யோனா எழுதிய நூலிலிருந்து முதல் வாசகம் (யோனா 3:1-5 10)

அன்னாள்களில்

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உலத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-9, 6-7, 8-9

பல்லவி: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில்,
நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; -பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

இவ்வாசகத்தில் திருத்தூதர் பவுல் உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும் என்று அறிவுரை கூறுகிறார். கவனமுடன் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து வாசகம் (1கொரி.7:29-31)

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

மாற்கு 1:14-20

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20

நற்செய்தி யோவான் 1:35-42 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

காலம் கால்பதிக்க...

காமராசர் இந்த தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்ற சமுதாயம் வாய்ப்பளித்தது. ஆட்சி பொற்காலம் ஆட்சி என்று கூறும் அளவிற்கு கால்பதிப்பு. இந்திய முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு, அணியை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பல சாதனைகளை அணிபெற உதவிசெய்தது கால்பதிப்பு. கிரண்பேடி காவல்துறையில் பணியாற்ற (முதல் பெண் காவலர்) இந்த சமுதாயம் வாய்ப்பு கொடுத்தது. சிறந்த அதிகாரியாக கால்பதிப்பு.

இன்றைய வாசகங்களிலும் இரண்டு நபர்கள் கடவுளின் பணிக்காக கால்பதிக்கின்றார்கள். முதல் வாசகத்தில் யோனா, நினிவே நகர மக்களை மனமாற்றி கால்பதிக்கின்றார். அந்த மக்கள் மனமாற முழுமையாக உழைக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளின் பணிக்காக கால் பதிக்கின்றார். திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டதை, தனது பணிக்கான சரியான நேரமாக இயேசு பார்க்கின்றார். கி.மு. 4ம் ஆண்டில் பெரிய ஏரோது இறந்தவுடன் பாலஸ்தீன நாடு மூன்று பகுதிகளாக வடக்குப் பகுதி, கலிலேயா, சமாரியா மற்றும் யூதேயா எனப் பிரிக்கப்பட்டு பெரிய ஏரோதின் மூன்று மகன்களிடமும் ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது. இயேசு கலிலேயாவில் தன் பணியை ஆரம்பிப்பதற்கு அதன் பூகோள (ம) சமூகவியல் சூழல் சாதகமாக இருந்ததே என்று கூறலாம். பிற இனத்தவரால் சூழப்பட்ட கலிலேயா நாட்டில் இயேசுவின் வழியாக சுடரொளி உதிக்கின்றது.

குடும்பமாக (அ) முக்கிய பொறுப்புகளில் இருக்கின்ற நான் கால் பதிக்க முயற்சி எடுக்கின்றேனா? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

======================

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம்.

இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது.

இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை.  நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம் நம்பிக்கை வைக்கிறபோது, நாம் மகிழ்வோடு இந்த உலக வாழ்வை வாழலாம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அழைப்பை ஏற்போம் !

இன்றைய முதல் வாசகத்தில் யோனாவும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் முதல் நான்கு சீடர்களும் அழைக்கப்பட்ட வரலாற்றை நாம் வாசிக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தருகின்ற அழைப்பை எண்ணிப் பார்க்க தூண்டப்படுகிறோம். இவர்கள் ஐந்து பேருமே எளிய மனிதர்கள், உழைப்பாளிகள். ஆனால், இவர்களைத்தான் இறைவன் நற்செய்தி அறிவிக்க அழைத்தார். அவர்களும் அனைத்தையும் விட்டுவிட்டு அழைப்பை ஏற்றனர், நற்செய்தி அறிவித்தனர். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் நற்செய்தி அறிவிக்கும் கடமை உண்டு என்பதை இவ்வாசகங்கள் வழியாக திருச்சபை நமக்கு நினைவூட்டுகிறது.

தீமைகளும், அநீதியும் மலிந்துவிட்ட இன்றைய நாள்களில் தனிநபர் மாற்ற நிகழ்வுகள், அமைப்புகள் மாற்றப் போராட்டங்கள் அவசியமாகிவிட்டன. அவற்றைச் செய்வதற்கு இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். சாக்கு போக்கு சொல்லாமல், அவ்வழைப்பை ஏற்போம். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு இவ்வுலகை, சமுதாயத்தை மாற்ற முயல்வோம். இந்த மாற்றங்கள் நம்மிலும், நம் குடும்பம், தெரு, அன்பியத்தில் தொடங்கட்டும். இறையாட்சிப் பணி வேகம் பெறட்டும்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தகுதியற்ற என்னையும் நீர் அழைத்து, மனிதரைப் பிடிப்பவராக மாற்றுவதற்காக உமக்கு நன்றிகூறுகிறேன். என்னையும், பிறரையும் மாற்றத் தேவையான தூய ஆவியின் ஆற்றலை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

சீடர்கள் என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பவர் ஆழுமை நிறைந்தவர். அழைப்பு மறுக்கமுடியாதது. அழைக்கப்படுபவர் அந்தஸ்து அவசியமில்லை. அழைக்கப்படுபவர் முற்றிலும் புதிய, உயரிய ஒரு பணிக்காக அழைக்கப்படுகிறார்.

அழைப்பின் இலக்கு அழைக்கப்படுவோர் அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களைப் பிடிப்பது. மனிதனை முழு மனிதவாழ்வுக்கு அழைத்துச் செல்வது. அழைக்கப்படுவோர் யாராகவும் இருக்கலாம், என் நிலையிலும் இருக்கலாம். முதியவராக இருக்கலாம் இளைஞனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யோவான்போல கூலியாட்கள்வைத்து வேலை செய்யும் உயர்நிலையிலும் இருக்கலாம்.ஆயராக இருக்கலாம். அடித்தள விசுவாசியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் பணியின் இலக்கு ஒன்றே.

எனவே, நீங்களும் இயேசுவின் உன்னத மனிதர்களைப் பிடித்து முழு மனிதனாக்கும் உயர் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையும் இயேசுவின் தனிப்பட்ட அழைப்பு. இந்த அழைப்பை நீங்கள் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதை சிறப்புடன் செய்யும்போது இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

-ஜோசப் லீயோன்

மனிதரைப் பிடிப்பவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, அவர்களுக்கு அளித்த வாக்குறுதி: “என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ”. இந்த அழைப்பை ஏற்ற அவர்கள் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் என்று இன்றைய வாசகத்தில் வாசிக்கிறோம். அதே அழைப்பை இயேசு நமக்கும் தருகிறார். நம்மை மனிதரைப் பிடிப்பவராக மாற அழைக்கிறார். மீன்களைப் பிடிப்பதையே தங்கள் தொழிலாகவும், வாழ்வின் இலக்காகவும் கொண்டிருந்த மீனவர்களை இயேசு தம் சீடராக மாற்றினார். பணம், புகழ், பதவி, உலக இன்பங்கள் இவற்றையே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டிருக்கும் நாமும், அவற்றை விட்டுவிட்டு, மனிதர்களை இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றும் மனிதர்களாக மாற்றும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயேசு அழைக்கிறார். நம்மோடு வாழும், பணி செய்யும் மனிதர்களை இயேசுவுக்காகப் பிடிப்போராக மாறுவோம்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்களையும் உமது சீடராக வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். நாங்கள் உலக இன்பங்களை நாடாமல், பிற மனிதர்கனை உம் பாதம் கொண்டு சேர்க்கும் சீடர்களாக வாழ எங்களுக்கு அருள்; தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

---------------------------

''காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது;
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று இயேசு கூறினார்'' (மாற்கு 1:15)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு வழங்கிய போதனையின் மையக் கருத்தைச் சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் அது ''இறையாட்சி'' என்னும் ஒரு சொல்லில் அடங்கும் எனலாம். கடவுளின் ஆட்சி பற்றியே இயேசு பேசினார். என்றாலும் இதுதான் கடவுளின் ஆட்சி என்று ஓரிரு சொற்களில் விளக்கிட இயலாது. இயேசு கடவுளாட்சி பற்றி வெவ்வேறு கோணங்களிலிருந்து போதித்தார். கடவுளாட்சி எதில் அடங்கியிருக்கிறது? அந்த ஆட்சியில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுள் நம்மைத் தம் ஆட்சியில் எவ்வாறு ஏற்கின்றார்? கடவுளாட்சியை நாம் எங்கே கண்டுகொள்வது? அதற்கான விவிலிய அடிப்படைகள் என்ன? - இத்தகைய பல கேள்விகளுக்கும் நாம் பதில் காண முனைந்தால் விவிலியம் நமக்குத் துணையாக அமையும். இயேசு கடவுளின் ஆட்சியை மன மாற்றத்தோடு இணைத்துப் பேசுவது கருதத் தக்கது. மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பது இறையாட்சியில் பங்கேற்க முதல் நிபந்தனை ஆகும். மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த புரட்சியை ஏற்படுத்துவதாக அமையும். இதுவரை நாம் எந்த சிந்தனைப் பாணியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தோமோ அதை அடியோடு மாற்றியமைத்து ஒரு புதிய சிந்தனைப் பாணியை, கடவுளின் சிந்தனைப் பாணியை, நமதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது இறையாட்சியில் நாம் பங்கேற்போம்.

-- கடவுளின் சிந்தனை எதில் அடங்கும்? இக்கேள்விக்கான பதில் இயேசுவின் வாழ்க்கை முழுவதிலும் துலங்குகிறது. இயேசு கூறிய சொற்கள், அவர் புரிந்த செயல்கள், அவர் ஆற்றிய புதுமைகள், அவரது வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற அனைத்தும் கடவுளின் ஆட்சி யாது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. எனவே, கடவுளின் ஆட்சி மனித வாழ்க்கையைக் கடவுளுக்கு உகந்த விதத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இத்தகைய வாழ்க்கை இவ்வுலகில் தொடங்கி மறுமையில்தான் நிறைவுறும். அப்போது இறையாட்சியின் முழுமையும் வெளிப்படும். இயேசு நம்மிடம் கோருகின்ற மன மாற்றம் இன்றே இப்போதே நிகழ வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் ஆட்சி வருக!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு
இயேசுவைப் பின்பற்றினார்கள்'' (மாற்கு 1:18)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு தம்மோடு இருப்பதற்கும், தாம் ஆற்றவந்த நற்செய்திப் பணியைத் தொடர்வதற்கும் சீடர்களை அழைத்தார். வழக்கமாக சீடர்கள் குருவை நாடிச் செல்வார்கள். இங்கே சீடர்களைத் தேடிச்செல்கிறார் குரு. இயேசு யாரைத் தம் சீடர்களாகத் தேர்ந்துகொண்டார் என்பதை நாம் அலசிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகிறது. அன்றைய பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த சாதாரண மனிதரையே இயேசு தேர்ந்துகொண்டார். அவர்களில் பலர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தம் தொழிலைச் செய்வதில் கவனமாக இருந்தவர்கள் தங்கள் வலைகளையும் பிற கருவிகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் (மாற் 1:18). இது ஒரு பெரிய அதிசயம்தான். ஆனால் அவர்களை அழைத்தவர் ஓர் அதிசய மனிதர்தானே!

-- இயேசுவின் அழைப்பைப் பெற்ற மீனவர்களான சீமோனும் அந்திரேயாவும் தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்ந்தனர். மீன்பிடிப்பதற்கு மாறாக ''மனிதரைப் பிடிக்கும்'' திறமையை அவர்களுக்குக் கொடுத்தார் இயேசு. அதாவது, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அந்த அறிவிப்பின் வழியாக வேறு பல மனிதர்களை இயேசுவின் அணைப்பில் கொணர்கின்ற பணியைச் சீடர்கள் பெற்றார்கள். இதுவே இன்றைய கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் தம்மை முழுவதும் அவரிடம் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை மனமுவந்து பின்பற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

"என் பி;ன்னே வாருங்கள்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

நல்லவைகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. நல்லவைகள் தொடர்வதை நிறுத்த முடியாது. நல்லவர்கள் தொடர்ந்து வருவர். நல்லவைகள் தொடர்ந்து நடக்கும். அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

திருமுழுக்கு யோவானைக் கொன்றதால் மனமாற்றப் பணிகள் முடங்கிப் போய்விடுவதில்லை."காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்1'15) என்ற முழக்கம் இயேசுவால் தொடர்ந்து முழக்கப்பட்டது. இயேசுவைச் சிலுவையில்; அறைந்து கொன்றதால் அந்த புது வாழ்வின் முழக்கம் முடமாகிவிடவில்லை. உயிர்த்த இயேசுவின் சீடர்கள் ஓங்கி ஒலித்தனர். ஒன்று பன்னிரெண்டாகி பல மடங்காகியது.

இன்றும் நல்லவைகள் தொடரந்த வண்ணம் உள்ளன. நல்லவர்கள் இன்றும் ஆங்காங்கே உதயமாகிக்கொண்டு இருக்கிறார்கள். நற்செயலாற்ற அழைப்புக்கு அர்ப்பணிப்போர் இன்றும் ஏராளம் ஏராளம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பணியையும் பணியாளர்களையும் தடுக்க முடியாது. இந்த எண்ணிக்கை பெருகிக்கொண்N;ட இருக்கும்.

அருட்பணியும் அருட்பணியாளர்களும் புரட்சியாளர்கள். ஆன்மீகத்தை ஆழப்படுத்தி மனித வாழ்வை புதுப்பிக்கும் புரட்சிப் பணியாளர்கள். இவர்கள் அழிக்கப்படுவதில்லை, புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். பெரும் விழைச்சலைத்தான் தருவார்கள். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்