முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: ``இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், ``எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5யb. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்துகொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வானதூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

மாற்கு 1:12-15

தவக்காலம் -முதல் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

18.02.2024 ஞாயிறு
காலம் பதில் சொல்லும் ...

இந்த சமுதாயத்திலே அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம், துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம், பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம். இவ்வாறு காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் அறிமுகம் செய்யும் காலம் இதுபோன்று அல்ல, மாறாக மனதினை மாற்றுவதற்கான அழைப்பு. எதற்காக காலம் நிறைவேறிவிட்டது என்கிறாரென்றால் இயேசு வாழ்ந்த காலத்திலும் அதற்கு முந்திய சில ஆண்டுகளிலும் கிரேக்கர், உரோமையர் என்ற அந்நிய சக்திகளால் ஏற்பட்ட ஒரு துயர நிலையும், அதற்கு முன்பு எகிப்து, பாபிலோன், அசிரியா போன்ற வல்லரசுக்களால் உருவாகிய துன்பவடுக்களும் மறையும் காலத்தையும் இயேசு கண்டிப்பாக தோற்றுவிப்பார் என்ற நம்பிக்கை இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. உலக வரலாற்றில் அரசு, ஆட்சி என்கிற சொற்கள் மக்களை அடக்கி ஆளுதல், எதிரிகளை அழித்தல், நாடு பிடித்தல், ஆட்சியாளருக்கு ஆடம்பரங்களைத் தருதல் போன்ற சிந்தனைகளையே கொடுத்து வந்தன. இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மனமாற்றத்தை கொணரவே மீண்டும், மீண்டும் திருத்தூதர்களை அனுப்பி ஊக்குவிக்கின்றார். எனவேதான் இறையாட்சி நெருங்கிவிட்டது என்கிற இயேசுவின் அறைகூவல் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகிழ்ச்சியை அவரே அழிப்பதுபோல காட்சியளிக்கின்றது.

கடவுள் நமக்கென கொடுக்கப்பட்டுள்ள காலத்தை முறையாக அனுசரிக்கின்றோமா? அந்த காலத்தின் அருமைகளை உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

இறைவனின் தோழமை

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவருடைய பாலைவன அனுபவம் முக்கியமான மைல்கல். திருமுழுக்கு மாட்சியால் நிறைந்திருந்த இயேசு, அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்னதாகவே சோதிக்கப்படுகிறார். எந்த ஆவி அவர் மீது இறங்கி வந்ததோ, அதே ஆவி, அவரை பாலைவன அனுபவத்திற்காக அழைத்துச் செல்கிறது. வாழ்வில் சோதனைகளையோ, சோகங்களையோ யாரும் இல்லாமல் வாழ முடியாது. இவை வாழ்வின் அங்கம். இயேசுவும், கடவுளின் மகன் என்றாலும், அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த சோதனையில் நாம் கண்டு வியக்கக்கூடியதும், மகிழக்கூடியதுமான ஒரு செய்தி இருக்கிறது. அதுதான் வானதூதர்களின் பணிவிடை. இயேசு சோதிக்கப்படுவதற்காக பாலைவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, சோதனை முடிந்தவுடன், வானதூதர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்கின்றனர். நமது சோதனையில் கடவுள் தவிக்க விட்டுவிடுவது கிடையாது. அவர் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னம் நம் மத்தியில் இருக்கிறது. சோதனையிலிருந்து விடுபடுவதற்கு, சோதனையை வெல்வதற்கு அவர் எப்போதும் உதவி செய்கிறார். அவருடைய தூதுவர்களை அனுப்பி, நம்மை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

கடவுள் எப்போதும் நம்மை வெறுமனே விட்டுவிடுவதில்லை. அவர் இன்பத்திலும், துன்பத்திலும் நம்மோடு எந்நாளும் இருக்கிறார். அவருடைய அன்பிற்கு ஈடு இணை கிடையாது. அவரது பிரசன்னம் எப்போதும் நம்மை ஆட்கொள்வதாக இருக்கும். அதுதான் கடவுளின் அன்பு. அதுதான் கடவுளின் இரக்கம். அதுதான் அளவற்ற இறைவனின் பாசம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனம் மாற்றமும், நற்செய்தியை நம்புதலும் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்தவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம்.

இது இயேசுவின் பொதுவான அழைப்பாக இருந்தாலும், இத்தவக்காலத்திற்கான சிறப்பான அழைப்பு. மனம் மாறுவது நற்செய்தியை நம்புவது என்னும் செய்தியில் நமது கவனத்தைச் செலுத்துவோம். இயேசுவின் அழைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது:

1. மனம் மாறவேண்டும்.

2. நற்செய்தியை நம்பவேண்டும்.

நமது பாவச் செயல்கள், தீய மனநிலைகள், இறைவனுக்கெதிரான வாழ்வு இவற்றை விட்டுவிடுவது என்பது அழைப்பின் முதல் கட்டம். இது கடினமானது. ஆனால், அழைப்பின் இரண்டாம் கட்டம் நற்செய்தியை நம்புவது. அதாவது, தீய செயல்களை விட்டுவிடுவது மட்டும் போதாது. இயேசுவின் நற்செய்தியை நம்பவேண்டும். அதாவது, இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு. அவரை அன்பு செய்து, அவருக்காகவே வாழவேண்டும். இதுவே நற்செய்தி வாழ்வு. இதுவே நற்செய்தியை நம்புவது.

இத்தவக்காலத்தில் தீய செயல்களை விட்டுவிடுவோம். இறைவன்மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி, அவரிடம் நெருங்கி வருவோம்.

மன்றாடுவோம்: மனமாற்றத்திற்கான அழைப்பு விடுக்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது அழைப்பை ஏற்று, மனம் மாறவும், நற்செய்தியை நம்பி, உம்மிடம் நெருங்கி வரவும் அருள்தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''உடனே தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்;
அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்'' (மாற்கு 1:12-13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பாலைநிலம் என்பது சோதனை ஏற்படுகின்ற இடம் என்றும், கடவுளைச் சந்தித்து அனுபவம் பெறுகின்ற இடம் என்றும் இரு பொருள் கொண்ட உருவகமாக விவிலியத்தில் வருகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றதும் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு இட்டுச்செல்லப்படுகிறார். ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவை அங்கே ஈர்த்து இழுக்கின்றார். இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை மாற்கு சுருக்கமாகவும், மத்தேயு மற்றும் லூக்கா விரிவாகவும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மாற் 1:12-13; மத் 4:1-11; லூக் 4:1-13). தம்மைச் சக்திவாய்ந்த மந்திரவாதியாக எண்ணும்படி (கல்லை அப்பமாக்கும் சோதனை) இயேசுவுக்கு சோதனை வருகிறது. தம் உயிருக்கு ஆபத்துவரும் என்றாலும் கடவுள் தம் வல்லமையைக் காட்டட்டுமே என்னும் மூடத் துணிச்சல் கொள்ள அவருக்கு சோதனை வருகிறது (கோவில் உச்சியிலிருந்து கீழே குதிக்கும் சோதனை). உலக செல்வங்களை நல்வழியிலோ தீயவழியிலோ பெற்றிடலாம் என்னும் சோதனை வருகிறது (அலகையை வணங்குவதற்கான சோதனை). இயேசு ஒருவிதத்தில் கடவுளால் சோதிக்கப்படுகிறார் எனலாம். ஆனால் சோதனையின்போது கடவுளின் உடனிருப்பை இயேசு ஒருகணமேனும் மறக்கவில்லை.

-- இயேசுவின் சோதனைக் காலம் உண்மையிலேயே இறையனுபவக் காலமாக மாறிற்று. நமக்கும் பாலைநிலச் சோதனைகள் வருவதுண்டு. கடவுள் நம்மைவிட்டு அகன்றதுபோன்ற நிலை ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு நம்மைவிட்டு அகன்றுவிடலாகாது. சிலவேளைகளில் நாம் தேடிச் செல்கின்ற பாலைநிலம் கடவுளின் உடனிருப்பை நாம் வேண்டும் என்றே ஒதுக்குகின்ற முயற்சியாக இருக்கக் கூடும். அந்த அனுபவம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்குமே தவிர கடவுளனுபவம் பெற நமக்குத் துணையாகாது. ஆக, உண்மையான பாலைநில அனுபவம் என்பது சோதனை வேளையிலும், துன்பவேளையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் ஆழ்ந்த உணர்வை நாம் பெறுவதில் அடங்கும்.

மன்றாட்டு
இறைவா, ஒருபோதும் உம்மை மறவா நிலை பெற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்