைவீராக, ஆமென்.

- பணி. குமார்ராஜா

''என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்''

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு ஏன் திருமுழுக்குப் பெற்றார் என்னும் கேள்வி மக்களின் மனத்தில் குழப்பத்தை உருவாக்கக் கூடும். தொடக்க காலத் திருச்சபையிலும் இக்கேள்வி எழுந்ததுண்டு. நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசு திருமுழுக்குப் பெற்றதைக் குறிப்பிடுகின்றன (காண்க: மத் 3:13-17; மாற் 1:9-11; யோவா 1:32-34). என்றாலும், பாவ மன்னிப்புப் பெறுவதற்காக வழங்கப்பட்ட திருமுழுக்கை இயேசுவும் பெற்றுக்கொண்டதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருந்ததா, அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்ததால் அவரிடம் பாவம் உண்டு என நாம் கருதுவது சரியல்லவே என்றெல்லாம் ஐயப்பாடு அந்நாளில் எழுந்ததுண்டு. இயேசு கடவுளோடு ஒன்றித்திருந்தார் என்பதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருக்கவில்லை. கடவுளின் அன்பிலிருந்து அவர் ஒருநாளும் பிரிந்ததில்லை. என்றாலும், இயேசு நம்மைப் போல மனிதராகப் பிறந்தவர்; நம்மோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக்கொண்டவர். எனவே, பாவம் தவிர அனைத்திலும் அவர் நமக்குச் சமமானார். ஆக, அவர் திருமுழுக்குப் பெற்றது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

-- இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானிலிருந்து வந்த குரல் ஒரு பேருண்மையை வெளிப்படுத்தியது. ''இயேசு கடவுளின் அன்புமிக்க மகன்; கடவுள் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார்'' (காண்க: மத் 3:17; மாற் 1:11; லூக் 3:22; யோவா 1:33-34). நாம் பெறுகின்ற திருமுழுக்கு நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. இதனால், நீரினால் முறையாகத் திருமுழுக்குப் பெறாத ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல என்று பொருளாகாது. மாறாக, திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மை வெளிப்படையாக அறிக்கையிடப்படுகிறது; நாம் கிறிஸ்துவின் சீடர் என்னும் தகுதி வழங்கப்பட்டு, பறைசாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் நாம் புதிய மனிதர்களாக, புதுப்பிறப்பு அடைந்தவர்களாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது திருமுழுக்கின் நீட்சி என நாம் கூறலாம்.

மன்றாட்டு
இறைவா, நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்புகளாக மாறிய நாங்கள் இயேசுவைப் புத்துணர்வோடு பின்செல்ல அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்